தண்ணீர்...

ஐம்பெரும் பூதங்களில் ஒன்று.

இந்தப் பூமியில் திரவநிலை, திடநிலை, வாயுநிலை ஆகிய மூன்று வடிவங்களில் இருக்கக் கூடிய ஒரே பொருள்.

தண்ணீர் இல்லாவிட்டால் பூமிப்பந்து பாலைவனம் தான். ஜீவராசிகளுக்கு  இந்த மண்ணில் இடம் இல் லாமல் போய்விடும். அதனால்தான் “நீரின்றி அமை யாது உலகு” என்றார், வள்ளுவர்.

பருவநிலை மாற்றத்தால் மழை வளம் குறைந்து வருகிறது.

உப்பு விற்கச் செல்லும் போது மழை பெய்வதும், மாவு விற்கச் செல்லும் போது காற்றடிப்பதும் போல பல சமயங்களில் இயற்கை மனிதனுக்கு எதிராக திரும்பி விடுகிறது. மழைக்காக ஏங்கும் போது வெயில் வாட்டி வதைப்பதும்; அறுவடை சமயத்தில் மழை வெளுத்து வாங்குவதும் வாடிக்கையாகிவிட்டது.

கேரளாவில் கடந்த ஆண்டில் தென்மேற்குப் பருவ மழை வரலாறு காணாத அளவுக்குக் கொட்டித் தீர்த்தது. கர்நாடகத்திலும் வெளுத்து வாங்கியது. இதனால்காவிரி அன்னை கரை புரண்டாள்; டெல்டா குளிர்ந்தது.

வடகிழக்குப் பருவமழை 12 சதவீதம் அதிகம் பெய்யும் என்று வானிலை இலாகா மையம் ஜோசியம் சொன்னது. ஆனால் மழை காலை வாறியது. ஏரி, குளங்கள் வானம் பார்த்த பூமியாக வறண்டு கிடக் கின்றன.

பருவம் தவறிய மழை, வறட்சி, வெள்ளம் ஆகிய வற்றால் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகிறார்கள்.

இயற்கை கண்ணாமூச்சி காட்டும் போது அதற்கேற்ப நம்மை நாம் தயார்படுத்திக் கொண்டால் மட்டுமே, இழப்புகளில் இருந்து தப்பிக்க முடியும்,

மழை பெய்யும் சமயங்களில் கிடைக்கும் நீரை வீணாக்காமல் சேமித்து வைத்துக் கொண்டால்தான் விவசாயத்தைக் காப்பாற்ற முடியும்; குடிநீர் பஞ்சத்தை யும் தவிர்க்க முடியும்.

ஆனால் அப்படி இதுவரை செய்து இருக்கிறோமா?

‘மழை நீர் உயிர் நீர்’; ‘மழை நீரைச் சேமிப்போம்’ என்றெல்லாம் எழுதி வைத்தால் மட்டும் போதாது.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. செயலில் காட்ட வேண்டும்.

நீர் மேலாண்மையில் தமிழகம் போதிய கவனம் செலுத்தாததால் ஏற்பட்ட பாதிப்புகள் - இழப்புகள் பற்றியும், இனிவரும் காலங்களில் அவற்றை தவிர்க்க என் னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விளங்கு கிறார், எழுத்தாளர் சாவித்திரி கண்ணன். அதாவது இதுவரை செய்யத் தவறியதையும், இனி செய்ய வேண்டியதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அவர் சொல்வதைப் பார்ப்போம்.....

மன்னர் ஆட்சிக் காலங்களில் நீர் வள மேலாண் மையில் நிகரற்று திகழ்ந்த தேசம் தமிழகம். காவிரியில் கரிகாலன் கட்டிய கல்லணை, வைகையில் செழியன் சேந்தன் கட்டிய அரிகேசரி மதகு, தாமிரபரணியில் பாண்டியர்கள் கட்டிய மேலழகியான் தொடங்கி மருதூர் வரையிலான 7 அணைகள், மதுராந்தக சோழனால் உருவாக்கப்பட்ட மதுராந்தகம் ஏரி... என்று பட்டியல் போட்டால் பக்கங்கள் போதாது என்று சொல்கின்ற அளவுக்கு முற்காலத்தில் நீர் மேலாண்மையில் பெரும் அக்கறை காட்டிய பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் தமிழர்கள்.

