கு.வரதராசன்  : அய்யா, வணக்கம்!

அந்தூர்  : வணக்கம், வாங்க! கி. இராமசாமி

கு.வ. :  அய்யா, தங்கள் வயது என்ன?

அ.கி.இரா.  :  என் வயது 99. என் பிறந்த நாள் 07.09.1919.

கு.வ.  : அய்யா, தங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூறுங்கள்.

அ.கி.இரா. : நான் பிறந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் என்னும் சிற்றூராகும். என் தந்தை கிருஷ்ணசாமி. தாய் அலமேலு அம்மாள். விவசாயக் குடும்பம். என் வாழ்க்கைத் துணைவியார் அலமேலு 1999ஆம் ஆண்டு சூன் திங்களில் மறைந்துவிட்டார். என் மக்களின் நல்லாதரவில் வாழ்ந்து வருகிறேன்.

கு.வ.   :  தங்களுக்கு எத்தனை மக்கள்?

அ.கி.இரா. :  மகன்கள் 3 பேர், மகள்கள் 2 பேர், வெற்றி வீரன், சித்தார்த்தன், மதியழகன், அருமைக்கண்ணு, அன்புமணி ஆவர். என் மக்கள் அனைவருக்கும் தந்தை பெரியார் அவர்களே பெயரிட்டார்கள். இவர்கள் அனைவரது திருமணங்களும் சீர்திருத்தத் திருமணங்களாக நடைபெற்றன.

கு.வ. :   தாங்கள் எந்த ஆண்டிலிருந்து தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளில் ஈடுபாடு கொண்டீர்கள்?

அ.கி.இரா. : 1941-இல் திராவிடர் கழகத்தில் இணைந்தேன். நான் 8ஆம் வகுப்பு வரைதான் படித்தேன். 1952 முதல் பெரம்பலூர் வட்டத் திராவிடர் கழகத் தலைவராகச் செயல்பட்டேன். 25 கிளைக் கழகங்களை அமைத்து கிராமந்தோறும் மைக்செட்டும், பெட்ரோமாக்ஸ் விளக்கும் கொண்டு பிரச்சாரம் செய்வோம். ஒரு நாள் வாடகை ரூ.5/- தான். பெரம்பலூர் வட்டத்தில் ஒரு ஆண்டில் சில கூட்டங்களுக்குத் தந்தை பெரியார் அவர்களை அழைத்து நடத்துவோம்.

கு.வ.    :  தங்களுக்கு உறுதுணையாகக் கூட்டங்கள் நடத்துவதற்கு இருந்தவர்கள் யார்?

அ.கி.இரா. : பெரம்பலூர் வட்டச் செயலாளர் கூடலூர் தி.க. சுப்பையா, இலந்தங்குழி ஆ.செ. தங்கவேலு, கூத்தூர் து. பெரியசாமி ஆகியோர். முருக்கன்குடி தோழர் வே. ஆனைமுத்து அவர்களைத் தலைமைப் பேச்சாளராக வைத்துக் கொண்டு கிராமங்களுக்குச் செல்வோம். மூடநம்பிக்கையொழிப்பு, பார்ப்பனப் புரோகித எதிர்ப்பு சுயமரியாதைத் திருமணம், தீண்டாமை ஒழிப்பு இவற்றை முன்னிலைப்படுத்துவோம்.

கு.வ.    :  அக்காலத்தில் உங்களுக்கு எதிர்ப்புகள் அதிகமாக இருந்திருக்குமே?

அ.கி.இரா. : தந்தை பெரியாரைக் கொண்டு கூட்டம் நடத்த கிராமங்களுக்குச் செல்லும் போது வழித்தடங்களில் பாறை களையும், மரங்களையும் வெட்டி, சாலையின் குறுக்கே வைத்து ஊருக்கு வரவிடாமல் செய்வார்கள். கழகத் தோழர் களைக் கொண்டு தடைகளை நீக்கி வழித்தடங்களைச் சரிசெய்து வெற்றிகரமாகக் கூட்டம் நடத்துவோம்.

