சிந்தனையாளன் பொங்கல் மலர் - 2018 வெளியீட்டு விழா

2018 சனவரி 7 அன்று காலை சென்னை, மேற்கு மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபம் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் கொடிகளாலும், தோரணங்களாலும் அணிசெய்யப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. முதல் நாள் இரவே தோழர்கள் கு. தொல் காப்பியன், மீ. டில்லிபாபு, சேடக்குடிகாடு சீனிவாசன், இரா.பகுத்தறிவாளன், துரை சித்தார்த்தன், ஆ. முத்தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட கட்சித் தோழர்கள் மாநாட்டு மண்டபத் திற்கு வரும் வழிநெடுகிலும் கட்சிக் கொடிகளைக் கட்டினர். நான்கு இடங்களில் பெரிய பதாகைகள் வைக்கப்பட்டன. தியாகராய நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

தன் இளமைக்காலம் முதலே பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்று, வாழ்நாள் முழுவதும் அக் கொள்கைகளை வென்றெடுப்பதற்காக அரும்பணியாற்றிய - அண்மையில் மறைந்த கட்சியின் மூத்த தோழர் காஞ்சி அரங்க, சானகிராமன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நிகழ்ச்சி அரங்கிற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்ட போதிலும், கட்சித் தோழர் களும், தோழமை இயக்கத்தவர்களும், தமிழ்த் தேசிய ஆர்வலர்களும் காலை 10 மணிக்கே அரங்கம் நிரம்பி வழியுமளவில் வந்து குவிந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து இரண்டு சிற்றுந்துகளிலும் திருவண்ணாமலை மாவட்டத் திலிருந்து ஒரு சிற்றுந்திலும் கட்சித் தோழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மாநாட்டிற்கு வந்தனர் என்பது சிறப்புக் குரியதாகும். வெளியூர்களிலிருந்து வந்த தோழர்களுக்கு மாநாட்டு மண்டபத்தில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு முதல் மா.பெ.பொ.கட்சி தமிழ்ப்பெரு மக்களின் ஆதரவுடன், பல்துறை அறிஞர்களின் சீரிய கட்டுரைகளைத் தாங்கி வரும் சிந்தனையாளன் பொங்கல் மலரை வெளியிட்டு வருகிறது. அத்தன்மையில் 21ஆவது ஆண்டாக, சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழா நிகழ்ச்சி மாம்பலம் சந்திரசேகர் திருமண மண்டபத்தில் 07.01.2018 அன்று முற்பகல் 10.30 மணிக்குத் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு மா.பெ.பொ.க. சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் தலைமை ஏற்று உரையாற்றி னார்.

காஞ்சி மாவட்டத் துணைச் செயலாளர், தாம்பரம் மா. சுப்பிரமணி வரவேற்புரையாற்றினார். புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றத்தின் வேலூர் மாவட்டச் செயலாளர் மு. சாமிநாதன், மா.பெ.பொ.க. திருச்சி மாவட்டச் செயலாளர் இரா. கலியபெருமாள், சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் பா.வை. அருள்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன் சிந்தனையாளன் பொங்கல் மலரை வெளி யிட்டார். மலரின் முதல் படியைத் திருமண மண்டபத்தை இலவயமாக வழங்கி உதவிய இலக்கியச் செல்வர் மாம்பலம் ஆ. சந்திரசேகர் பெற்றுக்கொண்டார்.

பொங்கல் மலரை வெளியிட்ட நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களிடம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஆ.கு. ஆறுமுகம், சேலம் மாவட்டச் செயலாளர் செ. ஆனையப்பன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் பொ. சுப்பிர மணியன், நாகை மாவட்டச் செயலாளர் முத்து. அன்பழகன், பொறிஞர் சிவப்பிரகாசம், காஞ்சி நகரச் செயலாளர் மு. செயப்பிரகாசு, பெங்களூரு நகர அமைப்பாளர் கோ.மு. கறுப்பையா, அறக்கட்டளை வளாகப் பொறுப்பாளர் கு. தொல்காப்பியன், திருக்கழுக்குன்றம் பெரியார் தொண்டர் தி.ச. குணசேகரன் ஆகிய தோழர்கள் பொங்கல் மலர் படியைப் பெற்றனர்.

