சமூகத்திலும் கல்வியிலும் ஒடுக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட மக்கள், பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் அரசு அதிகாரங்களில் பங்கீடு பெற்றிடும் வகையில் அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டுக்கு வழிவகை செய்து அம்பேத்கர் அரச மைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தார். இது 1950-லிருந்து நடைமுறைக்கு வந்து, வேலையில் இடஒதுக் கீட்டினால் முழுமையாகப் பயனடைந்திட வழியில்லாமல் கல்வியில் இடஒதுக்கீடு வழங்கப்படாமலிருந்ததைச் சுட்டி, போராடி, பெரியார் அரசமைப்புச் சட்டத்தை முதல்முறையாகத் திருத்திடச் செய்து கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.

anitha ariyalur 311இவ்வாறு பிற்படுத்தப்பட்டோருக்கு மய்யரசுப் பணிகள், வேலைகள், கல்வியிலும் இடஒதுக்கீடு அளித்திட அரசமைப்புச் சட்டத்தில் வழிவகையிருப்பினும் மய்ய அரசும், உயர் அறமன்றங்களும் இவ்வெகுமக்களுக்கு வஞ்சகமாக வழங்க மறுத்து வந்ததைத் தன் நுண் ணறிவுத் திறனாலும், அரசமைப்புச் சட்டம் பற்றிய நுட்பமான ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் அணுகி தக்க செயல் திட்டங்கள் வகுத்து தோழர் வே. ஆனைமுத்து, அவர்தம் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் முதன்மையான வேலைத் திட்டமாகக் கொண்டு சேலம் சித்தையன், சீர்காழி முத்துசாமி, அரியலூர் அ.செ. தங்கவேலு, தாதம்பட்டி எம்.இராசு, பீகார் இராம் அவதேசு சிங், சேதிலால் சேட் போன்றோர் இன்னும் பல ஆயிரம் கட்சித் தொண்டர்கள் துணைகொண்டு மய்ய அரசைப் பணிய வைத்து மண்டல் குழு அமைத் திடச் செய்தார்.

அக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நாடாளுமன்றத்திலும் வைத்திட வழிகண்டார். பின் இடஒதுக்கீட்டின்பால் பற்றுள்ள அரசியல் கட்சிகள், அரசியல் அமைப்புகள், ஆனைமுத்து அவரது மா.பெ. பொ.க.வின் இடைவிடாத உழைப்பின் பயனாய் மய்ய அரசுப் பணிகள், வேலைகளில் பிற்படுத்தப்படோருக்கு இடஒதுக்கீட்டுக்கான திட்டம் நிறைவேற இறுதியில் விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்) மய்ய அரசுப் பணிகள் வேலைகளில் மட்டும் ஒதுக்கீடு அளித்து, 1990இல் மய்ய அரசு ஆணை பிறப்பித்து வரலாறு படைத்தார். இதன்படி இந்திய வரலாறு மண்டலுக்கு முன்னர், மண்டலுக்குப் பின்னர் என்ற இருபெரும் பிரிவுகள வகுத்தெடுத்திட வழிகோலிய தோழர் ஆனைமுத்து, மய்ய அரசுக் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு பெற்றிடும் பணியையும் தொடர்ந்து பிற கட்சிகள், அமைப்புகளின் துணைகொண்டு போராடி அதையும் வென்றெடுத்தார்.

ஆனால் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் சிதைத்திட என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அவற்றையெல் லாம் மய்ய அரசும், உயர், உச்ச அறமன்றங்களும், இடஒதுக்கீட்டின் வழியான முழுப் பயன்களும் ஒடுக் கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கிடைத்திடாதபடி ஆவன வெல்லாம் செய்து வருகின்றனர்.

மய்ய அரசுப் பணிகள், வேலைகளில் 1943லிருந்து பட்டியல் குலத்தினர் இடஒதுக்கீடு பெற்று வருகின்ற போதும், 1950லிருந்து பழங்குடியினரும், 1994 லிருந்து பிற்படுத்தப்பட்டோர் பெற்று வருகின்ற நிலை யிலும் 22.5 விழுக்காட்டு மக்கள் தொகை கொண்ட பட்டியல் குலத்தோர் பழங்குடியினர் ஆகிய இரு பிரி வினரும் சேர்ந்து உயர் பணி, வேலைகளில் இன்னும் 10 விழுக்காடு கூடப் பெறாமலும், 57 விழுக்காட்டுக்கு மேலான பிற்படுத்தப்பட்டோர் (மதச் சிறுபான்மை களாக உள்ள பி.ப. உள்ளிட்ட) வெறும் 5 விழுக்காடு அளவில்தான் இடஒதுக்கீடு பெற்றுள்ளனர் என்ற இழிநிலைதான் உள்ளது.