கு.வ.  :  தந்தை பெரியாரைக் கொண்டு நடத்திய மாநாடுகளைப் பற்றிக் கூறுங்கள்?

அ.கி.இரா. : குன்னத்தில் திராவிடர் கழகப் பற்றாளர் ஆசிரியர் ந. கணபதி பணியாற்றினார். இவர் தோழர் வே. ஆனைமுத்துவின் கொள்கை ஆசிரியருமாவார். இவர்களின் முயற்சியால் தந்தை பெரியார் அவர்களைக் கொண்டு பெரம்பலூர் வட்ட திராவிடர் கழக மாநாடு 1950 ஏப்பிரல் 2இல் நடத்தினோம். இம்மாநாட்டில் பென்னக்குணம் சின்ன அண்ணாமலை, குன்னம் கோ. அம்பாயிரம், சுப்பராயன், இரா. நீலமேகம், ரெங்கசாமி, ஆ.செ. தங்கவேலு, வரகூர் மா. நாராயணசாமி, அகரம் மு. அழகப்பன், அ.மேட்டூர் மே.இரா. சின்னசாமி இப்படி எண்ணற்றோர் இணைந்து இம்மாநாட்டை நடத்தினோம். மாநாட்டில் பங்கேற்றோர் 700 பேர் இருக்கும். அனைவருக்கும் மதியம் கறிப்புலவே உணவு. இங்கு தான் முதல்முதலாகத் தந்தை பெரியார் முன்பு தோழர் வே. ஆனைமுத்து உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. குன்னம் ந. கணபதி ஆசிரியர், குன்னத்தில் இம்மாநாட்டைச் சிறப்பாக நடத்தியமையால் தந்தை பெரியார் அவர்கள் ஆசிரியரை “வாங்க குன்னம்” என்றே அழைப்பார்கள். 1950-இல் குன்னத்தில் எங்களால் ஊன்றப்பட்ட விதை முளைத்து, தழைத்து, பணைத்து 1962-க்குள் பெரம்பலூர் வட்டம் தி.க. கோட்டை என்கிற அளவுக்குப் பெயர் பெற்றுவிட்டது.

கு.வ.  : அய்யா, இதன் பின்னர் நடத்தப்பட்ட பெரம்பலூர் மாநாடு பற்றிக் குறிப்பிடுங்கள்?

அ.கி.இரா. : 1954 ஏப்ரல் 13-இல் குலக்கல்வி எதிர்ப்பு மாநாடு ஆகும். மாநாட்டின் தலைவர் தோழர் வே. ஆனைமுத்து. இந்திய அரசமைப்புச் சட்டம் பற்றி விரிவாகப் பேசினார். தோழர் ஏ.பி. ஜனார்த்தனம், கூடலூர் தி.க. சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக நீண்ட நேரம் ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டம் கைவிடப்பட வேண்டும் என அரசுக்கு எச்சரிக்கை செய்து விளக்க உரையாற்றினார். இந்தச் சொற்பொழிவு தமிழ்நாடு எங்கும் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணியது.

Andhoor ramasamy 600கு.வ.  : தாங்கள் சாதியொழிப்புப் போராட்டம் பற்றி விளக்குங்கள்?

