ஜம்மு-காஷ்மீரத்தில் முதலீட்டாளர்களின் முதலாவது மாநாடு நடைபெற்றது. அதையொட்டி அம்மாநிலத்தின் தொழில்-வணிகப் பேரவையின் தலைவர் சேக் ஆசிக் அகமது இந்து நாளேட்டின் செய்தியாளரிடம் கூறியதாவது :

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பற்றிய தவறான புரிதலும் தேசிய ஊடகங்களின் எதிர்முகக் கண்ணோட்டமும் தொழில் வணிகத்துக்குத் தேவையான ஆதரவைப் பெறுவதற்குத் தடையாக இருக்கின்றன; நிலமும் இன்னொரு தடையாக இருக்கிறது. நில உடைமை தொடர்பான சட்டம், காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரக் குடியுரிமை பெற்றிருக்காதவர்களை இம்மாநி லத்தில் நிலத்தையோ அசையாச் சொத்துக்களை யோ வாங்கிட அனுமதிக்கவில்லை. அது அவ்வாறு இருப்பினும் 1978-ஆம் ஆண்டில் முதல்வர் சேக் அப்துல்லா தலைமையிலான அரசு நில மானியச் சட்டத்தை நிறைவேற்றியது.

அந்தச் சட்டம் காஷ்மீரத்தைச் சேராத வெளியாள்களுக்கு நிலத்தை 99 ஆண்டுகளுக்கு குத்த கைக்குத் தர அனுமதிக்கிறது. மாநில அரசு ஒரு நிலப் பகுதியை தொழில் துறைக்கான நிலம் என அறிவிப்புச் செய்து அதை நீண்ட காலத்துக்குக் குத்தகைக்குத் தரலாம். ஆனால் தொழில் பூங்காவுக்கு வெளியே உள்ள நிலத்தைக் குத்தகைக்குத் தரலாம் என்ற திட்டத்துக்கு குடிமக்கள் பலரிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இந்தத் திட்டத்தை பா.ச.க. - மக்கள் சனநாயகக் கட்சிகளின் கூட்டணி அரசு மறுஆய்வுக்கு அனுப்பியது.

இதையொட்டி அரசு அலுவலர் ஒருவர் கூறியதாவது :

நிலத்தைப் பற்றிய விவகாரத்தில், இந்த ஒரு சிக்கல் மட்டுமல்ல; ஒருவேளை வணிகத்தில் இழப்பு ஏற்பட்டு அதனால் கடன் கணக்கை வங்கி முன்னதாக முடிவு கட்டினால் அப்போது குத்தகை நிலத்தை யாரும் ஏலத்தில் எடுக்க முடியாது.

இதனால் வணிகம் திவாலாகும் போது அதனுடைய அசையாச் சொத்துக்களை ஏலம் விட்டுக் கடனை முடித்துக் கொள்ளலாம் என்கிற வாய்ப்பு கிடைக்காமல் போகிறது. இந்தக் காரணத்தால் வணிக நிறுவனங்கள் கடன் பெறுவது பாதிக்கிறது. இத்தகைய சிக்கல்கள் அனைத்தும் விவாதிக்கப்பட்டுத் தேவையான நல்ல முடிவு காணப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

செய்தி : “தி இந்து” ஆங்கில நாளேடு, 4.7.2019, பக்கம்-10;

தமிழில் : கலசம்