bhopal encounter victims

மத்தியப்பிரதேசத்தின் தலைநகரான போபால் என்ற பெயரைக் கேட்டதும் எல்லோருக்கும் நினைவிற்கு வருவது - 1984 திசம்பர் 2 அன்று இரவு அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு பூச்சி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெறியேறிய நச்சுவளியால் மக்கள் ஆயிரக் கணக்கில் மாண்டதும், பல இலட்சம் பேர் இன்று வரை அதன் கொடிய பக்கவிளைவுகளால் துன்புற்று வருவதும் ஆகும்.

சப்பான் நாட்டில் 1945 ஆகத்து மாதம் 6,9 ஆகிய நாள்களில் ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் அணுகுண்டு வீசி, பல இலட்சம் பேரைக் கொன்ற நாளை அம்மக்கள் ஆண்டுதோறும் கண்டன நாளாகக் கடைப்பிடிப்பதுபோல், போபால் நகர மக்களும் ஆண்டுதோறும் நச்சுவளியால் மக்கள் மாண்ட நாளைக் கண்டன நாளாகக் கடைப்பிடிக்கின்றனர். அக்கொடுமை நேர்ந்து முப்பது ஆண்டுகளான பின்னும் மாநில அரசும் நடுவண் அரசும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நச்சுவளியால் பலவகையிலும் கொடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையோ, போதுமான மருத்துவ ஏந்துகளோ செய்து தரவில்லை. ஏனெனில் அடிப்படையில் இந்த அரசுகள் சாதாரண மக்களின் நலனில் அக்கறை அற்றவை - தேவையான போதெல்லாம் வெகுமக்களுக்கு எதிராகச் செயல்படுபவை.

இப்போது போபால் நகரம் பற்றி இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. 31.10.2016 அன்று அதிகாலை 3.30 மணியளவில் போபால் நகரின் மத்தியச் சிறையி லிருந்து விசாரணைக் கைதிகளாக இருந்த எட்டு முசுலீம்கள் தப்பிச் சென்றனர். காவல் துறையின் தேடுதல் வேட்டையில் அவர்கள் ஒரே இடத்தில் சுற்றி வளைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் பெரும் விவாதப் பொருளானது.

போபால் நகர காவல் துறையின் சார்பில், “இந்த எட்டுப் பேரும் தடைசெய்யப்பட்ட இந்திய இசுலாமிய மாணவர் இயக்கத்தைச் (Students Islamic Movement of India - SIMI- சிமி) சேர்ந்தவர்கள். இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடிய குற்றச்சாட்டுகள் உள்ளன. நள்ளிரவுக்குப்பின் இவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் பல்துலக்கும் பிரஷ்ஷைத் திறவு கோலாக மாற்றித் தங்கள் அறைகளின் பூட்டுகளைத் திறந்து வெளியே வந்தபின் மற்றவர்களின் சிறைப் பூட்டுகளைத் திறவுகோலால் திறந்துவிட்டனர். இவர்கள் தப்பிச்செல்வதைத் தடுக்க முயன்ற தலைமைக் காவலர் ராம்சங்கர் யாதவ் என்பவரைக் கொன்றனர். மற்றொரு காவலரைக் கட்டிப் போட்டனர்.

சிறையின் 10 அடி உயரமுள்ள முதல் சுற்றுச்சுவரையும் அடுத்துள்ள 32 அடி உயரமுள்ள சுவரையும் தங்களிடமிருந்த போர் வையை ஏணியாகப் பயன்படுத்தி ஏறிக்குதித்துத் தப்பி ஓடினார்கள். தப்பிச் சென்றவர்களைத் தேடும் பணியில் 300 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். போபால் நகரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்த் கேதி எனும் சிற்றூரின் வயல்களுக்கு நடுவில் இருந்த சிறிய குன்றின்மீது அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். எட்டுப் பேரும் காவல் துறையினரைத் தாக்கத் தொடங்கியதால் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று எட்டு இசுலாமியர் கொல்லப்பட்டது குறித்து விளக்கம் தரப்பட்டது.

