மக்களுக்கு எதிரான துரோக வரலாறு

உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலை விபத்து - பேரழிவு என்று சொல்லப்படுகிற, போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் 26 ஆண்டுகள் கழித்து 7.6.2010 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. போபாலில் இந்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவராக இருந்த காசுப் மகிந்தரா உள்ளிட்ட ஏழு பேருக்கு, போபால் நகரத் தலைமைக் குற்றவியல் நடுவர் மோகன் பி. திவாரி, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் உருவா 1,01,750/- தண்டமும் வழங்கித் தீர்ப்பளித்தார்.

20,000 பேரைச் சாகடித்த - ஒரு இலட்சம் பேரைக் கொடிய வகையில் ஊனமாக்கிய - மேலும் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்டோரை நிலையாகப் பலவகையான நோய்களுக்கு ஆளாக்கிய இப் பேரழிவுக்குக் காரணமானவர்களுக்கு மிகவும் காலம் கடந்து, மிகக் குறைந்த அளவிலான தண்டனை மட்டும் வழங்கப்பட்டிருப்பது குறித்து விஷவாயுவால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சமூக ஆர்வலர்களும், மக்கள் நல அமைப்புகளும், “காலங்கட்ந்து கிடைத்த இந்த நீதி, நீதியை மறுப்பதாக மட்டுமன்றி நீதியையே புதைப்பதாகவும் இருக்கிறது” என்று இத்தீர்ப்பைக் கண்டனம் செய்துள்ளனர்.

தீர்ப்பு வெளியான அன்றே ஏழு பேரும் 25,000 உருவா பிணைத் தொகை செலுத்தி விடுதலையாகி விட்டனர். இத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர். அதன்பின் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வார்கள். உச்சநீதி மன்றத்தில் வழக்கு முடிவதற்குள் இந்த ஏழு பேரும் செத்துப்போவார்கள். பணக்காரர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களும் செல்வாக்குப் படைத்தவர்களும் தண்டனை பெறாமல் தப்பிப்பதற்காகவே சந்து பொந்துகள் நிறைந்த சட்டங்களும் நீதிமன்ற நடைமுறைகளும் இந்நாட்டில் இருக்கின்றன.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல - ஏழை எளிய மக்கள் செத்தாலும் - எக்கேடு கெட்டாலும் அவர்களைப்பற்றிக் கவலைப்படாமல் முதலாளிகளை, பணக்காரர்களைப் பாதுகாத்துப் பேணுவதே அரசின் உயர் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின், காவல்துறையின், நீதித் துறையின் முக்கியக் கடமையாக இருக்கிறது என்பதை போபால் விஷவாயு வழக்கு எண்பிக்கிறது. ‘போபால் தீர்ப்பு நீதிக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனை!’

இந்திய யூனியன் கார்பைடு நிறுவனம் அமெரிக்காவில் நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் கிளையாகும். 1967இல் இந்தியாவில் பசுமைப்புரட்சி தொடங்கியதும் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பூச்சி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டன. 1969முதல் போபாலில் இந்திய யூனியன் கார்பைடு நிறுவனம் செவின், டெமிக் ஆகிய பூச்சி மருந்துகளைத் தயாரிக்கத் தொடங்கியது. இந்த ஆலையின் வடிவமைப்பு, தொழில் நுட்பம், இயக்கம் ஆகிய அனைத்தும் நியூயார்க்கில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தன. மிதைல் அய்சோ சயனைடு என்கிற இரசாயனக் கலவையிலிருந்து செவின், டெமிக் பூச்சி மருந்துகள் தயாரிக்கப்பட்டன.

நச்சு வாயுக் கசிவு

1984 திசம்பர் 2ஆம் நாள் நள்ளிரவில் போபால் யூனியன் கார்பைடு ஆலையில் திரவ நிலையில் தொட்டி எண் 610 இல் சேமித்து வைக்கப்பட்டிருந்த 42 டன் மிதைல் அய்சோ சயனைடு முழுவதும் ஒரு மணி நேரத்துக்குள் ஆவியாகி போபால் நகரில் பரவியது. ஈழத்தில் விடுதலைப் புலிகள் கழுத்தில் சயனைடு குப்பிகளைத்தொங்கவிட்டிருந்தனர். குப்பியை வாயில் வைத்துக் கடித்த அடுத்த நொடியே வீரச் சாவைத் தழுவினர். அதனால் சயனைடு எவ்வளவு கொடிய நஞ்சானது என்பது நமக்குத் தெரியும்.

