இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளின் சூழ்ச்சியினால் உருவாக்கப்பட்ட நாடு இஸ்ரேல். நாடற்றவர்களாக திரிந்த யூதர்களுக்கு அடைக்கலம் தந்ததற்காக பாலஸ்தீனர்களின் பூமி அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.

பறிக்கப்பட்ட பூமியை மீட்பதற்காக பாலஸ்தீனர்கள் நீண்ட காலம் போராடிய பிறகு பறிக்கப்பட்ட பூமியில் ஒரு சிறு பகுதி மட்டும் ஒதுக்கப்பட்டு பாலஸ்தீன அத்தாரிட்டி என்ற நாடு உருவாக்கப்பட்டது.

பாலஸ்தீன் சுயாட்சி பெற்ற பூமி என்று அறிவிக்கப்பட்ட போதும், அந்த தேசத்தில் சொந்த ராணுவம் வைத்துக் கொள்ள இதுநாள் வரை இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. அது மட்டுமல்லாது, முஸ்லிம்களின் முதல் கிப்லாவான (மேற்கு திசை) அல்-அக்ஸôவை கையகப்படுத்தும் முயற்சியிலும் இஸ்ரேல் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேலின் அடக்குமுறைகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் பாலஸ்தீனர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவிப்பது மட்டுமல்லாமல் கைது செய்யப்படுபவர்கள் மீதும் கொடிய சித்ரவதைகளையும் இஸ்ரேலிய ராணுவம் நிகழ்த்தி வருகிறது.

இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய பெண் ஒருவர் ஃபேஸ் புக்கில் வெளியிட்டுள்ள பாலஸ்தீன கைதிகளின் புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

ஈடன் அபெர்ஜில் என்ற பெயரைக் கொண்ட அப்பெண் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றிய போது பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ராணுவம் - என் வாழ்க்கையின் முக்கியமான காலம் என்ற தலைப்பில் ஃபேஸ் புக் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் ஈடன் அபெர்ஜில் ராணுவ உடையில் காணப்படும் நிலையில் பாலஸ்தீன கைதிகள் கண்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு காட்சியளிக்கின்றனர்.

கைதிகளின் கண்களும், கைகளும் கட்டப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமை விதிகளின் அடிப்படையில் குற்றமாகும். ஈடன் பெருமையுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சித்ர வதைக்குள்ளாக்குவதை வெளிச்சமாக்கியிருப்ப தால்  இது இஸ்ரேல் ராணுவத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

புகைப்படங்களைக் கண்ட சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இது மனிதத் தன்மையற்றது என்று இணைய தளத்திற்கு பதில் அனுப்பியுள்ளனர்.

பாலஸ்தீன அரசு இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது மட்டுமல்லாது, இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனியர்களை எப்படி எல்லாம் துன்புறுத்துகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளது.

மக்களின் எதிர்ப்புக் குரல்களுக்கு பதிலளித்த ஈடன், தன்னுடைய செயல்களை நியாயப்படுத்தியது மட்டுமல்லாமல், "போரில் சட்டத்திற்கு இடமில்லை. அரபிகளை நான் வெறுக்கிறேன். அவர்களுக்கு கடுமையான அழிவு ஏற்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். வாய்ப்புக் கிடைத்தால் அவர்களை நான் சுட்டுப் படுகொலை செய்வேன்'' என திமிராகத் தெரிவித்துள்ளார்

சர்வதேச மனித உரிமைகளைத் தொடர்ந்து மீறும் இஸ்ரேல் நாட்டின் மீது கொண்டு வரப்படும் கண்டனத் தீர்மானங்களை ஐ.நா. சபையில் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் அமெரிக்கா செயல்படாமல் செய்து விடுவதால் இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனங்கள் அளவு கடந்து போகின்றன.

இஸ்ரேலின் காட்டு தர்பாருக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வருவது அந்நாட்டிற்குத்தான் ஆபத்தை உண்டாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

- சாலியா மைந்தன்