மறைமலை அடிகளார் அவர்கள் நாகையில் செல்வந்தர் குடும்பத்தில் சொக்கலிங்கம்பிள்ளை - சின்னம்மை அம்மையார் அவர்கட்கு 15.7.1876-இல் பிறந்தார். மிகுந்த செல்வாக்குடன் வளர்ந்தார். தமது 21ஆவது வயதில் தமிழை நன்கு படித்து விட்டார். பிறகு ஆங்கிலம், வடமொழியையும் நன்கு படித்துப் புலமை பெற்றார். 1898 முதல் 1950 வரை அழகான ஆங்கிலத்தில் நாள்குறிப்பு எழுதியுள்ளார். அடிகளார் அவர்கள் 1916 முதல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார். தனித்தமிழ் இயக்கத்தால் அடிகளார், பாவாணர், திரு.வி.க., பாவேந்தர், பாவலரேறு, தவத்திரு. ஞானியாரடிகள், பாண்டித்துரைத் தேவர், பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியார், பா.வே. மாணிக்கநாயக்கர், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், உமாமகேசுவரம் பிள்ளை போன்ற பல சான்றோர்களால் பாராட்டப்பட்டவர். வடநாட்டுக் குப் பயணம் செய்தார்.

அடிகள் பேச்சு பல பேச்சாளர்களைப் படைத்தது. எப்போதும் படிப்பதில் ஆர்வம் உடையவர். எப்போதும் நூல்களை வாங்கித் தொகுத்து வைத்திருந்தார். தமிழுக்கும், தமிழருக்கும் இவர் ஆற்றிய தொண்டு தலைசிறந்தது. தமிழ்மொழி தனித்து இயங்க வல்லது என்பதை, தனது எழுத்தாலும் பேச்சாலும் உலகறியச் செய்த பெருமை அடிகளையே சேரும். “மறைமலையடிகளார் நடை” என ஒன்று உருவெடுத்துத் தோன்றிப் பரவியுள்ளது.

வடமொழியை நன்கு கற்று, தமிழ்மொழியின் பெருமையை விளக்கியவர் மறைமலை அடிகள். “மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை” என்னும் சீரிய நூலைத் தமிழில் இயற்றித் தமிழ்நாட்டிற்குத் தந்தார்.

சென்னை வாழ்க்கை

அக்காலத்தில் சென்னை மாநகரில் புகழ்பெற்று விளங்கியது கிருத்துவக் கல்லூரியாகும். அந்தக் கல்லூரிக்குத் தமிழாசிரியர் ஒருவர் தேவைப்பட்டார். அக்காலத்தில் பெருந்தமிழாசிரியர் களிடத்தில் முறையாகத் தமிழைக் கற்றவர்களே கல்வி நிலையங் களில் தமிழாசிரியர்களாயினர். அப்போது கிருத்துவக் கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராய் இருந்தவர் திரு. சூரிய நாராயண சாஸ்திரியார். அவர் பரிந்துரை யால், அடிகள் 9.3.1898-இல் கிருத்துவக் கல்லூரியில் தமிழாசிரியரானார். சம்பளம் இருபத்தைந்து ரூபாய்தான். பிராமணர்கள் பால் அடிகட்கு நம்பிக்கை இருந்ததில்லை. அதற்கு விலக்கானவர்கள் ஒரு சிலரே. அவர்களில் தலையானவர் நம் சாத்திரியாரே யாவார். தனித்தமிழ் இயக்கங் காண்பதற்கு முன்பே அவர் தன் வடமொழிப் பெயரைப் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்டார். அடிகளார் அவர்களும் பரிதிமாற் கலைஞரும் ஒரு சில ஆண்டுகளே பழகினாலும், அவர் கள் நட்பு மிகப் பெரியது.

1903-இல் ஞானசாகரம் (அறிவுக்கடல்) என்னும் முதல் இதழ் வெளியிட்டார். மாதம் ஒருமுறை வந்தது. தொடர்ந்து நடத்தாது, இடையில் விட்டுவிட்டு வெளியிட்டார். அக்காலச் சென்னைப் பல்கலைக்கழகம், கலைப்பட்டப் படிப்புகளுக்கு ஆங்கிலமே போதும்; தாய்மொழியை மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டியதில்லை. விரும்பியவர்கள் படிக்கலாம். விருப்பம் இல்லாதோர் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழிகளை எடுத்துப் பயிலலாம் என்று முடிவு செய்தது. இதனால் பல தமிழாசிரி யர்கள் வேலை இழந்தனர். என்ன கொடுமை! சென்னைப் பல்கலைக்கழகம் தாய்மொழிக் கல்வியை ஒதுக்கித் தள்ளியது; ஆங்கில மொழி மோகம் இன்றளவும் நீங்கவில்லை. மேலும் வளர்ந்து வருகிறது. பல தமிழாசி ரியர்கள் வேலை இழந்ததில் நம் அடிகளாரும் ஒருவர். ஆனால் நம் அடிகளின் அரும்புல மையும் கற்பிக்குந் திறமும் உணர்ந்தவர் களாதலின் அடிகளுக்குக் கல்லூரியில் வேலை தர ஏற்பாடு செய்தனர். ஆனால் அடிகள் வேலை பார்க்க மறுத்துவிட்டார். அவர் மனம் துறவை நாடியது.

