அரசியல்வாதிகளின் ஊழல்களையும், அயோக்கியத்தனங்களையும் வெளிக் கொணர்வதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாட்டர் கேட் ஊழலில் சிக்கிய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், ஜப்பானின் நாகசோனா உள்ளிட்ட பல பிரபலங்களின் நடவடிக்கைகள் பத்திரிகைகளில் வெளி வந்ததாலே அவர்களது பதவிகள் பறிபோயின. நித்தியானந்தா, என்.டி. திவாரி போன்றவர்களின் திரைமறைவு வாழ்க்கைகள் தொலைக்காட்சியில் காட்டப்பட்டு நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கியது. ஊடகத் துறையின் புதிய பரிமாணமான இணைய தளங்களும், அநீதிக்கு எதிராக தங்கள் சாட்டையடி கொடுக்கத் தவறவில்லை.

குஜராத் கலவரத்தின் காரணகர்த்தாக்களை அவர்களின் வாக்குமூலங்களுடன் வெளிப்படுத்தி மோடியின் மூகமூடியைக் கிழித்தது டெஹல்கா இணையதளம். தொடர்ந்து பணம் வாங்கும் பங்காரு லட்சுமணன், ராணுவ அமைச்சரின் வீட்டில் இருந்தபடி கமிஷன் பேசிய ஜெயா ஜேட்லி ஆகியோரை அம்பலப்படுத்திக் காட்டியதும் டெஹல்கா இணையதளம்தான். இந்திய அளவில் அரசியல்வாதிகளை டெஹல்கா அம்பலப்படுத்தியது போல் உலக அளவில் அமெரிக்காவின் அநீதிகளை அம்பலப்படுத்தி வருகிறது விக்கி லீக் இணையதளம்.

ஆப்கன் போர் குறித்த ரகசியங்களை விக்கி லீக் வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளை மட்டுமல்லாது மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெக்கா மற்றும் நேட்டோத் துருப்புகள் செயல்படுவதற்கும், தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்வதற்கும், தேடுதல் நடவடிக்கைக்கும் அந்த நாட்டைச் சேர்ந்த பழங்குடி இன மக்களை உளவாளிகளாக பயன்படுத்துகின்றனர்.

காட்டிக் கொடுப்பவர்கள், தகவல் அளிப்பவர்கள், துணை புரிபவர்கள் என்று பல பிரிவுகளாக இவர்களை பிரித்துள்ளனர். இவர்களில் சிலரை, தீவிரவாத இயக்கங்களிலும், ஊடுருவ வைத்துள்ளனர். இவர்களின் துணையோடும், இவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையிலும் தான் அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் செயல்பாடுகள் அமைகின்றன. தீவிரவாதிகள் கண்டுபிடிப்பதற்காக நடத்தப்படும் தேடுதல் நடவடிக்கைகள் முதற்கொண்டு அவர்களுடன் நடைபெற்ற அனைத்து மோதல்களும் உளவாளிகள் தந்த தகவல்களின் அடிப்படையிலேயே நடந்தது என்பது கவனிக்கத்தக்கது.

அமெரிக்க ராணுவத்திற்கு தகவல்களைத் தரும் உளவாளிகளின் பெயர்கள் மற்றும் ராணுவத்தினருடன் நடைபெற்ற மோதல்களில் கொல்லப்பட்டவர்களின் பட்டியல், கொல்லப்பட்டவர்கள் குறித்து உளவாளிகள் அளித்த தகவல்கள் ஆகிய விவரங்களைத் தான் விக்கி லீக் இணையதளம் வெளியிட்டுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பில் இருந்த ரகசிய கோப்புகளின் விவரம் வெளிவந்துள்ளது அமெரிக்க ராணுவ அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விக்கி லீக் அம்பலமாக்கிய ரகசிய கோப்புகளின் எண்ணிக்கை ஒன்றோ, இரண்டோ அல்ல... சுமார் 90 ஆயிரம் கோப்புகளின் ரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்க ராணுவம் பலத்த பாதுகாப்புடன் வைத்திருந்த ரகசியங்கள். மேலும் விக்கி லீக் வெளியிட்டுள்ள விவரங்கள் உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடியவை. அமெரிக்கா மற்றும் நேட்டோ வீரர்களினால் கொல்லப்பட்டவர்களில் சுமார் 70 சதவீதம் பேர் தாலிபான்களோ, அல் கொய்தா தீவிரவாதிகளோ அல்ல.. அப்பாவி மக்கள் தான் கொல்லப்பட்டுள்ளனர் என்ற விபரத்தையும் ஆதாரங்களுடன் அது வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு எண்ணத்தில் ஆப்கன் மண்ணில் லட்சக்கணக்கான ராணுவத்தினரை நிறுத்தி வைத்திருந்த சோவியத் யூனியன் சேற்றில் சிக்கிய யானை போல் திக்குமுக்காடி தன்னைக் காப்பாற்றிக் கொண்டால் போதுமென்ற நிலைக்கு ஆளானது. ஆழம் தெரியாமல் காலை விட்ட அமெரிக்கா தேன் கூட்டில் கையை விட்ட நிலைக்கு ஆளாகியுள்ளது.

இராக்கில் அம்பலப்பட்டு போன அமெரிக்கா

சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்க ராணுவம் பாக்தாத்தில் நடத்திய கொடூரத்தை "இராக்கில் அமெரிக்கர்களின் கைவரிசை' என்ற தலைப்பில் விக்கி லீக் அம்பலப்படுத்தியது. பாக்தாத் நகர வீதிகளில் நடந்து சென்று கொண்டிருக்கின்ற அப்பாவி மக்களை பலவந்தமாக தடுத்து நிறுத்தி சோதனையிடுவதையும், ஏதும் பிடிபடாத நிலையிலும் சுட்டுக் கொல்வதையும் படம் பிடித்து வெளியிட்டது.

கண்ணில் விரலை விட்டு ஆட்டும் விக்கி லீக்

விக்கி லீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ஜி. இவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட ஜூலியன் மீது நடவடிக்கை எடுக்க சிஐஏ ஆஸ்திரேலியப் போலீசாரை தொடர்பு கொண்டது. ஜூலியனுக்கு தனது முகவரி குடும்பம் எதுவுமில்லாததால் விவரங்கள் எதையும் ஆஸ்திரேலியா போலீசாரால் தர முடியவில்லை.  சுவீடனில் ஜூலியன் தங்கி உள்ளதாக கூறும் சிஐஏ சுவீடன் நாட்டில் இணையதளக் குற்றங்கள் மீதான நடவடிக்கை எடுக்க சட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தால் கையை பிசைந்து நிற்கிறது.

- அபு சுபஹான்