அ.கி.இரா.  :  1957-இல் சாதியொழிப்புப் போராட்டம். இப்போராட்டத்தில் ஈடுபட்டோம்; அரசமைப்புச் சட்ட நகலை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் எனப் பெரியார் கட்டளையிட்டார். பெரம்பலூர் வட்டத்தில் நாங்கள் சட்ட நகலைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றோம். தோழர்கள் வே. ஆனைமுத்து, கூடலூர் தி.க. சுப்பையா, அம்மாப் பாளையம் கி. நாராயணசாமி, அ.மேட்டூர், மே.இரா. வெங்கடாசலம், கிருஷ்ணசாமி, கூத்தூர் து. பெரியசாமி, கூத்தூர் பொன்னுசாமி எனப் பலரும் கைதானோம். 03.12.1957 முதல் ஒன்றரையாண்டுகள் சிறைவாசம்; தமிழ் நாடெங்கும் 10 ஆயிரம் பேர் சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 4 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு இன்னல்களை அனுபவித்தோம். தந்தை பெரியார் அவர்கள் சாதி ஒழிப்புப் போரில் சிறை சென்ற வீரர் களுக்கு அய்யாவின் கையொப்பம் இட்ட நற்சான்றிதழ் 30.03.1959-இல் வழங்கினார். இதில் “சாதிக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்துச் சிறை சென்ற மாவீரர்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

கு.வ.    :  இயக்கத்தில் வேறு தலைவர்களுடன் ஈடுபாடு கொண்டமை பற்றி விளக்குங்கள்?

அ.கி.இரா. : புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், திருவாரூர் கே. தங்கராசு, தி.பொ.வேதாச்சலம், பி.ஏ., சிதம்பரம் கு. கிருஷ்ணசாமி இவர்களிடம் நான் நட்புடன் பழகியதுடன் கூட்டமும் நடத்தியிருக்கிறேன்.

கு.வ. : தந்தை பெரியார், விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, தோழர் வே. ஆனைமுத்து ஆகியோரின் முழு நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமானவர் தாங்கள் ஆனமையால் எங்களால் பெரிதும் பாராட்டப்பட வேண்டியவராக இருக்கிறீர்கள்.

அ.கி.இரா.  : மகிழ்ச்சி.

கு.வ. :  தற்பொழுது தங்கள் உடல்நிலை எவ்வாறு உள்ளது?

அ.கி.இரா. :   எனக்குச் செவித்திறன் பெரிதும் குறைபாடு. ஆயினும் கண் பார்வை நன்றாக உள்ளது. இந்த வயதிலும் படிக்க முடிகிறது.

கு.வ. :  அண்மையில் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி, திராவிடர் கழகத்தின் வாயிலாக 90 வயது கடந்து உயிருடன் உள்ள தோழர்களை, சென்னைக்கு அழைத்துப் பயனாடை போர்த்தி, விருது வழங்கிப் பாராட்டினார். அந்த விருதில் “பெரியார் தொண்டறச் செம்மலுக்குப் பாராட்டு, வாழ்த்து” என அவர்களின் படத்துடன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அவ்விருது வழங்கும் விழாவிற்குத் தாங்கள் சென்றீர்களா?

அ.கி.இரா. :  ஆமாம். எனக்கும் அழைப்பு வந்திருந்தது. ஆயினும் நீண்ட தொலைவுப் பயணம். அய்யா பிறந்த நாளான 17.09.2018 அன்று என்னால் சென்னை சென்று வரஇயலாது எனக் கூறிவிட்டேன். ஆயினும் திராவிடக் கழகப் பெரம்பலூர் நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் அவர்கள் மூலம் விடுதலை ஆசிரியரும் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் பாராட்டு - வாழ்த்து மடல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனை எங்கள் மாவட்ட மண்ணின் மைந்தரும் மேனாள் நடுவண் அரசு அமைச்சருமான பெரியார் பற்றாளர், திராவிட முன்னேற்றக் கழகக் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. இராசா அவர்களின் திருக்கரங்களால் பெரம்பலூர் தி.மு.க. அலுவலகத்தில் 12.12.2018 அன்று முற்பகலில் எனக்குப் பயனாடை அணிவித்து வழங்கினார். என் மகன்கள் சித்தார்த்தன், மதியழகன் ஆகியோருடன் பெயரன் சி. திலீபனும் உடனிருந்து பெற்றுக் கொண்டேன். பூலாம்பாடி கு. வரதராசன், பெரம்பலூர் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் முனைவர் சா. தங்கப்பிரகாசம் நகர தி.க. தலைவர் அக்ரி ஆறுமுகம், மாவட்ட தி.க. தலைவர் சி. தங்கராசு, தி.மு.க. மாவட்டச் செயலாளர் குன்னம் இராசேந்திரன், தி.மு.க. மாவட்டப் பொருளாளர் வாலிகண்டபுரம் செ. இரவிச்சந்திரன், நகர தி.மு.க. செயலர் ம. பிரபாகரன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் துரைசாமி இராஜ்குமார், தி.மு.க. கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, ஓவியச் செம்மல் கி. முகுந்தன், கவிஞர் முத்தரசன் மற்றும் திரளானவர்கள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.