அரசின் சார்பில் சொல்லப்பட்ட இந்த விளக்கம் குறித்து மனித உரிமை அமைப்பினரும், ஊடகவிய லாளர்களும், எதிர்க்கட்சிகளும் பல அய்யங்களையும் வினாக்களையும் எழுப்பினர்.

போபால் மத்திய சிறை, 2015ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஓ. (ISO) 9001 தரச்சான்று பெற்ற உயர் பாதுகாப்புக் கட்டமைப்புகளைக் கொண்டதாகும். இச்சிறையில் இந்திய இசுலாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட 21 முசுலீம்கள் மேலும் கூடு தலான பாதுகாப்புக் கட்டமைப்புகள் கொண்ட பிரிவில் (High riskward) தனித்தனி அறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு பாதுகாப்புமிக்க பிரிவிலிருந்து எட்டுப்பேர் எளிதாகத் தப்பிக்க முடிந்த தென்றால், மற்ற சாதாரண பிரிவுகளில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது.

போபால் மத்திய சிறையின் நுழைவாயில் சுவரில் மஞ்சள் வண்ணப் பின்னணியில் கருப்பு எழுத்துகளில், “குற்றச்செயலை வெறுத்திடு; குற்றவாளிகளை அல்ல” என்கிற காந்தியின் கூற்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் தப்பிச்சென்ற எட்டுப்பேர் மீது வெறுப்பும் சினமும் கொண்டு காவல் துறையினர் சுட்டுக்கொன்றதின் மூலம் அவர்கள் குற்றச்செயலை ஆரத்தழுவினர் - காந்தி யின் பொன்மொழிக்கு நேர் எதிராக!

இந்த எட்டுப்பேரும் தப்பிச்செல்ல 45 மணித்துளிகள் ஆகியிருக்கிறது என்று சிறை நிருவாகம் கூறுகிறது. எட்டுப்பேரும் முதலில் பத்து அடி உயரம் கொண்ட சுவ ரையும், அடுத்த 32 அடி உயரம் கொண்ட சுவரையும் தாண்டிக்குதித்தபோது சிறையின் கண்காணிப்புக் கோபு ரத்தில் பணியில் இருந்த காவலர்களின் கண்ணில் படாமல் தப்பியது எப்படி? சிறையில் மூலைக்கு மூலை பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவிகளில் இவர்கள் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகாதது ஏன்? சுழல் விளக்குகள் பாய்ச்சும் ஒளிவெள்ளம் இவர்கள் மீது படாமல் போனது எப்படி? என்கிற வினாக்களுக் குச் சிறை நிருவாகத்தாலோ, மாநில அரசாலோ சரியான விடை கூறமுடியவில்லை. இவர்கள் தப்பிச் செல்வதற்குச் சிறை அலுவலர்களில் சிலர் உதவி இருக்க வேண்டும் என்று கருதிட இடமிருக்கிறது.

பாதுகாப்புக் காரணத்திற்காக இசுலாமிய மாணவர் இயக்கத்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 21 பேரையும் நீதிமன்றத்துக்கு நேரில் அழைத்துச் செல் லாமல், சிறையிலிருந்தவாறே காணொளி காட்சி மூலம் நீதிபதி இவர்களிடம் விசாரணை நடத்தினார். இவர்கள் 2001இல் தடை செய்யப்பட்ட இசுலாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று மெய்ப் பிக்க எந்தவொரு ஆதாரத்தையும் காவல்துறையால் காட்டமுடியவில்லை. அதேபோன்று இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் காட்ட முடியவில்லை. எனவே இவர்கள் தப்பிச்சென்றதை வாய்ப்பாகப் பயன்படுத்தி காவல்துறையினரே இவர் களைத் தண்டிக்கும் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

“அவர்கள் பயங்கரவாதிகள்; அதனால் கொல்லப் பட்டனர்;” இதற்கு மேல் இதில் கேள்வி கேட்பதற்கு என்ன இருக்கிறது? என்பதுபோல் மத்தியப்பிரதேச மாநில பா.ச.க. அரசு கூறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் தாத்திரியில் அக்லெக் என்கிற முசுலீம் தன்வீட்டில் மாட்டுக் கறி வைத்திருந்தார்; அதனால் அவரைக் கொன்றோம் என்று இந்துத்துவக் கும்பல் கூறுவது போன்று இது இருக்கிறது.

