p j cherian PAMAபண்டைய சேரர்களின் துறைமுக நகரான முசிறியில், கடந்த பத்தாண்டுகளாக அகழாய்வு செய்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொருள்களை வெளிக்கொண்டு வந்த பாமா என்ற நிறுவனத்தின் தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர் பி.ஜெ. செரியன் (P.J.CHERIAN) இந்த அகழாய்வு குறித்து வெளிப்படுத்தும் விடயங்கள் மிக முக்கியமானவை. இன்று கேரளாவில் உள்ள பட்டணம் என்ற இடத்தில் இந்த அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதி பண்டைய சேரர் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்நகரம் கிரேக்க இலத்தீன் இலக்கியங்களில் முசிறிசு என அழைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு இலட்சம் பொருட்களில் ஒன்று கூட மதச்சார்பானதாக இல்லை எனவும், இந்நகரம் அன்று கிழக்கே சீனா முதல் மேற்கே உரோம் வரை வணிகம் செய்து வந்துள்ளது எனவும், தமிழகத்தில் கி.மு. 1000 வாக்கிலேயே நகர் மையங்கள் உருவாகத் துவங்கிவிட்டன எனவும் செரியன் கூறுகிறார்.

கிரேக்க இலத்தீன் இலக்கியங்களை நன்கு அறிந்த அமெரிக்க ஐரோப்பிய அறிஞர்கள், அன்று இந்த முசிறி நகரானது, இன்றைய நியூயார்க், இலண்டன், சாங்காய் போன்ற புகழ்பெற்ற பெரும்துறைமுக நகரங்களுக்கு இணையாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர் எனக் கூறுகிறார். உலகின் இன்றைய பெரும் துறைமுக நகரங்கள் இவை. அன்று முசிறி இன்றைய உலகின் பெருந்துறைமுக நகரங்களுக்கு இணையான நகராக இருந்துள்ளது. மேலும் இந்த முசிறி நகர் தென் சீனத்திலிருந்து, ஐரோப்பாவின் ஜிப்ரால்டர் சலசந்தி வரை, மத்தியதரைக்கடல், செங்கடல், இந்தியப்பெருங்கடல் ஆகியவற்றில் உள்ள 40 துறைமுக நகரங்களோடும், 30 வேறுபட்ட பண்பாடுகளோடும் நேரடித் தொடர்பில் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன எனவும், இவை வாசுகோடகமா இந்தியா வருவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன் நடந்தவை எனவும் செரியன் கூறுகிறார். பூம்புகார், கொற்கை போன்றவை முசிறியைவிடப்பெரிய நகரங்கள். பெரிப்ளசு என்ற எகிப்திய பயணி கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவின் கங்கைவரை சென்று திரும்பியவர். அவர் மேற்கு நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்த கப்பல்களை விட, மிகப்பெரிய அளவிலும் மிக அதிக எண்ணிக்கையிலுமான கப்பல்கள் கிழக்கு நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து சென்று வந்தன என்கிறார். மேற்கே முசிறி இருந்தது என்றால் கிழக்கே அதைவிடப் பெரிதான பூம்புகார் இருந்துள்ளது. இவ்விரண்டுக்கும் இடையே கொற்கை இருந்துள்ளது. ஆகவே அன்றைய தமிழகம், உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக, உலகளாவிய அளவிலான வணிக மையமாக இயங்கி வந்துள்ளது எனலாம்.

2006 முதல் 2016 வரை பத்துதடவை முசிறியில் அகழாய்வு செய்யப்பட்டது எனவும் 10 வருடங்களாக இதுவரை ஒரு விழுக்காட்டு அளவு பரப்புக்கே அகழாய்வு நடந்துள்ளது எனவும் இந்தியப்பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி ஆக்சுபோர்டு, உரோம் போன்ற உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களோடு இணைந்து இவ்வாய்வு நடைபெற்றது எனவும், இங்கு கீழடியில் கிடைத்தது போலவே செங்கல் அமைப்புடன் கூடிய கட்டடங்கள், கூரை ஓடுகள், செம்பு, தந்தம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன எனவும் முசிறியின் அகழாய்வு காலம் கி.மு. 500 முதல் 300 வரை எனவும் செரியன் கூறுகிறார். மேலும் அவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தனித்த பண்பாட்டோடு தமிழ்மக்கள் வாழ்ந்துள்ளனர் எனவும், அன்று பெண்களுக்கு பெரும் சமூகப் பொறுப்புகள் அளிக்கப்பட்டிருந்தன எனவும், புத்தமதப் பரவலுக்கு முன் தமிழர்கள் வளமாக வாழ்ந்து வந்துள்ளனர் எனவும், அமலன் என்ற பிராமி எழுத்துப்பொறிப்பு தவிர மதம் சமயம் சார்ந்த அடையாளம் எதுவும் அங்கு காணப்படவில்லை எனவும்(அமலன் என்பது சமயச்சொல் அல்ல. அது ஒரு பெயர்ச்சொல். கொடுமணலில் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பல வட இந்திய வணிகர்களின் பெயர் பொறித்த தமிழி எழுத்துப்பொறிப்புகள் கிடைத்துள்ளன), மிகவும் நாகரிகமான மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக கழிப்பறைகள் கட்டப்பட்டு, பூமியின் மேற்பரப்பிற்கு கெடுதல் ஏற்படாத வகையில் கழிவுகளை வெளியேற்றி உள்ளனர் எனவும் கூறுகிறார். பண்டைய தமிழகம் என்பது ஆந்திரா, கர்நாடகா ஆகியவைகளின் தென்பகுதியையும், தற்போதைய தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளையும் கொண்டதாக இருந்துள்ளது எனவும் ஆனால் மற்ற மாநிலங்களில் தங்களின் முன்னோர்கள் குறித்தும், வரலாறு குறித்துமான புரிதல் இல்லை எனவும் அவர் கூறுகிறார். (1.தின மலர் நாளிதழ், நாள்: 4-11-2018 & 2.எம்.டி. சஜு(M.T. SAJU) என்பவர் செரியன் அவர்களிடம் எடுத்த பேட்டி).

முசிறியில் கிடைத்த ஒரு இலட்சம் பொருட்களில் மதம் சமயம் சார்ந்த பொருள் எதுவும் கிடைக்கவில்லை. கீழடியில் கிடைத்த பல ஆயிரம் பொருட்களிலும் மதம் சமயம் சார்ந்த பொருள் எதுவும் இல்லை. இவை எதைக் காட்டுகின்றன? முதலும், முடிவுமற்ற இப்பேரண்டம் என்றென்றும் இருந்து கொண்டிருக்கிறது என்பதால் படைத்தவன் ஒருவன் தேவையில்லை என்கிறார் எண்ணிய மூலவரும், தமிழ் அறிவு மரபின் தந்தையுமான தொல்கபிலர். பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக இந்தத் தொல்கபிலர், கணாதர் போன்றவர்களின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் தான் இருந்தன என்பதை, ‘மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு’ என்ற எனது நூல் நிறுவியுள்ளது. இவைகளைத்தான் முசிறி, கீழடி அகழாய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்தே நகர, நகர் மைய அரசுகள் இருந்தன என்பதையும், அவை தங்களது உயர் தொழில்நுட்ப மேன்மை காரணமாக கி.மு. 8ஆம் நூற்றாண்டில் இருந்தே உலகளாவிய அளவில் வணிகம் புரிந்து வந்துள்ளன என்பதையும் எனது ‘பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்’ என்ற நூல் உறுதிசெய்துள்ளது. இவைகளையும் முசிறி, கீழடி அகழாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

எனது நூல்கள்: 1. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினிபதிப்பகம், சூலை-2018, சென்னை(கைபேசி:8667255103).

 1. பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினிபதிப்பகம் சூலை-2018. சென்னை(கைபேசி:8667255103),
 2. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு பதிப்பகம், சூன்–2016, பொள்ளாச்சி.

Note: PAMA – Institute for the advancement of Transdisciplinary Archaeological sciences

- கணியன் பாலன், ஈரோடு

Pin It

“சிறகிலிருந்து
பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஓரு பறவையின்
வாழ்வை
எழுதிச் செல்கிறது.”

“அக்கினிக் குஞ்சைப் போல்
அகத்துள் எழும் பெரு நெருப்பு
பெருங்காட்டை அழித்துவிடும்
பிரளயமாய் பீறி எழும்
பேதமையைச் சுட்டெரிக்கும்.”

- பிரமிள்

ஐம்பத்தி எட்டு ஆண்டுகள் மட்டுமே இந்த உலகில் வாழ்ந்த பிரமிள் கலை, இலக்கியத்துக்காகவே வாழ்ந்தார். அவருக்கு வேறு தொழில்கள் தெரியாது. ஓவியம் போன்ற நுண்கலைகளிலும் ஈடுபாடு இருந்தாலும் கலை இலக்கியம் தான் அவரது முக்கிய மூச்சாக இயங்கியது. இதனால் அவருக்கு பசி, பட்டினி எல்லாம் பழக்கமானது. ஆன்மீக உரம் அவருக்கு உளப்பலத்தைக் கொடுத்தது. அதனால் தைரியமாக இந்த உலகத்தை எதிர் கொண்டார். எந்தப் பெரிய கொம்பனாக இருந்தாலும் சரி, சாதாரண எலும்பனாக இருந்தாலும் சரி தயவு தாட்சண்யம் பார்க்காமல் நேர்மையாக விமர்சனம் செய்தார். இதனால் தன் மீது எறியப்பட்ட அம்புகளை எல்லாம் அடித்து நொறுக்கி வீழ்த்தினார். தனி ஒருவனாக வீர்யம் மிக்க படைப்பாளியாக உயர்ந்து நின்றார். தமிழின் மகத்தான படைப்புக் குரல் இவருடையது. தமிழில் கவிதை விமர்சனத்துறை வளரவில்லை என்ற வசை இவரால் ஒழிந்தது. நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளை, கருத்தாக்க அடிப்படையில் அணுகி , தரநிர்ணயம் செய்வதில் தாட்சண்யம் காட்டாத விமர்சகர். இவருடைய விமர்சன வீச்சால் நவீன தமிழ் இலக்கிய மதிப்பீடுகளில் மாற்றங்கள் நிகழ்ந்தன. கவிதைக் கோட்பாடுகள், அடிப்படைகள், உத்திகள் பற்றிப் பல விஷயங்களை ஆழமாகப் பேசும் கட்டுரைகளை பிரமிள் படைத்தார். கவிதை நூல்களுக்கு இவர் எழுதிய முன்னுரைகளில் கூட கவிதை பற்றிய ஆழ்ந்த புரிதல்களைக் காண முடியும். கவிதைகளை அணுகும் முறைகளைக் கற்றுத்தந்த நவீன ஆசான் என்று கூட இவரைக் கூறலாம்.

pramilதமிழில் வசன கவிதை என்னும் பெயரில் தொடங்கி, புதுக்கவிதை என்னும் பெயரில் நடந்த ஓர் இயக்கத்தில் ‘எழுத்து’ பத்திரிகையில் எழுத ஆரம்பித்து 1997 ஆம் ஆண்டு வரை தீவிரமாகச் செயல்பட்டவர். புதுக்கவிதையில் படிமங்களை அதிகமாக உபயோகிக்கத் தொடங்கியவராக அறியப்பட்டு ‘படிமக் கவிஞர் ’ என்று அழைக்கப்பட்டார். தமிழ்ப் புதுக்கவிதையின் முன்னோடிகளில் ஒருவர் இவர்.

இலங்கை திருகோணமலையில் கணபதிப்பிள்ளை விருட்சலிங்கம் (தர்மராஜன்) - அன்னலட்சுமி வாழ்விணையருக்கு மகனாக 20.04.1939 ஆம் நாள் பிறந்தார். பிரமிளின் இயற்பெயர் சிவராமலிங்கம். திரிகோணமலையில் இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தமது தொடக்கக் கல்வியை கற்றார்.

பள்ளியில் படிக்கும் போதே , ‘யாழ்’ என்னும் கையெழுத்துப் பிரதியில் கவிதைகளையும் , ஓவியங்களையும், மரபுக்கவிதைகளையும், கதைகளையும், சித்திரத் தொடர்களையும் எழுதியுள்ளார்.

1960 களின் பிற்பகுதியில் பிரான்சுக்குச் செல்லும் நோக்கத்துடன் தமிழகம் வந்தார். ஆனால், பிரான்சுக்குச் செல்லாமல் தமிழகத்திலேயே தங்கிவிட்டார்.

வாசிங்டன் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்னும் நிறுவனத்தில் அஞ்சல் வழியில் சித்திரக்கலையைக் கற்றார்.

எழுத்து, கொல்லிப்பாவை, மீறல் , லயம், அஃக், சதங்கை, யாத்ரா, படிமம், கற்குதிரை, திசைநான்கு, கனவு, நவீன விருட்சம், அரும்பு, பசுமை முதலிய இதழ்களில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எழுதினார்.

பிரமிள் கவிதை, கட்டுரை, சிறுகதை, ஓவியம், சிற்பம், களிமண் சிற்பம், நாடகம், மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆன்மிகம், சோதிடம், எண் கணிதம் என விரிந்த பல தளங்களில் இயங்கியவர்.

லஷ்மி ஜோதி, இலக்குமி இளங்கோ, கௌரி, பூம்பொற்கொடி இளங்கோ, பிருமிள், பிரமிள் பானு , அரூப் சிவராமு முதலிய புனை பெயர்களில் எழுதியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்துடன் இணைந்து ‘தமிழீழத்தில் ரணகளம் ’ என்ற புகைப்படத் தொகுப்பு நூலை எழுதி வெளியிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வெளியீட்டுப் பிரிவில் சில காலம் பணியாற்றினார்.

பிரமிள் எழுதி அளித்துள்ள படைப்புகள், கவிதைத் தொகுதிகள்: கண்ணாடியுள்ளிருந்து , கைப்பிடியளவு கடல், மேல்நோக்கிய பயணம், பிரமிள் கவிதைகள், சிறுகதை தொகுப்பு: லங்காபுரி ராஜா, யாழ் கதைகள் ( சிறுவர் கதைகள்), தியானதார, மார்க்சும் மார்க்சியமும் - பீட்டர் வோர்ஸ்லி (தமிழ் மொழிபெயர்ப்பு) வானமற்ற வெளி : கவிதை பற்றிய கட்டுரைகள், பாதையில்லாப் பயணம் : (ஆன்மிக மறைமுகஞானப் படைப்புகள்), விடுதலையும் கலாச்சாரமும்: (மொழி பெயர்ப்பு படைப்புகள்), ஸ்ரீலங்காவின் தேசியத் தற்கொலை, காலவெளிக் கதைகள் ( அறிவியல் கட்டுரைகள்), வெயிலும் நிழலும் ( இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்) , வரலாற்றுச் சலனங்கள் (சமுதாயவியல் கட்டுரைகள்), எதிர்ப்புச் சுவடுகள் ( பேட்டிகள், உரையாடல்கள்), அறைகூவல் (இலக்கிய அரசியல் எழுத்துக்கள்),தமிழின் நவீனத்துவம் (எழுத்து இதழில் வெளிவந்த கட்டுரைகள்), சூரியன் தகித்த நிறம் ( மொழி பெயர்ப்புக் கவிதைகள்) , ஆயி , பிரசன்னம் (குறுநாவல்கள்) , நட்சத்திரவாஷி ( நாடகம்), விமர்சன ஊழல்கள் (நேர் காணல்கள்), விமர்சணாஸ்ரமம் ( கட்டுரைத் தொகுப்பு), விமர்சன மீட்சிகள் , பிரமிள் படைப்புகள்: தொகுதி 1 ( கவிதைகள்), பிரமிள் படைப்புகள்: தொகுதி 2 ( கவிதைகள் , நாடகங்கள்), பிரமிள் படைப்புகள்: தொகுதி 3 ( விமர்சனக் கட்டுரைகள்), பிரமிள் படைப்புகள்:தொகுதி 4 (விமர்சனக் கட்டுரைகள்), பிரமிள் படைப்புகள்:தொகுதி 5 (பேட்டிகளும், உரையாடல்களும்), பிரமிள் படைப்புகள்: தொகுதி 6 (மொழி பெயர்ப்பு , அறிவியல், ஆன்மிகம்) முதலியவைகளாகும்.

வானமற்ற வெளி (கவிதைத் தொகுப்பு) – பிரமிள் (தொகுப்பு கால சுப்ரமணியம்). கவிதை தொடர்பான 35 கட்டுரைகளை உள்ளடக்கிய இத்தொகுதியில், புதுக்கவிதையையும் ந.பிச்சமூர்த்தியையும் நிறுவுவதற்காக மட்டுமே பதினோரு கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஓளவை , பாரதி, பசுவய்யா, சி. மணி, நாரணோ ஜெயராமன், கால சுப்ரமணியம், தேவதேவன், விக்ரமாதித்யன், சமயவேல், ரமேஷ்-பிரேம் என மூத்த சமகால இளைய கவிஞர்கள் குறித்த பிரமிளின் கட்டுரைகளும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

பிரமிள், படைப்பை இயற்கைக்கு நிகரானதாய், முழுமையானதாய், கலைஞனின் மனோதர்மத்தை வெளியிடும் கருவியாக , உயர்ந்த போதம் உருவாக்கும் அழிகியலாய் காண்கிறார்.

‘லங்காபுரி ராஜா’ என்னும் குறுநாவல் ஈழத்தின் விடுதலைப் போராட்டம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. இக்குறுநாவல் ‘தினமணி கதிர்’ இதழில் தொடராக வெளிவந்தது. சிறுகதையின் திருமூலர் என்றழைக்கப்படும் மௌனியின் சிறுகதைத் தொகுப்புக்கு தமது 28 ஆவது வயதிலேயே முன்னுரை எழுதி அளித்துள்ளார். ‘ஆயி’ என்னும் குறுநாவல் கன்னியாகுமரி, சேலம் மாவட்டங்களில் வழங்கும் அம்மன் பற்றிய உண்மைச் சம்பவங்களை, சடங்குகளை அடிப்படையாகக் கொண்டது.

‘கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரை, பாரதியை மதிப்பீடு செய்து வெளிவந்தவைகளில் மிக முக்கியமானது எனத் தமிழ்கூறும் நல்லுலகம் பாராட்டியது.

க.நா.சு தமிழில் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலில் பிரமிள் எழுதிய ‘சந்திப்பு ’ சிறுகதை இடம் பெற்றுள்ளது.

பிரமிள் எழுதிய நாடகங்களுள் ‘நட்சத்திரவாஷி’ இவருக்கு பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது. இந்நாடகம் முதன் முதலில் பேராதனை பல்கலைக்கழகத்தில் அதன் தமிழ்ச்சங்க பொன்விழா சிறப்பு நிகழ்வில் மேடையேற்றப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின் கொழும்பில் இயங்கிய பாலேந்திராவின் அவைக்காற்று கழகத்தினால் கொழும்பில் மேடையேற்றப்பட்டது. பின்னர் அவைக்காற்று கழகம் மூலம் லண்டனிலும் மேடையேற்றப்பட்டது.

பிரமிளின் சில கவிதைகள்

எல்லை
கருகித்தான் விறகு
தீயாகும்

அதிராத தந்தி
இசைக்குமா ?

ஆனாலும்
அதிர்கிற தந்தியில்
தூசி குந்தாது.

கொசு
நெருப்பில் மொய்க்காது.

தாசி
குங்குமம், கூந்தலில் மலர்,
‘குலக்கொடி நான்
ஆனால் இது
பசிக்கொடுமையில் ‘ என்றாய்.
எனவே நான்
பேரம் பேசவில்லை.
உன் கண்களும்
அரையிருளில்
உனது புருவ நிழலில்
தெரியவில்லை.
மனசைக் கீறியது
இருளின் திருட்டு விழிப்பு
தசையைத் தீண்டிற்று
தாம்பூலச் சகதி.
இருபது ரூபாய்களுக்கு
எனதின்பம் உனதுதரத்துள்
எரிகற் தாரையாய்
சீறி விழுந்தது.

 

குமிழிகள்
இன்னும்
உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.

கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர் மொக்கு.

இருபத்திநாலு மணிநேர இரவு

பகலைச்
சட்ட பூர்வமாகச் சதுரமிட்ட
ஜன்னல்களில்
நடுநிசியின் ரௌடி நிழல்கள்.

பதுங்காமல்
பவிஷீடன் பவனிவரும்
ஓநாய் பற்களுக்கு
இரும்பு வளைவுகளாய்
ராணுவப் பாதுகாப்பு.

இருமை தாண்ட விரதமெடுத்துத்
தலைமழித்த பிட்க்ஷீ மடத்தில்
மலர்ச்செடி சிலிர்ப்புகள் கூட
ராஷஸத் தலைப் பரட்டைகளாகின்றன.
குழந்தை வீறிடுகிறாள்.

