1) இலங்கையில் ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்றதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

- து. சாம்பசிவம், மன்னார்குடி

சூழ்ச்சி, அராஜகம், வன்முறை, மூலம் பெற்ற கயமைத் தனமான வெற்றி இது. ஜனநாயகத்திற்கு எதிரானது. இனவாத அரசுகள் எப்போதும் செய்யும் செயல் முறையே இது, இதனால் இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை

அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள்.ஆனால் நடைமுறைக்கு வராது. அதில் ஒன்று தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு. இது ஒரு கபட நாடகம். அறுபது ஆண்டுகளாகத் தமிழினத்தை ¢நம்ப வைத்து கழுத்தை அறுத்தது சிங்கள இனவாத அரசு. இப்போதும் நம்ப வைக்க முயற்சி செய்தது. தமிழர்களின் வாக்கு வங்கி எதிராகவே நின்றது என்கிற போது தமிழர்களுக்கான உரிமையைத் தந்து விடுவாரா என்ன, ஆதரவாக இருந்தாலும் ஏதும் செய்யப் போவதில்லை

இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட தோல்வி இது. இந்திய அரசு ராஜபக்சேவைக் கட்டித் தழுவியது. தமிழர்களைக் கொல்வதற்கு எல்லா வகையிலும் முட்டு கொடுத்தது. நன்றி காட்டியதா சிங்கள இனவாத அரசு. காரியத்தை முடித்துக் கொண்ட மிதப்பில் இப்போது சீனாவோடு கூடிக் கும்மாளம் போடுகிறது. சீன அரசும் தனது முழு ஆதரவை இனவாத அரசுக்குத் தந்து மகிழ்கிறது. நன்றிக் கடனாக சீனாவின் கையில் கடற்படைத் தளம். எங்கும் சீனர்களின் ஆதிக்கம். இது இந்தியாவுக்குக் கவலை அளிப்பதாக இருக்கிறது. எதிர்காலத்தில் இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்படலாம். அது விரைவில் ஏற்பட வேண்டுமானால் தாய்த் தமிழ் நாட்டின் எழுச்சி மிக முக்கியமானது

ஆனால் தமிழக அரசியல் கட்சிகளும் தலைவர் களும்தான் அதற்குத் தயாராக இல்லை .இன்னமும் ஈழச் சிக்கலைத் தங்கள் தன்னலவாத அரசியல்நோக்கில்தான் பார்க்கிறார்களே தவிர உண்மையான அக்கறையோடு நோக்கவில்லை.

இதோ ஒரு “நற்செய்தி”. ஈழத்தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து தேர்தல் சமயத்தில் மகிந்தராஜபக்சே கொடுதத்த வாக்குறுதி¬யை நிறை வேற்றத் தவறினால் திமுக அரசு சும்மா மௌனப்பார்வை யாளனாக இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டி ருக்காது இதற்காக இந்திய அரசை நிர்ப்பந்திக்கவும் தயங்காது என்று முத்தமிழ் அறிஞர் முரசு கொட்டியி ருக்கிறார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா அவர்களும் இதை வலியுறுத்தியிருக்கிறார். தி.மு.க.வின் காங்கிரஸ் உறவு சார்ந்தும் இந்திய அரசின் இலங்கை உறவு சார்ந்தும் வெளிப்படும் அறிக்கைகள் இவை. இவை உண்மையான நடவடிக்கைகள் ஆகவேண்டும். அதற்கு தமிழகத்தில் மாபெரும் எழுச்சி ஏற்படவேண்டும்

2) தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக “மோதல் சாவுகள்” நிகழ்த்தப்படுகிறதே இது சரியா?

- சி. கலியமூர்த்தி, செயங்கொண்டம்

சரியில்லை. ஆனால் யார் ஆட்சி செய்தாலும்

இது போன்ற “தாக்கினான் சுட்டேன்” என்ற ஒற்றை வரியோடு பலரது உயிர் சவக்குழிக்கு அனுப்பப்படுவது தொடர்கிறது.

சுடப்படுபவர்கள் பலரும் கிரிமினல்கள் என்று சொல்லப்பட்டாலும் அவர்களை முறைப்படி கைது செய்து வழக்கு தொடுத்து நீதிமன்றத்தின் வாயிலாகவே தண்டிக்க வேண்டுமே தவிர இப்படி மானாவாரியாக சுட்டுத்தள்ள யார் இவர்களுக்கு அதிகாரம் தந்தது?

இவர்களில் பலர் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவு கொண்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இந்த அரசியல்வாதிகள் தான் இப்படிப்பட்ட கிரிமினல்களை உருவாக்குபவர்கள், வளர்ப்பவர்கள். தங்களுக்கு தேவையுள்ளவரை பயன் படுத்திக்கொண்டு, தேவைமுடிந்து போனாலோ அல்லது தங்களுக்கு வேண்டாதவர்கள் ஆனாலோ காவல் துறையை வைத்து கதையை முடித்து விடுவார்கள். அப்படி கதை முடிந்த வர்கள்தான் தூத்துக்குடி கபிலன், ஆசைத்தம்பி, அயோத்தியாகுப்பம் வீரமணி, பாக்சர் படிவேலு, பங்க் குமார், வெள்ளை ரவி, வெங்கடேச பண்ணையார் தற்போதைய சமீபத்திய திண்டுக்கல் பாண்டி முதலானோர். இவர்களின் உள்ளார்ந்த கதையை அறிய இது புரியும்.

இதன்மூலம் கிரிமினல்களை சுட்டுத் தள்ளுவது நியாயம் தானே என்பது போன்ற ஓர் உளவியலை உருவாக்கும் காவல்துறையும், அரசும் நாளைக்கு தங்களுக்கு வேண்டா தவர்களை எல்லாம் அவர்கள் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என தீர்த்துக்கட்ட பயன்படுத்திக் கொள்ளும். இது மிகமிக ஆபத்தான போக்காகும்.

எனவே சனநாயக சக்திகள் ஒருமித்த குரலில் இதை எதிர்க்க வேண்டும், மனிதநேய ஆர்வளர்கள் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

Pin It