கு.வ.    : அய்யா, பெரம்பலூர் வட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் அல்லாத பிறர் தங்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அவர்களில் சிலரைப் பற்றிக் கூறுங்கள்?

அ.கி.இரா. : ஆசிரியர்கள் பலர் உண்டு. வாலிகண்டபுரம் அ. செல்லமுத்து, பூலாம்பாடி கு. வரதராசன், இரூர் ச. இராதாகிருஷ்ணன், ஏ.எஸ். முத்துசாமி, குரும்பலூர் ஓவியர் கி. முகுந்தன், பெரம்பலூர் இளைய பெருமாள் செயபால், ச. செவ்வண்னன், கு. பாலகிருஷ்ணன், மு. அழகப்பிள்ளை போன்றோர். இவர்களெல்லாம் அக்காலங்களில் சீர்திருத்தத் திருமணங்கள் செய்து கொண்டதோடு அவரவர் ஊர்களில் தந்தை பெரியாரை அழைத்துப் பகுத்தறிவாளர் கழகங்களை ஏற்படுத்தியவர்கள். அவரவர்கள் பணியாற்றிய பள்ளிகளிலும் அய்யா அவர்களை அழைத்து மாணவர் இலக்கிய மன்றங்களில் சொற்பொழிவாற்ற வைத்தவர்கள். பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில், டயர் வண்டி உற்பத்திக் கடை நடத்திய இராமசாமி தி.க.புரவலர்.

இதில் பெரம்பலூர் இளையபெருமாள் செயபால் அவர்கள் வீடு எங்களுக்கு தங்கும் விடுதியாகும். இங்கு இவருடன் கலந்துரையாடி கழக வேலையாக வெளியில் புறப்படுவோம். கழக ஆர்வமுடைய இளைஞர்களுக்குத் துறைமங்கலம் அரசுப் பயணியர் விடுதியில் தந்தை பெரியார், தோழர் வே. ஆனைமுத்து அவர்களைக் கொண்டு 1965இல் இரண்டு நாள்கள் பயிற்சி வகுப்பு நடத்தினோம். இதில் மேற்கண்ட ஆசிரியர்கள் கலந்து கொள்வார்கள்.

கு.வ.  :  அய்யாவிடம் இருந்த குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்பியல்புகளைத் தெரிவியுங்கள்?

அ.கி.இரா. : எத்தனையோ குறிப்பிடலாம். எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைக் குறிப்பிடுகிறேன். நான் பெரம்பலூர் வட்டத்தில் தி.க.தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து அனைத்துக் கூட்டங்களிலும் “எங்கே ராமசாமி?” என்று மறக்காமல் வினவுவார். நான் புலால் உணவு உண்ணாதவன். எனினும் அய்யாவுக்குப் பிடித்தமான வகையில் ஆங்காங்கு அய்யாவுக்குச் சமையல் செய்யும் தோழர் வீட்டிற்குச் சென்று பார்த்துக் கொள்வேன். வாலிகண்டபுரம் அ.உ.ப.யில் தோழர் கு. வரதராசன், ஆசிரியர் கழகச் செயலராக இருந்த போது 29.6.1968-இல் பள்ளியின் இலக்கியமன்றத் துவக்கவிழா நடைபெற்றது. தந்தை பெரியார் சொற்பொழிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஒரு பார்ப்பனர். கூட்ட நிகழ்ச்சி நிரலில் கடவுள் வாழ்த்து என எழுதியிருந்தார். தந்தை பெரியார் அவர்களும் சொற்பொழிவு மேடைக்கு அழைத்து வரப்பட்டார். இயக்கப் பற்றாளர்களால் அனைத்து ஆசிரியர்களுக்கும் குழப்பமான நிலைப்பாடு. ஆயினும் இந்நிகழ்ச்சிக்கு அய்யா அவர்களும் அனைவருடனும் எழுந்து நின்றுவிட்டார்கள்.