பல்லாவரம் குடிபுகுதல்

அடிகளார் அவர்கள் 9.3.1898 முதல் கிருத்துவக் கல்லூரியில் பார்த்து வந்த தமிழாசிரியர் பணியை 10.4.1911-இல் விடுத்து, சென்னைக்கு அருகே, பல்லாவரத்தில் 1.5.1911-இல் குடிபுகுந்தார். பல்லாவரம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே ஙு கல் தொலைவில் அடிகள் மாளிகை இருந்தது. பல்லாவரத்துக்கு வந்த போது அடிகளின் வயது 35. அவரின் தாயாருக்கு வயது 70. மனைவிக்கு 32. அடிகளாருக்கு 4 மகன் களும், 3 மகள்களும் இருந்தனர். பல்லாவரத்தில் குடியேறிய சில திங்களில் கடைசி மகள் திரிபுரசுந்தரி பிறந்தார். இவர் பிறந்து சில திங்களில் அடிகளார் 27.8.1911-இல் துறவி யானார். இதன் பிறகு “சுவாமி வேதாசலம்” என்னும் பெயரே நீடித்தது.

அதன்பிறகு நூல்களை ஆராய்தல், எழுதுதல், வெளியிடல் முதலிய பணிகளில் மிகவும் முனைந்தார். அடிகளின் அறிவும், ஆற்றலும், தோற்றமும், பொலிவும் எழுத்தும் கண்டாரை எல்லாம் காந்தங் கண்ட இரும் பைப் போல் ஈர்த்தன. அதன்பிறகு விழாக் களில் தலைமை தாங்கல், சொற்பொழி வாற்றல், இதற்காக யாத்திரை போதல் முதலியவற்றை மேற்கொண்டார். அந்தக் காலத்தில் இருபது ஆயிரம் ரூபாய்க்கு நூல்கள் வாங்கி ஆராய்ந்தார்.

தனித்தமிழ் தோற்றம்

1916-இல் மகள் நீலாம்பிகைக்கு வயது 13. ஒருநாள் மாலையில் தந்தையும் மகளும் தம் தோட்டத்தில் உலவிக்கொண்டு இருந்தனர். அப்போது இராமலிங்க அடிகளார் அருளிச் செய்த திருமுறையிலுள்ள பாடலில் தேகம் என்ற வடசொல் இருந்தது. அடிகளார், அவர்கள் மகள் நீலாவிடம் “இப்பாட்டில் உள்ள தேகம் எனும் வடசொல்லை நீக்கி விட்டு, யாக்கை என்ற தமிழ்ச்சொல் இருந்தால் அவ்விடத்தில் செய்யுள் ஓசையின்பம் பின்னும் அழகாக இருக்கும்” என்று கூறினார்.

அதன் பிறகு அயன்மொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும் என்று மகளின் வேண்டுகோளை ஏற்று, சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலையடிகள் ஆக்கினார். அடிகளார் 1898 முதல் 1950 வரை தவறாமல் நாட் குறிப்புகளை ஆங்கிலத்தில் எழுதி வந்தார்.

பெரியாரும் அடிகளாரும்

பெரியார் அடிகள் மீது கொண்டிருந்த பற்று தமிழினப் பற்று. பெரியாரின் கிளர்ச் சியோ சிற்றூர், பேரூர்களிலெல்லாம் பரவிப் பயன் விளைவிக்கிறது. இதனால் என் நோக் கங்களும் விருப்பங்களும் அவராலே எளிதில் எங்கும் பரவி விடுகின்றன. ஆதலால் பெரியார் நெடிதினிது வாழ்க! அவர் முயற்சி வெல்க! என்று அடிகள் வாயார வாழ்த்திக் கொண் டேயிருந்தார்.

பெரியார் மதித்த ஆன்மிகத் தலைவர் மூவரில் முதன்மையானவர் அடிகள் ஆவார் எனலாம்.

