காஞ்சி மாநகரம் உலகில் பட்டுநெசவுக்குப் பேர்பெற்ற நகரம். பகுத்தறிவு இயக்கத்திற்குப் பலம் சேர்க்கும் நகரம், தமிழகத்தில் 1967-இல் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற போது அறிஞர் அண்ணா முதல்வராகப் பதவி ஏற்றார். தமிழகத்திற்குப் பெருமை என்றால், காஞ்சிபுரத்தில் பிறந்து வளர்ந்த அறிஞர் அண்ணா பதவி ஏற்றது காஞ்சி மண்ணிற்கும் எங்களுக்கும் பெருமை.

அந்த ஆண்டுதான் 1967-இல் எங்கள் குடும்பம் காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கம்புதூர் மோட்டூர் கிராமம் காஞ்சிபுரம் மாவட்டம், கிராமத்திலிருந்து காஞ்சிபுரம் நகரத்திற்குக் குடிபெயர்ந்தோம்.

என் தந்தை வி.கே. முருகப்பநாயகர் தி.மு.க. கழகத்தில் தீவிரமான பற்று உடையவர். பெரியார் பெயரிலும் நல்ல இணக்கம் கொண்டவர். பெரியார் கொள்கைகள் வெற்றி பெற வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்.

காஞ்சிபுரத்தில் செந்தமிழ்ச்செல்வர் என்று அழைக்கப்பட்ட சி.வி.எம். அண்ணாமலை பெரியார் இயக்கம் வளர உறுதுணை யாகச் செயல்பட்டவர். அறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுத் திறம்படச் செயல் ஆற்றியவர்.

அமைச்சர் சி.வி.எம். அண்ணாமலையோடு என் தந்தைக்கு நெருக்கமான நட்பு இருந்ததால் அண்ணாமலை அவர்களை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு என் தந்தைக்குக் கிடைத்தது. சிறுவனாக இருந்த நானும் தந்தையோடு பலமுறை சென்று அறிஞர் அண்ணாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

28.01.1980-இல் எனக்கும் சென்னை சூளைமேடு ரெங்கசாமி நாயகர் - சாரதா அம்மாள் தம்பதியரின் மகள் காந்திமதிக்கும் காஞ்சிபுரத்தில் சி.வி.எம். அண்ணாமலை தலைமையில் சுயமரி யாதைத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வாழ்த்துரை சி.பி. ராசமாணிக்கம், டி.ஏ. கோபால், வை. சண்முகம், எஸ். ராசமாணிக்கம், உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. கம்மராஜபுரம் கே.எம். ராஜகோபால், அரங்க சானகிராமன், ஏ. சுப்பிரமணி, தி.மு.க., வெள்ளைகேட் முனுசாமி நாயகர் வாழ்த்துரை வழங்கினர்.

காஞ்சியில் சுயமரியாதை இயக்கத் தோழர்களோடு எனக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த நிலையில்தான் கம்மராஜ புரம் கே.எம். ராசகோபால், எம்.எல்.ஏ. மரணமடைய 1980-இல் அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் கெங்கைகொண்டான் மண்டபம் அருகில் கே.எம். பெருமாள் தலைமையில் நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் பெரியார் சம உரிமைக் கழகத்தின் அப்போதைய மாவட்டச் செயலாளர் பல்லவர் மேடு கே.எம். பெருமாள் எனக்கு அறிமுகம் ஆனார்.

அந்தப் பொதுக்கூட்டத்தின் மூலம் வே. ஆனைமுத்து எனக்கு அறிமுகம் ஆனார். கவிஞர் தமிழேந்தி, சோ.சு. யுவராசன் என்ற பெயரில் பங்கேற்றுச் சிறப்புரை ஆற்றினார். அன்று 1980 முதல் 2019 வரை தொடர்ந்து 40 ஆண்டுகளாக நான் மா.பெ.பொ.க.வில் சேர்ந்து களப்பணி ஆற்றி வருகிறேன்.