நாளாந்த நாகரீகத்தின்
ஒளிச்சதுரம் உடைந்து
வீட்டினுள் சிதறுகிறது
சட்டத்தின் கரம் எறிந்த
பெட்ரோல் வெடி.

குழந்தமை கற்பிழந்து
பயங்கரம் முதிர்கிறது.
உலகின் ஊமைச் சட்டங்கள்
வீறிட்டு அழும்
பெண்குரலைச் சுற்றி
உதவியற்ற
அமைதிப் பிராந்தியமாகின்றன.
விடிவின் திசையற்று
ஒரு சமூகத்தின் உயிரை சூழ்கிறது
இருபத்தி நாலு மணிநேர
இருள்.

கண் முன்னால் தாய்தங்கை
கழுத்தறுபடக் கண்டவனின்
பிஞ்சுக் கை பிடித்த
துப்பாக்கி இரும்பில் மட்டும்
நஷத்திரங்களின்
ஓளிக் கண்ணீர்த்துளி ஒன்று
உதயத்தை நோக்கிப்
பிரவஹிக்கிறது
நெருப்பாக.

இழையோடும் மனிதாபிமானம்

“ வைரம் நிறுத்தது
போன்ற சொற்கள்
சொற்களின் விளிம்பில்
வானவில் நயங்கள்
உணர உணர
விரிகின்ற கருத்தாழம்
உவமைகளை உருவங்களாக்கி
உருவங்களைப்
படிமங்களாக்கும் நேர்த்தி
அறிவியலின் ஒளிச்சாயல்
வரலாற்றின் ஏடுகளை
ஈரமாக்கித் துளும்பும் சோகம்
அதற்குள் பொதிந்து
இழையோடும் மனிதாபிமானம். ”

நீதிப் பண்புக்கு முரணாக அழகினை அனுசரிக்கும் இயல் எதுவும் இருக்க முடியாது . விமர்சனத்தின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, அநீதியே அழகியலாக வடிவெடுக்க இடமில்லை. ஆயினும், இல்லாமையற்ற, சமூக ஏற்றத் தாழ்வுகள் அற்ற பகுத்தறிவுப் பூர்வமான இயக்கங்களை வேரறுக்கும் ஏற்றத் தாழ்வுக் கங்காணிகள் இந்தியாவில் அழகியலை வர்ணாஸ்ரமச் சார்புள்ள இயலாகவே பயின்று வந்திருக்கின்றனர். காரணம், வர்ணாஸ்ரமமே தர்மம் நீதி நியதி என்ற இந்திய மனோவியாதி மண்டலத் தொடர்ச்சியாகும்”. ‘ விமர்சன மீட்சிகள் ’ என்ற கணையாழி கட்டுரையில் பிரமிள் இந்திய இலக்கிய விமர்சனம் குறித்து பதிவு செய்துள்ளார்.

“பிரமிளின் படிமவியல் 2000 வருட தமிழ்க் கவிதைச் சரித்திரத்தில் புதுமையானது. உரைநடையின் அதிகபட்ச சத்தியத்தை நிறைவேற்றியவர்.” என ‘எழுத்து’ இதழ் ஆசிரியர் சி.சு.செல்லப்பாவும், “நவீன தமிழ் இலக்கியத்தின் மாமேதை” என நாவலாசிரியர் தி.ஜானகிராமனும் புகழ்ந்துரைத்து உள்ளனர். “பிரமிள் தமிழ்க் கவிதையின் தனிப்பெரும் ஆளுமை” என எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தமது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

“புதுக் கவிதை தொடர்பான அதிகபட்ச பிரக்ஞையும் , மரபின் செழுமையும், சமத்காரப் பண்பும், தனித்துவமான படிம வெளியீட்டு முறையையும் பெற்றவர் பிரமிள். ” என விமர்சகர் சங்கர ராம சுப்ரமணியன் பதிவு செய்துள்ளார்.

“இன்றைய தமிழ் இலக்கிய நிலையைப் பற்றி விமர்சன பூர்வமாக நிர்ணயிக்கும் முதல் கட்டுரை மௌனியின் கதைக்கு பிரமிள் எழுதிய முன்னுரை, ‘எழுத்து’ சஞ்சிகை மூலம் நமக்குக் கிடைத்த விமர்சகர். அவரது நடை சிந்தனைத்துடிப்பு மிக்கது. நுணுக்கமும், ஆழமும், உடையது . அவர் எழுத்து மேல்நாட்டு இலக்கிப் பரிச்சயத்தால் வளம் பெற்றது. ” எனக் கவிஞர் நகுலன் குறிப்பிட்டுள்ளார்.

“தற்காலத் தமிழ்க் கவிதையில், படைப்பாற்றலில் முன்னணியில் உள்ளவர் பிரமிள் என்பதில் ஐயமில்லை. இவரது படிமங்கள், வைரப்படிமங்கள் தமிழ்க் கவிதைக்கு ஒரு சொத்து. இவரது கவிதைக்குகள் மெய்யியல் பெற்றிருகூகும் ஆற்றலில் தான் இவரது உயர்நெறி தென்படுகிறது” என ஆய்வாளர் கோவை ஞானி பதிவு செய்துள்ளார் .

“தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான பிரமிள், இங்குள்ள இலக்கிய மைய நீரோட்டத்தால் முழுமையாக வரவேற்கப்பட்டவர் அல்ல. அவர் வாழும் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தமிழ்ச் சிறுகதைத் தொகுப்புகளில் அவரது கதைகள் தவிர்க்கப்பட்டன. பரிசுகள், நிறுவனங்கள் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படாத ஒரு விளிம்புநிலை எழுத்தாளராக வாழ்ந்து மடிந்தவர் அவர் ” என்று விமர்சகர் பேராசிரியர் அ. மார்க்ஸ் தமது கட்டுரை ஒன்றில் பிரமிளைப் பற்றி பதிவு செய்துள்ளார்.

நுண்ணிய பார்வையிலான ஒரு சூழலை உருவாக்கி, அதற்கு மிக மிக குறைந்தளவிலான கனமான சொற்களைக் கொண்டு கோர்த்து மொத்த வடிவத்தையும் ஒரு கவிதையாக்கும் தனித்திறம் பிரமிளுக்கு வாய்த்திருக்கிறது.

பிரமிள் தன் கவிதைகள் ஒவ்வொன்றிலும் மிகப் பெரும் வார்த்தை ஜாலத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறார். வார்த்தைகளின் கூட்டுக்குள் தன் சுயம் மறைத்தபடி மிகப்பெரும் பிரளயமாய் வெடித்துக் கிளம்புகின்றன அவரது கவிதைகள்.

பிரமிளின் ஒவ்வொரு வார்த்தையும் எதையோ சொல்ல விரும்புகின்றது. அதையும் தாண்டி மிக ஆழமாக எதையோ உணர்த்தி நிற்கின்றது. உண்மை நிலையிலிருந்து விலகி ஓர் இலட்சிய கோபுரத்தின் ஆணியடித்தது மாதிரி உட்கார்ந்திராமல் இயல்பு வாழ்வை தன் கவிதைகளில் மையப்படுத்தி இருக்கிறார் பிரமிள். எப்போதும் முடிவற்ற வெளியை நோக்கியபடி இருக்கும் இவரது பார்வை அன்றாட வாழ்வின் ஒவ்வொரு சிறு அசைவையும் மிக உன்னிப்பாகப் பார்க்க வல்லது. நான் எல்லோருக்குமாகத்தான் எழுதியிருக்கிறேன் என்று சொல்லாவிட்டாலும் அவரது கவிதைகள் நம் அனைவருக்குமானது. என ‘இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை’ என்னும் கட்டுரையில் எழுத்தாளர், விமர்சகர் பூங்குழலி வீரன் பதிவு செய்துள்ளார்.

தமிழ் விமர்சனப் போக்கிலிருந்து தனித்தொலித்த குரல் இவருடையது. வெவ்வேறு வகைப்பட்ட விமர்னப் போக்குடைய க.நா.சு. போலவோ , சி.சு. செல்லப்பா போலவோ இல்லாமல் இலக்கியக் கருத்தாக்க அடிப்படையில் படைப்பினை அணுகித் தர நிர்ணயம் செய்தவர் பிரமிள். இவருடைய வருகைக்குப் பின், நவீன தமிழ்ப் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன.”
“பிரமிள் தீவிரமான மனேபாவத்துடன் நிகழ்வுகளை எதிர் கொள்பவர். எந்த ஒரு கால கட்டத்திலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கலை இலக்கிய நிறுவனங்களின் அதிகாரப் பிரதிநிதிகளுடன் மருந்துக்குக்கூட உறவு வைத்துக் கொள்ளதவர் . அவருடைய கலை இலக்கிய மனோபாவம் மதிக்கப்பட வேண்டியது. போற்றப்பட்ட வேண்டியது. தமிழின் மகத்தான படைப்புக்குரல் இவருடையது. எழுத்தாளர் சி. மோகன்.

“தமிழ்ச் சமூகம் கொண்டாடிப் பெருமிதம் கொள்ள வேண்டிய நவீன தமிழ்க்கவி பிரமிள். 2000 ஆம் ஆண்டு வளமான தமிழ்க் கவிதை மரபு செறிவும்-குறிப்பாக சங்கக் கவிதை மரபு – தனதான கவித்துவ மேதமையும் முயங்கியதில் வெளிப்பட்ட கவி. நவீன தமிழ்க் கவிதை இத்தகையோர் படைப்பு ஆளுமையைக் கொண்டிருந்தும் அறிந்து கொண்டாட முடியாத நம் பேதமை இன்றைய சமூக அவலங்களில் ஒன்று. ” என எழுத்தாளர் சி.மோகன் பதிவு செய்துள்ளார்.

“தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் , பிரமிள் கதைகள் தவிர்க்க முடியாத தனியிடம் வகிப்பவை. புதுமைப்பித்தனுக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு படைப்பாளுமை பிரமிள். சமூக விமர்சனமும் , அங்கதக் கூர்மையும் கொண்ட கதைகளை, ருசிகரமும் ஆனந்தமும் கொண்ட கதைகளை எழுதியவர் பிரமிள் – கூடுதலாக இவரிடம் ஆன்மிக ஆழமும் இணைந்து விடுகிறது. ”

“கவிதையிலும் விமர்சனத்திலும் தமிழின் முதன்மைத் திறனாளியாக மதிக்கப்படுகிறவர் அவர். அவருடைய கதைப்பிரபஞ்சம் , அவருடைய வாழ்நாளில் முழுமையாகப் புத்தக ரூபத்தில் வாசகர்களுக்குக் கிடைக்காதது பெரும் குறையே. அப்படி வெளிவந்து இருந்தால் சிறுகதையில் பிரமிளின் சாதனை முன்பே நிறுவப்ட்டிருக்கும். ” என பேராசிரியர் காலசுப்ரமணியம் தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.
பேராசிரியர் காலசுப்ரமணியம் பிரமிள் கவிதைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பிரமிளின் அனைத்துப் படைப்புகளையும் தொகுத்து பதிப்பித்து ஆறு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். ‘இந்து தமிழ்’ நாளிதழ் தனது இலக்கிய விழாவில் ‘பிரமிள் விருது ’ என்ற பெயரில் படைப்பாளிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

கண்டி-பிரான்சு நட்புறவுக் கழகத்தின் சார்பாக 1971 ஆம் ஆண்டு பிரமிளின் ஓவியக் கண்காட்சி கண்டியில் நடை பெற்றது.

நியூயார்க் விளக்கு அமைப்பு ‘புதுமைப் பித்தன் விருது ’ அளித்து இவரைச் சிறப்பித்துள்ளது. கும்பகோணம் சிலிக்குயில் அமைப்பு இவருக்கு ‘ புதுமைப்பித்தன் வீறு ’ எனும் விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.

தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் அவரது வாழ்க்கை ஒரு துறவு நிலையில் அமைந்திருந்தது என்று கூறலாம். அவரது சொத்துக்கள் எனக் கூறினால் புத்தகங்கள் மட்டுமே. நண்பர் பலரும் அவருக்கு உதவி செய்தனர்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டு வேலூர் அருகில் உள்ள கரடிக்குடி என்னும் கிராமத்தில் 06.01.1997அன்று காலமானார். அங்கு அவரது நினைவு கல்லறை உள்ளது.

- பி.தயாளன்

Pin It

அண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும்

 நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன் ஆக்கிங் அவர்கள் எழுதிய “காலம்” என்ற நூல் அண்டம், காலம் முதலியன குறித்த விரிவான விளக்கத்தைத்தருகிறது. அந்த நூலில் இருந்து அண்டம், காலம் ஆகியன குறித்தச் சுருக்கமான தரவுகள் இங்கு தரப்பட்டுள்ளன. அண்டம் குறித்த இருபெரும் கோட்பாடுகளை நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொள்கிறது. அவை ஐன்சுடீன் அவர்களின் பொதுச்சார்பியல் கோட்பாடும் (GENERAL THEORY OF RELATIVITY), கற்றை இயங்கியலும் (QUANTUM MECHANICS) ஆகும். இதில் முதல் கோட்பாடு பெருவீதக் கட்டமைப்புகளைப் பற்றிப் பேசுகிறது. அதாவது பல இலட்சம் கோடி கி.மீ அளவுகளைக் கொண்ட பெரிய உருவங்கள் குறித்தான கோட்பாடு என அதனைச் சொல்லலாம். விண்மீன்கள், கோள்கள், திரள்கள் போன்ற பெரிய கட்டமைப்புகள் பற்றிய கோட்பாடுதான் பொதுச்சார்பியல் கோட்பாடாகும். அடுத்ததாக கற்றை இயங்கியல் என்பது கண்ணுக்கு புலப்படாத மில்லிமீட்டரில் பல இலட்சம் கோடியில் ஒருபங்கு போன்ற மிகமிகச் சிறிய அளவுப் பொருட்களைப் பற்றிய கோட்பாடு எனலாம். அணுவில் இருக்கும் நேர்மங்கள் (PROTONS), நொதுமங்கள் (NEUTRONS), பொடிமங்கள் (QUARKS), மின்மங்கள் (ELECTRONS) போன்ற கண்ணால் காண இயலாத மிகமிகச் சிறிய அளவுள்ள பொருட்களைப்பற்றிய கோட்பாடுதான் கற்றை இயங்கியல் கோட்பாடு ஆகும்.

  இந்த இரண்டு கோட்பாடுகளும் பலவிதங்களில் உறுதிசெய்யப்பட்டு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த இரண்டு கோட்பாடுகளும் சிலகோணங்களில் ஒன்றுக்கொன்று முரண்பாடு கொண்டவைகளாக இருக்கின்றன. ஆகவே அறிவியலாளர்கள் இவைகளைப் பகுதிக் கோட்பாடுகளாகவே ஏற்று அங்கீகரித்துள்ளனர். ஆகவே அண்டம் முழுமைக்குமான கோட்பாடு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த இரண்டு கோட்பாடுகளையும் இணைத்துத்தான் அண்டம் முழுமைக்குமான கோட்பாடு ஒன்று உருவாக்கப்படவேண்டும். இயற்பியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றும் எப்போதும் இடைக்காலத்துக்குரியவைதான் எனவும், புதிதாக நோக்கியறிந்த செய்தி ஒரு கோட்பாட்டிற்கு முரண்படுவதாகத் தெரிந்தால், நாம் அக்கோட்பாட்டைக் கைவிடவோ அல்லது திருத்தியமைக்கவோ வேண்டும் எனவும், பெரும்பாலும் புதிய கோட்பாடு ஒன்றை வகுத்துருவாக்கும்போது அது உண்மையில் முந்தைய கோட்பாட்டின் நீட்சியாகவே இருக்கிறது எனவும் கூறுகிறார் ஸ்டீஃபன் ஆக்கிங்(1).

stephen hawking

பொதுச்சார்பியல் கோட்பாடு:

 பொதுச்சார்பியல் கோட்பாட்டை அறிந்தவர்கள் ஐன்சுடைனின் புகழ்பெற்ற சமன்பாட்டையும் அறிந்திருப்பர். அந்தச்சமன்பாடு வருமாறு,

    E = m(cxc)

 இதில் E = ஆற்றல், m = பொருளின் நிறை c = ஒளியின் வேகம்.

 இதில் c என்ற ஒளியின் வேகமானது சுமார் வினாடிக்கு 3 இலட்சம் கி.மீ ஆகும். மேற்கண்ட சமன்பாட்டின்படி, ஒளியின் வேகத்தை ஒளியின் வேகத்தோடு பெருக்கிக் கிடைப்பதை பொருளின் நிறையோடு பெருக்கவேண்டும். இவ்வாறு பெருக்கிக் கிடைப்பதுதான் அப்பொருளின் ஆற்றலாகும். ஒளியின் வேகம் மாறாது எனவும், எதனாலும் ஒளியின் வேகத்தைக்காட்டிலும் வேகமாகப்பயணம் செய்ய இயலாது எனவும் பொதுச்சார்பியல் கோட்பாடு கூறுகிறது. பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க, நெருங்க அப்பொருளின் ஆற்றல் காரணமாக நிறை அதிகமாகி வரும். பொருளை வேகப்படுத்த மேன்மேலும் ஆற்றல் தேவைப்படும். பொருளின் வேகம் ஒளியின் வேகத்தை நெருங்க நெருங்க நிறை மேலும் மேலும் அதிகமாகி அது ஈறிலா (INFINITY) அளவாகிவிடும். ஆகவே பொருள் ஒளியின் வேகத்தை அடைய ஆற்றலின் தேவையும் ஈறிலா அளவு தேவைப்படும். இதன் காரணமாக ஒளியைத்தவிர பிற பொருட்களால் ஒளிவேகத்தை அடையவே முடியாது என்கிறது சார்பியல் கோட்பாடு(2).

வெளி-காலம்:

 சார்பியல் கோட்பாடு வெளி – காலம் குறித்த கருத்தை புரட்சிகரமாக மாற்றியமைத்துள்ளது. சார்பியல் கோட்பாடு ‘அறுதிக்காலம்’ என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது காலம் என்பது ஒருவர் இருக்கும் நிலையைப்பொறுத்து மாறுகிறது. அடுத்ததாக, காலம் என்பது வெளி என்பதிலிருந்து வேறானதல்ல. அதற்கு மாறாக ‘வெளி’ காலத்தோடு சேர்ந்து வெளி-காலம் என அழைக்கப்படும் பொருளாகிறது(3). அதன் காரணமாகவே, பூமியும் அதில் உள்ள நம்மைப்போன்ற பொருட்களும் நீளம் அகலம் உயரம் ஆகிய மூன்று பரிமாணங்களைக் கொண்ட முப்பரிமாணப்பொருட்களாக இருக்கும் நிலையில், ‘வெளி-காலம்’ என்பதால் ஆன அண்டம் என்பது இம்மூன்றுடன் சேர்ந்து காலத்தை நான்காவது பரிமாணமாகக் கொண்டு நாற்பரிமாணப்பொருளாக இருக்கிறது.

ஈர்ப்பு விசையும் காலமும்:

 ஈர்ப்பு என்பது மற்ற விசைகளைப்போல் ஒரு விசையன்று. வெளி-காலம் என்பது தட்டையாக இல்லாமல், அதில் உள்ள நிறை மற்றும் ஆற்றலின் பரவலால் வளைந்தோ, உருண்டோ இருப்பதன் விளைவுதான் ஈர்ப்பு ஆகும் என்கிறார் ஐன்சுடீன். பொதுச்சார்பியலில் உருக்கள் எப்போதுமே நாற்பரிமாண வெளி-காலத்தில் நேர்கோடுகளின் வழிச்செல்லும். ஆனால் அவை நமது முப்பரிமாண வெளியில் வளை பாதைகளின் வழிச்செல்வதாகத் தோன்றுகிறது. புவியின் பரப்பு ஓர் இரு பரிமாண வளைவெளி ஆகும். மலைப்பகுதி மேல் பறக்கும் ஒரு வானூர்தி, முப்பரிமாண வெளியில் நேர்கோட்டில் சென்றாலும், அதன் நிழல் இரு பரிமாண நிலத்தில்(மலைப்பகுதியில்) வளைந்த பாதையில் செல்வதுபோல் தெரியும். அதைப்போன்றுதான், வெளி-காலம் என்பது அதன் நிறை மற்றும் ஆற்றலால் வளைந்து இருப்பதால், நாற்பரிமாண வெளி-காலத்தில் நேர்கோட்டில் செல்லும் பூமி, முப்பரிமாண நிலையில் வளை பாதையில் செல்வதுபோல தோன்றுகிறது(4).

