1940 ஆகஸ்டு 24, 25 தேதிகளில் திருவாரூரில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் தந்தை பெரியார் ஆற்றிய தலைமையுரையின் இறுதிப் பகுதி.

இந்து-முஸ்லிம் ஒற்றுமை

திராவிட நாட்டில் திராவிடர்களிலிருந்து திராவிட சமயத்தவர்கள் என்பவர்கள் நீங்கலாக, முஸ்லிம்கள் என்னும் பேரால் ஒருபெரும் எண்ணிக்கையுள்ள சமூக மக்கள் இருக்கிறார்கள் என்பது யாவரும் உணர்ந்ததே யாகும். அவர்கள் பெரும்பாலோர் உண்மையில் திராவிடர் களாகவே இருந்து சமயக்கொள்கைகள் காரணமாகவே வேறுபட்ட மக்களாக இதுவரை கருதிக்கொண்டிருக்க நேர்ந்தது. இப்போதும் இப்படிப்பட்ட வேறுபட்ட எண்ணத் திற்கு இந்துமதக் கொள்கைகள் தான் காரணமேயொழிய உண்மையில் சமயத்தின் பேரால்கூட முஸ்லிம்களுக்கும்  மற்ற திராவிடர்களுக்கும் பெரியதான வித்தியாசம் ஒன்று மில்லை என்பதை நாளுக்கு நாள் உணர்ந்து வருகிறோம். இது விஷயத்தில் நாம் அறிந்துகொள்ள வேண்டிய இரகசியமும் எதிரிகளின் சூழ்ச்சிகளும் பல இருக்கின்றன.

என்னவெனில் வடநாடுகள் பலவற்றில் இந்துக்கள் என்பவர்களை விட முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகமாகவும் குறிப்பிடத் தகுந்தபடியும் இருக்கின்றது. அவர்களில் பலர் செல்வவான்களாகவும் ஜமீன்தார்களாகவும் ராஜாக்களாகவும் இருக்கின்றார்கள். திராவிட நாட்டில் எப்படி ஆரியர்களைவிட திராவிடர்கள் எத்தனையோ மடங்கு அதிகமிருந்தாலும் சமய சமுதாய அரசியல் முதலியவற்றில் ஆரியர்களுக்கு நாம் அடிமையாக்கப்பட்டுவிட்டோமோ அதேபோல் வடநாட்டு முஸ்லிம்கள் எண்ணிக்கையில் அதிகமிருந்தாலும் ஆரியர்களுக்கு அடிமைப்படுத்திவிட வேண்டுமென்பது ஆரியர் முயற்சி. அம்முயற்சி அந்நாடுகளில் சரிவர பலிக்காததால் அவர்கள் பல வேஷங்கள் போட்டுக்கொண்டு அதாவது “இந்திய தேசியம்” என்றும், “இந்துமகாசபை” என்றும் சொல்லிக் கொண்டு நம் நாட்டுக்கு வந்து இங்கு இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டாக்கிப் பிரித்து தங்களுக்குப் பலம் தேடிக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.

வடநாட்டில் ஆரியர்கள் முஸ்லிம்களை மிக்க கேவலமாகவும் கொடுமையாகவும் கருதுகிற மாதிரி நம் நாட்டில் கருதப்படாமையே இங்கு இந்து முஸ்லிம் பேதம் ஏற்படாமல் ஒற்றுமை வளர்ந்து வருகிறது. ஆதலால் ஆரியர்கள் வட நாட்டார் நன்மைக்கு ஆக இந்நாட்டில் செய்யப்படும் இந்து மகாசபை விஷமப் பிரசாரத்திற்கு நாம் சிறிதும் இடம் கொடுக்கக்கூடாது என்று வேண்டிக் கொள்ளுகிறேன். இந்நாட்டில் இந்து முஸ்லிம் பிணக்கு ஏற்பட்டால் ஆரியருக்கு நன்மையும் திராவிடருக்குத் தீமையுமான காரியமுமாகும். இந்த விஷயங்கள் எல்லாம் நம்மவர்கள் அறிந்திருப்பதாலேயே இந்நாட்டில் நம் இரு கூட்டத்தாரிடையும் உள்ள வேற்றுமைகள் ஒழிந்து மேலே குறிப்பிட்டது போல் நாளுக்கு நாள் ஒற்றுமை அதிகரித்துக் கொண்டே வரப்படுகிறது.