இவை மட்டுமல்ல, அக்காலத்தில் கோட்டைகள் கட்டினால், கூடவே அகழிகள் கட்டப்பட்டன. கோவில்கள் கட்டப்பட்டால் கூடவே குளங்களை ஏற்படுத்துவார்கள். அக்காலத்தில் எந்தக் குடியிருப்பு பகுதியுமே நீர் பாது காப்பு அரண் இல்லாமல் உருவாக்கப்பட்டதே இல்லை. ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், தடாகங்கள், பொய் கைகள், வாவிகள், கேணிகள்... என அவை தண்ணீரின் அளவிற்கு ஏற்பவும், வாழும் பிரதேசத்தின் வழக்கிற்கு ஏற்பவும் அழைக்கப்பட்டன.

மழைக் காலங்களில் இவற்றில் தண்ணீர் முறையாக வந்து விழும் வகையில் மிகத் துல்லியமாக இடத் தேர்வையும் அவர்கள் சிறப்பாக அறிந்திருந்தனர். அதிக மழைப்பொழிவு காலங்களில் ஒரு ஊரின் குளத்திலோ, ஏரியிலோ நிறைந்து வழியும் தண்ணீர் அடுத்தடுத்த ஊர்களுக்குத் தொடர்ச்சியாகச் செல்லும் வகையிலும் நீர் மேலாண்மை செயல்படுத்தப்பட்டு இருந்தது. இவற்றையெல்லாம் கேள்விப்படும் போது நமக்கு பெருமூச்சுதான் வருகிறது.

சூறையாடப்படும் தண்ணீர் வங்கிகள்

இந்நாளின் விஞ்ஞான வளர்ச்சியும், நுகர்வு வெறி கலாச்சாரமும் விழுங்கிவிட்டதோ நமது பொது நலன் சார்ந்த அறிவையும், உணர்வையும். நம் முன்னோர் கள் காலத்தில் உருவாக்கி நமக்கு அளிக்கப்பட்ட நிறைய நீர் ஆதாரங்களை நாம் இன்று நிர்மூலமாக்கிக் கொண்டு வருகிறோம். மக்கள் தொகையோ நாளும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், தண்ணீர் வரத்தோ நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் தமிழகத்தின் ஆற்றுப்படு கைகளில் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கும் மண்வளம் தான். தமிழகத்தில் மொத்தமுள்ள 34 ஆற்றுப்படு கைகளும் இன்று பள்ளத்தாக்குகளாகி வருகின்றன. இதுவரை அள்ளப்பட்டுள்ள மணல் இழப்பால் நாம் நமக்குக் கிடைக்கும் நீரில் சுமார் 15 முதல் 20 சத வீதத்தை தேக்க வழியின்றி, இழந்து இருக்கிறோம். ஏனெனில், ஆற்றோர மணல் படுகைகள் என்பவை தண்ணீர் சேமிக்கும் வங்கிகள் ஆகும்.

அணைகளைக் கட்டும் ஆர்வம் நமக்கில்லையா?

நாடு சுதந்தரம் பெற்ற பிறகு தமிழகத்தில் முதல் இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட சிறுவாணி, ஆழியாறு, பரம்பிக்குளம், மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, வைகை, சாத்தனூர் ஆகிய அணை திட்டங்களைத் தவிர, பிற்காலத்தில் பெரிய அணைகள் கட்டப்படவில்லை.

ஆனால் சிறிய அளவில் நீர் தேக்கங்கள், அணைகள் போன்றவை கட்டப்பட்டன என்றாலும், அவை பெருகி வரும் தண்ணீர் தேவைக்குப் போதுமானதாக இல்லை. மேட்டூர் அணை ஆங்கிலேயர் ஆட்சியில் நமக்குக் கிடைத்தப் பெருங்கொடை ஆகும். ஆனால், அதன் பின்னர் அதற்கு இணையாகவோ அல்லது அதைவிட பெரிதாகவோ எந்த அணையும் கட்டவில்லை.