மிதைல் அய்சோ சயனைடு நச்சு வாயு நிறமற்றது; மணமற்றது. அதனால் அதைக் கண்ணால் பார்க்கவோ, மூக்கால் நுகரவோ முடியாது. அந்த அமைதியான ஆட்கொல்லி வாயு அந்நள்ளிரவில் போபால் நகரில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த மனித உயிர்களை வேட்டையாடியது. ஏழைகளே எளிதில் இறையாயினர். தளம்போட்ட வீடுகளில் குளிர்காலம் என்பதால் காற்று எளிதில் புகாதவாறு சன்னல்களும் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. அதனால் அக் கட்டடங்களில் நச்சு வாயு அதிகமாக நுழையவில்லை. குடிசைகளில், ஓட்டு வீடுகளில் எளிதில் காற்றுப் புகமுடியும். எனவே, ஏழை எளிய மக்கள் வாழ்ந்த இவ் வீடுகளில் நச்சுக்காற்று பெருமளவில் நுழைந்தது.

சயனைடு நுரையீரலைப் பெருமளவில் தாக்கும். உடனே நுரையீரல் இரண்டு மூன்று மடங்கு வீங்கிவிடும். மூச்சு முட்டி இறப்பு நேரிடும். அடுத்து கண்கள், நரம்பு மண்டலம், சீரண மண்டலம் ஆகியவற்றைத் தாக்கும். அந்நள்ளிரவில் நச்சு வாயு மூக்கினுள் புகுந்ததும் மக்கள் மூச்சுத் திணறலுடன் கடுமையான இருமலுடன் அலறியடித்துக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தனர். கண்களில் நச்சு வாயு பட்டதும் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகி வழிந்தது. திடீரென ஏன் இப்படி ஆயிற்று என்று புரியாமல் மருத்துவமனையை நோக்கி ஓடினர். வீதிகளில் எண்ணற்றோர் விட்டில் பூச்சிகளைப்போல் விழுந்து மடிந்தனர்.

போபால் நகரில் 56 வட்டங்களில் 36 வட்டங்களில் நச்சு வாயு பரவியது. 1984 இல் போபால் நகரின் மக்கள் தொகை 9 இலட்சம். இவர்களில் 6 இலட்சம்பேர் நச்சு வாயுhவல் பாதிக்கப்பட்னர். அச்சத்தின் அலறல், துன்பத்தின் அழுகுரல், மரணத்தின் ஓலம் போபால் நகரமெங்கும் ஒலித்தது. ஒரே நாளில் மூன்றாயிரம் பேர் மாண்டனர். அதன்பின் 20,000 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இரண்டாம் உலகப்போரின்போது இட்லர் யூதர்களை பாதாள அறைகளில் அடைத்து விஷ வாயுவைச் செலுத்திக் கொன்றான். அதுபோல் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு நிறுவனம் பேராபத்து விளைவிக்கக்கூடியது என்பதை நன்கு அறிந்திருந்தும் மிதைல் அய்சோ சயனைடைப் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைத்ததால் பல ஆயிரம் பேரைக்கொன்றது. பல இலட்சம் பேரின் வாழ்வைச் சூறையாடியது. இக்கொடிய குற்றத்திற்கு எந்தப் பொறுப்பும் ஏற்காமல் எந்தத் தண்டனையும் பெறாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளான இந்திய ஆளும் வர்க்கத்தின் அரவணைப்பால் அந்நிறுவனம் தப்பித்துக்கொண்டது.

ஆலையின் குறைபாடுகள்

1981ஆம் ஆண்டு போபால் ஆலையில் நச்சு வாயுக் கசிவால் ஒரு தொழிலாளி இறந்தார். மேலும், இருவர் பாதிக்கப்பட்டனர். 1982 சனவரியில் இதேபோல் 25 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட வல்லுநர் குழு ஆலையை ஆய்வு செய்தது. 1982 சூலையில் வல்லுநர் குழு அளித்த அறிக்கையில் தற்காப்பு முறைகளில் உள்ள குறைபாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆனால் ஆலை நிருவாகம் அக்குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்கவில்லை.

செவின் பூச்சி மருந்தைத் தயாரிப்பதற்குத் தேவையான அளவிற்கு மட்டுமே மிதைல் அய்சோ சயனைடு சேமித்து வைக்கப்பட வேண்டும். ஒரு சமயத்தில் இரண்டு மூன்று டன் இருந்தால் போதுமானதாகும். ஆனால் போபால் ஆலையில் 80 டன்னுக்கு மேல் சேமித்து வைக்கப்பட்டது. மிதைல் அய்சோ சயனைடை காற்றுப் புகாத மூடிகொண்ட சிறிய எவர்சில்வர் பாத்திரங்களில்தான் சேமித்து வைக்கப்பட வேண்டும் என்று நியூயார்க் யூனியன் கார்பைடு நிறுவன ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மேற்கு வெர்ஜீனியாவில் உள்ள ஆலையில் இதுபோல்தான் சேமித்து வைக்கப்பட்டது. ஆனால், போபால் ஆலையில் இதற்காக மூன்று பெரிய தொட்டிகள் நிலத்தடியில் அமைக்கப்பட்டன. நச்சு வாயுக் கசிவு நிகழ்ந்தபோது அவற்றில் 80 டன் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.