போபாலில் எட்டு இசுலாமிய விசாரணைக் கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து பலரும் கேள்விகள் எழுப்புவது தொடர்பாகக் கருத்துக் கூறியபோது நடு வண் அரசின் உள்துறை துணை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “அதிகாரிகளையும் காவல்துறையையும் குறித்து அய்யங்கள் எழுப்புவது, கேள்விகள் கேட்பது என்கிற பழக்கத்தை முதலில் கைவிட வேண்டும்” என்று சொன்னார். மத்தியப்பிரதேச மாநில முதல மைச்சர் சிவராஜ்சிங் சவுகானும் பா.ச.க. தலைவர் களும் சிமி இயக்கத்தவர் கொல்லப்பட்டது குறித்து அரசு வெளியிட்டுள்ள தகவல் மீது கேள்விகளை எழுப்புவது தேசபக்தி இல்லாதது, தேசவிரோதமானது என்று கூறினர்.

முதலமைச்சர் சவுகான் எட்டுப்பேரின் கொலை குறித்துக் கேள்வி எழுப்புகிறவர்கள் சிறையில் தீவிர வாதிகளால் கொல்லப்பட்ட ராம்சங்கர் யாதவின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதாகும் என்று பிரச்ச னையைத் திசைதிருப்பும் வகையில் சொன்னார். நவம்பர் முதல் நாள் மத்தியப்பிரதேச மாநிலம் அமைந்த நாள் விழாவில் சவுகான் பேசிய போது, கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி, “எட்டு பயங்கரவாதிகளைக் காவல் துறையினர் கொன்றது சரிதானே?” என்று கேட்டார். “சரியான செயல்தான்” என்று கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர். எவ்வளவு இழிதகைமை இது!

அரசையும் காவல்துறையையும் எதிர்த்து எவரும் பேசக்கூடாது என்பது சனநாயகத்தின் கருத்துரிமை - பேச்சுரிமை என்கிற ஆணிவேரையே அரிவாளால் அறுப்பது போன்றதாகும். மாறுபட்ட கருத்தைத் தெரி விப்பது-விவாதங்கள் சுதந்தரமாக நடைபெற அனு மதிப்பது ஆகியவற்றின் மூலமே சனநாயகம் உயிர் வாழும். பேச்சுரிமையும் கருத்துச் சுதந்தரமும் சன நாயகத்தின் உயிர்நாடி என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுபடுத்தி உள்ளது.

விசாரணைக் கைதிகளான எட்டு முசுலீம்கள் கொல்லப்பட்டது குறித்து முதலமைச்சர் சவுகான் நிரு வாக விசாரணைக்கு ஆணையிட்டார். நீதிமன்ற விசார ணை தேவையில்லை என்று உறுதிபடக் கூறினார். ஆனால் இந்தப் போலி மோதல் கொலை நடந்த இரண்டு நாளில் அப்படுகொலையைப் படம்பிடித்துக் காட்டும் காணொளி காட்சிகள் வெளியாயின. அதில் கையில் ஆயுதம் ஏதும் இல்லாமல் நிற்கும் விசாரணைக் கைதிகளை அருகில் நின்று காவல்துறையினர் துப் பாக்கியால் சுடும் காட்சி காட்டப்பட்டது. கொல்லப்பட்ட எவரிடமிருந்தும் கைத்துப்பாக்கியோ, வேறு ஆயுதங் களோ கைப்பற்றியதாகக் காவல்துறையும் காட்ட வில்லை. எனவே தீவிரவாதிகள் சுட்டதால் காவல்துறை யினர் திருப்பிச் சுட்டனர் என்று மத்தியப்பிரதேச அரசு கூறியது வடிகட்டிய பொய் என்பது அம்பலமானது. மேலும் இது ஒரு அப்பட்டமான போலி மோதல் கொலை என்பதும் உறுதியாகிறது.

