உலகில் உள்ள 192 சுதந்தர நாடுகளில் 120 நாடுகளில் தேர்தல் மூலம் மக்கள் நாயக ஆட்சி நடை பெறுகிறது. இந்நாடுகளில் உலக மக்கள் தொகையில் 60 விழுக்காட்டுப் பேர்கள் அடங்கியிருக்கிறார்கள். 86 நாடுகளில் மக்களின் குடியுரிமைகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் காப்பாற்றும் மக்கள் நாயக ஆட்சி நடைபெறுகிறது.

இத்தகைய நாடுகளுள் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவில் 2015இல் 120 கோடி மக்களில் 30 கோடிப் பேர் மிக ஏழைகளாக இருப்பார்கள். உலகத்தில் 620 கோடி மக்களில் 90 கோடிப் பேர் ஏழைகளாக இருப்பார்கள். ஏன் அப்படி ஏற்படும்?

இந்திய அரசு மக்களுக்குக் கல்வி தருவதையும், மருத்துவ வசதி செய்து தருவதையும், உணவுக்கு உத்தரவாதம் தருவதையும் இரண்டாம், மூன்றாம் இடத்துக்குத் தள்ளிவிட்டது. அதற்கு மாறாகப் பன்னாட்டு முதலாளியக் குழுமங்களும், தனிப்பட்ட முதலாளிகளும் இந்தியாவிலுள்ள இயற்கை வளங்களையும் கனிம வளங்களையும் நிலத்தடி நீரையும் கொள்ளையடிக்க வழிவகுத்துத் தருகிறது.

இந்த ஆண்டிலும் 2010 இறுதியிலும் அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்சு அதிபர்களும் பிரதமர்களும் இந்தியாவுக்கு வந்து தங்களின் வணிக - சந்தைத் தேடலையும் மற்றும் இந்தியாவின் வடக்கு எல்லையில் ஆதிக்கம் பெறவும் வழிகோலிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். இவர்களோடு இந்தியாவில் ஆட்சியினை நடத்த உதவிடும் அதிகாரவர்க்கமும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவர்களுடன் இணக்கமும் தொடர்பும் வைத்துக் கொண்டு அவர்களின் வளர்ச்சிக்குத் துணை போகிறார்கள்.

இந்நாட்டுப் பெருமுதலாளிகள் இங்கு அடிக்கும் கொள்ளையில் கணிசமான அளவு வரியாகப் பெற்று இந்திய மக்களுக்கான கல்வி, மருத்துவம், உணவு முதலான மக்கள் நலப் பணிகளுக்குச் செலவிடும் நோக்கத்தையும் திட்டத்தையும் இந்திய அரசு பெற்றிருக்கவில்லை. அதற்கு மாறாகப் பெருமுதலாளிகளுக்கு அதிக விகித இலாபம் தரும் தொழில் - வணிக ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் இறுதி செய்வதற்கு இந்திய அரசினரும் அதிகார வர்க்கத்தினரும் மிகவும் கவலையோடும் பொறுப்போடும் உறுதி செய்கிறார்கள். இதைச் செய்வதில் இந்திய அரசு - அதிகார வர்க்கம் - அரசியல் கட்சிகள் இவர்கள் இணைந்து இயங்கி நல்ல தரகர்களாகச் செயல்படுகிறார்கள். இந்த முத்தரப்பினரும் தாங்கள் சொந்தத்துக்கும் - ஆளும் கட்சிக்கும் - கூட்டணிக் கட்சிகளுக்கும் இவற்றின் மூலம் பணப்பயன் பெறுகிறார்கள்.

1989க்குப் பிறகு இந்தியாவில் இப்போக்கு வேகமாக நடைபெறுகிறது. இதை மறைத்துவிட்டு, இந்தியா பொருளாதாரத்தில் 2009-10இல் 8 விழுக்காட்டு அளவுக்கு வளர்ந்துவிட்டதாகப் பிரதமர் மன்மோகன்சிங் மேடை தோறும் முழங்குகிறார்.

இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தியின் மதிப்பு (GDP) ரூபா 44,93,743 கோடி என்றும், இந்தியரின் தேசிய தனிநபர் வருமானம் ரூபா 46,492 என்றும் புள்ளிவிவரங்களை நடுவண் அரசின் புள்ளி விவரத்துறை 31.1.2011 அன்று அறிவித்திருக்கிறது. தனிநபர் வருமானம் 2004இல் ரூபா 24,143 ஆக இருந்தது. 2009-10இல் ஏறக்குறைய இருமடங்காக உயர்ந்துவிட்டதாகக் கூறி ஏமாற்றுகிறது.

இது ஒரு பொய். ஏன்?

தனி நபர் தேசிய வருமானம் என்பது எப்படிக் கணக்கிடப்படுகிறது?

மாதந்தோறும் கோடிக்கணக்கில் நிருவாக ஊதியம் பெறுகிற தனியார் பெருந்தொழில் குழுமங்களை - வணிக நிறுவனங்களை வங்கிகளைச் சேர்ந்தவர்கள்;

மாதந்தோறும் ரூபா 10,000 முதல் ரூபா 1,00,000 வரை ஊதியம் பெறுகிற மத்திய - நடுவணரசு அரசு, அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் 3 கோடிப்பேர்;

தனியார் துறையில் மாதம் ரூபா 3,000 முதல் ரூபா 50,000, ரூபா 1,00,000 வரை மாத ஊதியம் பெறுகிறவர்கள்;

நடுவணரசு - மாநில அரசு வளர்ச்சித் திட்டங்களில் வேலை செய்து, ஆண்டில் 100 நாள்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு ரூபா 80 முதல் ரூபா 120 வரை கூலி பெறும் உடலுழைப்புக்காரர்கள்;

தனியார் நிலங்களிலும் சிறு தொழிலகங்களிலும் கூலிக்கு வேலை செய்து நாளொன்றுக்கு ரூ.150 முதல் ரூ.300 வரை சம்பாதிக்கிற உதிரிப்பாட்டாளிகள், வேளாண் தொழிலாளர்கள், விசைத்தறி - கைத்தறி தொழில் செய்வோர், மீன் பிடிப்போர், துணி வெளுப்போர், முடி திருத்துவோர், தானி, ஓட்டுநர் என உள்ள 75 கோடிப்பேர்;

மூட்டை தூக்குவோர், வீட்டு வேலை செய்வோர், வண்டி இழுப்போர் என்கிற கோடிக்கணக்கான பேர்;

எல்லாவற்றுக்கும் மேலாகப் பல இலட்சம் கோடி முதலீடு செய்தும் கடன்பெற்றும் பெரும் தொழில் அதிபர்களாக உள்ளவர்கள் ஆண்டுதோறும் பெறும் பல ஆயிரம் கோடி இலாப வருமானம் இவ்வளவையும் கணக்கிட்டே இந்திய மொத்த மக்கள் தொகையான 117 கோடி என்பதால் வகுத்துக் கண்டுபிடிக்கப்படும் சராசரி ஆண்டு வருமானத்தைத்தான் தனிநபரின் தேசிய ஆண்டு வருமானம் - அது ரூபா 46,492 என்று கணக்குக் கொடுக்கிறார்கள்.

இது ஏமாற்றுக் கணக்கு இல்லையா?

இந்தியத் தேசியப் பொருளாதார உயர் ஆய்வுக்குழுவின் (NCAER) தலைவர் அபுசாலே ஷெரீஃப் என்பவர் சென்ற வாரம் அளித்த புள்ளிவிவரப்படி தனிநபர் தேசிய ஆண்டு வருமானம் மாநிலந்தோறும் வேறுபடுகிறது.

