படத்திறப்பு நிகழ்ச்சியில் ஆ. வந்தியத்தேவன் புகழாரம்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் புரட்சிக்கவிஞர் கலை இலக்கிய மன்றப் மாநிலச் செயலாளரும் எழுச்சிக் கவிஞருமான தமிழேந்தி அவர்களின் தன்னிகரில் லாத தமிழ்ப் பணிக்கு வீரவணக்கத்தையும் அவரது பிரிவால் துயருற்றிருக்கிற அவரது இல்லத்தினருக்கும், இயக்கத் தோழர்களுக்கும் எங்கள் தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும், நான் சார்ந்திருக்கிற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை, அன்பான ஆறுதலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரங்கத்தினுள் வந்து அமர்ந்ததும், கவிஞர் தமிழேந்தி அவர்களின் நினைவைப் போற்றும் இரங்கல் செய்திகளைக் காட்சிப்படுத்தி வைத்துள்ளதைக் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்! கவிஞரின் பிறந்த ஊர் ‘மின்னல்’ என்ற அழகுத் தமிழ்ப் பெயரிலான ஊர்! யுவராசன் என்ற பெயரை ‘தமிழேந்தி’ என்று அழகுத் தமிழ்ப் பெயராக மாற்றி, தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் என்பது மட்டுமல்ல; பாவேந்தன், அருவி, கனிமொழி (இரசியா) எனத் தன் மக்களுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் அழகுத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தவர் நம் கவிஞர் என்பதை நாம் அறிவோம்!

பெருமை மிக்க இந்தத் தமிழ்க் குடும்பத்தின், கவிஞரின் பெயர்த்தியான அ.சோ. கனலி எழுதிய ‘தாத்தா ஏன் மறைந்து போனாரோ?’ என்ற இரங்கல் கவிதையும் இங்கே வைக்கப் பட்டிருக்கிறது. நம் கவிஞர் தமிழேந்தி தன் மக்களையும், பேரப் பிள்ளைகளையும் எப்படி வளர்த்திருக்கிறார் என்பதற்குச் சான்றளிப்பதைப் போல அவரின் பெயர்த்தி கனலியின் கவிதை திகழ்கிறது; நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

“தோளில் சுமந்து தாலாட்டுப் பாடினார்

மத்தாப்புக் கொளுத்தி நான் மகிழ்வதைக் கண்டார்

பூங்காவில் என்னுடன் பூங்கொத்து பறித்தார்

மிதிவண்டியில் ஏற்றிக்கொண் டூரெல்லாம் சுற்றினார்

கவிதை இயற்றக் கற்றுக் கொடுத்தார்

முதல் மதிப்பெண் பெற்றிடச் செய்தார்

உலகச் செய்திகள் அறியச் செய்து

புலவி எனவும் பெயர் பெறச் செய்தார்

என்சிறு வயதிலும் பதின்ம வயதிலும்

தந்தைபோல் உடனிருந்து பார்த்துக் கொண்டார்

வலதுபக்கச் செயல்பாட்டை இழந்து

மூளைக் கட்டியால் முடங்கிப் போனார்

மனமுடைந்த நிலையிலும் முதிர்ந்த அறிவுடன்

இடக்கரம் வைத்துக் கவிதைகள் இயற்றினார்

சோகம் தலைமுட்டிச் சோர்ந்த நிலையிலும்

அதே பழைய குரலுடன் இலக்கணம் நடத்தினார்

எல்லா வேளையும் பேத்தி உடனிருந்து

அவளை வளர்த்த கடமை முடித்திட்டு

பேத்தி தன்கடமை ஆற்றும்முன்

தாத்தா ஏன் மறைந்து போனாரோ!”

இதுதான் பேத்தியின் இரங்கல் பாட்டு!

அன்புத் தோழர்களே, தன் குடும்பத்தினரையும் எழுச்சி மிகு கவிஞர்களாக்கியவர் என்பது மட்டுமல்ல; தன் இல்லத்தில் நடைபெற்ற அனைத்துத் திருமணங்களையும் சாதி மறுப்புத் திருமணங்களாக நடத்திக் காட்டிய சாதனையாளர்தான் கவிஞர் தமிழேந்தி!

“சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல

தமிழ் வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால் மற்றப்

பாதி துலங்குவது இல்லை”

என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பாடினாரே, அந்தப் புரட்சிக்கவியின் செயல்வடிவம்தான் கவிஞர் தமிழேந்தி!