அதன் நீட்சிதான் மோசடி மோடியின் மய்ய அரசால் உச்ச அறமன்றத் துணையுடன் கொண்டுவரப்பட்ட ‘நீட்’ (NEET) எனும் தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு. அதன்படி இந்திய ஒன்றியத்தில் (Indian Union) உள்ள அனைத்து மாநிலங்களில் (சில விதிவிலக் குடன்) உள்ள மருத்துவப் பட்டப் படிப்பு இடங்களுக்கு நாடு முழுவதிலுமிருந்து 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளோருக்கு ஒரு பொது நுழைவுத் தேர்வை நடத்தி, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும். இதனால் தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி 4000 இடங்கள், தமிழ்நாட்டு மாணவர்களால் நிரப்பப்பட்டு வந்ததை நீர்த்துப்போக வைத்து, இங்கு பொதுத் தகுதி, திறமை என்ற பெயரில் மாநிலங்களின் அதிகாரங்களை அடியோடு அடித்து நொறுக்கிவிட்டனர். இந்திய ஒன்றியத்தின் அடிப் படைத் தத்துவமான கூட்டாட்சித் தத்துவத்திற்கு(Federalism) மரண அடி கொடுத்துவிட்டது, மோசடியான மோடி அரசு.

தென்னாப்பிரிக்காவின் இனவெறி ஆட்சியை எதிர்த்து நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தி, அதை ஒழித்துக் கட்டி அந்நாட்டின் குடியரசுத் தலைவராகிய பின் நெல்சன் மண்டேலா, மண்டலுக்குப் பின்னால் இந்தியா வந்தபோது மண்டல் ஒதுக்கீடு பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பெருமிதத்துடன் இது உலகிற்கே ஓர் முன்காட்டு என்று கூறினார். மேலும் இது மக்கள், தம்மைத் தாமே ஆண்டுகொள்ள வேண்டுமென்ற கோட்பாட்டின் வடிவம் என்றார். பொதுத் தகுதி, திறமை என்ற பெயரால் வெகுமக்கள் வஞ்சிக்கப்பட்டு வந்த வெற்றுக் கோட்பாட்டுக்குக் கொடுத்த மரண அடி என்றும் வெகுமக்களாகிய நாங்கள் முட்டாள்கள் என்று எவர் கருதுகின்ற போதிலும், நாங்கள் முட்டாள்களாகவே இருந்து எங்களுடைய ஆட்சியை வேறொருவன் செய்யும் வெற்றுத் தகுதித் திறமையைப் புறம் தள்ளிவிட்டு, எங்களுடைய தகுதி திறமையுடன் அமைத்துக் கொள் கிறோம் என முழங்கினார்.

இப்போது வரை தகுதி, திறமை எனக் கூறிவரும் உச்ச அறமுன்றமும் பார்ப்பனப் பிடிக்குள் மண்டிக் கிடக்கும் மோசடியான மோடி அரசும் ஒரு நூற்றாண் டுக்கு முன் வெள்ளையனின் குடியேற்ற அடிமை நாடாக இருந்த காலத்தில் அன்னியனின் தகுதி, திறமை தத்து வத்தை அன்று பெரிய படிப்பாளிகள், அறிவாளிகள் என்று பீற்றிக்கொண்ட பார்ப்பனக் கூட்டம் எப்படி மறுதளித்தது என்பதை நினைவு கூரவேண்டும்.

