மக்களால் மக்களுக்காக நடைபெறும் மக்கள் அரசே சனநாயகம் என்று அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த ஆபிரகாம் லிங்கன் கூறியதே இன்றளவும் சனநாயகத்துக்கான வரையறையாகப் பலராலும் மேற்கோளாகக் காட்டப்படுகிறது. இதில் சனநாயகம் என்பது அரசின் வடிவம் சார்ந்தது என்கிற கருத்தே மேலோங்கியுள்ளது. அம்பேத்கர் இந்த வரையறைக்கு முதன்மை தரவில்லை. சனநாயகம் எத்தகைய வடிவிலான அரசாக இருக்கிறது என்பதைவிட மக்களின் வாழ்க்கை முறை - மக்கள் தமக்கிடையே எத்தன்மையில் உறவு கொண்டு ஒத்திசைந்து வாழ்கின்றனர் என்பதைப் பொருத்தே இருக்கிறது என்று கருதினார்.

ஆனால் இந்தியாவில் சனநாயகம் என்பது அய்ந்தாண்டு களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்துவது, மக்கள் வாக்களிப்பது, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி ஆட்சி செய்வது என்று மட்டுமே மக்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய நிலை ஏற்பட்டுவிடும் என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் இந்திய அரசமைப்புச் சட்ட அவையில் 1949 நவம்பர் 25 அன்று அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரையில் ஓர் எச்சரிக்கை விடுத்தார். “வெறும் அரசியல் சனநாயகத்துடன் மனநிறைவு அடைந்துவிடக் கூடாது. நம்முடைய அரசியல் சனநாயகத்தைச் சமூக சனநாயகமாக உயர்த்த வேண்டும். சமூக சனநாயகம் என்றால் என்ன? அது ஒரு வாழ்க்கை நெறி. அதில் சுதந்தரம், சமத்துவம், சகோதரத் துவம் ஆகியவை குறிக்கோளாக ஏற்கப்பட்டிருக்கும்” என்று கூறினார்.

அதே உரையில் அம்பேத்கர் சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதற்குப் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார் : “சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றும் தனித்தனியான கோட் பாடுகள் என்று கருதக்கூடாது. அவை ஒன்றோடொன்று ஒத்தி சைந்தே இயங்கக் கூடியவை. ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரித்துப் பார்ப்பது சனநாயகத்தின் முதன்மையான நோக்கத்தையே சிதைப்பதாகும், சமத்துவத்திலிருந்து சுதந்தரத்தைப் பிரிக்க முடியாது. அதே போன்று சுதந்தரத்திலிருந்து சமத்துவத்தைப் பிரிக்க முடியாது. சமத்துவம் இல்லாத போது, சுதந்தரம் என்பது சிறு கூட்டத்தினர் பெரும் எண்ணிக்கையினர் மீது மேலாதிக்கம் செய்ய வழிகோலும். சுதந்தரம் இல்லாத சமத்துவம் தனிமனிதரின் உள்ளார்ந்த முன் முயற்சியை அழிக்கும். சகோதரத்துவம் இல்லாத சுதந்தரமும் சமத்துவமும் இயல்பான சமூக வளர்ச்சிக்கு வழி சமைக்கமாட்டா. இந் நிலையை உருவாக்கிட அதிகாரம் கொண்ட ஒரு கண்காணிப்பாளர் (அரசு) தேவைப்படுகிறார்”.

எனவே சனநாயக அரசு என்பதன் விழுமிய நோக்கம் சுதந்தரம், சமத்துவம், சகோதரத் துவம் என்கிற கோட்பாட்டின் அடிப்படை யில் சமூகத்தைக் கட்டமைப்பதே ஆகும் என்று அம்பேத்கர் கருதினார். அம்பேத் கரின் எழுத்துகளிலும் பேச்சுகளிலும் இக் கருத்தே முதன்மையாக வலியுறுத்தப்பட்டுள் ளதைக் காணலாம். ஆனால் சுதந்தரம் பெற்ற பின் அமைந்த எல்லா ஆட்சிகளும் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பேரால் மக்களைப் பிளவுபடுத்தி சமூகத்தில் வெறுப்பு உணர்வையும் பகையையும் வளர்த்து சிறுகும்பலின் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றன. இந்த நிலை அம்பேத்கர் காணவிரும்பிய - சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையிலான சனநாயகத்துக்கு நேர் எதிரானதாகும்.