மானமும் அறிவும் உள்ள மக்களாகத் தமிழ் மக்களை உயர்த்தி வைக்கத் தொண்டு செய்த பெரியாரை, அண்ணாவை, திராவிடர் இயக்கத்தை அவதூறுகளை அள்ளிவீசி கொச்சைப்படுத்தி திசைதிருப்பும் திரிபுவாதிகள் மலிந்துவிட்ட காலம் இது!

“இருப்பு கொள்ளா எரிச்ச லோடு

வெறுப்பை உமிழ்வதே சிலருக்கு வேலை

மூத்திரப் பையை முக்கிச் சுமந்து

சூத்திரத் தமிழன் இழிவு தொலைக்க

பன்னூறாண்டின் பழிக்குழி மூட

தொண்ணூற்றைக் கடந்தும் தொண்டில் துலங்கினார்

தந்தை பெரியார் என்றொரு தலைவர்; அவர்

இந்த மண்ணில் இருந்தார் இயங்கினார்”

என்று பெரியாரின் பெரும் பணியைப் புகழ்ந்து பாடியவர் தமிழேந்தி!

“என்னடா யார்அவர் என்று கேட்டால்

கன்னடர் எனச்சில கிறுக்கர் கழறுவார்

திராவிடர் என்றசொல் தேள்கொட்டு போலக்

குடையு தென்று குறுக்குச்சால் ஓட்டுவார்”

என்று கோடரிக் காம்புகளை அடையாளம் காட்டிய கவிஞர் தமிழேந்தி!

“ஆரியம் என்னும் அழும்பு தொலைக்க

பிடரி உலுக்கிய சொல்பேர் திராவிடம்

அதுவரை அமுக்குண்ட மக்கட் கெல்லாம்

முதுகுத் தண்டாய் முகிழ்த்தது திராவிடம்”

என்று நெஞ்சை நிமிர்த்தித் திராவிடம் புகழ்ந்தவர் தமிழேந்தி!

“காட்டுமிராண்டி மொழிதமிழ் என்ற தெல்லாம்

பிள்ளையைக் கடியும் பெற்றவள் சாடல்

அறிவின் உச்சத்தை தமிழ் அவாவிட

விரும்பிய நெஞ்சின் வேதனைப் புலம்பல்

பெரியார் முதலில் திராவிடம் கேட்டதும்

பின்னர் அதுவே தமிழ் நாடானதும்

சரியான இடத்தில் வந்து சேர்ந்த

தன்னலம் மறுத்த தத்துவ முடிவே”

என்று சரியான விளக்கம் தந்தார் கவிஞர் தமிழேந்தி!

“நோண்டி நோண்டி நொட்டை சொல்வது

தோண்டிப் புளுகர்க்குத் தோதான வேலை

இனநலக் காப்பாளர் என்போர் இந்தப்

பிணமறுக்கும் தொழில் பிழைத்தும் செய்யார்”

என்று குள்ளநரிக் கூட்டத்தின் சூதுமதிச் செயலைக் கனல் கக்கும் கவிதையில் கண்டித்தவர் கவிஞர் தமிழேந்தி!

பெரியாரின் பெரும் சிறப்பைப் பாடியவர்; பெரியாரின் தலைமாணாக்கராம் நம் அண்ணாவின் பண்பு நலன்களை யும் பாப்புனைந்து பாராட்டினார்.

“செந்தமிழ் நாட்டு மக்கள் ஒருவரைச்

சிந்தை குளிரப் ‘பெரியார்’ என்றார்

அடுத்த ஒருவரை ‘அண்ணா’ என்றார்

இந்த நாட்டின் இளையர் பெரியர்

எல்லோருக்கும் சொந்த அண்ணா

திருக்குறள் போலச் செதுக்கிய குள்ளம்

திருவாய் மலர்ந்தால் தேன்தமிழ் வெள்ளம்

தம்பி யரைத் தன்அன்பில் வென்றார்

மக்கள் மனங்களில் மலைபோல் நின்றார்

எளிய தமிழை எடுத்துப் பேசினார்

சந்தனத் தைத்தன் எழுத்தில் பூசினார்

மணக்கும் தாழையாய்த் தம்பிக்கு மடல்கள்

அலைகடல் ஆயின மேடைத் திடல்கள்

வணக்கம் வந்தது நமஸ்காரம் போனது

அரசியல் இவர்க்கே அறுவடை ஆனது

பூச்சோ புனைவோ இல்லை இவரோ

மாற்றான் தோட்டத்து மணந்த முல்லை

வீணை நரம்பின் வெண்கலக் குரலால்

மொத்த இனத்தையும் கட்டிப் போட்டார்

தில்லித் திமிரைத் தட்டிக் கேட்டார்

உச்சி வான்போல் உயர்ந்துநின்ற

அண்ணா என்னும் அரும்பேர்

பண்ணாய்த் தமிழர் செவியில் பாயுமே!”

