10 விழுக்காடு ஒதுக்கீட்டுச் சட்டம் இந்திய ஒன்றி யத்தின் ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கு (வளர்ச்சிக்கல்ல) மிகப்பெரும் அச்சுறுத்தல் என்பதாகத்தான் உணர வேண்டும்; புரிந்துகொள்ளப்பட வேண்டும். ஆனால் இது ஏதோ 10 விழுக்காடு இடஒதுக்கீடுதானே என்றும், பத்தோடு பதினோராம் சட்டம் என்ற தன்மையில்தான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது போன்றும் தோன்றுகின்றது. ஆனால் தோழர் ஆனைமுத்து உச்ச அற மன்றத்தின் இந்திரா சகானி (மண்டல் வழக்கு) வழக்குத் தீர்ப்பு 16.11.1992-இல் வெளியான போது அதில் பிற்படுத்தப்பட்டோருள் வளமான பிரிவினர் இடஒதுக்கீட்டு வரம்புக்குள்ளிருந்து நீக்கப்படுவர் என்று சொல்லப்பட்டதைச் சமூக நீதி கோட்பாட்டின் கூறான இடஒதுக்கீட்டுக் கொள்கை நீர்த்துப் போவதற்கு நச்சு வலை விரித்தாகிவிட்டது என்று ஆணித்தரமாக முழங்கினார்.

தமிழ்நாட்டில் பல கூட்டங்களில் இதுகுறித்து பரப்புரை மேற்கொண்டார். குறிப்பாக அப்போது தலைமைச் செயலகப் பண்பாட்டு மன்றம், தலைமைச் செயலக வளாகத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் இக்கருத் தை நீண்ட, விரிந்த தருக்கங்களுடன் (rationalistic) வெகுமக்களுக்கு எதிரானது என மிகவும் வலுவாகவும் உறுதியாகவும் எடுத்துரைத்தார். செயலக வளாகத்தில் அதிர்வலைகள் பரவின. என் போன்றோர்களும், இட ஒதுக்கீட்டின் ஆழ, அகலம் அறிந்திருந்த பெரும்பாலானோரும் இந்தக் கேட்டினை உணர்ந்திருந்தோம் என்ற அளவில் இருந்தோமேயன்றி அவர் சொன்ன அந்தப் பரிமாணத்தில் புரிந்துகொண்டோமா என்பது அய்யம் என்பது என் நிலை.

ஆனால் அவர் சொன்னது போல் அந்தத் தீர்ப்பு விதைத்த நச்சு விதை பெரும் நஞ்சு மரமாக வளர்ந்து இப்போது இந்தச் சட்ட வடிவில் வந்துவிட்டது. இது அடியோடு அகற்றப்பட வேண்டிய ஒன்று என்பதை மனச் சான்றுள்ளோரும், வெகு மக்களான ஒடுக்கப்பட்டோர் மேம்பாடு, நலன் சார்ந்தோர் உணர்ந்துள்ளனர். குறிப்பாக, சிறப்பாகத் தமிழ்மண், பெரியார் மண் உள்வாங்கியுள்ளது. ஆனால் வடமாநி லங்கள் பெரிய அளவில் எதிர்வினை ஆற்றவில்லை என்பது கண்கூடு. தமிழ்நாட்டிலும் சனாதனக் காவிக் கும்பலும், சில சிவப்புக் கூட்டமும், சில மேடைகளில் 10 விழுக்காடு ஒதுக்கீடு சமூக நீதியையும் சமநீதி யையும் ஒருசேர கொண்டுவரும் என்ற வஞ்சகப் பொய்யுரைகளுக்குச் சிலரைக் கைதட்டி வர திட்டமிடப் பட்டதாகத் தெரிகின்றது.

இந்திய ஒன்றியம், ஒரே தேசம், ஒரே தேசிய இனம் கொண்ட நாடு, தமிழ்த் தேசிய இனம் என் றொன்றில்லை என்னும் கூக்குரல்கள் பகுத்தறிவுக்கு-வரலாற்று அறிவியலுக்கு முரணாக ஒலித்துக் கொண் டிருக்கும் இந்தப் பின்னணியில் இந்தப் 10 விழுக்காடு சட்டம் சமநீதிக்கானது என்றும் மனமறிந்து பொய்யும் புனைவுமாகப் பேசப்பட்டு வருகின்றது. இதை எதிர்ப் பதற்குப் பலர் முன்வருகின்றனர் என்பதுதான் உண்மை. ஆனால் இதை எதிர்கொள்வதற்கும், முறியடிப்பதற்கும் பெரும் வலிமையும், ஆற்றலும் சமூகத்தளத்தில் மட்டுமின்றி, அரசியல் தளத்திலும் பெருக வேண்டும். இந்த அறப் போராட்டத்திற்கும் மேலாக அறமன்றங்களிலும் இதனைக் கடுமையாக எதிர்த்து வென்றிட வேண்டும்.

