indians bookகீழடியில் கிடைக்கின்ற புதிய புதிய தரவுகள் தமிழர்களின் நாகரிகத்தின் காலத்தை, கிறித்துப் பிறப்பதற்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துச் செல்கின்றது.

கேரள மாநிலத்தின் பட்டணம் என்ற ஊரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் திராவிட நாகரிகத்தின் தொன்மையையும், அக்காலக்கட்டத்தில் ரோமாபுரிப் பேரரசுடன் கொண்ட வர்த்தக உறவுகளையும் வெளிக்கொணர்ந்துள்ளது என்பதை இந்து குழுமத்திலிருந்து வெளிவரும் ‘பிரண்டலைன்’ மாத இதழில் அக்டோபர் 2019-இல் வெளிவந்த கட்டுரை சுட்டியுள்ளது.

(Pattanam Excavation - Excavations in Kerala’s Pattanam reaffirm its trade links with Rome by P.J. Cherian Giulia Rocco)

இதில், இரு அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள் பல அரிய புதிய தகவல்களை அளித்துள்ளனர்.

தமிழர்களின் தொன்மை வரலாற்றை மென்மேலும் வெளிக்கொணரும் அகழ்வாராய்ச்சி முடிவுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்த சேஷ ஐயங்கார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் (1914) வரலாற்று மற்றும் அகழ்வாராய்ச்சி துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் கிருஷ்ணசாமி ஐயங்கார், 1915-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பொருளாதாரப் பேராசிரியராகவும் துறைத் தலைவராகவும் பொறுப்பேற்று 1922-ஆம் ஆண்டுவரை பணிபுரிந்துள்ள பேராசிரியர் கில்பர்ட் சிலேட்டர் ஆகிய அறிஞர்கள் திராவிட இயக்கத்தின் தொன்மையைப் பற்றித் தனித்தனியாக ஆய்வு செய்து, நூல்களை வெளியிட்டு திராவிட நாகரிகத்தின் தொன்மையினைப் பறை சாற்றி, ஆய்வுத் தளத்தின் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.

குறிப்பாக கிருஷ்ணசாமி ஐயங்கார், ‘திராவிடக் கட்டடக்கலை’, ‘இந்தியாவின் பண்பாட்டிற்குத் தென் இந்தியாவின் பங்களிப்பு’ போன்ற நூல்களை வழங்கியவர். இவரும் திராவிடர்களின் தனித்தன்மையைப் பற்றியும், அவர்களுடைய தனித்துவமான பண்பாடுகளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்து மும்பை புனித சேவியர் கல்லூரியில் வரலாற்றுப் பேராசிரியராகப் பணிசெய்த பாதிரியார் ஹென்றி இராஸ், சிந்து சமவெளி நாகரிகத்தைப் பற்றிப் பல முன்னோடியான ஆய்வுகளை மேற்கொண்டார்.

“சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம்தான்” என 1922-ஆம் ஆண்டிலேயே இராஸ் குறிப்பிட்டார்.

இதைப் பற்றி இந்தியாவின் புகழ்மிக்க வழக்கறிஞர் பாலி நாரிமன், 2010-இல் வெளிவந்த ‘என் நினைவு மறைவதற்கு முன்’ ( Before Memory Fades ) என்ற தன் வாழ்க்கை வரலாற்று நூலில், “தாம், பாதிரியார் இராஸிடம் பயின்ற மாணவர்; வரலாற்றுப் பாடத்தை இராஸ் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும்போது சிந்து சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதற்கான பல தரவுகளை எடுத்துக் காட்டுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பேராசிரியர் இராஸ் சிறப்புச் சொற்பொழிவை அக்காலக்கட்டத்தில் வழங்கியுள்ளார். அதில், திராவிட நாகரிகத்தின் சிறப்புகளைப் பட்டியலிட்டுள்ளார்.

