ஐசக் நியூட்டன் (1642-1726) நவீன கால அறிவியலின் தந்தை என்று கருதப்படுகிறார். அவர்தான் புவியீர்ப்பு விசை யைக் கண்டறிந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன் றாகும். “ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர் வினை உண்டு” என்கிற நீயூட்டனின் மூன்றாவது விதி உலகம் முழுவதும் மக்களால் நடைமுறையில் பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது.

நீயூட்டனுக்கு அடுத்து பல அறிவியில் கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955) ஆவார். 1921இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின், “ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடுகளைப் புரிந்த கொள்ளாத போதிலும் மக்கள் அவரிடம் பேரன்பு கொண்டுள்ளனர்” என்று கூறினார். இதற்குக் காரணம், ஐன்ஸ்டீன் மக்கள் பற்றாளராக-சமுதாய நலனில் அக்கறை கொண்டவராக வாழ்ந்ததே ஆகும். “நீ என்ன பெரிய ஐன்ஸ்டீனா?” என்று பேச்சுவழக்கில் கேட்கப்படும் அளவுக்கு அறிவின்-அறிவியலின் அடையாமாக ஐன்ஸ்டீன் மக்கள் மனங்களில் வாழ்கிறார்.

ஐன்ஸ்டீனுக்கு அடுத்து உலக அளவில் மக்களால் நேசிக்கப்பட்ட-வியந்து போற்றப்பட்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 2018 மார்ச்சு 14 அன்று தன் 76ஆம் அகவையில் மறைந்தார். வானத்தை அண்ணாந்து பார்க்கவும் முடியாத நிலையில், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே இப்பேரண் டத்தைத் தன் மண்டை ஓட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி, உள்ளஉரன்மிக்க அறிவாற்றலால் ஆராய்ந்து, புதிய கண்டு பிடிப்புகளை வெளியிட்டவர் ஸ்டீபன் ஹாக்கிங். 1988இல் எழுதிய “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்” ((A Brief History of Time)) என்ற நூலின் மூலம் பேரண்டத்தின் இயக்கத்தை மக்களும் எளிதில் படித்து அறிந்து மகிழுமாறு செய்தவர் ஹாக்கிங். ஆய்வுக் கூடத்தின் அறிவியலை வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்ததால் ஹாக்கிங் மக்களின் அறிவிய லாளராகத் திகழ்ந்தார்.

stephens in air 600ஸ்டீபன் ஹாக்கிங் 1942 சவனரி 8 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். கலிலியோ இறந்த 300 ஆவது ஆண்டில் தான் பிறந்தது குறித்து ஹாக்கிங் பெருமையுடன் கூறுவது வழக்கம். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பைப் படித்தார். 1963இல் அவரது 21ஆவது பிறந்த நாளுக்குச் சில நாள்கள் கழித்து அவருக்கு “அமியோட் ராஃபிக் லேட்டரல் ஸ்கிலரோசிஸ்”(Amyotrophic Lateral Sclerosis)   என்ற தசை-நரம்பு செயலிழப்பு நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழமுடியும் என்றனர். அப்போது ஹாக்கிங் “என் மூளை முழுத்திறனுடன் செயல்படுமா?” என்று மருத்துவர்களிடம் கேட்டார். அவர்கள் “மூளை இயல்பான தன்மையில் இயங்கும்” என்றனர். மூளையின் செயல்திறனைக் கொண்டே உடலின் ஊனத்தை வென்று தன் அறிவியல் ஆராய்ச்சியைத் தொடர்வது என உறுதி பூண்டார். “உரம் ஒருவர்க்கு உள்ள வெறுக்கை” - ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே - என்று வள்ளுவன் சொன்னது போல் அதன்பின் 55 ஆண்டுகள் வாழங்வாங்கு வாழ்ந்து காட்டிய ஒப்பரிய ஆற்றலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்.

தனது தசை மீதான கட்டுப்பாட்டை ஹாக்கிங் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கிய போதிலும் துன்பத்துடன் சிறுது தொலைவு நடப்பது, எளிய வேலைகளைச் செய்வது, உடைகளை மாற்றிக் கொள்வது போன்றவற்றைச் செய்தார். 1965இல் ஜேன்வைல்டு என்கிற மொழியியல் மாணவியை மணந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.