இதில் பின்தங்க நேரிடின் பெரியாரின் இந்த உயிரான கொள்கைக்கும், அதற்காக அவர் வாழ்நாளெல்லாம் அர்ப்பணிப்புடன் நிகழ்த்திய போராட்டத் திற்கெல்லாம் நாம் உரம் சேர்த்தவர்களாகமாட்டோம். மாறாக அவரைத் தோற்கடித்தவர்கள் என்ற அவல நிலைக்கு ஆளாகிவிடுவோம். மேலும் நம் மா.பெ.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் ஆனைமுத்துவின் இந்திய ஒன்றியம் முழுவதிலும் மேற்கொண்ட ஒப்பற்ற போராட்டத்தின் விளைவால் கண்ட மண்டல் குழு அமைப்பும், மண்டல் பரிந்துரையை வி.பி.சிங் அரசு வீரத்துடன் செயல்படுத்தியதும் சில காலக்கெடுவுக்குள் நின்றுவிடுமோ என்ற அச்சமும் நம்மை உலுக்குவதாக உள்ளது.

இதில் ஒன்றைக் கவனம் கொள்ள வேண்டும். அரசமைப்புச் சட்டம் 90 விழுக்காடான பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கி அம்பேத்கரால் 1950-இல் இயற்றப்பட்டிருந்த நிலையிலும் 1955-இல் காக்கா கலேல்கர் ஆணையம், 1978-இல் மண்டல் ஆணையம் அமைக்கப்பட்டு அதற்கெதிரானப் பெரும் போராட்டம் கட்டவிழ்த்து விடப்பட்டு அதையெல்லாம் தாண்டித்தான் 1994இல்தான் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. ஆனால் அரசமைப்புச் சட்டத்தில் இல்லாத ஒன்றை 2019 சனவரியில் அதன்மீது மோசடி செய்து இரண்டு நாள்களில் அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்து, உடன் சட்டமாக்கி மேல்சாதியினருக்கு இட ஒதுக்கீடு சனவரியிலேயே நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது.

மேல்சாதி மக்கள் மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 விழுக்காட்டினரே. இவர்களுள் இவர்கள் சொல்லும் ரூ.8 இலக்கம் ஆண்டு வருமானம் கொண்ட நலிந்த பிரிவினர் வெறும் 40-50 விழுக்காடு அளவில் தான் இருக்க முடியும். ரூ.8 இலக்கத்திற்கும் அதிகமாக ஆண்டு வருமானம் கொண்டவர் 40-50 விழுக்காட் டுக்கு அளவில் இருப்பர். உண்மையில் ஏழைகளாக, நலிந்தவர்களாகச் செல்லப்படும் இவர்கள் மொத்த மக்கள் தொகையில் ஐந்து விழுக்காட்டு அளவுக்குக் கூட இருக்கமாட்டார்கள்.

இவர்களைக் காரணம் காட்டி, ஆண்டு வருமானம் ரூ.8 இலக்கம் கொண்டவர்களை நலிந்தோர் என்று சொல்லி 10 விழுக்காடு சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து மேலும் கொழுக்க வைத்திடத் துடி துடிக்கிறது காவி சனாதனக் கும்பல். இவர்களுக்குத் துணை நிற்கின்றனர் காங்கிரசுக் கட்சி என்றால் புரிந்து கொள்ள முடிகின்றது. ஏனெனில் பா.ச.க. காவிக் கும்பலிலிருந்தும் இவர்கள் மாறுபட்டவர்கள் அல்ல. உண்மையில் இவர்கள் மாறுவேடத்தில் இருக்கும் காவிக் கும்பல் போன்றவர்கள்தான். ஆனால் ஏழைகளின் தோழன் என்று சொல்லிக் கொண்டுள்ளோர்,

