aanai muthu copy2020 திசம்பர் திங்கள் முதல் கிழமையில் அய்ந்தாம் முறையாகச் சாவின் விளிம்பைத் தொட்டு விட்ட நான், வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு உப்புச்சத்து குறைந்து, அரைகுறை நினைவோடு நிலையற்று இருந்த நிலையில், 21.12.2021-இல், தாம்பரம் ஏ.ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். எனக்கு என்ன ஆயிற்று என்று இன்னும் என்னால் முழுமை யாக அறிந்துகொள்ள முடியவில்லை.

அந்த நிலையில், 10.01,2021 - இல் நடைபெறுவதாக இருந்த சிந்தனையாளன் பொங்கல் மலர் - 2021 வெளியீடு, சுயமரியாதை சமதர்ம மாநாடு நிகழ்ச்சிகளை, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைக்குழுவினர் கூடி 31.01.2021-க்குத் தள்ளி வைத்துள்ளனர். அதைக்கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த நான், தொடர் மருத்துவத்திற்காக சென்னை, ஓமந்துரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

உள்ளிருப்பு நோயாளியாகச் சிகிச்சை பெற்று ஓரளவு தேறியிருந்த நிலையில், மருத்துவமனையில் திசம்பர் இதழில் வெளிவந்த மாநாட்டு அறிவிப்புச் செய்தியை வாலாசா வல்லவனும், முனைவர் முத்தமிழும் காண்பித்தனர். ஏன் ஒத்தி வைத்தீர்கள் என்று மட்டும் வினவினேன்.

02.01.2021இல் மருத்துவமனையிலிருந்து தாம்பரத்திலுள்ள என் தலைமகன் ஆனை. பன்னீர்செல்வம் வீட்டிற்குத் திரும்பிய நான், ஒரு கிழமை கழித்து புதுச்சேரியிலுள்ள என் இரண்டாவது மகன் வெற்றி வீட்டுக்குச் சென்றுவிட்டேன். அவ்வப்போது பொங்கல் மலர், மாநாட்டு வேலைகள் குறித்து வல்லவன், முத்தமிழ், துரைசித்தார்த்தன் ஆகியோரிடம் கேட்டுக்கொண்டேன்.

அதன்பிறகு 31.01.2021இல் மாநாடு நடைபெற்ற சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கை அடைந்தபோது, அரங்கம் நிறைந்து தோழர்கள் என்னை வரவேற்றனர். மகிழ்ச்சியில் திளைத்தேன். சிந்தனையாளன் பொங்கல் மலரையும், சுயமரியாதை சமதர்ம மாநாட்டையும் காலம் கடந்தாலும் மாபெபொக தோழர்கள் கட்டுக்கோப்பாக இருந்து வெற்றியாக நடத்தி முடித்துள்ளனர்.

இந்தக் கொரானா காலத்திலும், பொங்கல் மலருக்கான விளம்பரங்களை ஏறக்குறைய சென்ற ஆண்டைப் போலவே எல்லோரும் கடுமையாக உழைத்துத் திரட்டியுள்ளனர். பொங்கல் மலர் பொலிவோடு வெளிவந்துள்ளது என்னை பூரிப்படைய வைத்தது.

இவை அனைத்தும் ஒரு தனியரின் வெற்றியல்ல. எல்லோருடைய உழைப்புக்கும் கிடைத்த வெற்றி. எல்லா மாவட்டச் செயலாளர்களுக்கும், கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் இந்நிகழ்வுகளுக்காக உழைத்த எல்லா கட்சித் தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் கிடைத்த வெற்றி.

என் மீதும், மா.பெ.பொ.க மீதும், சிந்தனையாளன் இதழ் மீதும் அன்பும் நம்பிக்கையும் பற்றும் கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி. எல்லோரும் எனக்கு நம்பிக்கையூட்டி என் ஆயுளை நீட்டித்துள்ளீர்கள். எனக்கு நம்பிக்கையூட்டிய ஒவ்வொரு தோழருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி, நன்றி, நனி நன்றி!

- வே. ஆனைமுத்து