சமத்துவம் இல்லாத சுதந்தரம் சிறு கூட் டத்தினரான ஆளும் வர்க்கம் மேலாதிக்கம் செய்யவே வழிவகுக்கும் என்பதை சுதந்திரத் திற்கு முன்பே-1945-இல் அம்பேத்கர் எச்சரித் தார், ‘காங்கிரசும் காந்தியும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்தது என்ன?’ என்ற நூலில், “இந்தியா இறையாண்மையுள்ள சுதந்தர அரசாகுமானால் என்ன நிகழும் என்று கேட்டுப் பார்க்கலாம், ஒன்று உறுதி. சுயராச்சியம் என்ற மந்திரக் கோலினால் ஆளும் வகுப்பு மறைந்து போகாது. அது எப்படி இருக் கிறதோ அப்படியே இருந்துவரும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எனும் பூதத்திடமிருந்து விடு பட்டுவிட்ட நிலையில் அதன் வலிமையும் வீரியமும் கூடுதலாகும். சுருங்கச் சொல்லின் சுயராச்சியம் என்பது ஆளும் வகுப்பு நடத்து கின்ற அரசாங்கமாக இருக்குமே தவிர, மக்கள் நடத்துகிற அரசாங்கமாக இருக்காது, மக்கள் நடத்துகிற அரசாங்கமாக இல்லாத போதும், ஆளும் வகுப்பு அதனை மக்களுக் கான அரசாங்கமாகக் காட்ட முயலும்” என்று தெளிவாகக் கணித்துக் கூறினார்.

இந்தியா சுதந்தரம் பெறும்போது ஆளும் வர்க்கமாக இருக்கின்ற பார்ப்பன - பனியா கும்பலே ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் என்பதை நன்கு அறிந்திருந்த அம்பேத்கர் இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு வின் தலைவர் பொறுப்பை ஏன் ஏற்றுக் கொண்டார் என்கிற வினா எழுகிறது, இதற்கு அம்பேத்கரே அரசமைப்புச் சட்ட அவையின் இறுதி உரையில், “நான் அரசமைப்புச் சட்ட அவைக்கு வந்ததன் நோக்கம் பட்டியல் குல வகுப்பினருக்கு நான் அரும்பாடுபட்டுப் பெற்றுத்தந்த நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தவிர வேறுநோக்கம் ஏது மில்லை” என்று விடை கூறிவிட்டார். ஆம், அம்பேத்கர் அரசமைப்புச் சட்ட அவையில் இடம்பெறாமல் போயிருந்தால் பட்டியல் குல வகுப்பினருக்கு அரசியலிலும் அரசு வேலைகளிலும் இடஒதுக்கீடு கிடைக்காமல் போயிருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு பெறுவ தற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.

அம்பேத்கர் அமெரிக்காவிலும் அய்ரோப் பாவிலும் கல்வி கற்றவர். அந்நாடுகளில் சமூகத்தில் நிலவிய சுதந்தரப் போக்கும், நாடாளுமன்றச் சனநாயக முறையும் அம்பேத் கரை ஈர்த்தன. மார்க்சியக் கருத்துகளில் நாட்டம் இருந்தபோதிலும் அவர் காலத்தில் சோவியத் நாட்டில் ஸ்டாலின் தலைமையில் நடந்த வன்முறைகளையும் தனிமனித சுதந்தரம் ஒடுக்கப்படுவதையும் கண்டு வெறுப்புற்றார். தாழ்த்தப்பட்ட சாதிகளின் பேரவையின் சார்பில் 1948-இல் அரசுகளும் சிறுபான்மை யினரும் எனும் தலைப்பில் அரசமைப்புச் சட்டம் குறித்த தன் கருத்தை ஓர் ஆவண மாக இந்திய அரசமைப்புச் சட்ட அவை யிடம் அளித்தார், அந்த ஆவணத்தில் முதன்மையான பெருந் தொழில்கள் அனைத்தும் அரசுடைமையாக் கப்பட வேண்டும்; நிலத்தின் உரிமை முற்றிலும் அரசிடமே இருக்க வேண்டும்; கூட்டுப் பண்ணை முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்கின்ற அரசு சோசலிசக் கோட்பாட்டை அம்பேத்கர் முன்மொழிந்திருந்தார்.

