மனித சமூகத்தின் அரசாங்கம், மிகவும் குறிப்பிடத்தக்க சில மாற்றங்களை அடைந்துள்ளது. கொடுங்கோல் மன்னர்களின் எதேச்சதிகாரத்தை, மனித சமூகத்தின் அரசாங்கம் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. நீண்ட நெடிய ரத்தப் போராட்டத்திற்குப் பிறகு இந்த அமைப்பு தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற புதிய அரசமைப்பு அமர்ந்தது. அரசாங்கக் கட்டமைப்பில் இதுதான் முடிந்த முடிவு என்றும் கருதப்பட்டது. ஒவ்வொரு மனிதனுக்கும், சுதந்திரத்தையும், சொத்துரிமையையும், நல்வாழ்வையும் அளிக்கும் புத்துலகத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தியது. இத்தகைய நம்பிக்கைகளுக்குப் போதிய ஆதாரங்களும் இருந்தன.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களின் குரலை எதிரொலிக்க சட்டமன்றம் இருக்கிறது. அந்தச் சட்டமன்றத்திற்குக் கீழ், அதன் ஆணைக்கு உட்பட்டதாக நிர்வாகத் துறை இருக்கிறது. சட்டமன்றத்திற்கும், நிர்வாகத் துறைக்கும் மேல் அவை இரண்டையும் கண்காணிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் அவற்றை வைத்திருக்கவும் நீதித்துறை இருக்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்திற்குரிய எல்லா அம்சங்களையும் பெற்றுள்ளது. அதாவது, மக்களால் மக்களைக் கொண்டு மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்ற தன்மையை அது கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாடாளுமன்ற ஜனநாயகம் உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒரு நூற்றாண்டு முடிவதற்குள்ளாகவே அதனை எதிர்த்துக் குரல் எழுப்பப்பட்டு வருவது, ஓரளவு வியப்புக்குரிய செய்தியாகவே இருக்கிறது.

இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து வருகின்றனர். மேலும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக அதிருப்தியடையாத நாடுகள் வெகு குறைவாகவே உள்ளன என்றுகூடச் சொல்லலாம். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான இத்தகைய அதிருப்திக்கும், மனக்குறைவுக்கும் காரணம் என்ன? இது, ஆய்வுக்குரிய கேள்வியாகும். இப்பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டிய அவசர அவசியம், வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் அதிகம் உணரப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் நடந்து வருகின்றன. "நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். வெளியே தெரிவதைப் போல, அது சிறப்பான ஒன்றல்ல'' என்று இந்தியர்களிடம் சொல்வதற்கு, மிகுந்த துணிச்சலுடன் ஒருவர் பெரிதும் தேவைப்படுகிறார்.

நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியுற்றது ஏன்? சர்வாதிகாரிகள் உள்ள நாட்டில் அது தோல்வி அடைந்ததற்கு, அது மெதுவாக இயங்கியதே காரணம். எத்தகைய விரைவு நடவடிக்கையையும் அது தாமதப்படுத்துகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில், நிர்வாகத் துறைக்கு சட்டமன்றம் முட்டுக்கட்டைப் போடக்கூடும். நிர்வாகத் துறையின் பாதையில் சட்டமன்றம் குறுக்கிடாமல் இருந்தாலும், நீதித்துறை குறுக்கிட்டு, அதன் சட்டங்களைச் செல்லாதவை என்று அறிவிக்கக் கூடும்! அதே நேரம், சர்வாதிகாரம் சுதந்திரமாகச் செயல்படவும், நாடாளுமன்ற ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இதனால்தான் சர்வாதிகாகள் ஆளும் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் மதிப்பிழந்த ஒரு கோட்பாடாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சர்வாதிகாரிகள் மட்டுமே எதிர்த்தால், அது பற்றி நாம் கவலைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரான அவர்களது சாட்சியம் உண்மையில் ஒரு சாட்சியமே அல்ல. உண்மையில், நாடாளுமன்ற ஜனநாயகம் சர்வாதிகாரத்திற்கு ஒரு வலிமையான தடை அரணாக இருக்கும் என்பதால், அது வரவேற்கப்படவே செய்யும். எனினும், சர்வாதிகாரத்தை எதிர்க்கும் மக்கள் வாழும் நாடுகளில்கூட, கெட்ட வாய்ப்பாக நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக மிகுந்த அதிருப்தியே நிலவுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து பெரிதும் வருத்தத்திற்குரிய செய்தி இது.

ஒன்றை மட்டும் பொதுவான முறையில் கூறலாம். சுதந்திரத்திற்கும், சொத்துரிமைக்கும், நல்வாழ்வுக்குமான உரிமையை பெருந்திரளான மக்களுக்கு உறுதி செய்ய அது தவறிவிட்டதே இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இது உண்மை எனில், இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும். இந்தத் தோல்விக்கு தவறான சித்தாந்தமோ அல்லது தவறான அமைப்பு முறையோ அல்லது இவை இரண்டுமே காரணமாக இருக்கும் என்பதுதான் என்னுடைய கருத்து. நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைத்துச் சீர்குலைத்துவிட்ட தவறான சித்தாந்தத்திற்கு, இங்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூறினால் போதும் என்று நினைக்கிறேன்.

தொடரும்

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து
Pin It