ஆம்! தடுத்து நிறுத்தத் தவறியவர்கள் யார்? யார்?

தமிழகத்தை 48 ஆண்டுகள் ஆண்டவர்களும், ஆள்பவர்களும் மக்கள் தலைவர்களும், அதிகார வகுப்புக் கும்பலுமே!

தமிழகத்தில் கடந்த 25 நாள்களாக விடாத-அடாத அடைமழை பெய்தது. 1976க்குப் பிறகு, சென்னையில், சராசரியாக 85 செ.மீ. மழைதான் பெய்தது. ஆனால் இப்போது 24.11.2015க்குள் 114 செ.மீ. மழை கொட்டிவிட்டது. எங்கும் வெள்ளக்காடு. ஏன்?

சென்னையிலிருந்த குடிநீர் ஏரிகளையும், ஊர்க் குடிநீர்க் குளங்களையும், குளிநீர்க் குளங்களையும் தூர்த்து மேடா கிடச் செய்தவர்கள், 1967 முதல் தமிழ கத்தை ஆண்டவர் களும், இன்று ஆள்பவர்களும், மக்கள் தலைவர்களும், அதிகார வகுப்புக் கும்பலுந்தாம்!

சென்னையில் தாம்பரம் தொடங்கி, கிழக்கே கடற்கரை வரையில், அம்பத்தூர் தொடங்கி செங்கற்பட்டு வரையில் எல்லா ஏரிகளையும் குளங்களையும் பாழடித்த கேடர்கள் மேலே காணப்பட்டவர்கள்.

இவர்களின் சமூகக் கேடான செயல்களைத் தட்டிக் கேட்கத் திராணி உள்ளவர்களாகத் தமிழக மக்களும் இளை ஞர்களும் உருவாக்கப்படாததும், எல்லாச் செயல்களிலும் கைக்கூலியும் கணிசமான பங்குப் பணியும் பெற்றுக் கொண்டு ஏரிகளைத் தூர் வாருதல், நீர்வரத்து வாய்க்கால் களை விளம்புவது, நீர்ப்போக்கு வாய்க்கால்கள், சாய்க்கடை களைத் தூய்மை செய்வது; மாநில நெடுஞ்சாலைகளையும் இணைப்புச் சாலைகளையும் செப்பமாகச் செய்வது இவற் றையெல்லாம் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாத ஆட்சி களாகவே திராவிடக் கட்சி ஆட்சிகள் தொடர்ந்து இருந்தன; இருக்கின்றன. இவை உண்மை யானவை.

வானிலையை அறிய முடியும்; அது திடீரென உருவாகும்; அதையும் முன்கூட்டி அறியமுடியும்.

அத்துடன் வடகிழக்குப் பருவ மழைதான் தமிழ்நாட்டை வாழவைப்பது என்பதும் நமக்குத் தெரியும். இதில் - அறி வியல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக - நம் முன்னோர் காலம் முதல் இன்றுவரை தமக்கு உதவுகிறது.

ஆனால் எவ்வளவு பெரிய அளவு கன மழையாக இருக்கும் என்பதை எவரும் அறிய முடியாது.

எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் அவற்றைத் தேக்கி வைத்திடத்தான், ஏறக்குறைய 40 ஆயிரம் சிறிய, பெரிய ஏரிகளையும்; சிற்றூர் தோறும் இரண்டு பொதுக் குளங்களையும் - கி.பி.9ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டுக்குள் நம் முற்கால சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசர்கள் உருவாக்கி வைத்தார்கள்.

அவர்களே கற்கோவில்களைக் கட்டினார்கள்; பார்ப்பன அக்ரகாரங்களை அமைத்தார்கள்; பார்ப்பனர்களுக்கு இலவசமாக ஊர்களைத் தந்தார்கள்; தேவதாசிகளையும் தந்தார்கள்; பக்தியை வளர்த்தார்கள். இவையெல்லாம் உண்மை. இவற்றிலெல்லாம் - தேவதாசி முறை ஒன்றைத் தவிர, மற்றெல்லாவற்றையும் திராவிடக் கட்சி ஆட்சயாளர்கள் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றினர் - வாக்காளர்களைக் கவர்ந்திட.

அதுமட்டுமா? ஆயிரம் ஆண்டுக்கால நீராண்மை - நீர் சேமிப்பு ஆதாரங்களைப் பாழாக்கிவிட்டு, பணத்தைப் பங்கிட்டுக் கொள்வதிலேயே இவர்கள் நாட்டம் கொண்டனர்.

மக்களின் பயன்பாட்டுக்குரிய ஏரிகளில், ஏரிகளின் உள் வாயில் அரசுக் குடியிருப்புகளையும், தனியார் குடியிருப்பு களையும் அமைக்கவும்; அரசுப் பேருந்து நிலையங்களை யும், தனியார் கல்லூரிகளையும், தங்கும் விடுதிகளையும் கட்டுவதற்கும் வழி செய்துவிட்டு, நீர் நிலைகள் எல்லா வற்றையும் பாழடித்துவிட்டனர் திராவிடக் கட்சி ஆட்சியினரும் அக்கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்த உதிரிக் கட்சியாளர்களும். இதன் விளைவு என்ன?