அப்போது, இந்தியக் குடிமைஇயல் பணிக்கு (இ.கு.ம. ICS) இந்தியாவில் எவனும் தகுதியற்றவன் எனக் கூறி, அதற்கான தேர்வு எழுத அனுமதிக்கப்படாமல், வெள்ளையர்கள் மட்டுமே தகுதியுள்ளவன் எனக்கூறி, அப்பதவிகளில் அவர்கள் மட்டுமே அமர்த்தப்பட்டனர். பின் இந்தியர்களும் (பார்ப்பனர்களும்) அனுமதிக்கப் பட்ட போதும், இந்தியாவில் எங்கும் தேர்வு மய்யம் இல்லை. இலண்டனில் மட்டும் எழுதலாம் என்றனர். அதன்பின் இலண்டன் செல்லப் போதிய வசதியற்ற வர்கள் என இந்தியாவின் சில பெரும் நகரங்களில் மட்டும் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். வெள்ளையருடன் போட்டியிடும் அளவில் தகுதியில்லை எனக்கூறி, இந்தியர் களுக்கு ஒதுக்கீடு பெற்றனர். அந்தத் தேர்விலும் தகுதி காண் மதிப்பெண் பெற இயலாது. ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்குக்கூட தேர்வு பெற முடியவில்லை எனச் சொல்லி, தகுதிகாண் மதிப்பெண் அளவைக் குறைத்துப் பெற்றனர். இதிலிருந்து அந்தக் காலக்கட்டத்தில் உழைப்பை மறுத்து, படிப்பது ஒன்றுதான் அவர்கள் வேலை யென்றிருந்த பார்ப்பனர்கள் ஒப்பீட்டளவில் தகுதியற்ற வர்களாகத்தான் இருந்திருந்தனர். ஆனால் நாடு விடுதலையடைந்ததும், பெரியார் சொன்னதுபோல் 3 விழுக்காடு பார்ப்பனர்கள் இந்திய ஆட்சி அதிகாரத்தைத் தங்களுக்கு மாற்றிக்கொண்டு உழைக்கும் உற்பத்திச் சாதியாக, படிப்பு மறுக்கப்பட்டவர்களாக இருந்த 97 விழுக்காட்டு வெகுமக்களை இந்திய ஆட்சிப் பணிக்கு ஏற்ற தகுதி திறமை குறைந்தவர்கள் எனக்கூறி பொதுப் போட்டியில் அவர்கள் வெற்றி பெற விதிகள் வகுத்துக் கொண்டனர். இந்தப் பின்புலத்தையெல்லாம் ஆய்வுக் குட்படுத்தி சென்னை மாகாணமாக இருந்த தமிழ் நாட்டின் ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சி, 1920 களிலேயே வெகுமக்களாகிய ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் அன்றி பார்ப்பனர்கள் போன்ற மேல்சாதிக்காரர்களுக்கும் அரசுப் பணியில் ஒதுக்கீடு அளித்தது. அடுத்து விடுதலை வெற்ற இந்திய ஒன்றியத்தில் ஒடுக்கப்பட்ட மக்களான பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசமைப்புச் சட்டத்திலும், ஆட்சி அதிகாரத்திலும் பங்கீடு அளிக்கும் வகையில் அம்பேத்கர் வழிவகை செய்திட்டார். இதன்வழி கிடைக்க வேண்டிய பயன்கள் கிடைக்கப் பெறாவகையில் ஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மிகக்கூடாது. வளமடைந்த பிற்படுத்தப்பட்டோரை, இடஒதுக்கீட்டு வளையத்தி லிருந்து நீக்குவது, பதவி உயர்வு பெறுவதில் கடைப் பிடிக்கப்பட்ட இடஒதுக் கீட்டை ஒழிப்பது என்று திட்ட மிட்டு பார்ப்பன மய்ய அரசு, உச்ச, உயர் அறமன்றங் களின் செயல்களையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்கள் படிப் பிலும் வளர்ந்து வருவதைத் தடை செய்யும் வகையில் தான் ‘நீட்’(NEET) ஐப், புகுத்தி அவ்வகுப்பினரை நிலைகுலைய வைத்துவிட்டனர்.

இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்ட அடிப்படை விதிகளில் அளிக்கப்பட்டுள்ள சமூக நீதியின் முதன்மைக் கூறான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளைப் பன்னெடுங் காலமாகப் பல்வேறு வழிகளில் நீர்த்துப்போக வைத் துள்ள இந்த 3 விழுக்காடேயுள்ள பார்ப்பனக் காலிக் காவிக் கூட்டம், 70 ஆண்டைய விடுதலை பெற்ற நாட்டில் மய்ய அரசையும், பல மாநில அரசுகளையும் பணிகளையும் உயர் கல்விகளையும் முற்றுரிமை பெற்றது போல் அனைத்துத் தளங்களிலும் 70 விழுக் காட்டுக்கு மேலும் சூறையாடிக் கையகப்படுத்திக் கொண்டு அவர்கள் மட்டுமே வளம் கொழிக்கும் வாழ்வைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக் கொண்டு வெகுமக் களை முற்றிலும் வஞ்சித்துவிட்டனர். இவர்களின் தகுதி திறமையின் கொடும் விளைவுகளைக் கீழே யுள்ள சிலவற்றைக் காணலாம்.

