எங்கெல்சின் ‘குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்என்னும் நூல்

புத்தகத்தின் கதை

friendrich engels book1 450புத்தகத்தின் கதை என்ற தொடரில் முதலாவதாக, எங்கெல்சின் ‘குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலின் கதையைக் கூற விரும்புகிறேன். இந்தக் கதையைச் சொல்லத் தொடங்குவதற்கு முன்னர், புத்தகத்தின் கதை என்ற தொடரைப் பற்றி சில சொற்கள்.

நம் பேச்சுகளின் ஊடே, ஒரு புத்தகம் பற்றிய கதையைக் கேட்கும் போதோ, சொல்லும் போதோ அலுப்புத் தட்டுவதில்லை. திரும்பத் திரும்பச் சொல்லும் போதும், கேட்கும் போதும் புத்தகக் கதைகள் கூடுதலான சரக்குகளை உள்ளிழுத்துக் கொண்டு விரிந்துகொண்டே போகும். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி இல்லை.

இப்படியான புத்தகக் கதைகளைக் கேட்ட நண்பர்கள் சில சமயங்களில் வியப்பு எய்துவார்கள்; பெரு மூச்சு விடுவார்கள்; மகிழ்ச்சியில் துள்ளுவார்கள்; சோகமும்கூட அடைவார்கள். இப்படிப் புத்தகக் கதை பற்றிய பேச்சுகள் பலவித உணர்ச்சிகளைத் தோற்று விப்பது உண்டு. ஏன் பலவித உணர்ச்சிகள் தோன்று கின்றன? என்ற கேள்வியால் ஒரு விசயம் புலப்பட்டது. ஒரு புத்தகத்தின் கதை வெறும் புத்தகக் கதை மட்டு மல்ல; அது பலவித இலட்சியங்களின் கதை; மனிதக் கனவுகளின் கதை; அறிதலின் கதை; சமூகத்தின் கதை.

குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்

இத்தோடு, புத்தகக் கதை பற்றிய விவரிப்பை நிறுத்திக் கொள்வோம். எங்கெல்சின் ‘குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூலின் கதையைத் தொடங்கலாம். இந்தப் புத்தகம் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட ஒன்று; பல்லாயிரம் மைல் தொலைவு கடந்து, ஏறத்தாழ அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ் மொழிக்கு வந்தது. வந்து, அறுபது ஆண்டுகள் ஆகியும் இந்த நூல் திரும்பத் திரும்ப அச்சிடப்படுகின்றது. இக்காலத்தில் ஒவ்வொரு பெருநகரத்தில் நடக்கும் ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் ஒருசில இளைஞர்களாவது, இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டு போகின்றனர்; படிக்கின்றனர். புத்தம் புத்திய இளைஞர்களோடு உறவுகொள்ளும் ஒரு புத்தகம் இது.

பல உலக மொழிகளில் இன்னும் உயிர்ப்போடு உலாவரும் எங்கெல்சின் ‘குடும்பம் தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற புத்தகத்தின் கதை ஒரு உலகக் கதை ஆகும். இந்நூலின் தமிழ் மொழி பெயர்ப்புப் புத்தகக் கதை, ஓர் உள்ளூர் கதை. இந்தப் புத்தகத்தின் முன் கதையைத் தெரிந்துகொள்வது, உள்ளூர் கதையைச் சுவைப்படுத்த உதவலாம்.

மரண சாசனத்தை நிறைவேற்றுதல்

‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற புத்தகம் ஒரு “மரண சாசனத்தை நிறைவேற்றுதல் (the execution of a bequest” என்று இந்நூல் முன்னுரையின் முதல் தொடராக எங்கெல்ஸ் கூறியுள்ளார். மார்க்ஸ் விட்டுச் சென்ற மூலதனம் நூலின் இரண்டாம், மூன்றாம் பாகங்களின் “யாரும் புரிந்து கொள்ள முடியாத” கையெழுத்துப் படிகளை, மிகக் கடுமையாக உழைத்து, செப்பம் செய்து வெளிக் கொணர்ந்தபோதுகூட, எங்கெல்ஸ் மேற்கண்ட தொடரை எழுதவில்லை.

