இங்கொரு கொண்டாட்டம் கேடா?
இராசபக்சே எனும் கொலைகார னோடா?
        (இங்கொரு)
செங்குருதியை மொண்டு குடித்த அரக்கன்
சிங்கள வெறிகொண்டு அலையும் தருக்கன்
பங்காளியைப் போல என்னடா அழைப்பு
படுபாவிக் கென்னடா பட்டு விரிப்பு?
பல்லைக் காட்டிஅவன் சிரிக்கச் சிரிக்கப்
பாழும் வயிறு பற்றி எரியுதே!
முள்ளி வாய்க்காலில் எரிந்த எங்களின்
முன்னவர் பிணங்கள் கண்ணில் தெரியுதே!
எங்கள் பகைவனுடன் கூடிச் சிரிக்கிறாய்
இங்குள்ள தமிழரைச் செருப்பால் அடிக்கிறாய்
எங்கேனும் அடுக்குமா இந்தக் கொடுமை
எத்தனை நாளோ நாங்கள் இந்திய அடிமை?
வன்மத்தை மாறாமல் நெஞ்சிலே வைத்தாய்
வஞ்சகச் சிரிப்பை உதட்டில் புதைத்தாய்
மன்மோகன், நீ என்ன பச்சைப் பிள்ளையா
மறைவாய் எப்போதும் உன்கையில் கொள்ளியா?
ஆனாலும் உனக்கென்ன அத்தனை பகையா
அழிந்தனர் தமிழர் என்(று) ஆர்ப்பாட்ட நகையா?
சோனியா, உன்கொடி மட்டுந்தான் பறக்குமா?
சுடுகாட்டுச் சாம்பல் உன் பேரை மறக்குமா?
சாவின் விளம்பிலே ஓரினம் தவிக்க
தாரணி முற்றிலும் அகதியாய்த் துடிக்க
காமன் வெல்த் எனும் களியாட்ட மோடா!
கழுதைக்குத் தலையிலே மணிமுடி கேடா?
போங்கடா போங்கள் போடுங்கள் ஆட்டம்
பொத்திக் கிடக்குமோ எங்களின் கூட்டம்
காங்கிரசின் பிழைப்புப் பீநாறிப் போகும்
கட்டாயம் தமிழகம் பழிவாங்கித் தீரும்!

- தமிழேந்தி