மிதைல் அய்சோ சயனைடுச் சேமித்து வைக்கப்படும்போது தொட்டியின் வெப்ப நிலை 15 டிகிரி சென்டிகிரேடுக்குக் குறைவாக இருக்க வேண்டும். இது 5-0 டிகிரி அளவில் இருப்பது நல்லது என்று கார்பைடு நிறுவனத்தின் விவரக்குறிப்பு தெரிவிக்கிறது. குளிர் காலம் தொடங்குவதை முன்னிட்டு, மின்சாரத்தை மிச்சப்படுத்தி செலவைக்குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 1984 அக்டோபர் 22 முதல் குளிரூட்டிச் சாதனங்களின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதே போன்று தொட்டிகளின் பராமரிப்பு - கண்காணிப்புப் பணியில் இருந்த 12 பேரில் ஆறு பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். வெளியிலிருந்த வெப்ப நிலையிலேயே மிதைல் அய்சோ சயனைடு சேமிக்கப்பட்டிருந்ததாலும் தற்காப்புச் சாதனங்கள் முறையாகப் பராமரிக்கப்படாததாலும் 2-12-1984 அன்று 610 எண் தொட்டியில் 500 லிட்டர் நீர் கலந்ததாலும் சயனைடு ஆவியாகி வெளியில் கசிந்து படர்ந்து பரவியது.

மக்கள் நெருக்கமாக வாழும் பகுதியில் அரசு நிலத்தை அளித்து, ஆபத்தான இரசாயனப் பொருளைக் கொண்டு பூச்சி மருந்து தயாரிக்கும் ஆலையை நிறுவ அனுமதித்தது மத்திய பிரதேச அரசு செய்த பெருந்தவறாகும். சயனைடு கசிவால் பாதிக்கப்படும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மிதைல் அய்சோ சயனைடு நச்சுக்கான முறிப்பு மருந்து (Antidote) சோடியம் தையோ சல்பேட் மருந்தாகும் என்பன போன்ற தகவல்களை ஆலையில் சுற்று வட்டாரத்தில் வாழும் மக்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டியது கார்பைடு நிறுவத்தின் கடமையாகும். இதை செய்யத் தவறியது சட்டப்படியான குற்றமாகும். ஆலையின் பணிபுரிந்தவர்களுக்கே முறிப்பு மருந்து பற்றிய தகவலைத் தெரிவிக்காமல் இருந்தது இன்னும் கொடுமையான அலட்சியப் போக்காகும். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் இருபது ஆண்டுகள் கழித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், சோடியம் தையோ சல்பேட் நஞ்சு முறிப்பு மருந்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊசி மூலம் செலுத்தியிருந்தால், எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்; உயிருடன் பிழைத்தவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவுகளைக் குறைத்திருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அரசின் இரண்டகம்

இந்திய அரசு 1985ஆம் ஆண்டு போபால் ‘நச்சிவாயுப் பேரழிவுச் சட்டம்’ என்பதை இயற்றியது. இதன் மூலம் நச்சுவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக, இழப்பீடு கோருகின்ற, வழக்கு தொடுக்கின்ற அனைத்து உரிமைகளையும் இந்திய அரசு தன் கையில் எடுத்துக் கொண்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களோ, சமூக நல அமைப்புகளோ வழக்குத் தொடுக்க முடியாமல் தடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் நடுவண் புலனாய்வுத் துறை 1-12-1987 அன்று யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆன்டர்சன், நியூயார்க்கில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள மண்டல யூனியன் கார்பைடு நிறுவனம், இந்திய யூனியன் கார்பைடு நிறுவனம் மற்றும் இந்திய யூனியன் கார்பைடு அதிகாரிகள் எட்டுப் பேர் ஆக மொத்தம் 12 பேர் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்தது.

இந்திய அரசு, 330 கோடி டாலர் தொகையை இழப்பீடாகக் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்காவில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின்மீது வழக்குத் தொடுத்தது. அமெரிக்காவில் வழக்கை நடத்தினால் அதிக இழப்பீட்டுத் தொகை அளிக்க நேரிடும் என்பதால் சூழ்ச்சியாக இந்தியாவிலேயே இவ்வழக்கை விசாரிக்குமாறு மாற்றப்பட்டது. இந்திய உச்சநீதிமன்றம் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு நீதியும் உரிய நிதி இழப்பீடும் கிடைக்க வேண்டும் என்ற சமூகப் பொறுப்பில்லாமல் இந்த வழக்கில் நடுவண் அரசும் யூனியன் கார்பைடு நிறுவனமும் பேசி ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று கருத்துரைத்தது.