இந்த பா.ச.க. காவிக் கும்பலான நயவஞ்சகர்களுக்குத் துணையாக நின்று ரூ.8 இலக்கம் ஆண்டு வருமான முள்ள ஏழை நலிந்த மேல்சாதியினரைக் காப்பாற்றிட அக்கறை கொள்வதின் உண்மைத் தன்மை கேள்விக் குள்ளாக்குகிறது. ஆனால் இதே நேரத்தில் 120 கோடிக்கும் மேலாக மொத்த மக்கள் தொகையில் 90 விழுக்காடாக உள்ளவர்களுள் வெறும் 10 விழுக்காட்டுக்கும் குறை வானவர்கள்தான் ஆண்டு வருமானம் ரூ.8 இலக்கத்திற்கு மேலுள்ளவர்களாக வளமானவர்களாக இருக்கக் கூடும். இதுதான் உச்ச அறமன்றத்தின் வரையறை.

இங்கு ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிற்படுத்தப்பட்டவனாக உள்ளவன் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு ஒரு ரூபாய் அதிகம் எனில் அவன் வளமானவன். உச்ச அறமன்றம் சொல்கிறது அவர்கள் பசையுள்ளவர்கள் என (Creamy Layer). ஆனால் ரூ.8 லட்சம் வரை ஆண்டு வருமானமுடைய மேல் சாதிக்காரனைத் தலைகீழாக நலிந்தவன் என்று காவிக் கும்பலாலும் அதை ஒத்தவர்களாலும் அடையாளப் படுத்தப்படுவதுதான் ஒரு பக்கம் விந்தையாகவும் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனையாகவும் வஞ்சகமாகவும் இருக்கின்றது. அது எப்படி இந்த முற் பட்ட சாதியான 4-5 கோடிப் பேர் இந்து ஏழைகள் என்றால் 100 கோடிப் பேருக்கும் மேலும் அதிலேயே வறுமையின்பிடியில் உள்ள 17-18 கோடிப் பேர், மேலும் 30-40 கோடிக்கு மேல் இரவு உணவு கிடைக் காதவர்கள். இன்னும் 40-50 கோடி வறுமைக்கோட்டிற்கு சற்று மேலுள்ளவர்கள் இன்னும் சில கோடிப் பேர் ரூ.8 லட்சம் ஆண்டு வருமானத்திற்குக் கீழுள்ளவர்கள் அனைவரும் இந்துக்களில்லையா?

இன்னும் சற்று நுணுகிப் பார்த்தால் வன்கொடு மைக்குள்ளாக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களாக உள்ள 30-35 கோடிப் பேருள்தான் பெரும்பாலும் வறுமை யிலும் ஏழ்மையிலும் வாடுபவர்களாக உள்ளனர். அவ்வகையில் அவர்களும் 90-95 விழுக்காட்டுப் பேர் இவர்கள் அடையாளப்படுத்தும் நலிந்தோர் என்பதாக அன்றி உண்மையிலேயே நலிந்தவர்கள். அவர்களெல்லாம் இந்த இந்துத்துவக் காவிக் கும்பலுக்கு நலிவுற்ற இந்துக்களாகத் தெரியவில்லையா? சரி போகட்டும், ஆனால் இது ஏன் இந்தச் சிவப்புகளுக்கு உறைக்கவில்லை என்பதுதான் மிகவும் நெருடலாக உள்ளது. பிழையே என்றாலும் வாதத்திற்காக இந்தப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட தொகுப்பில் உள்ளோர், இசுலாமியர் உள்ளிட்ட சமயச் சிறுபான்மையருள் இவர்கள் கணிப்பில் நலிந்தோராக உள்ள 100 கோடிக்கும் அதிகமான அனைவருக்குமாக 10 விழுக்காடு ஒதுக்கீடு தரப்பட்டிருக்க வேண்டாமா? இதை வெறும் 4-5 விழுக்காட்டு அளவு மட்டுமேயுள்ள மேல்சாதிக் காரர்களுக்கு மட்டும் சுருக்கிக் கொண்டது மிகப்பெரும் மோசடி, நயவஞ்சகம் அல்லவா?