மேலும் அந்த ஆவணத்தில், “சனநாயக நெறிமுறையும் கட்டமைப்பும் கொண்ட அரசின் மூலம் குருதி சிந்தாமல் சமூக நிலையிலும் பொரு ளாதார நிலையிலும் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரமுடி யும்” என்று கூறியிருந்தார். இதில் அம்பேத் கர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார், படித்த காங்கிரசுத் தலைவர்கள் சுதந்தர இந்தியாவில் இக்குறிக்கோளை நிறைவேற்ற முயல்வார்கள் என்கிற எதிர்பார்ப்பும் அம்பேத் கரிடம் இருந்தது. எனவேதான் அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவர் பொறுப்பை ஏற்றார். ஆயினும் தன் விருப்பத்திற்கு - குறிக்கோளுக்கு மாறான தன்மையில் அரசமைப்புச் சட்டத்தை எழுத நேரிட்டதே என்கிற வருத்தமும் எரிச்சலும் அம்பேத்கரிடம் குமைந்து கொண்டேயிருந்தன. 1952 திசம்பரில் புனேயில் சட்ட நூலக உறுப் பினர் சங்கத்தில் உரையாற்றிய போது, “அரசமைப்புச் சட்டத்தை இரத்து செய்வ தற்கு அல்லது அதனைத் திருத்தி எழுது வதற்கு விரும்புவோர் அணியில் சேருவதற்கு நான் முற்றிலும் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னார். ஏனெனில் 1950 சனவரி 26-இல் அரசமைப்புச் சட்டம் நடை முறைக்கு வந்தது முதலே அதன் அறநெறிக்கு எதிராக ஆட்சியாளர்களால் செயல்படுத்தப் படுவது கண்டு மனம் கொதித்தார், இதன் உச்சகட்டமாக, 1953 செப்டம்பரில் மாநிலங்கள் அவையில் “இந்த அரசமைப்புச் சட்டம் யாருக்கும் பயன்படாது; இதைக் கொளுத்து வதற்கான முதல் ஆளாக நான் இருப்பேன்” என்று முழங்கினார்.

சனநாயகம் என்பது வெறும் தேர்தல் அரசியலும் அதன்மூலமாக ஆட்சியதிகாரத் தில் இருப்பது மட்டுமல்ல; சமூக நிலையில் சமத்துவமும் பொருளாதார நிலையில் சமத்துவமும் ஏற்படுவதே அரசியல் சனநாயகத்தை நிலைக்கச் செய்யும் என்கிற கருத்தில் அம்பேத்கர் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். எனவேதான் அரசமைப் புச் சட்ட அவையில் தன் இறுதி உரையில், “1950 சனவரி 26 அன்று முரண்பாடுகள் கொண்ட வாழ்வில் நாம் நுழைகிறோம், அரசியலில் சமத்துவம் பெற்றிருப்போம். ஆனால் சமுதாய, பொருளாதார வாழ்வில் நம்மிடையே சமத்துவம் இருக்காது. அரசியலில் ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு; ஒவ்வொரு வாக்குக்கும் ஒரே மதிப்பு கொண்டது என்கிற கொள்கையை ஏற்று இருப்போம். சமுதாய மற்றும் பொருளாதார வாழ்வில், நம்முடைய சமுதாய, பொருளாதாரக் கட்டமைப்பின் காரணமாக ஒவ் வொரு மனிதனும் ஒரே மதிப்பு உடையவன்தான் என்கிற கொள்கையை ஏற்க மறுப்பவர்களாகவே இருப்போம். இத்தகைய முரண்பாடு கொண்ட வாழ்நிலையை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்க விடப் போகிறோம்? இன்னும் எவ்வளவு காலத்துக்குச் சமுதாயச் சமத்துவத்தையும் பொருளாதாரச் சமத்துவத்தையும் மறுக்கப் போகிறோம்? இன்னும் நீண்ட காலத்துக்கு இவற்றை மறுப்பது என்பது அரசியல் சனநாயகத்திற்கே ஆபத்தானதாக முடியும். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் இந்த முரண்பாடுகளைக் களைய வேண்டும். இல்லாவிட்டால், இந்தச் சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அரசமைப்புச் சட்ட அவை அரும்பாடுபட்டு உருவாக்கியுள்ள அரசியல் சனநாயகக் கட்டமைப்பையே தகர்த்தெறிவார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்,

