கால் நூற்றாண்டைத் தாண்டியும் தீர்க்கப்படாமல் இருக்கும் இலங்கையின் இனப்பிரச்சினையில் அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடப்பதும் பின்னர் அவை அர்த்தமில்லாமல் முடிந்து விடுவதும் வழக்கமான நிகழ்வுகளாக இருந்தாலும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது அனைத்து தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இனப்பிரச்சினையை தீர்க்கும் பேச்சு வார்த்தைகள் நம்பிக்கையினூடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்படியான பேச்சுவார்த்தைகளின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வில் முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு தரப்பான சிறுபான்மை முஸ்லிம் சமூகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை தீவிரமாகவே கவனத்திற்குள் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

புலிகளுடனான பேச்சுவார் த்தைகளின்போது முஸ்லிம் தரப்பு புறக்கணிக்கப்பட்டதைப் போன்றே புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு நடைபெறும் தீர்வை நோக்கிய பேச்சுவார்த்தைகளிலும் முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்படுகிறது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு செயலாளர் சிவசங்கர் மேனன் தலைமையில் கடந்த 10ம் தேதி இலங்கைக்குச் சென்ற உயர் மட்டக் குழு, இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்த பேச்சுவார்த்தையை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடனும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடனும் நடத்தியி ருக்கிறது.

இப்பேச்சுவார்த்தைகளின்போது மூன்றாம் தரப்பான முஸ்லிம் சமூகம் பங்கெடுக்காதது இலங்கை முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூஃப் ஹக்கீம், இந்திய உயர் மட்டக் குழுவை சந்திப்பதற்கான அனுமதியை இலங்கையிலுள்ள இந்தியத் தூதரிடம் கோரியிருந்தும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நிகழ்த்தாமல் உயர் மட்டக்குழு இந்தியாவிற்கு திரும்பியிருப்பது இனப்பிரச்சினையில் இந்திய அரசின் இரட்டை வேடத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.

“இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்படும்போது அதில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உள்வாங்கப்பட வேண்டும். ஏனெனில் இலங்கையில் முஸ்லிம்களுக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் இருப்பது உண்மை'' என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்தியப் பாராளுமன்றத்திலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமுடனான நேரடிச் சந்திப்பின்போதும் தெரிவித்துள்ளார்.

ஆக இலங்கை முஸ்லிம்களை தனித்தரப்பாக இந்தியா அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசு கொள்கையளவில் ஏற்றுக் கொண்டுள்ள ஒரு பிரச்சினையில்தான் இலங்கைக்குச் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகள் புறக்கணிப்பைச் செய்துள்ளனர்.

இனப்பிரச்சினையில் மூன்றாம் தரப்பாக இருக்கும் முஸ்லிம் சமூகத்தை அலட்சியப்படுத்தி விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அரசுத் தரப்பையும் மாத்திரம் இந்திய உயர் மட்டக் குழு சந்தித்திருப்பது இலங்கை முஸ்லிம்கள் விஷயத்தில் இந்தியா தனது பங்களிப்பை செலுத்தத் தயாரில்லை என்று சொல்லுவதாகவே இலங்கை முஸ்லிம்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.

இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்கள் தனியாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலுவாகவே முன் வைத்து வருகிறது. இது, முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்தே அரசியல் தீர்வை முன்னெடுக்க வேண்டும் என்ற திட்டத்தை முன் வைத்து அரசியல் களமாடும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு நன்றாகவே தெரியும்.

இப்படிப்பட்ட சூழலில், தம்மைச் சந்திக்க வந்த இந்திய உயர்மட்டக் குழுவினரிடம் முஸ்லிம் சமூகத்தையும் பேச்சுவார்த்தைகளில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றோ, அல்லது குறைந்தபட்சம் முஸ்லிம் தரப்பினரோடும் ஒரு சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என்றோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிதிகள் கேட்டுக் கொள்ளாதது கவலை அளிக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புலிகளைப் போன்றே முஸ்லிம்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைத்து விடக்கூடாது என்று உள்ளுக்குள் எண்ணுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இன்னொருபுறம் இலங்கை அரசும், இனப்பிரச்சினை தீர்வு விஷயத்தில் ஆரம்பம் முதலே முஸ்லிம் தரப்பை தூரமாகவே நிறுத்தி வைத்துள்ளது.

இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தச் சட்டத்தை இயற்றுவதற்கும், மாகாண சபைகளை உருவாக்குவதற்கும் இந்தியா தூண்டுகோலாகவும், அழுத்தம் கொடுக்கும் அதிகாரச் சக்தியாகவும் இருந்திருக்கிறது. அந்த வகையில் முஸ்லிம் தரப்பையும் இணைத்துக் கொண்டு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இலங்கை முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.

போரினாலும், இனப்பிரச்சினையினாலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களினாலும் கடந்த காலங்களில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து உள்நாட்டு அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களது பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பறிபோயுள்ளன.

இப்படி பலவாறாக பாதிப்புகளை சந்தித்திருக்கும் ஒரு சமூகத்தை அவர்களது அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதை விட்டும் - இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தும் இந்தியா போன்ற நாடுகள் புறக்கணிப்பது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

பிராந்திய வல்லரசாக விளங்குகின்ற அண்டை நாடான இந்தியா போன்ற நாடுகள் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளுக்கு உரிய முக்கியத்துவத்‌தை தர இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். அதே போல அரசியல் அதிகாரத்தைப் பெற முஸ்லிம் சமூகத்துடன் இணக்கத்தையும், முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணியையும் வைத்திருக்கும் தமிழ் தேசிய கட்சிகளும், வெறும் வாய் வார்த்தைகளாக மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் முஸ்லிம்களையும் தனித்தரப்பாக பேச்சுவார்த்தைகளில் சேர்த்துக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது முஸ்லிம் தரப்பை புறக்கணித்து விட்டு முழுமை பெறாது என்ற யதாரத்தத்தை இலங்கை அரசும், தமிழ் தேசியக் கட்சிகளும் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் தீர்வை நோக்கி நகர வேண்டும்.

- ஃபைஸல்

முஸ்லிம் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கும் தூதுக்குழுக்கள்

இலங்கை வட கிழக்கு தீர்வு குறித்த பிரச்சினையில் பாராளுமன்றக் குழு ஒன்றை அமைக்க ராஜபக்ஷே அரசு திட்டமிட்டுள்ளது. இக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகள் போதிய அளவு இடம் பெற வேண்டும் என முஸ்லிம்கள் எதிர்பார்க்கின்றனர்.

இனப்பிரச்சினைப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் தனித் தரப்பு அவசியம் என்பதில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒருமித்த கருத்தில் உறுதியாக இருக்கின்றன. இதனை தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றன.

ஆயினும், சர்வதேச தூதுக் குழுவினர் இலங்கைக்கு வரும்போதெல்லாம் முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் பிரதிநிதிகளையும் சந்திக்காமல் புறக்கணிப்பு செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறுகிறது.

இப்படி வரும் தூதுக் குழுக்கள் இலங்கை பாராளுமன்றத்தில் உறுப்பினராகக் கூட இல்லாத சிவாஜிலிங்கம், ஆனந்த் சங்கரி போன்ற தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்திக்கும்போது, எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரûஸயோ அல்லது ஏனைய முஸ்லிம் கட்சிகளையோ சந்திப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை முஸ்லிம்களால் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்டக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவிருப்பதாகவும் அக்கூட்டத்தில் வடகிழக்கு பிரச்சினை தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் அமைக்கவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழு மற்றும் தமிழக சட்டசபையில் இலங்கை பிரச்சினை தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.