இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ்க்கொண்டு வர, வெள்ளையர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் முயன்றார்கள். 1801இல் இமயம் முதல் குமரிவரை ஒரே நாடு என, என்றுமே இல்லாத ஓர் இந்தியாவை அவர்கள் உருவாக்கினர். இதில் மூன்றில் ஒரு பங்குப் பகுதியை - வெள்ளையனுக்குக் கப்பம் கட்டும் சுதேச அரசர்கள், குறுநில மன்னர்கள், பெருநில உடைமைக்காரர்கள் ஆட்சியில் விட்டு வைத்தனர். இந்தியாவின் இயற்கை வளத்தைக் கொள்ளையடிக்க ஏற்ற எல்லா ஏற்பாடுகளையும் வெள்ளையர்கள் செய்து கொண்டனர். படையும், காவல்துறையும்; இரயில்வேயும், தந்தியும், அஞ்சல் துறையும் வெள்ளையரால் அமைக்கப்பட்டன.

இவற்றை எண்ணி, பழைமையில் திளைத்த காட்டுமிராண்டிகளிடையே, தன்னலம் கருதி ஆங்கிலேயன் செய்த கொடுமைகளை மன்னிக்கலாம் என்றே முற்போக்காளர் கருதினர். ஏன்? இந்தியாவில் இருந்த எந்த அரசனும், எல்லா மக்களுக்கும் எழுத்தறிவு தருவதை அரசின் கடமையாகக் கொள்ளவில்லை. இந்துக்களும், இஸ்லாமியர்களும் மதக்கல்வி அளிப்பதற்கான வேதபாட சாலைகளை மட்டுமே கி.பி. 10ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நிறுவினர். இதனால் நாட்டின் வெகு மக்களுக்குக் கல்வி அறிவு தரப்படுவது 1835 வரை அரிதாகவே இருந்தது.

1835 முதல் வெள்ளையன் அளித்த கல்வி, எல்லாத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கவில்லை.  கிறித்துவ மத நிறுவனங்கள் அளித்த கல்வியும் கீழ்ச்சாதி - தீண்டப்படாத மக்களுக்குப் போதிய அளவில் கிடைக்கவில்லை. அந்தக் கல்வித் திட்டம் வெள்ளைக்கார எசமானுக்குப் பண்ணை அடிக்க மட்டுமே கற்றுக் கொடுத்தது. அந்த வேலைக்கு உடனே தங்களைத் தகுதிப்படுத்தக் கொண்டவர்கள் அப்போது செல்வாக்கோடு இருந்த பார்ப்பனர்களும், வேளாளர்களும், காயஸ்தர்களும், மேல் சாதி சூத்திரர்களும், உருது பேசிய இஸ்லாமியர்களுமே ஆவர். இவர்கள் எல்லோரும் வெறும் 100க்கு 20 பேர் மட்டுமே ஆவர்.

இந்த நிலையில், 1947 ஆகஸ்டில் வெள்ளையன் வெளியேறினான். 1835 முதல் எல்லோருக்கும் கல்வி தருவதை மேற்கொண்ட நிலையில் - 112 ஆண்டுகளுக்குப் பிறகு, 100க்கு 16 இந்தியர்களுக்கே 1947இல் எழுதப்படிக்கத் தெரியும். இந்த  16ர பேர்களுள் முக்கால்வாசிப் பேர் மேல் சாதிக்காரர்கள் என்பதும்; இவர்கள் உழைக்காத மேல் சாதியினர் என்பதும் சொல்லாமலே புரியும். இப்படிப்பட்ட நிலையில், 1947க்குப் பிறகு ஓர் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் 1967க்குள் அல்லது  1977க்குள் இந்தியர் எல்லோருக்கும் 8ஆம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வி தருவதை இந்திய அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யவில்லை.