இழப்பீடாகக் கொடுப்பதை வாங்கிக்கொண்டு இந்த வழக்கை இந்திய அரசு ஒரு முடிவுக்குக் கொண்டு வராவிட்டால் அமெரிக்காவிலிருந்து வரும் அந்நிய முதலீடுகள் நிறுத்தப்படும் என்று இந்திய அரசு அச்சுறுத்தப்பட்டது. எனவே, 1989இல் இந்திய அரசு யூனியன் கார்பைடு நிறுவனத்துடன் சமரசம் செய்துகொண்டது. இந்த உடன்பாட்டின்படி , 330 கோடி டாலருக்குப் பதிலாக வெறும் 47 கோடி டாலர் (அன்றைய உருவாமதிப்பீட்டில் 173 கோடி ) இழப்பீட்டுத் தொகைக்கு இந்திய அரசு ஒத்துக்கொண்டது. இதைவிடக் கொடுமை என்னவென்றால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அமெரிக்க அதிகாரிகள் மீதோ இந்தியாவின் குடிமையியல் குற்றவியல் சட்டங்களின்படி இனி எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்கிற நிபந்தனையை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது. இந்திய நாட்டின் இறையாண்மை பலியிடப்பட்டது. இந்த இழிவான உடன்பாட்டிற்கு உச்சநீதி மன்றமும் ஒப்புதல் வழங்கிவிட்டது.

ஆயிரக்கணக்கில் மக்கள் மடிந்த - பல இலட்சம் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இப்பேரிடர் நிகழ்ந்த நான்கு ஆண்டுகள் கழிந்தபின்னும் இறந்தவர்களின் எண்ணிக்கை , ஊனமானவர்களின் எண்ணிக்கை , மற்ற வகைகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைத் துல்லியமாகக் கணக்கெடுக்க வேண்டும் என்று மத்திபிரதேச அரசோ, நடுவண் அரசோ முயற்சிக்கவில்லை. அதனால் இறந்தவர்கள் 3000 பேர்; இவர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் 1,05,000 பேர் என்று குத்துமதிப்பாகக் கணக்கிட்டு உருபா 173 கோடி இழப்பீடு தொகைக்கு நடுவண் அரசு ஒத்துக்கொண்டது.

பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இழப்பீடு கோரி விண்ணப்பித்தனர். ஒவ்வொருவரின் கோரிக்கையையும் ஆய்வு செய்து 5,74,367 பேர் பாதிக்கப்பட்டதாக இறுதி செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் கூடுதலாக நிதி பெற்றிருக்க வேண்டும். அல்லது 1992ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத் தலைமைநீதிபதி எம்.என். வெங்கடாசலய்யா கூறியதுபோல் தேவையான நிதி உதவியை நடுவண் அரசு வழங்கியிருக்க வேண்டும். இப்பேரிடர் நிகழ்ந்து 10 ஆண்டுகள் கழித்துத்தான் வட்டித் தொகையுடன் சேர்த்து உருபா 1500 கோடி பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. 1,05,500 பேருக்கான இழப்பீட்டுத் தொகை மானவெட்கமின்றி 5,74,367 பேருக்குப் பிரித்துக்கொடுக்கப்பட்டது. சராசரியில் ஒருவருக்கு உருபா 1500க்கும் குறைவாகக் கிடைத்தது.

இப்பேரிடர் நடந்தபின் பத்து ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட பல இலட்சம் மக்கள், ஊனமடைந்ததால் பிழைக்க வழியின்றிப் பசியும் பட்டினியுமாக இறந்தனர். இவர்களின் குடும்பங்கள் பாழாயின. நச்சு வாயுவினால் ஏற்பட்ட நோய்களுக்கு மருத்துவம் செய்து கொள்ளத் தம்மிடமிருந்த சிறு உடைமைகளையும் விற்றனர். கறுஞ்சிதைவுகள் எண்ணிக்கை அதிமாயிற்று, பிறந்த குழந்தைகளிடமும் நச்சு வாயுவின் தாக்கங்கள் தொடர்ந்தமை அதிர்ச்சியூட்டின.

1989ஆம் ஆண்டு யூனியன் கார்பைடு நிறுவனமும் நடுவண் அரசும் செய்துகொண்ட உடன்பாடு அநீதியானது; அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் நல அமைப்புகள் மேற்கொண்ட இடைவிடாத முயற்சியின் விளைவாக 1992ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் மீண்டும் வழக்குத் தொடுக்க ஒப்புதல் அளித்தது. இதன்படி போபால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வாரன் ஆண்டர்சன் யூனியன், கார்பைடு நிறுவன நிருவாகிகள் (அமெரிக்கா, சிங்கப்பூர்) ஆகிய மூவரும் தப்பி ஓடிவிட்டவர்கள் என்று 1992 போபால் நீதி மன்றம் அறிவித்தது. இந்திய யூனியன் கார்பைடு நிறுவன அதிகாரிகள் மீதான வழக்கு விசாரணை மட்டும் நடந்தது.