சேஷ ஐயங்கார், 1933-இல், ‘திராவிட இந்தியா’ என்ற நூலில், “தனித்த நாகரிகக் கூறுகளையும், மொழி, பண்பாட்டுக் கூறுகளையும் பெற்ற தமிழர்கள் ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டவர்கள்; வடக்கிலிருந்து வந்தவர்கள்தான் ஆரியர்கள்” என்றும், “தமிழர்கள், மலையாளிகள், கன்னடத்தவர் மற்றும் தென் இந்தியாவில் வாழ்ந்த பழங்குடியினர் ஆகியோர் திராவிட இனத்தின் முதன்மைக்குடிகள். திராவிடர்கள் இந்தியத் துணைக் கண்ட முழுவதும் வாழ்ந்தனர்.

பலுசிஸ்தான் தொடங்கி மத்திய இந்தியத் துணைக்கண்ட பகுதிகள் வரை வாழ்ந்த மக்களின் மொழிகளின் தொடர்பு திராவிட மொழிகளின் கூறுகள்தான்” என்பதைச் சுட்டிக்காட்டினார்.

1915-ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பொருளாதாரப் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் பொறுப்பேற்று, 1922-ஆம் ஆண்டுவரை பணிபுரிந்த பேராசிரியர் கில்பர்ட் சிலேட்டரின் திராவிட நாகரிகத்தைப் பற்றிய முன்னோடியான கருத்துகள் மிகச்சிறந்த முறையில் இன்றளவும் நிலைத்து நிற்கிறது.

கில்பர்ட் சிலேட்டர் எழுதிய ‘இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள்’ (The Dravidian Elements in Indian Culture) என்ற நூலில் “‘திராவிடன்’ என்ற சொல் இன அடிப்படையில் அமையாமல் மொழி அடிப்படையில் அமைந்து இந்தியாவில் வாழும் மக்கள் பிரிவினரைக் குறிக்கின்றது” எனக் குறிப்பிட்டார்.

(The word ‘Dravidian’ indicates a linguistic rather than a racial section of the people of India).

“நீண்ட நெடிய நாகரிக வரலாற்றில் தமிழ் தனது தூய்மையை நிலை நாட்டியுள்ளது. தமிழிசை ஏழு வகை பகுப்பினைப் பெற்று, பல உலக நாகரிகங்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது.” “தமிழ் மொழி வியக்கத் தக்க அளவிற்கு நுண்ணியமான தர்க்கக் கூறுகளை உள்ளடக்கிய மொழியாகும்.” ( The Tamil Language is extraordinary in its subtlety and sense of logic) என்றும் பேராசிரியர் சிலேட்டர் குறிப்பிட்டுள்ளார்.

“திராவிடர்கள் நுட்பமான கருவிகளைப் பயன்படுத்தி வேட்டையாடுவதில் வல்லமை பெற்று இருந்திருக்கலாம். மேலும், இன்றிருக்கும் மொழிகளிலிருந்தே வேட்டைத் தொழிலை மேற்கொண்டிருந்த பண்டைய திராவிட இன மக்களின் மனநிலைகளைப் பற்றி சில நுண்ணிய ஓரளவு தெளிந்து கொள்ளக்கூடிய விளக்கம் கிட்டுகிறது.

திராவிட மொழிகளில் தமிழே தூய்மை மிக்கது என்பதால் அதன் வழியாகவே சில கருத்துகளைப் பெற முடியும். நாம் காணும் தமிழ் மிகப் பரந்த ஒரு நாகரிகத்தின் நீண்டகால வளர்ச்சியின் விளைவே ஆகும்” என்றும்;

“அந்நாகரிகத்தைத் தோற்றுவித்து அம்மொழியை முழுதும் செம்மைப்படுத்திய மனப்பண்பு திராவிடர்கள் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த தங்களின் மூதாதையரிடத்தில் ((Hunting Ancestors) இருந்தே வந்திருக்க வேண்டும். அத்தகைய மனப்பண்பு ஒரு வேளை அந்த மூதாதையர்களிடம் முழுமையாக வளர்ச்சியடையாமல் இருந்திருக்கலாம்” என்றும் சிலேட்டர் குறிப்பிட்டுள்ளார்.