மேலும் இதை உறுதிப்படுத்தும் தன்மையில், போபாலில் காவல்துறையின் கட்டுப்பாட்டு அலுவலகத் திற்கும் களத்தில் எட்டுப்பேரைச் சுட்டுக்கொன்ற காவல் துறையினருக்கும் இடையில் நடந்த உரையாடல் ஒலிப்பதிவும் வெளியானது. அதில் ஒரு குரல் “எட்டுப் பேரையும் சுட்டுத்தள்ளுங்கள்; அவர்களைக் கைது செய்ய முயற்சிக்க வேண்டாம்” என்று ஒலிக்கிறது. சிறிது நேரம் கழித்து “கைதிகள் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர்; துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட்டு விட்டது” என சில குரல்கள் ஒலிக்கின்றன.

அந்த எட்டுப்பேரும் குன்றின்மேல் நிற்க, சுற்றிலும் பொது மக்களும் காவல்துறையும் சூழ்ந்து நின்று கொண்டிருந்தனர். கையில் ஆயுதம் ஏதும் இல்லாத அவர்களை இடுப்புக்குக் கீழே சுட்டு அவர்களை உயி ருடன் பிடித்திருக்க முடியும். ஆனால் காவல் துறை யினர் எட்டுப்பேரையும் சுட்டுக் கொன்றனர். அவர் களில் ஒருவர் உயிருடன் இருந்தாலும், சிறையி லிருந்து தப்பிக்க உதவிய சிறை அதிகாரிகள் யார் என்பது அம்பலமாகிவிடும் என்பதற்காகவே அனை வரையும் கொன்றனர். சந்தனக்கடத்தல் வீரப்பனை யும் இதே காரணத்திற்காகத்தான் உயிருடன் பிடிக்க முயலாமல், சுட்டுக்கொன்றனர்.

இந்தியா சனநாயக நாடு என்றும், இங்கு சட்டத் தின் ஆட்சி நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. சட்டம் என்ன சொல்கிறது? குற்றவாளி என்று மெய்ப்பிக்கப் பட்டதன்பேரில் தண்டனை வழங்கும் அதிகாரம் நீதி மன்றத்துக்கு மட்டுமே உண்டு. ஆனால் போபாலில் என்ன நடந்திருக்கிறது? விசாரணைக் கைதிகளான எட்டு இசுலாமியருக்குக் காவல்துறையே துப்பாக்கி மூலம் தண்டனை வழங்கியிருக்கிறது. காவல்துறை யினருக்கு இந்தத் துணிவு எங்கிருந்து வந்தது. தாங் கள் தண்டிக்கப்படமாட்டோம்; ஏனெனில் அரசும் இதைத்தான் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் போலி மோதல் கொலைகளைச் செய்கின்றனர்.

தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை யின்படி, 2002 முதல் 2008 வரையிலான காலத்தில் இந்திய அளவில் 440 போலி மோதல் கொலைகளும் 2009 முதல் 2013 வரையிலான காலத்தில் 553 போலி மோதல் கொலைகளும் நடந்துள்ளன.

2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா, நீதிபதி ரோகின்டன் ஃபாலிநாரிமன் ஆகியோரைக் கொண்ட அமர்வு காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்படும் நிகழ்வுகள் குறித்து சுதந்தரமான, வெளிப்படையான, முழுமையான விசாரணை நடத்துவதற்காக என 16 வழிகாட்டு விதிகளைத் தீர்ப்பாக அறிவித்தது. இந்தத் தீர்ப்பு மும்பை காவல்துறையினரால் 1995 முதல் 1997 வரையிலான காலத்தில் 99 என்கவுன்டர்களில் 135 பேர் கொல்லப்பட்டது குறித்து மனித உரிமைக் கூட்டமைப்பு தொடுத்த வழக்கில் தரப்பட்டதாகும்.

cases on police

இந்த 16 விதிகளின்படி, மோதல் கொலையில் துப்பாக்கியால் ஒருவரோ அதற்கு மேற்பட்டவரோ சுட்டுக்கொல்லப்படும் போது, அச்செயலில் ஈடுபட்ட காவல்துறையினர்மீது முதல் தகவல் அறிக்கை (FIR) உடனடியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். முதல் தகவல் அறிக்கை, காவல்துறையின் நாட்குறிப்பு, வரைபடம், பதிவு செய்யப்பட்ட மற்ற ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும். மோதல் கொலை குறித்துப் புலனாய்வுத் துறையோ, காவல் துறையின் உயர் அதிகாரியின் நேரடிக் கண் காணிப்பில் நிகழ்ச்சி நடந்த இடத்துடன் தொடர்பில்லாத வேறு காவல்துறை அதிகாரியோ சுதந்தரமான விசாரணை நடத்த வேண்டும்.