என்ற தமிழேந்தியின் புகழாரம் சூட்டும் கவிதைகள், அண்ணா வின் தன்மானம் - தமிழ்மானம் காக்கும் தன்னேரற்ற பணி களுக்கு அணிவிக்கப்பட்ட வாடாமாலையாய் என்றென்றும் மணம் வீசிக்கொண்டே இருக்கும்!

தமிழீழ விடுதலைக்குக் களமாடி புதிய புறநானூறு படைத்திட்ட தமிழினப் போராளித் தலைவரான பிரபாகரன் புகழ்பேசும் தமிழேந்தியின் உணர்ச்சிப் பாக்கள் நம் நெஞ்சில் காலக் கல்வெட்டாய் நிலைத்து நிற்பவை.

“புறநானூற்றுத் தமிழன் வீரம்பற்றி

புத்தகத்தில் மட்டுந்தான் படித்துள் ளோம்யாம்

வரலாற்று நாயகனே!ஈழ மண்ணின்

வரிப்புலியே! புலிப்படையின் தலைவா!உன்தன்

பெருமைக்கும் ஈடுண்டோ? தமிழினத்தின்

பெருமானங் காத்தவனே! சிங்கப் போத்தே

உரிமைச்செம் பயிர்வளர்த்த உரமே!ஈழ

ஒளிவானின் எரிதழலே! எங்கள் மூச்சே!

பிரபாக ரன்என்னும் பேரைக் கேட்டால்

பேருலகத் தமிழர்க்கோ பேரெழுச்சி

நரம்புக்குள் மின்சாரம் பாய, ரத்த

நாளங்கள் அத்தனைக்கும் புத்துணர்ச்சி

உரம்பெய்த தமிழ்க்குலத்தின் வீரமெல்லாம்

ஒரே கருவில் பெற்றாளோ அத்தமிழச்சி

இறும்பூதிச் சிலிர்க்கிறதே வன்னிக்காடும்

இறக்கை கட்டிப் பறக்கிறதே அன்னை நாடும்”

என்ற தமிழேந்தியின் எழுச்சிக் கவிதையை எப்படி நம்மால் மறக்க இயலும்?

இத்தகைய இன எழுச்சிப் பாடல்களை மேடைதோறும் பாடியவர், இதழ்களில் எழுதிக் குவித்தவர், நூல்களாய்த் தொகுத்துத் தந்தவர் தமிழேந்தி!

“கெடல்எங்கே தமிழர்நலன் - அங்கெல்லாம்

தலையிட்டுக் கிளர்ச்சி செய்க!”

என்று பாவேந்தரின் பாடல் வரிகளுக்குச் செயல் வடிவம் அளிக்கும் வண்ணம் களத்தில் நின்று போராடியவர் என்ற பெருமை களுக்குரிய நம் கவிஞர் தமிழேந்தி நோயில் விழுந்து மூன்றாண்டுகளாய் முடங்கிப் போனார். அந்த நிலையிலும் உணர்வால் இயங்கிக் கொண்டே இருந்தார்.

‘சிந்தனையாளன்’ பொங்கல் மலர் தயாரிப்பில் இவர் பங்கு எப்போதும் நிரம்ப உண்டு. வழக்கம் போல் மலரில் எனக்கு எழுதத் தலைப்பு தந்தார்; தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்; “கட்டுரை கிடைத்தது, நன்றி” என்று தெரிவித்தார். கட்டுரையில் கலைஞரைப் பற்றி உள்ள சிறப்புகளைக் குறிப்பிட்டுப் பாராட்டினார். மலர் கிடைத்து விட்டதா என்று கேட்டறிந்தார். உடல்நலம் குன்றிய நிலை யிலும் பணிகளைச் செம்மையாகச் செய்யும் பாங்கினை நாம் தமிழேந்தியிடம் பாடம் கற்க வேண்டும்!

அத்தகைய பண்பாட்டுப் பெருமகனாரை நாம் இழந்து தவிக்கிறோம்.

தன்னுடைய திருமணத்தை நடத்தி வைத்த உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் மறைந்த போது,

“வெள்ளைமனச் சுரதாவே போய்விட்டாயா?

வெற்றிடமாய் உன்னிடத்தை ஆக்கிவிட்டாயா?”

என இரங்கல் கவிதை தீட்டினார் தமிழேந்தி!

பாவேந்தர் மறைந்த போது, “தேனீ பறந்ததே” எனப் பாடல் புனைந்தார்.