அப்படிச் செய்ய வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஒரு கட்டளை விதி இல்லை. 2010 வரையில் இல்லை. இது வேண்டுமென்றே அப்படி வைக்கப்பட்டது. அதனால் தான், 60 ஆண்டுகள் கழித்து, 2010இல் 86ஆவது அரசமைப்புத் திருத்தம் மூலம் ‘எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி பெறும் உரிமையை அளிக்கும்’ ஒரு ஏமாற்றுச் சட்டத்தை இந்திய அரசு இயற்றியிருக்கிறது. இதற்கு நன்றி கூறலாம் என்பது ஒன்று. ஆனால், இதை அரசு எப்போதும் நிறைவேற்ற முடியாது என்பது இன்னொன்று ஏன்?

இந்திய ஆட்சியில் இரண்டொரு தடவைகளில் தவிர, எப்போதும் தலைசிறந்த கல்வியாளர்கள் இந்திய அரசில் கல்வி அமைச்சர்களாக இருந்தது இல்லை. ஆட்சிக்கு வந்த எந்தக் கட்சியும் எல்லோருக்கும் அடிப்படைக் கல்வி கட்டாயக்கல்வி - ஒரே தரமான கல்வி தருவதை நோக்கமாகக் கொண்டதாக இல்லை. தென்னாட்டில் கேரளாவில் முளைத்தது போன்ற அய்யன் காளி, ஸ்ரீ நாராயண குரு முதலான கல்வி, சமூக உரிமைப் போராளிகளோ; தமிழ் நாட்டில் தோன்றிய பண்டித அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன்; டாக்டர் டி.எம். நாயர், டாக்டர் சி. நடேசன், சர்.பி. தியாகராயர் போன்றவர்களோ; மராட்டியத்தில் தோன்றிய மகாத்மா புலே, ரானடே, அம்பேத்கர் போன்றவர்களோ - கீழ்ச் சாதி மக்களின் 85ரூ மக்களின் கல்வி, சமுதாய உரிமைகளுக்குப் போராடும் இயக்கங்கள் வடபுலத்தில் பெரிய அளவில் தோன்றவில்லை.

காங்கிரசு பேசிய தேசியமும், மற்ற கட்சிகள் பேசிய தேசியமும், பொதுவுடைமைக் கோட்பாடும் தென்னாட்டில் எழுந்தது போல் - வெகு மக்களை மய்யமாகக் கொண்டு எழவில்லை. இந்தியர் - இந்திய தேசியம் என்கிற வடிவில் வெகு மக்களுக்கு எதிரான தேசியக் கொள்கையாகவே இந்திய அரசின் கல்வி தரும் கொள்கை விளங்கியது. அதனால் தான் கங்கை, யமுனை, பிரம்மபுத்ரா, கண்டக்சோன் பேராறுகள் பாயும் - செழுமை கொழிக்கும் உ.பி., பீகார், ஒரிசா, மேற்கு வங்கம் முதலான மாநிலங்களில், 2010இல், 100க்கு 40 பேர் எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள்.

அதேபோல், இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு வேளாண் நிலம் வானம்பார்த்த நிலம் என்பது தெரிந்தும் - 1951 முதல் மேற்கொள்ளப்பட்ட எந்த அய்ந்தாண்டுத் திட்டத்திலும் வேளாண் பாசனத்திட்டங்களுக்கு உரிய வழிவகை இந்திய அரசினால் செய்யப்படவே இல்லை. 1951 முதல் இயற்றப்பட்ட எந்த நில உச்சவரம்புச் சட்டமும் எந்த மாநில அரசினாலும் கடந்த 60 ஆண்டுகளாகச் சரிவர அமல்படுத்தப்பட வில்லை. அதனால் வேளாண் கூலிகளாகவே பிறந்து, கூலிகளாகவே மடியும் பழங்குபடியினர், தீண்டப்படாதார் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் இன்றளவும் நிலம் அற்ற - அற்றைக் கூலிகளாகவே வைக்கப்பட்டுள்ளனர்.