இந்தி எதிர்ப்பு

நாடு முழுவதும் 1937, 38-இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம்; இராசாசியின் கட்டாய இந்தியை எதிர்த்து ஓர் அணியில் திரண்டனர். 11.9.1937-இல் சென்னைத் திருவல்லிக்கேணியில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் கூடியது. அடிகளின் தலைமையில் பெரியார், கி.ஆ.பெ. பல தமிழறிஞர்கள் உணர்ச்சிமிகு உரையாற்றினார்கள். 3.6.1938-இல் சைதாப்பேட்டையில் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அடிகள் தலைமை தாங்கி, இந்தியை எதிர்த்துப் போர்முரசு கொட்டினார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அடிகளாரின் மகன் மறை. திருநாவுக்கரசர், மருமகள் ஞானம், இரு குழந்தைகள், மாணிக்கவாசகத்தின் மனைவி சரோசினி அவர் மகனுடன் கட்டாய இந்தியை எதிர்த்துச் சிறை சென்றனர்.

பெரியார் என்ற பட்டம்

தமிழ்நாட்டுப் பெண்கள் சென்னையில் 13.11.1938-இல் மாநாடு ஒன்றை நடத்தினர். அது சென்னை ஒற்றைவாடை அரங்கில் நடைபெற்றது. அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் தருமாம்பாள் அவர்களும் இணைந்து மாநாட்டினை நடத்தினார்கள். இம்மாநாட்டில் ஈ.வெ.ரா. அவர்களின் தன்னலங்கருதாத ஈடுஇணையற்ற பெருந்தொண்டைக் கருதி அவருக்குப் “பெரியார்” என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினார்கள். அன்றிலிருந்து, பெரியார் என்றே அழைக்கப்பட்டார். அடிகளாரின் நாள்குறிப்பில், “4.8.1950-இல் பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆடலரசுடன் என்னைக் காண வந்தார். ஒரு மணிநேரம், உரையாடி னோம்” என்று குறிப்பிட்டுள்ளார். அடிகள் மறைவதற்கு 40 நாட்களுக்குமுன் சந்தித்தார் கள். அடிகளார் 15.9.1950-ஆம் நாள் மறைந்தார்.

தமிழ் மறவர்

புலவர் வை. பொன்னம்பலனார் அவர்களுக்கும் அடிகளார் அவர்களுக்கும் இருந்த தொடர்பு பற்றி எப்படி என்றும் எவ்வளவு ஆழமானது என்றும் காண்போம். பொன்னம்பலனார் அவர்கள் திருவையாறில் உள்ள அரசர் கல்லூரியில், 1926 முதல் 1931 வரை படித்தார். பொன்னம்பலனார் கல்லூரி யில் சேர்ந்த ஆண்டு அடிகளார் அவர்களின் மூன்றாவது மகன் திருநாவுக்கரசர் அவர்களும் சேர்ந்தார். பொன்னம்பலனார், திருநாவுக் கரசர், குஞ்சிதபாதம் அவர்களும் படித்தார்கள். குஞ்சிதபாதம் அவர்கள் அடிகளாரின் கடைசி மருமகன். அடிகளின் மகன் மறை. திருநாவுக் கரசர் அவர்களும், பொன்னம்பலனார் அவர் களும் பிசிராந்தையார், கோப்பெருஞ் சோழன் மாதிரி இருவரும் கடைசி வரை அவ்வளவு நட்புடன் இருந்தனர்.

பொன்னம்பலனார் அவர்கள், விடுமுறைக்குத் திருநாவுக்கரசர் அவர்களுடன் பல்லாவரம் வந்து அடிகள் வீட்டில் தங்கி இருப்பார்கள். திருநாவுக்கரசர் அவர்கள் கீழ மாளிகைக்கு பொன்னம்பலனார் வீட்டிற்கும் வந்து தங்குவார்கள்.

