அன்பார்ந்த மா.பெ.பொ.க. தோழர்களே!

சால வணக்கம்.

என் 91ஆம் பிறந்த நாளை ஒட்டி, நான் எழுதிய கட்டுரையில், “எந்த சொந்த நிகழ்ச்சிக்கும் நம் கட்சி நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்க வேண்டாம்” எனக் கனிவுடன் கேட்டுக் கொண்டேன்.

இடையில் 2014இல் நான் ஒப்புதல் அளித்துவிட்ட - 27-8-15 நமங்குணம் சீனிவாசன் இல்லத் திருமணம், 9-9-2015 நக்கம்பாடி அரங்க. இளவரசன் இல்லத் திருமணங்களில் பங்கேற்றேன்.

22-11-2015 அன்று திருச்சி கோ. முத்துகிருஷ்ணன் பெயரன் திருமணத்தில் நான் பங்கேற்பேன்.

23-11-2015க்குப் பிறகு, என்னைத் திருமணம் போன்ற சொந்த வீட்டு நிகழ்ச்சிகளுக்கும், நம் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அழைக்க வேண்டாம் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இனி என் முன்னுள்ள ஒரே பணி, தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதி முடிப்பது. அப்பணியினை 2017 செப்டம்பருக்குள் முழு மையாக நிறைவேற்றுவேன் என அறிவித்துக் கொள்ளு கிறேன்.

நான் இந்த ஒரு பணியில் முடங்கிவிடுவது மிகவும் வேண்டற்பாலது.

நம் தோழர்கள் அனைவரும் - தமிழகம் எதிர் கொண்டுள்ள தாழ்ந்த நிலையை எண்ணி மிகவும் கவலைப்பட வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். அதனை மாற்றிட நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் மனந்திறந்து கேட்டுக் கொள்கிறேன்.

1.மாதந்தோறும் ஒரு நாள், ஏதாவது ஒரு மாவட்டத்தில், முதன்மையான நம் தோழர்கள் கூடிப் பேசுங்கள்.

2.  தமிழகம் குடிக்க, குளிக்க, வேளாண்மை செய்யத் தண்ணீர் இன்றித் தத்தளிக்கிறது. இதற்குத் தமிழகத்தை 48 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளே பெரிய காரணம். மக்களுந்தாம்!

3.“தமிழால் ஏய்த்த தமிழர்களாகத்” தமிழக ஆளுங்கட்சியினர் விளங்கினர். எனவே, வீட்டில், படிப்பில், ஆட்சியில், வழிபாட்டில் எதிலும் - எங்கும் தமிழ் இல்லை. இதற்குக் கல்வியாளர்களும், ஆளும் அதிகார வகுப்பினரும், ஆளுங்கட்சியினரும், மக்களும், மாணவர் உலகும் பெருங்காரணம்.

4.வேலையில்லாத் திண்டாட்டமும் அளவற்ற மதுக் குடியும் இணைந்து - திருட்டு, கொலை, கொள்ளை, மகளிர் கற்பழிப்பு, கைநிறையக் கைக்கூலி பெறும் அரசியல் தலைவர்கள், ஆளும் அதிகார வகுப்பினர், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச் சர்கள் என்கிற நாலாந்தர மக்கள் நிறைந்த நாடா கத் தமிழகமும், இந்தியாவும் உருவாகிவிட்டன.

இவை பற்றி நாம் கவலைகொள்ள வேண்டும்; பொறுப்புடன் கூடிப்பேச வேண்டும். வாய்ப்புள்ள இடங்களில் இவற்றை முன்வைத்து ஆர்ப்பாட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் இவற்றை நடத்திட நம் நேரம், நம் பணம், நம் உழைப்பு இவற்றை ஈந்திட வேண்டும்.

நம் மாத இதழை நாம் வளர்த்தெடுப்பதற்கும், நம் கட்சியை வளர்த்தெடுப்பதற்கும் இவற்றையெல்லாம் நம் தோழர்கள் மனமுவந்து செய்வது ஒன்றே வழி!

ஒன்றே செய்வோம்! நன்றே செய்வோம்! இன்றே செய்வோம்! இன்னே முனைவோம்.

இதன் தொடக்கமாக, 17-10-2015 சனி அன்று, அம்பத்தூரில் கட்சி அலுவலகத்தில் கூடிப்பேசிட வாருங்கள்!