நீதிபதி து. பரந்தாமன், பொங்கல் மலரை வெளியிட்டு ஆற்றிய உரையில், நீதித்துறையும் மேல்சாதி ஆதிக்கத்திற் கும், இந்துத்துவச் சிந்தனைக்கும் ஆட்பட்டுவரும் அவல நிலை குறித்து விளக்கினார். காந்தியாரைக் கொன்ற கோபால் கோட்சே 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்ததும் விடுதலை செய்யப்பட்டார்; உறுதி செய்யப்படாத குற்றத்தின் பேரில் இராசிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 26 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கு இவர்கள் சூத்திரர்களாகவும், தமிழர்களாகவும் இருப்பதுதான் காரணம் என்று கூறினார். பொங்கல் மலரின் முதல் படியைப் பெற்று உரையாற்றிய மாம்பலம் சந்திரசேகர், ஆரியப்பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து தமிழினத்தை மீட்பதற்கு திருக்குறளின் கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று கருத்துரைத்தார்.

புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றத்தின் மாநிலச் செயலாளர் கவிஞர் தமிழேந்தி, இயலாமைக்கு ஆட்பட்ட உடல்நிலையிலும் தமிழ்த் தேசிய விடுதலை குறித்த தன் கருத்துகளை எழுச்சியான கவிதைகளாக தன் அரிமாக் குரலில் முழங்கினார்.

இதனையடுத்து, சிந்தனையாளன் ஏட்டில் பல ஆண்டு களாக இதழ்தோறும் கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதி வருபவரும், சிறந்த பெரியாரிய - மார்க்சிய அறிஞருமான தோழர் இராமியா எழுதிய “புறநானூறு அல்ல - இது புது நானூறு” என்ற நூலை மேனாள் அமைச்சர் திரு. எஸ்.ஆர். இராதா வெளியிட்டார். இராமியா எழுதிய சிறுகதைகள் அடங்கிய புதிய பாடம் எனும் நூலை, கலச. இராமலிங்கம் - கோவி இராமலிங்கம் இணையரின் மகன் கோ.ரா. வெற்றி வெளியிட்டார். இராமியா அவர்களின் சார்பில் கிட்டத்தட்ட நூறு பேர் மாநாட்டில் பங்கேற்றுச் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இராமியாவின் நூல்கள் குறித்து எஸ்.ஆர். இராதா உரையாற்றினார்.

பொங்கல் மலர் வெளியீட்டையொட்டி, பொங்கல் மலர், தமிழர் திருநாள், தமிழ்த்தேசிய விடுதலை ஆகியவை குறித்து, தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் புலவர் கி.த. பச்சையப்பன், மா.பெ.பொ.க. காஞ்சி மாவட்டச் செயலாளர் சி. நடராசன், வேளாண் அணித் துணைச் செயலாளர் கோ. கோதண்டராமன், அரியலூர் மாவட்டச் செயலாளர் புலவர் இரா. கலியமூர்த்தி, மகளிரணிச் செயலாளர் கோவி இராமலிங்கம், திருச்சி மாவட்ட புரட்சிக் கவிஞர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் ந. கருணாகரன், மாணவர் - இளைஞரணித் தோழர் இரா. பகுத்தறிவாளன், மாணவர் - இளைஞர் அணிச் செயலாளர் முனைவர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர்.

இறுதியாக, பொதுச் செயலாளர் தோழர் வே. ஆனைமுத்து உரையாற்றினார். தன்னுடைய உடல்நலக் குறைவு காரண மாகப் பொங்கல் மலர் தொடர்பாக வழக்கம்போல் மாவட்டங் களுக்குச் சென்று கட்சித் தோழர்களை ஊக்குவிக்க முடியாத நிலையில், துணைப் பொதுச் செயலாளர் சி. பெரியசாமி அப்பொறுப்பை ஏற்று எல்லா மாவட்டங்களுக்கும் சென்று சிறப்பாகச் செயலாற்றியதை வே.ஆனைமுத்து பாராட்டினார். தான் இல்லாவிட்டாலும் பொங்கல் மலர் சிறப்பாக வெளி யிடப்படும் என்பதை மாவட்டச் செயலாளர்களும் மற்ற தோழர்களும் மெய்ப்பித்திருப்பதாக மனமகிழ்ந்து பாராட்டி னார். 2018 செப்டம்பர் மாதம் பெரியார் வாழ்க்கை வரலாறு நூலின் முதல் பாகம் வெளியிடப்படும் என்றும், அதற்கு ஆயிரக்கணக்கில் முன்பதிவு செய்து உதவ வேண்டும் என்றும் வே. ஆனைமுத்து வேண்டுகோள் விடுத்தார்.