1962க்குப் பிறகு பொதுத்துறை நிறுவனங்களாக - காப்பீட்டு (எல்.அய்.சி.) நிறுவனங்கள், வங்கிகள், தொடர் வண்டித்துறை, பெருந்தொழில்கள் முதலானவை காங்கிரசு அரசினால் அறிவிக்கப்பட்டன. பண்டித நேரு காலத்தில் தொடங்கப்பட்டு பிரதமர் இந்திராகாந்தி காலத்தில் செய்யப்பட்ட இப்பணிகள் இந்தியப் பொருளாதார வளர்ச்சி, வணிக வளர்ச்சி, - தொழில் வளர்ச்சி இவற்றுக்கு நல்ல அடித்த தளங்களை அமைத்தன என்பது ஓர் உண்மை. ஆனால், இன்று இந்தியாவில் உள்ள மக்களுள் ஒரு 10ரூ பேர்கள் மட்டுமே இத்துறைகளில் பணியாற்றுகிறார்கள், இவர்களுக்கு உள்ள பணி நிரந்தரப் பாதுகாப்பு, மீதம் உள்ளவர்களில், வேளாண்மை சார்ந்தவர்களுக்கும், பரம்பரைத் தொழில் செய்வோருக்கும் இல்லை. 1990க்குப் பிறகு உருவான சோவியத் சோசலிச ஒன்றியக் கலைப்பு, கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் ஆட்சி மாற்றம் இவற்றின் விளைவாக ஏற்பட்ட அமெரிக்க ஒற்றை முனை ஏகாதிபத்திய ஆதிக்கம் - இவற்றால் விளைந்த உலகமயம், தனியார் மயம், தாராளமயம் - கணினி வளர்ச்சி, தகவல் தொழில்நுட்ப இணையதள வளர்ச்சி முதலானவை - எந்தத் துறையில் எடுத்தாலும் மிகப் பெரிய முதலீடு செய்யும் தொழில் -  வணிக - பண்ணை முதலாளிகளே எல்லா நாடுகளின் இயற்கை வளங்களைக் கண்மண் தெரியாமல் கொள்ளையடிப்பதில் கொண்டு போய் விட்டுவிட்டன.

இவற்றுக்கு இடையே. 1948 முதல் உலகின் பல பகுதிகளில் எழுந்த தேசிய இன எழுச்சிப் போராட்டங்கள்; மொழி வழி நாட்டு விடுதலைப் போராட்டங்கள் அந்தந்த நாட்டு முதலாளிகளாலும். ஆளும் வர்க்கத்தினராலும். ஆட்சியினராலும் கொடுமையான முறைகளில் அடக்கி ஒடுக்கப்பட்டன, இவ்வகையில். இந்தியாவில் பண்டிதர் நேருவும் காங்கிரசுக் கட்சியும். காங்கிரசு ஆட்சியும் 1955க்குப் பிறகு மேற்கொண்ட நிலைப்பாடு அநீதியானது; அக்கிரமமானது. அது இந்தியாவைப் பாழடித்தது, எப்படி? இந்தியாவுக்கான ஓர் அரசமைப்புச் சட்டம் 1950இல் நடப்புக்கு வந்தது, இந்தியாவுடன் 1947 இல் இணைத்துக் கொள்ளப்பட்ட ஜம்மு - காஷ்மீருக்கான தனி அரசமைப்புச்சட்டம் இந்திய அரசின் ஒப்புதலுடன். 1955 இல் அமலுக்கு வந்தது.