இது ஒரு நற்குறியேயானாலும் இனியும் மேலும் மேலும் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் அத்தனை பேரும் தங்களைத் திராவிடர்கள் என்று உணர்ந்து முஸ்லிம் அல்லாத திராவிடர்கள் அத்தனை பேரும் முஸ்லிம்களை தங்கள் இனத்தவர் என்றே உணர்நது இரு வகுப்பாரும் முன்னேற்றமடையவும் இரு வகுப்பாரின் எதிரிகளை எதிர்த்து நிற்கவும் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டுமென்பது எனது ஆசையும் வேண்டுகோளுமாகும். இதற்கு முஸ்லிம்களின் ஒப்பற்ற ஏக தலைவரான ஜனாப் ஜின்னா அவர்களும் மனப்பூர்த்தியாக ஆதரவு அளித்து இருக்கிறார்கள் என்பதை இச்சமயத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

திராவிடர் - ஆதிதிராவிடர்

நம் நாட்டில் திராவிட மக்களுக்குள்ளாகவே திராவிடர் - ஆதிதிராவிடர் என்கின்ற ஒரு பிரிவு இருக்கிறது என்பதோடு ஆதிதிராவிட சமூகம் மிகப்பெரும் எண்ணிக்கை கொண்ட மக்களைக் கொண்ட சமூகமாக இருந்து வருகிறது. திராவிட நாட்டில் எப்படி வெளியிலிருந்து வந்த ஆரியர்களுக்கு திராவிட மக்கள் தீண்டப்படாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படி திராவிடர்களுக்கு ஆதிதிராவிடர்கள் அதைவிட மேம்பட்ட தீண்டப்படாதவர்களாய் இருக்கிறார்கள். இந்த நிலைமை திராவிட சமுதாயத்துக்கே ஒரு பெரும் மானக்கேடான நிலைமையாகும் என்பதோடு திராவிடர்களை ஆரியர்கள் தீண்டப்படாத மக்களென்று வகுத்திருப்பதையும் நத்துவதையும் அரண் செய்கிறது. ஆகையால் ஆதிதிராவிடர் என்கின்ற பெயரே மாற்றப்பட்டு இருவரும் திராவிடர்கள் அல்லது தமிழர்கள் என்கின்ற பெயராலேயே வழங்கப்பட வேண்டுமென்பதும், திராவிடருக்கும் ஆதிதிராவிடருக்கும் சமுதாயத் துறையிலுள்ள எல்லா வித்தியாசங்களும் பேதங்களும் ஒழிந்து ஒரே சமூகமாக ஆகவேண்டும் என்பதும் எனது ஆசை. இந்த ஒரு நோக்கமும் ஜஸ்டிஸ் கட்சியின் நோக்கங்களில் பட்டதென்பது எனது அபிப்பிராயமாதலால் கட்சியின் பேரால் இவற்றைச் சொல்லுகிறேன்.

உத்தியோகம், கல்வி முதலிய விஷயங்களில், ஆதித் திராவிடர் என்பவர்களுக்குத் தனி சலுகை காட்டி, சீக்கிரத்தில் நம்மோடு சரிசமத்துவம் அடையும்படியான நிலைமை ஏற்படுத்த வேண்டியது நம் கட்சியின் தனிப்பட்ட கடமைகளில் ஒன்று என்பதையும் இச்சமயத்தில் வலியுறுத்த ஆசைப்படுகிறேன்.

கிறிஸ்தவர்கள்

இந்நாட்டிலுள்ள கிறிஸ்தவர்கள் எல்லோருமே திராவிடர்களேயானதால், அவர்களும் எந்தக் காரணத்தைக் கொண்டும் நம்மைவிட்டுப் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. திராவிட மக்களும் கிறிஸ்தவர்களைச் சமயம் காரணமாகத் தாழ்ந்தவர்கள் என்று கருதுவதும் அறிவுடைமையாகாது. ஆதலால் அவர்களுடைய பூரண ஒத்துழைப்பையும் நேசத் தையும் பெறவேண்டியதும் நம் கட்சியின் கடமையாகும்.

தொழிலாளர்கள்

நம் இயக்கமே தொழிலாளர் இயக்கமானதாகும். ஏனெனில் திராவிடர்கள் எல்லோருமே தொழிலாளர் என்கின்ற “சூத்திர” வகுப்பில் சேர்க்கப்பட்டிருப்பதால் அதி லிருந்து விலகிக் கொள்ளவே நாம் முயற்சி செய்கிறோம். மற்றும் மேலே கண்ட எனது சில அபிப்பிரயாங்களால் நான் தொழிலாளிகளுக்கென்று ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை யானாலும், நமது திட்டத்தில், தொழிலாளர்களுக்கென சில விதிகள் வகுக்கப்பட்டுமிருக்கின்றன.

பெண்கள்

திராவிடப் பெண்மணிகள் ஒரு காலத்தில் உலகத்தில் உள்ள பெண்களுக்கெல்லாம் மேம்பட்ட நிலையில் இருந்து வந்திருக்கிறார்கள். அப்பேர்ப்பட்டவர்கள் இன்று வெறும் இயந்திரங்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த நிலைமாறி ஆண்களைப் போன்ற சகல உரிமைகளும் பெற்று மேம் பாடடைய நாம் பாடுபட வேண்டும். அதற்கு தாய்மார்களும் துணிந்து வெளியில் வந்து தக்கபடி தொண்டாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

தோழர்களே! அதிக நேரம் பேசி விட்டேன். இவ்வளவு நேரம் பொறுமையாய் எனது வார்த்தையைக் கேட்டுக் கொண்டிருந்ததற்கு எனது மனமார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.