 ஈர்ப்பு விசைப்புலங்களால் ஒளி வளைக்கப்படுவதாக பொதுச்சார்பியல் ஊகித்தது. 1919இல் மேற்கு ஆப்ரிக்காவில் பிரித்தானிய ஆய்வுக்குழு ஒன்று, ஒளி உண்மையிலேயே பொதுச்சார்பியல் ஊகித்தது போன்றே விலகலுக்கு உள்ளாவதாக மெய்ப்பித்தது. பொதுச்சார்பியல் கோட்பாடு, புவி போன்ற பெருநிறை கொண்ட உருவின் அருகே செல்லும்பொழுது காலம் மெதுவாகச் செல்வதாகத்தோன்றும் எனவும் ஊகித்தது. ஒளியின் ஆற்றல் புவியின் அருகே அதிகமாவதால் காலம் மெதுவாகச்செல்கிறது. புவியின் ஈர்ப்புப் புலத்தில் ஒளி மேல் நோக்கிச் செல்லச்செல்ல அது ஆற்றலை இழக்கிறது. ஆதலால் புவியின் மேலே இருக்கும் ஒருவருக்கு காலம் வேகமாகச் செல்லும். ஆதலால் அவருக்கு, புவியின் கீழே நடக்கும் நிகழ்வுகளுக்கு கூடுதல் காலம் ஆவதுபோல் தோன்றும். 1962இல் இது சோதித்துப்பார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது(5).

 ஆகவே புவியின் அருகே அதிக ஈர்ப்பு ஆற்றல் இருப்பதால் அங்கு காலம் மெதுவாகச்செல்கிறது என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் சார்பியல் கோட்பாட்டில் தனித்துவமான அறுதிக்காலம் என்பதே இல்லை. அதற்குப்பதிலாக ஒருவர் இருக்கும் இடம், அவரது இயக்க நிலை முதலியனவற்றின் அடிப்படையில் அவருக்கே உரிய சொந்தக் கால அளவை இருக்கிறது என்பதுதான் உண்மை.

நிகழ்வுகள்:

 பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படி, வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கிறது. அண்டத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து எப்படி வெளியையும், காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச இயலாதோ, அதுபோன்றே பொதுச்சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும் காலமும் குறித்துப் பேசுவது பொருளற்றதாகி விடுகிறது. அதாவது நிகழ்வுகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை. அண்டத்தைப்பற்றிய மேற்கண்ட புதிய புரிதல்கள் காரணமாக அண்டத்திற்கு ஒரு திட்டமான காலத் தொடக்கம் இருக்கவேண்டும் எனவும் எதிர்காலத்தில் ஒரு திட்டமான காலத்தில் அது முடிந்தாக வேண்டும் எனவும் பொதுச்சார்பியல் கோட்பாடு குறிப்பதாக இரோசர் பென்ரோசும், நானும் உறுதி செய்தோம் என்கிறார் ஸ்டீஃபன் ஆக்கிங். ஆனால் கற்றை இயங்கியல் கோட்பாடு அண்டத்தின் முடிவு, தொடக்கம் ஆகியவற்றுக்கு முரணானது.

விரிவடையும் அண்டம்:

 நமது அண்டத்தில் சில பத்தாயிரம்கோடி திரள்கள் உள்ளன. திரள் (GALAXY) ஒவ்வொன்றும் சில பத்தாயிரம் கோடி விண்மீன்களைக் கொண்டுள்ளது. திரள்கள் சுருள் வடிவத்தில் உள்ளன. நமது திரளான பால் வீதி என்பது நூறாயிரம் ஒளியாண்டுகள் குறுக்களவு கொண்டது. நமது திரளில் உள்ள விண்மீன்கள் பல பத்து கோடி ஆண்டுகளுக்கு ஒரு முறை நமது திரளின் மையத்தைச் சுற்றி வருகின்றன. நமது ஞாயிறு என்பது நமது பால் வீதித் திரளின் சுருள் கைகளின் உள்விளிம்புக்கு அருகே உள்ள சராசரி அளவுள்ள மஞ்சள் நிற விண்மீன் ஆகும். அனேகமாக எல்லாத்திரள்களும் நம்மை விட்டு விலகிச்சென்று கொண்டுள்ளன. மேலும் எந்த அளவு ஒரு திரள் தொலைவாக உள்ளதோ அந்த அளவு நம்மை விட்டு விரைவாக விலகிச்சென்று கொண்டுள்ளது. திரள்கள் ஒவ்வொன்றுக்கும் இடையே உள்ள தொலைவும் இடைவிடாது அதிகரித்துக் கொண்டுள்ளது. இதன்படி நமது அண்டம் உண்மையில் விரிவடைந்து கொண்டுள்ளது.

கருந்துளை – இயன்வழுப்புள்ளி:

. பொதுச்சார்பியலில், எரிபொருள் தீர்ந்த பிறகு தானே தன் ஈர்ப்பினால் தகர்வுறும் விண்மீன் ஒரு வட்டாரத்தில் மாட்டிக்கொள்வதன் காரணமாக அதன் பரப்பு இறுதியில் மிகமிகச் சிறியதாகி சுன்ன அளவு ஆகி விடுவதால் அதன் பருமனும் மிகமிகச் சிறியதாகி சுன்ன அளவு சுருங்கி விடுகிறது. அந்த விண்மீனில் அடங்கிய பருப்பொருள்கள் அனைத்தும் சுன்னப்பருமனளவு கொண்ட மிகமிகச்சிறிய வட்டாரத்துக்குள் திணிக்கப்படுகிறது. அதிலிருந்து ஒளி கூட தப்பிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிடும். அதனால் பருப்பொருள்களின் அடர்த்தியும் வெளி-கால வளைவும் ஈறில்லாததாக அதாவது எல்லையற்றதாக ஆகி விடுகின்றன. இந்த வெளி கால வட்டாரத்தையே நாம் கருந்துளை என்கிறோம். ஆகவே கருந்துளை என்பது பெருநிறையும் அடர் செறிவும் கொண்ட சுன்ன அளவிளான ஒரு தகர்ந்துபோன விண்மீன் ஆகும். இந்த நிலையில்தான் கருந்துளை(BLACK HOLE) எனப்படும் ஒரு வெளி-கால வட்டாரத்துக்குள் அடங்கிய இயன்வழுப்புள்ளி(SIGULARITY) உருவாகிறது. வெளி-கால வளைவு ஈறிலையாகி அதாவது எல்லையற்றதாகி, ஒரு புள்ளி அளவான வெளி-கால வட்டாரமாதல் என்பதே இயன்வழுப்புள்ளி ஆகும். தொடக்கத்தில் அண்டம் ஒரு சுன்ன அளவாக இருந்தது என்பதோடு அதற்கு ஒரு மாவெடிப்பும்(BIGBANG) இருந்தது என்பதை இந்த இயன்வழுப்புள்ளித் தேற்றங்கள் காட்டுகின்றன. எனினும் அண்டம் எவ்வாறு தொடங்கியது என்பது குறித்துச் சார்பியல் கோட்பாடு ஒன்றும் சொல்வதில்லை. ஏனெனில் எல்லா இயற்பியல் கோட்பாடுகளும் அண்டத்தின் தொடக்கத்தில் செயலிழந்து விடுகின்றன என அது ஊகிக்கிறது.

கருந்துளையும் சந்திரசேகர் வரம்பும்:

  பொதுவாக விண்மீன்கள் அவற்றின் அணுக்கருவினைகள் உருவாக்கும் வெப்பத்தால் ஈர்ப்புக்கவர்ச்சியைச் சரிசெய்து கொண்டு நீண்ட காலத்திற்கு நிலையாக இருந்து வரும். சான்றாக நமது ஞாயிறு இன்னும் ஐந்தாயிரம் மில்லியன் ஆண்டுகளுக்குத்தேவையான எரிபொருளைக் கொண்டுள்ளது. ஞாயிற்றின் எடையைப் போல் 1.5 மடங்குக்கும் அதிகமான எடை கொண்ட விண்மீன்கள், அதன் எரிபொருள் தீர்ந்த பிறகு தன் ஈர்ப்பிற்கு எதிராகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளமுடியாது என இந்தியாவைச் சேர்ந்த தமிழரான சந்திரசேகர் கணக்கிட்டார். அது இன்று சந்திரசேகர் வரம்பு என அழைக்கப்படுகிறது. ஒரு விண்மீன் எடை சந்திர சேகர் வரம்புக்கும் குறைவாக இருக்குமானால் தவிர்ப்புக்கொள்கை வழங்கும் விலக்கலைக் கொண்டு அது முடிவில் சுருங்குவதை நிறுத்திக்கொண்டு வெள்ளைக்குறளி (White Dwarf)) என்ற நிலையை அடையும். ஞாயிற்றின் எடையைப் போல் 1.5 மடங்குக்கும் அதிக எடை கொண்ட விண்மீன்கள், அதன் எரிபொருள் தீர்ந்த பிறகு சுருங்கத்துவங்கி, அதன் ஈர்ப்புப்புலம் மேலும் மேலும் அதிகமாகி ஒளி கூட தப்பிச்செல்ல முடியாத நிலையை அடைந்து இறுதியில் பெருநிறையும் அடர் செறிவும் கொண்ட சுன்ன அளவிளான கருந்துளையாக ஆகும்.

கற்றை இயங்கியல்:

 கற்றை இயங்கியல் என்பது ஒரு நோக்காய்வுக்கான திட்டவட்டமான ஒற்றை முடிவை ஊகித்துச் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக சாத்தியப்பாடுள்ள பல்வேறு முடிவுகளையும் அது ஊகித்தறிந்து ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு வாய்ப்புண்டு என்று நமக்குச் சொல்கிறது. ஆகவே கற்றை இயங்கியல் என்பது ஊகித்தறிய முடியாத தன்மை அல்லது திட்டவரையறையின்மை என்கிற தவிர்க்க முடியாத கூறு ஒன்றை அறிவியலுக்குள் அறிமுகம் செய்கிறது. ஆகவே இது உறுதியின்மைக் கொள்கை எனப்படும். அண்டம் தற்செயலால் ஆளப்படுகிறது என்ற கருத்தை ஐன்சுடீன் ஏற்றுக்கொள்ளாதவர் என்பதால் அவர் இதை வன்மையாக எதிர்த்தார். ஆனால் உண்மையில் இந்தக்கோட்பாடு மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இது நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் அனைத்திற்கும் அடிநாதமாய்த் திகழ்கிறது. தொலைக்காட்சிகள், கணினிகள் போன்ற மின்னணுச் சாதனங்களின் இன்றியமையாத உறுப்புகளாகிய முத்தடையங்கள் (TRANSISTORS) மற்றும் தொகுப்புச்சுற்றுகள் ஆகியவற்றின் இயக்கத்தை இதுவே ஆள்கிறது. நவீன வேதியியல், உயிரியல் ஆகியவற்றுக்கும் இதுவே அடிப்படை என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(6).

 பிளாங்கின் கற்றைக்கருதுகோள், ஒளிகள் என்பது அலைகளால் ஆனது என்றாலும் சிலவகையில் அது துகள்களால் ஆனதுபோல் நடந்துகொள்கிறது என்கிறது. அதனைக்கற்றைகள் எனப்படும் பொட்டலங்களாக மட்டுமே உமிழவோ அல்லது உட்கொள்ளவோ முடியும். கற்றை இயங்கியல் புத்தம் புதியவகையிலான கணக்கியலை அடிப்படையாகக் கொண்டது. மேலும் கற்றை இயங்கியலில் அலைகளுக்கும், துகள்களுக்கும் இடையே இரட்டைத்தன்மை உள்ளது. அதாவது சில நோக்கங்களுக்குத் துகள்களை அலைகளாகக் கொள்வதும், வேறு சில நோக்கங்களுக்கு அலைகளைத் துகள்களாகக் கொள்வதும் பொருந்திப் போகிறது(7). சான்றாக அணுக்கருவைச் சுற்றிவரும் மின்மத்தைத் துகளுக்குப்பதில் அலையாகக் கருதிக்கொள்ளலாம் என்பதன் மூலம் சில பிரச்சினைகளைக் கற்றை இயங்கியல் தீர்த்து வைத்துள்ளது.

தவிர்ப்புக்கொள்கை & எதிர்த்துகள்:

 வோல்ஃகேங் பாலி என்பவர், இரண்டு ஒத்தத்துகள்கள் ஒரே நிலவரத்தில் இருக்க முடியாது, அதாவது உறுதியின்மைக்கொள்கை விதிக்கும் எல்லைகளுக்குள் அவை இரண்டுக்கும் ஒரே நிலையும், ஒரே திசைவேகமும் இருக்கமுடியாது என்ற தவிர்ப்புக்கொள்கையை கண்டுபிடித்தார். தவிர்ப்புக் கொள்கை இல்லாமல் உலகம் படைக்கப்பட்டிருந்தால் பொடிமங்கள் தனித்த நன்கு வரையறுக்கப்பட்ட நேர்மங்களாகவும், நொதுமங்களாகவும் அமையமாட்ட. அவை மின்மங்களோடு சேர்ந்து தனித்த நன்கு வரையறுக்கப்பட்ட அணுக்களாகவும் அமையமாட்டா என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங். பால் டிராக் என்பவர் மின்மத்துக்கு ஒரு பங்காளி, அதாவது ஓர் எதிர்மின்மம் அல்லது நேராக்கமின்மம்(POSITRON) இருந்தாகவேண்டும் என்பதைக் கண்டுபிடித்தார். இதன்படி, ஒவ்வொரு துகளுக்கும் எதிர்த்துகள் உண்டு; அவை ஒன்றோடு ஒன்று மோதி அழியும்; அவைகளின் ஆற்றல்கள் மட்டுமே எஞ்சி நிற்கும். எதிர்த்துகளிலிருந்து உருவான முழு எதிருலகங்களும் எதிர் மக்களினமும் இருக்கக் கூடும். நாமும் நமது எதிர்த்துகள் நபரும் சந்தித்தால் இருவரும் அழிவோம். ஆனால் நம்மைச்சுற்றி எதிர்த்துகள்களைக்காட்டிலும் துகள்களே அதிகமாக உள்ளன என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(8).

விசையேந்தித் துகள்கள்:

 கற்றை இயங்கியலில் நேர்மங்கள், நொதுமங்கள், போன்ற பருப்பொருள் துகள்களுக்கிடையே பரிமாற்றம் செய்யப்படும் விசையேந்தித்துகள்கள் மாயத்துகள்கள் (VIRTUAL PARTICLES) எனப்படுகின்றன. ஏனெனில் இவைகளைத் துகள் கண்டுபிடிக்கும் கருவியால் கண்டுபிடிக்க முடியாது. அவை பருப்பொருள் துகள்களுக்கிடையே விசைகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த விசையேந்தித்துகள்கள் தவிர்ப்புக் கொள்கைக்கு கீழ்ப்படிவதில்லை. அதன் காரணமாக பரிமாற்றிக் கொள்ளக்கூடிய விசையேந்தித் துகள்களுக்கு எல்லையேதும் இல்லை. விசையேந்தித் துகள்களில் ஈர்ப்பு விசை, மின்காந்த விசை, மெல்அணுக்கருவிசை (WEEK NUCLEAR FORCE), வல் அணுக்கரு விசை (STRONG NUCLEAR FORCE) ஆகிய நான்கு வகையினங்கள் உண்டு.

கருந்துளைகளின் கதிர்வீச்சு:

 ஒரு கருந்துளை என்பது பெருந்தொலைவுக்குத் தப்பிச்செல்ல இடமளிக்காத நிகழ்ச்சிக்கணம் ஆகும். கருந்துளையிலிருந்து தப்பிச்செல்ல கடைக்கணத்தில் முடியாமற்போய் எக்காலத்திற்கும் ஓரத்திலேயே வட்டமடித்துக்கொண்டிருக்கும் ஒளிக்கதிர்களின் வெளி-காலப்பாதைகளே கருந்துளையின் எல்லையாகிய நிகழ்ச்சி விளிம்பாக அமைகின்றன. கற்றை இயங்கியலின் உறுதியின்மைக்கொள்கைப்படி சுழலும் கருந்துளைகள் துகள்களைப் படைக்கவும், உமிழவும் வேண்டும். சார்பியலின்படி, கருந்துளையின் நிகழ்ச்சி விளிம்பிலிருந்து எதுவுமே தப்பிச்செல்ல முடியாது எனில் அது துகள்களை உமிழ்வது சாத்தியமற்றது. ஆனால் துகள்கள் கருந்துளையின் நிகழ்ச்சிவிளிம்பை ஒட்டிப்புறத்தே இருக்கும் ‘வெற்று’ வெளியிலிருந்து உமிழப்படுகின்றனவே தவிர கருந்துளைக்கு உள்ளிருந்து உமிழப்படுவதில்லை என கற்றை இயங்கியல் கோட்பாடு பதில் தருகிறது.

 ‘வெற்று’ வெளியென்று நாம் சொல்வது அடியோடு வெற்றாக இருக்க முடியாது. வெற்று வெளியில் ஈர்ப்புப் புலம், மின்காந்தப்புலம் போன்றவற்றைத் துல்லியமான முறையில் சுன்னமாக நிலைப்படுத்த முடியாது. இந்த வெற்றுப் புலத்தில் குறிப்பிடத்தக்கக் குறைந்தபட்ச உறுதியின்மை, அல்லது கற்றை ஏற்றவற்றங்கள் இருந்தாக வேண்டும். இந்த ஏற்றவற்றங்களுக்கு ஒளி அல்லது ஈர்ப்புத் துகளின் இணைகள் காரணமாகலாம். விசையேந்தித் துகள்களை ஒத்த மாய இணைகளாக மின்மங்கள் அல்லது பொடிமங்கள் போன்ற பருப்பொருள் துகள்கள் இப்புலத்தில் இருக்குமென்றும் உறுதியின்மைக்கொள்கை ஊகிக்கிறது(9). இணைகள் என்பன துகளும் எதிர்த்துகளும் ஆகும். வெளியேறிச்செல்லும் கதிர்வீச்சால் கருந்துளையின் நிறை குறைந்து, அது மிகச்சிறியதாகி, இறுதிப்பெரும் உமிழ்வுத் தெறிப்பில், கருந்துளை அடியோடு மறைந்துவிடும் என ஊகிக்கிறார் ஆக்கிங். பொதுச்சார்பியலையும் கற்றை இயங்கியலையும் அடிப்படையாகக்கொண்ட ஊகித்தறிதலுக்கு, கருந்துளையின் கதிர்வீச்சுதான் முதல் சான்றாகத்திகழ்கிறது என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

புழுத்துளையும் காலப்பயணமும்:

  ஒளியைக்காட்டிலும் வேகமாகப் பயணம் செய்ய முடியுமானால் காலத்தில் பின்னோக்கிப் பயணம் செய்ய முடியும் என சார்பியல் கோட்பாடு கூறுகிறது. அதே சமயத்தில் ஒளி வேகத்தில் பயணம் செய்வது என்பது இயலாத ஒன்று என்பதையும் அது கூறுகிறது. வெளி-காலத்தை சுருட்டி வளைத்து இரு இடங்களுக்கு இடையே ஒரு புழுத்துளையை உருவாக்குவதன் மூலம் காலப்பயணத்தை மேற்கொள்ள முடியும். புழுத்துளை(wormhole) என்பது தொலைவாக விலகியுள்ள சற்றொப்பத் தட்டையான வட்டாரங்கள் இரண்டை இணைக்கக் கூடிய மெலிந்த வெளி-காலக் குழாய் ஆகும். கடந்த காலத்துக்குள் பயணம் செய்ய, வெளி-காலத்தை சுருட்டுவதற்குத் தேவை எதிர்மறை ஆற்றல் அடர்த்தி கொண்ட பருப்பொருள் ஆகும். வெளி-காலத்தை சுருட்டி வளைக்க முடியும் என்பதற்கு மறைப்புகளின் போது ஒளி வளைதல் இருப்பதும், காலப்பயணத்திற்கு இடமளிக்கத் தேவையான வழியில் அதனை வளைக்க முடியும் என்பதற்கு காசிமிர் வளைவு என்பது இருப்பதும் ஆய்வுச் சான்றுகளாக உள்ளன. எனவே அறிவியல் தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறிச்செல்லும் பொழுது இறுதியில் காலப் பயணம் செய்யும் ஒரு கால இயந்திரத்தை நம்மால் உருவாக்க முடியும் எனக் கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங்க்.