ஆனால், கர்நாடகம் தொடர்ந்து அணைகளைக் கட்டிய வண்ணம் உள்ளது. காவிரி கர்நாடகத்தில் 320 கிலோ மீட்டர் தூரம் தான் பாய்கிறது. ஆனால் கர்நாடகத்தில் அதில் 58 அணைகள் கட்டப்பட்டு இருக் கின்றன. தமிழகத்திலோ 416 கிலோ மீட்டர் பயணிக் கிறது. ஆனால், நாம் கட்டியுள்ள அணைகளோ 39 தான். குறிப்பாகக் கீழணைக்கு மேல் நீரைத் தேக்க 7 கதவணைகள் கட்ட வேண்டும். அப்படி கட்டப்பட்டால் கடலுக்குச் சென்று விரயமாகும் 50 டி.எம்.சி. தண் ணீரை விவசாயத்திற்குத் திருப்பிவிடலாம்.

இதேபோல், தென்பெண்ணை ஆற்றில் இருந்து கடலூர் தாழங்குப்பத்திற்கு வரும் சுமார் 32 டி.எம்.சி. தண்ணீரும் வெகு காலமாக கடலில் சென்று சேர்கிறது. இங்கும் ஒரு அணை கண்டிப்பாகத் தேவை.

தூர்வாரப்படாத நீர் நிலைகள்

மேட்டூர் அணையின் கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கை இன்று வண்டல்மண் ஆக்கிரமித்து உள்ளது. காரணம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தண்ணீர் வரத்தால் சேர்ந்த வண்டல் மண் அப்புறப் படுத்தப்படவில்லை. இதனால் காவேரியில் நமக்கு தண்ணீர் கிடைக்கும் காலங்களில் நம்மால் தண்ணீரை முறையாகச் சேமிக்க முடிவது இல்லை.

இந்த வண்டல் மண் முறையாகத் தூர்வாரப்படு மானால், அது நமது வேளாண்மைக்கும் சில வருட கட்டுமான தேவைக்கும் பேருதவியாக இருக்கும். சமீப காலத்தில் ஒரு சிறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ஏனோ அது தொடரவில்லை. இதே நிலை தான் தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளிலும், நீர் தேக்கங்களிலும் நிலவுகிறது.

அணைகள் முறையாக தூர்வாரப்படுமானால் முப்பலன்கள் கிடைக்கும். தமிழக ஆறுகளில் கட்டு மானத்திற்காகக் கொள்ளைப் போகும் மணல் தடுக் கப்படும். நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரிக்கும். விவசாய நிலங்களுக்கு நல்ல வண்டல் மண் கிடைத்து பயிர்கள் செழித்தோங்கும்.

வரமே சாபமாகிறதா?

காவிரியில் கர்நாடகம் தொடர்ந்து அணைகள் கட்டி தடுத்து வருகிறது. முல்லை பெரியாறுக்குக் கேரளம் முட்டுக்கட்டை போட்ட வண்ணம் உள்ளது. ஆந்தி ராவோ பாலாற்றைப் படிப்படியாகச் சிறைபிடித்து வருகிறது. நாம் இதற்காக சட்டப் போராட்டங்களும், வீதிப் போராட் டங்களும் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்திய வகையில், நமக்கு இயற்கையின் கொடையாகக் கிடைத்து வரும் தண்ணீரைச் சேமிக்கத் தவறிவிட்டோம்.

தமிழகத்தில் ஆண்டுக்குச் சராசரியாக சுமார் 925 மி.மீ. மழைப்பொழிவு உள்ளது. உள்ளபடியே இது ஒரு வரப்பிரசாதம்தான். ஏனெனில், உலக சராசரி மழைப்பொழிவே சுமார் 800 மி.மீ. தான். ஆனால், இப்படி கிடைக்கும் மழையெனும் வரத்தை நாம் சாப மாக்கிவிடுகிறோம் என்பது தான் கொடுமை.

கனமழை காலங்களில் நாம் சுமார் 260 டி.எம்.சி. க்கும் அதிகமான தண்ணீரைக் கடலுக்குத் தாரை வார்த்துக் கொண்டுள்ளோம். இதை விரிவாகச் சொல்ல வேண்டுமானால், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கர்நாடகம் நமக்குத் தண்ணீர் தராவிட்டாலும் கூட, நாம் மழை மூலமாகப் பெறும் தண்ணீரின் அளவு சுமார் 230 டி.எம்.சி. ஆகும்.

