தமிழ்நாட்டில் கல்வித் தகுதி பெற்ற 1,13,823 மருத்துவர்கள், தமிழ் நாடு மருத்துவக் கழகத்தில் TamilNadu Medical Council) பதிவு செய்து கொண்டு, மருத்துவச் சிகிச்சைப் பணிபுரிந்து கெண்டு இருக்கிறார்கள். அதே சமயம் கல்வித் தகுதி இல்லாமலும், அரசு அனுமதி பெறாமலும் 30,000க்கும் மேற்பட்டோர் மருத்துவச் சிகிச்சைப் பணி புரிந்து கொண்டு இருக்கிறார்கள். இவ்வாறு கல்வித் தகுதி பெறாதவர்கள் மருத்துவச் சிகிச்சைப் பணியில் ஈடுபடுவதால் மக்களின் உடல் நலம் கெடுகிறது என்று தமிழ்நாடு மருத்து வக் கழகம் கூறுகிறது.

பல ஆண்டுகளாக அரசு இதைப் பற்றிப் பரப்புரை செய்தும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வில்லை என்று கூறிய இக்கழகத்தின் தலைவர் மருத்துவர் பால கிருஷ்ணன், இதைத் தடுப்பதற்காக ஒரு புதிய உத்தியைக் கையாளப் பேவதாக 4.11.2015 அன்று கூறினார்.

இதன்படி இனி மருத்துவர்கள் தங்கள் மருத்துவ மனையில் இப்பொழுது வைக்கும் பெயர்ப் பலகைக்குப் பதிலாகப் புதிய முறையில் திறனுள் பெயர்ப் பலகையை ((Smart Name Board) வைக்க வேண்டும். இதில் மருத்துவரின் பெயர், கல்வித் தகுதி, நிழற் படம் (Photo), பதிவு எண் ஆகியவை இடம் பெற வேண்டும். அதோடு மட்டும் அல்லாமல் இவ்விவரங்கள் சரி தானா என்று தெரிந்து கெள்வதற்குக் குறுஞ்செய்தியை 56767 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என்ற செய்தியும் இடம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவரின் பதிவு எண்ணை இவ்வெண்ணிற்கு அனுப்பினால் மருத்துவரைப் பற்றிய முழு விவரங்களும் எதிர் முனையில் இருந்து உடனடியாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

பல ஆண்டுகளாக முயன்றும் கல்வித் தகுதி பெறாத "மருத்துவர்களைக்" களத்தில் இருந்து விரட்டி அடிக்க முடியாத நிலையில், தமிழ் நாடு மருத்துவக் கழகத்தின் இப்போதைய புதிய முயற்சி பயனைத் தருமா?

ஒரு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றால், அதை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின் பிரச்சினையின் வேர் எது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்வித் தகுதி பெறாத "மருத்துவர்கள்" களத்தில் நிலைத்து இருக்கக் காரணம் என்ன? அவர்கள் குறைந்த கட்டணத்தை வசூலிக்கிறார்கள். தகுதி வாய்ந்த மருத்துவர்கள் விதிக்கும் உயர்ந்த கட்டணத்தைச் செலுத்த முடியாதவர்கள், சிகிச்சையே பெறாமல் இருப்பதை விட, தகுதி பெறாத "மருத்துவர்களிடம்" சிகிச்சை பெற முனைவதைத் தடுக்க முடியாதே.

அப்படி என்றால் படித்த, தகுதி வாய்ந்த மருத்துவர் களுக்கு, சமூகத்தில் உரிய இடமும், மரியாதையும் கிடைக்க வழியே இல்லையா? தகுதி பெறாதவர்கள் அரைகுறை மருத்துவம் பார்ப்பதைத் தடுக்கவே முடியாதா?

நிச்சயமாக முடியும். நாடு முழுவதும் மருத்துவச் சிகிச்சை இலவசமாகக் கிடைக்கும்; இலவசமாக மட்டுமே கிடைக்கும் என்றாகி விட்டால், நொடிப் பொழுதில் தகுதி பெறாத "மருத்துவர்கள்" மறைந்து விடுவார்கள். இலவச மருத்துவம் என்பது நடைமுறையில் முடியாத ஒன்றல்ல. பிரிட்டனில் 1948ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு மக்களுக்கு உயர் தர மருத்துவம் இலவசமாகவே அளிக்கப்படுகிறது. அந்நாட்டில் தகுதி பெறாத மருத்துவர்கள் அறவே இல்லை.

ஆகவே தமிழ் நாடு மருத்துவக் கழகத்தினர் திறனுள் பெயர்ப் பலகை போன்ற வீண் முயற்சிகளைக் கைவிட்டு, அனைவருக்கும் இலவச மருத்துவம்; இலவச மருத்துவம் மட்டுமே என்ற கொள்கை முடிவை எடுக்கும் படி அரசை வற்புறுத்த வேண்டும்.