இந்தியாவுக்கு ஒரு குடி அரசுத்தலைவர் உண்டு; ஒரு தேசியக் கொடி உண்டு. அதே போல் ஜம்மு - காஷ்மீருக்கு ஒரு குடி அரசுத்தலைவர் உண்டு; ஒரு தேசியக் கொடி உண்டு. ஜம்மு - காஷ்மீரின் வடக்குப்பகுதி பாகிஸ்தான் ஆளுகையில். ‘ஆசாத் காஷ்மீராக’ தனி நாடாளுமன்றத்துடன் இயங்குகிறது. இவற்றை அப்படியே காற்றில் பறக்க விட்டு விட்டு இந்தியா, ஜம்மு காஷ்மீர் எல்லை எது என்பதையும், வடக்கே எந்தக் கோடு எல்லைக் கோடு என்பதையும் 60 ஆண்டுகளாக உறுதி செய்து கொள்ளாமல் விட்டு விட்டு. அவ்வப்போது இந்தியாவுக்கு இணங்கிப்போகும் பருக் அப்துல்லா குடும்பத்தையோ - வேறு ஓர் அணியையோ காஷ்மீர் மாநில ஆட்சியில் பிடித்து உட்கார வைத்துக்கொண்டு கடந்த 60 ஆண்டுகளாக ஜம்மு -காஷ்மீரைக் காப்பாற்றுவதற்கென்றே. படைத்துறைக்கான மொத்தச் செலவில் பெரும் பகுதியை ஒதுக்கி நாசப்படுத்தி கொண்டு, ‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்கிஸ்தான் நிறுத்த வேண்டும்’ என்று கோரி. அதுவே ஜம்மு - காஷ்மீர் சிக்களுக்குத் தீர்வு என்பது போல் கூறி, இந்திய அரசு இந்தியரை ஏமாற்றுவது மாபெருங்கேடான செயல் அல்லவா? எந்த எல்லையை பாக்கிஸ்தான் மீறுகிறது? “ஆசாத் காஷ்மீர்” உள்ளிட்ட ஜம்மு - காஷ்மீர் - பாக்கிஸ்தான் எல்லை

யையா? அல்லது, “ஆசாத் காஷ்மீர்” “ஜம்மு - காஷ்மீர்” நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லையையா? இவற்றுக்கான எல்லைகளுக்கு வரையறைகள் எங்கே? எல்லைகள் நெடுகிலும் எல்லைக்கற்கள் எங்கே? எல்லையக் காத்திடும் முள்கம்பிவேலிகள் (அ) சுவர்கள் எங்கே? ஏன் இவை அமைக்கப்படவில்லை? எப்போது அவை அமைக்கப்படும்? “நாங்கள் வேண்டுமென்றே எல்லைக்கோட்டுப் பிரச்சினையை அப்படியே விட்டுச் சென்றோம்” என்று, கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புகூட ஒரு பிரிட்டிஷ் அதிகாரி இங்கே வந்து சொன்னானே! எப்போது - “பாக்கிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்” தடுக்கப்படும்? அதுவரையில் எவர் வீட்டு அப்பன் பணத்தை இதற்குக் கொட்டி அழுவது? ஏன் அப்படிக்கொட்டி அழ வேண்டும்? நேரு  குடும்பத்தின் ‘காஷ்மீர் பண்டிட்சாதி’ பாசத்தைக் காப்பாற்றிடவா? அல்லது ஷியாம் பிரசாத் முகர்ஜியின் ஆர்.எஸ். எசின் “இந்துத்துவ அகண்ட பாரத்” தத்துவத்தைக் காப்பாற்றவா?”

இந்திய அரசும். இன்றைய ஆளும் அணியான அய்க்கிய முற்போக்கு அணியின் தலைவர் சோனியா காந்தியும். பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங். பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரும் இவர்களின் கூட்டணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் என்போரும்  இவற்றுக்குத் திட்டவட்டமான விடை கூற வேண்டும், இவர்கள் விடை கூற முடியாது. ஏன்? ஜம்மு - காஷ்மீருக்கு முழுத் தன்னுரிமை வழங்கி, இந்தியக் கூட்டாட்சியில் ஓர் உறுப்பு நாடாக வைத்துக் கொள்ளுவது மட்டுமே ஜம்மு - காஷ்மீர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு ஆகும். இதற்கு இவர்கள் ஆயத்தமாக இல்லை.

இதைச் செய்யாத - செய்ய விரும்பாத இந்திய அரசு, இந்தியாவில் எந்த வித பயங்கர வாதத்தையும் எப்போதும் ஒழிக்க முடியாது. சத்தீஷ்கர் பகுதியில் மாவோ தீவிர வாதிகள் மேற்கொண்ட பயங்கரவாதம் - இந்திய அரசின், இந்தியப்பெரு முதலாளிகளின், இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்ளையை மூடி மறைத்து விட்டு “மாவோ இயக்கப்போராளிகள் மக்களின் எதிரிகள்” எனக் காட்ட முயன்று, நிழலோடு போராடிக் கொண்டே இருக்கமட்டுமே உதவும். ஏன்? மாவோயிஸ்டுகளின் இன்றைய போராட்டம், 2004க்கும் பிறகு தான் இப்படிப்பட்ட தீவிரப்போக்கை மேற்கொண்டது.