சமூக சமத்துவமும் சமூக சனநாயகமும் இந்தியாவில் உருவாவதற்குப் பெருந்தடையாக இருப்பது நால்வருண அடிப்படையிலான சாதி அமைப்பே ஆகும். சாதி அமைப்பை, அதன் இயக்கப் போக்கை, அதை ஒழிப்பதற்கான வழிமுறைகளை ஒப்பற்ற முறையில் அம்பேத்கர் விளக்கி யிருக்கிறார். அம்பேத்கரின் கொள்கையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் சாதி ஒழிப்பு என்பதே ஆகும். 1916-இல் கொலம்பியா பல்கலைக்கழகக் கருத்தரங்கில் ‘இந்தியாவில் சாதிகள்’ எனும் தலைப்பில் கட்டுரை படித்தது முதல் 1956-இல் தன் இறுதி மூச்சு வரை சாதி ஒழிப்புக்காகப் போராடினார். “நீங்கள் எந்தத் திசைநோக்கிச் சென்றாலும் உங்கள் பாதையில் சாதி எனும் பூதம் குறுக்கே வந்து நிற்கும் (Turn in any direction you like, caste is the monster that crosses your path). சாதி எனும் பூதத்தைக் கொல்லாத வரையில் அரசியல் சீர் திருத்தத்தையோ பொருளாதாரச் சீர் திருத்தத்தையோ கொண்டுவர முடி யாது” என்று ‘சாதி ஒழிப்பு’ நூலில் அம்பேத் கர் கூறியுள்ளார்.

1956 மே 20 அன்று ‘அமெரிக்காவின் குரல்’ எனும் அமெரிக்க வானொலியில் அம்பேத்கர் ஆற்றிய உரையில், “சனநாயகம் என்பது அரசாங்கம் எனும் வடிவத்திற்கு அப்பாற்பட்டது. இது முதன்மையாக இணைந்து வாழும் ஒருவகையான நடைமுறை யாகும். சனநாயகத்தின் வேர்களைச் சமூக உறவுகளிலும் சமுதாயத்தின் அடித்தளமாக விளங்கும் மக்களது ஒன்றிணைந்த வாழ்க்கை முறையிலும்தான் தேடிக் காணவேண்டும்” என்று குறிப்பிட்டார். ஆனால் இந்தியச் சமூகத்தில் மக்கள் தமக்கிடையே தங்கு தடையின்றி உறவாடுவதற்குப் பிறப்பின் அடிப்படையில் அமைந்துள்ள சாதிய ஏற்றத் தாழ்வுகள் பெருந்தடையாக இருக்கின்றன.

இந்தியச் சமுதாயம், பிற நாடுகளில் இருப்பது போல் தனிநபர்களைக் கொண்ட தல்ல; அது எண்ணற்ற சாதிகளாலானது. சாதிகள் தமது வாழ்க்கையில் தனித்தன் மையுடன் இயங்குகின்றன. சாதிகள் சமத்துவ மற்றவை. ஏணிப்படி போல் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டுள்ளன. மாற்றத்திற்கே இடமின்றி இறுகப் பிணைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கிடையே ஏறுமுகமான காழ்ப்புணர்ச்சியும் இறங்குமுகமான வெறுப் புணர்ச்சியும் நிலவுகின்றன. ஒவ்வொரு சாதியும் தன்னளவில் மூடிய சமூகமாக இயங்குகிறது. சாதிகளுக்கிடையே எத் தகைய உறவும் இருப்பதில்லை. சாதிக்குள் ளான அகமண முறை சாதிகளின் கட்ட மைப்பைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எனவேதான் சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் சாதி ஆணவக் கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. சாதி அமைப்பில் தனிமனித சுதந்தரத்திற்கோ, சமத்துவத்துக்கோ, சகோதரத்துவத்துக்கோ இடமில்லை. அதனால் சமூக சனநாயகம் முகிழ்ப்பதற்கான வாய்ப்பே இல்லாத சூழல் நிலவுகிறது.