இந்தக் காவிக் கும்பல் இந்தப் பத்து விழுக்காடு இடஒதுக்கீடு சமூக நீதிக்கோட்பாட்டுடன் சமநீதியையும் கிடைக்கச் செய்கிறது என்று வஞ்சகமாகப் பேசிப் பொய்மையைப் பரப்புகிறார்கள். ஈராயிரம் ஆண்டு களுக்கும் மேலாக இந்து சமயத்தின் பேரால் சமூக ஒடுக்குமுறைக்கும், அடக்குமுறைக்கும் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் உள்ளாக்கப்பட்டுக் கொடுமை யான சமனற்ற சமூகமாக வைக்கப்பட்டிருந்ததை சமமான சமூகமாக மாற்றும் நோக்கத்துடன்தான் அந்த மக்களின் சமூக நிலையை உயர்த்துவதற்காகத்தான் சமூகநீதிக்கோட்பாடும் அதன் முதன்மைக் கூறாக ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டுக் கொள்கையும் வகுக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. எனவே இந்த 10 விழுக்காடு ஒதுக்கீடு சமூக சம நீதியைக் குலைக்கும் உள்நோக்கம் கொண்டது என்று தான் கருதமுடியும்.

இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீடு சமூக நீதி கோட் பாட்டின்படி 50 விழுக்காடு இடஒதுக்கீடு பெறுபவர் களுக்கு எதிரானதல்ல என்றும் மனமறிந்து பொய் பரப்பப்பட்டு வருகின்றது. ஒன்றிய அரசின் பணிகளில் கல்விச் சேர்க்கையில் 50 விழுக்காடு பொதுப் போட்டிக் கான இடங்களில் நாட்டிலுள்ள 90 விழுக்காடு மக்களான அனைத்துப் பிற்படுத்தப்பட்டோருக்கும், பட்டியல், பழங்குடி மக்களுக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பொதுப்பிரிவின் கீழ்வரும் 31 விழுக் காட்டில் மேல்சாதியினர் இன்றி ஏனையோரும் அதிக அளவில் வாய்ப்புப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொதுப் பிரிவின்கீழ் இந்த 10 விழுக்காடு தனிஒதுக் கீடு மேல்சாதியினர் அல்லாத ஏனைய மக்களின் வாய்ப்பைப் பறிப்பதாகும்.

இனி இந்தப் பத்து விழுக்காடு ஒதுக்கீட்டுச் சட்டம் அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிராகவும், உச்ச அறமன்றத் தீர்ப்புகளுக்கு நேர்முரணாகவும், அடிப்படை ஆய்வுகள் ஆதாரமின்றி எவ்வளவு வன்மமாகவும், வக்ரமாகவும் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

10 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் விதி 46-ஐ அடிப்படையாகக் கொள் ளப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதி சொல்வது என்ன?

“அரசு மிகவும் பொறுப்புடன் குடிமக்களுள் நலிந்த பிரிவினர்களின் குறிப்பாகப் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் ஆகியோரைக் கல்வி, பொருளாதாரத் தில் முன்னேற்றம் பெறச் செய்வதுடன் அவர்களைச் சமூக அநீதியிலிருந்தும் எல்லா வகையான சுரண்டல் களிலிருந்தும் பாதுகாக்க வேண்டும்”.

இங்கு குறிப்பாக “பழங்குடியினருக்கும், பட்டியல் வகுப்பு மக்களுக்கும்” என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது அவர்களுக்கு ஏற்கெனவே விதிகள் 15(4)(5) மற்றும் 16(4)-இன்கீழ் கல்வியில், வேலை யில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்டது என்பதோடு மட்டும் நில்லாமல், அவர்களுக்குள் நலிந்த பிரிவினரின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அதன் பயனாய் அவர்களை சமூக அநீதியிலிருந்தும் எல்லா வகைச் சுரண்டல்களிலிருந்தும் காப்பாற்றவும் வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது.

மேலும் ‘நலிந்த பிரிவினர்’ என்ற பொதுவான சொல் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் ‘நலிவு’ (Weak) என்பது சமூக, கல்வி, உடல்நலன் என்பவற்றுடன் பொருளாதாரத்தையும் குறிப்பாகத் தான் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கருதுவதற்கு நலிந்தோரின் கல்வியுடன் பொருளாதார முன்னேற்றத் திற்கும் அரசு மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றுள்ளது. குறிப்பாக பொருளாதாரத்தில் நலிந்த என்ற சொற்றொடர் இவ்விதியில் இல்லாதது பொருளாதார நலிவை மட்டும் மய்யப்படுத்துவதாக இல்லை என்பது தெளிவு. இவ்விதியின் முதன்மையான நோக்கம் இந்த நலிவுற்றவர்கள் சமூக நீதியிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படுவதிலிருந்து இது பட்டியல் குல மக்களையும், பழங்குடி மக்களையும் மட்டும் இலக்காகக் கொண்டு தான் சொல்லப்பட்டுளளது.