திருநாவுக்கரசரும் பொன்னம்பலனாரும் ஒரே அறையில் இருந்ததால், பொன்னம்பல னாரிடம் தனித்தமிழ்ப் பற்று வளர்வதற்கு மிகவும் வாய்ப்பாக இருந்தது. முதலில் திருநாவுக்கரசர் அவர்கள் பொன்னம்பலனார் அவர்களிடம் இவரின் தோற்றத்தைக் கண்டு பேசமாட்டார். நாள்கள் செல்லச் செல்ல பொன்னம்பலனாரின் அன்பைக் கண்டு மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அதனால் விடுமுறைக்குப் பல்லாவரம் வந்து ஒரு மாதம் கூடத் தங்கி இருப்பார். காலை யிலேயே எழுந்து அடிகளார்க்குப் பணிவிடை செய்யக் காத்திருப்பார். விடாமல் வினாக்கள் கேட்பார். வினாக்களுக்கு உரிய விடைகளை அடிகளார் கூறுவார். வினாக்கள் எல்லாம் இலக்கியங்கள், வரலாறுகள், மேனாட்டு ஆராய்ச்சிகள், தமிழ், தமிழர் ஆராய்ச்சி போன்றவற்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வார். பொன்னம்பலனார் அவர்கள் அடிகளுடன் தொடர்பு கொண்ட பிறகுதான், கனகசபை என்ற தன்பெயரை பொன்னம்பலனார் என மாற்றிக் கொண்டார். பொன்னம்பலத்தின் ஆர்வம் நிறைந்த வினாக்களும், அதற்கு நான் கொடுக்கும் விடைகளும் அதை அவர் ஏற்று மகிழ்தலும் அவர் தூய வெண்பல் வரிசை களும் அன்பு நிறைந்த முகமும் இனியன என்றார் அடிகளார். இவர்களின் நட்பால் இரண்டு குடும்பங்களும் மிக நெருங்கிய நட்புக் குடும்பங்கள் ஆயின.

வை. பொன்னம்பலனார் தன் இல்லத் துக்கு “மறைமலையடிகள் தனித் தமிழ்ப் பூங்கா” என்று வைத்தார். பொன்னம்பலனார் அவர்கள் இரவில் சாப்பிடும் போது எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவோம். பொன்னம்பலனார் அவர்கள் மணிக்கணக்காக அடிகளைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும் கூறுவார். அடிகள் அவர்களிடம் நட்பு கொண்ட பிறகுதான் பொன்னம்பலனாருக்கும் திருக்குறள் நாள்குறிப்பு எழுதும் பழக்கம் வந்ததாக நான் கருதுகிறேன். பொன்னம்பல னாரும் 1932 முதல் நாள்குறிப்பு எழுதும் பழக்கம் இருந்தது. அதனால்தான் தூய தமிழில் பேசவும் செய்தார். வீட்டில் எல் லோரும் தூய தமிழில்தான் பேச வேண்டும் என்று கூறுவார்.

அடிகள் அவர்களைப் பற்றி, பொன்னம் பலனார் அவர்கள் கூறும் போது அவ்வளவு மகிழ்ச்சியாகப் பேசுவார். நாங்கள் எல்லாம் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது மணிக் கணக்காகப் பேசுவார்கள். அடிகளின் பாதம் தரையில்படாமல் செருப்புடன்தான் வீட்டி லும் நடப்பார். அவருடைய கால் நிலத்தில் பட்டதே இல்லை. அவரது நிறம் அப்படி இருக்கும். கைவிரல்கள் எல்லாம் இளஞ் சிவப்பு நிறத்தில் பட்டு மாதிரி இருக்கும் என்றும் கூறுவார். அடிகளாரின் தொடர் பினால்தான் மிகப்பெரிய பெரிய ஆள்களு டன் பொன்னம்பலனார் அவர்கள் தொடர்பில் இருந்தார்.

சென்னையில் அவர்கள் 1921-ஆம் ஆண்டு மே 19-ஆம் நாள் வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழறிஞர்கள் கூட்டம் கூடியது. அடிகளார் அவர்கள் தலைமை ஏற்க கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் வரவேற்பு உரை ஆற்றிட, 1.30 மணிநேரம் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பேசி, திருவள்ளுவர் ஆண்டாகக் கணக்கிட்டு முடிவுசெய்தார்கள்.

அடிகளார் அவர்கள் குடும்பத்துடன் இரண்டுமுறை கீழமாளிகைக்கு வந்து இரண்டு, மூன்று நாள்கள் தங்கியிருந்தார்கள். ஒரு முறை மருதூரில் உள்ள சித்து அம்மாவைக் குடும்பத்துடன் போய்ப் பார்த்தார்கள். அடுத்த முறை வரும்போது வ.உ.சி. அவர்களை அழைத்து வந்து கீழமாளிகையில் தங்கி இருந்தார்கள். பொன்னம்பலனார் அவர் கட்கு மூன்று திருமணமும் மறை. திருநாவுக் கரசர் அவர்கள்தான் நடத்தி வைத்தார்கள். இரண்டு மனைவிகளும் இறந்துவிடவே, மூன்றாவது திருமணத்தை நடத்த மறை. திருநாவுக்கரசர் அவர்கள் “நான் வரவில்லை. நீ இப்போது, நாத்திகவாதி. அதனால் நீ வேறு எவரையேனும் வைத்துத் திருமணம் செய்து கொள்” என்று மடல் எழுதிவிட் டார். ஆனால் பொன்னம்பலனார் அவர்கள், “நீ வந்தால்தான் திருமணம்; நீ வராவிட்டால் திருமணத்தை நிறுத்தி விடுவேன்” என்று மடல் எழுதிய பின் மறை. திருநாவுக்கரசர் அவர்கள் வந்து நடத்தி வைத்தார்கள். ஆனால், மறை. திருநாவுக்கரசர் அவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் நான் ராசி இல்லாதவன்; நான் நடத்தி வைத்த திருமணத்தில் இருவரும் இறந்துவிட்டார்கள். அதனால்தான் நான் வரவில்லை என்று அவர் மனைவி, குழந்தை களிடமும் சொல்லி இருக்கிறார்கள். இந்தச் செய்தியை (2019-இல்) அவரது மகன்

