seetharam yechuri

தில்லியில் நாடாளுமன்ற வீதியில் ஜந்தர் மந்தருக்கு அருகில் 16-9-2016 அன்று தலித் பேரணி ஒன்று நடந்தது. அண்மைக் காலத்தில் அவ்விடத்தில் நடந்த மற்ற தலித் பேரணிகளிலிருந்து இப்பேரணி வேறுபட்ட தன்மையினதாக இருந்தது. எவ்வாறெனில் இந்த தலித் பேரணியில் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களும் உரையாற்றினர். மேடையில் பிரகாசு அம்பேத்கர் இராதிகாவெமுலா, ஜிக்னேஷ்மெவானி ஆகிய தலித் தலைவர்களுடன் சீதாராம்யெச்சூரி, சுதாகர்ராவ், டி.இராசா ஆகிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களும் அமர்ந்திருந்தனர். அந்த தலித் பேரணி யில் “ஜெய்பீம்” முழக்கம் எழுப்பப்பட்டது. அத்துடன் இடதுசாரி கூட்டங்களில் மட்டும் எழுப்பப்படுகின்ற “செவ் வணக்கம்” (Lal Salaam) முழக்கமும் ஒலித்தது.

இவ்வாறு ‘ஜெய்பீம்’ முழக்கமும் “செவ்வணக்கம்” முழக்கமும் கூட்டாக ஒலித்தமை, ஒரு அரசியல் திட்ட மாக உருவாக்கப்பட்டால், இடதுசாரி அரசியலும் தலித் அரசியலிலும் அது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற மாக அமையும். அண்மையில் குசராத்தில் தலித்துகள் நடத்திய போராட்டம், ஜெய்பீம்-செவ்வணக்கம் முழக் கங்கள் மனதார இணைந்து செயல்படும்போது வீறார்ந்த விளைவுகளை உண்டாக்கும் என்பதற்கு ஒரு படிப் பினையாகத் திகழ்கிறது.

குசராத் படிப்பினை

குசராத்திரல் உனா நகரில் பசுக்காவலர்கள் எனும் இந்துத்துவக் கொடியவர்களால், தலித் இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதற்கு எதிர்வினையாக எழுந்த மக்கள் திரள் போராட்டம், குறிப்பிடத்தக்க அளவில் இரண்டு வெற்றிகளை ஈட்டியுள்ளது. இப்பேராட்டம் தந்த அழுத்தத்தின் காரணமாக, குசராத் அரசு, அகமதாபாத் மாவட்டத்தில், சரோடா எனும் சிற்றூரில் வாழும் நிலமற்ற 115 தலித் குடும்பங்களுக்கு 220 பிகாஸ் (bighas) அரசு நிலத்தை வழங்கி உள்ளது. இது முதல் வெற்றியாகும்.

அகமதாபாத் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர் களாக 6,000 தலித்துகள் இருக்கின்றனர். ஒப்பந்தப் பணியாளர்களை நிலையான பணியாளர்களாக ஆக்க வேண்டும்; வருங்கால வைப்பு நிதித்திட்டத்தின் கீழ் (Provident Fund) சேர்க்கவேண்டும், குறைந்தபட்ச ஊதியம், மருத்துப் பயன்கள், துப்புரவுப் பணிக்கான பாதுகாப்புச் சாதனங்கள், பணியின் போது இறக்க நேரிடுபவரின் குடும்பத்தினருக்கு வேலை ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அகமதாபாத் துப்புரவுப் பணியாளர்கள் 36 நாள்கள் பேரணி, வேலை நிறுத்தம் செய்தனர். அகமதாபாத் மாநகராட்சி இக்கோரிக்கை களை நிறைவேற்றுவதாக அறிவித்தது. இது இரண்டா வது வெற்றியாகும்.

பல்வேறு அமைப்புகளும் சங்கங்களும் ஒன்று திரண்டதால், இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தலித்து களின் உணர்வும் சினமும் நடைமுறை சார்ந்த அரசியல் நடவடிக்கையாக மாற்றப்பட்டது. குசராத் மாநில தலித் உரிமைக்கூட்டமைப்பு, உனா தலித் தாக்குதல் எதிர்ப்பு இயக்கம், மற்றும் குசராத் தொழிற் சங்கங்களின் பேரவை, குசராத் உழவர் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள், ‘ஜன் சங்கர்ஷ் மன்ச்’ போன்ற மனிதஉரிமை அமைப்புகள் ஆகியவை இப்பேராட்டங் களில் ஒன்றிணைந்து செயல்பட்டன.

