அணு உலைகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஓய்வுக்குப் பேய்விடும். ஆனால், அணுக்கழிவுகள் ஒருபோதும் உறங்குவதில்லை. ஏதேனும் காரணங்களால் அணுக்கழிவுகளில் இருந்து கசிவு ஏற்பட்டால், விளைவு மனித குலம் காணாத பெரும் விபரீதமாக இருக்கும் என்று எச்சரிக்கிறார், சுப. உதயகுமாரன். இந்தியா முழுவதிலுமுள்ள அணுக்கழிவுகளை மொத்த மாக கூடங்குளத்தில்தான் புதைக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தையும் எழுப்புகிறார்.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் மொத்தம் 6 அணுஉலைகளை அமைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. முதல் 2 அணு உலைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், 3, 4-ஆவது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் அணுக்கழிவுகளை அணு மின் வளாகத்திற்குள்ளேயே புதைக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் ராதாபுரத்தில் இருந்து நெல்லைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் தான் மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தி யிருக்கிறது.

இந்த நிலையில், இதுகுறித்துக் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராளி சுப. உதயகுமாரனிடம் பேசினோம். “கூடங்குளம் அணுமின் உலையில் இரண்டு யூனிட்டுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஒவ் வொரு அணு உலையிலும் தலா 163 எரிகோல்கள் வீதம் 326 எரிகோல்கள் இருக்கும். அணுஉலை இயங்கும்போது இதில் மூன்றில் ஒரு பங்கு எரிகோல்கள் ஆண்டுக்கு 3 தடவை வெளியே எடுக்கப்பட்டு புதிய எரிகோல்கள் வைக்கப்படும். வெளியே எடுக்கப்பட்ட எரிகோல்கள் உச்சநிலை வெப்பமும், பயங்கர கதிர் வீச்சுத் திறனும் கொண்டவையாக இருக்கும். எனவே அவற்றை அணு உலை பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் ராட்சத இரும்பு டேங்க்கில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீ ருக்குள் பாதுகாக்கப்படும்.

இப்படி எரிந்த எரிகோல்களைத் தொடர்ந்து வெளியே எடுத்துக் கொண்டிருப்பதால் 5 அல்லது 7 ஆண்டு களுக்கு மட்டுமே தண்ணீர் தொட்டியில் வைத்திருக்க முடியும். எனவே, அவற்றை அணு உலைக்குச் சிறிது தூரம் தள்ளிப் புதைத்து, மறுசுழற்சி செய்து, அதிவேக யூனுஸ் உலைக்கு எரிபொருளாக்க முடியுமா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த எரிகோல்கள் 48,000 ஆண்டுகள் கதிர்வீச்சுத் தன்மை கொண்டவை என்பதால் பூமியின் மிக ஆழத்தில் இரும்புப் பெட்டிக் குள் வைத்துப் பூட்டி புதைக்கப்படுவதுதான் தீர்வு.”

இந்த நிலையில், தண்ணீருக்குள் இருந்து எடுக்கப்படும் எரிகோல் கழிவுகளை அணு உலைக்குச் சிறிது தள்ளிப் புதைப்பதற்காக, மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்துகிறார்கள். இந்தக் கழிவுகள் கடற் கரையில் புதைக்கப்பட்டால் நீர் மற்றும் காற்றில் கதிர் வீச்சு பரவும் ஆபத்து இருக்கிறது. எனவே, இதைக் கண்காணிக்க சர்வதேச அணுசக்தி முகமை அலுவலகம் அங்கே திறக்கப்படும். இதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் பற்றி ராதாபுரம் தாலுகா அலுவலகம், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏன், இணையத்தில் போடலாமே? அப்படிப் போட்டால் அதிகம் பேர் பார்ப்பார்கள். எதிர்ப்புக் கிளம்பும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.

தவிர, அணுஉலைக் கழிவைப் புதைப்பது தொடர் பான கருத்துக் கேட்புக் கூட்டம் என்று சொல்வதே ஒரு ஃபிராடு. 3, 4, 5, 6 அணு உலைகள் அமைக்க நடை பெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நானும் பங்கேற் றேன். இதில் கலந்துகொண்ட 99 சதவிகிதம் பேர் அணு உலை வேண்டாம் என்றார்கள். ஆனால், அதிகாரிகளோ அணு உலை பற்றி மக்கள் கேட்ட கேள்வி களுக்குப் பதில் சொன்னோம். அவர்கள் திருப்தியுடன் சென்றார்கள் என்று அறிக்கை கொடுத்து அணு உலைக்கு அனுமதி கொடுத்தார்கள். எனவே, கருத்துக்கேட்புக் கூட்டத்தைப் புறக்கணிக்கலாமா அல்லது கலந்து கொண்டு எதிர்ப்பைப் பதிவு செய்யலாமா என்கிற குழப்பத்திலிருக்கிறார்கள் மக்கள்.

இராதாபுரத்தில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடை பெற்றால் பாதுகாப்பு இல்லை என்று சொல்லி, நெல் லையில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். கூடங் குளம், இடிந்தகரை, கூந்தன்குழி ஆகிய ஊர் மக்களிடம் சென்று ஆபத்தில்லை என்று விளக்க வேண்டும். அதை விட்டு விட்டு, சிட்டியில் நடத்தினால் சந்தேகம் வருகிறதா? இல்லையா? கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை மட்டும் இங்கே புதைக்கப் போகிறார்களா அல்லது இந்தியா முழுவதிலுமுள்ள எல்லா அணுஉலைக் கழிவுகளையும் இங்கே கொண்டுவந்து கொட்டப் போகி றார்களா என்ற சந்தேகம் எங்களுக்கு வருகிறது.

செர்மனியில் அசெஸி என்கிற உப்பு மலைக்குள் 400 மீட்டர் ஆழக் குழிதோண்டி இராட்சத இரும்புத் தொட்டிகள் அமைத்து, அதற்குள் பேரல் பேரலாக அணுக்கழிவுகளைப் புதைக்கிறார்கள். நான் அங்குச் சென்ற போது, பாதுகாப்பு அதிகாரி என்னிடம், ‘இந்த மலையின் உப்பு நீர்க் கசிவால் இரும்புப் பெட்டிகள் துருப்பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பெட்டி உடைந்து அணுக்கழிவுகள் வெளியேறினால் சர்வநாசம் ஏற்படும். இனிமேல் இக்கழிவுகளை ஷிப்ட் பண்ணுவது இயலாத காரியம். என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்றார்.

“தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளின் நிலையே இப்படி என்றால், அணுக்கழிவுகளைக் கையாளும் உத்தி எங்களிடம் இல்லை என்று பகிரங்கமாக சுப்ரீம் கோர்ட்டில் ஒத்துக்கொண்ட இந்திய அரசு, இக்கழிவை எப்படிக் கையாளப் போகிறது? அணுக்கழிவிலிருந்து வரும் கதிர்வீச்சு நீர் மற்றும் காற்றில் பரவி உணவுச் சங்கிலியில் போய்ச் சேர்ந்தால், 3 மாவட்ட மக்களின் நிலை அதோகதிதான். எனவே கருத்துக்கேட்பு என்பதே கண்துடைப்புத்தான். அவர்கள் நினைத்ததைச் செய்யப் போகிறார்கள் என்றார்.

இதுகுறித்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்திடம் பேச முயன்றோம். கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு வாருங்கள் என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார்கள்.

தமிழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது!

“குமுதம் ரிப்போர்ட்டர்”, 14.6.2019