இது, அய்யாவின் அவையறிந்து நடக்கும் மாண்புக்கு எடுத்துக்காட்டு. அய்யாவின் சொற்பொழிவு முற்பகல் 12.00 மணியளவில் முடிவுற்றது. என் பார்வையில் ஆசிரியர் கு.வரதராசன் துணைவியார் திருமதி. சின்னப்பெண் அவர்களால் புலால் உணவு சமைக்கப்பட்டிருந்தது. அதனை நான் பெற்றுக்கொண்டேன். அன்று பிற்பகல் 2 மணியளவில் அரியலூர் அரசுப் பயணியர் விடுதியில் அய்யா அவர்கள் அதனைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டே, “யார் சமைத்தது? ரொம்ப நல்லாயிருக்கு, ரொம்ப நல்லாயிருக்கு” என்று என்னைக் கேட்டார்கள். நான் ஆசிரியர் வரதராசன் அவர்களின் துணைவியார் சமைத்தது என்று சொன்னேன். அய்யா “மிக்க மகிழ்ச்சி” என்று பாராட்டினார்கள். அய்யாவின் பாராட்டைப் பெற்ற குடும்பம்.

கு.வ.  :  பெரம்பலூர் மாவட்டத்தில் தங்கள் சாதனையாக எதனைக் கருதுகிறீர்கள்?

அ.கி.இரா. :  சுயமரியாதைத் திருமணம் சட்ட வடிவம் பெறுவதற்கு முன்பே பல்வேறு எதிர்ப்புகளை மீறிப் பலருக்கும் திருமணம் நடத்தியுள்ளேன். 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் என் தலைமையில் நடைபெற்றுள்ளன. 1954-இல் என் சொந்த ஊரில் கலை நிகழ்ச்சி நடத்திச் சமபந்தி விருந்து நடத்தியுள்ளேன்.

 தீண்டாமை விலக தேநீர்க் கடைகளில் இரட்டைக்குவளை முறையை ஒழிக்க எனது தோழர்களுடன் கிராமம் தோறும் சென்று பரப்புரை செய்தோம். 1977-இல் என் மூத்த மகன் வெற்றி வீரன்-விசயலட்சுமிக்கு, ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் பெரம்பலூரில் இரவு 8.00 மணிக்குத் திருமணம் செய்வித்தேன். “விடுதலை, உண்மை, சிந்தனையாளன்” போன்ற நாளிதழ் மற்றும் மாத இதழ்கள் தோழர்கள் பலரிடம் சந்தா பெற்று வழங்குவேன். அக்காலத்தில் சாலை வசதி போக்குவரத்து வசதியற்ற நாள்களில் கால்நடையாகவும், பட்டினி, பசியுடன் முனைப்பாகத் தோழர்களுடன் பணியாற்றியுள்ளேன். பெருந்தலைவர் காமராசர் ஆட்சி நிலைக்க பல மாதங்கள் பட்டிதொட்டியெங்கும் அய்யாவின் கட்டளையை ஏற்று அல்லும் பகலும் கைம்மாறு கருதாமல் கண்துஞ்சாது தோழர் வே. ஆனைமுத்துவுடன் பரப்புரை செய்தோம். சிலமுறை அய்யாவுடன் வேனில் சென்று தேர்தல் காலங்களில் கூட்டங்கள் நிகழ்த்துவோம். அக்காலத்தில் காசு, பணம், எதிர்பாராமல் தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டனர்.