நக்சல் பாரியில் 2-3-1967 இல் வெடித்த நிலப்பறி போரட்டம், விளைச்சலில் வாரத்தை எப்படிப் பிரித்துக் கொள்ளுவது என்பது பற்றியே தொடங்கியது. நிலத்தைப் பயிரிடுவோரும் - நில உரிமையாளரும் சரிசமமாக 50:50 என்று விளைச்சலைப் பிரித்துக் கொள்ள வேண்டும் என்பது நில உடைமையாளர்களின் கோரிக்கை. அது முடியாது - 66ரூ பயரிடுவோருக்கும், 34ரூ நில உரிமையாளருக்கும் தரவேண்டும் என்பதே பயிரிடுவோரின் நிலைப்பாடு. இந்தக் கோரிக்கையை, முன்னிட்டு வீறிட்டு எழுந்த நக்சல்பாரி போராளிகள் இயக்கம் மேற்கு வங்க காங்கிரஸ் முதலமைச்சர் பி.சி. ராயின் கொடிய நசுக்குதல் நடவடிக்கைக்கு ஆளாயிற்று.

இயக்கத்தின் தோற்றுநரான சாருமஜூம்தார். 1970 இல் கைது செய்யப்பட்டார். அவர் சிறையிலேயே 1972 இல் மறைவுற்றார். அவர் மேற்கொண்ட “தனிமனிதர்  அழித்தொழிப்பு” நடப்பு வழி, தோல்வியுற்றது. சிறையிலிருந்து 1977 இல்விடுதலை பெற்ற புரட்சியாளர் கானு சன்யால், பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்டு) கட்சியுடன் இணைந்தார். அவர் அண்மையில் 23-3-2010 இல், தம் 78 ஆம் அகவையில் அய்யத்திற்கிடமான நிலையில் தூக்கில் தொங்கினார். 1967 இல் தோன்றிய நக்சல் பாரி இயக்கத்துக்கும் - இன்று சத்தீஷ்கர், ஜார்க்கண்ட் முதலான பகுதிகளில் வெடித்துள்ள அரசுப் படைகளுக்கு எதிரான மூர்க்கமான ஆயுத தாக்குதலை நடத்தும் மாவோயிஸ்டுகள் இயக்கத்துக்கும் இடையே பெருத்த வேறுபாடுகள் உண்டு.

முதலாவதாக, ஏறக்குறைய 30 ஆண்டுகளாக ஆந்திராவிலும், பீகாரிலும், மற்ற இடங்களிலும் தலை மறைவுப் போராளிகளாகச் செயல்பட்ட மக்கள் யுத்தக் குழுவினர், மாவோயிஸ்டுகள் முதலானோர் இன்று ஓரணியில் திரண்டு நின்று ஆயுதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்,  அந்தந்தக் குழுவினருக்கு ஏற்கெனவே ஏற்பட்ட பட்டறிவு, இவர்களுக்கு மக்களைப் பற்றிய நல்ல புரிதலை ஏற்படுத்திட உதவியது. ஆந்திரத்தை ஒட்டி அமைந்திருக்கிற சத்தீஷ்கர் (ம.பி.) ஜார்க்கண்ட (பீகார்) முதலான பகுதிகளுக்கு தங்களுடைய செயல்படு களத்தை இவர்கள் விரிவுபடுத்திக் கொண்டனர். 1948 - 49இல் தெலிங்கானா விடுதலைப் போராட்டம் ஒரு சிறு பகுதியில் மட்டுமே மய்யங்கெண்டிருந்தது. எனவே கொடுமையான அரசு அடக்கு முறையைக் கையாண்டு அன்றைய பிரகாசம் பந்துலு அரசு தெலிங்கானா போராட்டத்தை நசுக்கி விட முடிந்தது.’