*             20 கோடி மக்களுக்கு ஒருவேளை மட்டும் உணவு (உணவு வேளாண்மை நிறுவனம் FAO))

*             30 கோடிக்கு மேலான மக்களை நாளும் இரவு உணவு கிடைக்காதவர்களாக வைக்கப்பட்டுள்ளனர்.

*             35 கோடி மக்களுக்கும் மேலானவரை படிப்பறிவு இல்லாதவர்களாக.

*             நாட்டிற்கே உணவு தரும் உழவர்கள் பல இலட்சக் கணக்கில் தற்கொலை செய்து கொள்பவர்களாக.

*             100 கோடி மக்களுக்கும் மேலானோருக்கு முறை யான வேலை வழங்கப்படாதவர்களாகவும், அமைப்பு சாரா அன்றாடக் கூலி உழைப்பாளிகளாகவும், பெரும் பகுதியினர் நாள் கூலி ரூ.100 கூடப் பெறாதவர்களாக.

*             வறுமையில் வாடும் சோமாலியா, ..... போன்ற ஆப்பிரிக்க நாட்டு மக்களின் ஊட்டச்சத்துக்கும் குறைவான அளவே பெறும் நிலையில் இந்திய ஒன்றிய மக்கள்.

*             173 உலக நாடுகளுள் மனித வள மேம்பாட்டுக் குறியீட்டு அளவின்படி 137 ஆட்சியிடம்.

*             உலக நாடுகளுள் ஒப்பீட்டளவில் மருத்துவ வசதி யில் 195இல் 145ஆம் இடம். (உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் மிகவும் குறைவாக 1.0 விழுக் காடு மட்டுமே) அண்டை நாடுகள் சீனா 48, இலங்கை 71, வங்கநாடு 133 என்ற நிலை.

*             இதேபோன்று கல்விக்கென்று வெறும் 2 விழுக்காடு என குறைந்த அளவில். தேவை 6 விழுக்காடு ஒதுக்கீடு.

இப்படியெல்லாம் வெகுமக்களின் வாழ்வையெல் லாம் சூறையாடிவிட்டு, இந்தப் பார்ப்பனப் பனியாக் கொள்ளைக்கூட்டம் எவ்வாறு கொழுத்துச் செழிக்கிறது.

ஆண்டொன்றுக்கு மாணவர் ஒருவருக்குப் பல இலக்க ரூபாய் அரசுச் செலவில் 12 இந்தியத் தொழில் நுட்ப நிறுவனங்களில் 70 விழுக்காட்டிற்குமேல் படித்துப் பட்டம் பெறுவோர் பார்ப்பன பனியா மாணவர்கள் என்பதுடன் வெகுமக்கள் வரிப்பணத்தை இவர்கள் படிப்பு என்ற பெயரில் கொள்ளை கொண்டு இந்த நாட்டு மக்களுக்கு எவ்விதப் பயனுமின்றி அவர்களுள் பெரும் பகுதியினர் ஆண்டுக்குப் பல மில்லியன் ரூபாய் ஊதியக்காரர்களாக அயல்நாடுகளுக்குப் பண்ணை யடிக்கச் செல்கின்றனர். அதே போன்று, சிறப்பானவை எனக் கருதப்படும் 12க்கும் மேற்பட்ட இந்திய வணிக மேலாண்மைக் கல்வி நிறுவனங்களிலும் இவர்களே 80 விழுக்காட்டினர். இவர்களுள் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் ஆண்டுச் சம்பளம் பல இலக்கம், கோடி ரூபாய் பெற்று அயல்நாட்டில் பண்ணையம் செய்பவர் களாக உள்ளனர்.

மேலே சொன்னதுபோல் இதில் படித்த பார்ப்பனக் கூட்டம் தகுதி திறமை மிக்கவர்கள் எனக் கூறிக் கொண்டு 55 ஆண்டுகளுக்குமேல் படித்து வருகின் றனர். ஆனால் உலக அளவில் இந்த கல்வி நிறுவனங் களில் தரம் வாய்ந்த 200 நிறுவனங்களுள் ஒன்றுகூட இடம்பெறவில்லை. இதுதான் இவர்களின் பீற்றிக் கொள்ளும் தகுதி திறமையின் இழிநிலை. சரி,