சாதியமைப்பு இந்தியச் சமூகத்திற்கு இழைத்துள்ள கேடுகளை அம்பேத்கர் கடுமையாகக் கண்டிக்கிறார். “சாதி பொதுநல உணர்வைக் கொன்று விடுகிறது; பொதுவான இரக்க உணர்வை அழிக்கிறது. பொதுக் கருத்து என்பது உருவாகாமல் தடுக்கிறது. ஒரு இந்துவின் அடையாளம் அவனது சாதியாகவே இருக்கிறது. சாதிக்கு மட்டுமே பொறுப்பாளியாக இருக்கிறான். அவனுடைய விசுவாசம் சாதியளவில் மட்டும் சுருங்கி நிற்கிறது. அவனுடைய பரிவும் இரக்கமும் சாதியைச் சார்ந்தே பிறக்கின்றன. ஒழுக்கம் என்பதையும் சாதியே தீர்மானிக்கிறது” என்று அம்பேத்கர் சாதி ஒழிப்பு நூலில் கூறுகிறார். சாதி என்பது சமூக ஓர் மைக்கு எதிரானதாக மட்டுமல்லாமல், சமூகத்தைச் சிறு சிறு குழுக்களாகப் பிளவு படுத்தும் கொடிய ஆற்றலாகவும் இருக் கிறது. இந்நிலையானது சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் அடிப்படையில் சமூக சனநாயகம் உருவாவதற்குத் தடையாக இருக்கிறது.

அம்பேத்கர் காண விரும்பிய சனநாயகம் என்பதில் பகுத்தறிவும் அறிவியல் மனப்பான்மையும் மேலோங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தார். அறிவார்ந்த விவாதங்களுக்கும் மாறுபட்ட கருத்துகளைச் சுதந்தரமாக வெளிப்படுத்துவதற்குமான வாய்ப்புகளுக்கும் தாராளமாக இடமளிப்பதாக சனநாயகம் இருக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதரின் சுதந்தரமும், உள்ளார்ந்த விழைவுகளும், சுயமரியாதையும் வளரும் என்று கருதினார்.

புத்தர், “ஒவ்வொருவருக்கும் கற்கும் உரிமை உண்டு. ஒரு மனிதனுக்கு உணவு எவ்வளவு இன்றியமையாததோ அதுபோல் கற்கும் உரிமையும் இருக்க வேண்டும். குறைபாடு இல்லாத முழுமை பெற்றது என்பதாக எதுவும் இல்லை. எல்லாக் காலத்துக்கும் ஏற்றது என்பதொன்றும் இல்லை. ஒவ்வொன்றும் கேள்விக்குட்படுத்தப்படவும் ஆராயவும் வேண்டியதாகும்” என்று கூறியதை அம்பேத்கர் தன் கொள்கையாக வரித்துக் கொண்டதாகக் கூறுகிறார்.

எனவே பகுத்தறிவுக்கும், அறிவியல் மனப்பான்மைக்கும், மனிதரின் சுதந்தர உணர்ச்சிக்கும், சமத்துவத்துக்கும் எதிராக இருக்கின்ற - புனிதமானவை என்று சொல் லப்படுகின்ற இந்துமத சாத்திரங்களை, இதிகாசங்களை, புராணங்களை அம்பேத்கர் கடுமையாக எதிர்த்தார். பகவத் கீதையைப் பைத்தியக்காரனின் உளறல் என்றார். இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சூத்திரர்களின், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களின் அடிமை நிலைக்கும் துன்பங்களுக்கும் காரணமாக இருந்து வந்துள்ளதால், இவற்றை இம்மக்கள் புறக்கணிப்பதோடு எதிர்க்க வேண்டும் என்று அம்பேத்கர் அறைகூவல் விடுத்தார். புத்தரும் குருநானக்கும் இவற்றை எதிர்த்தனர் என்று சுட்டிக் காட்டுகிறார். சாதியைக் காப்பாற்றும் சாத்திரங்களைப் புறக்கணிக்காத வரையில் சாதி உணர்விலிருந்து விடுபட முடியாது என்று உணர்த்துகிறார்.