இந்த விதிகளில் மற்றொரு முதன்மையான விதி, “மோதல் கொலை நடவடிக்கையில் ஈடுபட்ட காவல் துறையினருக்கு உடனடியாகப் பதவி உயர்வோ, பரிசுத் தொகையோ, பாராட்டுச் சான்றிதழோ வழங்கக் கூடாது. மோதல் கொலை அய்யத்திற்கிடமின்றி தவிர்க்க இயலாதது என்று எண்பிக்கப்பட்ட பிறகே காவல்துறை யினருக்குப் பதவி உயர்வோ, ஊக்கப் பரிசோ வழங்க லாம்” என்று கூறுகிறது. ஆனால் மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எட்டுப் பேரைச் சுட்டுக்கொன்றவர்களுக்கு உடனடியாகப் பாராட்டு விழா நடத்தினார். இந்த மோதல் கொலை யில் நேரடியாக ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் இரண்டு இலட்சம் உருபாயும், தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் ஒரு இலட்சம் உருபாயும் பரிசுத் தொகையாக அறிவித்தார். சிறையில் கொல்லப்பட்ட ராம் சங்கர் குடும்பத்துக்கு ரூ.40 இலட்சம் வழங்குவ தாக அறிவித்தார். 2014இல் உச்சநீதிமன்றம் அறிவித்த விதிகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டிக் கண்டித்த பிறகு, முதலமைச்சர் பரிசுத் தொகை வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

மணிப்பூர் மாநிலத்தில் 1528 பேர் போலி மோதல் கொலை மூலம் கொல்லப்பட்டது குறித்து இறந்தவர் களின் குடும்பத்தினர் தொடுத்த வழக்கில் 2016 சூலை 8 அன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி மதன் பி. லோக்கூர், நீதிபதி யு.யு. லிலித் ஆகியோர் 1528 மோதல் கொலைகளில் ஒரு கொலை குறித்தும் விசாரணையோ, குற்றப்பதிவோ நடக்கவில்லை என்பது கண்டிக்கத் தக்கது என்று கூறினர். கலவரப் பகுதி என்று அறிவிக் கப்பட்ட பகுதி உள்ளிட்ட எந்த இடத்தில் நடக்கும் மோதல் கொலை குறித்து, அச்செயலில் ஈடுபட்ட காவல் துறையினர்மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போது தான் காவல் துறையினரோ, துணை இராணுவப் படையினரோ தாம் தண்டிக்கப்படுவோம் என்கிற எண்ணத்தில் கொடிய வன்முறைச் செயலில் ஈடுபட சிறிதேனும் தயங்குவார்கள் என்று நீதிபதிகள் கருத்து ரைத்தனர்.

இது நீதிபதிகளின் நல்லெண்ணத்தின் அடிப்படை யிலான விருப்பமாக மட்டும் இருக்க முடியுமே தவிர, நடப்பில் இதுபோன்ற விதிகள் காவல்துறையினரை மோதல் கொலைகளைச் செய்வதிலிருந்து தடுத்து விடாது. ஏனெனில் நடுவண் அரசும், மாநில அரசுகளும் எந்தக் கட்சியின் ஆட்சியின்கீழ் இருந்தாலும் அரசுக்கு எதிராகப் பேசுவோரை, செயல்படுவோரை அரச பயங்கர வாதத்தின்மூலம் ஒழித்துக் கட்டுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. எனவே இந்த அரசுகள் காவல்துறை யின் கொடுஞ்செயல்களை ஆதரிக்கின்றன; அவர்கள் தண்டிக்கப்படாமல் காப்பாற்றுகின்றன.

