மக்கள் தங்களைப் பாதிக்கும் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல் வேறு பிரச்சினைகளைப் பற்றிப் பேச வைப்பதன் மூலம், தாங்கள் மக்கள் விரோதத் தன்மையையும், திறமை இன்மையையும் மறைக்க ஆதிக்கவாதிகள் முயல்வது ஒன்றும் புதிது அல்ல. சமூக இயக்கத்தைச் சரியாக வழி நடத்தும் திறமை இல்லாத இவர்கள் திசை திருப்பும் கலையில் மிகுந்த திறமை உடையவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் இந்தியப் பிரதமர் மோடியும், அவரது கூட்டாளி களும் ஒப்பு உவமை இல்லாதவர்களாகத் திகழ்கிறார்கள்.

கருப்புப் பணத்தை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு, ரூ.500, ரூ1,000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார்கள். ஆனால் கருப்புப் பணம் ஒழியவே இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக் கானேர் மாண்டனர். வரி விதிப்பைச் சீரமைப்பதாகச் சொல்லிக் கொண்டு, பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) விதித்தார்கள். இதில் ஆயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்து போயின. இலக்கக்கணக்கானோர் வேலை இழந்தனர்.

வங்கிகளில் கடன் வாங்கிய பெருமுதலாளிகளை வெளிநாடுகளுக் குத் தப்பிச் செல்ல விடுதல், போர் விமான ஊழல், கடனை வசூல் செய்யாத வங்கி அதிகாரிக்கு உயர் பதவிக்கு ஏற்பாடு செய்தல் என்று மோடி அரசின் ஒவ்வொரு அசைவும் காவிகளின் மக்கள் விரோதத் தன்மையையும், திறமை இன்மையையும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த மக்கள் விரோதத் தன்மையும், திறமை இன்மையும் மக்களிடையே விவாதப் பொருளாக ஆகி விடக் கூடாது என்பதற்காக மோடியும், அவரது கூட்டாளிகளும் பல்வேறு விதமான விவாதங்களை ஊடகங்களில் அரங்கேற்று கின்றனர்; நிகழ்வுகளை நிகழ்த்துகின்றனர். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று தான் உலகத்திலேயே உயரமான சிலை.

வரும் 31.10.2018 அன்று பிரதமர் மோடி குஜராத்தில் ‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று புகழப்படும் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயரமான உருவச் சிலையைத் திறந்து வைக்கப் போகிறார். (வாசகர்கள் இக்கட்டுரையைப் படிக்கும் போது இச்சிலை திறக்கப்பட்டு இருக்கும்). இச்சிலை உலகத்திலேயே உயரமான சிலையாக இருக்கப் போகிறது. இதன் தொடர்பான விழாவை 20.10.2018 அன்று குஜராத் முதல்வர் விஜய் ருபானி தொடக்கி வைத்தார்.

காவிகள் ஏன் பட்டேலை அதிக மாகக் கொண்டாடு கிறார்கள்? அவர் தனித் தனியாகச் சிதறிக் கிடந்த 562 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார். அது மட்டும் அல்ல. இந்தியாவுடன் இணையமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்த ஐதராபாத் நிஜாமை இராணு வத்தை அனுப்பி அடிபணியச் செய்தார் என்பதுதான் இதில் உள்ள சிறப்பு அம்சம்.

ஆனால் இந்தச் சிறப்பு அம்சத்தில் திட்டமிட்டு மக்களிடம் இருந்து மறைக் கப்பட்ட செய்திகள் உள்ளன. ஆனால் இவற்றை வெளிக் கொணர, தர்க்க ரீதியான எளிய வினாக்களே போது மானவை. ஐதராபாத் சமஸ்தானத் திற்கு 12.9.1948 அன்று இந்தியா இராணுவத்தை அனுப்பியது. அடுத்த ஐந்து நாட்களில் அதாவது 18.9.1948 அன்று நிஜாம் சரண் அடைந்து விட்டார். ஆனால் இந்திய இராணுவம் 21.10.1951 வரை போராடிக் கொண்டு இருந்தது. இது யாருடன்? ஏன்?