தலித்துகளின் நலன்களுக்காகப் பல அமைப்புகள் ஒன்று திரண்டிருந்த போதிலும், அவர்கள் முன்வைத் கோரிக்கைகள் தலித் எனும் சாதி அடையாளம் சார்ந்த தாக அல்லாமல், பொருளாதார நலன்களை அடிப்படை யாகக் கொண்டதாக இருந்தன. சொந்தமாக நிலம், நிலையான வேலைவாய்ப்பு வேண்டும் என்னும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தலித்துகளின் உணர்ச்சி மிகுந்த போராட்டங்களில் பொதுவாக, தீண்டாமை எதிர்ப்பு-மேல்சாதி ஒடுக்குமுறை எதிர்ப்பு என்கிற சாதி அடையாளங்களே முன்னிறுத்தப்படும்.

இதற்கு எதிர்மாறான நிலை இடதுசாரி அரசியல் கட்சிகளிடம் காணப்படுகிறது. பொதுவுடைமைக் கட்சி கள் தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமை கள் பற்றியோ, பிற வகையிலான சாதியச் சிக்கல்கள் பற்றியோ ஆழ்ந்த அக்கறை காட்டுவதில்லை. உழைக் கும் மக்கள் சுரண்டப்படுதற்குக் காரணமாக இருக் கின்ற சாதியத்தை எதிர்க்காமல், வெறும் வர்க்கச் சுரண்டல் என்ற அளவில் சுருக்கிக் கொள்கின்றன. சாதியத்தை எதிர்த்தால், உழைக்கும் வர்க்கத்தினர் சாதி அடிப்படையில் பிரித்து நிற்பார்களோ என்கிற அச்சத்தின் காரணமாகப் பொதுவுடைமைக் கட்சிகள் சாதியத்தைத் தாக்கத் தயங்குகின்றன.

ஆனால் இந்தியாவில் உழைக்கும் வர்க்கங்கள் ஏற்கெனவே பல்வேறு அடையாள அச்சுகளைச் சார்ந் திருப்பதால், பிளவுபட்டுள்ளன. இதில் சாதி முதன்மை யான பாத்திரம் வகிக்கின்றது. இடதுசாரிகள் இந்திய அரசியல் தளத்தில் சிறுபான்மையினராகவும் ஓரங்கப் பட்டப்பட்டவர்களாகவும் இருப்பதற்கு, அவர்கள் சாதி அடிப்படையிலான பிரிவினைகளை எதிர்க்கத் தவறியமை முதன்மையானதொரு காரணியாகும். இடதுசாரித் தலைமை மேல்சாதியினரின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதால்தான், சாதியின் அடிப்படையிலான சுரண் டலைக் காண மறுக்கும் குருட்டுப் போக்கு அவர்களிடம் இருப்பதாக அம்பேத்கரியவாதிகள் குற்றஞ்சாட்டு கின்றனர். உண்மையில் இடதுசாரிக் கட்சிகளின் அரசியல் உயர்மட்டக் குழுவிலோ அல்லது மத்தியக் குழுவிலோ தலித்துகள் இருப்பார்களேயானால், அவர்கள் மிகச் சிலராகவே இருப்பார்கள்.

அதே சமயம் இடதுசாரிகள் அம்பேத்கரியவாதி களின் சாதி-அடையாள அரசியலைக் கடுமையாக விமர்சனம் செய்வதற்கும் சரியான காரணங்கள் இருக்கின்றன. அனுராதா காந்தி “சாதி குறித்தவினா” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில், இது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. “ஆளும்வர்க்கம் திட்ட மிட்டு, தலித்துகளின் ஒற்றுமைக்காக ஓங்கிக் குரல் கொடுப்பவர்களில் சிலரை மேட்டுக்குடியினராக வளர்க் கிறது; இவ்வாறு மேட்டுக்குடியினராகிய தலித்துகள் சாதி-அடையாளத்தின் பெயரால் தலித்துகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இதன்மூலம் தலித்துகள், சுரண்டப்படும் மற்ற பிரிவினருடேனா, சுரண்டப்படுவோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி களுடனோ சேரவிடாமல் தடுக்கப்படுகின்றனர்” என்று அனுராதா காந்தி அவருடைய கட்டுரையில் குறிப் பிட்டிருக்கிறார்.