கு.வ. : தாங்கள் பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட அறிஞர் அண்ணாவின் அரசு செயல்பாட்டைத் தெளிவுபடுத்துங்கள்?

அ.கி.இரா. : 1967-இல் திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் தகுதி பெற்றதும், அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் பதவியேற்கும் முன் திருச்சி பெரியார் மாளிகை வந்து தந்தை பெரியாரிடம் வாழ்த்துப் பெற்றார். இதன் பின்னர் அய்யா அவர்கள் அறிஞர் அண்ணாவின் அரசை ஆதரிக்குமாறு விடுதலையில் அறிக்கை வெளியிட்டார். இக்காலக் கட்டத்தில் அய்யாவின் அறிக்கை எங்களுக்குக் கசப்பாகவும் சில நாள்கள் மனம் ஒன்றாமலும் திராவிடர் கழகத் தோழர்கள் இருந்தோம். அண்ணா, இராஜாஜியின் சுதந்தராக் கட்சியுடன் இணைந்து விடுவாரோ என்ற அச்சம் தோழர்களுக்கு. ஆனால் தேர்தல் முடிவு வந்தவுடன் இராஜாஜிக்கும், தங்களுக்கும் ஆன தேனிலவு முடிந்து விட்டது என அண்ணா சொன்னார். சட்டமன்றத்தில் “இந்த அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை” என்றார். சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம், சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என்னும் தீர்மானம், இந்தி ஒழிப்புத் தீர்மானம் என இம்மூன்றும் அறிஞர் அண்ணாவின் சாதனைகளாகும்.

கு.வ.    :  அறிஞர் அண்ணாவிற்குப் பின்னர் கலைஞர் மு. கருணாநிதியின் அரசு செயல்பாடு பற்றி.

அ.கி.இரா. : பெண்ணுரிமை பற்றி அய்யா தன் வாழ்நாள் முழுக்கப் பேசி வந்தார். “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற விளக்க நூலையும் வெளியிட்டார். அய்யாவின் கொள்கைப் பற்றாளரான டாக்டர் கலைஞரும் பெண்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனச் சட்டம் கொண்டு வந்தார். பெரியார் நினைவு சமத்துவப்புரங்கள் உருவாக்கினார். தந்தை பெரியாரின் கொள்கைகளை வாக்கு வங்கி அரசியலில் பக்குவமாகக் கையாண்டு வந்தார் என்பதுதான் உண்மை. இந்தியப் பிரதமர் வி.பி. சிங் ஆட்சியில் டாக்டர் கலைஞர், தோழர் வே. ஆனைமுத்து, ஆசிரியர் கி. வீரமணி போன்றோரின் உந்துசக்தியால் இந்திய ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது. திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் மறைவுற்றது தமிழ் மக்களுக்குப் பெரும் இழப்பாகும். பகுத்தறிவுச் சமதர்மச் சமுதாயம் கல்வி முறையில் மாற்றம் இவரைப் போன்று அரசோச்சி யாராலும் நடைமுறைப்படுத்த முடியாது.

கு.வ.    :  நடப்பில் உள்ள இந்திய மற்றும் மாநில அரசின் செயல்பாடுகள் பற்றிக் கூறமுடியுமா?