“நெல் பயிரிடுதலே திராவிட நாகரிகத்தின் பொருளியல் அடிப்படை என்பது தெளிவாகிறது. நெல்லுடன் கூட வேறு பல்வகை தினைப் பயிர்களும் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், இவை நெல்லுக்கு அடுத்தபடியாக இரண்டாம் நிலையில்தான் வைக்கப்பட்டன. அத்துடன் தினைப்பயிர்களைப் பயிரிடும்போதும் கலப்பை முதலிய உழவுக் கருவிகள் நெற்பயிரிலிருந்து மேற்கொண்டு பயன்படுத்தப்பட்டன. நெற்பயிருக்கு அவை மிகவும் உகந்தவையாயும் உள்ளன” என்றும் சிலேட்டர் விளக்குகிறார்.

The rice growing is obviously the economic basis of Dravidian culture. Many sorts of millets are grown in addition to rice but only as a pis aller, and the ploughs and other implements used for cultivating the millets are borrowed from rice cultivation, for which they are much suitable - (Chapter - 4, p.110)

“நெசவுத் தொழில், பட்டுத் தொழில் ஆகியன திராவிடர்கள் இந்தியாவில் தொன்மைக் காலத்தில் பின்பற்றிய தொழில்கள்” என்றும் குறிப்பிடுகிறார். இத்தகையத் தொழில்கள் பின்பு சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கங்களையும் மாற்றங்களையும் விளக்கியுள்ளார்.

திராவிட இயக்க நாகரிகத் தொன்மையையும், தமிழின் தொன்மையையும் குறைத்துக் காட்டி மறைக்கின்ற போக்குகளுக்கு 2018-ஆம் ஆண்டு தில்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில் உள்ள ராகிகர்கியில் எடுக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சி சரியான விடையை அளித்துள்ளது.

1375 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மொகஞ்சதாரோ ஆய்வைவிட இந்த நிலப்பரப்பின் அளவு இருமடங்கு அதிகம்.

இந்த ஆய்வினை மேற்கொண்ட இந்தியாவின் மூத்த தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் சிவராம் சிண்டே, டெக்கான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராவார்.

இந்த ஆய்வில், 37 புதைக்கப்பட்ட தொல் குடிகள் இடங்களை அகழ்ந்தார்கள். மானுட இயல் கூறுகளின் படி விஞ்ஞான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அங்குக் கிடைத்த எலும்புகளைக் கொண்டு (டி.என்.ஏ.) மரபணு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் அடிப்படையில், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் சமற்கிருதப் பேராசிரியர் மைக்கேல் விட்சேல் ஓர் ஆய்வுரையை நிகழ்த்தினார்.

இந்த மரபணு ஆய்வு, கடந்த பத்தாண்டுகளாகப் பல்வேறு உண்மைகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. இதுவரை இந்தியர்களின் மரபணு கிடைக்கவில்லை. ஹரியானா ராகிகர்கியில் கிடைத்த மனித மரபணுவின்படி உள்ளூரிலேயே மனித நாகரிகம் தோன்றியுள்ளது. இது சிந்து சமவெளி நாகரிகத்தை விடப் பழமையானது. கிடைக்கப்பெற்ற எலும்புகளின் ஆய்வின்படி உள்ளூரிலேயே உருவான பண்பாடுதான் மற்ற பகுதிகளுக்கும் சென்றுள்ளது.