காஞ்சிபுரம் அரங்கசாமி நாயகர், தங்கவேல் முதலியார், அரங்க சானகிராமன், சி.வி.எம். அண்ணாமலை, கம்மராஜபுரம் கே.எம். ராஜகோபால், சி.பி. ராசமாணிக்கம், எஸ். ராசமாணிக்கம், வை. சண்முகம், நாத்திகம் பொன்னுசாமி, டி.கே. கோபால், மூர்த்தி, டி.எ. அசோகன், டி.ஏ. ரங்கன், வி.என். மார்க்கு, கே.டி.எஸ். மணி, டி.கே. குப்புசாமி, எ.ஆர். வெங்கட்ராமன், கு. ராஜா, ரங்கசாமி குளம் பச்சையப்பன், பல்லத்தெரு கலாட்டா நாராயணசமி, சி. நடராசன், விசயபாரதி, வேதாசலம், தியாகராஜன், கே. டில்லி, தீ. கோபாலகிருஷ்ணன், சா. கிருட்டிணன், இரா. நாராயணமூர்த்தி, ஆ. சோதி, மா. கோதண்டபாணி, பூ.கா. பொன்னப்பன், மணிமாறன், சம்பந்த சிவக்குமார், இரா. ராஜசேகர், இரா. ஆதிகேசவன், கீழம்பி முத்து, கீழம்பி சந்திரமோகன், கீழம்பி வ. வேதகிரி, கீழம்பி சி. பழனி, ஆரியபெரும் பாக்கம், கிருஷ்ணன், க. வெங்கடேசன், ஜார்ஜ் நீலாவதி, நீலவதி ஜார்ஜ், கதிரவன், வேலாயுதம் (பட்டுக்கடை), இளயவேல், முகிலன், டோல்கேட் எல்லப்பனார், டாக்டர் விமுனாமூர்த்தி, க.கோதண்டன், சக்திகம லாம்மாள், புளியம்பாக்கம் ந.பாரி, நாத்திகம் நாகராசன், ச. யோகநாதன், தாவூத் பாய் ஆகியோர் காஞ்சிபுரத்தில் ஒன்றுசேர்ந்து களப்பணியாற்றி இருக்கிறோம். இதன்மூலம் பல்வேறு இயக்கத் தோழர்கள் நட்பு கிடைத்தது.

காஞ்சிபுரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக மா.பெ.பொ.க.வின் நகரச் செயலாளராகப் பணியாற்றி வருகிறேன். எனது மூத்த மகள் எஸ். ரேவதிக்கும் கிழக்குத் தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கம் (திடீர் நகர்), நாகப்பன்-கிருஷ்ணவேணி தம்பதியர்களின் இளைய மகன் என். சங்கருக்கும் 23.01.2013 அன்று சாதி மறுப்புத் திருமணம் நடைபெற்றது.

நான் பெரியார் இயக்கத்தில் இருந்த தால் இந்த சாதி மறுப்புத் திருமணத்தை என் மகள் ரேவதி என் மீதும் இயக்கத்தின் மீதும் இருந்த பற்றின் காரணமாக மிக இயல்பாகச் செய்துகொண்டாள். இது காதல் திருமணம் என்பது கூடுதல் மகிழ்ச்சி. என். சங்கர் - ரேவதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந் துள்ளது. மூத்தமகள் என். லோகமகிழினி. இளைய மகள் பெயர் என். எழிலினி.

எனது இளைய மகன் எஸ். சிவக்குமார் (எ) பாஸ்கருக்கும் காஞ்சிபுரம் வி. தணிகை வேல் - காந்தாரி ஆகியோருடைய மகள் நிர்மலாவுக்கும் கடந்த 28.10.2018 தேதியில் காஞ்சிபுரத்தில் தமிழ்முறைப்படி திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு 31.12.2019-இல் அமிழ்தினி பெண் குழந்தை பிறந்துள்ளது.