இந்த நாட்டில் வெகுமக்கள் வரிப்பணத்தைச் சுரண்டி கொழுக்கும் இவர்கள், நாட்டிற்குப் பயன்தரும் வகையில் பொருளாதாரம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் வெகுமக்களுக்குப் பயன்தரக் கூடிய எந்த ஆய்வும் முறையாக மேற்கொண்டு நடைமுறைக்கு வந்ததாக இல்லை. இப்படியெல்லாம் மக்கள் நலம் சார்ந்த துறைகளில் அவர்கள் மேம் பாட்டிற்காக முறையான திட்டங்கள் வகுத்துச் செயல் படுத்திட கிஞ்சித்தும் முற்படாத இக்கூட்டம் நாட்டின் பல தேசிய இனங்களைப் புறந்தள்ளி ஒடுக்கி ஒரே நாடு, ஒரே வரி, ஒரே பண்பாடு என்றும்; இப்போது ஒரே நுழைவுத் தேர்வு முறை என ‘நீட்’டை கொண்டு வந்துள்ளனர். இந்த வந்தேறி கூட்டத்திற்கு ஏது நாடு? ஏது பண்பாடு? ஏது மொழி? ஏது நாட்டுப் பற்று? உழைப் பின்றிப் பிறர் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்துத் திரியும் காட்டேரிக் கயவர்கள் இவர்கள்.

இவையெல்லாம் போதாதென்று மய்ய அரசு, வேலை, கல்வியிலா ஒதுக்கீடு கேட்கிறீர்கள். உங்கள் தமிழகத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒதுக்கீட்டுக் கொள்கைக்கே உலை வைக்கி றோம் என்றுதான் மருத்துவப் பட்டப் படிப்புக்கு ‘நீட்’ தேர்வைக் கொண்டு வந்துள்ளோம் என மய்ய அரசும் அதன் உடனாளி உச்ச, உயர் அறமன்றங்களும் கொக் கரிக்கின்றன. இந்த ‘நீட்’ தேர்வு அரசமைப்புச் சட்டப் படியோ, தருக்க முறையிலோ, நியாயத்தின் அடிப்படை யிலோ, முற்றிலும் முறைகேடானது என்ப தைக் காணலாம்.

ஒரே நாடு, மருத்துவப் படிப்புக்கு ஒரேவகைத் தேர்வு என்பது அடிப்படை அற்றது.

வெள்ளையனின் ஒற்றை ஆட்சிக்கு ஏதுவாக 1857இல் இங்கிலாந்து அரசின் நேரடி ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட பல்வேறு நாடுகள் மொழி, பல் வேறு இனங்கள், பண்பாடுகள் என்றிருந்தவற்றை ஒன்றிணைத்து, ஒரே அலகாக இந்தியா என்ற சொல் லாட்சியே கையாளப்பட்டது. பெரியார் வரையறுத்துச் சொன்னதுபோல, இந்தியா ஒரு நாடே அல்ல; மேலும் இதை உறுதி செய்யும் வகையில் நாடு விடுதலை அடைந்து அதற்கென்று அரசமைப்புச் சட்டம் இயற்றிக் குடியரசு நாடான பின் “இந்திய ஒன்றியம்” என்ற அரசமைப்புச் சட்டச் சொல்லாட்சி இந்தியா ஒரே நாடல்ல என்பதை எண்பிக்கின்றது. எனவே அரசமைப்புச் சட்டம் சொல்லும் கூட்டாட்சி அமைப்பைக் குலைப் பதற்கே இந்தக் காவிக் கூட்ட மய்ய அரசு உச்ச, உயர் அறமன்றங்கள் துணை கொண்டு ‘நீட்’டை அரங்கேற்று கிறது.

அரசமைப்புச் சட்டம் 14ஆம் விதி வரையறுக்கும் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதற்கு முற்றிலும் முரணாக, நாட்டின் மாநிலங்கள் கடைப்பிடித்துவரும் வெவ்வேறு மாநிலப் பாடத் திட்டங்களின்கீழ்ப் பயின்று வரும் பல கோடி மாணவர்களுக்கான சமவாய்ப்பு உரிமையைப் பறித்துக்கொண்டு, நாடு முழுமையிலும் வெறும் 10 இலக்கம் பேரால் பயிலப்படும் ஒரு மய்ய உயர்நிலைக் கல்வி முறையை மட்டும் அடிப்படை யாகக் கொண்டு நடத்தப்படும் நீட் தேர்வு ஆகும்.