இந்திய யூனியன் கார்பைடு தலைவர் கேசுப் மகிந்தரா உள்ளிட்ட எட்டுப்பேர் நச்சு வாயுக் கசிவிற்கும் தங்களுக்கும் நேரடியாகத் தொடர்பில்லை என்றும் அதனால் வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் வாதிட்டனர். போபால் உயர்நீதி மன்றம் இவர்களின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்தது. எனவே, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த விபத்துக்கு எங்களில் எவரும் நேரடியாகப் பொறுப்பு என்பதற்கான ஆதாரம் இல்லை. மேலும் இந்த விபத்து கடவுளின் செயல். இதற்கு எந்த மனிதரையும் பொறுப்பாக்க முடியாது என்று வாதிட்டனர்.

உச்சநீதி மன்றத்தின் வஞ்சகம்

இதை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.எம். அகமதி மற்றும் நீதிபதி எஸ்.பி.மஜும்தார் ஆகியோரைக்கொண்ட அமர்வு நச்சு வாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களை வஞ்சிக்கும்படியான ஒரு தீர்ப்பை வழங்கினர். 1992இல் தலைமை நீதிபதி வெங்கடாசலய்யா நடுவண் அரசு நிதியிலிருந்து தேவையான அளவுக்கு இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும் என்று கூறியபோது, மக்கள் வரிப்பணத்தை இப்படிப் பாழாக்குவது 1989 பிப்ரவரியில் செய்துகொண்ட உடன்பாட்டிற்கு எதிரானது என்று தீர்ப்பு எழுதிய கல்நெஞ்சர்தான் இந்த அகமதி!

இந்த வழக்கு இந்தியக் குற்றவியல் சட்டம் விதி 304 பிரிவு 2இன்கீழ் பதிவு செய்யப்பட்டது. இதன்படி பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்ட யூனியன் கார்பைடு அதிகாரிகளின் வாதத்தை ஏற்கும் தன்மையில் 1996 செப்டம்பர் 13 அன்று உச்சநிதிமன்ற அமர்வு இந்த வழக்கை 304-ஏ பிரிவுக்கு மாற்றித் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது தண்டம் அல்லது இரண்டும் வழங்கலாம். உச்சநீதி மன்றம் இந்த வழக்கை நீர்த்துப்போகச் செய்துவிட்டது. ஏ.எம். அகமதி தம்முடைய தீர்ப்பில் “குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு மிதைல் அய்சோ சயனைடு கொடிய நஞ்சுடையது; ஆபத்தானது என்பது தெரியும். ஆனால் அதைத் தொட்டி எண் 610 இல் சேமித்து வைப்பதனாலேயே மனிதர்கள் இப்படி மாண்டு போவார்கள் என்பதை அறிந்திருப்பார்கள் என்று முடிவு செய்வதற்கான முகாந்திரம் இல்லை” என்று எழுதியிருக்கிறார். அதற்குக் கைமாறாக அகமதி ஓய்வு பெற்றதும் 1997ஆம் ஆண்டு போபால் நினைவு மருத்துவ அறக்கட்டளைக்கு வாழ்நாள் தலைவராக நியமிக்கப்பட்டார். அகமதி போன்றே உயர்நிலையில் உள்ள நீதிபதிகள் பலரும் உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையக் களைவதற்கு மாறாக, முதலாளிகளை, பணக்காரர்களைக் காப்பாற்றுகின்ற தீர்ப்புகளை வழங்கினார்கள்.

நடுவண் புலனாய்வுத் துறை இக்கேடான தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தை நாடவில்லை. நடுவண் அரசில் அப்போது இருந்த ஆட்சியாளர்களோ அதன்பின் ஆட்சியில் இருந்த பா.ச.க.வோ , காங்கிரசுக் கட்சியோ மறு ஆய்வு செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான இத்தீர்ப்பை அவர்கள் மாற்ற விரும்பவில்லை. ஆனால், பாதிக்கப்பட்டோர் சார்பில் மறு ஆய்வு செய்யுமாறு உச்சநீதி மன்றத்தில் கோரப்பட்டது. இதற்காகப் புதிய ஆதாரங்கள் காட்டப்பட்டன. உச்சநீதி மன்றம் செவி சாய்க்கவில்லை.

நச்சுக் கழிவுகள் நீக்கம்

1997ஆம் ஆண்டு இந்திய யூனியன் கார்பைடு நிறுவனத்தை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனமான டொவ் கெமிக்கல்ஸ் விலைக்கு வாங்கியது. போபால் ஆலையில் உள்ள நச்சுக் கழிவுகள் அப்படியே இருப்பதால் நிலத்தடி நீரும், காற்றும் மாசடைந்துவிட்டன. அவற்றை அகற்றும் பொறுப்பை டோவ் கெமிக்கல்ஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் நல அமைப்புகள் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தன. நச்சுக் கழிவை அகற்றுவதற்காக உருபா நூறு கோடியை அரசிடம் ஒப்படைப்பு நிதியாக அளிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியது. ஆனால் டொவ் நிறுவனம், தான் யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியபோது இந்தப் பொறுப்புகள் நிபந்தனையாக விதிக்கப்படாததால், அந்நச்சுக் கழிவை அகற்றும் பொறுப்பை ஏற்கமுடியாது என்று எதிர்வழக்காடிக்கொண்டிருக்கிறது.