தமிழகம் இன்று வெள்ளத்தில் மிதக்கிறது.

வீராணம் ஏரியை, 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஏரி உள்வாய் முழுவதையும், எல்லா நீர்ப்போக்கு வாய்க்கால் களையும் நானும் எங்கள் கட்சித் தோழர்களும் ஒரு நாள் முழுவதும் நடந்தே சுற்றினோம். 40 ஆண்டுகளாகத் தூர் வாரவில்லை; முழுக் கொள்ளளவுக்கும் தூர் வாரவில்லை. வெள்ளம் முழுவதையும் தேக்கி வைத்துக் கொள்ளப் போதிய இடமில்லை என்பதைக் கண்டோம். எனவே, இன்று கடலூரில் வெள்ளச் சேதம்.

நெய்வேலி அனல் மின் திட்டத்திலிருந்து, 60 ஆண்டு களாக வெளியேற்றப்படும் நிலத்தடி நீரைச் சேமிக்க ஒரு புதிய ஏரியையே தமிழக அரசு உருவாக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை.

எனவே, கடலோர மாவட்டம் என்பதால் - கடலூர் மாவட்டத்தில் மட்டும் 50 மக்கள் வெள்ளத்தில் உயிரோடு அடித்துச் செல்லப்பட்டார்கள். பெரியகாட்டுப் பாளையம் என் னும் சிற்றூரில் - ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தில், குடும்பத் தலைவரைத் தவிர, குடும்பத் தலைவியும் மக்கள் நால்வரும் உறவினர்களுமாக 10 பேர் குடிசையோடு அடித்துச் செல்லப் பட்டார்கள்.

2011 திசம்பர் தானே புயலில் தாங்க முடியாத இழப்பைச் சந்தித்த பண்ருட்டி வட்ட மக்கள், அடுத்து நான்கே ஆண்டுகளுக்குள் பேரிழப்புக்கு இரையாகிவிட்டார்கள்.

சென்னை மாநகரில் தாம்பரம் சுற்றுப்புறம், வேளச்சேரி, சித்தாலப்பாக்கம், மேடவாக்கம், அம்பத்தூர் மற்றும் அடை யாறு முதலான பகுதிகளில் அடுக்குமாடி வீடுகளில் கீழ்த்தளத் திலுள்ள வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன. அடுக்குமாடி வீடுகளி லிருந்து மக்களை வெளியேற்றிட 130 சிறிய படகுகளைத் தமிழக அரசும், இந்தியக் கப்பற்படையும் கொணர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.

25 நாள்களில், 2015இல் இவ்வளவு கேடுகளையும் - பதினோரு மாவட்டங்களிலுள்ள தமிழ் மக்கள் - குறிப்பாகக் குடிசை வாழ் ஏழைகள் எதிர்கொள்ள நேரிட்டுவிட்டது. சென் னையில் மட்டும் 40 பேர்களும், தமிழகத்தில் 220 பேரும் மாண்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதிலும் 3 இலக்கம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. வேளாண்மையில் பாதி பாழாகிவிட்டது.

இப்படி எழுதித் தீர்ப்பதால் பயன்வருமா? வராது! வராது!

தமிழ்நாட்டு அரசினர் பின்கண்ட பணிகளை மேற் கொள்ளக் கோரி, இன்றும் நாளையும் மறுநாளும் மற்றும் தொடர்ந்தும்,

தமிழ்நாட்டு அரசே!

1.            எல்லா ஏரிகளையும், குளங்களையும், வாய்க்கால்களை யும் போர்க்கால வேகத்தில் 5 ஆண்டுகளில் தூர் வாரிடு!

2.            ஏரிகளிலும் குளங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு ஆக்கிரமிப்புகளை ஓராண்டில் அகற்றிடு!

3.            ஆக்கிரமிப்பு இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர் களுக்குத் தக்க மாற்றுக் குடியிருப்புக்கு இடம்தர வழி செய்!

எனக்கோரி, கட்சி - தலைமை - சாதி வேறுபாடுகளைக் கருதாமல் அந்தந்த ஊர்ப் பெருமக்களும், படித்த மாணவ-மாணவியரும், இளைஞர்களும், மாதந்தோறும் ஒரு குறிப் பிட்ட நாளில் அவரவர் வருவாய் வட்டத் தலைவர் அலுவல கம், அவரவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்டப் பொதுப் பணித்துறைத் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்தி, அரசினரும் - குறிப் பாக ஆளுங்கட்சியினரும், அதிகார வகுப்பினரும் செயல்படச் செய்ய வேண்டும்.

வெள்ளப்பெருக்கை மக்கள் தடுக்க முடியாது. ஆனால், வெள்ளத்தைத் தேக்கி ஏரிகளிலும் குளங்களிலும் நிரப்பிக் கொள்ள முடியும் - அதைச் செய்ய வேண்டும் என்கிற புரிதல் தமிழ்ப் பெருமக்கள் எல்லோருக்கும் முதலில் வரவேண்டும். இவர்கள்தான் ஆட்சியாளர்களை வழிக்குக் கொண்டு வர வேண்டும்; கொண்டு வர முடியும்.