அதேநேரம் இந்த விதியில் ‘நலிவுற்றோர்’ என்ற பொதுச் சொல்லைப் பயன்படுத்துவதிலிருந்து பிற மேல் வகுப்பினருள் உள்ள நலிந்தோரை வேறுபடுத்தி விட்டுவிடாமல் அவர்கள் நலனையும் கருத்தில் கொண்டு ஒடுக்கப்பட்டோருடன் முற்பட்ட வகுப்பு நலிவுற்றோரையும் எல்லா வகையான சுரண்டல்களிலிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மேற்சொன்ன விளக்கத்திலிருந்து இந்த விதி 46-கான சுருக்க விவரத்தில் பட்டியல்குல மக்களையும், பழங்குடி மக்களையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளதி லிருந்து விதியின் நோக்கம் இவர்களுள் நலிவுற்ற வர்களை கல்வி பொருளாதாரத்தில் முன்னேற்றி அவர்களைச் சமூக அநீதியிலிருந்து காப்பாற்றுவது என்பது தெளிவு. இதில் எவ்வகையிலும் பிற பிரி வினர்கள் சிறப்பான தன்மையில் குறிப்பிடப்படவே இல்லை. எனவே இந்த விதியை அடிப்படையாகக் கொண்டு 10 விழுக்காடு ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது அரசமைப்புச் சட்ட மோசடி என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.

விதி (15) மற்றும் விதி (16) : இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்காக இவை திருத்தப்பட்டு, புதிய இரண்டு துணை விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த இரண்டு விதிகளையும் முழுமையாகப் படித்தால் அவை வேறுபடுத்தப்பட்டு, புறந்தள்ளலுக்கு உள்ளான சமூக, கல்வி நிலையில் பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டும் தான் கல்வியிலும் வேலையிலும் இடஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்கள். மேலும் இவர்கள் போதுமான அளவு வேலையில் பங்குபெறவில்லை என்று அரசு கருதினால் இடஒதுக்கீடு அளிக்கலாம் எனத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

முற்பட்ட சாதியினருள் எவரும் சமூக, கல்வி நிலையில் எவ்வகையிலும் புறந்தள்ளப் பட்டதாகவோ ஒடுக்குமுறைக்கு உள்ளானதாகவோ ஒன்றிய வரலாற்றில் இல்லவே இல்லை. மேலும் இவர்களுக்குப் போதுமான அளவில் பங்குபெறாதவர் களாக எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்பதுடன், இவர்கள்தான் கல்வியிலும் வேலையிலும் 85-90 விழுக்காடு இடங்களை கபளீகரம் செய்து வருகின்றனர். எனவே இந்த விதிகளைத் திருத்தம் செய்து வந்துள்ள இந்தப் பத்து விழுக்காட்டுச் சட்டம் முற்றிலும் அரச மைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதுடன் மோசடி யானது.

விதி 335-இன் குறிப்பின் கீழ் சொல்லப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் உச்ச அறமன்றம், இடஒதுக்கீடு அளித்திடும் போது தகுதி, திறமை கருத்தில் கொள் ளப்பட வேண்டுமென்று இந்த விதியை வலியுறுத்தும் போது (இதுவே இடஒதுக்கீடு பெறும் சமூகத்தை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. இது சமூகத்தின் தன் மதிப்பைச் சிறுமைப்படுத்துவதாகும் என்பதால் இது அறவே நீக்கப்பட்டு, மனித உரிமை நிலைநிறுத் தப்பட வேண்டும்).

அந்த இடஒதுக்கீடு பெறும் மக்களைச் சமூக அநீதியிலிருந்து அரசு காப்பாற்றிட வேண்டும் என்று வலியுறுத்தி விதி 46-ஐயும் இணைத்தே பார்க்க வேண்டும் எனச் சொல்லியுள்ளது. அதாவது விதி 46-இன் அடிப்படை நோக்கம் ஒடுக்கப்பட்டோருள் நலிந்த வர்களை முன்னேற்றமடையச் செய்ய வேண்டுமென்பது தான். ஆனால் முற்பட்ட வகுப்பிலுள்ள நலிந்தோர் எவ்வகையிலும் சமூக, கல்வித் தளங்களில் எக்காலத் திலும் ஒடுக்குமுறைக்கு ஆளானவர்களே இல்லை. எனவே விதி 46, இந்தப் பத்து விழுக்காட்டு சட்டத்திற்கு அடிப்படையாக இருந்திடவே முடியாது. ஆகவே இச் சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே இது செல்லத்தக்கதல்ல.