1974இல் கருந்துளைகள் பற்றிய மர்ம முடிச்சுகளை ஹாக்கிங் கட்டவிழ்த்தார். இதுவே இவரது முதன்மையான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. “கருந்துளைகள் உண் மையில் கருப்பாக இருப்பதில்லை. அவற்றிலிருந்து ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும், அணுத்துகள்களும் கசியத் தொடங்கும்; இறுதியில் வெகுநீண்ட யுகங்களுக்குப் பிறகு கருந்துளை வெடித்து மறைந்துவிடும்” என்று கண்டறிந்து அறிவித்தார். இதை அறிவியல் முறையில் எண்பித்தார். இதற்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயரிடப்பட்டது. அவரது கதிர்வீச்சு குறித்த சூத்திரத்தைத் தனது கல்லறையில் பொறித்து வைக்க வேண்டும் என்று 2002இல் ஹாக்கிங் விருப்பம் தெரிவித்தார்.

1985ஆம் ஆண்டு ஹாக்கிங் சுவிட்சர்லாந்துக்குச் சென்றார். அங்கே அவருக்கு நுரையீரல் அழற்சி நோய் (நிமோனியா) ஏற்பட்டது. “அவர் உயிர்ப் பிழைக்க வாய்ப் பில்லை; அதனால் அவர் உடலிலிருந்து உயிர்க்காக்கும் கருவிகளை அகற்றிவிடலாம்“ என்று மருத்துவர்கள் கூறினர். இதை ஏற்க மறுத்த அவருடைய மனைவி ஹாக்கிக்கைக் கேம்பிரிட்ஜ் மருத்துமனையில் சேர்த்தார். ஹாக்கிங்கிற்கு மூச்சுக் குழலில் அறுவை செய்யப்பட்டது. நோயின் பிடி யிலிருந்து மீண்டார். ஆனால் அதுவரை சிரமப்பட்டுப் பேசிக் கொண்டிருந்த ஹாக்கிங்கின் பேச்சுத்திறன் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டது.

அந்நிலையிலும் ஹாக்கிங் மனந்தளரவில்லை. அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உயர் தொழில்நுட்பம் கொண்ட கணினி அவருடைய சக்கர நாற்காலியில் பொருத்தப்பட்டது. ஒன்றிரண்டு விரல் அசைவுகள், கன்னத்தின் அசைவு ஆகியவற்றைக் கொண்டு கணினியில் சொற்களை உருவாக்கினார். இத்தன்மையில் பல அறிவியல் நூல்களை எழுதினார். இவ்வாறு ஹாக்கிங் எழுதிய “காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கும்” எனும் நூல் 1988இல் வெளிவந்தது. அதிக அளவில் விற்பனையாகும் நூல் பட்டியலில் 237 கிழமைகள் இந்நூல் தொடர்ந்து இடம்பெற்று கின்னஸ் சாதனைப் படைத்தது. இந்நூல் நாற்பது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் தோழர் நலங்கிள்ளியின் சிறந்த தமிழாக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது. சார்பியல் கோட்பாடு, குவாண்டம் கோட்பாடு, கருந்துளைகள், வெளி-காலம் (ளுயீயஉந யனே கூiஅந) முதலான அறிவியல் கோட்பாடுகளைச் சாதாரண மக்களும் புரிந்துகொண்டு விவாதிக்கும் நிலையை இந்நூல் ஏற்படுத்தியிருப்பது ஹாக்கிங்கின் மாபெரும் வெற்றியாகும்.

உலக நடப்புகள் குறித்து அவ்வப்போது ஹாக்கிங் தன்னுடைய கருத்துகளை வெளியிட்டுவந்தார். வியத்நாம் மீதான அமெரிக்காவின் படையெடுப்பபைக் கடுமையாகக் கண்டித்தார். இசுரேல் நாட்டு அரசு தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தது. இசுரேல் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தும் இனவெறித் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் அந்த அழைப்பை ஏற்க மறுத்தார். 2007 ஆம் ஆண்டில் ஹாக்கிங், “உலகளாவிய அணு ஆயுதப்போர், மரபணுத் தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட வைரசு, இன்னும் நாம் கற்பனையே செய்திராத ஆபத்துகள் போன்றவற்றால் ஏற்படும் பேரழிவால் பூமியில் உயிர் வாழ்க்கைத் துடைத் தழிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது” என்று எச்சரித்தார்.