இந்த மக்களின் நாகரிகமும் அவர்களின் பண்பாடும் பழமையான தென்னிந்திய மக்களின் நாகரிக மரபு வழியாகத்தான் வந்துள்ளது. சில ஈரான் நாட்டின் விவசாயிகளுடைய சிறிய அளவிலான கலப்பும் இதில் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் தொல்குடி மக்களின் மரபணுக்களுக்கும் ராகிகர்கியின் வாழ்ந்த மக்களின் மரபணுக்களுக்கும் ஒற்றுமை இருப்பதால், சிந்து சமவெளி நாகரிக காலத்தில் மக்கள் பேசியது திராவிட மொழியே என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு பல உண்மைகளைச் சொல்கிறது.

இதுவரை பெரிதாகப் பேசப்பட்டது ஆரிய மொழியான சமற்கிருதம் என்பதை முறியடிக்கிறது. இதை முன்னிறுத்திய ஜெர்மன் ஆய்வாளர் மாக்ஸ் முல்லர் கருத்தும் பொய்யாக்கப்பட்டுள்ளது.

ஆரிய சமாஜத்தை உருவாக்கிய தயானந்த சரசுவதி, “ஆரியர்கள் உலகம் தோன்றியவுடன் திபெத் வழியாக இந்த நாட்டிற்கு வந்தார்கள்” என்ற பொய்யுரையும் முறியடிக்கப்படுகிறது.

“கிறித்துப் பிறப்பதற்கு 8000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கு ஆரியர்கள் வந்தார்கள்” என்ற பாலகங்காதாரத் திலகர் கருத்தும் பொய்யாக்கப்படுகிறது. “திலகரின் கருத்துதான் உண்மையானது” என்று ஆர்எஸ்எஸ்.தலைவர் கோல்வால்கர் கூறியதும் பொய்யாயிற்று.

சுவாமி விவேகானந்தர், “ஆரியர்கள் இந்தியாவில் தோன்றியவர்கள்; அப்போது ஆப்கானிஸ்தான் இந்தியப் பகுதியாகவே இருந்தது” என்ற கருத்தும் முறியடிக்கப் படுகிறது. “சமற்கிருத மொழி திராவிட மொழிகளுக்கு நெருக்கமான உறவு கொண்டிருந்தது” எனும் பாண்டிச்சேரி அரபிந்தோ கூற்றும் பொய்யாகிறது.

இதுவரை பரப்பப்பட்ட - நம்பப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்தது, வேதகால நாகரிகத்தின் தொடர்ச்சி எல்லாம் பொய்யானது என்றும் இவ்வாய்வில் வெளிவந்துள்ளது .மேலும், “சிந்து சமவெளி நாகரிகத்திற்கும், வேதகால ஆரியர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை இந்த நாகரிகம் தனித்தன்மையானது” எனத் தற்போது கூறப்பட்டுள்ளது.

தொல்பொருள் தரவுகள், மொழியியல் தரவுகள், உடற்கூறு மரபணுத் தரவுகள் ஆகியவற்றைக்கொண்டு அறிவியல் கண்ணோட்டத்தோடு செய்யப்பட்ட இந்த ஆய்வு, ஆரியர்களின் நாகரிகத்திற்கும் இப்பகுதியில் தோன்றிய நாகரிகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுதி செய்துள்ளது.

2021-இல், நமித் அரோரா என்ற ஆய்வாளர், இந்தி பேசும் வடஇந்தியாவில் பிறந்து, பின்பு வடக்கு கலிபோர்னியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பல ஆண்டுகள் இணையத் தொழில் உட்படப் பல தொழில் தளங்களில் பணியாற்றியவர். அகழ்வாராய்ச்சியின் மீது தணியாத பற்று கொண்ட காரணத்தால், இவர் இந்தியாவினுடைய பல அகழ்வாராய்ச்சி இடங்களுக்குப் பயணம் செய்து பல தரவுகளை அறிந்து ‘இந்தியர்கள் - ஒரு நாகரிகத்தின் சுருக்கமான வரலாறு’ (Indians - A Brief History of a Civilization) என்ற நூலை 2021-இல் வெளியிட்டுள்ளார்.