இன்று, 16 மாநிலங்களில் 195 மாவட்ங்களில் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கம் பரவியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் 40 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஆதிப்பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அப்பகுதி முழுவதிலும் தரையின் வயிற்றில் நிலக்கரி, இரும்பு, தங்கம், வைரம், சுண்ணாம்புக்கல் முதலான கனிம வளங்கள் தேங்கிக் கிடக்கின்றன. இப்போது சில தனியார் நிறுவனங்கள் மாநில அரசின் ஒத்துழைப்புடன் இரும்புத் தாதுப்பொருளை வெட்டிச் சுத்த கரிக்கும் நிலையத்தை அங்கே அமைக்க முயற்சித்தன. பழங்குடி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மாவோயிஸ்டுகள் இம்மக்களுக்குத் துணை புரிந்தனர்.

ஒரிசா மாநிலத்தில் ஜஜ்பூர் மாவட்டத்தில் கலிங்க நகரில் ‘ரோகித் பெர்ரோ டெக் பிளாண்ட்’ என்ற பெயரில் இரும்புத் தொழிற்சாலை ஒன்றை டாட்டா குழுமத்தினர் தொடங்குகின்றனர். அவர்களுக்காக, 60 இலட்சம் டன் எஃகு உற்பத்தித் தொழிற்சாலையை அமைத்திட நிலத்தைக் கையகப்படுத்திட, 2-1-2006இல் அரசு நிர்வாகத்தினர் சென்ற போது இப்பழங்குடிகள் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசினர் படை 12 பழங்குடிகளைச் சுட்டுக் கொன்றது.

இதேபோல், இப்போது நான்கு எஃகுத் தொழிற்சாலைகள் கலிங்க நகருக்கு வெளியே இயங்குகின்றன. இவற்றை அன்னியில் இன்னும் இதே போல் ஒன்பது எஃகுத்தொழிற் சாலைகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தித் தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கவேண்டும். அப்படி நிலங்களை விற்றுவிடப் பழங்குடி மக்கள் விரும்பவில்லை. அங்குள்ளபழங்குடிகள் பலர் தலைக்கு 5 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரை சொந்தமாக நிலம் வைத்துள்ளனர், அவர்கள் வருந்தி உழைத்து வேளாண்மை செய்கிறார்கள். நெல். பருப்பு வகைப்பயிர்கள், கத்தரி, தக்காளி, இவற்றைப் பயிரிட்டு 5 ஏக்கரில் ஆண்டுக்கு ரூ. 20.000 வருவாய் பெறுகிறார்கள்.

அப்படிப்பட்ட நிலங்களில் உள்ள கனிம வளங்களைப் பலதலை முறைக்காலம் கொள்ளையடிப்பதற்காக இலட்சக் கணக்கான பழங்குடிகளை. அவர்களின் ஆயிரம் ஆண்டு காலப் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு டாட்டா குழுமத்தினர் கொழுப்பதற்கு வகை செய்ய இந்திய அரசு துணை செய்ய வேண்டுமா? பழங்குடி மக்களை விரட்டி அடிக்க வேண்டுமா? அம்மக்களைக் காப்பாற்றிட மாவோஸ்ட்டுகள் துணை போனால், அவர்களை இந்திய அரசு படைகளை ஏவிக்கொல்ல வேண்டுமா? அப்படிக் கொல்லுவது டாட்டா குழும முதலாளிகளுக்காக இந்திய அரசு செய்யும் பயங்கரவாதச் செயல் அல்லவா?