அரசமைப்புச் சட்ட விதி 14க்கு எதிரான ‘நீட்’ தேர்வும், அத்தேர்வைத் தமிழ்நாட்டு மாணவர்கள் வெளிமாநில மய்யங்களில் எழுதிட வேண்டுமென்ற அரசின் அடாவடித்தனத்தை சென்னை உயர் அற மன்றம் தள்ளுபடிச் செய்து, தமிழகத்திலேயே தேர்வு எழுத மய்யங்கள் அமைத்திட ஆணையிட்டது. ஆனால் விதி 21இன்படி தனிமனிதனின் உயிரையும் அவரின் விடுதலை உணர்வையும்(No person deprived of this life and personal liberty) காத்திட வேண்டிய உச்ச அறமன்றம் மேற்சொன்ன உயர் அறமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பும் தேர்வர்கள் அவர் தம் பெற்றோர் அனைவரையும் மாளா இன்னலுக் குள்ளாக்கியதுடன், (மாணவி அனிதா தற்கொலை) வெளி மாநில மய்யத்தில் தேர்வு எழுதிய மாணவர் ஒருவரின் தந்தை மனஉளைச்சலுக்குள்ளாகி உயிரை நீத்திடவும் செய்துவிட்டது.

தமிழ்நாட்டில் 2006 வரை மருத்துவ, பொறியியல் பட்டப் படிப்புக்குச் சேர நுழைவுத் தேர்வு நடத்தியும், நுழைவுத் தேர்வு இன்றியும், மாநிலப் பாடத்திட்டத் தின்கீழ்ப் படித்த மாணவர்கள், மய்ய பாடத் திட்டத்தின் கீழ்ப் படித்தவர்களுக்கும் என 98:2 விகிதத்தைப் பின்பற்றிச் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என உயர் அறமன்றம் தீர்ப்பளித்தும், பின்னொரு ஆண்டில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்களையும், நுழைவுத் தேர்வு மதிப்பெண்களையும் ஒருசேரக் கணக்கில் கொண்டு சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் அறமன்றம் ஆணையிட்டும், வெறும் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் சேர்க்கை என பலவாறான நிலைபாடுகள் மாறி, மாறிக் கடைப்பிடித்து வந்த முறைகளை முற்றிலுமாகக் கைவிட்டு, 2006-லிருந்து நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டு, 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்பைடயில் மட்டுமே மருத்துவ, பொறியியல் பட்டப்படிப்புச் சேர்க்கை நடை பெறும் எனத் தமிழ்நாட்டு அரசு ஆணையிட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உயர் அறமன்றம், ஊர்ப்புறம், நகர்ப்புறக் கல்விச்சூழல், தரம் மிகப்பெரும் வேறுபாடுள்ளதாகவும், வெவ்வே றான பாட முறைகள் உள்ளதாகவும் நுழைவுத் தேர்வுத் தளம் அனைவருக்கும் சமதளம் இல்லாத நிலை ஏற்படுத்தும் என்ற விளக்கம் அளித்து, அரசு ஆணை சரி என்ற தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து வழக்கு வந்த போது, உச்ச அறமன்றம், சென்னை உயர் அற மன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து, எந்த வகையிலும் நுழைவுத் தேர்வு தேவையில்லை; பட்டப் படிப்புக் கானத் தகுதித் தேர்வான 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையே போதுமானது எனத் தீர்ப்பளித்தது.

மேலும் 2013-2014இல் இந்திய மருத்துவக் குழு மருத்துவப் பட்டப் படிப்புக்கு இந்திய ஒன்றியம் அனைத்துக்கும் ஒரே தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு ‘நீட்’ (NEET) எழுத வேண்டும் என்று ஆணை யிட்டது. இதனை உச்ச அறமன்றம், இது அடிப்படை யிலேயே அரசமைப்புச் சட்ட இந்திய ஒன்றியக் கூட்ட மைப்புத் தத்துவத்திற்கே எதிரானது போன்ற பல்வேறு காரணங்களைச் சொல்லி ‘நீட்’ செல்லுபடி யாகாது என்று தீர்ப்பு அளித்தது. ஆனால் அடுத்த 2015இல் இந்திய மருத்துவக் குழு மறுபடியும் இந்திய ஒன்றியத் திலுள்ள அனைத்து மருத்துவப் பட்டப் படிப்புக்கு ‘நீட்’ கட்டாயம் என்று ஆணை பிறப்பித்தது. இதற்கு எதிராக உச்ச அறமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மய்ய அரசு நீட் வேண்டுமென்று கருத்துரைத்தது. இந்த வழக்கில் ‘நீட்’க்கு எதிராக வலிமையான வாதங்கள் தமிழக அரசாலோ, பிற அமைப்புகளாலோ எடுத்து வைக்கப்படவில்லை. மேலும் உச்சநீதிமன்றம் மருத்து வப் பட்டப் படிப்புச் சேர்க்கையில் தனியார் மருத்துவ நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு நிதிக்கொடை என்ற பெயரில் பெரும் அளவு பணம் புழங்குவதாகவும், இதனால் முற்றிலும் தகுதியற்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு இடங்கள் விலைபோய்விடுகின்றன என்றும் கூறி, ‘நீட்’ தேர்வை கட்டாயம் எனத் தீர்ப் பளித்தது. ஆனால் தமிழகத்திற்கு 2016 ஆண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கு மட்டும் விலக்களிக்கப்படு வதாகவும் ஆணையிட்டது. 2017க்குள் ‘நீட்’ தேர்வுக் குத் தக்க வகையில் கல்வித் தரத்தை உயர்த்தி, இதில் போட்டியிடுமளவுக்குத் திறம் படைத்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்றும் கூறியது. இந்த உச்ச அறமன்றமும், உயர் அறமன்றமும் இதையொட்டிய வழக்கில் தமிழக அரசு ‘நீட்’ போட்டித் தேர்வை எதிர்கொள்ளுமளவுக்குக் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டுமென்றும் கூறியது.