1969 முதல் 1984 வரை போபால் ஆலையில் பூச்சி மருந்து தயாரிக்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட நச்சுக் கசிவு ஏற்பட்ட பிறகுகூட அந்த நச்சுக் கழிவுகளால் மக்களுக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைக் கருத்தில் கொண்டு அவற்றை அகற்ற மாநில அரசோ, நடுவண் அரசோ முயற்சிக்கவில்லை. நச்சுக் கழிவை அகற்றி அவ்விடத்தைச் சீர்செய்யும் பொறுப்பை டொவ் நிறுவனம் ஏற்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தக் கூடாது என்பதற்காக அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள முதலாளிகளும் முதலாளிகளின் கையாள்களாக உள்ள அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எவ்வா றெல்லாம் முயன்றார்கள் என்கிற உண்மையை அறியும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.

அமெரிக்க-இந்தியத் தொழில் நிறுவனங்களின் செயல் தலைவர்கள் மன்றம் என்று ஒன்று இருக்கிறது. இந்த மன்றம் அமெரிக்க முதலாளிகளும் இந்திய முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து இந்தியாவின் உழைக்கும் மக்களை எவ்வாறெல்லாம் சுரண்டுவது என்பதைத் தீர்மானிக்கும். அதற்கான திட்டங்களை வகுக்கும் இந்தியத் தரப்பிற்கு இரத்தன் டாடா தலைவராக இருக்கிறார். இந்தியத் தரப்பில் டி.வி.எஸ் மோட்டார்ஸ், இன்போசிஸ், மேக்ஸ் இந்தியா அப்பல்லோ ஹாஸ்பிடல், பாரத் என்டர்பிரைசஸ், அய்.சி. அய்சி.அய். வங்கி , எச்.டி.எப்.சி. ஆகியவை இடம் பெற்றுள்ளன.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற இம்மன்றக் கூட்டடத்தில் போபால் விஷவாயு இடத்தைச் சீர் செய்வதற்கான நிதியத்தை) அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிதியத்துக்கு இந்திய முதலாளிகள் நிதி வழங்குவது என்றும், நச்சுக் கசிவு இடத்தைச் சீர்செய்யும் பொறுப்பிலிருந்து டோவ் நிறுவனத்தை விடுவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தான் 2001ஆம் ஆண்டு டோவ் கெமிக்கல்ஸ் இடத்தைச் சீர்செய்வதற்கான நிதியத்தை உருவாக்க வேண்டுமென்ற கருத்தை முன்மொழிந்தது.

1989 பிப்பிரவரியில் யூனியன் கார்பைடு நிறுவனம் 47 கோடி டாலர் தருவதாக இந்திய அரசுடன் உடன்பாடு செய்துகொண்டதன் மூலம் போபாலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பொறுப்புகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டன என்பதே அமெரிக்க முதலாளிகளின் வாதம்.

2006 சூலைக்கும் 2007 சனவரிக்கும் இடையில் மூலதன ஆணையத்தின் (Investment commission) உறுப்பினர் என்ற முறையில் இரத்தன் டாடா, நிதி அமைச்சர் சிம்பரம், திட்டக் குழுவின் துணைத்தலைவர் அலுவாலியா, பிரதமர் மன்மோகன் சிங் மூவருக்கும் மடல் எழுதினார். இடச் சீரமைப்பு நிதியம் அமைப்பதற்குத் தம்முடைய ஆதரவைத் தெரிவித்திருந்தார். டோவ் நிதி நிறுவனம் 100 கோடி உருபாவை ஒப்படைப்புத் தொகையாகச் செலுத்தவேண்டும் என்று இந்திய அரசு கோரியிருப்பதைக் கைவிட வேண்டும். அப்போதுதான் அந்நிய மூலதனம் தாராளமாக இடப்படுவதற்கான மூழ்நிலை உருவாகும் என்று டாடா அம்மடல்களில் வலியுறுத்தினார்.