அண்டம் குறித்த முன்மொழிவு:

 வெளி-காலம் என்பது மாவெடிப்பு இயன்வழுப்புள்ளியில் தொடங்கியது என்றும், முழு அண்டமும் மறுதகர்வுற்றால் மாநெரிப்பு(BIG CRUNCH) இயன்வழுப்புள்ளியில் அது முடிவடையும் என்றும் பொதுச்சார்பியல் ஊகித்தது. மாவெடிப்பு இயன்வழுப்புள்ளியில் அறியப்பட்ட அறிவியல்விதிகள் அனைத்தும் செயலற்றுவிடும் எனவும் அது ஊகித்தது. ஆகவே அண்டத்தின் மிகவும் முற்பட்ட கட்டங்களைப்பற்றிப்பேச பொதுச்சார்பியலும் கற்றை இயங்கியலும் இணைந்த “ஈர்ப்பியல் கற்றைக் கோட்பாடு” என்பதைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

. ஒரு வெளி-காலத்தில், நிகழ்ச்சிகளுக்குக் கால ஆயத்தின் கற்பனை மதிப்பு இருக்குமானால் அது யூக்லிடியன் வெளி-காலம் எனச் சொல்லப் படுகிறது. நாற்பரிமாணம் கொண்ட யூக்லிடியன் வெளி-காலத்தில் உள்ள ஒரு புள்ளியின் நிலையைக்குறிக்க நீளம், அகலம், உயரம் ஆகிய மூன்றுதிசைகளின் வெளி-கால ஆயங்கள் தவிர காலம் என்ற நான்காவது திசையின் ஆயமும் வேண்டும். ஆயம்(CO-ORDINATE) என்பது வெளி-காலத்தில் ஒரு புள்ளியின் நிலையைக் குறிக்கும் எண் ஆகும். யூக்லிடிய வெளி-காலத்தில் காலத்திசைக்கும், வெளித் திசைகளுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. கற்றை இயங்கியலைப் பொறுத்தவரை, கற்பனைக்காலத்தையும், யூக்லிடிய வெளி-காலத்தையும் பயன்படுத்தி மெய் வெளி-காலம் பற்றிய விடைகளைக் கணக்கிடலாம். கற்றை இயங்கியலோடு, ஈர்ப்பை ஒருங்கிணைக்க கற்பனைக்காலம் தேவைப்படுகிறது ஈர்ப்பியல் கற்றைக்கோட்பாட்டில் யூக்லிடிய வெளி-காலங்களைப் பயன்படுத்துகிற காரணத்தால் வெளி-காலம் நீட்சியில் வரம்புள்ளதாக இருந்த போதிலும் எல்லை அல்லது விளிம்பாக அமைந்த இயன்வழுப்புள்ளிகள் எதுவும் இல்லாதிருப்பது சாத்தியமாகும். ஒரு கூடுதல் பரிமாணத்தைக் கொண்ட வெளி-காலம், புவியைப் போன்று இருக்கும். புவி நீட்சியில் ஈறுள்ளது. ஆனால் அதற்கு எல்லையோ விளிம்போ இல்லை. காலமும் வெளியும் எல்லையில்லாமல் ஈறுள்ளதாக இருக்கும் என்ற கருத்து ஒரு முன்மொழிவுதான் என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

அண்டம்:

universe 417

 படத்தில் காட்டப்பட்டுள்ள அண்டம் வடதுருவத்தில் ஒற்றைப் புள்ளியாகத் தொடங்கி தெற்கே செல்லச்செல்ல விரிவடைகிறது என்பதை அதன் குறுக்குக் கோட்டின் வட்டங்கள் குறிக்கின்றன. அண்டம் நடுக்கோட்டில் அதிகபட்ச உருவளவை அடைகிறது. தொடர்ந்து அதிகரித்துச்செல்லும் கற்பனைக் காலத்தில் அண்டம் சுருங்கத்தொடங்கி தென்துருவத்தில் ஒற்றைப்புள்ளியில் முடியும். அண்டத்தின் உருவம் வட தென் துருவங்களில் சுன்னமாக இருந்தாலும் அவை இயன்வழுப்புள்ளிகளாக இருக்காது. ஆகவே அறிவியல் விதிகள் இங்கு செயல்படும். அண்டத்தின் தொடக்கத்தில் மாவெடிப்பும், அதன் இறுதியில் மாநெரிப்பும் இருக்கும் என்பது குறிக்கப்பட்டுள்ளது. அண்டம் பற்றிய மேற்கண்ட விளக்கமும் அதற்கான பூமியை ஒத்த படமும் ஸ்டீபன் ஆக்கிங் அவர்களின் ஊகமாகும்(10). அண்டம் சுருங்கும் கட்டத்தில் எல்லையின்மைக்கொள்கை சீர்குலைவை அதிகரிக்கச் செய்து, உயிர்ப்பிறவிகள் வாழமுடியாத நிலைமையை உருவாக்குகிறது. ஆகவே அண்டம் விரிவடையும் கட்டத்தில் மட்டும்தான் அறிவு உயிர் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை இருக்கும். இவை ஸ்டீபன் ஆக்கிங் கூறுவனவாகும்.

    அண்டம்

 காலமும் வெளியும் எல்லையற்ற, ஈறுள்ள அண்டம் - ஆக்கிங்

  இறுதியாக அண்டம் என்பது வெளியும் காலமும் சேர்ந்து இயன்வழுப்புள்ளிகளோ எல்லைகளோ இல்லாத ஈறுள்ள நாற்பரிமாண வெளியாக இருக்கும். ஒரு கூடுதல் பரிமாணம் கொண்டு புவி போன்று அமையும். புவிக்கு எல்லையோ விளிம்போ இல்லை. ஆதலால் அண்டம் எல்லையோ, விளிம்போ இல்லாமல் முற்ற முழுக்கத் தன்னிறைவு கொண்டதாக இருக்கும். அதற்குத் தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும். ஆதலால் படைத்தவருக்கு இங்கு இடமில்லை என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.

பொருள் விளக்கம்:

1.வெளி-காலம்(SPACE-TIME): நிகழ்ச்சிகளைப் புள்ளிகளாகக் கொண்ட நாற்பரிமாண வெளி.

2.நிகழ்ச்சி(EVENT): காலத்தாலும், இடத்தாலும் குறித்துக் காட்டப்படும் ஒரு வெளி-காலப் புள்ளி.

3.ஆயங்கள்(CO-ORDINATES): வெளியிலும், காலத்திலும் ஒரு புள்ளியின் நிலையைக் குறித்துக்காட்டும் எண்கள்.

4.இயன்வழுப்புள்ளி(SINGULARITY): வெளி-கால வளைவு ஈறிலையாகி இருக்கிற அதாவது எல்லையற்றாக ஆகியிருக்கிற ஒரு வெளி-காலப் புள்ளி.

5.இயன்வழுப்புள்ளித்தேற்றம் (SINGULARITY THEOREM): குறிப்பிட்ட சில நிலைமைகளில் இயன்வழுப்புள்ளி என்ற ஒன்று இருந்தாக வேண்டும் என்கிற தேற்றம். சான்றாக அண்டம் இயன்வழுப்புள்ளியிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும் என்று காட்டுகிற தேற்றம்.

6.எல்லையின்மைக்கொள்கை: அண்டம் ஈறுள்ளது என்றாலும் அதற்கு எல்லையில்லை(INFINITY-ஈறிலி) என்ற கருத்து, நமது பூமி ஈறுள்ளது என்றாலும் அதற்கு எல்லையில்லை என்பதைப்போன்றது.

7.கருந்துளை(BLACK HOLE): ஒரு வெளி-கால வட்டாரம். அங்கு ஈர்ப்பு விசை மிகமிக வலுவாக இருப்பதால் அதிலிருந்து ஒளி கூட தப்பிச்செல்ல முடியாது. இது பெருநிறையும் அடர் செறிவும் கொண்ட சுன்ன அளவிளான தகர்ந்துபோன ஒரு விண்மீன் ஆகும்.

8.கற்றை இயங்கியல்(QUANTUM MECHANICS): பிளாங்கின் கற்றைக் கொள்கை (QUANTUM THEORY)யிலிருந்தும், எய்சன்பர்க்கின் உறுதியின்மைக் கொள்கை(UNCERTAINTY PRINCIPLE)யிலிருந்தும் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடு.

9.மாநெரிப்பு(BIG CRANCH): அண்டத்தின் முடிவிலான இயன்வழுப்புள்ளி

10.மாவெடிப்பு(BIG BANG): அண்டத்தின் தொடக்கத்திலான இயன்வழுப்புள்ளி

சான்று நூல்: காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 267-276.

பார்வை:

1.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 14, 15.

 1. “ “ “ பக்: 29.
 2. “ “ “ பக்: 33.
 3. “ “ “ பக்: 41
 4. “ “ “ பக்: 44, 45.
 5. “ “ “ பக்: 78, 79.
 6. “ “ “ பக்: 79, 80.
 7. “ “ “ பக்: 93, 94.
 8. “ “ “ பக்: 145.
 9. “ “ “ பக்: 169, 170.

11. “ “ “ பக்: 267-276

- கணியன் பாலன், ஈரோடு

Pin It

மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும்

  நாம் இதுவரை அண்டம் குறித்த ஸ்டீபன் ஆக்கிங் அவர்களின் நவீனச்சிந்தனை பற்றிய ஒரு சுருக்கமான தரவுகளைப்பார்த்தோம். பண்டைய தொல்கபிலர், கணாதர் ஆகியவர்கள் தோற்றுவித்த எண்ணியம், சிறப்பியம் ஆகிய சிந்தனைப்பள்ளிகளின் கருத்துக்களோடு இந்த நவீனச்சிந்தனைகள் எவ்விதத்தில் ஒப்புமை கொண்டுள்ளன எனப்பார்ப்போம். அண்டம் பற்றிய மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் கருத்து ஒரு எளிமைப்படுத்தப்பட்ட அதே சமயம் மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக் கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனைப் மரபால் உருவானதாகும் என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது.

1.முதலும் இல்லை முடிவும் இல்லை:

 பழந்தமிழ்ச்சிந்தனை:

 deviprasath 268 “இல்லாத ஒன்றிலிருந்து எதுவுமே உருவாகாது என்பதே எண்ணியத்தின் ஆதாரக் கொள்கையாகும். இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது. ஊழி ஊழிக்காலமாய் இருந்துவரும் உலகத்தை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப் பட்டிருக்கவில்லை. அதற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை என்பதனால் இல்லாததிலிருந்து ஒன்று உருவாகும் சாத்தியமில்லை என்பது மெய்யாகிறது” என எண்ணியம் கூறுவதாகச் சொல்கிறார் இந்திய வரலாற்றில் பகவத்கீதை என்ற நூலை எழுதிய பிரேம்நாத் பசாசு(11).

நவீனச்சிந்தனை:

 அண்டத்திற்கு தொடக்கமோ, முடிவோ இருக்காது எனவும் அது என்றென்றும் இருந்துகொண்டிருக்கும் எனவும் ஆதலால் படைத்தவன் ஒருவன் தேவைப்படவில்லை எனவும் சொல்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்(12). மேலும் பொருளை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது என நவீன அறிவியல் கூறுகிறது. இதே கருத்துக்களைத்தான் மேற்கண்ட வரிகளில் எண்ணியம் கூறியுள்ளது. அண்டத்திற்கு முதலும் இல்லை, முடிவும் இல்லை எனவும் உலகம் ஊழி ஊழிக்காலமாய் இருந்து கொண்டிருக்கிறது எனவும் இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது எனவும் அதை உருவாக்குவதற்கு ஒருவரும் தேவைப்பட்டிருக்கவில்லை எனவும் எண்ணியம் கூறுவதாக பிரேம்நாத் பசாசு கூறுகிறார். ஆகவே நவீனச்சிந்தனையும் எண்ணியமும் நான்கு விடயங்களில் ஒப்புமை கொண்டுள்ளன எனலாம். அவையாவன

1)பொருளை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது(இல்லாததை உள்ளதாக்க முடியாது, உள்ளதை முற்றிலும் இல்லாததாக்க முடியாது).

2)அண்டம் என்றென்றும் இருந்துகொண்டிருக்கிறது.

3)அண்டத்திற்கு முதலும் இல்லை முடிவும் இல்லை.

4)ஆதலால் படைத்தவன் ஒருவன் தேவைப்படவில்லை.

2.பொருள்முதல்வாதம்-காரணகாரியக் கொள்கை:

பழந்தமிழ்ச் சிந்தனை:

 ஆரம்பகாலகாலக் கருத்துமுதல்வாதிகள், பொருள்முதல்வாதிகள் ஆகிய இருவருக்கும் இறுதி உண்மை பற்றிய பிரச்சினை உலகிற்குரிய முதற்காரணம் என்ற பிரச்சினையாகத் தோன்றியது. எண்ணியத் தத்துவ வாதிகள் காரணகாரியக்கொள்கையின் மூலம்தான் உலகின் இறுதி உண்மை பற்றிய ஒரு கொள்கையை உருவாக்க முடியுமென்று கருதினர். காரணம் செயல்படுவதற்கு முன்னரேயே விளைவு காரியத்தில் உள்ளது. ஏனென்றால் இல்லாத ஒன்றை உருவாக்க முடியாது. காரியத்தின் தன்மை காரணத்தின் தன்மையைக் கொண்டிருக்குமானால் இந்த உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும்(13). உலகத்திற்கான முதற்காரணம் பொருளாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவிற்கு காரணகாரியக்கொள்கை மூலமே எண்ணியர்கள் வந்தடைந்தார்கள். இன்றைய உலகம் பொருளால் ஆனது என்பதால் இந்த உலகத்திற்கு காரணமான ஆதிமூலப்பொருளும் பொருளால்தான் ஆகியிருக்கவேண்டும். ஆகவே உலகத்திற்கான முதற்காரணம் என்பது பொருள்தான் ஆகும் என்பதே காரணகாரியக்கொள்கை மூலம் எண்ணியம் வந்தடைந்த முடிவாகும்.

நவீனச் சிந்தனை:

  இன்றைய நவீனச்சிந்தனையின்படி அண்டத்தின் தொடக்கத்திலும், அதன் முடிவிலும் பொருள்தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது அனைத்து அறிவியலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பொருள் என்பது இங்கு பொருளிலிருந்து உருவாகும் ஆற்றல் போன்றவற்றையும் குறிக்கும். ஆனால் பண்டைய காலத்தில் இதுபோன்ற முடிவிற்கு வருவதற்கு மிகப்பெரிய அளவிலான அறிவியல் சிந்தனை தேவைப்பட்டிருக்கும். மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக்கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால, மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபே இம்முடிவை வந்தடையக்காரணம் எனலாம்.

 3.ஆதிமூலப்பொருள்: பழந்தமிழ்ச்சிந்தனை:

  பிரகிருதி அல்லது முதல்நிலைப்பொருளுக்கு எண்ணியம், “எதுவும் உருவாகும் முன்பே இருந்தது, ஆதிமூலமான அதிலிருந்தே அனைத்துப்பொருட்களும் தோன்றின; இறுதியில் அனைத்துப்பொருட்களும் அதிலேயே கலந்துவிடுகின்றன” எனப்பொருள் கூறுகிறது(14). மேலும் ஊழி ஊழிக்காலமாய் அது இருந்து வருகிறது எனவும் அதற்கு முதலோ முடிவோ இல்லை எனவும் எண்ணியம் கூறுகிறது. அதாவது ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளில் இருந்து தான் நாம் காணும் அண்டமும் அதில் உள்ள பொருட்களும் தோன்றின எனவும் இறுதியில் இந்த ஆதிமூலமாகிய முதல்நிலைப்பொருளுக்குள் இந்த எல்லாப் பொருட்களும் கலந்து ஒன்றிணைந்து விடும் எனவும் இந்த ஆதிமூலப்பொருள் என்றென்றும் இருந்து கொண்டிருக்கும் எனவும் அதற்கு தொடக்கமோ முடிவோ இல்லை எனவும் எண்ணியம் கூறுகிறது.

நவீனச்சிந்தனை:

 அண்டம் பற்றிய தன் முன்மொழிவில் அண்டத்தின் உருவளவு வட, தென் துருவங்களில் சுன்னமாகவே இருக்கும். ஆனால் அவை இயன்வழுப்புள்ளிகளாக இருக்க மாட்டா என்கிறார் ஸ்டீபன் ஆக்கிங்.(15). மேலும் அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் அவர். மேலும் அவர் தந்துள்ள அண்டம் பற்றிய படத்தில் வடதுருவத்தில் மாவெடிப்பும், தென் துருவத்தில் மாநெரிப்பும் காட்டப்பட்டுள்ளது. இவைகளின்படி மாவெடிப்புக்கு முன் அண்டத்தின் ஆதிமூலப்பொருளான முதல்நிலைப்பொருள் சுன்ன அளவில் இருக்கும் எனவும் மாவெடிப்பிற்குப்பின் அண்டத்தில் திரள்களும், விண்மீன்களும், கோள்களும், உயிர்களும் உருவாகும் எனவும் அவையனைத்தும் மீண்டும் மாநெரிப்பில் சுன்ன அளவு கொண்டதாக சுருங்கிவிடும் எனவும் அண்டம் என்றும் இருந்துகொண்டே இருக்கும் எனவும் அதற்கு முடிவோ தொடக்கமோ இல்லை எனவும் கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங். அதாவது மாவெடிப்புக்கு முன்பும் மாநெரிப்புக்கு பின்பும் அது இருந்து கொண்டிருக்கிறது என்றே அவர் கூறுகிறார். அதன் மூலம் அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இருக்காது. அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்கிறார் அவர். ஆகவே இந்நவீனக்கருத்தைத் தத்துவார்த்த வடிவில் எண்ணியம் எளிமைப்படுத்திக் கூறியுள்ளது எனலாம்.

4.இயக்கமும் பரிணாமமும்: பழந்தமிழ்ச்சிந்தனை:

  எண்ணியத்தத்துவத்தின் பெரும்பலமே பொருள் நிரந்தரமானது. அது இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை. ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து இன்னொன்றாக பரிணாமம் பெற்று வருகிறது என்பதுதான் ஆகும். மனித குலச் சிந்தனை வரலாற்றில் மிகப்பண்டைய காலத்தில் பொருளின் நிரந்தரத்தன்மையையும், அது சதா மாறிக்கொண்டே இருக்கிறது என்பதையும் கூறியதன் மூலம் இந்தத் தத்துவவாதிகள் பெருமை படைத்தவர்கள் ஆனார்கள் என்கிறார் ‘செர்பாட்சுகி’(16). மேலும் “பரிணாமக்கோட்பாடு(THEORY OF EVOLUTION) அடிப்படையிலேயே உலகத்தோற்றம் பற்றிய கபிலரின் கருத்துக்கள் அமைந்துள்ளன” எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(17).

நவீனச்சிந்தனை:

  இங்கு ‘பொருள் நிரந்தரமானது’ என்பதற்கு அண்டம் என்றென்றும் இருந்து வருகிறது என்பதே எண்ணியச்சிந்தனையின் பொருளாகும். இதனை நவீன அறிவியல் கூறியுள்ளதை முன்பே பார்த்தோம். பொருள் இயக்கமற்ற நிலையை எப்போதும் அடைவதில்லை என்பதும் அது ஒரு வடிவத்திலிருந்து இன்னோன்றாகப் பரிணாமம் அடைந்து வருகிறது என்பதும் எண்ணியத்தின் கோட்பாடாகும். எண்ணியம் மேலே கூறுகிற இயக்கவியலும், பரிணாமக்கோட்பாடும் இன்று நவீன அறிவியலாளர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும். இன்றைய நவீனக்கருத்துக்களை அன்றே எண்ணியம் கூறியுள்ளதை ‘செர்பாட்சுகி’ அவர்கள் வியந்து போற்றுகிறார்.

5.வெளி, காலம், இயக்கம்: பழந்தமிழ்ச்சிந்தனை:

 உருசிய அறிஞர் திரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ என்கிற தனது நூலில், கபிலரால் தோற்றுவிக்கப்பட்ட எண்ணியத் தத்துவஞானக் கோட்பாடு உலகத்தைப் பொருளாயதத் தோற்றுவாயைக்கொண்டு விளக்கமளித்தது. அதன் பிரதிநிதிகள் உலகத்தை ஒரு பருப்பொருளாக, ஒரு ஆதாரப்பொருளிலிருந்து படிப்படியாக வளர்ச்சி பெற்றதாகக் கருதினார்கள். இயக்கம், வெளி, காலம் ஆகியவை பருப்பொருளின் கூறுகள் எனவும் அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை எனவும் எண்ணியச்சிந்தனை மரபு மொழிந்தது. “இக்கருத்து புராதன இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும்” என்கிறார் வி.கிரபிவின் அவர்கள்(18).