அடையாள அரசியலின் வரம்புகள்

நடைமுறையில் தலித்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்று மையை நீடிக்கச் செய்திட இயலாத நிலை ஏற்பட்டிருப்ப தாகத் திருமதி.அனுராதாகாந்தி வலியுறுத்திக் கூறுகிறார். ஏனெனில் அண்மையில் நடந்த நிகழ்வுகள் வர்க்க முரண்பாட்டை முதன்மைப்படுத்தியிருப்பதை இதற்கான காரணியாகச் சுட்டிக்காட்டுகிறார். நாட்டின் பல பகுதி களில் நிலவுடைமையாளர்களாகவும் ஆதிக்கச் சாதி யினராகவும் இருப்பவர்கள் அணி திரண்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு மேலே உள்ள மேல்சாதியினரை எதிர்ப்பதற்கு மாறாகத் தலித்துகளை எதிர்க்க அணி திரண்டுள்ளனர். இத்தன்மையில் இராஜஸ்தானில் குஜ்ஜர்கள், அரியானாவில் ஜாட் சாதியினர், குசராத்தில் பட்டேல் சாதியினர் தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர். இப் போது மகாராட்டிரத்தில் மராத்தாக்கள் இடஒதுக்கீடு கோரி வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அத்துடன் இவர்கள் அனைவரும் 1989ஆம் ஆண்டின் பட்டியல் சாதியினர் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.

அதனால், தலித்துகளில் ஒரு பிரிவினரிடம், குறிப் பாக குசராத்தில் மக்கள் தொகையில் 7 விழுக்காட்டின ராக உள்ள தலித்துகளிடம் சாதி-அடையாள அரசியல் மூலம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்ல முடி யாது என்கிற சிந்தனை தோன்றியது. இந்த உண் மையை உணர்ந்ததன் விளைவாக அவர்கள் இந்திய அரசியலில் உள்ள கசப்பான மூன்று உண்மை களைத் கண்டறிந்தனர்.

முதலாவது, தற்போதுள்ள தேர்தல் அமைப்பு முறையானது, தலித்வாக்குவங்கித் தரகர்கள் சிலரை உருவாக்கியிருக்கிறது. இத்தரகர்கள் சாதியமைப்பை எதிர்ப்பiத் தவிர்த்துவிட்டு, சிற்சில சலுகைகளைத் தலித்துக்களுக்குப் பெற்றுத் தருகின்றனர். இதில் கொடுமை என்னவெனில், இத்தரகர்கள் பெறுகின்ற செல்வாக்கையும் அதிகாரத்தையும், ஒட்டுமொத்த தலித் சமூகமே பெற்றுவிட்டதாகக் காட்ட முனைகின்றனர். இராமதாசு அத்வாலே, உதித்ராஜ் போன்றவர்கள் இதற்குச் சரியான எடுத்துக்காட்டாக இருக்கின்றனர். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்த வரை, அதிகாரம் முழுவதும் மாயாவதியிடம் மட்டுமே குவிக்கப்பட்டுள்ளதால், அக்கட்சியின் அரசியல் ஆற்றல் குறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய போக்கு இந்திய அரசியல் கட்சிகளிடையே ஒரு தீராத நோயாகத் தொற்றிக் கொண்டுள்ளது.

இரண்டாவது, தலித் அடையாள அரசியலை முன்னெடுப்பததற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலே னும் தலித்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமை தேவைப் படுகிறது. ஆனால் இது கைகூடாதவாறு வர்க்க முரண்பாடுகள் குறுக்கே நிற்கின்றன. தலித்துகள் மீது கொடுமைகள் இழைப்பதாகக் குற்றஞ் சாட்டப் படும் சாதிகளின் பட்டியலைப் பார்த்தாலே-தலித்-பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைக்கு வாய்ப்பில்லை என்பதை உணரமுடியும்.

இறுதியாக, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு களைத் தனியாருக்கு அரசு விற்றுவருவதாலும், தனி யார்மயத்தை ஊக்குவிப்பதே அரசின் கொள்கை என்றாகிவிட்டதாலும் தலித்துகள் இடஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்பைப்ப் பெறுவதற்கான வாயிலும் அடைக் கப்பட்டு வருகிறது. தற்போது இடஒதுக்கீடு கோரி போராடி வரும் ஆதிக்கச் சாதியினர் இந்த உண்மையைக் காண மறுக்கின்றனர். ஆனால் மிக விரைவில் இந்த உண்மையை உணர்வார்கள். இடஒதுக்கீட்டைத் தாண்டி நாம் சிந்தித்துப் பார்ப்போமானால், சாதி-அடையாள அரசியலுக்கு வேறு காரணி எதுவும் இருப்பதாகக் தெரியவில்லை.