தனி நபர் வருமானம், அரியானாவில் ரூபா 59,008; அதை அடுத்துக், கீழேகண்ட வரிசையில் மாநிலங்களுக்கிடையே இதைவிடக் குறைவான தனிநபர் வருமானம் உள்ளது. பஞ்சாப், மகாராட்டிரம், கேரளா, தமிழ்நாடு, கருநாடகம், ஆந்திரப்பிரதேசம் என இந்த இறங்குவரிசையில் தனிநபர் வருமானம் உள்ளது.

இவருடைய கணக்குப்படி தேசிய தனிநபர் ஆண்டு வருமானம் ரூபா 45,773.

இந்தியாவில் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் சீர்கேடு அடைய விடப்பட்டுத், தனியாருக்கு அதன் பங்குகள் விற்கப்பட்டு, அரசு பொதுத் துறைத் தொழில் நிறுவனங்கள் தனியாருக்கு மாற்றப்படுகின்றன. அதனால் அவற்றில் புதிய வேலை வாய்ப்புகள் இல்லை.

அதேபோல் அஞ்சல், தந்தி, தொலைத்தொடர்புத் துறை, தொடர்வண்டித் துறை முதலான அரசு நிறுவனங்கள் திறமையற்ற நிருவாகத்துக்கு ஆட்பட்டுப், பணம் கையாடப்பட்டுப் படிப்படியாகத் தனியார்மயம் ஆக்கப்படுகின்றன.

இத்துறைகளில் இன்றளவும் பார்ப்பனர்களும் மேல்சாதிக்காரர்களுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இத்துறைகளில் உயர்பதவிகளில் இருப்போர் இங்கே இருந்துகொண்டே, இவற்றை நிலைகுலைய வைத்துவிட்டு, ஓய்வு பெற்றவுடன், தனியாரிடம் உயர்பதவிகளைப் பெற்று மாதந்தோறும் இலக்கக் கணக்கில் ஊதியம் பெறும் பணிகளைப் பெறுகிறார்கள். இவர்கள் டாடா, அம்பானி, ரிலையன்ஸ், மித்தல், வேதாந்தம், முதலான இந்தியப் பெருமுதலாளிகளின் குழுமங்களில் வேலை தேடிக் கொள்கிறார்கள்.

நடுவண் - மாநில அரசுகளில் உயர் பதவிகளில் இருப்போரும், உயர் பதவிகளிலிருந்து ஓய்வு பெறுவோரும் நடுவணரசு, மாநில அரசுகளுடன் பெருமுதலாளிகள் இலாபகரமான நிபந்தனைகளுடன் நிலங்களை வாங்குவது, நிலக்கரி, இரும்புத்தாது, மக்னீசியம் தாது, அலுமனிய மூலப்பொருள் முதலான கனிமங்களைத் தோண்டியெடுக்கவும், அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் எல்லா உதவிகளையும் செய்கிறார்கள். இந்திய இரும்புத்தாது மட்டும் 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் நிலக்கரிப் படிவம் மிகக் குறைவான நிலப்பரப்பிலேயே உள்ளது. அந்த நிலப் பரப்பில் மூன்றில் ஒரு பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. அங்கு நிலக்கரியெடுக்கத் தோண்டுவதனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வனங்களில் வாழும் பழங்குடிகள் இடம் பெயரும் கொடுமைக்கு ஆளாகிறார்கள்; அரிய மூலிகைகள், அரிய மரங்கள், வனவிலங்குகள், பறவை இனங்கள் அழிக்கப்படுகின்றன. பெருமுதலாளிகள் இந்நிலங்களைக் கைப்பற்றுவதை எதிர்த்துப் போராடும் மாவோ இய வாதிகளும், மனித உரிமைக் காப்புப் போராளிகளும் “பயங்கரவாதிகள்” எனப் பெயர் சூட்டப்பட்டு, இராணுவத்தாலும், துணைப்படையாலும், காவல் துறையாலும், அரசின் கையாள்களாலும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இந்த இலட்சணத்தில் அமெரிக்கப் பாதையில் விரைந்து செல்லும் இந்தியாவை அமெரிக்க அதிபர் ஒபாமா மிரட்டுகிறார்; இந்தியாவைப் பெரிய அளவில் கொள்ளையடிக்க உதவிட உடனே இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று 11.2.2011இல் அமெரிக்காவில் கூறியுள்ளார். இன்சூரன்ஸ் எனப்படும் வாழ்நாள் காப்பீட்டுத் துறையில் 49 விழுக்காடு முதலீடு செய்ய உரிமம் வேண்டும்; அத்துடன் சில்லறை வணிகக் கடைகள், வேளாண் தொழில் துறை உற்பத்தி ஆகிய துறைகளிலும் அமெரிக்கா அதிக முதலீடு செய்ய ஏற்ற வகையில் இந்திய அரசு விரைவில் சட்டங்களைத் திருத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார். சென்ற வாரம் மும்பைக்கு வந்த அமெரிக்க வணிகத் துறை அமைச்சர் கேரிலாக்கி என்பவரும் ஒபாமா சொன்னபடியே இங்கே கூறியிருக்கிறார். இவர் 24 அமெரிக்க நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் மும்பைக்கு வந்திருந்தார். அணுமின்சாரம் தயாரிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், இராணுவம் இந்திய உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் இந்தியாவில் அமெரிக்கா முதலீடு செய்ய விரும்புவதாக இவர் கூறியுள்ளார்.