முற்பகல் நிகழ்வான சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழாவின் நிறைவாக, வேலூர் நகரச் செயலாளர் மீ. டில்லிபாபு நன்றி கூறினார். அனைவருக்கும் பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிற்பகல் 2.30 மணிக்கு, “உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாடு” தொடங்கியது. காஞ்சி தோழர் உலக ஒளி, புரட்சிகரப் பாடல்களைப் பாடினார். மா.பெ.பொ.க. தலைமைக்குழு உறுப்பினர் க. முகிலன், கூட்டாட்சி மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். வேலூர் மாவட்டச் செயலாளர் மோ.சி. சங்கர் வரவேற்புரை நிகழ்த்தி னார். தமிழ்நாடு அரசு மேனாள் திட்டக்குழுவின் துணைத் தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் மாநாட்டைத் தொடக்கி வைத்து அறிவார்ந்த உரை நிகழ்த்தினார். கனடா நாட்டில் நிலவும் உண்மையான கூட்டாட்சி முறையைத் தான் நேரில் கண்ட அனுபவத்தை விளக்கினார். மோடி ஆட்சியில் மாநிலங்களிடம் எஞ்சியுள்ள அதிகாரங்களும் பறிக்கப்பட்டு மத்திய ஆட்சியில் குவிக்கப்படும் ஏதேச்சதிகாரப்  போக்கு களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பேராசிரியர் நாகநாதன் வலியுறுத்தினார்.

அதன்பின், துணைப் பொதுச் செயலாளர் சி. பெரியசாமி, துணைப் பொதுச் செயலாளர் தி. துரை சித்தார்த்தன், தொழி லாளரணிச் செயாளர் சா. குப்பன், கடலூர் மாவட்டச் செயலாளர் பா. மோகன், புதுச்சேரி மாநிலச் செயலாளர் இரா. திருநாவுக்கரசு, பெரியார் ஈ.வெ.ரா.-நாகம்மை அறக்கட்டளை செயலாளர் துரை. கலையரசு ஆகியோர் கூட்டாட்சிக் கோரிக்கை குறித்து உரையாற்றினர். கூட்டாட்சி மாநாட்டின் தீர்மானங் களை முனைவர் ஆ. முத்தமிழ்ச்செல்வன் படித்தார்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி சிறப்புரையாற்றினார். பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் இன்றைய உலகமயச் சூழலில் கூட்டாட்சிக் கோரிக்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தில்லியிலிருந்து வருகை தந்த பேராசிரியர் பிரேம் சிங் ஆங்கிலத்தில் சிறப்புரை ஆற்றினார். கூட்டாட்சி என்பது மாநிலங்கள் முற்றதிகாரம் பெறுவதாக மட்டும் இருக்கக் கூடாது. கீழ் மட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் அதிக அதிகாரம் கொண்டவைகளாக இருக்கின்ற நிலையே உண்மையான மக்களாட்சியாகும் என்று அவருடைய உரையில் விளக்கி னார். பேராசிரியர் பிரேம் சிங்கின் ஆங்கில உரையைத் தோழர் இனாமுல் அசன் சுருக்கமாகத் தமிழில் கூறினார்.

தோழர் வே. ஆனைமுத்து நிறைவுரையாற்றினார். தனித்தமிழ்நாடு கோரிக்கை, கூட்டாட்சிக் கோரிக்கை ஆகிய இரண்டு கோட்பாடுகளையும் அவற்றுக்கிடையே உள்ள முரண்பாடுகளையும் விளக்கிப் பேசினார். இறுதியாக, சிந்தனையாளன் அலுவலகப் பொறுப்பாளர் ப. வடிவேலு நன்றி கூறினார்.

மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தோழர்களின் அயராத முயற்சியால் சிந்தனையாளன் பொங்கல் மலர் வெளியீட்டு விழாவும், கூட்டாட்சி மாநாடும் சிறப் பாக நடைபெற்றன.