“தீட்டிய கூர்வாள் போல் தினவெடுத்த

தோள்களாலே வீரம் தன்னை

காட்டவல்ல செம்மாப்பு களமறவன்

பாவேந்தன் படைப்புக்குண்டு

படித்தாலே நெஞ்சினிலே பரபரவென

உணர்வூறி எழுச்சி பாயும்

வெடித்தெழுந்த தீக்கிடங்காய் உள்ளத்தில்

தமிழ்நெருப்பு வேகம் கொள்ளும்

அடித்த பெரும் சாட்டையதன் ஆவேச

வீச்சாகச் சொல் தெறிக்கும்

வடித்த நறுந்தமிழ்வீரம் அவன்பாட்டில்

வழி தேனாய் ஒழுகி நிற்கும்!

வழிகின்ற சுவைதரும் தேனை

வழங்கிய ‘தேனீ’ பறந்ததே

இப்புவியை விட்டு மறைந்ததே”

என, சோகம் ததும்பும் பாடலைத் தந்தார் தமிழேந்தி!

“செஞ்சொல்லில் பாட்டெடுத்துச் செந்தமிழன்

விடுதலைக்காய் முழங்கி எங்கள்

நெஞ்சுமுகப் பாவலனே! நிறையன்புப்

பெட்டகமே! மறைந்தாயோ நீ!

வஞ்சகர்கள் தமிழ்வீழ்த்த வரும்பகைவர்

தோலுரிக்க உனது பாட்டை

செஞ்சமத்து மறவர்கை வாளாக

வீசுவமே விரைந்தாயே நீ?”

எனப் பாவலரேறு அய்யா பெருஞ்சித்திரனார் மறைந்த போது, கண்ணீர் சிந்தும் துயரப் பாக்களைத் தம் தூவலால் தீட்டியவர் கவிஞர் தமிழேந்தி!

“எங்கள் மானத் தமிழ்மறத்தி - என்றும்

இறவா மாந்தரில் நீ ஒருத்தி

செங்கொடிப் பெண்ணே செவ்வணக்கம் - உன்பேர்

செப்பும் போதே வாய் மணக்கும்!

நோயில் படுத்த தமிழினத்தை - ஒரு

நொடிப்போ தில்நீ எழுப்பினையே!

தீயில் வெந்(து) எம் கண்திறந்தாய் - எமைச்

‘சீ’யென உமிழ்ந்தா நீ இறந்தாய்?”

என, செங்கொடி தீயைத் தழுவி மாண்டபோது, கொந்தளிக்கும் கனல் கவிதையை வடித்துத் தந்தவர் நம் தமிழேந்தி!

இத்தகைய கண்ணீர்க் கவிதைகளைத் தந்திட்ட கவிஞர் தமிழேந்தி, நம் கண்களில் விழிநீர் சொரியச் செய்து, நம்மை விட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டார். உடலால் நம்மை விட்டுப் பிரிந்தாலும் உணர்வாலே நம்மோடு என்றென்றும் வாழ்வார் தமிழேந்தி!

தமிழேந்தியின் கண்கள் மருத்துவமனைக்குக் கொடை யளிக்கப்பட்டுவிட்டன. அதன்மூலம் நான்கு பேர் கண்ணொளி பெறுவர். அவர்கள் மூலம் தமிழேந்தி உலகைப் பார்த்துக் கொண்டே வாழ்வார். அவருடைய உடல் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்குக் கொடையாக வழங்கப்பட்டுவிட்டது. மருத்துவ ஆராய்ச்சி மாணவர்கள் அவர் உடலை ஆய்வு செய்து பார்க்கும் போதெல்லாம் தமிழேந்தி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

“விடற்கரும் மூச்சை விட்டும் புகழில்

விளங்கிடுவர் சிலபண்பாளர்

உடற்கொடை விழிக்கொடை எல்லாம்ஈவர்

உயிர்போயும் அவர் வாழ்வாளர்!”

என்று கவிஞர் தமிழேந்தி இலக்கணம் தீட்டிப் பாடினாரே, தமிழேந்தி, அந்த இலக்கணத்திற்கு இலக்கியமாய் நம்மோடு நெடுவாழ்வு வாழ்வார், தமிழேந்தி!

வாழ்நாள் முழுக்க எழுதியும், பேசியும் கொடையாகத் தந்த அறிவுசால் படைப்புக்களாலே தமிழேந்தி எந்நாளும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பார்! அவர் புகழ் தமிழ் உள்ளவரை நிலைத்து நிற்கும் என்று தெரிவித்து, அவரது பிரிவால் துயரில் மூழ்கியுள்ள அனைவருக்கும் அன்பான ஆறுதலைத் தெரிவித்து என் இரங்கல் உரையை நிறைவு செய்கிறேன். நன்றி! வணக்கம்!