குற்றம் செய்தனர் என்பதற்குப் போதிய ஆதாரம் இருக்கிறது என்பதன் அடிப்படையில்தான் காவல்துறை யினர்மீது விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால் அரசு நிருவாகத்தின் ஒத்துழைப்பு இல்லாத காரணத் தால் மிகக்குறைந்த எண்ணிக்கையினர் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர் என்பதை மேலேயுள்ள புள்ளி விவரம் உணர்த்துகிறது. நடுவண் அரசின் கீழ் உள்ள தேசிய குற்றப்பதிவு ஆணையம் (NCRB) வெளியிட் டுள்ள ஒரு புள்ளிவிவரமே இதற்குச் சான்று பகர்கிறது.

இந்த அரசுகளும், நிருவாக அமைப்பும், நீதித்துறை யும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு எதிராகவே இருக் கின்றன என்பதை தேசிய குற்றப்பதிவு ஆணையத் தின் 2015ஆம் ஆண்டிற்கான அறிக்கை அம்பலப் படுத்துகிறது. இந்த அறிக்கையின்படி சிறையில் இருப்ப வர்களில்  வேறு எந்தப் பிரிவினரையும்விட முசுலீம் களே அதிகமாக இருக்கின்றனர்.

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக்கணக்கின் படி, இந்தியாவில் முசுலீம்கள் 14.2 விழுக்காட்டினர் உள்ளனர். இதன்படி இன்று இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களில் 18 கோடிப் பேர் முசுலீம்கள். 14.2 விழுக்காடாக உள்ள முசுலீம்களில், சிறைகளில் உள்ள விசாரணைக் கைதிகளில் முசுலீம்கள் 20.9 விழுக்காடாக உள்ளனர்.

மக்கள் தொகையில் 16.6 விழுக்காடாக உள்ள தாழ்த்தப்பட்டவர்கள், விசாரணைக் கைதிகளில் 21.6 விழுக்காடாக இருக்கின்றனர். மக்கள் தொகையில் 8.6 விழுக்காட்டினராக உள்ள பழங்குடியினர் விசாரணைக் கைதிகளில் 12.4 விழுக்காட்டினராக இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட பிரிவினராக உள்ள இம்மூன்று பிரிவின ரும் சேர்ந்து விசாரணைக் கைதிகளில் 55 விழுக் காட்டினராக இருக்கின்றனர்.

மாநிலங்களில் என்ன நிலை என்று பார்ப்போம். தமிழ்நாட்டில் மக்கள் தொகையில் இசுலாமியர் 6 விழுக்காடு உள்ளனர். ஆனால் விசாரணைக் கைதி களில் 16 விழுக்காடாக இருக்கின்றனர். மகாராட்டிரத்தில் 11.5 விழுக்காடாக உள்ள இசுலாமியர் விசாரணைக் கைதிகளில் 20 விழுக்காடாக உள்ளனர். மேற்கு வங்கத் தில் 27 விழுக்காடாக உள்ள இசுலாமியர், விசாரணைக் கைதிகளில் 47 விழுக்காடாக இருக்கின்றனர். விசார ணைக் கைதிகளைப் போலவே தண்டிக்கப்பட்டவர் களிலும் இசுலாமியர், தாழ்த்தப்பட்டவர், பழங்குடியி னர் விழுக்காடு அதிகமாக இருக்கிறது.

எனவே, ஆளும் வர்க்கமும், அரசின் நிர்வாகத் துறையும் நீதித்துறையும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான இசுலாமியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகி யோருக்கு எல்லா வகையிலும் எதிராகச் செயல்படு கின்றன. இம்மூன்று பிரிவினரையும் குற்றவாளி களாக, பயங்கரவாதிகளாகவே பார்க்கின்றன.

குசராத் என்கவுன்டர்கள்

குசராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது 2002-2006 காலத்தில் 22 போலி என்கவுன்டர்கள் நடைபெற்றதாகத் தேசிய குற்றப்பதிவு ஆணையம் பதிவு செய்துள்ளது. அவற்றுள் சமீர்கான் பதான், சாதிக் கமால், இஷ்ரத் ஜகான், சோராபுதின் ஷேக், துளசிராம் பிரஜாபதி ஆகியோரின் கொலைகள் போலி மோதல் கொலைகள் என்று விரிவான ஆதாரங்களுடன் மனித உரிமை அமைப்புகளால் கண்டறியப்பட்டன.