அ.கி.இரா. : என்னால் தெளிவாகக் கூற இயலவில்லை. நடப்பு சங்கதிகள் எதுவும் தெரியாது. செவித்திறன் முக்காலும் இல்லை. ஆயினும் அப்போதைக்கப்போது செய்தித்தாள்களில் உள்ள பெரிய எழுத்துக்கள் மற்றும் பெயரன் திலீபன் உரக்க எனக்கு எடுத்துக்கூறும் செய்திகள் மூலம் மீண்டும் அய்யாவின் காலத்தை விடப் பன்மடங்கு பார்ப்பன ஆதிக்கம் தலைதூக்கியுள்ளது அறிகிறேன். இதற்கு ஆட்சியாளர்களே காரணம். அரசுக் கட்டடம் திறப்பு விழா, சாலைப் பணித் துவக்கம் என அனைத்திலும் பார்ப்பனப் புரோகிதர்களை வைத்துச் சடங்கு பன்மடங்கு செய்வது மலிவாக நடக்கிறது. மந்திரிமார்கள் அனைவரும் தங்கள் கைகளில் பல்வேறு நிறக் கயிறுகளைக் கட்டிக்கொண்டும் நெற்றியில் விபூதிப்பட்டையும் குங்குமமும், ஒற்றைச் சிவப்பு நாமமும் தரித்திருப்பதைத் தொலைக்காட்சி வாயிலாகப் பார்க்கிறேன். இது திராவிடர் இயக்க ஆட்சியென்றோ அண்ணாவின் பெயர் கொண்டு ஆட்சி நடத்துபவர்கள் என்றோ கூறமுடியாது. தோழர் ஆனைமுத்து, ஆசிரியர் வீரமணி என் போன்ற வயது மூப்பு அடைந்துவிட்டனர். படித்த இளைஞர்கள் சிந்தித்து மூடநம்பிக்கைகளை ஒழித்துச் செயல்பட வேண்டும். நடப்புக் காலம் அறிவியல் மற்றும் கணினி மயக்காலம். படித்த ஆண், பெண் இருபாலரும் அறிவியல் பார்வையுடன் இருக்க வேண்டும். இன்று பெண்கள் கல்வி, உத்தியோகங்கள் பெற்றுள்ளமை அய்யா உயிருடன் இருந்தால் பெரு மகிழ்ச்சியடைந்திருப்பார் (என்று கூறும் போது நாதழுதழுத்து பெருமூச்சு விடுகிறார்...).

கு.வ.   :  அய்யா, தங்களுடன் நீண்ட நேரம் உரையாடிவிட்டேன். முடிவாக என்ன கூறுகிறீர்கள்?

அ.கி.இரா.: பெரியார் கருத்துக்கள் கொண்ட சிறு, சிறு புத்தகங்கள் மலிவு விலையில் பல நூறு புத்தகங்கள் வெளி வந்துள்ளன. இதனை இன்றைய இளைஞர்கள் படித்து அதன் வழி நடந்து சாதி ஆதிக்கமற்ற சமுதாயம் காண முற்பட வேண்டும்.

சிந்தனையாளன் 2019 பொங்கல் மலருக்காக என்னை இன்று நேர்காணல் கண்டதற்கு வரதராசனுக்கு நன்றி.

கு.வ. : தங்களின் அகவை முதிர்வு, செவித்திறன் குறைபாடு ஆனாலும் கண்பார்வை நன்றாக உள்ளது. வினாக்களை எழுதிக்காட்ட முடிந்த வரை தாங்கள், பொறியியல் கல்லூரியில் பயிலும் தங்கள் பெயரன் சி. திலீபன், மகன்கள் சித்தார்த்தன், மதியழகனுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! வணக்கம்!

அ.கி.இரா. :  வணக்கம், நன்றி!

(இந்தச் செவ்வி அனைத்தும் 12.12.2018 அன்று முற்பகல் அக்ரி ஆறுமுகம் - மருத்துவர் குணகோமதி இணையர் இல்லத்தில் நடைபெற்றது. அந்தூர் கி. இராமசாமியின் மகன்கள் சித்தார்த்தன், மதியழகன், பெயரன் சி. திலீபன் முன்னி லையிலும், பெயர்த்தி சி. அற்புதா, முனைவர் சா. தங்கப்பிரகாசம் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புகளின் அடிப்படையில் நடைபெற்றது).