இவற்றையெல்லாம் உடன் சில ஆண்டுகளுக்குள் நிறைவேற்றிட இயலாது. இவ்வகையில் தமிழக அரசும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த இயலாமைக்கு தமிழக மாணவர்களை உச்சஅறமன்றம் பலிவாங்கியது எவ்வகை அறம் சார்ந்தது?

2017இலும் ‘நீட்’க்கு எதிரான வழக்குத் தொடுக்கப் பட்டு, உச்ச அற மன்றத்தில் தமிழகத்திற்கு ‘நீட்’ லிருந்து விலக்களிக்க வேண்டுமென்ற தமிழகத்தின் சட்ட வடிவிலான வேண்டுகோளை இந்திய ஒன்றிய மய்ய அரசு வஞ்சகமாக நாடகமாடி வலியுறுத்த வில்லை என்பதுடன் மாநில அரசும் பல வலுவான, உயிரான அடிப்படை வாதங்களை எடுத்து வைத்து வாதிடாமல் கோட்டைவிட்டு இரண்டு திங்களுக்கும் மேலாகத் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சி களும் இதனூடே மய்ய அரசு அமைச்சர்கள், மய்ய அரசு எல்லாம் இணைந்து நடத்திய நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ‘நீட்’லிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அனிதா 12ஆம் வகுப்பில் 98 விழுக்காடு என 1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றமையை முதன்மையான காரண மாகக் கொண்டு அவருக்கு மருத்துவப் பட்டப் படிப்புக்கு ‘நீட்’லிருந்து விலக்களித்து இடம் தரவேண்டுமென உச்ச அறமன்றத்தை நாடிய போது, இயற்கை நியதி யைக் கடைப்பிடிக்காமல் அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி அவருக்கு மருத்துவப் படிப்புக்கு ஒரு இடம் அளித்திருந்தால், உச்சநீதிமன்றத்தின் மாண்பு ஒன்றும் மாசுபட்டுவிடாது எனக் கருதாமல் மனித உயிர் உரிமைக் காப்பாளர் நிலையிலுள்ள உச்ச அறமன்றம் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது. விளைவு அனிதாவின் தற்கொலை. இவ்வகையில் நாடும், நாட்டில் உயர் அறமன்றமும் சட்டத்தின் ஆட்சியைக் ((Rules of Law) காப்பாற்றிவிட்டோம் என்று மார்தட்டிப் பெருமை பீற்றிக் கொள்ளலாம். என்னே உயிர் குடிக்கும் மாட்சிமை!

இந்திய ஒன்றியம் ஒரே நாடு என்று நிறுவ, ‘நீட்’ என்னும் கயமையின் வெளிப்பாடு என்ன! தேசிய மருத்துவக் குழு என்றொன்றிருப்பது நாட்டின் மருத்துவப் படிப்புத் திட்டம் வகுத்திடல், மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படல், மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ மனைகள் மக்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் திட்டமிடப்படுவதற்கானதுதான். மருத்துவப் பட்டப் படிப்புச் சேர்க்கைக்கு நாடு முழுவதற்கும் ஓர் தேர்வு என்று சொன்னால், இதைக்கூட நடத்த இயலாத, கையாலாகாத கபோதிகளா மாநில அரசுகள்? இதற்கா கத்தான் பல ஆயிரம் கோடி செலவில் தேர்தல் நடத்தி தன் மதிப்பற்ற, தன்மானமற்ற மாநில அரசுகளை அமைத்திடவா? அதற்கெதற்கு ஒரு பொம்மை முதல மைச்சர்? எதற்குக் கையாலாகாத மாநில அரசு நிருவாகம்? இது அன்னிய வெள்ளையன் குடியேற்ற நாடாக அடிமை அரசுகளைக் காட்டிலும் கேவலமான நிலை நிலவுவதற்கென்றால் எதற்கு விடுதலை? எதற்கு நாட்டிற்குக் குடியரசு? இவையெல்லாம் கூறுவது பித்தலாட்டமல்லவா?