திரு. தாயுமானவன் அவர்கள் எங்களிடம் கூறினார். மறை. திருநாவுக்கரசர் அவர்கள் இந்தி எதிர்ப்பில் சிறையில் இருந்தபோது, திருநாவுக்கரசரின் மனைவி ஞானம், இருபிள்ளைகளையும் பொன்னம்பலனார் தம் வீட்டில் வைத்து உதவி செய்தார்கள். மறை. திருநாவுக்கரசர் அவர்கள் ஞானம் அம்மையாரைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டார்கள். பெரிய அக்காள் மகள் என்பதால் நான் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று கூறிவிட்டார். பொன்னம்பலனார் அவர்கள் பேசித்தான் அத்திருமணத்தை நடத்தி வைத்தார்கள். ஞானம் அம்மையார் அவர்கள் பொன்னம் பலனார் அவர்களை அப்பா என்று தான் அழைப்பார்கள். திருமதி.ஞானம் அம்மையார் இறந்த போது, ஒரு மடல் எழுதியிருந்தார் மறை. திருநாவுக்கரசு.

என் தாய் தங்கம்மாள் அவர்கள் படுக்கையில் இருந் தார்கள். நாங்கள் விடுமுறைக்குச் செந்துறை சென்று இருந்தோம். தங்கம்மாள் அவர்கள் என்னிடம் அந்த மடலைக் கொடுத்து, நீ மறை அப்பாவுக்கு மடல் எழுதி அவர் இருக்கும் போது, நீ போய்ப் பார்த்து வா என்றார். நான் மறை. திருநாவுக்கரசர் அவர்களுக்கு மடல் எழுதினேன். நாங்கள் எப்போது வந்து உங் களைப் பார்க்கலாம். நீங்கள் மடல் எழுதி னால், நாங்கள் வந்து பார்க்கிறோம் என்று எழுதினேன். அவர் “சனி, ஞாயிறு பார்க்க வா” என்று எழுதினார். ஆனால் வெள்ளிக்கிழமை மாலையே அவர் வந்து என்னைப் பார்க்க வந்துவிட்டார். ஏன் அப்பா வந்துவிட்டீர்கள் என்று கேட்டதற்கு அழுது கொண்டே என்ன கூறினார் என்றால், அம்மா நீ என்கெழுதகை நண்பனின் பெண். என் அன்பை எப்படி வெளிப்படுத்துவேன்? அதனால்தான் நான் உன்னைப் பார்க்க வந்தேன் என்று என்னைக் கட்டிப்பிடித்து அழுதார். இதுதான் அம்மா எங்களின் நட்பு என்று கூறினார்கள். எனக்கு அதை நினைத்தால் இன்றும் கண்ணீர் வரும். அவருடைய மகன்கள் இருவர் அங்குதான் இருந்தார்கள். ஆனால் அவர்களுடைய வீட் டிற்குச் சென்றது இல்லை என்று கூறினார். பிறகு மகன் வீட்டிற்குச் சென்றார்கள். அதன் பிறகு இறக்கும் வரை அவரை நாங்கள் சென்று பார்த்து வந்தோம், இப்போதும் அந்த நட்பு தொடர்கிறது. இரு குடும்பமும் தமிழின் பால் உள்ள பற்றால், அடிகள்மீது உள்ள பற்றால், அன்பால் தொடர்ந்து மூன்று தலை முறைகளாக நட்புடன் உள்ளோம்.

பல அரிய செய்திகளை எனக்குத் தெரிந்த சிலவற்றை எழுதியுள்ளேன்.

- செந்தமிழ்க்கொற்றி (வை. பொன்னம்பலனாரின் மகள்)