10% இடஒதுக்கீட்டுச் சட்டம் அரசமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது மட்டுமல்ல, உச்ச, உயர், அறமன்றங்கள் பல்வேறு வழக்குகளில் எந்த வகையான ஒதுக்கீட்டுக்கும் 1992-லிருந்து 21 ஆண்டுகளாக வலியுறுத்தி (50 விழுக்காடு தான் உச்ச அளவு என) வருகின்றன. அதன் அடிப்படையில் அந்த வழக்குகளில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான இடஒதுக்கீட்டு ஆணைகள் எடுத்த எடுப்பிலேயே தள்ளுபடி செய்யப் பட்டுள்ளன. ஆனால் இச்சட்டத்தை எதிர்த்துத் தொடரப் பட்ட வழக்குகளில் மரண அமைதி காத்து வரப்படு வதின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

பொதுப் பிரிவின் நலிந்த சாதியினருக்கு 10 விழுக்காடு சட்டம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்ட 124ஆம் திருத்த வரைவு வைக் கப்பட்டது. ஆனால் இதற்கு முன்பே சட்டத்திருத்த வரைவுகள் நிலுவையிலிருந்த போதும் மேற்சொன்ன வரைவுச் சட்டம் வேகவேகமாக நிறைவேற்றப்பட்ட தால், இது அரசமைப்புச் சட்ட 103-ஆம் திருத்தமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இந்தச் சட்டம் வரைவாக வைக்கப்பட்ட போது, இந்தச் சட்டத்தின் நோக்கமும் அதற்கான காரணங்களும் என்ற இணைப்பும் தரப்பட்டிருந்தது. அதில் பொருளா தாரத்தில் நலிந்துள்ள குடிமக்களில் ஒரு பகுதியினர் 15(4)(5), 16(4) விதிகளில் சொல்லப்பட்ட சமூகம் மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களாக இல்லாதவர் என்ற தன்மையில் அவர்கள் இடஒதுக்கீட்டுப் பயன்கள் கிடைக்கப் பெறாதவர்களாக உள்ளனர். அந்த நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளித்திட விதி 46 பயன் படுத்தப்பட்டுள்ளது. நாம் முன்பே விரிவாக எடுத்துச் சொன்னபடி விதி 46-இல் “பொருளாதாரத்தில் நலிந்த வர்கள்” என்ற சொற்றொடர் இடம்பெறவில்லை.

ஆனால் அதில் வெறும் “நலிந்த பிரிவினர்” என்ற பொதுச் சொற்றொடர் இடம்பெற்றுள்ளது. இதன் பொருள் ஒட்டுமொத்த மக்களுள் சமூகம், கல்வி போன்ற பல நலிவுற்றவர்களைப் பொதுவாகக் குறிப்பிடுவதாகத் தான் பொருள்கொள்ள முடியும். இக்கூற்று, விதியில், அந்த நலிந்த பிரிவினர் கல்வியிலும் பொருளாதாரத் திலும் பயனடையும் வகையில் பொறுப்பான நடவடிக் கைகள் மேற்கொண்டு அவர்களைச் சமூக அநீதியி லிருந்தும் மற்ற பலவகைச் சுரண்டல்களிலிருந்தும் அரசு காப்பாற்ற வேண்டுமென்றுதான் சொல்லப் பட்டுள்ளதிலிருந்து கல்வி, சமூகக் கூறுகள்தான் முதன்மையானது என்பதையும் பொருளாதாரம் ஒட்டு மொத்த மக்களுக்குமாகப் பொதுவாகச் சொல்லப்பட் டுள்ளது என்பதால் மேற்சொன்ன கூற்று உறுதியாகிறது. எனவே நோக்கமும் காரணங்களும் பொய்யாகப் புனைவாக சட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டு சட்டத்தை மோசடியாக நிறைவேற்றிவிட்டனர்.

