anitha neet 350தாய் இல்லாப் பெண்ணும், வேலி இல்லாப் பயிரும் விளங்குவது அரிது எனக் கூறுவர். செல்வி அனிதாவின் தாய் அருகில் இருந்திருந்தால் அனிதாவின் உயிருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இராமநாதபுரத்திற்கு அடுத்து வளமற்ற மாவட்டம் அரியலூர். இந்த அரிய லூரில் செந்துறை வட்டத்தில் உள்ள குழுமூர் என்ற சிற்றூரில் பிறந்து வளர்ந்த செல்வி அனிதா இந்துமதச் சமுதாயச் சேற்றில் மலர்ந்த செந்தாமரை!

17ஆம் வயதிலேயே “புகழெனின் உயிரும் கொடுக்குவர்” என்பதற்காகவா நீ உயிரை மாய்த்தாய்! அல்லது உன் உயிரைக் கொடுத்தாவது இனி வருங் காலங்களில் இந்த ‘நீட்’ தேர்வும், அதற்குக் காரண மானவர்களும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு இந்தத் தமிழ் மக்கள் பாடுபடுவார்கள் என எண்ணி உன் உயிரை மாய்த்தாயோ?

இந்தப் படிப்பு இல்லை என்றால், வேறொரு படிப்பு. இந்த நாட்டில் இல்லை என்றால் இங்கிலாந்தில், அமெரிக்காவில் என்று செல்லும் சமுதாய, அரசியல், பொருளாதார வாய்ப்பும், வசதியும் பெற்ற வீட்டில் பிறக்கவில்லையே என்ற ஏக்கத்தில் உயிரை மாய்த்துக் கொண்டாயா?

கல்வி மாநில அதிகாரத்தில் இருந்ததை இந்திரா காந்தி என்ற ‘சர்வாதிகாரி’ பறித்து 42 ஆண்டுகள் ஆகியும், தமிழர் எவரும் எதிர்த்து மூச்சுவிடவில்லை - போராடித் திரும்பப் பெறவில்லை. அனிதா நீ உயிரையே மாய்த்துக் கொண்டபின் ஊளைச் சத்தம் கேட்கிறது! எதற்காக? ஓட்டுக்காக! ஓட்டுக்காக மட்டுமே! ஓட்டுப் பெற்றுப் பதவி பெற்றுக் கோடி, கோடியாய் பணத்தைக் குவிக்கவே இந்த ஊளைச்சத்தம்! அனிதா இந்தச் சத்தம் உனக்காக அல்ல! உன் இறுதி ஊர்வலத்தில், உன் உடல் மீதில் பூசப்பட்ட கட்சிச் சாயம் நீயே ஏற்றுக் கொண்டதுதானா?

இந்த ‘நீட்’ தேர்வுக்கு முன்பு மருத்துவம் படித்த மருத்துவர்கள் எல்லாம் மண்ணாங்கட்டிகளா? அவர் கள் நல்ல மருத்துவர்கள் இல்லையா? இந்த ‘நீட்’ தேர்வு மட்டுமே தகுதி என்றால் +2 வரை படித்த படிப்புக்கு என்ன மதிப்பு? ஏன் படிக்க வேண்டும்? சரஸ்வதி கடாட்சத்தாலோ அல்லது சில இலட்சங்களை அள்ளி வீசினாலோ இந்த +2 தேர்வில் வெற்றி பெறத் தகுதி, திறமை இல்லாதவர்களையா இந்தப் பாரத மாதா பெற்றிருக்கிறாள்?

இந்து மதத்தில் உள்ள அடுக்குமுறை சாதி போல

படிப்பிலும் பல அடுக்குமுறை ஏன்?

பலவிதப் பாடத் திட்டங்கள் ஏன்?

இவைகள் ஒரே நாளில் ஒழிக்கப்பட வேண்டாமா?

மொழிப்பாடம், மாநில வரலாற்றுப் பாடம் தவிர பிற பாடங்களான கணக்கு, அறிவியல் பாடங்கள் உலகுக்கே ஒன்றுதானே! பிறகு ஏன் அப்படி உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்டத்தை நம் நாடு முழுவதும் வைக்கவில்லை? அப்படி இருந்திருந்தால் அதிலும் நீ முதல் மாணவியாக வந்திருப்பாயே!