எனவே இத்தகைய பின்னணி கொண்ட அரசியல் சூழ்நிலையில், தலித்துகள், தங்களைப் போலவே சமூக, பொருளிய, அரசியல் தளங்களில் ஒடுக்கப்படு வோராக இருக்கின்ற வர்க்கத்தினருடன்-வெறும் சாதி-அடையாள எல்லையைத் தாண்டிக் கூட்டணி சேர வேண்டிய நிலையில் இருக்கின்றனர். ஏனெனில் தங்களை ஒடுக்குகின்ற ஆதிக்கச் சாதியினருக்குத் தக்க பதிலடி தரக்கூடிய அளவில் தலித்துகளின் எண் ணிக்கை இல்லை. தங்களை ஒடுக்கும் ஆதிக்கச் சாதியினரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கியாக மட்டும் இருப்பதைத் தவிர்ப்பதற் காகவேனும் தங்களைப் போல் ஒடுக்கப்படும் மற்ற உழைக்கும் வர்க்கத்தினருடன் கூட்டுச்சேர வேண்டும்.

அண்மையில், பசுப் பாதுகாப்பாளர்கள் என்பவர் களால் முசுலீம்களும் தலித்துகளும் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இது, முசுலீம்-தலித் ஒற்றுமை தேவை என்கிற சிந்தனையைத் தோற்றுவித்தது. ஆனால் முசுலீம்களும் சிறுபான்மையினர் என்ற அடையா ளத்துடன் இருப்பவர்களாவர். முசுலீம்-தலித் கூட்டணி உருவாகாமல் இடையூறாக இருப்பது வர்க்க வேறு பாடு மட்டுமல்ல; ஒருவரையொருவர் நம்பாத சாதிய முரண்பாடுகளும் முதன்மையான காரணிகளாகும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் முசுலீம்-தலித் ஒற்று மைக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வி யிலேயே முடிந்தன.

தலித்துகளின் பணம், பதவி காரணமாக மேட்டுக் குடியினராக இருப்பவர்களும் ஒடுக்கும் சாதியில் உள்ள மேட்டக்குடியினரும் ஒன்றிணைந்து செயல் படுவதும் அல்லது ஆதிக்கச் சாதிகளில் உள்ள பணக் காரர்களும் ஏழைகளும் சாதி அடிப்படையில் ஒன்றி ணைந்து செயல்படுவதும் ஏன் என்ற கேள்விக்கு இப்போதுள்ள தலித் அரசியலால் விடை கூற இயலாது. தலில் அரசியல் இதைக் கடந்து முன்னேற வேண்டு மானால், உடைமையற்றவர்களாக, உழைப்பாளி களாகத் தலித்துகளில் இருப்பவர்களை மட்டும் கருத் தில் கொள்ளாமல், பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் முற்பட்ட சாதிகளிலும் இதேபோன்ற நிலையில் இருப் பவர்களையும் கருத்தில் கொண்டு அவர்களையும் ஒன்றிணைத்து அனைவரின் பொருளாதார மேம் பாட்டுக்காகப் பாடுபட முன்வரவேண்டும். இப்பட்டிய லில் நிலமற்றவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், கடன் சுமையில் உழலும் உழவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோரும் அடங்குவர்.

இதைப்போலவே, சமூக தளத்தில் ஒடுக்கப்பட்ட வர்களாக இருப்பவர்களின் சனநாயக விழுமியங் களை நிறைவேற்றுவதற்குப் பாடுபடாத-முற்போக் கான அரசியல் என்பதற்கு சாதி ஒழிப்புக் கொள் கையை ஓர் முன்நிபந்தனையாக ஏற்காத இடதுசாரி அரசியல் கட்சிகளுக்கும் எதிர்காலம் இல்லை. அரை-நிலப்பிரபுத்துவ, பகுதியளவு மட்டுமே நவீனமயமாகி யுள்ள இந்தியாவில், சாதி ஒழிப்பை முன்னிலைப் படுத்தாத முதலாளித்துவ எதிர்ப்பு என்பது உரிய மாற் றத்தைக் கொண்டுவர இயலாத ஒரு நோஞ்சானாகவே இருக்கும். இத்தகைய புரிதல், இடதுசாரிகளைத் தலித் துகளுடன் கைகோத்திடச் செய்யும். ஏகாதிபத்தியத்தை இடதுசாரிகள் எந்த அளவுக்கு முழுவீச்சுடன் எதிர்க் கிறார்களோ, அதே அளவுக்கு அவர்கள் சாதியமைப் பையும் எதிர்க்க முன்வருவார்கள்.