  தொல்காப்பியர் முதற்பொருள் என்பது நிலம் பொழுது ஆகிய இரண்டின் இயல்பு என்பார். முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய மூன்றில் முதற்பொருளிலிருந்துதான் மனிதன், கடவுள் முதலான அனைத்துக் கருப்பொருட்களும் தோன்றுகின்றன எனவும் உரிப்பொருள் நிகழ்வுகள் அங்குதான் நடக்கின்றன எனவும் தமிழ் மரபு கருதியது. ஆகவே வெளி-காலம் என்ற முதற்பொருள்தான் அனைத்திற்கும் அடிப்படை என்ற எண்ணியச் சிந்தனைப்படிதான் தொல்காப்பியர் வெளி, காலம் என்பதை நிலம், பொழுது ஆகியவற்றின் இயல்புகள் எனக்கூறியுள்ளார். மேலும் முதற்பொருள் என்பது வெளி, காலம் ஆகியவற்றின் இயல்பு எனும்பொழுது அது இயக்கத்தையும் இணைத்துக் கொள்கிறது. இந்த அடிப்படையில்தான் எண்ணியச்சிந்தனை வெளி, காலம், இயக்கம் ஆகிய மூன்றையும் பருப்பொருளின் கூறுகளாகவும், அவைகளைப் பருப்பொருளிலிருந்து பிரிக்கப்படமுடியாதவைகள் எனவும் கருதியது. தமிழ்ச்சிந்தனை மரபின் இச்சிந்தனையை வி.கிரபின் அவர்கள், “புராதன இந்தியத் தத்துவ ஞானத்தின் ஒரு மூலச்சிறப்புள்ள சாதனையாகும்” என்கிறார். ஆனால் இச்சிந்தனை மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் சாதனை ஆகும். தமிழ் மரபின் சாதனைகள் இந்திய மரபின் சாதனைகளாகவே கூறப்பட்டு வருகின்றன. இந்நிலை மாறி தமிழ் மரபு ஒரு தனித்த மரபு என்பது வெளிப்பட வேண்டும்.

நவீனச்சிந்தனை:

 “காலம் என்பது ‘வெளி’ என்பதிலிருந்து வேறானதல்ல. அதற்கு மாறாக ‘வெளி’ காலத்தோடு சேர்ந்து வெளி-காலம் என அழைக்கப்படும் பொருளாகிறது” எனப்பொதுச்சார்பியல் கூறுகிறது.(19). ஆகவே வெளி-காலம் ஆகிய இரண்டும் சேர்ந்து ஒரு பொருளாக ஆகிறது என்பதன் மூலம் இவை இரண்டும் பொருளின் கூறுகளாகவும் ஆகின்றன. மேலும் நவீனச் சிந்தனையின்படி இயக்கம் இல்லாத பொருளே இல்லை. ஆகவே வெளி, காலம், இயக்கம் ஆகியன பருப்பொருளின் கூறுகள் அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்பதுதான் நவீனச் சிந்தனையின் கருத்தாகவும் உள்ளது. மேலும் அண்டம் என்பது வெளி-காலம் எனப்படும் நாற்பரிமாணப் பொருள் என்பதும் அதில் காலம் நான்காவது பரிமாணம் என்பதும் இந்த அண்டமும் அதில் உள்ள பொருட்களும் எப்பொழுதும் இயங்கிக்கொண்டுள்ளன என்பதும் இன்றைய நவீன அறிவியலின் கருத்தாகும். ஆகவே மேற்கண்ட விளக்கங்களின்படி, வெளி, காலம், இயக்கம் என்பன பருப்பொருளின் கூறுகள், அவை பருப்பொருளிலிருந்து பிரிக்கப்பட முடியாதவை என்ற எண்ணியத்தின் சிந்தனையோடு நவீனச்சிந்தனை ஒப்புமை கொண்டுள்ளது எனலாம்.

6.நிகழ்ச்சி: பழந்தமிழ்ச்சிந்தனை

 ஒரு நெறிப் பட்டாங் கோரியல் முடியுங்

            கரும நிகழ்ச்சி இடமென மொழிப’ என்கிறார் தொல்காப்பியர்.

            ‘ஒரு நெறிப்பட்டு, ஓரியல்பாக முடியும் வினை நிகழ்ச்சியை இடமென்று சொல்வர்’ என்பதே இதன் பொருளாகும் அதாவது, வினை நிகழ்ச்சியை இடம் என்று சொல்வர் தம் முன்னோர் என்கிறார் தொல்காப்பியர். ‘ஒரு நிகழ்ச்சி நடைபெறுவது இடமெனப்படும்’ என்பது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது. கரும நிகழ்வை அஃதாவது நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் என விளக்கிய தொல்காப்பியர், அந்த நிகழ்ச்சிகள் எப்போது நடந்தன என்று குறிப்பதையே காலம் என்றும் விளக்குகின்றார் என்கிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(20).

 அடுத்ததாக தொல்காப்பியர் ‘நிகழ்ச்சிகள் என்பவை இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” எனச்சொல்வது பெருவியப்பைத் தருகிறது என்கிறார் க.நெடுஞ்செழியன்,

இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

அவையில் காலம் இன்மை யான -தொல்.பொருளதிகாரம்(பொருளியல்-244)

            ‘தேவர் உலகத்திலும், கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலும், மேலே சொல்லப்பட்ட நிகழ்வுகள் இல்லை என்றால் காலமும் இல்லை’ என்கிறார் தொல்காப்பியர். ‘அவையில் காலம் இன்மை யான’ என்பதன் நேரடிப்பொருள் என்பது ‘நிகழ்ச்சிகள் இல்லாமல் காலம் என்பது ஒன்றில்லை” என்பதாகும். அதாவது “நிகழ்ச்சிகள் என்பது இல்லாமல் போனால் காலம் என்பதும் இல்லாமல் போகும்” என்பதுதான் தொல்காப்பியரின் கூற்றாகும் என்கிறார் க. நெடுஞ்செழியன். நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், இங்கு நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறார்(21). ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லை என்றால் இடம், காலம் ஆகிய இரண்டுமே இல்லை என அவர் கூறுவதாகக் கொள்ளலாம். நவீனச்சிந்தனைப்படியும், எண்ணியச்சிந்தனைப்படியும் இடமும் வெளியும் ஒன்றையே குறிப்பதால், நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் வெளியும் இல்லை என தொல்காப்பியர் கூறுவதாக ஆகிறது.

 ஆகவே நிகழ்ச்சிகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை என்ற நவீன அறிவியல் கருத்தை தொல்காப்பியர் தனது பாடல்களில் வெளிப்படுத்தியுள்ளார். அப்பாடல் கருத்துக்கள் தொல்காப்பியருக்கு முந்தைய மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் அறிஞர்களால் சொல்லப்பட்டவை என்பதை ‘மொழிப’ என்ற சொல் உறுதி செய்கிறது.

நவீனச்சிந்தனை:

 பொதுச்சார்பியல் கோட்பாட்டின்படி, வெளியும் காலமும் அண்டத்தில் நிகழும் ஒவ்வொன்றையும் பாதிப்பதோடு அந்த ஒவ்வொன்றாலும் பாதிக்கப்படவும் செய்கிறது. அண்டத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் குறித்து எப்படி வெளியையும், காலத்தையும் பற்றிய கருத்துக்கள் இல்லாமல் பேச இயலாதோ, அதுபோன்றே பொதுச்சார்பியலில் அண்டத்தின் எல்லைகளுக்குப் புறத்தே வெளியும் காலமும் குறித்துப் பேசுவது பொருளற்றதாகி விடுகிறது எனக்கூறுகிறார் ஸ்டீபன் ஆக்கிங்(22). அதாவது நிகழ்வுகள் இல்லாமல் காலமும் வெளியும் இல்லை என்பதே அவர் கருத்து எனலாம். தமிழ்ச் சிந்தனை மரபும் இக்கருத்தைக் கொண்டிருந்தது என்பதை தொல்காப்பியரின் பாடல்கள் உறுதி செய்கின்றன. ஆகவே இன்றைய வெளி - காலம் குறித்த நவீன அறிவியல் சிந்தனைகள் சிலவற்றை பண்டைய தமிழ்ச் சிந்தனைமரபு பெற்றிருந்தது என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது எனலாம்.

7.இன்மை: பழந்தமிழ்ச்சிந்தனை:

 “பொருள்குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை

  இன்மை யுடன்பொருள் ஏழென மொழிப”

என்ற பாடலில் பொருள்கள் ஏழு என அகத்திய தருக்க நூற்பா சொல்கிறது. ஏழாவது பொருள் இன்மை எனும் இல்பொருள் ஆகும்.

 ஒன்றிலிருந்து ஒன்று உருவாகும் திரிவாக்கத்திற்கும், அஃதாவது இன்மைக்கும் காரணமாய் இருப்பது எதுவோ அதுவே ஏழாவது பொருளாகும். இதனை இயங்கியல் கோட்பாட்டின் உருவமும் உள்ளடக்கமுமாகக்(FORM AND CONTENT) கொள்ளலாம் என்கிறார் க. நெடுஞ்செழியன் அவர்கள். மேலும் ஒன்று ஒரு பொருளாக உருவாவதற்கு முன்பு, அது அந்தப்பொருளாக இருக்காது. அந்தப்பொருள் சிதைந்து போனாலும் அதனை அந்தப்பொருளாகக் கருத முடியாது. ஆகவே ஒரு பொருளின் இருத்தல், அதன் தோற்றம், இடைநிலை, முடிவு என்பவைகளின் அடிப்படையில் ‘இன்மை’ என்பது ஒரு கோட்பாட்டு வடிவத்தைப் பெறுகிறது என்கிறார் க. நெடுஞ்செழியன்(23).

 இங்கு இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக உருவாவதற்கு முன் இருந்த நிலையைக் குறிப்பதாகும். ஒரு பொருள் அப்பொருளாக உருவாதற்கு முன் வேறு ஏதாவது ஒரு நிலையில் அது இருந்திருக்கவேண்டும். அதுவே இன்மை ஆகும். ஆகவே இன்மை என்பது முற்றிலும் இல்லாத நிலையைக் குறிக்கவில்லை. அதற்கு மாறாக எந்தப் பொருளைப்பற்றிப் பேசுகிறோமோ அந்தப்பொருளாக இல்லாத நிலையைப்பற்றி பேசுவதே இன்மை ஆகும். சான்றாக, முதல் உயிர்ப் பொருளை எடுத்துக் கொண்டால், அது தோன்றுவதற்கு முன் அப்பொருள், ஒரு சடப்பொருளாக இருந்தது. உயிர்பொருளாக இல்லை. உயிர்ப்பொருளுக்கு முன் இருந்த, சடப்பொருளாக இருந்த நிலைதான் இன்மை எனப்படும். அதாவது உயிர்பொருள் இல்லை என்பதால் அது இன்மை ஆகிறது. மேலும் இன்மை என்பது பொருளின் பண்பல்ல எனவும் அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள் ஆகும் எனவும் சேனாவரையர் தொல்காப்பியப்பாடலில் உள்ள இன்மை குறித்துப் பொருள் தருவது ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது.

இன்மையும் நவீனச்சிந்தனையும்:

 அண்டம் எல்லையோ, விளிம்போ இல்லாமல் முற்ற முழுக்கத் தன்னிறைவு கொண்டதாக இருக்கும்; அதற்குத் தொடக்கமோ முடிவோ இருக்காது; அது என்றும் இருந்துகொண்டிருக்கும் என்பதால், படைத்தவருக்கு இங்கு இடமில்லை என ஸ்டீபன் ஆக்கிங் சொல்வதை முன்பே பார்த்தோம். அண்டத்திற்கு தொடக்கமோ முடிவோ இல்லை; அது என்றும் இருந்து கொண்டிருக்கும் என்ற நவீனச்சிந்தனைக்கான ஒரு தத்துவார்த்தக் கோட்பாட்டு வடிவமே ‘இன்மை’ ஆகும். சுன்ன அளவில் இருக்கும் அண்டம் மாவெடிப்பில் தொடங்குகிறது. திரள்களும் விண்மீன்களும், கோள்களும், பின் உயிர்களும் உருவாகின்றன. பின் இறுதியில் அண்டம் சுருங்கத்தொடங்கி திரள்களும் விண்மீன்களும், கோள்களும், பின் உயிர்களும் சிதைந்து அழிந்து இறுதியில் மாநெரிப்பு ஏற்பட்டு அண்டம் சுன்ன அளவாகச் சுருங்குகிறது. ஆக மாவெடிப்பிற்கு முன்பும் மாநெரிப்பிற்கு பின்பும் அண்டம் சுன்ன உருவளவில் இருக்கும். இவை அண்டம்பற்றிய நவீனச் சிந்தனையாகும். ‘திரள்கள்’ என்பதைப் பொருளாக எடுத்துக்கொண்டால் அதற்கு முன்பிருந்த நிலை, அதாவது அண்டம் திரள்களாக இல்லாமல், மாவெடிப்பில் அல்லது சுன்ன அளவில் இருந்த நிலை, ‘இன்மை’ என ஆகிறது. அது போன்றே உயிர் தோன்றுவதற்கு முன்பு சடப்பொருள் தான் இருந்தது. அந்த சடப்பொருளில் இருந்துதான் உயிர் தோன்றியது. ஆகவே உயிர் தோன்றுவதற்கு முன்பிருந்த நிலையை, உயிர் என்பது இல்லாதிருந்த நிலையை ‘இன்மை’ என்பது குறிக்கிறது. ஆக இன்மை என்பது ஒரு பொருள் அப்பொருளாக ஆவதற்கு முன்பிருந்த நிலை ஆகும். மேலும் இன்மை என்பது பொருளின் பண்பல்ல அது பொருளின் மறுதலை அல்லது மறுபொருள் ஆகும் என தமிழ் மரபு கூறுகிறது. பொருள் என்றென்றும் இருந்துகொண்டிருக்கிறது என்பதையும், ஆனால் அது வேறு வேறு பொருளாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும், ஒரு பொருள் இயக்கவியல் அடிப்படையில் இன்னொரு பொருளாகப் பரிணாமம் அடைந்துகொண்டிருக்கிறது என்பதையும் தமிழ் மரபு ‘இன்மை’ என்ற கோட்பாட்டு வடிவமாக ஆக்கியிருந்தது. அதன் அடிப்படையில் அண்டம் என்ற பொருள் என்றும் இருந்து கொண்டிருக்கிறது என்பதையும் அது எப்பொழுதும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும், அது வேறு வேறு பொருளாக பரிணாம முறையில் மாறிக்கொண்டிருக்கிறது என்பதையும் இந்த ‘இன்மைக் கோட்பாடு’ குறித்தது எனலாம்.

8.அணுக்கள்: பழந்தமிழ்ச்சிந்தனை:

  திரு. வி. கிரபிவின் அவர்கள் ‘இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’ என்கிற தனது இரசிய நூலில் “....நியாயம் & வைசேடிகம் ஆகியவற்றின் தத்துவஞானச் சிந்தனை மரபு, அணு நிரந்தரமானது; உற்பத்தி செய்யவும் அழிக்கவும் முடியாதது; அனால் அணுக்களால் உருவாகின்ற பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை” எனச்சொல்வதாகக் கூறுகிறார்(24). சிறப்பியம், நியாயம் முதலியன கணாதர், கௌதமனார் ஆகிய தமிழர்களின் தமிழ்ச் சிந்தனை மரபுகள் ஆகும்.

 அணுக்கொள்கையை உலகத் தோற்றத்திற்கான காரணமாக சிறப்பியம் விளக்கியது…… கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என சிறப்பியம் கருதுகிறது….. பருப்பொருட்கள் அனைத்தும் அவற்றின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன எனவும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப்பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்கின்றன எனவும், இதுபோன்ற இணைப்பினால்தான் உலகம் உருவாகியுள்ளது எனவும், அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் சேர்மங்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன எனவும் சிறப்பியம் கூறுவதாகச் சொல்கிறார் பிரேம்நாத் பசாசு(25). சில குறிப்பிட்ட அணுக்களின் சேர்மத்தால் விளைவதே உணர்தல் என்று கணாதர் நம்பினார். ஆன்மா என்பதும் வளர்ச்சியடைந்த பொருளே. ஆன்மாவும் பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதே. கணாதர் கோட்பாட்டின்படி ஆன்மா என்ற சொல் கருத்துமுதல்வாத கோட்பாட்டின் வரையறைக்குள் கொண்டுவரப்படவில்லை என்பது உறுதி எனக்கூறுகிறார் பிரேம்நாத் பசாசு.

 ஆகவே கட்புலனாகாத, முதலும் முடிவுமற்ற, பகுக்கமுடியாத, எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது எனவும் அணுக்கள் கண்களுக்குப் புலப்படாதவனாகவும், அழிவற்றதாகவும் இருப்பினும், அவை உருவாக்கும் சேர்மங்கள், புலன்களால் உணரக் கூடியவனாகவும் அழியுந்தன்மை உள்ளனவாகவும் இருக்கின்றன எனவும் உணர்வு, ஆன்மா முதலியன பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதே எனவும் பழந்தமிழ்ச் சிந்தனை கருதியது.

நவீனச்சிந்தனை:

  கட்புலனாகாதா எண்ணிலடங்கா அணுக்களால் உலகம் ஆக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையே. ஆனால் அணுக்கள் பகுக்க முடியாதவை என்பதும் அணுவைவிட சிறிய பொருட்கள் இல்லை என்பதும் இன்று தவறு என உறுதி செய்யப்பட்டுள்ளது. அணுக்களில் நேர்மங்களும்(PROTONS), நொதுமங்களும்(NEUTRONS), மின்மங்களும்(ELECTRONS) உள்ளன என்பதும் இந்த நேர்மங்களும், நொதுமங்களும் இன்னுஞ்சிறிய பொருட்களான பொடிமங்களால்(QUARKS) ஆனவை என்பதும் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளன. இவை போக அணுக்களில் விசைத்துகள்கள் இருக்கின்றன என்பதும் பொடிமங்களில் எதிர் பொடிமங்கள் உண்டு என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மிகச்சிறு பொருட்கள் குறித்த கோட்பாடே கற்றை இயங்கியல் ஆகும். ஆகவே அணுக்கள் குறித்த பண்டைய தமிழ்ச் சிந்தனை என்பது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒரு மேலோட்டமான சிந்தனைபோல்தான் தோன்றுகிறது.

 ஆனால் பொருட்கள் கட்புலனாகாதா எண்ணிலடங்கா அணுக்களால் ஆனவை என்ற கருத்தும், பருப்பொருட்கள் அனைத்தும் அணுக்களின் உள்ளார்ந்த தனிப்பண்புகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன என்ற கருத்தும் அணுக்களால் உருவாகின்ற பருப்பொருட்கள் மாற்றப்படக் கூடியவை, நிரந்தரமில்லாதவை, அழியக்கூடியவை என்ற கருத்தும், தனிமங்கள் உருவாகும்பொழுது தனிப்பண்புகள் கொண்ட பருப்பொருட்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உருவாகும் இணைப்பினால்தான் உலகம் உருவாகியுள்ளது என்ற கருத்தும், சில குறிப்பிட்ட அணுக்களின் சேர்மத்தால் விளைவதே உணர்தல் என்ற கருத்தும், பருப்பொருட்களின் வினோதமான கலப்பினால் உருவானதுதான் ஆன்மா (ஆன்மா என்பது இங்கு உயிர் எனப்பொருள்படும்) என்ற கருத்தும் நவீன சிந்தனையோடு ஒப்புமை கொண்டுள்ளது எனலாம். அணுக்கள், பொருட்கள் குறித்த மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபின் இக்கருத்துக்கள் ஒரு எளிமைப்படுத்தப்பட்ட அதே சமயம் மிக ஆழ்ந்த, தர்க்கபூர்வமான, பகுத்தறிவும் காரணகாரியக்கொள்கையும் கொண்ட ஒரு நீண்டகால மூலச்சிறப்புள்ள அறிவியல் சிந்தனைப் பள்ளியால் உருவானதாகும் என்பதை இவ்வொப்புமை உறுதி செய்கிறது எனலாம்.

9.உலக அமைப்பு: பழந்தமிழ்ச்சிந்தனை:

 ‘அறிவுக்குட்பட்ட காரண காரியத்துடனான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் போதிக்கிறது. தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது. தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும். உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு. அது முதலும் முடிவுமற்ற, விரிந்து பரந்த நடைமுறை. நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும், படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது’ என்பதே உலகம் பற்றிய எண்ணியப்பார்வை என பெர்னார்டு அவர்கள் குறிப்பிடுவதாகக் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு அவர்கள்(26).