சக்கர நாற்காலியில் கழுத்துக்குக்கீழ் முற்றிலுமாகச் செயலிழந்து அமர்ந்திருந்தபோதிலும் ஹாக்கிங் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததுடன், கருத்தரங்குகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று மக்களைச் சந்திப்பதில் பேரார்வம் கொண்டிருந்தார். 2012இல் இலண்டனில் மாற்றுத் திறனாளிகளுக்காக நடைபெற்ற ஒலிம்பிக் விளை யாட்டுப் போட்டியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நகைக்சுவையாகக் பேசும் இயல்பினராக விளங்கினார். இயல்பாகப் பேசுந்திறனை இழந்தபிறகு, கணினியில் அவர் உருவாக்கும் சொற்கள் பேச்சொலியாக மாற்றப்பட்டன. ஒரு நிமிடத்திற்கு 15 சொற்கள் வரை அவரால் உருவாக்க முடிந்தது. அப்போது ஹாக்கிங் “குரலை இழக்கும்முன் பேசியதைவிட கணினி மூலம் ஓரளவு நன்றாகவே பேச முடிகிறது. இங்கி லாந்துக்காரனான என்னுடைய செயற்கைக் குரல் அமெரிக்க ஆங்கில ஒலிப்புடன் இருப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை” என்று சொன்னார். சொற்களைப் பேச்சொலியாக மாற்றும் கருவி அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் தயாரிக்கப்பட்டதே அதற்குக் காரணமாகும்.

குன்றாத ஆர்வத்துடன் வாழ்ந்தவர் ஹாக்கிங். சூடான காற்று நிரம்பிய பலூனில் பறந்து தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினர். 2007இல் தனித்தவகைமையில் வடிவமைக்கப்பட்ட போயிங் 727 வானூர்த்தியில் சுழியம் ஈர்ப்பு விசை நிலையிலான பயணத்தை மேற்கொண்டு எடையற்ற தன்மையை அனுபவித்தார். இதுபோன்ற ஆபத் தான செயல்களில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்று ஹாக்கிங்கிடம் கேள்வி கேட்டபோது, “உத்வேகத்தில் எந்த ஊனமும் இல்லாத போது, உடல் ஊனங்களால் முடங்கிப் போய்விடக் கூடாது என்று எல்லோருக்கும் உணர்த்திட விரும்பினேன்” என்று விடை கூறினார்.

1982இல் “பிரிட்டிஷ் பேரரசின் கமாண்டர்” என்ற விருது ஹாக்கிங்கிற்கு வழங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு குடிரயசுத் தலைவராக இருந்த ஒபாமா, அமெரிக்காவின் மிக உயரிய விருதான சுதந்தரத்திற்கான விருதை ஹாங்கிங்கிற்கு வழங்கியபோதிலும் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. இதுகுறித்து அவருக்கே உரிய எள்ளல் தன்மையில், “ஆராய்ந்து பார்த்து உறுதி செய்யப்பட்ட கோட்பாட்டியல் பணிகளுக்குத் தான் நோபல் பரிசு வழங்கப்படுகிறது; நான் எந்த விஷயம் குறித்து கோட்பாடுகளை உருவாக்கினேனோ அதை ஆராய்ந்து பார்ப்பது மிகமிக கடினம்” என்று சொன்னார். ஹாக்கிங் எழுதிய “தி தியரி ஆஃப் எவ்விரிதிங்” (The Theory of Everything)  நூலை அடிப்படையாகக் கொண்டு அவரைப் பற்றிய திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதில் ஸ்டீபன் ஹாக்கிங்காக நடித்த நடிகருக்கு 2014ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

“இந்தப் பேரண்டத்தின் வியத்தகு நுண்ணிய வடிவ மைப்பையும் இயக்கத்தையும் பார்க்கும்போது, ஒரு பேராற்றல் தான் (கடவுள்) படைத்திருக்க முடியும்” என்று நியூட்டன் சொன்னார். ஆனால் ஹாக்கிங், “இப்பேரண்டத்தின் உரு வாக்கத்தைப் பற்றி விளக்குவதற்கு இந்தப் பேரண்டத்திற்கு வெளியில் உள்ள கடவுள் போன்ற எதன் உதவியையும் நாடவேண்டியதில்லை. இறைவன் உலகைப் படைத்தார் என்று நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை” என்று கூறினார்.

