வழிவழியாய் ஆரியத்தின் அடிமைக் குப்பை

      மடிமடியாய் முடிந்துவைத்த சடங்கு மூட்டை

குழிகுழியாய்ப் பார்ப்பனியச் சூழ்ச்சிப் பள்ளம்

      குப்புறவே வீழ்ந்திருந்த தமிழா! உன்றன்

விழிவிழியாய்த் தன்மானச் சுடரை ஏற்ற

      விடிகதிராய்ப் பெரியார் தோன்றாதிருந்தால்

மழிமழிக்கும் இழிமுடியாய்ப் பறந்திருப்பாய்

      மதிப்புறவே வாழ்வதற்கு மறந்திருப்பாய்.

“பெண்டீரே! இருட்டறையில் இருந்தென் செய்வீர்?

      பெண்கல்விச் சுடரேந்தி உயிர்ப்பில் வாழ்வீர்

கண்டீரோ கற்சிலையில் கடவுள் காட்சி?

      கைத்தடியால் அடியுங்கள்; அழவே மாட்டார்.

உண்டீரோ? பட்டினியோ? கொழுத்தான் பார்ப்பான்

      உருண்டீரே சுற்றுவழி; உருப்பட்டீரா?

கொண்டீரோ சூத்திரச்சி எனச் சொன்னானைக்

      கூந்தல்மேல்? தமிழச்சி! எழுக தீயாய்.”

பெரியார்தாம் நெஞ்சுரத்தில் மலையின் ஈடு

      பெண்ணுரிமை கற்பித்த புதிய ஏடு

நரியாரின் பார்ப்பனர்க்குச் செருப்புப் பூசை

      நாற்சாதி மனுநீதி புதைத்த காடு.

சரியாத சாத்திரங்கள் சாய்த்த போர்வாள்

      தமிழ் வரலாற்றைப் புரட்டிப் போட்ட வேங்கை.

புரிந்த முதல் “இந்தி எதிர்ப்”போரின் வெற்றி

      முடைநாற்றப் புராணங்கள் அறுத்த வீரம்.

புத்துலகின் பொன்வாயில் திறந்து வைத்தார்.

      புத்தனையே பின்பற்றி வாழச் சொன்னார்.

வைக்கத்தின் வீதிகளில் தீண்டாமையை

      வேரறுக்க, நடையிட்டு வென்று நின்றார்.

தொற்றிவந்த தலைமுறைகள் மடமை தன்னைத்

      துலக்கிட்ட கூர்மதிச் சிந்தனையின் வேந்தர்

எத்திசையும் எந்நெஞ்சும் எழுதி வைத்து

      எத்தனையோ நூற்றாண்டு போற்ற வாழ்வார்!