அய்ரோப்பிய நாடுகளில், அமெரிக்காவில் மிகப் பெரும்பாலான பள்ளிகள் அரசுப் பள்ளிகளே! ஒரே தரம், வசதி கொண்ட பள்ளிகளே! தாய் மொழியிலேயே கட்டாயக் கல்வியாம் - பிள்ளை களைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களுக்குத் தண்டனையாம்-பள்ளிக்கல்வி முழுவதும் அனை வர்க்கும் இலவசமாம்! இந்த நாடுகளில் தானே நம் தாத்தா காந்தியும், மாமா நேருவும், இந்திரா காந்தியும், இராஜீவ்-சோனியாவும், மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும், சுப்பிரமணிய சாமியும் படித்தார்கள். இவர்களுக்கு அணுவளவும் உண்மை யான மானிடப் பற்றும், நாட்டுப் பற்றும் இருந் திருந்தால் நம் ‘புண்ணிய’ பாரத பூமியிலும் மேலை நாட்டுப் பள்ளிக் கல்வி முறையை கடந்த 70 ஆண்டுகளாக ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? அவ்வளவு வஞ்சகம்! பிரித்தாளும் கொள்கை!

அவர்கள்தான் வஞ்சகர்கள் என்றால், நம் சாதிச் சங்கங்கள், நம்மை வைத்து வியாபாரம் செய்யும் அரசியல் கட்சிகள்-ஓட்டு வேட்டைக்காரர்கள் அனை வரும்; மாநில அரசிடமிருந்து கல்வி பறிபோன கடந்த 42 ஆண்டுகளாக என்ன செய்து சாதித்தார்கள்?

ஒன்றல்ல, ஓராயிரம் அனிதாக்கள் உன்னைப் போல அல்லது உன்னையும்விட 1199/1200 மதிப்பெண் பெற்றாலும்-அதுவும் தகுதி இல்லை-1200/1200 பெற்றால்தான் தகுதி என்று தில்லி ஏகாதிபத்தியம் கூறி நம்மை அடிமையாக்கி ஆளும்!

இந்தத் தகுதி, ‘நீட்’ தகுதி கூறும் சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சர்களுக் கும், ஏன் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற அ‘நீதி’ அரசர் களுக்கும் ‘நீட்’ தேர்வு அவசியம் என்பதை நாம் வலியுறுத்தினால் ‘நீட்’ என்ற பேச்சே நாட்டில் இருக்காது! இந்த நாட்டில் சட்டம் செய்கிறவர்கள் கைநாட்டாகக்கூட இருக்கலாம்! அ‘நீதி’யரசர்கள் ஏதோ சட்டப் படிப்புச் சான்று வைத்திருந்தால் போதும். ‘நீட்’டும் வேண்டாம் - ‘குட்டை’யும் வேண்டாம்.

ஒரே நாடு-ஒரே சட்டம்-ஒரே குடியுரிமை-என்று கூறும் அறிவாளிக்கு-அரசியல்வாதிகளுக்கு-அ‘நீதி’ பதிகளுக்கு-ஒரே தரமான கல்வியை-பாடத் திட்டத்தை நாடு முழுவதும் அமுல்படுத்தும் போது மட்டுமே ஒரே ‘நீட்’ தேர்வை நீட்டலாம் என்ற குறைந்தபட்ச அறிவு கூட ஏன் இல்லை?

இந்திய மக்களாட்சியில் 100க்கு 85 விழுக் காடாக உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பு மக்கள், மதச்சிறுபான்மையினர் ஆகிய நாம் ஒன்றாக இணைந்து, எல்லா அதிகாரங்களும் குவிந்து கிடக்கும் தில்லி ஆட்சியை கைப்பற்றி னால் மட்டுமே நமக்கு உள்ள அனைத்துப் பிரச்ச னைகளையும் நீக்கமுடியும் என்று கூறிய மேதை அம்பேத்கரின் அரசியல் தீர்வை நாம் வென்றாக வேண்டும். இந்தத் தீர்வை நோக்கி நடக்காத எந்தச் சாதிச் சங்கமும் - அரசியல் கட்சிகளும் நம் துரோகிகளே! எதிரிகளைவிட இந்தத் துரோகிகள் யாரேனும் இருந்தால் அவர்களை முதலில் ஒழிக்க வேண்டும்! அப்போதுதான் தந்தை பெரியாரும், மாமேதை அம்பேத்கரும் கண்ட கனவுகள் நனவாகும்.

தகுதி - திறமை - படிப்பு - பட்டம் - பதவி எல்லாம் ஒரு சிறு கும்பலுக்கே என்ற சூதுக்கோட்டையை உடைத்துத் தூள் தூளாக்கும் அனிதாக்களின் அணி வகுப்பு நடக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. இனி அனிதாக்கள் சாகமாட்டார்கள் - சாகடிப்பார்கள்.

“கல்லாரைக் காணுங்கால்

கல்வி நல்காக்

கசடர்க்குத் தூக்குமரம்

அங்கே உண்டாம்”

- கனக சுப்புரத்தினம்