வெறும் 32 கோடி மக்களைக் கொண்ட நாடு அமெரிக்கா. அது பெரிய கடன்கார நாடாக இருந்தாலும், இன்றைய உலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கைப்பற்றியிருக்கிற தலையான ஏகாதிபத்திய நாடு அது. அதற்கு முதலிடம் தர மன்மோகன்சிங் முந்தி முந்தி என நிற்கிறார்.

சீனா அண்டையிலுள்ள இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் - சீன எல்லை காப்பு என்கிற காரணத்துக்காக, “அண்டை நாடுகளின் மீது போர் தொடுக்க சீனா ஆயத்தமாக இருக்கிறது” என அறிவித்துள்ளது. அண்மையில் சீனாவில் வெளிவந்த “குவைசி ஜெர்னல்” என்ற ஏடு இதைத் துலாம்பரமாக அறிவித்துள்ளது.

சீனா அண்டை நாடுகளான இந்தியா, சப்பான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனோசியா முதலான நாடுகளுடன் போரிடவோ அல்லது மோதவோ முயற்சிக்கிறது. சீனாவின் மக்கள் தொகை 130 கோடி. அந்நாடு அமெரிக்காவுடனும், சப்பானுடனும் பொருளாதார வளர்ச்சியில் போட்டி போடுகிறது.

இந்திய அரசு அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிரான்சு, சப்பான் முதலான நாடுகளின் பெருவணிக - சில்லரை வணிக - தொழில் - ஆயுத இறக்குமதித் துறைகளுக்கு இங்கே நிலங்களையும் காடுகளையும் தூக்கி அளிக்க முதலிடம் தருகிறது. அதன்மூலம் இந்தி யாவையும் வலிமையான ஏகாதிபத்திய நாடுகளுள் ஒன்றாக ஆக்கிட எல்லாம் செய்கிறது.

ஏகாதிபத்திய அரசுகளும் சுரண்டலும் வீழ்த்தப்பட வேண்டி எல்லா ஏழை, பாட்டாளி மக்களும் வேளாண் உழைப்பாளிகளும் ஒன்றிணைந்து போராடச் செய்வதற்கு, இங்குள்ள மார்க்சிய - லெனினியவாதிகளும் பெரியாரிய - அம்பேத்கரியக் கொள்கையாளர்களும் இணைந்து வழிகாண்போம் வாரீர்!