2006 அக்டோபரில் நடைபெற்ற அமெரிக்க இந்திய தொழில் நிறுவனங்களின் செயல் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் டோவ் நிறுவனத் தலைவர் ஆண்ட்ரு லிவரிஸ் இதுகுறித்து நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்திடம் வலியுறுத்தினார். அதன்பிறகு ப. சிதம்பரம் இடச் சீரமைப்பு நிதியத்தை ஏற்படுத்துவதன் மூலம் டோவ் நிறுவனம் இந்தியாவில் அதிக முதலீடு செய்யும். அதேபோன்று பிற அமெரிக்க நிறுவனங்களும் முதலீடு செய்வது அதிகமாகும் என்று அலுவலகக் கோப்பில் குறிப்பு எழுதியுள்ளார். இதேபோன்று அப்போது தொழில் மற்றும் வணிக அமைச்சராக இருந்த கமல்நாத்தும் தன் கோப்பில் குறிப்பு எழுதியுள்ளார். எனவே, புதிய முடிவுக்கு ஏற்ப அமைச்சர்கள் குறிப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று அமைச்சகச் செயலாளர் 2007 ஏப்பிரலில் அரசுக்கு எழுதினார். இதன்மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டிருந்த மன்மோகன்சிங், போபால் விஷவாயுத் தீர்ப்பால் எழுந்த கொந்தளிப்பால் விழித்துக்கொண்டார். ப. சிதம்பரம் தலைமையிலான ஒன்பதுபேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை அமைத்து பத்து நாள்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டார்.

வாரன் ஆண்டர்சன்

யூனியன் தாய் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சன் நச்சு வாயுவின் பாதிப்புகளை நேரில் பார்வையிடுவதற்காக 1984 திசம்பர் 7ஆம் நாள் காலை வந்தார். அவர் கெட்டிக்காரத்தனமாக இந்தியாவிலிருந்து எந்தச் சிக்கலுமில்லாமல் திரும்புவதற்கான உறுதியை இந்திய அரசிடம் பெற்றபின்னரே இந்தியாவுக்கு வந்தார். அப்போது பிரதமராக இருந்த இராசிவ் காந்திதான் அயலுறவு அமைச்சர் பொறுப்பையும் தம்மிடம் வைத்திருந்தார்.

இந்த உண்மையை மத்திய பிரதேச மாநில அரசுக்குத் தெரியப்படுத்தவில்லை. அதனால் வாரன் ஆண்டர்சன் போபால் நகரை அடைந்ததும் மாநிலக் காவல்துறை அவரைக் கைது செய்வதாகக் கூறி போபால் ஆலையின் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்றது. இச்செய்தி தில்லியை எட்டியது. உடனே நடுவண் அரசிடமிருந்து மாநில முதல்வர் அர்ஜுன் சிங்கிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது -ஆண்டர்சனைப் பாதுகாப்பாகத் தில்லிக்கு அனுப்பி வைக்கவேண்டுமென்று.

உடனே மாவட்ட ஆட்சியர் மோதி சிங், மாவட்டக் காவல்துறை அதிகாரி சுவராஜ்பூர் இருவரும் ஆண்டர்சனை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முதலமைச்சர் அர்ஜுன்சிங் பயணம் செய்கின்ற - மாநில அரசுக்குச் சொந்தமான விமானத்தில் ஆண்டர்சன் தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அன்றே அமெரிக்காவுக்குப் பறந்து சென்றுவிட்டார். பிரதமராக இருந்த இராசிவ் காந்திக்குத் தெரியாமலேயே இவ்வளவும் நடைபெற்றதாக அன்னை சோனியா (!) காங்கிரசு மக்கள் காதில் பூ சுற்றுகிறது.

1995 பிப்பிரவரி9 அன்று நடுவண் அரசின் செயலாளர்களின் கூட்டத்தில் ஆண்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டுவருவது பற்றி விவாதிக்கப்பட்டது. “ஆண்டர்சனை அமெரிக்காவிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கோருவது பன்னாட்டு அளவிலும் இந்தியாவிலும் விரும்பத்தகாத விளைவுகளை உண்டாக்கும். அமெரிக்கா - இந்தியா இடையிலான நல்லுறவைக் கருத்தில் கொண்டு ஆண்டர்சனை இந்தியாவுக்கு அனுப்புமாறு வலியுறுத்தாமல் விட்டுவிடுவது நல்லது” என்று முடிவு செய்யப்பட்டது. இக் கூட்டத்தில் உள்துறைச் செயலாளர் கே. பத்மநாபய்யா, நிதித்துறைச் செயலாளர் கே.கே. மாத்தூர் இரசாயனம் மற்றும் பெட்ரோலியத்துறைச் செயலாளர் ஏ.என். வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் எல்லா மட்டங்களிலும் அமெரிக்க ஆதரவு நிலைப்பாடே எடுக்கப்படுகிறது. 2001இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடுவண் அரசின் தலைமை வழக்குரைஞர் சோலி சோப்ராஜி “இப்போது ஆண்டர்சனுக்கு 81 அகவை. போபால் நச்சுவாயு நிகழ்ச்சி நடந்து 17 ஆண்டுகளாகி விட்டன. இக் காரணங்களால் அமெரிக்காவின் உள்துறை ஆன்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்காது. எனவே, இந்தியா ஆன்டர்சனைக் கொண்டுவரும் முயற்சியை இனியும் தொடவேண்டாம்’ என்று நடுவண் அரசுக்குப் பரிந்துரைத்தார். ஆனால், ஆன்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற கோரிக்கை வலுத்ததால், 2003ஆம் ஆண்டு நடுவண் அரசு அமெரிக்காவிடம் ஆன்டர்சனை ஒப்படைக்குமாறு கேட்டது. சரியான ஆதாரங்கள் காட்டப்படவில்லை என்று கூறி அமெரிக்கா மறுத்துவிட்டது. ஆன்டர்சனைப் போலவே போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குவத்ரோச்சியை இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல நடுவண் அரசு அனுமதித்தது. குவத் ரோச்சியை இந்தியாவுக்குக் கொண்டு வருவதாக நாடகமாடியது. இலண்டனில் முடிக்கிவைக்கப்பட்ட குவத்ரோச்சியின் வங்கிக் கணக்கின் பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்தது.