இப்போது பிரதமர் மோடியின் வலது கையாகவும், பா.ச.க.வின் தலைவராகவும் உள்ள அமித்ஷா தொடர்புடைய சோராபுதின் போலி மோதல் கொலைப் பற்றி மட்டும் பார்ப்போம். சோராபுதின் சிறிய அளவில் கள்ளக்கடத்தல் செய்து வந்தவர். அமித்ஷாவுக்கு நன்கு பழக்கமான வணிகர்களாகவும் உடன்பிறந்தோ ராகவும் இருந்த தஷ்ரத், ராம்பட்டேல் இருவரையும் சோராபுதின் மிரட்டிப் பணம் பறித்து வந்தார். இது குறித்து அவர்கள் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவிடம் முறையிட்டனர். காவல்துறை மூலம் சோராபுதின் போலி மோதலில் கொல்லப்பட்டார்.

இது 2005இல் நடைபெற்றது. சோராபுதின் போலி மோதல் மூலம்தான் கொல்லப்பட்டார் என்பது 2007 இல் மனித உரிமை இயக்கத்தின் மூலம் அம்பலத் திற்கு வந்தது. சோராபுதினின் உடன்பிறந்தவரான ராபுதின் ஷேக் என்பவர் உரிய ஆதாரங்களுடன் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். சோராபுதின் கடத்திச் செல்லப்பட்டுக் காவல் துறையால் கொல்லப்படுவதற்கு அமித்ஷா துணையாக இருந்தார் என்று கைது செய் யப்பட்டார். மூன்று மாதங்கள் சிறையில் இருந்தார்.

2010 செப்டம்பர் பிணையில் வெளிவந்தார் - தில்லியில் தங்கியிருக்க வேண்டும் என்கிற நிபந்த னையுடன்! 2012இல் உச்சநீதிமன்றம் அமித்ஷா குசராத் மாநிலத்துக்குத் திரும்பலாம் என்று அனுமதி அளித்தது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே, தான் பலிகடா ஆக்கப்படுவதாக அமித்ஷா விடாப்பிடியாகக் கூறிவந்தார்.

2012இல் குசராத் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தன் மீதான களங்கத்தைப் போக்கிக் கொண்டதாகக் காட்டிக் கொண்டார். மோடி 2014இல் பிரதமரான போது, உள்துறை அமைச்சராக இருந்த அவர் முதலமைச்சராக விரும்பினார். ஆனால் கட்சித் தலைமைக்குத் தன்னைப் போன்ற அதிரடியான ஆள் தேவை என்று கருதிய மோடி அமித்ஷாவை தில்லிக்கு அழைத்துச் சென்று, பா.ச.க.வின் தேசியத் தலைவராக்கி னார். இதற்கிடையில் உச்சநீதிமன்றம் அரசியல் பெரும் புள்ளிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் வழங்கும் சிறப்புச் சலுகையாக, போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தைக் கூறி சோராபுதின் வழக்கிலிருந்து அமித்ஷாவை விடுவித்தது. இப்போது அமித்ஷா பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்ந்து இந்தியாவை அதிரடி யாகக் கலக்கிக் கொண்டிருக்கின்றார்.

மாவோயிஸ்டு என்கவுன்டர்

போபாலில் எட்டு முசுலீம் விசாரணைக் கைதிகள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு ஆறு நாள்களுக்குமுன் - 24.10.2016 அன்று ஆந்திர - ஒடிசா மாநில எல்லை யில் ஒடிசா பகுதியில் உள்ள மல்கான்கிரி மாவட்டத்தில் பாலிமெலா அணைப் பகுதியில், ஆந்திர-ஒடிசா மாநிலங் களின் அதிரடிப் படையினர் மாவோயிஸ்டுகள், ஆதர வாளர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட 39 பேரைச் சுட்டுக் கொன்றனர். மல்கான்கிரியில் மாவோயிஸ்டுகள் மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தபோது. எதிர்பாராத வகையில் தாக்குதலுக்குள்ளாயினர். இந்த மோதலில் காவல் துறை யினர் ஒருவரும் காயம் படவில்லை என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