இந்திய ஒன்றியத்தின் வரலாற்று வரையறைகள் பண்டை இந்தியா, இடைக் கால இந்தியா, நவீன இந்தியா என்று அறியப்பட்டிருந் தாலும் இதன் ஊடே மிகவும் அழுத்தமான தடங்களை இந்திய வரலாற்றில் பதிந்த முதன்மையான ஒப்புமை யற்ற ஒன்று உண்டு என்றால் மண்டல்குழு அமைப்பு, அதன் பரிந்துரைகள், அவற்றின் நிறைவேற்றம் முதலானவை என்பதை உலக வரலாறே எடுத்தியம்பும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. இதன் விளைவால் இந்திய ஒன்றிய வரலாறு இருபெரும் பிரிவுகளாக மண்டலுக்கு முன், மண்டலுக்குப் பின் என்று நிலை பெற்றுவிட்டது.

இந்த வரலாற்றை நிகழ்த்துவதற்கு மிகப்பெரும் உந்து சக்தியாக விளங்கியோர் பலர். அடித்தளமிட்டார் பெரியார். சட்டமாக்கினார் அம்பேத்கர். வெறும் அரசமைப்புச் சட்டத் தாளாகவே இருப்பதைக் கண்டு வெகுண்ட தோழர் ஆனைமுத்து அவர்தம் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் அரும் பெரும் தோழர்களுடனும் வடபுலத் தோழர் ராம் அவதேஷ்சிங் துணையுடனும் நாடு முழுவதும் மிகவும் பெரும் கிளர்ச்சிகளையும், மாநாடுகளையும், போராட்டங்களையும் பல நூறு பொதுக் கூட்டங்கள் வாயிலாகவும் வீரம் நிறைந்த பரப்புரைகளையும் மேற்கொண்டு அரசமைப்புச் சட்டத்தாளை நடை முறைக்குக் கொண்டுவர முதல் படியாக மண்டல் பிற்படுத்தப்பட்டோர் நலக்குழுவை அமைத்திட வைத்தார்.

இதை வரும் காலமெல்லாம் உலக வரலாறும் இந்திய வரலாறாக எடுத்தியம்பும். பின் திராவிடர் கழகமும், பெரியார் அமைப்புகள், திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி அனைத்தின் இணைத்த கூட்டு இயக்கத்தால், கியானி செயில் சிங் மண்டல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைத்திடச் செய்தார். அதன் தொடர்ச்சியாக, இந்திய ஒன்றிய முதன்மை அமைச்சர் விசுவநாத் பிரசாத் சிங் மண்டல் குழு அறிக்கையின் பரிந்துரைகளின்படி, பிற பிற்படுத்தப்பட் டோருக்கு இதுவரையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்து ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்தார். அதன் பின் எதிர்கொண்ட தடைகளையும் மீறி 1994 அன்று செயல்பாட்டுக்கு வந்தது.

இவ்வளவு பெரும் மக்களின் அயரா உழைப்பினால் உருவாக்கப்பட்ட மண்டலுக்கு முன், மண்டலுக்குப் பின் அறியப்பட்டு நிலைபெற்றுவிட்ட வரலாற்றுச் சுவடை அசைத்து, அழித்திட முனைவதுதான் மோசடிச் சட்ட மான 10 விழுக்காட்டு இடஒதுக்கீட்டுச் சட்டம். இதனைப் பார்த்துக் கொண்டே வாளா இருப்பது போன்ற ஒரு நிலை மிகவும் பெரும் வேதனையாகவும் நெஞ்சைப் பிழிவதாகவும் பதைபதைப்பாகவும் இருக்கின்றது. பார்ப்பனியக் கும்பல் எவ்வண்ணம் கொண்டவர்கள் ஆயினும் மனமறிந்து கற்பனைக் கெட்டாத பொய்களையும், புனைகளையும் வஞ்சகமாக மக்களிடையே பரப்பி இச்சட்டத்தின் துணைகொண்டு வரலாற்றுப் பிழையை ஏற்படுத்தத முற்படுவதை என்ன விலை கொடுத்தும் முறியடித்திட வேண்டும்.