மாவோஸ்டுகள் நிதி திரட்டவும், ஆயுதம் வாங்கவும், உணவுக்காகவும், ஊதியம் தரவும் அங்கு ஊடாடும் தனியார் வணிகர் சிலரைக் கடத்துகிறார்கள் என்பது உண்மை. பழங்குடிகளில் அரசு உளவுத் துறைக்குத் துப்புக் கொடுக்கிறவர்களைக் கொல்லுகிறார்கள் என்பதும் உண்மை. இப்படி அவர்களால் கொலை செய்யப்பட்டவர்கள் 2001 இல் 100 பேர்; 2002இல் 140 பேர்; 2003 இல் 451 பேர்; 2004 இல் 500 பேர்; 2005 இல் 700 பேர்; 2006 இல் 750 பேர்; 2007 இல் 650 பேர்; 2008இல் 794 பேர்; 2010 இல் மூன்று மாதங்களில் இதுவரை 300 பேர். இப்படிக் கொல்லப்பட்டவர்களில் அரசுக் காவலர்களும். படைவீரர்களும் அடங்குவர்.

மாவோயிஸ்டுகளை அடக்கிட ஒரு குறுக்கு வழியை அரசு கையாண்டது. பழங்குடி மக்களிலேயே ஆயிரக்கணக்கனோரைப் பிடித்துச் சோறுபோட்டு. துப்பாக்கி சுடும் குறுகிய காலப் பயிற்சியும் கொடுத்து அரசுகாவல் மற்றும் படைகளுக்குத் தூசுப்படையாகச் சென்று. மாவோயிஸ்ட்டுகளைக் கொல்ல வழி கோலப்பட்டது. அது “சல்வா ஜூடும்” என அழைக்கப்பட்டது. அவர்கள் குருவிகளைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இப்போது. ஆந்திர அரசு கையாண்டது போல். உயர் தரப்பயிற்சி பெற்ற - ஆயுதந்தாங்கிய படையை அனுப்பி. தேடுதல் வேட்டை நடத்திட இந்திய அரசு முயன்றது.

இந்த நிலையில். ஒரிசா மாநிலத்தில் கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்து துணை இராணுவத்தினர் 16 பேரை மாவோயிஸ்டுகள் கொன்றனர். அதற்குப் பழிவாங்க வேண்டி அனுப்பப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படையினர் சத்தீஸ்கரில் தந்தேவடா பகுதியில் மாவோயிஸ்டுகளைத் தேடும் வேலையில் ஈடுபட்டனர். எந்த இடத்தில் எப்படிப் போராளிகள் மறைந்திருப்பார்கள் என்று தெரிய வக்கில்லாமல் போன அப்படையினரில் 76 பேர் கோழிக் குஞ்சுகள் போல் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

இதைக்கண்டு பெரிய கணக்கப்பிள்ளை பிரதமர் மன்மோகன் சிங் ஆத்திரப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி பதைக்கவில்லை. சிவகங்கைச் சீமையில் - சிவப்புக் கொடி இயக்கம் பரவாத மாவீரர்கள் வாழும் செட்டி நாட்டில் ஒரு வாக்குக்கு ரூ 500/- ரூ 1000 தந்தே தேர்தல் தோறும் வெற்றிக் கொடி நாட்டி. துணை நிதி அமைச்சர். நிதி அமைச்சர் எனப் பதவிகளைப் பிடித்தது, இன்று உள்துறை அமைச்சராக விளங்கும் வீராதிவீரர் செட்டி நாட்டுச் சிதம்பரத்துக்கு மட்டும் மூக்கின் மேல் கோபம் பொத்துக் கொண்டு வ்ந்தது.

நாட்டுக்காக உயிரிழந்த 76 படைவீரர்களுக்கு இறுதி வணக்கம் செலுத்திட வேண்டிப் படைகளுடன் அவர் அங்கே சென்றார்; இறுதி வணக்கம் செலுத்தினார். தில்லிக்குத் திரும்பி வந்த பிறகு ஓர் உறுதி மொழி கூறினார். “மூன்றே ஆண்டுகளில் மாவோயிஸ்டுகளை அடியோடு ஒழிப்பேன்” என்று முழங்கினார். இது ஒரு மாதத்தில் வெற்று முழக்கமாகி விட்டது. இப்போது “பயங்கர வாதத்தை ஒடுக்குவது மாநில அரசுகளின் பொறுப்பு” என்று மாற்றிக் கூறிவருகிறார். வாயைக் கொடுத்து எருவாயைப் புண்ணாக்கிக் கொள்ளுவதில் கை தேர்ந்தவர் சின்ன கணக்கப்பிள்ளை சிதம்பரம். எப்படி?

ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் இவர் மக்கள் அவையில் பேசினார். “தமிழ் நாட்டில் இயங்கும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பிரிவினை வாதக்கட்சி. அதை உடனே தடை செய்ய வேண்டும்” என்று அழகான ஆங்கிலத்தில் உளறிக் கொட்டினார். நாம். “செட்டி நாட்டுச் சிதம்பரம் உளறல்” என்று தலைப்பிட்டு. நீண்ட தொரு விளக்கம் எழுதிக் குட்டினோம். இது நிற்க. இந்தியப்படை இன்று வரையில், ஜம்மு - காஷ்மீர் சிக்கலுக்குத் தீர்வு காணவில்லை.

அசாமில், உல்ஃபா தீவிரவாதிகளை ஒடுக்கிட. இந்திய அரசு 30 ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சி இன்னும் முற்றுப் பெறவில்லை. அசாமில் பெரிய எண்ணிக்கையிலுள்ள “அஹோம்” பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் ஒன்றுபட்டு நின்றால். எப்போதும் உல்ஃபவை அடக்கி விட முடியாது. இது நாம் நேரில் அங்கே தங்கிப் பெற்ற பட்டறிவு. (1986 - 1991).

“நாகாலாந்துக்காரன்” - இந்தியனை அங்கே காணநேர்ந்தால். “நீ இந்தியாவிலிருந்து வருகிறாயா?” என்று எகத்தாளமாகக் கேட்கிறான். நாகாலாந்து போராட்டத் தலைவர்கள் மூவையா போன்றவர்கள். அகண்ட நாகாலாந்து கேட்டு விட்டு. ஆண்டுக்கு ஒரு முறை அரசுடன் பேச்சு நடத்திவிட்டு. அயல் நாட்டில் போய் அமர்ந்து கொண்டு - “அங்கே வா, பேசுவோம்” என்கிறார்கள்.

இந்திய மக்களைப் படிப்பறிவும். அரசியலறிவும் அற்றவர்களாக வைத்துக் கொண்டு டாட்டாவும். பிர்லாவும். பாஜாஜூம். மல்லய்யாவும். அம்பானியும் மிட்டலும், தொழில் - வணிக முதலாளிகளாக வளரப் பண்ணையடிக்கிற இவர்களை அடையாளம் காட்டுவோம் வாருங்கள்! இந்திய காங்கிரசு அரசு - இந்திரா காந்தி காங்கிரசு அரசு - நேரு குடும்ப ஆட்சி எவ்வளவு காலத்துக்கு இங்கே நீடித்தாலும் இந்தியா கொள்ளையடிக்கப்படுவது நிற்காது. இந்திய வளங்கள் இந்திய முதலாளிகளாலும் பன்னாட்டு முதலாளிகளாலும் கொள்ளையடிப்பதைப் பார்த்துக் கொண்டு, தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் நசுக்கப்படுவதைப்பார்த்துக் கொண்டு மாவோயிஸ்டுகளும் - மார்ச்சிஸ்டுகடளும், லெனினிஸ்டுகளும், பெரியாரிய - அம்பேத்கரியவாதிகளும் விரலைச் சூப்பிக் கொண்டு சும்மா இருக்க முடியாது.

“அதோ பார் மக்களின் எதிரிகள் ! அவர்களை மக்களிடலிருந்து அப்புறப்படுத்துவோம் வாருங்கள்!” என ஒவ்வொருவரும் ஓங்கிக் குரல் எழுப்புவோம் வாருங்கள்!

இந்தியாவைப் பாழடித்த காங்கிரசை ஒழிப்போம்!

இந்திய உழைக்கும் வகுப்பு மக்களை ஒன்று திரட்டிப் போராடுவோம்!

இந்திய வளங்களையும் உழைக்கு மக்களையும் காப்போம்.

- வே. ஆனைமுத்து