இந்தியச் சனநாயகத்தில் மத ஆதிக்கமும் சாதி ஆதிக்கமும் ஒழிந்து, உண்மையான மதச்சார்பின்மை செழித்தோங்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். நேரு காலம் முதல் இந்திராகாந்தி காலம் வரையிலான ஆட்சிக் காலத்தில் இக்குறிக்கோளை அடை வதற்காக எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்பின் கடந்த முப்பது ஆண்டுகளில் பா.ச.க.வும் சங்பரிவாரங்களும் அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுதல் என்பதை முன்வைத்து மதவாத அரசியலை வளர்த்தெடுத்து அதில் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியும் பெற்றுவிட்டன. சாதி ஒழிப்பை முன்னெடுக்காமல், சாதியமைப்பையும் அதைக் கட்டிக் காக்கும் இந்து மதத்தையும் அப்படியே நீடிக்கச் செய்வதன் மூலம் பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவே இந்துக்களின் ஒற்றுமை, தேசபக்தி என்கிற போலியான முழக்கங்களைச் சங்பரிவாரங்கள் முன்வைக்கின்றன. இந்துத்துவ ஆதிக்கத்தை எதிர்த்த பகுத்தறிவாளர்களான தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி, கவுரிலங்கேஷ் ஆகியோர் சங் பரிவாரங்களால் கொல்லப்பட்டனர். பல இலட்சம் ஆண்டுகளுக்குமுன் பிறந்ததாகக் கூறப்படும் இராமன் பாபர் மசூதி கட்டப் பட்ட இடத்தில்தான் பிறந்தார் என்று கூறுமளவுக்கு உயர்நீதித்துறையும் காவி மயமாகிவிட்டிருக்கிறது. மேலும் இந்துத்துவத்தை எதிர்க்கும் அறிஞர்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் ‘நகர நக்சலைட்டுகள்’ என்று முத்திரைக் குத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். அம்பேத்கர் காண விரும்பிய சனநாயகத்தைக் கட்டமைக்க விரும்பும் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்துத்துவப் பாசிசத்தை எதிர்க்க வேண்டும்.

அம்பேத்கர், அரசு சோசலிசம் மூலம் சூத்திரர்கள், பட்டியல் குலத்தினர், பழங்குடி யினர் ஆகியோரைப் பொருளாதாரச் சுரண்ட லிலிருந்து விடுவிக்க முடியும் என்று கருதினார். அதனால்தான் முதன்மையான உற்பத்திச் சக்திகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றார். சாதியமைப்பு என்பது மத அமைப்பாக மட்டும் அல்லாமல் பொருளாதார அமைப்பாகவும் இருக்கிறது என்றார் அம்பேத்கர். சாதி ஒழிப்பை முன்னெடுக்கும் போது படிப்படியாக ஒடுக்கப்பட்ட கீழ்ச்சாதியினர் பொருளா தாரச் சுரண்டலிலிருந்து விடுபடுவதுடன், சுதந்தரமாகத் தாம் விரும்பும் தொழிலை மேற்கொண்டு பொருளாதார நிலையிலும் உயருவதற்கான வாய்ப்பு அமையும் எனக் கருதினார். ஆனால் 1991 முதல் தாராள மயம், தனியார் மயம், உலக மயம் என்கிற கொள்கை செயல்படுத்தப்பட்ட பிறகு, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனி யாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. இது பிற்படுத்தப்பட்ட, பட்டியல் குல, பழங்குடி வகுப்பினரின் வேலை வாய்ப்பைப் பறித்து வருகிறது. கல்வி மருத்துவம் பெருமளவில் தனியாரின் கொள்ளைக்குத் திறந்து விடப்பட்டதால் கீழ்ச்சாதி மக்கள் பெரும் துன்பத்திற்குள்ளாகியுள்ளனர். இவை அம்பேத்கர் விரும்பிய பொருளாதாரச் சமத்துவத்துக்கு எதிரான போக்குகளாகும்.

அம்பேத்கர் மறைவுக்குப் பின் சமூக, அரசியல், பொருளாதார நிலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டு அம்பேத்கர் காண விரும்பிய சனநாயகத்தை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டிய தேவையுள்ளது.

சுருக்கமாகச் சொல்வதாயின், சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருப்பதே இலட்சிய சமூகமாகும்; இதை அடைவதை அரசியல் சனநாயகமும், அரசமைப்பும் குறிக்கோளாகக் கொண்டிருக்க வேண்டும். சமூக சமத்துவத்தையும் பொருளாதார சமத்துவத்தையும் முன்னெடுக்காத அரசியல் சனநாயகக் கட்டமைப்பைத் தகர்த்தெறிந்து, புதிய அரசியல் சனநாயகக் கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே அம்பேத்கரின் சனநாயகம் பற்றிய கோட்பாடாகும்.

- க.முகிலன்