ப. சிதம்பரம் தலைமையிலான அமைச்சர்கள் குழு சூன் 18, 19, 20 ஆகிய மூன்று நாள்களில் பல தடவை கூடி விவாதித்தது. அக்குழுவின் அறிக்கை மன்மோகன்சிங்கிடம் 21-6-2010 அன்று கொடுக்கப்பட்டது. இதற்கு முன்பு இருந்த அமைச்சர்கள் குழு 19 ஆண்டுகளில் 17 முறை கூடியது. ஆனால், எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. ஆனால், சிதம்பரம் தலைமையிலான குழு பத்து நாள்களுக்குள் பல முடிவுகளை எடுத்துள்ளது. போபால் நச்சுவாயு வழக்கின் தீர்ப்பால் காங்கிரசுக்கட்சி ஆட்சியில் நடந்து துரோகச் செயல்கள் அம்பலப்பட்டு விட்டன. இதனால், வாக்குவங்கி சரியுமே என்ற அச்சத்தால் இந்தப் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிதம்பரம் குழு அறிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1500 கோடி உருவா நிதி உதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 300 கோடி உருபா போபால் ஆலையின் நச்சுக் கழிவை அகற்றுவதற்காக ஒதுக்கப்படுகிறது. மேலும், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட தொகையைக் கழித்துக் கொள்வர். யூனியன் கார்பைடு நிறுவனமும் அதை விலைக்கு வாங்கிய டோவ் கெமிக்கல்ஸ் நிறுவனமும் செய்திருக்க வேண்டிய இப்பணியை அரசு இப்போது செய்கிறது. டோவ் நிறுவனத்தின் மீதான வழக்கு தொடரும் என்று சிதம்பரம் கூறுவது எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

அதைவிடப் பெரிய மோசடி இப்போது 89 வயது ஆன்டர்சனை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருப்பது! நியூயார்க்கில் உள்ளவர்கள். இது குறித்து எதுவும் கூறாமல் இருப்பது திட்டமிட்ட சதி!

அரசுக் கணக்குப்படி 5295 பேரின் இறந்த குடும்பங்களுக்கு பத்து இலட்சம்; கடுமையாக ஊனமுற்ற 3199 பேருக்கு அய்ந்து இலட்சம்; பலவகையான பாதிப்புகளுக்கு உள்ளான 33672 பேருக்கு மூன்று இலட்சம் உருபா அளிக்கப்படும் என்று அமைச்சர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசின் கணக்குப்படி பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 5,72,241 பேர். இவர்களில் 44,208 பேருக்கு மட்டுமே இப்போது நிவாரணத் தொகை வழங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி 5,21,000 பேருக்கு (91%) எந்த உதவியும் இல்லை. இவர்களுக்கு முன்பு 25,000 உருவா வழங்கப்பட்டது. இப்போது வழங்கப்படப் போகும் இழப்பீட்டுத் தொகையிலிருந்து இதைக் கழித்துக் கொள்வார்கள். இவர்களின் தலைமுறையினரும் பலவகையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். இவர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது.

உச்சநீதிமன்றம் 1996இல் இந்தியக் குற்றவியல் சட்டம் 304 பிரிவு 2 என்பதிலிருந்து 304-ஏவுக்கு இந்த வழக்கை மாற்றியதைச் சீராய்வு செய்யக் கோரப் போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இனி இதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை.

முதலாளிகளை - பணக்காரர்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களின் நலன்களைப் பேணுவதற்காக எப்படியெல்லாம் வெகு மக்களுக்கு இந்திய அரசு துரோகம் செய்து வருகிறது என்பதற்கு போபால் வழக்கும் அதன் தீர்ப்பும் சிறந்த சான்றாகும். இதை மக்களுக்கு உணர்த்த வேண்டியது நம் கடமையாகும்.

- க.முகிலன்