தாக்குதல் நடந்த ஒடிசாவின் தென்பகுதி மாவட்டங் களான ராய்காட், காளஹந்தி, கேரபம் ஆகிய பகுதிகளிலும் ஆந்திரத்தின் விசாகப்பட்டின மாவட்டத்திற்கு வடக்கேயும் தரம் மிகுந்த பாக்ஸைட் கனிமவளம் நிறைந்து கிடக் கிறது. இப்பகுதி முழுவதும் பழங்குடியினர் வாழுகின்ற னர். மாவோயிஸ்டுகளின் ஆதரவுடன் பழங்குடியினர் எதிர்த்து வந்ததால், இப்பரப்பில் சிறு பகுதியை மட்டுமே முதலாளிகளால் கைப்பற்ற முடிந்தது. 24.10.2016 அன்று 39 மாவோயிஸ்டுகளும் அவர்களின் ஆதர வாளர்களும் கொல்லப்பட்டதன் நோக்கம் 2012க்குப் பிறகு வலிமைகுன்றி வந்த மாவோயிஸ்டு இயக்கத்தை இப்பகுதியில் அடியோடு ஒழித்துவிட்டு, பெருமுதலாளி களுக்கு பாக்சைட் கனிமவளம் மிகுந்த பெரும் பரப்பை அளிப்பதேயாகும்.

ஒன்றுபட்டிருந்த ஆந்திராவில் 1995 முதல் இது வரை 32,693 மாவோயிஸ்டுகள் கைது செய்யப் பட்டுள்ளனர். 7,195 பேர் சரணடைந்துள்ளனர். 1750 மாவோயிஸ்டுகள் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினருள் 163 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமைதியின் வடிவாய்க் காட்சியளித்த பிரதமர் மன் மோகன் சிங், மாவோயிஸ்டுகள் உள்நாட்டின் பாதுகாப் புக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்று அறிவித்தது முதல், மாவோயிஸ்டு இயக்கத்தை அரசு கள் தீவிரமாக ஒடுக்கி வருகின்றன.

என்கவுன்டர் குறித்து கேள்விகள் கேட்பதாலேயே கொல்லப்பட்டவர்களை ஆதரிப்பதாகவோ, அவர் களுடைய சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதாகவோ ஆகிவிடாது. சட்டத்தைக் காலின்கீழ் மிதித்துவிட்டு, மனித உரிமைகள் மீறப்படும்போது அவற்றைக் கேள்விக் குட்படுத்துவதில்தான் சனநாயகத்தின் உயிர்மூச்சு அடங்கி இருக்கிறது.

எனவேதான் 9.7.2016 அன்று உச்சநீதிமன்றம் மணிப்பூர் மாநில என்கவுன்டர்கள் குறித்த வழக்கில், “ஆயுதப்படையாலோ, காவல்துறையாலோ கொல்லப் பட்ட ஒருவர் பயங்கரமான செயல்கள் புரிபவராகவோ, ஒரு தீவிரவாதியாகவோ, அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போரிடுபவராகவோ இருந்தாலும் அந்த இறப்பு குறித்துத் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று தீர்ப்பு கூறியது.

ஆகவே போபாலில் 31.10.2016 அன்று எட்டு இசுலாமிய விசாரணைக் கைதிகள் கொல்லப்பட்டது குறித்து உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே. பாண்டே தலைமையில் விசாரிக்க மத்தியப் பிரதேச மாநில அரசு ஆணையிட்டுள்ளது. இந்த விசார ணையும் உச்சநீதிமன்றத்தின் நேரடியான கண் காணிப்பின்கீழ் நடைபெற வேண்டும்.

இதேபோன்று 24.10.16 அன்று மல்கான்கிரியில் 39 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் 9.7.2016 அன்று அறிவுறுத்தியுள்ளபடி நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக சன நாயக நெறிமுறைகளில் நம்பிக்கை கொண்டோரும் மனித உரிமை அமைப்புகளும், பொது மக்களும் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.