இதற்கு விடை கூற வரலாற்றுப் பாடத்தை முக்கியப் பாடமாக எடுத்துப் படித்த மாணவ னாலும் முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு அங்கு நடந்த நிகழ்வுகள் இருட்டடிப்புச் செய்யப்பட்டு உள்ளன. விவசாயிகள் என்போர் இந்நாட்டின் புறக்கணிக்கப்பட்ட குடிமக்களாகவே எப்பொழுதும் இருந்து வருகின்றனர். ஐதராபாத் சமஸ்தானமும் இதற்கு விதி விலக்கு அல்ல. அந்த சமஸ்தானத்திற்கு உட்பட்ட தெலுங்கானாப் பகுதியில் இருந்த விவசாயிகள் இதற்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தினர். அவர்களை எல்லாம் நிஜாமின் படைகளும், பண்ணையார்களின் அடியாட்களும் கடுமையான முறையில் ஒடுக்கினர். இந்த அடக்கு முறையில் தொட்டி கொமரய்யா என்ற விவசாயி 6.7.1946 அன்று கொல்லப்பட்டுவிட்டார். இது தெலங்கானா விவசாயிகள் அனைவரையும் கொதித்து எழச் செய்து விட்டது. அவர்கள் ஒன்று திரண்டு, காவல் நிலையங்களில் இருந்தும், நிஜாமின் படைத் தளங்களில் இருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றி, நிஜாமுக்கும் பண்ணையார்களுக்கும் எதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர். இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் பெண்களும் ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு ஆண் களுக்கு நிகராகப் போரில் ஈடுபட்டனர். இதனால் மிரண்டு போன பண்ணையார்கள் கிராமங்களை விட்டு ஓடி ஐதராபாத்தில் தஞ்சம் புகுந்தனர். நிஜாமும் ஐதராபாத் நகரை விட்டு வெளியே போவதைத் தவிர்த்துக் கொண்டார்.

பண்ணையார்கள் இல்லாத கிராமங்களில், விவசாயிகள் ஒன்று சேர்ந்து, குழு (கம்யூன்) அமைத்து, நிலங்களைப் பகிர்ந்து கொண்டு விவசாயம் செய்தனர்; விளைச்சலைத் தங்களுக்குள் முறையாகப் பகிர்ந்து கொண்டனர். சுருக்கமாகச் சொன்னால் தெலுங்கானா கிராமங்களில் சமதர்ம (சேஷலிச) அமைப்பு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.

இந்நிலையில் தான், 15.8.1947 அன்று ஆங்கிலே யர்கள் இந்தியர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்கள். அவ்வாறு வெளி யேறும் போது 562 சுதேசி சமஸ்தானங்களையும் தனித் தனியாகவே விட்டு விட்டுச் சென்றனர். புதிய ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் படேல் அனைத்துச் சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணையுமாறு அழைப்பு விடுத்தார். திருவாங்கூர், ஐதராபாத் சமஸ்தானங்கள் இந்த அழைப்பை ஏற்க மறுத்தன. அவற்றில் திருவாங்கூர் சமஸ்தானம் பேச்சு வார்த்தை மூலமாக இணைய ஒப்புக் கொண்டது. ஆனால் ஐதராபாத் சமஸ்தானம் ஒப்புக் கொள்ளாமல் முரண்டு பிடித்தது. முரண்டு பிடித்த நிஜாமைப் பணிய வைக்க வல்வபாய் படேல் இராணுவத்தை அனுப்பினார். இராணுவம் வந்த ஐந்தே நாட்களில் நிஜாம் சரண் அடைந்துவிட்டார்.

சமதர்ம அமைப்பில் வாழ்ந்து கொண்டு இருந்த தெலுங்கானா விவசாயிகள் இந்திய அரசின் கீழ் இருப்பதை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஆனால் இந்திய அரசோ நிலங்களை மீண்டும் பண்ணையார் களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விவசாயிகள் பண்ணையார்களை அண்டியே வாழ வேண்டும் என்றும் கூறிவிட்டது. இதை ஏற்றுக் கொள்ள விவசாயிகள் மறுத்து விட்டனர். இதைத் தொடர்ந்து விவசாயிகள் மீது இந்திய அரசு இராணுவத்தை ஏவி விட்டது. மிகக் குறுகிய காலத்தில் நிஜாமின் இராணுவத்தையும், பண்ணையார் களின் அடியாட்களையும் வெற்றி கண்ட விவசாயிகளால், வலிமை மிக்க இந்திய இராணுவத்தை எதிர் கொள்ள முடியவில்லை. ஆனாலும் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முறையான போர்ப் பயிற்சி இல்லாத விவசாயிகள் வலிமை மிக்க இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போரிட்டனர். அதன் பின் 21.10.1951 அன்று தங்கள் போராட்டத்தைக் கைவிடுவது என முடிவெடுத்தனர். வீரம் செறிந்த இப்போராட்டம் வரலாற்று மாணவர்கள் கூட அறிந்து கொள்ள முடியாத வகையில் இருட்டடிப்புச் செய்து வைக்கப்பட்டு உள்ளது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

உலகத்திலேயே உயரமான சிலை வைக்கப்படும் இவ்வேளையில், வல்லபாய் பட்டேலின் சிறப்புக்குக் காரணமாகச் சொல்லப்படும் ஐதராபாத் இணைப்பு நிகழ்வில் மறைக்கப்பட்டு உள்ள தெலுங்கானா விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தை நினைவு கொள்வேபம்.