நவீனச்சிந்தனை:

ஒரு செல் உயிரி முதல் மனிதன்வரை:

 பேரா.சு. மணி அவர்கள் எழுதிய மனித ஜினோம் என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள் இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. உயிர் என்பது ஒரு வேதியியல் நிகழ்வுதான். ஆதியில் ஓர் உயிர் தோன்றி தழைத்து பரிணமித்து நிலைப்படுவதற்கு ஆதாரமாக இருந்த அறிவு டி.என்.ஏ. வில் மும்மூன்று சொற்களின் வரிசையாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் டி.என்.ஏ. தோன்றுவதற்கு முன்பே உயிர் தோன்றிவிட்டது. அதனைத் தோற்றுவித்தது ஆர்.என்.ஏ. ஆகும். தன்னைச்சுற்றிலுமுள்ள வேதியியல் பொருட்களை சேகரித்து அவற்றைப்பயன்படுத்தி தன்னை வளர்த்துக்கொண்டு தன்னைப்போலவே இன்னொன்றையும் உருவாக்கும் அசாத்தியப்பண்பு ஆர்.என்.ஏ. வுக்கு இருக்கிறது. ஆகவே அதுவே முதல் உயிரி ஆகும். ஆனால்

ஆர்.என்.ஏ. க்கள் நிலையற்றவை. உருவான உடனே சிதைந்துவிடும். ஆகவே தகவல்களைச் சேகரிக்க கெட்டியான டி.என்.ஏ.க்களை உயிரி உருவாக்கிக் கொண்டது. ஆக உயிரி பரிணாம வளர்ச்சியில், டி.என்.ஏ.க்களை தகவல் நிலைக்களங்களாகவும், புரோட்டின்களைத் தமது செயல் இயந்திரங்களாகவும், ஆர்.என்.ஏ.க்களை இவை இரண்டுக்கும் இடையே செயல்படும் இடைப்பணியாளனாகவும் அமைத்துக்கொண்டது. ஒரு செல் உயிரியாகத் தோன்றிய உயிரி பரிணம வளர்ச்சியில் இன்று மனிதனாக ஆகியுள்ளது.

 வாக்கியத்தின் முற்றுப்புள்ளியை விட 100 மடங்கு சிறியதாக மனித செல் இருந்தாலும் ஒரு முழுமையான தொழிற்சாலை போல் அது செயல்படுகிறது. தேவையான திட்டம், ஆற்றல், தகவல் தொடர்பு, பாதுகாப்பு, நகலெடுத்தல் போன்ற அத்தனை நிகழ்வுகளும் இதில் நடைபெறுகின்றன. ஒரு செல்லில், அதன் மையத்தில் உட்கரு, அதில் குரோமோசாம், அதில் டி.என்.ஏ. மூலக்கூறு ஆகியன இருக்கும். அந்த மூலக்கூறில் மனித உடலை வடிவமைத்து உருவாக்குவதற்கான 3 பில்லியன் எழுத்துக்களால் ஆன தகவல்கள் இருக்கும். அத்தகவல்களை புத்தகமாக ஆக்கினால், 300 பக்கமுள்ள ஆயிரம் புத்தகங்கள் ஆகிவிடும். இந்த தகவல்களைக் கொண்டுதான் நமது கரு பல இலட்சங்கோடி செல்களை உருவாக்கி சுமார் ஒரு இலட்சம் உதிரி பாகங்களைக்கொண்ட நமது உடலைத் தானாகவே தயார் செய்து கொள்கிறது. 40 வயதுள்ள மனித உடலில் சுமார் 100 டிரில்லியன்(இலட்சங்கோடி) செல்கள் இருக்கும். ஒவ்வொரு செல்லிலும் இத்தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனித டி.என்.ஏ. மூலக்கூறில் 25000 தகவல்கள் உள்ளன. ஒவ்வொரு தகவலும் ஒரு கட்டுரை வடிவத்தில் உள்ளது. இந்தத்தகவல்கள் அனைத்தையும் சேர்த்து ஜினோம் எனவும், ஒவ்வொரு தகவலையும் ஜீன் எனவும் அழைக்கிறோம்.(27)

 3 பில்லியன்(பில்லியன்-100கோடி) ஆண்டுகள் வரை அமீபா போன்ற ஒற்றைச்செல் உயிரினங்கள் தான் உலகில் வாழ்ந்தன. ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதான் கூட்டுசெல் உயிரிகள் தோன்றின. 500 மில்லியன் ஆண்டுகளுக்கு(மில்லியன்-10இலட்சம்) முன்பு கேம்பிரியன் யுகத்தில் பூச்சிகளின் வாரிசுகளான கால் முளைத்த மீன்களிடமிருந்து முதுகெலும்பிகள் உருவாகின. டைனோசர்கள் வாழ்ந்த 200 மில்லியன் ஆண்டுவாக்கில் இந்த முதுகெழும்பிகளின் வாரிசுகளான ஊர்வனவற்றிலிருந்து உருவானவைகள்தான் பாலூட்டி விலங்குகள். 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த பாலூட்டி விலங்குகளிடமிருந்து பிரிந்தவைகள்தான் ஏப்புகள். ஏப்புகளிடமிருந்து சிம்பன்சிகளும், கொரில்லாக்களும் தோன்றின. 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிம்பன்சிகளிடமிருந்து மனித மூதாதை தோன்றினான்(28). அந்த மனித மூதாதையிடமிருந்து 1.5 மில்லியன் ஆண்டுளுக்கு முன்பு மனிதன் தோன்றினான். சிம்பன்சியும் மனிதனும் 98 விழுக்காடு ஒப்புமை உடையவர்கள் ஆவர். ஈ ஆனாலும், மனிதன் ஆனாலும் இருவரும் ஒரே பொது உயிரினத்திலிருந்துதான் உருவாகி இருக்கிறார்கள் என்பதும், அந்தப்பொது மூதாதை எந்தவிதத்தில் தனது கருவின் உருவத்தை வடிவமைத்ததோ அதே விதத்தில்தான் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றைய உயிரினங்களும் வடிவமைத்து வருகின்றன என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன(29). மனித ஜினோம். 100 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த ஒரு செல் உயிரி இன்று 100 டிரில்லியன் செல்கள் கொண்ட மனிதனாகப் பரிணாம முறையில் உருவாகியுள்ளான்.

 செல்கள் யாருடைய கட்டளையையும் வழிகாட்டுதலையும் எதிர்பார்க்காமல் தம்முடைய ஜினோமிலிருந்து அவசியமான தகவல்களைப் பெற்றுக்கொண்டு தம் கடமைகளைத்தாமே தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன. தமக்குள்ளேயே இருக்கும் விளக்கமான திட்டமிட்ட கட்டளைக்கோவையின் அடிப்படையில் அவை செயல்படுகின்றன(30). அதனால்தான் ஒரு செல்கரு தன்னிடமுள்ள கட்டளைக்கோவையின் அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டு பத்துமாதத்தில் ஒரு குழந்தையாக உருவாகிறது. நமது மூளை பரிணாம வளர்ச்சியில் ஜினோமால் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் அது ஜினோமைவிட சிக்கல்மிக்க வளர்ச்சிபெற்ற கருவியாகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இன்று ஆகியுள்ளது. ஜினோம் ஏற்கனவே விதிக்கப்பட்ட திட்டப்படி இயங்குகிறது. ஆனால் மூளை அனுபவ அடிப்படையிலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் செயல்படுகிறது. இந்த உலக அமைப்பில் இயற்கை உருவாக்கியதில் மிகமிக உயர்ந்த, மிகமிக அதீத அறிவுகொண்ட, பன்முகத்திறனும் தேர்ச்சியும் பெற்ற, நெகிழ்வுத்தன்மையும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு செயல்படும் அனுபவ அறிவுத்திறனும் உடைய, அசாதாரணமான பண்புகள் கொண்ட, ஒரு நுணுக்கமான, சிறப்புமிக்க, அதியற்புதமான பொருள்தான் மனித மூளை ஆகும்.

ஒப்புமை விளக்கம்:

1.அறிவுக்குட்பட்ட காரண காரியத்துடனான விதிகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கும் காட்சியுலகு பற்றியே எண்ணியம் பேசுகிறது. காரண காரியத்தோடும் மேன்மையானதோர் அறிவுவளர்ச்சியோடும் கூடியதே உலக அமைப்பு என எண்ணியம் போதிக்கிறது.

 அறிவுக்குட்பட்டும், காரணகாரியத்துடனும், விதிகளுக்குக் கட்டுப்பட்டும், மேன்மையான அறிவு வளர்ச்சியோடும் உலகம் இயங்கி வருகிறது என்பதை நவீன அறிவியல் ஏற்றுக்கொள்கிறது. உலகில் ஒரு செல் உயிரி தோன்றியது முதல் இன்றைய மனிதன் உருவாகியது வரையான வளர்ச்சி என்பது, உலகம் காரண காரியத்தோடும், விதிகளுக்குக் கட்டுப்பட்டும், அறிவைப் பயன்படுத்தியும் வளர்ந்துவந்துள்ளது என்பதை அறிவியல் உறுதி செய்கிறது.

2.தானே உருவாகி பரிணாம முறையில் தானே வளர்ச்சியடைந்தது என்றுதான் உலகத்தைப் பார்க்கவேண்டும் என்கிறது எண்ணியம். ‘ஒரு செல் உயிரி தோன்றியது முதல் மனிதன் வரையான வளர்ச்சி என்பது தானே உருவாகி, பரிணாம முறையில் தானே அடைந்த வளர்ச்சிதான்’ என்பதை இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் உறுதி செய்துள்ளன.

3.”தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை. இவ்வுறுப்புகள் தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது. காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது. என்ன வினையாற்றவேண்டும் என்ற குறிப்பு உள்ளது. தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகிறது”. என எண்ணியம் சொல்வதாகக் கூறுகிறார் பெர்னார்டு.

 (1).‘தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை ஆற்றுவது, தனக்கென ஒரு தகவு, தனக்கென ஒரு செயல்நோக்கம் என்றில்லாத உலகின் உறுப்புகளே இல்லை’ என்கிறது எண்ணியம். நமது செல்களின் செயல்பாடுகள் மேற்கண்டவாறுதான் உள்ளன. அவை தனக்கென ஒதுக்கப்பட்ட வினைகளை குறையின்றி செய்து முடிக்கின்றன. அதுபோன்றே எல்லா செல்களுக்கும் செயல் நோக்கம் இருக்கிறது. (2).“தங்களுக்கென வரையறை செய்யப்பட்டவற்றை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொள்வது சாதாரண நடைமுறையாக இருக்கிறது”. என்கிறது எண்ணியம். இங்கு சொல்லியிருப்பது பெரும்பாலான செல்களுக்கு பொருந்துகின்றன. ஒரு கரு செல் ஒரு குழந்தையை உருவாக்கம் செய்வதற்கான வழிமுறைகளைத் துல்லியமாகத் தேர்ந்துகொண்டு செயல்படுகிறது என்பது உறுதி. (3).”காலந்தவறிய ஒழுங்கற்ற செயல்பாடுகள் என்பதே இல்லை. அங்கு ஒழுங்கமைதி உள்ளது. வரையறை உள்ளது, என்ன வினையாற்ற வேண்டும் என்ற குறிப்பு உள்ளது, தேர்ந்த அமைப்பாகச்செயல்படுகிறது” என்கிறது எண்ணியம். செல்லில் என்ன செய்யவேண்டும் என்ற வரையறையும் அதைச்செய்வதில் ஒருவித ஒழுங்கும் இருக்கிறது. செல்லில் உள்ள ஜினோம் என்பதில் செல்கள் செயல்படுவதற்கான கட்டளைக்குறிப்புகள் உள்ளன. அக்கட்டளைக் குறிப்புகளைப் பயன்படுத்தி செல்கள் அனைத்தும் ஒரு தேர்ந்த அமைப்பாகச் செயல்படுகின்றன. ஆக எண்ணியத்தின் கருத்துக்கள் செல்களின் நடவடிக்கைகளோடு பொருந்திப் போகின்றன எனலாம்.

4.’உலகத்தோற்றத்திற்கும், அதன்வளர்ச்சிக்கும் எந்தவிதமான மேலுலக ஆற்றலும் காரணமல்ல. அது தொடர்ந்து இயங்கும் அமைப்பு’ என்கிறது எண்ணியம். நவீன அறிவியல் கருத்தும் மேலுலக ஆற்றலை ஏற்பதில்லை. உலகம் தொடக்கமோ முடிவோ இல்லாமல் தொடர்ந்து இயங்கிவருகிறது என்பதை நவீன அறிவியல் பலவிதங்களிலும் உறுதி செய்துள்ளது.

5.’நீடித்த தன்மையுள்ளதாகவும், அறிவிற்குகந்ததாகவும், என்றென்றைக்கும் பின்னோக்கிச் செல்லாதவாறும், பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையிலும், படைக்கப்படாத ஒரு படைப்பினால் அனைத்தும் படைக்கப்பட்டிருக்கிறது’ எனக்கூறுகிறது எண்ணியம். ஒரு செல் உயிரிமுதல் மனிதன் வரையான வளர்ச்சி என்பது பரிணாம முறையில் முன்னோக்கிச் செல்லும் வகையில்தான் இருந்துள்ளது என்பதை அறிவியல் உறுதி செய்துள்ளது. யாருடைய உதவியும் இன்றி, தானாகவே உயிர்கள் உருவாகியுள்ளன என்பதையும் நவீன அறிவியல் உறுதி செய்துள்ளது.

 பெர்னார்டு என்பவர் கூறிய எண்ணியத்தின் உலக அமைப்பு குறித்த கருத்துக்களில் பெரும்பகுதி நவீன உயிரியல் அறிவியலோடு ஒப்புமை கொண்டுள்ளன என்பதை மேலே தந்த விளக்கங்கள் உறுதி செய்கின்றன.

முடிவு:

1.முதலும் இல்லை முடிவும் இல்லை, 2. காரணகாரியக்கொள்கை, 3. ஆதிமூலப்பொருள், 4.இயக்கவியலும், பரிணாமும், 5.வெளி, காலம், இயக்கம். 6.நிகழ்வு, 7.இன்மை, 8.அணுக்கள், 9.உலக அமைப்பு ஆகிய தலைப்புகளில் நவீனச்சிந்தனையும் பழந்தமிழ்ச்சிந்தனையும் பல வகைகளில் ஒப்புமை கொண்டுள்ளன என்பது குறித்தான விளக்கங்கள் தரப்பட்டன. பழந்தமிழ்ச்சிந்தனை என்பது கிரேக்க நகர அரசுகள் போன்று நன்கு வளர்ச்சியடைந்த வணிக நகர அரசுகளின் 2000 ஆண்டுகளுக்கு முந்தையகாலகட்டச் சிந்தனை ஆகும். அதன் அடிப்படையாக கிமு. 1000 முதல் அல்லது அதற்கு முன்பிருந்து 1000 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சிபெற்ற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. பழந்தமிழ்ச்சமூகம் வேளாண்மை, தொழில், வணிகம், அரசியல், பொருளாதாரம், கலை, அறிவியல், பண்பாடு, இலக்கியம் ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர்வளர்ச்சி பெற்ற சமூகமாக இருந்தது. பகுத்தறிவு, காரணகாரியக்கொள்கை, தர்க்கவியல், பொதுஅறிவு போன்றவற்றை வளர்த்தெடுத்து அவற்றை முறையாகவும், முழுமையாகவும் பயன்படுத்திக் கொண்ட, ஒரு வளர்ச்சிபெற்ற சிந்தனைப்பள்ளியாக பழந்தமிழ்ச் சிந்தனைமரபு இருந்தது. தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார் போன்ற இந்திய அளவில் புகழ்பெற்ற மிகப்பெரிய தத்துவார்த்த தமிழ் அறிவியல் அறிஞர்களின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் அவற்றின் அடித்தளமாக இருந்தன. இவைகளின் காரணமாகவே பழந்தமிழ்ச் சிந்தனைமரபின் கருத்துக்கள் தத்துவார்த்த அடிப்படையில் எளிமைப் படுத்தப்பட்டதாக இருந்த போதிலும் நவீனச்சிந்தனையோடு பலவிதங்களிலும் ஒப்புமை கொண்டிருக்கிறது எனலாம்.

 கிரேக்க நகர அரசுகளின் சிந்தனைகளே இன்றைய மேற்குலகச் சிந்தனைகளின் அடிப்படையாகக் கருதப்படுகிறது. கிரேக்க நகர அரசுகளின் சிந்தனைகளுக்கு மிக நீண்ட காலம் முன்பிருந்தே தமிழ்ச்சிந்தனை மரபு இருந்து வந்துள்ளது. பலவிதங்களில் பழந்தமிழ்ச்சிந்தனை மரபு கிரேக்க சிந்தனை மரபுக்குச் சமமாகவும் சிலவிதங்களில் அதற்கு மேம்பட்டதாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் அவை தமிழகத்தில் ஏற்பட்ட அந்நியப் படையெடுப்புகளாலும், வடஇந்திய ஆரியச்சிந்தனைகளாலும் மூடி மறைக்கப்பட்டு மீள முடியாதவாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளன. சங்கம் மருவிய காலத்தில் (கி.மு. 50 – கி.பி. 250), பேரரசுக்கொள்கையின் காரணமாக பழந்தமிழ்ச்சிந்தனை மரபு மிகவும் பலவீனமாக ஆகியிருந்தது. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அந்நியர்களான களப்பிரர் படையெடுப்பாலும், அவர்களின் ஆரம்பகால வன்முறை ஆட்சியாலும் இதன் பெரும்பகுதி அழிக்கப்பட்டு ஒரு சிறுபகுதி ‘ஆகமம்’ போன்றவற்றில் சமற்கிருதமயமாக்கப்பட்டது. தமிழின் அறிவியல் சிந்தனை மரபின் அழிவிற்கு சமற்கிருதமயமாதலும், வைதீகக் கருத்துக்களும் மிக முக்கியக் காரணங்களாக இருந்துள்ளன.

 கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் தெற்காசியாவின் வணிகமொழி என்ற தகுதியை தமிழ் மொழி இழந்தது போலவே, கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் ஒரு அறிவியல் மொழி என்ற தகுதியை இழந்தது. அவ்விடத்தை சமற்கிருதம் எடுத்துக்கொண்டது(உலக அளவில் வணிக மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் இருந்த தமிழ் இன்று மக்கள் மொழி என்ற நிலையையும் கூட இழக்கும் அவலநிலை இருக்கிறது). அதன் காரணமாக கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் தமிழில் இருந்த அனைத்துத் தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப நூல்களும் பாதுகாக்கப்படாமலும், பராமரிக்கப்படாமலும் அழிந்து போயின. அறிவியல், இசை, மருத்துவம் போன்ற பல துறைகளில் பழந்தமிழ்ச்சிந்தனை மரபுகளில் இருந்துதான் வட இந்தியச் சிந்தனை கடன் வாங்கியுள்ளது என்பதற்கான சான்றுகள் பல இன்று கிடைத்துள்ளன. வடமொழியில் உள்ள பரத நாட்டிய சாத்திரம் என்ற இசை நாட்டிய நூலும், சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும் தமிழில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல்களே. தமிழ் எழுத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பதோடு அதற்கு முன்னரே கி.மு. 1500 முதல் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது இன்று உறுதியாகியுள்ளது. கீழடி அகழாய்வு தமிழகத்தில் நகர நாகரிகம் இருந்தது என்பதை உறுதி செய்துள்ளது. இன்னும் தொடர்ந்து நடக்கும் அகழாய்வுகளும் பிற ஆய்வுகளும் தமிழின் தொன்மையை மட்டுமல்ல அதன் தத்துவார்த்த அறிவியல் சிந்தனை மரபையும், வட இந்தியச்சிந்தனையின் பல முன்னேறிய தத்துவார்த்த அறிவியல் சிந்தனையின் மூலம் பழந்தமிழ்ச்சிந்தனை மரபுதான் என்பதையும் வெளிக்கொண்டு வரும் என்பது உறுதி.

        முற்றும்.

பார்வை:

11.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 117-119.

12.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 194

13.தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா, உலகாயதம், தமிழில் எஸ். தோதாத்ரி, NCBH, சூன்-2010 பக்: 578-581.

14.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 116-117.

15.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 189.

16.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 785.& இந்தியத்தத்துவம் ஓர் அறிமுகம், சட்டோபாத்தியாயா, தமிழில் வெ. கிருஷ்ணமூர்த்தி, 2010, படைப்பாளிகள் பதிப்பகம், பக்: 201.202.

17.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 115.

18.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 798.

19.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 73.

20.சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்: 105.

 1. “ “ “ பக்: 105, 106. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 800, 801.

22.காலம், ஸ்டீஃபன் ஆக்கிங், தமிழில்-நலங்கிள்ளி, உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, சனவரி-2002, பக்: 47.

 1. ஆசிவகமும் ஐயனார் வரலாறும், க. நெடுஞ்செழியன், பதிப்பாசிரியர் – இரா. சக்குபாய், பாலம் பதிப்பகம், தை-2014, பக்: 44-51.

24.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 798, 799.

25.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, இரேம்நாத் பசாசு, தமிழில்- கே.சுப்பிரமணியன், விடியல்பதிப்பகம், சனவரி-2016. பக்: 105-106.