வெகுமக்களின் உயிரான சமூக நீதிக் கோட்பாட்டின் முதன்மைக் கூறான இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் காத்து அதன் தேவைக் கான காலம் கனியும் வரை அதை நிலைபெற்றிடச் செய்திடல் வேண்டும் என்று மேற்சொன்ன அமைப்புகள், கட்சிகள் சார்ந்த அனைத்துத் தோழர்களும் இக்கொள் கையால் ஈர்க்கப்பட்ட தன்னார்வங் கொண்ட கொள்கை யாளர்களும், பொது வெளியில் உள்ள பெருந்திரளான கொள்கையின் பயன் பெற்றோர்களும் ஏனைய வெகு மக்களான ஒடுக்கப்பட்டோரும் ஒரு சேர இணைந்து இந்த 10 விழுக்காடு சட்டத்தை முறியடிக்கும் வரலாற்றுக் கடமையை வெற்றி பெறச் செய்திடல் வேண்டும்.

இந்தப் பெரும் பணியை தலைமேல் போட்டுச் செயல்பட எல்லோருக்கும் பொறுப்பு இருப்பதென்பது உண்மையெனினும், இதனூடாக தற்போது முதன்மை யான வேலைத் திட்டமாக உச்ச அற மன்றத்தில் தண்ணீரில் போட்ட கல்லுப் போல் அசைவற்றுக் கிடக்கும் வழக்கை உயிர்ப்பித்து எழுப்ப வேண்டியுள்ளது.

பெரியாரின் உயிர்க்கொள்கையான இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிலைத்திட வைப்பதில் பெரியார் உணர்வாளர்கள் அனைவரின் முதன்மையான பொறுப்பு என்ற போதிலும், இந்த ஒன்றை மட்டும் வேலைத் திட்டமாகக் கொண்டு ஒத்த கருத்துக் கொண்ட அனைவரின் கூட்டமைப்பை உருவாக்கி அது செயல்படுவதற்கு ஒரு வலிவான குறிப்பாகப் பொருளாதாரம், பல்வேறு கட்டமைப்புகளையும் கொண்ட அமைப்புதான் முன் கை எடுத்துக் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறு வதில் முனைப்புக் கொண்டாலும், அவற்றிற்கு உள்ள பல்வேறு செயல்பாடுகளுடன் இந்த ஒற்றை வேலைத் திட்டத்தை மேற்கொள்வது சிக்கலாக அமையலாம் என்பதால் ஒரு தனி அமைப்புத்தான் இந்தப் பொறுப்பைத் தலைமேல் போட்டுக் கொண்டு ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டியுள்ளது.

பெரியார் வழிவந்தோர் எனப் பலர் இருப்பினும், இந்தப் பொறுப்பைத் தோழர் கி.வீரமணியின் தலை மையிலான திராவிடர் கழகம் ஏற்றிட முன்வருவதுதான் சாலச் சிறந்ததாகக் கருதலாம். எனவே மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சிதான், இதற்கான தொடக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையிலும் பொறுப்பிலும் உள்ளது. இதற்குக் கட்சி செயல்திட்டம் வகுத்து அதனை நடைமுறைப்படுத்திட முன்வர வேண்டுமென்று கட்சியின், உறுப்பினர் தொண்டன் என்ற ஒரே தகுதியுடைய இக்கட்டுரையாள னாகிய நான் முன்மொழிகிறேன். இதில் கருத்தொற் றுமை கொண்ட அனைவரும் இது உடனடி தேவை என்பதில் மாற்றுக்கருத்து கொள்ள வாய்ப்பில்லை என்றே சொல்லலாம்.

இப்பெரு முயற்சியில் முனைந்து செயல்படுவதற்கு இப்பொருள் ஆழமும் அகலமும் கொண்டு விரிவாகவும் ஆய்வுக்குள்ளாக்குவதற்கு ஏதுவாக இந்தப் பத்து விழுக்காட்டுச் சட்டம் முன்பே குறிப்பிட்ட தொடர்பான அரசமைப்புச் சட்ட அனைத்து விதிகளையும் ஆங்கிலத் திலும் அதன் தமிழ்மொழியாக்கத்தையும் அடுத்த இதழிலும் அப்படியே வெளியிடப்பட வேண்டும் எனக் கருதுகிறேன்.

பெரியார் கொள்கைக்கு நேர் எதிரான இக்கொடுஞ் சட்டம் எவ்விலை கொடுத்தேனும் அடித்து நொறுக்கப் பட்டு, இந்திய ஒன்றியத்தின் மிகவும் குறிப்பாகத் தமிழ்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை வழி யான இடஒதுக்கீட்டுக் கொள்கை காப்பாற்றப்பட ஆவனவெல்லாம் செய்வோம்.