இந்நூலில், ஹரப்பா - மொகஞ்சதாரோவில் காணப்படுகிற நகர அமைப்புகள், நீர்வழிச் சாலைகள் மற்றும் அங்கு கண்டெடுக்கப்பட்ட இறந்தவர்களின் மரபணு சார் இனக்கீற்று அமில (DNA) ஆராய்ச்சி முடிவுகளின்படி, “ஹரப்பாவில் வாழ்ந்தவர்களுக்கும் தற்போது வாழும் தென்னிந்தியர்களுக்கும் மரபணுக்கள் ஒத்துப்போகின்றன” எனக் குறிப்பிடுகிறார்.

மேலும், இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது உள்ள திராவிட மொழிக் குடும்பத்திற்கும், அங்கு காணப்படுகிற எழுத்து வரி வடிவங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். (Indians - A Brief History of a Civilization, p.33-34)

குறிப்பாக, தென்னிந்தியாவின் விஜயபுரியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி அடிப்படையில் பல கருத்துகளை வெளிக்கொண்டு வந்துள்ளார். “இறந்த உடலை எரிப்பது திராவிட நாகரிகம் அல்ல. புதைப்பதுதான் அவர்களின் மரபாக இருந்தது” என்பதையும் விளக்குகிறார். இதற்கு ஒரு சான்றையும் அவர் குறிப்பிட்டிருப்பது நமக்கு வியப்பை அளிக்கிறது. “ஹரப்பா மரபு தென் இந்தியாவில் நிறைந்து இருக்கிறது” என்றும் குறிப்பிடுகிறார்.

“பிராமணர்களுக்கு எதிர்ப்பான திராவிட இயக்கம், தமிழ்நாட்டில் புதைக்கும் பழக்கத்தை மீட்டெடுத்தது” எனக் குறிப்பிட்டு, “கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உடல்கள் புதைக்கப்பட்டு நினைவிடங்களாக இருப்பது இதற்கு ஒரு சான்று” என்றும் கூறுகிறார். ஏனோ தெரியவில்லை, இந்த ஆசிரியர் அறிஞர் அண்ணா நினைவிடத்தைக் குறிப்பிடவில்லை.

இவ்வாறு வடநாட்டில் பிறந்து, இந்தி மொழி பேசுகிற வரலாற்று ஆய்வாளர்கள் பலர் தங்களின் வரலாற்றுப் படைப்புகளில் திராவிட நாகரிகத்தின் தொன்மையையும், தமிழ் மொழியின் சிறப்பையும் குறிப்பிட்டு வருவது பலருக்கு அதிர்ச்சியைத் தருகிறது.

இதே கருத்தைத் தாங்கி 2018-இல் ‘அவுட்லுக்’ ஏடு, “இது தென்னிந்திய அரசியல் கட்சிகளுக்குக் கிடைத்த புதிய தீனியாகும்” என்றும், “அதே நேரத்தில், வடநாட்டில் இந்துத்துவா கொள்கையைப் பரப்பி வருபவர்களுக்குத் திராவிடமும் ஆரியமும் இருந்தது எனக் கூறுபவர்களுக்கு இது ஏற்புடையதாக அமையாது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

(The close match of Rakhigarhi DNA with South Indian tribal populations also suggests that the Indus valley culture spoke en early Dravidian language. While this may be fodder for South Indian political parties, it would be much harder to digest for the popular North Indian Hindutva narriative of ancient national harmony).

வரலாற்றைத் திசை திருப்பும் ஆர்எஸ்எஸ் - பாஜக - சங்பரிவார அமைப்புகள் இனியாவது திருந்துவார்களா?

தங்களின் பொய்ப் பிரச்சாரங்களை நிறுத்துவார்களா?

தமிழ்நாட்டிலும் சிலர், “திராவிடமும், தமிழும் எதிரெதிரானது என்று குறுக்குச்சால் ஓட்டும் குறுமதியினர் இதைப் படித்துத் திருந்துவார்களா?

- குட்டுவன்