 1. “ “ “ பக்: 116.

27.மனித ஜினோம், பேரா. க. மணி, சூலை-2015, பக்: 2-7.

 1. “ “ “ பக்: 45-50.
 2. “ “ “ பக்: 269.
 3. “ “ “ பக்: 265-267.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It

தொல்காப்பியம்:

 தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களைக் கொண்டது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக்கொண்டது. தொல்காப்பியம் தமிழ்மொழிக்கான இலக்கணநூல் எனினும், இந்நூல் பண்டைய தமிழ் மக்களின் வாழ்வுக்கான இலக்கண நூலாகவும் திகழ்கிறது. தமிழ் மக்களின் வாழ்வியலைப் பேசும் இதன் பொருளதிகாரம் கீழ்க்கண்ட ஒன்பது இயல்களைக்கொண்டது. அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமையியல், செய்யுளியல், மரபியல் ஆகியன அவை. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்கு அறிவியல் அடிப்படையை வழங்கிய தொல்கபிலரின் எண்ணியச்சிந்தனையைக் கொண்டதாக தொல்காப்பியம் விளங்குகிறது. இவ்வுலகத்திற்கான அடிப்படையாக விளங்கும் முதன்மைப்பொருட்கள் இடம், காலம் ஆகிய இரண்டும்தான் என்பதை விளக்குகிறது இதன் பொருளதிகாரத்தின் நாலாவது பாடல்.

kaniyan balan book on tamil history “முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்

 இயல்புஎன மொழிப இயல்பு உணர்ந்தோரே” (அகத்திணையியல் - 4).

நவீன அறிவியல் இதனை வெளி, காலம்(TIME&SPACE) எனக்கூறுகிறது. எண்ணியச் சிந்தனைப்படி ‘வெளி’ என்பதுதான் ‘இடம்’ என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளதிகாரத்தின் 507ஆம் பாடல், கரும நிகழ்ச்சியை இடம் எனக் கூறுகிறது.

 ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்

 கரும நிகழ்ச்சி இடம்என மொழிப (செய்யுளியல் – 197)

 ஒரு நிகழ்ச்சி நடப்பதை இடம் எனக்கூறும் தொல்காப்பியரின் அடுத்த பாடல்(செய்யுளியல்-18), நிகழ்ச்சிகளுக்கு அடிப்படையாக இருப்பது காலம் எனக்கூறுகிறது. ஆகவே இடம், காலம் ஆகிய இரண்டும் கரும நிகழ்வுகளுக்கு அடிப்படை என்பது தமிழ்ச்சிந்தனை மரபின் கருத்தியலாக இருந்துள்ளது. அதனால்தான் அவையிரண்டும் உலகத்திற்கான முதற்பொருளாக தொல்காப்பியரால் சொல்லப்பட்டுள்ளது. பொருளதிகாரத்தின் 244ஆம் பாடல் நிகழ்ச்சிகள் இல்லாவிட்டால் காலமும் இல்லை என்கிறது.

 இமையோர் தேஎத்தும் எறிகடல் வரைப்பினும்

 அவையில் காலம் இன்மை யான (பொருளியல் – 52; கடைசிப்பாடல்)

 நிகழ்ச்சிகள் நடந்தேறுவதை இடம் எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், இங்கு நிகழ்ச்சிகள் இல்லை என்றால் காலமும் இல்லை என்கிறார். ஆதலால் நிகழ்ச்சிகள் இல்லை என்றால் இடம் எனப்படும் வெளி, காலம் ஆகிய இரண்டுமே இல்லை என அவர் கூறுவதாக ஆகிறது. இவைகளின் மூலம் இவரது கருத்துக்கள், வெளி - காலம் குறித்த நவீனச்சிந்தனையோடு ஒப்புமை கொண்டுள்ளன. இவை குறித்து முன்பே முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

 உலகாயதத்தின் ஐம்பூதக்கருத்துக்களை விளக்குவதாக பொருளதிகாரத்தின் 637ஆம் பாடல் இருக்கிறது.

 நிலம் தீ நீர் வளி விசும் போடு ஐந்தும்

 கலந்த மயக்கம் உலகம் ஆதலின்

 இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்

 திரிவுஇல் சொல்லோடு தழாஅல் வேண்டும் (மரபியல் – 91)

 நிலம், தீ, நீர், வளி எனும் காற்று, விசும்பு எனும் வெளி ஆகிய ஐந்தும் சேர்ந்து உருவான கலவையால் ஆனது இவ்வுலகம் எனக்கூறுகிறார் தொல்காப்பியர். உயிரினங்களின் தோற்றத்துக்கான அறிவியல் அடிப்படையாக விளங்கும் பரிணாமக்கொள்கையைக் குறிப்பதாக பொருளதிகாரத்தின் 575ஆம் பாடல் இருக்கிறது.

 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

 இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

 மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

 நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

 ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

 ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

 நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே (மரபியல் – 27)

 தொடுதல் உணர்வு மட்டும் கொண்டவை ஓரறிவு உயிர் எனவும் அதனுடன் நாக்குச்சுவை கொண்டவை ஈரறிவு உயிர் எனவும், அத்துடன் மூக்கால் நுகரும் தன்மை கொண்டவை மூவறிவு உயிர் எனவும், இவையோடு கண்ணால் பார்க்கும் தன்மை கொண்டவை நான்கறிவு உயிர் எனவும், இந்த நான்குடன் செவியால் கேட்கும் திறன் கொண்டவை ஐந்தறிவு உயிர் எனவும், இந்த ஐந்துடன் மனம் கொண்டு அறியும் திறன் கொண்டவை ஆறறிவு உயிர் எனவும் இப்பாடலில் விளக்கம் தருகிறார் தொல்காப்பியர்.

 எல்லா உயிர்களும் இன்பத்தை அடைவதையே தங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன என்ற கருத்தை வலியுறுத்தும் இன்பவியல் கோட்பாட்டை பொருளதிகாரத்தின் 219ஆம் பாடல் பேசுகிறது.

 எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

 தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும். (பொருளியல் – 27)

அறம் சார்ந்த வாழ்வு:

 தனது பொருளதிகாரத்தின் 214ஆம் பாடலில் இலக்கியம் அறம் சார்ந்ததாக இருந்தாக வேண்டும் என வலியுறுத்துகிறார் தொல்காப்பியர். அறம் சாராத நடைமுறைகள் உலக வழக்கில் இருந்தாலும் அவற்றை மரபு எனக்கொண்டு இலக்கியம் படைப்பது பழிக்குறியதாகும் எனத் திட்டவட்டமாக தொல்காப்பியர் அறிவுறுத்துகிறார்.

 அறக்கழிவு உடையன பொருட்பயன் வரினே

 வழக்கென வழங்கலும் பழித்தது என்ப (பொருளியல் – 22).

 பொருளதிகாரத்தின் 190ஆம் பாடலில், களவிலும், கற்பு வாழ்க்கையிலும், இன்பம் நுகர்ந்து, அறத்தோடு கூடிய பெருவாழ்வு வாழ்ந்த தலைவனும் தலைவியும், முதுமையில் தம் மக்களோடும் சுற்றத்தோடும் பாதுகாப்போடும், பெருமதிப்போடும் சிறந்தமுறையில் வாழ்ந்து இறத்தலே பேரின்ப வாழ்வாகும் எனக் கூறுகிறார் தொல்காப்பியர்.

 காமம் சான்ற கடைக்கோட் காலை

 ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

 அறம்புரி சுற்றமொடு கிழவனும், கிழத்தியும்

 சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே (கற்பியல் – 51)

 இப்பாடல் துறவறம் குறித்தோ வீடு குறித்தோ பேசவில்லை. இந்த வாழ்வை மிகச்சிறந்தமுறையில் வாழ்வதே பேரின்ப வாழ்வு எனக் கூறுகிறது. பழந்தமிழர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக்கொண்டு வாழ்ந்தனர். வாழ்க்கையில் பொருள் சேர்ப்பதையும், இன்பமாக வாழ்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்த தமிழர்கள், பொருள் சேர்ப்பதிலும், இன்பமாக வாழ்வதிலும் அறத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் என்ற கருத்தையும் தங்கள் வாழ்வின் இலக்கணமாகக் கொண்டிருந்தனர். அறமற்ற பொருள் சேர்க்கையும், அறமற்ற இன்ப நுகர்வும் ஏற்கத்தக்கதல்ல என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் ‘அறத்தோடு நிற்றல்’ என்பது மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அதனால்தான் தொல்காப்பியர் உலக வழக்கில் இருக்கும் அறம் சாராத நடைமுறைகள் இலக்கியப்படைப்புகளில் இடம்பெறுவதைக்கூட ஏற்கமுடியாது எனத் திட்டவட்டமாகத்தெரிவிக்கிறார். இலக்கியப்படைப்புகளில் அறம் சாராத நடைமுறைகளைப் படைப்பது பழித்தலுக்குரியது எனக்கூறுகிறார். ஆகவே அறம் பொருள் இன்பம் ஆகிய மூன்றிலும் அறத்தைக்கடைப்பிடித்தல் என்பது மிகமிக முக்கியமானதாக பழந்தமிழர்களால் கருதப்பட்டது எனலாம். ஆனால் வட இந்தியர்கள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும்விட வீடு என்பதையே தங்கள் வாழ்க்கையின் இலக்கணமாகக்கொண்டு வாழ்ந்தனர். ஆனால் பழந்தமிழர்கள் வீடு என்பது குறித்தோ, இறப்பிற்குப் பிந்தைய வாழ்க்கை குறித்தோ கவலைப்படவில்லை. அவர்கள் இந்த உலக வாழக்கையின் அனைத்து நடைமுறைகளிலும் அறத்தைக்கடைப்பிடித்து, பொருள் சேர்த்து, இன்பம் நுகர்ந்து வாழ்வதற்கே முக்கியத்துவம் தந்தனர்.

இன்பவியல் கோட்பாடு:

            தொல்காப்பியத்தில் சொல்லப்படும் படிமுறைக்கோட்பாடு முதல், இன்பவியல் கோட்பாடு வரையுள்ள மெய்யியல் கூறுகளே சங்க இலக்கியத்தின் மெய்யியல் ஆகும். அளவையியல் எனப்படும் தருக்கவியலை அடிப்படையாகக் கொண்டு மெய்யியல் கூறுகள் நிலை நாட்டப்பட்டன. அளவையியல் முறைகள் காட்சி அளவையில் தொடங்கின. தமிழ் அகத்திணை மரபுகளை – அளவையியலின் இலக்கிய வடிவமாகத் தமிழர்கள் அமைத்தனர். அகத்திணை மரபு என்பது,

            எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது              

            தான மர்ந்து வரூஉம் மேவற் றாகும்  -தொல்.பொருளதிகாரம்-219.

            என்கிற தொல்காப்பிய இலக்கணப்படி அமைந்த இன்பியற் கோட்பாடாகும். இவ்வின்பியற் கோட்பாடு, அடிப்படையில் கடவுள் மறுப்பையும் ஓர் அங்கமாகக் கொண்டதாகும். வள்ளுவரின்

            தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

            தாமரைக் கண்ணா னுலகு      -காமத்துப்பால், 1103.

            எனும் குறள் அதற்குச் சான்றாகிறது. “தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக்கண்ணனான திருமாலின் உலகம் ஈடாகுமா?” எனக் கடவுளின் உலகத்தை அடைவதைவிட காதலியின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பம் உயர்ந்தது எனக் கூறுவதன் மூலம் கடவுள் மறுப்பைக் கொண்டுள்ளது. சங்க இலக்கிய மெய்யியல் என்பது பகுத்தறிவு சான்றதும், மனித நேயம் மிக்கதும், அறிவியல் கோட்பாடுகள் நிறைந்ததும், மனித வாழ்வின் இன்ப நுகர்விற்குச் சிறப்பிடம் அளிப்பதும், அறம், பொருள், இன்பம் என்னும் வாழ்வியற் கோட்பாடுகளை வற்புறுத்துவதுமான ஓர் உன்னத நெறியாகும்-(1).

ஐம்பூதம்:

            தொல்காப்பியம் ‘உலகம் என்பது நிலம், நீர், தீ, வளி, வெளி எனும் ஐந்தும் கலந்த மயக்கம்’ எனக் கூறுவது போலவே சரக சம்கிதையும் குறிப்பிடுகிறது. புறநானூற்றின் 2ஆம் பாடல்,

 மண் திணிந்த நிலனும் நிலன் ஏந்திய விசும்பும்

 விசும்பு தைவரு வளியும் வளித் தலைஇய தீயும்

 தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கை போல

 என ஐம்பெரும்பூதத்து இயற்கை என்ற, இயல்புக்கோட்பாட்டை விளக்கும். ஐம்பெரும்பூதங்களை ஆய்வு செய்ததால் பூதவாதம் எனவும், உலகின் தோற்றத்தைப்பற்றி ஆராய்ந்ததால் உலகாய்தம் எனவும் இக்கோட்பாடு அழைக்கப்படுகிறது. உணவு கொடுத்தவர்கள்தான் உயிர் கொடுத்தவர்கள்; உணவால் ஆனதுதான் உடம்பு; நிலத்தொடு நீர் சேருவதுதான் உணவு; ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்கள் உடலையும் உயிரையும் படைத்தவர்கள் ஆவர் என்கிற பொருள்தரும் பாடலை குடபுலவியனார் என்ற புலவர் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டிய மன்னனிடம் கூறி அவனை நிலமும் நீரும் இணையத் தேவையான ஏரி, குளம், குட்டைகளை உருவாக்குமாறு அறிவுரை கூறுகிறார்.

 “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

 உண்டி முதற்றே உணவின் பிண்டம்

 உணவெனப் படுவது நிலத்தொடு நீரே

 நீரும் நிலனும் புணரியோர் ஈன்று

 உடம்பும் உயிரும் படைத்திசி னோரே” (புறம்:18, வரி: 19-23)

 இப்பாடலின் கருத்துக்கள் எண்ணியச் சிந்தனையின் அடிப்படைகளில் ஒன்றாக விளங்கிய ஐம்பூதக்கோட்பாட்டின்படி அமைந்தவைகள் ஆகும். திருமூலரும் உடம்பே உயிருக்கு அடிப்படை என்ற பொருளில் ‘உடம்பார் அழியின் உயிரார் அழிவர்’ எனக் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் எண்ணிய, ஓக, உலகாய்த மெய்யியல்களுக்கு மூல ஊற்றாய் அமைந்த தந்திர மரபுக்குரியவை எனக் கூறுகிறார் க. நெடுஞ்செழியன்.

 ஐம்பெரும்பூதங்களின் ஒன்றிணைப்பால் உருவாகும் வேதியல் மாற்றத்தால் தோன்றுவதுதான் உயிர் என்பதே பூதவாதிகளின் கருத்தாகும். சாரக சம்கிதை அறிவுப்புலங்களால் அறியப்படும் ஐம்பூதங்களை, வெளி, காற்று, தீ, நீர், நிலம் என வரிசைப்படுத்தும். இவ்வரிசை முறை உலகத்தோற்றம் குறித்த தமிழியக்கோட்பாடாகும். பரிபாடலின் 2ஆம் பாடல்,

 “கருவளர்வானத் திசையுடன் தோன்றி

 உருவறி வாரா ஒன்றன் ஊழியும்

 உந்துவெளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்

 செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

 தண்பெயல் தலைஇய ஊழியும் அவையில்

 ஊண்முறை வெள்ள் மூழ்கி ஆர்தருபு

 மீண்டும் பீடுயர் பீண்டி அவற்றிற்கும்

 உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும்” -

என அண்டவெளியின் தோற்றம் குறித்துப் பேசுகிறது. இப்பாடல் சங்கம் மருவிய காலத்துக்குரிய பாடலாகும். “அணுக்கள் முழு வளர்ச்சி பெறாமல் கரு நிலையில் இருந்த போது பெரிய வெடியோசையுடன் அவ்வணுக்கரு வெடித்துச் சிதறியது. அதுவே முதல் ஊழி எனப்படும். அந்நிகழ்வே வெளியின் தோற்றத்துக்குக் காரணமாக ஆகியது. அதன்பின் பொருள்களை இயக்கும் காற்று தோன்றி கிளர்ந்து வீசிய இரண்டாம் பூதத்து ஊழியும், அடுத்து சிவந்த ‘தீ’ சுடர் வீசி எறிந்த மூன்றாம் பூதத்து ஊழியும், அடுத்து பனியோடு குளிர்ந்த மழையும் பெய்த நான்காம் பூதத்து ஊழியும் அடுத்தடுத்துத்தோன்றின. இறுதியாக அந்நான்கு பூதங்களின் ஊடே வெள்ளத்தே முழுகிக் கரைந்து ஒழிந்த நில அணுக்கள், மீளவும் ஆற்றல் அதிகரித்துச் செறிந்து திரண்டு, முக்கூறிய நான்கு பூதங்களின் உள்ளீடாகக் கிடந்த ஐந்தாவதாகிய பெரிய நிலத்து ஊழியும் எனக்கூறப்பட்ட ஊழிகள் தோன்றின” இதுவே இப்பாடலின் பொருளாகும். இதன்படி வரிசைமுறை என்பது பெருவெடிப்பு, வெளி, காற்று, தீ, நீர், நிலம் என அமைகிறது. சரக சம்கிதை கூறும் இவ்வரிசைமுறை தொன்மைக்கால எண்ணியத்திற்கு உரியதாகும். எண்ணிய மெய்யியலின் ஒரு கூறாகவே மருத்துவம் தோன்றி வளர்ந்தது எனக்கூறுகிறார் க. நெடுஞ்செழியன்(2). மருத்துவம் மட்டுமின்றி பிற அறிவியல் துறைகளும் எண்ணியக் கருத்துக்களை அடித்தளமாக் கொண்டே பழந்தமிழகத்தில் உருவாகி வளர்ந்தன.

மெய்ப்பாடுகள்:

 தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் மெய்ப்பாட்டியலில் உள்ள சில மெய்ப்பாடுகள் குறித்தும், செய்யுளியல், மரபியல் ஆகியவற்றில் ‘நூல்’ குறித்து சொல்லப்பட்டுள்ளவை குறித்தும் இங்கு காண்போம். இவ்விடயங்கள் தொல்காப்பியத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் எனலாம். மெய்ப்பாடுகள் என்பன உடல்வழியாக வெளிப்படும் மன உணர்வுகள் ஆகும். அடிப்படை மெய்ப்பாடுகள் எட்டு வகைப்படும். அவை ஒவ்வொன்றும் நான்கு மெய்ப்பாடுகளைக்கொண்டவை என்பதால் மொத்தம் 32 மெய்ப்பாடுகள் உள்ளன. அவை

1.நகை : எள்ளல், இளமை, பேதமை, மடன்.

2.அழுகை : இழிவு, இழவு, அசைவு, வறுமை.

3.இளிவரல்: மூப்பு, பிணி, வருத்தம், மென்மை.

4.மருட்கை: புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம்.

5.அச்சம் : அணங்கு, விலங்கு, கள்வர், இறை.

6.பெருமிதம்: கல்வி, தறுகண், புகழ்மை, கொடை.

7.வெகுளி : உறுப்பறை, குடிகோள், அலை, கொலை.

8.உவகை : செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு.

 நகை என்ற மெய்ப்பாடு நான்கு வகையில் வெளிப்படும். பிறரை இகழும்போது தோன்றுவது எள்ளல், இளமையாக இருந்து முதியவரைக் கண்டு நகைப்பது இளமை, ஒருவரின் அறிவின்மை கண்டு நகைப்பது பேதமை, ஒன்றை உள்ளவாறு உணராமல் தவறாக உணரும் மடமை கண்டு நகைப்பது மடன். இவ்விதமாக எட்டு வகை மெய்ப்பாடுகளுக்கும் மேலே சொல்லப்பட்ட 32 மெய்ப்பாடுகளும் தோன்றும் எனக்கூறுகிறார் தொல்காப்பியர். பொருளதிகாரத்தின் 245 முதல் 255 வரையான பாடல்கள் (மெய்ப்பாட்டியல்:1-11) இவை குறித்துப் பேசுகின்றன. அதன் 256ஆம் பாடல் (மெய்ப்பாட்டியல்-12) இந்த 32 முதன்மை மெய்ப்பாடுகள் போக மீதி உள்ள 32 துணைமை மெய்ப்பாடுகள் குறித்துப்பேசுகிறது. முதலில் உள்ள 32 முதன்மை மெய்ப்பாடுகள் உடம்பின் வழியாக உணர்வை வெளிப்படுத்துபவை. துணைமை மெய்ப்பாடுகள் என்பன மன அளவில் உணர்வுகளை வெளிப்படுத்துபவை.

