ஆள்வதற்குத் தேர்ந்தெடுத்தோம் ஆனா லவரோ

               அடுத்தவர்க்குச் சொரிந்துவிட்டு தரகிற் காக

ஆள்பிடித்துக் கொடுக்கின்ற வேலை செய்வார்

               அதிகாரம் பதவிபணம் ஒன்றே நோக்கம்;

வாள்பிடித்து வாழ்ந்தபழம் பெருமை இன்று  

               வாய்பிளந்து வணங்கிநின்று வடவர் தம்மின்

தாள்பிடித்து தன்மானம் கெட்டுக் கெட்டுத்

               தரந்தாழ்ந்து நிற்கிறது அய்யோ வெட்கம்!

மந்திரங்கள் பலஓதி மயக்கி வைத்து

               மாநிலங்களுள்புகுந்து நாசம் செய்து

எந்திரங்கள் வழியாகச் சூழ்ச்சி வைத்து

               எப்படியோ வெற்றிகளை ஆக்கிக் கொண்டு

மந்திகளின் கைகளிலே மாலை தந்து

               மாபார தம்செய்யக் கிளம்பி விட்டார்!

எந்திரனை எழுப்பிதமிழ் நாட்டை ஆள

               எத்தனையோ யுக்திகளைச் செய்யு கின்றார்!

மதுவாலே சிலகோடி கெட்டார்; கெட்ட

               மதத்தாலே சிலகோடி கெட்டார்; என்றும்

பொதுவாகப் பேசிப்பலர் கெட்டார்; தீங்கைப்

               பொறுத்திருந்து கெட்டவரோ மற்றோர்; இங்கே

எதுவாக வரும்நாளை கேடு? என்றே

               எண்ணுதற்கே முடியாது; எல்லாம் கேடு!

இதுதானிங் கிதற்கெல்லாம் மூலம் என்றால்  

               இழிவான அரசியலே என்பேன் நானும்!

புல்கூட முளைக்காத படியிந் நாட்டை

               புல்டோசர் ஓட்டியவர் சுரண்டி விட்டார்

நெல்கூட விளையாத படிக்கு எங்கும்

               நிலத்தடிநீர் உறிஞ்சிவிட்டார் வறட்சி; பஞ்சம்!

கல்லுக்கு வரிசைகட்டி நிற்கும் கூட்டம்

               கல்விக்குப் போராட வரவே மாட்டார்

தில்லிக்குக் காவடியை எடுக்கும் கூட்டம்

               திருந்தாது; தமிழர்களே விழித்துக் கொள்வீர்!

எப்போதோ இனஅழிப்பு வேலை நூறு

               எதிரியெலாம் சூதாகத் தொடங்கி விட்டார்

ஒப்பாத வடவர்தமை தமிழ்நாட் டுக்குள்

               ஒருகோடி எண்ணிக்கை நெருங்க விட்டார்

தப்பான மொழிக்கொள்கை கையெடுத்தார்  

               தமிழ்நாட்டுள் இந்தியினைப் புகுத்து கின்றார்

இப்போதே நம்விழிகள் சிவக்க வேண்டும்

               இரண்டிலொன்று பார்ப்பதற்குத் துணிய வேண்டும்!