1.தங்களைப் பார்ப்பனர்களில் சேர்ந்தவர்கள் என்றும் தங்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் ஆச்சார அனுஷ்டானங் களில் எவ்வித வித்தியாசமுமில்லை என்றும், தங்களுக்கும் பார்ப்பன உரிமை உண்டென்றும் கருதிக் கொண்டு இருப்பவர்களுக்கும், பார்ப்பன மதத்தையும், வேதத்தையும், புராணத்தையும், பார்ப்பனத் தெய்வங்களையும் காப்பாற்ற முயலுகின்றவர்களுக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ, அல்லது தான் பார்ப்பனரல்லாதார் என்கின்ற முறையில் ஏதாவது உரிமைபெற அருகதை யோ உண்டா?

2.யாராவது ஒருவர் தன்னை மற்றவர்களைவிட உயர்ந்த சாதி என்றோ அல்லது சத்திரியன் என்றோ, வைசியனென்றோ, சூத்திரனென்றோ, பஞ்சமன் என்றோ சொல்லிக் கொண்டு, தன்னுடைய தனி சாதிக்கென்று தனிச் சின்னமோ, ஆச்சார அனுஷ்டானமோ உண்டு என்று சொல்லிக் கொள் பவனுக்குப் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தில் இடமோ பார்ப் பனர்களிடமிருந்து கைப்பற்றும் உரிமைகளில் பங்குபெற பாத்தியமோ உண்டா?

3. பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்பது பார்ப்பனியத்தை நீக்கிய இயக்கமா? அல்லது பார்ப்பனர்களை நீக்கிய இயக்கமா?

4.பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்றால், பார்ப்பனர்களிடம் உள்ள உத்தியோகத்தையும் பதவியையும் மாத்திரம் கைப்பற்றுவது என்ற கருத்தை உடையதா? அல்லது பார்ப் பனியத்தை ஒழிக்க வேண்டுமென்ற கருத்தை உடையதா?

5. பார்ப்பனியத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு தான் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தைக் குலைத்தாலும், பார்ப் பனியமானது, பார்ப்பனர்களை உண்டு பண்ணிக் கொண் டும், பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும் இருக்காதா?

6. பணக்கார ஆதிக்கம் கூடாது என்பதாகக் கருதிக் கொண்டு நாம் எவ்வளவுதான் எல்லோருடைய சொத்துக்களையும் பிடுங்கி எல்லா மக்களுக்கும் சரிசமமாய்ப் பங்கிட்டுக் கொடுத்தாலும், மறுபடியும் யாரையும் சொத்து சேர்க்காமல் பார்த்துக் கொள்ளத் தக்க ஏற்பாடு செய்யாவிட்டால், எப்படி மறுபடியும் பணக்கார ஆதிக்கம் உண்டாய் விடுமோ அது போலவே, பார்ப்பனனிடமிருக்கும் உத்தியோகத்தையும் பதவியையும் அடியோடு கைப்பற்றி எல்லோருக்கும் சரி சமமாய்ப் பங்கிட்டுக் கொடுத்து விட்டுப் பார்ப்பனியத்தில் ஒரு கடுகளவு மீதி வைத்திருந்தாலும், மறுபடியும் பார்ப்பன ஆதிக்கம் வெகு சீக்கிரம் வளர்ந்து விடுமல்லவா?

7.பார்ப்பனரல்லாதார் இயக்கம் பார்ப்பனியத்தை ஒழிப் பதற்கு இடையூறாய் இருக்குமானால், அது உடனே அழிந்து போக வேண்டாமா? ஏனெனில், பார்ப்பனரல் லாதார் இயக்கம் இல்லாவிட்டால் பார்ப்பன ஆதிக்கம் ஒன்று மாத்திரம்தான் இருந்து வரும் என்றும், பார்ப்பனி யத்தை ஒழிக்கும் கொள் கையில்லாத பார்ப்பனரல்லாதார் இயக்கத்தால் வேறுபல ஆதிக்கங்களும் ஏற்பட இடமுண்டாகும் என்றும், சொல்வது சரியா? தப்பா? உதாரணமாக, பார்ப்பனரல்லாத இயக்கத்தின் பலனாய் இயக்கத்தில் உள்ள பார்ப்பன ஆதிக்கத்தோடு இப்போது ஜமீன்தார் ஆதிக்கம், பணக்கார ஆதிக்கம், ஆங்கிலம் படித்தவர்கள் ஆதிக்கம் முதலியன பார்ப்பன ஆதிக்கத்தைப் போல் மக்களை வாட்டி வருகின்றது என்று சொல்லுவதற்கு ஆதாரம் இருக்கின்றதா? இல்லையா?

( குடிஅரசு-துணைத் தலையங்கம், 06.01.1929)