 சான்றாக ‘உடைமை’ என்ற முதல் துணைமை மெய்ப்பாடு என்பது ஏதாவது ஒரு பொருளை உடமையாகப் பெறும்பொழுது மனதில் தோன்றும் மகிழ்ச்சி என்ற மன உணர்வைக் குறிக்கும். இப்படியாக உள்ள 32 துணைமை மெய்ப்பாடுகள் குறித்துத் தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆகவே மொத்தம் 64 மெய்ப்பாடுகள் உள்ளன எனலாம். இந்த மெய்ப்பாடுகள் குறித்த கருத்துக்கள் தனது முன்னோர்களால் சொல்லப்பட்டவை என்பதையும் தொல்காப்பியர் ‘என்ப, மொழிப’ என்பதன் மூலம் கூறுகிறார். வடமொழியில் உள்ள ‘பரத நாட்டிய சாத்திரம்’ இவைகளுக்கு இணையான மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளது. அவை இரசங்கள் எனப்படுகின்றன. ஆனால் இந்த பரத நாட்டிய சாத்திரம் தமிழ் மூலத்திலிருந்து தோன்றிய ஒரு வழி நூல் ஆகும்(3). ஆகவே இந்த மெய்ப்பாடுகள் அனைத்தும் மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபுக்குச் சொந்தமானவை.

 தலைவி, தலைவனைக்காண்பது முதல் கூடி மகிழ்வது வரையும் அதன் பின்னரும் ஆன உணர்வு நிலைகள், 24 மெய்ப்பாடுகளாக வகைப்படுத்தப்பட்டு, பொருளதிகாரத்தின் 257 – 262 வரையான பாடல்களில்(மெய்ப்பாட்டியல்:13-18) சொல்லப்பட்டுள்ளன. இளம்பூரணர் தலைவிக்குரிய இந்த 24 மெய்ப்பாடுகளையும் ‘அவத்தை’ எனக்குறிப்பிடுகிறார். இவை போக பெருந்திணைக்குரிய 20 மெய்ப்பாடுகள் பொருளதிகாரத்தின் 266ஆம் (மெய்ப்பாட்டியல்-22) பாடலில் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே இந்த மெய்ப்பாடுகள் குறித்த விளக்கம், பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வியல் அனுபவங்களை நுட்பமான முறையில் வகைப்படுத்தி, தொகுத்து வைத்தவர்கள் என்பதையும், தொல்காப்பியரின் நுண்மான் நுழைபுலச் சிறப்பையும் வெளிப்படுத்துகின்றன எனலாம்.

நூல்:

 பொருளதிகாரத்தின் எட்டாவது இயல் செய்யுளியல் ஆகும். இந்த செய்யுளியலில் ‘மாத்திரை’ முதல் ‘இழைபு’ வரையான 34 செய்யுள் உறுப்புகள் குறித்து பொருளதிகாரத்தின் 310ஆம் பாடல்(செய்யுளியல்-1) பேசுகிறது. அதன்பின் அவைகளுக்கான விளக்கம் அச்செய்யுளியல் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது. இந்த 34 உறுப்புகளில் ‘அளவியல்’ என்ற உறுப்பு பற்றிய விளக்கத்தில் ‘நூல்’ குறித்துப் பேசுகிறார் தொல்காப்பியர். நூல் குறித்த விளக்கத்தை பொருளதிகாரத்தின் 471ஆம் பாடல் தருகிறது.

 நூல்எனப் படுவது நுவலுங் காலை

 முதலும் முடிவும் மாறுகோள் இன்றித்

 தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

 உள்நின்று அகன்ற உரையோடு பொருந்தி

 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே (செய்யுளியல்-162).

 நூல் என்பதில் தொடக்கமும் முடிவும் மாறுபாடில்லாமல் தெளிவாக இருக்கும்; தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்டும்; தன்னுள் அடங்கிய தெளிவான, விரிவான உரையைப் பெற்றிருக்கும். இறுதியாக நூல் என்பது அந்நூலின் தன்மைக்கு ஏற்ப நுட்பமான பொருளை உணர்த்தும் பண்பைக்கொண்டது. இவை நூல் குறித்து தொல்காப்பியர் கூறுவதாகும். நூல், உரை, பிசி எனும் விடுகதை, பழமொழி எனும் முதுமொழி, மந்திரம், குறிப்பு மொழி ஆகிய ஆறு இலக்கிய வகைகளுக்கும் அடி வரையரை கிடையாது என்பதை அதற்கு முந்தைய பாடலில்(செய்யுளியல்-161) தொல்காப்பியர் கூறுகிறார்.

 இலக்கிய வகைகளுள் ஒன்றான நூல் எனப்படுவது சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் ஆகிய நான்கு வகையான பாகுபாடுகளைக்கொண்டது. பொருள் எளிதில் அறியும் வகையில் யாப்பியல் நெறியில் அமைக்கப்படுவது சூத்திரம் ஆகும். ஒரே இனமாக வரும் பொருளை ஒருசேர வைத்துப் புனையப்படுவது ஓத்து(இயல்) ஆகும். ஒரு பொருள் நெறி என்றில்லாமல் பலவகைப்பட்டு விரவி வரும் பொருள்களை எல்லாம் தொகுத்துப் பொதுவாக அமைப்பது படலம் ஆகும். சூத்திரத்தின் ஒரு பொருளும், ஓத்தின் ஒரே இனப்பொருளும், படலத்தின் விரவிய பலபொருள்களும் சேர்த்துத் தொகுத்து அமைப்பது பிண்டம் ஆகும். இவை பொருளதிகாரத்தின் 472-477 வரையான 6 பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. ஆகவே நூல் என்பது சூத்திரம், ஓத்து, படலம், பிண்டம் ஆகிய நான்கு வகையான பாகுபாடுகளையும் கொண்டதாக அமையும் எனலாம்.

 செய்யுளியலில் நூல் என்பது நான்கு வகையான பாகுபாடுகளைக் கொண்டது எனக்குறிப்பிட்ட தொல்காப்பியர், பொருளதிகாரத்தின் மரபியலில் முதல் நூல், வழிநூல் என இருவகையான நூல்கள் உண்டு என்கிறார். வினைகள் நீங்கிய அறிவு முதிர்ந்த முனைவனால் ஆக்கப்படுவது முதல்நூல் ஆகும். முதல் நூலை அடிப்படையாகக்கொண்டு அதனைப்பின்பற்றி ஆக்கப்படுவது வழி நூல் ஆகும். வழி நூல் தொகுத்து அமைத்தல், விரித்துக்கூறுதல், தொகுத்தும், விரித்தும் அமைத்தல், மொழிபெயர்த்தல் ஆகிய நான்கு நிலைகளில் அமையும். பத்துவகைக் குற்றங்களும் இல்லாது, 32 வகை உத்திகளும் பெற்று, உண்மைப்பொருள் விளங்கக் கூறுவதே நூல் ஆகும். பொருளதிகாரத்தின் 643-649 வரையான பாடல்கள்(மரபியல்:95-99) இவை குறித்துப் பேசுகின்றன. இலக்கண நூலின் அமைப்பு, நூற்பாவின் இலக்கணம், காண்டிகை உரை, உரைநூல் ஆகியன குறித்துப் பொருளதிகாரத்தின் 648-654 வரையான 7 பாடல்கள்(மரபியல்:100-106) ஓரளவு விரிவாகப் பேசுகின்றன.

 பொருளதிகாரத்தின் 658ஆம் பாடல்(மரபியல்-110), நூலில் ஏற்படும் பத்து வகையான குற்றங்கள் குறித்துப் பேசுகிறது. 1.கூறியது கூறல், 2.மாறுகொளக்கூறுதல், 3.குன்றக்கூறல், 4.மிகைபடக்கூறல், 5.பொருள் இல் மொழிதல், 6.பொருள் மயங்கக்கூறல், 7.கேட்போருக்கு இனிமை தராதவகையில் கூறல், 8.பழிமொழியால் இழுக்கு வருமாறு கூறல், 9.தொன்மையைவிட்டு விலகி தானே ஒன்றைக்கூறல், 10.படிப்போருக்கு விளங்காத வகையில் கூறல் ஆகியன அந்த பத்து வகையான குற்றங்கள் ஆகும். இந்தப்பத்து வகையான குற்றங்களும் இல்லாமல் படைக்கப்படும் படைப்புதான் நூல் என்ற தகுதியைப்பெறும் எனக்கூறுகிறார் தொல்காப்பியர்.

 நூலை எழுதும்பொழுது கையாள வேண்டிய உத்திகள் என்பன 32 எனக்கூறுகிறார் தொல்காப்பியர். பொருளதிகாரத்தின் 660ஆம் பாடல்(மரபியல்-112), அந்த 32 உத்திகளையும் வரிசைப்படுத்திக்கூறுகிறது. அவை ‘நுதலியது அறிதல்’ முதல் ‘உய்த்துக்கொண்டு உணர்த்தல்’ வரை 32 உத்திகள் ஆகும். நுதலியது அறிதல் என்பது ‘சொல்லக்கூடிய கருத்தைப் பிறர் தெளிவாக விளங்கிக்கொள்ளுமாறு கூறுதல்’ ஆகும். அதுபோன்றே, உய்த்துக்கொண்டு உணர்த்தல் என்பது ‘தெளிவில்லாத கருத்தை உய்த்து உணர்ந்து பொருந்தும் வகையில் விளக்கிக்கூறுதல்’ ஆகும். இப்படியாக நூல் எழுதுவதற்கான 32 உத்திகளையும் தொல்காப்பியர் பட்டியலிட்டுள்ளார். இந்த 32 உத்திகளையும் பின்பற்றி, முன்பு கூறிய 10 குற்றங்களையும் நீக்கிப் படைக்கப்படும் படைப்பு மட்டுமே நூல் என்ற தகுதியைப் பெறும். இந்த விலக்கப்படவேண்டிய 10 குற்றங்களும், பின்பற்றப்பட வேண்டிய 32 உத்திகளும் தமது முன்னோர்கள் கூறியிருப்பவை என்பதையும் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். அதன் மூலம் இவை அனைத்தும் மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபுக்கு உரியவை என ஆகிறது.

 தொல்காப்பியரால் நூலுக்குரிய இலக்கணமாகக் காட்டப்படும் 32 உத்திகள், பத்துவகைக்குற்றங்கள், சூத்திரம், காண்டிகை உரை, உரைநூல் முதலியன தருக்கவியலுக்குரியன எனக்கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன். இந்த உத்திகள், குற்றங்கள் முதலியன குறித்து வடமொழியில் உள்ள சரக சம்கிதை என்ற மருத்துவ நூலும் பேசுகிறது. அவற்றை அது பேச்சுக்கலைக்குரியதாகக் கூறுகிறது. ஆனால் அந்த மருத்துவ நூலும் தமிழ் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட வழிநூல்தான் ஆகும்(4).

 பொருள்முதல் சிந்தனையாளர்கள் மூல எண்ணியத்திற்கும்(ORIGINAL SAMKYA), தொடக்ககால சிறப்பியத்திற்கும்(வைசேடிகம்) உரியன எனவும், ஓக, உலகாய்த மெய்யியல்களைச் சார்ந்தவை எனவும் எவற்றைக் குறித்துள்ளனரோ அவற்றை எல்லாம் தொல்காப்பியர் விரிவாகவும் செறிவாகவும் கூறிச்செல்கிறார் எனக்கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன். மேலும் படிமுறைக்கோட்பாடு(THEORY OF EVOLUTION), ஐம்பூதக்கோட்பாடு(THEORY OF UNIVERSE), அளவையியல் கோட்பாடு(THEORY OF REASONING AND LOGIC), காரணகாரியக் கோட்பாடு(THEORY OF CAUSE AND EFFECT), இன்பியல் கோட்பாடு(THEORY OF HEDONISM) ஆகிய அறிவியல் துறைகளை தொல்காப்பியர் குறிப்பிடுவதோடு, அவை தமது முன்னோர்கள் கூறியுள்ளவை என்பதையும் தொல்காப்பியர் சுட்டிக்காட்டுவதாகக் கூறுகிறார் முனைவர் க. நெடுஞ்செழியன்(5). மேலே சொல்லப்பட்டவைகளின் மூலம், தொல்காப்பியர் ஒரு தத்துவ அறிஞரும், அறிவியல் மேதையும் ஆவார் என்பதோடு அவர் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாளியாகவும் ஆகிறார். தொல்காப்பியத்தின் பொருளதிகாரம், மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபின் சிற்பிகளில் ஒருவராக அவரை ஆக்குகிறது.

தமிழிய, வட இந்தியச் சிந்தனை:

 வட இந்தியாவில் 16 சனபதங்கள் உருவாகி மகதப் பேரரசு உருவாகும் வரையிலான இடைக்காலத்தில்(கிமு.750-550) பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரளவு இருந்தது. ஆனால் அச்சூழல் அங்கு நீடிக்கவில்லை. ஆனால் அக்காலத்தில்தான் தமிழகத்தின் பொருள்முதல்வாதக் கருத்துக்களான பூதவாதமும், எண்ணியமும் அங்கு பரவின. அதனைக் கற்றுக்கொள்ளப் பல வட இந்திய அறிஞர்கள் தமிழகம் வந்தனர். தமிழறிஞர்கள் பலர் தங்கள் பொருள்முதல்வாத மெய்யியல் கருத்துக்களை வட இந்தியாவில் பரப்பினர். புத்தர்கூட எண்ணியம் கற்றவர்தான். அப்பொழுது அதற்கானச் சமூகச் சூழல் அங்கு இருந்தது. அதன் பின்விளைவாகவே சமண, பௌத்த மதங்கள் அங்கு உருவாகின. ஆனால் கி.மு. 1000க்கு முன்பே கிரேக்க நகர அரசுகள் போன்ற பல சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் உருவாகிவிட்டன. அவை தங்கள் தமிழ் மொழிக்கான குறியீடுகள் என்ற ஒருவகை வரிவடிவத்தையும் கொண்டிருந்தன. முனைவர் கா. இராசன் அவர்கள் தனது தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் சொல்வதுபோல் கி.மு. 1000 வாக்கில் அல்லது அதற்கு முன்பே ஒரு பெரிய பண்பாட்டுப் புரட்சி தமிழகத்தில் ஏற்பட்டு விட்டது. அப்பாண்பாட்டுப் புரட்சி தெற்கே ஆதிச்சநல்லூர் நாகரிகத்தில் கி.மு. 1500 வாக்கில் நடை பெற்றுவிட்டது எனலாம். அப்பண்பாட்டுப் புரட்சி அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அதன்பின் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி வேகம் பெற்றது.

            பொருள்முதல்வாதக் கருத்துகள் வளருவதற்கான நல்லதொரு சூழ்நிலை ஓரிரு நூற்றாண்டுகள் கூட வட இந்தியாவில் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் அச்சூழ்நிலை 1000 வருடங்களுக்கு மேல் இருந்துள்ளது. அதனால்தான் பூதவாதம், எண்ணியம், சிறப்பியம் போன்ற பல பொருள்முதல்வாத மெய்யியல்கள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன என உறுதியாகச் சொல்ல முடிகிறது. அதற்கானப் பல சான்றுகளை க. நெடுஞ்செழியன் அவர்கள் தமது நூல்களில் தந்துள்ளார்கள். அதனால்தான் தமிழ் மரபு அடிப்படையில் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்டதாகும் என்கிறோம். தொல்கபிலர், பக்குடுக்கை நன்கணியார், பூரண காயபர், கணாதர், நருவெரூஉத் தலையார், கோதமனார் போன்ற பலரும் தமிழர்கள். தொல்கபிலரின் எண்ணியம், பக்குடுக்கை நன்கணியாரின் எண்ணிய அடிப்படையிலான சிந்தனை ஆகியவற்றின் தொடர்ச்சிதான் கணாதரின் சிறப்பியம் ஆகும். இந்தியத்தத்துவ மரபுக்குப் புதியதாகத் தோன்றுகிற சிறப்பியத்தின் அணுவியலுக்கும், நியாயவாதத்தின் அளவையியலுக்கும் உரியதுதான் தந்திர உத்தி ஆகும்.

 ஆகவே பூதவாதம் எனப்படுகிற உலகாயதமும், சாங்கியம் எனப்படுகிற எண்ணியியலும், சிறப்பியத்தின் அணுவியலும், நியாயவாதத்தின் அளவையியலும், தந்திர உத்திகளும், இன்ன பிற பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகளும் மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபில் இருந்து தோன்றியவைதான் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. தொல்காப்பியர் காலம்-வெளி குறித்துத் தற்காலத்திற்குரிய, ஒரு வளர்ச்சிபெற்ற பொதுச் சார்பியல்(GENERAL RELATIVITY) கோட்பாட்டுக்குரிய கருத்தை அன்றே வெளிப்படுத்தியதற்கு, மிக நீண்ட நெடிய, தூய கலப்பற்ற அறிவியலையும், பொருள்முதல்வாத மெய்யியலையும் அடிப்படையாகக் கொண்ட மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபுதான் காரணம் எனலாம்.

தமிழிய, வட இந்தியச் சிந்தனை - வேறுபாடுகள்:

1.தமிழிய சிந்தனையின்படி பூதவாதம் எனப்படும் உலகாயதத்தில் நீர், நிலம், தீ. வளி, வெளி ஆகிய ஐந்து பூதங்கள் உண்டு. வட இந்தியச்சிந்தனையில் வெளி இல்லாத நான்கு பூதங்களே உண்டு.

2.எண்ணியம் எனப்படும் சாங்கியத்தில் தமிழியச்சிந்தனைப்படி 24 கூறுகள் மட்டுமே உண்டு. ஆனால் வட இந்தியச்சிந்தனைப்படி 24 கூறுகளுடன் புருடன் என்பது சேர்க்கப்பட்டு மொத்தம் 25 கூறுகள் உண்டு.

3.சிறப்பியம் எனப்படும் வைசேடிகத்தில் தமிழியச்சிந்தனைப்படி ஏழு பொருள்கள் உண்டு. வட இந்தியச்சிந்தனைப்படி ‘இன்மை’ இல்லாமல் ஆறு பொருள்கள் மட்டுமே உண்டு.

4.தமிழ் மரபு மனித வாழ்வின் அடிப்படைகளாக அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றை மட்டுமே கொண்டதாக உள்ளது. ஆனால் வட இந்தியச்சிந்தனைப்படி இந்த மூன்றுடன் வீடு என்பது சேர்க்கப்பட்டு மனித வாழ்வு நான்கு அடிப்படைகளைக்கொண்டதாக உள்ளது.

5.தொழில் முதல்நிலை எனப்படும் காரியாபினிவிருத்தி என்பது ஒரு தொழிலைச்செய்வதற்கான மூலவளங்களின் தொகுப்பு ஆகும். இது தமிழியச்சிந்தனைப்படி 8 வகைகளைக்கொண்டதாக உள்ளது. வட இந்தியச் சிந்தனைப்படி இந்த 8 வகைகளோடு முயற்சி, துணைக்கருவி ஆகிய இரண்டையும் சேர்த்து 10 வகைகளைக்கொண்டதாக அது உள்ளது.

6.தந்திர உத்திகள் என்பவை தமிழியச்சிந்தனைப்படி நூலுக்கான உத்திகளாக 32 உத்திகளைக் கொண்டுள்ளன. வட இந்தியச்சிந்தனைப்படி இவை பேச்சுக்கலைக்கான உத்திகளாக 36 உத்திகளைக் கொண்டுள்ளன.

 தமிழியச்சிந்தனைகளில் இருந்து தான் பெரும்பாலான அறிவியல், பொருள் முதல்வாத வட இந்தியச் சிந்தனைகள் உருவாகின என்பது முன்பே பலவிதங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வேறுபாடுகள் கூட தமிழியச்சிந்தனைகளின் அறிவியல், தத்துவார்த்த அடிப்படைகளை ஆழ்ந்து புரிந்துகொள்ளாததன் விளைவேயாகும் என்பதும் முன்பே சொல்லப் பட்டுள்ளது. இந்த வேறுபாடுகள் குறித்து ஆழமாக விவாதிக்கப்பட்டு, தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இவ்விளக்கங்கள் தமிழியச் சிந்தனைகளின் அறிவியல் அடிப்படையிலான பொருள் முதல்வாத மெய்யியலை உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

பார்வை:

1.தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:34-36

 1. “ “ “ பக்: 41-42.
 2. பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: பக்: 839, 840.
 3. தமிழர் இயங்கியல்-தொல்காப்பியமும், சரகசம்கிதையும், நெடுஞ்செழியன், 2009, பாலம் பதிப்பகம், பக்:145.

5.சங்க இலக்கியக்கோட்பாடுகளும், சமய வடிவங்களும், க. நெடுஞ்செழியன், மனிதம் பதிப்பகம், 2-10-2009, பக்: 33, 34.

- கணியன் பாலன், ஈரோடு

Pin It