தலித் அரசியலும் இடதுசாரி அரசியலும் ஒன்று கூடல் என்பது புதியதன்று. இதற்கு முன்பே மார்க் சியரும் அம்பேத்கரும் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். 1950களில் நிலமற்ற தலித்துகளுக்கு அரசின் நிலத் தைப் பிரித்தளிக்க வேண்டுமென்று இந்தியக் கம் யூனிஸ்ட் கட்சியும் அம்பேத்கரும் ஒன்றாகப் போராடி யிருக்கின்றார்கள். 1970களில் மகாராட்டிரத்தில் தலித் சிறுத்தைகள் இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. இந்த இயக்கத்தை அரசின் அடக்குமுறையும், சிவசே னாவின் தலைமையில் நடந்த மேல்சாதியினரின் வன்முறையும் ஒடுக்கிட முனைந்தன. மறுபுறம் அர வணைத்து அழிப்பது என்கிற தன்மையில் சேர்க் கப்பட்டு, தேர்தலில் சில இடங்களை வழங்கியும் தீவிர இடதுசாரி தலித் இயக்கத்தின் வீரியத்தை வீழ்த்திட விழைந்தனர்.

இன்று, மூலதனத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ள சாதிய ஆதிக்கச் சக்திகளும் அரசுப் பொறியமைவும் (State apparatus) ஓர் அணியாக நிற்கின்றன. பொருளியல் நிலையில் வறிய வர்களாக உள்ளவர்களும் சமுதாய நிலையில் ஒடுக் கப்பட்டவர்களாகவும் உள்ள பெரும் எண்ணிக்கை யிலான மக்களும் மறுபுறத்தில் ஒரு அணியாக உள் ளனர். எப்போதும்போல, ஆளும் வகுப்பினர் தங்களு டைய சாதி அடையாளங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தங்களுடைய பொருளாதார நலன்களைக் காப்பதில் கண்ணுங்கருத்துமாகச் செயல்படுகின்றனர்.

ஆனால் உழைக்கும் வகுப்பினர், குறிப்பாகத் தலித்துகளும் பிற்பட்ட வகுப்பினரும் தமக்குள் பல்வேறு அடையாளங்களின் அடிப்படையில் பிரிந்து நின்று பகை பாராட்டிக் கொள்கின்றனர். இந்தப் பகை முரண்பாட்டின் காரணமாக அவர்கள் அனைவரும் பொருளாதார நிலையில் ஏழைகளாக-ஒரே வர்க்கமாக இருக்கின்றனர் என்கிற உண்மையை இரு வகுப் பாரும் மறந்துவிடுகின்றனர்.

தலித்துகளுக்கு இடதுசாரி இயக்கத்தின் துணை தேவைப்படுகிறது. ஏனெனில் வேறு எந்தவொரு அரசியல் கட்சியும் ஊதிய உயர்வு, பணிப்பாதுகாப்பு, ஓய்வூதியம், ஒப்பந்தத் தொழிலாளர் ஒழிப்பு முதலான உழைக்கும் வர்க்கத்தின் கோரிக்கைகளைச் செயல் திட்டமாகக் கொண்டிருப்பதில்லை. அதேசமயம் தலித்துகளை முன்னேறச் செய்வதன் மூலம் மட்டுமே இடதுசாரிக் கட்சிகள் தங்கள் இருப்பைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும். தலித்துகளில் பெரும்பான்மையினர் உழைக்கும் வர்க்கத்தினராக இருப்பதால், இயல் பாகவே தலித்துகளினுடைய அரசியல் நோக்கங்களும் இடதுசாரிக் கட்சிகளின் நோக்கங்களும் ஒன்றாக இருக்க வாய்ப்புண்டு.

ஆயினும் கடந்த காலங்களில் இருவரும் முரண் பட்டு வெவ்வேறு முகாம்களாகப் பிரிந்து கிடந்தனர். இடதுசாரிகள் நெருக்கடியான சமயங்களில் தங் களுக்குச் செய்த துரோகங்கள் பற்றிய சிந்தனை தலித்துகளிடம் இருக்கிறது. கடந்தகாலத்தின் கசப் பான அனுபவங்கள் ஒருபுறம் இருப்பினும், உழைக் கும் வர்க்கமாக இருக்கின்ற தலித்துகளின் பொரு ளாதார நலன்களை அரசியல் தளத்தில் முன்னெடுப் பதில் ஓர் வெற்றிடம் இருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தப் பின்னணியிலிருந்து நோக்கும் போது, ஜெய்பீம் முழக்கமும் செவ்வணக்கம் முழக்கமும் மீண்டும் ஒன்றுபட்டு ஒலிப்பது பயனுள்ள ஒரு நல்ல முன்முயற்சியாக விளங்கும்.

(14-10-16 அன்று ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் ஜி.சம்பத் என்பவர் “When Jai Bhim meets Lal Salaam” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது. தமிழில் - க.முகிலன். நன்றி : “The Hindu)