இதற்கும்மேல், நமக்கு கடைசியில் வந்த தீர்ப்பின் படி கர்நாடகம் 177.25 டி.எம்.சி. தருகிறது. ஆனால், நாம் ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் சுமார் 90 முதல் 100 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க வழியின்றி கடலுக்குள் விட்டுவிடுகிறோம். சென்ற ஆண்டு அதீத மழைப்பொழிவின் போது மட்டுமே சுமார் 170 டி.எம்.சி. காவிரி நீர் கடலுக்குச் சென்றது.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெரிய வடிநிலமான காவிரியை தவிர்த்து, நடுத்தர வடிநிலங்கள் என குறிக்கப்படும் பாலாறு, பெண்ணையாறு, வைகை, தாமிரபரணி, கொசஸ்தலையாறு, மணிமுத்தாறு போன்ற 11 ஆற்றோரப் படுகைகளின் மூலமாக நமக்குக் கிடைக்கும் தண்ணீர் சுமார் 285 டி.எம்.சி. வராக நதி, வெள்ளாறு, அக்கினியாறு, அடையாறு போன்ற 10 சிறிய ஆற்றோர வடிநிலங்கள் மூலமாகக் கிடைக்கும் தண்ணீர் 44 டி.எம்.சி.

ஆனால், இவை தவிர்த்து தமிழகத்தில் ஒவ்வொரு ஏரி, குளங்கள் என மொத்தம் உள்ள 39,202 நீர்ப் பிடிப்பு தளங்களின் மூலமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீர் 390 டி.எம்.சி. இப்படியாக நமக்குப் பல வழிமுறைகளின் மூலமாகக் கிடைத்துவரும் விலை மதிப்பில்லா தண்ணீரில் சரிபாதிக்கும் அதிகமாக நாம் பயன்படுத்தத் தவறி வீணாகிறது என்பதுதான் சொல்லொணா வேதனையாகும்.

நிதியின்றி தடுமாறும் நீர் மேலாண்மை

தமிழகம் நீர்வள மேலாண்மைக்குப் போதுமான நிதி ஒதுக்காத நிலை உள்ளது. கடந்த 25 ஆண்டு களில் கர்நாடகா நீர்வள மேலாண்மைக்கு 30,000 கோடி ரூபாய் செலவழித்து உள்ளது. மேலும் தற் போது மேகதாதுவுக்கு 5,700 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது.

ஆந்திராவோ ‘ஜலயக்ஞம்’ என்ற திட்டத்தை அறிவித்து மிக அதிகமாக 1,86,000 கோடி ரூபாய் ஒதுக்கித் தீவிரமாகச் செயலாற்றுகிறது. புதிதாக பிறந்த தெலுங்கானா மாநிலம் கூட ஆந்திராவோடு போட்டிப் போட்டுக் கொண்டு ஏரி, குளங்களை நன்கு தூர்வாரி, பல திட்டங்கள் போட்டு அதிக நிதி ஒதுக்கிச் செயல் படுகிறது.

ஆனால், தமிழகமோ வெறும் 6,000 கோடி ரூபாய் மட்டுமே செலவழித்து உள்ளது. ஆனால், நம்மை காட்டிலும் வற்றாத பல நதிகளும், ஆறுகளும் கொண்டவை இந்த மாநிலங்கள். ஆனபோதிலும் கூட, நீர் மேலாண்மைக்கு நம்மைவிடவும் பல மடங்கு அதிகமாகச் செலவழிக்கிறார்கள். தமிழகத்திலோ வற்றாத நதி என்று சொல்லத்தக்க நதியோ, ஆறோ ஒன்றுகூட கிடையாது. ஆகவே நாம் தான் அவர்களை விட அதிக விழிப்புணர்வுடன் செயல்பட்டு இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் ஏனோ இன்னும் விழிப்புணர்வு ஏற்படவில்லை.

தொகுப்பு : தினத்தந்தி, 10.2.2019