1983-இல் காஞ்சிபுரத்தில் ஒருவாரம் பெரியார் சமஉரிமைக் கழகமாக இயங்கிய பொழுது ஒருவாரம் பயிற்சி வகுப்பு பலிஜ குலத் திருமணச் சத்திரத்தில் (பேருந்து நிலையம் அருகில்) நடைபெற்றது. அந்தப் பயிற்சி வகுப்பில்தான் வாலாசா வல்லவன், சேகர் என்ற பெயரில் பங்கேற்றார் என்பது என் நினைவு.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடு வாய்ப்பு இருந்தும் அதை மய்யப்படுத்தி எந்த ஒரு அரசியல் கட்சியும் இயக்கங்களும் முன்னெடுத்துச் செல்ல இயலாத நிலையில் அய்யா வே.ஆனைமுத்து எடுத்த முன்முயற்சி யால், மத்திய அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடுக்கு மொரார்ஜி தேசாய் ஆட்சிக் காலத்தில் போராடியதன் விளைவாக வி.பி. சிங் பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் மத்திய அரசுப் பணிகளில் பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு இந்திய அளவில் 27 விழுக்காடு ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இதை அடுத்து வி.பி. சிங் தனது பதவியை இழந்தார்.

பெரியாரின் வழியில் இடஒதுக்கீடுக் காகத் தொடர்ந்து களப்பணியாற்றி ஒடுக் கப்பட்ட மக்களுக்காக, உரிமைக்காக அயராது உழைத்து,

இந்தியாவில் பொதுவுடைமை மலர

மார்க்சிய - பெரியாரிய நெறியில்

தேசிய இன வழிபட்ட சமஉரிமை உடைய

சமதர்ம குடிஅரசுகள் ஒருங்கிணைந்த

உண்மையான கூட்டாட்சி அமைய

மா.பெ.பொ.க. நடத்திய/தமிழகம் அளவில் அழைத்து நிகழ்ச்சிகள், மாநாடு களில் காஞ்சிபுரத்தின் பங்கு மிகப்பெரியது.

காஞ்சிபுரம் மா.பெ.பொ.க. தோழர்கள் ஒவ்வொருவரும் இதற்கென முன் எடுத்து ஆற்றிய தொண்டு என்பது அளப்பரியது.

அய்யா வே. ஆனைமுத்து ‘வெட்டி வா’ என்றால் கட்டிவரும் ஆற்றல்மிக்க மறவர் களை, களப்பணியாளர்களைக் கொண்ட நகரமாக தோழர்களாகக் காஞ்சிபுரம் தொடர்ந்து முதன்மையான மாவட்டமாக இருக்கிறது என்றால், அது மிகை இல்லை.

இதில் காஞ்சி மாவட்டச் செயலாளர் சி. நடராசனின் பங்கும் பாராட்டுக்குரியது.

காஞ்சிபுரத்தில் அய்யா வே. ஆனைமுத்து நிகழ்ச்சி என்றால் அனைத்துக் கட்சியிலும் இருக்கும் தோழர்கள், வணிகப் பெருமக்கள் என்று பலதரப்பட்டவர்கள் கலந்து கொள் கிறார்கள் என்றால் தந்தை பெரியாருக்குப் பிறகு அய்யா வே. ஆனைமுத்து பெரியார் விட்டுச் சென்ற பெரும் பணியை - பெரும் சுமையை தூக்கக் கூடியவர் என்பதை மனதார கூறிப் பாராட்டுவார்கள்.

எல்லா இயக்கத்திலும் இருக்கும் முரண் பாடு போல் காஞ்சி மா.பெ.பொ.க.விலும் சில முரண்பாடுகள் அவ்வப்போது தலைக் காட்டும் என்றால் அது மா.பெ.பொ. கட்சியை மேலும் செழுமைபடுத்தி முன்னெ டுத்துச் செல்வதற்கும் வேகமான செயல் பாட்டிற்கும் உந்துசக்தி என்பது தோழர்கள் நன்கு உணர்ந்து இருப்பதால் முரண்பாடுகள் கதிரவன் கண்ட பனி போல் கரைந்து போவதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.

மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்ற மகத் தான கோட்பாட்டில் மா.பெ.பொ.க. பெரியார் வழியில் மார்க்சியத்தை இந்திய மண்ணில் விதைத்து இருக்கிறது. இது தொடரும்; செழிக்கும்; அடுத்தடுத்த தலை முறைகள் காக்கப் பயன்படும் என்பதை நாங்கள் உணர்ந்து இருக்கிறோம்.

இதற்காகத் தொடர்ந்து உழைப்போம். மார்க்சியம் மலரட்டும்; பொதுவுடைமைச் சமுதாயம் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடுவோம்.

- மு.ஜெயப்பிரகாஷ், காஞ்சி நகரச் செயலாளர்