எத்தனை நாள்தான் அடிமை யாக

இருந்து தொலைப்பாய் தமிழா-தில்லி

எத்தனை ஏன்எனத் தட்டிக் கேட்க

என்று துணிவாய் தமிழா!

மொத்தநம் இனமே அழியப் பார்த்தும்

முனகலும் இல்லையே தமிழா-நீ

செத்தவன் போலச் செயல்அற் றாயே

 சீ...சீ... கொடுமை தமிழா!

சிறையில் தமிழ்ப்பெண் நளினியின் மானம்

சிதைக்கின் றானே தமிழா - ‘நான்

பெரிய மறக்குடி பிறந்தவன்’ என்னும்

பீத்தல் ஏன்டா தமிழா?

முதியநம் பார்வதித் தாய்அலை கழிந்தார்

மூள்சினம் இல்லை தமிழா-அவன்

முகத்தில் காறித் துப்பவும் நமக்கு

முதுகெலும் பில்லை தமிழா!

முள்வேலி களின் நடுவில் நம்மினம்

முடங்குவ தோடா தமிழா-அந்தக்

கள்வன் இராச பக்சே இங்குக்

கால்வைப்ப தோடா தமிழா!

போரை நிறுத்தச் சொல்லித் தமிழகம்

 புலம்பிய தேடா தமிழா-அற்பப்

புழுவாய் அன்றோ நம்மை மதித்தான்

பூண்டறுத் தானே தமிழா!

முல்லைப் பெரியாறு காவிரி பாலாறு

       மோசடி நமக்கே தமிழா-அந்தத்

தில்லிக் காரன் எந்நா ளும்நம்

       தீராப் பகைவன் தமிழா!

தேசிய இனங்களின் குரலை மதியாச்

       செவிட்டுக் காதன் தமிழா-அவன்

சிண்டைப் பிடித்தே ஆட்டினால் தான்

       தீர்வு நமக்குத் தமிழா!