“தி கார்டியன்” ஏட்டிற்கு அளித்த பேட்டியில், “மனித மூளையைக் கணினியைப் போலவே நான் கருதுகிறேன். அதன் உட்கூறுகள் எல்லாம் வேலையை நிறுத்திக் கொள்ளும் போது அதுவும் (மூளை) வேலையை நிறுத்திக் கொள்ளும். முற்றிலும் பழுதுபட்டு இயக்கம் நின்றுபோன கணினிக்கு சொர்க்கமோ அடுத்த பிறவியோ கிடையாது. சொர்க்கம், அடுத்த பிறவி என்ற கதையெல்லாம் இருட்டைப் பார்த்து பயப்படுபடுவர்களுடையது” என்று ஹாக்கிங் கூறியது பெரியார் பேசுவது போலவே இருக்கிறது.

ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறைவுக்குத் தலைமை அமைச்சர் என்ற முறையில் மரபான இரங்கல் அறிக்கை வெளியிட்டார் நரேந்திர மோடி. அனால் ஹாக்கிங் மறைந்து இரண்டு நாட்கள் கழித்து - 16.3.2018 அன்று மணிப்பூரில் நடை பெற்ற 105ஆவது இந்திய அறிவியல் மாநாட்டில் நடுவண் அரசின் அறிவியல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பிரதமர் நரேந்திரமோடியின் முன்னிலையில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் புகழ்பெற்ற e=mc2  சூத்திரத்தைவிட மிகச்சிறந்த அறிவியல் சூத்திரங்கள் வேதங்களில் இருப்பதாக ஹாக்கிங் சொல்லி யிருக்கிறார் என்று கூறினார். நிகழ்ச்சி முடிந்தபின், ஊடக வியலாளர்கள் அமைச்சரிடம், ஹாக்கிங் இவ்வாறு கூறியதற் கான ஆதாரத்தைக் கேட்டபோது, “நீங்கள்தாள் அதைக் கண்டுபிடிக்கவேண்டும்; உங்களால் முடியாதுபோனால் நான் இதற்கான ஆதாரத்தை அளிப்பேன்” என்று கூறி நழுவிவிட்டார்.

2001ஆம் ஆண்டு தில்லியில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நினைவுச் சொற்பொழிவை ஹாக்கிங் நிகழ்த்தினார். அப்போது, “பெரும்பாலான அறிவியலாளர்கள் சோதிடவியலை ஏற்பதில்லை. ஏனெனில் எங்களுடைய கோட்பாடு ஆய்வுகள் மூலம் எண்பிக்கப்பட்டவை. ஆனால் சோதிடம் என்பது ஆய்வுகள் மூலம் எண்பிக்க முடியாத ஒன்றாகும்” என்று கூறினார்.

மணிப்பூர் அறிவியல் மாநாட்டில் பேசிய நரேந்திரமோடி  ஹாக்கிங் குறித்து அறிவியல் அமைச்சர் தெரிவித்த கருத்தை மறுக்கவில்லை. ஏனெனில் இப்போதுள்ள அறிவியல் கோட் பாடுகளும், இனி கண்டுபிடிக்கவுள்ள அறிவியல் கோட்பாடு களும் வேதங்களில் இருக்கின்றன என்று நம்புகிறவர் நரேந்திரமோடி. அதனால்தான் தலைமை அமைச்சரான பின், மருத்துவர்கள் மாநாட்டில் பேசியபோது, வேதகாலத் திலேயே பிளாஸ்டிக் அறுவை முறை இருந்தது என்றும், அதன்படிதான் விநாயகன் தலை துண்டிக்கப்பட்ட பின் யானையின் தலை பொருத்தப்பட்டது என்றும் கூறினார்.

அரசமைப்புச் சட்டத்தில் அரசு மக்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. நீண்டகாலம் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரசுக் கட்சியும் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வில்லை. பா.ச.க.வின் வாஜ்பாய் ஆட்சியும், மோடியின் ஆட்சியும் ‘இராமன் பிறந்த இடம்’ ‘இராமன் பாலம்’ போன்ற வை எங்கள் மத நம்பிக்கை என்று கூறி, அறிவாராய்ச்சிக்கே இடமில்லாமல் செய்துவரும் சூழலில், ஸ்டீபன் ஹாக்கிங்கின் அறிவியல் கருத்துகளை மக்களிடம் பரப்பவேண்டியது நம் கடமையாகும்.