இந்நிலை நீடிப்பது, பெரியார் கூற்றுப்படி விடுதலை என்பது அன்னியனின் ஆட்சிப்பிடியைப் பார்ப்பனியக் கூட்டத்திடம் நாட்டையும் ஆட்சியையும் மாற்றுவதற்கு ஒப்பாகும் என்ற நிலை, 70 ஆண்டுக்காலமும் தொடர்ந்து உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்பதை முற்றிலுமாகச் செயலலிழக்க வைத்துவிட்டு, ஒற்றை இந்திய அரசை மட்டும் நிறுவி, அதன் கைத் தடிகளாக, கைக்கூலிகளாக, உளவாளிகளாக முற்றிலும் மாறிடும் நிலைமைக்குத்தான் நீளும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

அறமன்றத்தைப் பொறுத்தவரை பெரியார் அறுதி யிட்டுச் சொன்னவாறு அன்னியன் ஆட்சியின் பெய ரளவில் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசுகள் என்றிருந்த போதும், அதை நிருவகிக்கும் உளவாளிகளாக அமர்த் தப்பட்ட இந்திய ஆட்சிப் பணியினர் ஒருவேளை மனசாட்சியின்படி வெள்ளை ஆட்சியின் கொள்ளை பாதிக்கும்படி இந்திய மக்களுக்கு நன்மை பயக்கும் பணிகள் ஏதும் செய்து விட நேரலாம் எனக்கருதி அறமன்றத் துறைகளில் ஆங்கிலேயர்களை மட்டும் நியமித்து அறம் என்ற பெயரில் மேற்கொள்ள நற்பணி களை முடக்கி வந்தது. அதேபோன்று விடுதலை பெற்றதாகச் சொல்லப்படும் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி மய்யத்திலும் மாநிலங்களிலும் நிறுவப் பட்டாலும் அறமன்றத் துறைகளில் பார்ப்பனியக் கைக் கூலிகள் அமர்த்தப்பட்டு முற்றிலும் பார்ப்பனிய ஆட்சியை நிறுவிவிடுவார்கள் என்ற பெரியார் கூற்று மெய்ப்பிக் கப்பட்டுள்ளது.

நுழைவுத் தேர்வு தேவையில்லை என உச்ச அறமன்றம் 2006இல் எதன் அடிப்படையில் அறுதி யிட்டுச் சொன்னது. பின் முதலில் 2014இல் இந்திய ஒன்றிய தேசிய மருத்துவக் குழு நாடு முழுமைக்கும் மருத்துவப் பட்டப்படிப்புக்கு ஒரே நுழைவுத் தேர்வு என அறிவித்ததைத் தள்ளுபடி செய்த உச்ச அறமன்றம் எதன் அடிப்படையில் 2015இல் ‘நீட்’ வேண்டும் என்றும், தமிழகத்திற்கு 2016க்கு விலக்கு எனச் சொல்லியும், 2017இல் தமிழகத்திற்கும் இது கட்டாயம் என்று தீர்ப்பு அளித்ததற்கு அடிப்படை என்ன?

மாநிலங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கல்வித் திட்டத்தைக் கடைப்பிடித்து வரும்நிலையில், நாடு முழுமைக்கும் மய்ய உயர்நிலைப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே ஒரே வினாத்தாள், நுழைவுத் தேர்வுக்கு என்பது அரசமைப்புச் சட்டத்திற்கு விதி 14இன்படியான சமவாய்ப்பு, சட்டத்தின் முன் அனை வரும் சமம் என்ற அடிப்படை உரிமை மீறலை மய்ய அரசு செய்ததும், அதை ஏற்று நுழைவுத் தேர்வுச் சட்டத்தை உச்ச அறமன்றம் ஏற்றதும் முற்றிலும் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, மக்களுக்கு இழைத்த கயமைத்தனம், இதனை இன்னும் விரிவாக ஆய்வுக்குட்படுத்தி மய்ய மாநில அரசுகளுக்கெதிரா கவும், அறமன்றங்களின் அறமற்ற செயல்களுக்கெதிராகவும் களம் காண்போம். ‘நீட்’டை ஒழிப்போம்.