1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூன் புரட்சி இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. மறுபடியும் ஐரோப்பிய தொழிலாளர் இயக்கத்தில் அமைதி குடிகொண்டுவிட்டது. அந்த நேரத்திலிருந்து, தமது வாழ்நாளின் இறுதிப் பத்தாண்டுகள் முழுவதும், திரும்பவும் மார்க்ஸ் பழைய வரலாற்று நூல்களையும் ஐரோப்பா அல்லாத உலகம் பற்றிய நூல்களையும் வாசித்தார். அவர் வாசித்த புத்தங்களிலிருந்து மேற்கோள்களைக் குறித்தும், ஓரக் குறிப்புகள் எழுதியும் வரைந்த குறிப்புப் புத்தகங்கள் பல. இந்தக் குறிப்புப் புத்தகங்களின் ஒரு பகுதியை லாரன்ஸ் கிரடேர் “எத்னாலாஜிகல் நோட்புக்ஸ்” (இனஒப்பாய்வியல் குறிப்புப் புத்தகங்கள்) என்ற தலைப்பில் 1974ஆம் ஆண்டில்தான் வெளியிட்டார். கிறுக்கலான கையெழுத்தில், பல மொழிகளில் எழுதப்பட்டுள்ள இந்தக் குறிப்புப் புத்தகங்கள், 100 தொகுதிகளைக் கொண்ட “மார்க்ஸ்-எங்கெல்ஸ் முழுமையான ஆக்கத் திரட்டு” என்ற பெருந் திட்டமொன்றில் வெளிவரவுள்ளன. அப்பெருந் திட்டத்தில் கெவின் ஆண்டர்சன் முதலான பன் மொழிப் புலமையாளர்கள் உழைத்துவருகின்றனர். பால்நிலையையும், முதலாளியத்துக்கு முந்தைய சமூகங்களையும் பற்றிய மார்க்சியத் தத்துவப் புரிதலில் இந்தக் குறிப்புப் புத்தகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என ஆண்டர்சன் எடுத்துக்காட்டியுள்ளார்.

இக்குறிப்புப் புத்தகங்களில் ஒன்றே மார்கனின் “பண்டைய சமூகம்” என்ற நூல் பற்றிய மார்க்சின் குறிப்புப் புத்தகம். வரலாறு பற்றிய பொருள்முதல்வாத ஆராய்ச்சிகளில் மார்கனின் புத்தக முடிவுகளின் முக்கியத்துவம் குறித்து ஒரு நூல் எழுதும் நோக்கத்துடன் மார்க்ஸ் இந்தக் குறிப்புப் புத்தகத்தை எழுதியதாகவும், அந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே தான் ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலை எழுதியுள்ளதாகவும் 1884ஆம் ஆண்டு முன்னுரையில் எங்கெல்ஸ் கூறியுள்ளார். அவர் மார்க்சின் குறிப்புகளை அப்படியே நூலுக்குள் சேர்த்துக் கொண்டார்.

மார்க்ஸ் 1883 மார்ச் மாதம் இயற்கையெய்துகிறார். இந்த நூலை எங்கெல்ஸ், 1884ஆம் ஆண்டு மார்ச் மாத ஈற்றில் எழுதத் தொடங்கி, மே மாதம் 26-ஆம் தேதிக்குள் எழுதி முடித்து விடுகின்றார்; ‘மூலதனம்’ இரண்டாம் பாகத்தை அச்சுக்குத் தயாரித்து முடிக்கும் முன்பே, இந்நூலை வெளியிட்டும் விடுகின்றார். ஆகவே, இந்நூல் வெளியீட்டில் எங்கெல்ஸ் அளவு கடந்த ஆர்வம் காட்டியுள்ளார் என்பது தெளிவு. சமூக அமைப்பின் முரணியக்க வளர்ச்சிப் போக்கைப் புரிந்து கொள்வதற்காக, காட்டுமிராண்டி, நாகரிகம், அநாகரிகம் போன்ற ஐரோப்பிய இனமையவாதம் சார்ந்த கலைச் சொற்கள் மார்கன் எழுத்துகளில் பயன்படுத்தியுள்ள படியே அப்படியே விடப்பட்டுள்ளன. இத்தகைய இனமையவாத நெடி வீசும் கலைச்சொற்களுக்கு, மாற்றான கலைசொற்களான, தொன்மைப் பொது வுடைமைச் சமூகம், வர்க்கச் சமூகம் போன்ற சொற்களை 1845 ஆம் ஆண்டு எழுதிய “ஜெர்மன் கருத்துநிலை” என்ற நூலிலே மார்க்சும் எங்கெல்சும் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் இந்த நூலில் பழைய வகை கலைச்சொற்கள் எந்தவித விமர்சனக் குறிப்புகளும் இன்றி, அப்படியே விடப்பட்டுள்ளன. ஒருவகையில் பார்த்தால், மார்கன் நூல் பற்றிய மார்க்சின் குறிப்புப்புத்தகக் கையெழுத்துப்படியை அப்படியே அச்சுக்குத் தயாரித்தது போன்ற ஒரு தோற்றம் இந்நூலில் உள்ளது.  அந்த அளவுக்கு இந்த நூல் வெளியீட்டில் ஆர்வத்தை மட்டுமில்லாமல், அவசரத்தையும் எங்கெல்ஸ் காட்டுகின்றார். அது ஏன்?

மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் வாழ்ந்த காலத்தில் பிரான்சில் வார்க்கப் போராட்டங்கள் (1850), ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் (1851), பதினெட்டாம் புரூமேர்(1852), பிரான்சில் உள்நாட்டுப் போர் (1871) முதலான சமகால வரலாற்று நிகழ்வுகள் பற்றிய அவர்களது பொருள்முதல்வாத ஆராய்ச்சி நூல்கள் பல வெளிவந்தன. ஆனால் முதலாளிய உலகத்திற்கு வெளியே உள்ள உலகம் பற்றி நியூயார்க் டிப்யூரின் நாளிதழில் பெருந்தொகையான கட்டுரை களிலும் கடிதப் போக்குவரத்துகளிலும் அவர்கள் சிந்தித்திருப்பினும், அவ்வெழுத்துகள் ஒரு கோட்பாட்டு வகைப்பட்ட தருக்கப்பாங்கிலான எடுத்துரைப்பு அல்ல. அதனால் அவ்வெழுத்துகளில் உள்ள உள்முரண்பாடு களை, இனமையவாத நோக்கில் உள்ளவை என தோன்றும்படியானவற்றையும் ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

ஆனால் மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துகளில் இனமையவாத நோக்குகள் எவையுமில்லை என்று அண்மைக் காலத்தில் கெவின் ஆண்டர்சன் நன்கு எடுத்துக்காட்டியுள்ளார். தொடக்க காலங்களில் மார்க்ஸ்-எங்கெல்சிடம் இருந்த முதலாளிய உற்பத்தி முறையின் வழியாகவே சோசலிசத்தை எட்டிப் பிடிக்க முடியும் என்ற முடிவு பிற்காலத்தில் மாற்றம் அடைந்தது. முதலாளிய உற்பத்தி உறவுகளுக்கு வெளியுள்ள சமூகங்கள், முதலாளிய இடைக் கட்டத்தைக் கட்டாயமாகக் கடந்துசெல்ல அவசிய மில்லை என்ற முடிவுக்கு வந்தனர். இதனை ருஷ்ய கிராமச் சமூகம் பற்றிய வேரா ஸசூலிச்சின் கேள்விக்கு மார்க்ஸ் 1881 பிப்ரவரி - மார்ச் மாதங்களுக்கிடையில் எழுதிய கடித நகல் மிகத் தெளிவாகவே காட்டுகின்றது. அவர்கள் முதலாளிய உலகின் தொழிலாளர் போராட்டத்தின் இணைபிரிக்க முடியாத கூட்டாளி களாக முதலாளியம் அல்லாத உலகின் மக்கள் இருக் கின்றனர் என்ற மார்க்ஸ் - எங்கெல்ஸின் பிற்கால முடிவு களை மார்க்ஸின் குறிப்புப் புத்தகங்கள் காட்டுகின்றன. ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலின் ‘அநாகரிகமும் நாகரிகமும்’ என்ற இறுதி இயல் மேற்கண்ட நிலையை உட்பொதிந்துள்ளது என்றே படுகின்றது

மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துக்களில், இந்நூல் ஒன்று மட்டுமே குடும்பம், ஆணாதிக்கம், பெண்ணடிமைத் தனம் முதலான பால்நிலைச் சிக்கல் பற்றிய புரிதலுக்கு, அரசு உருவாக்கம் பற்றிய புரிதலுக்கு, முதலாளியத்தின் ஓரத்தில் அதன் அங்கமாக ஆகிக் கொண்டிருந்த முதலாளியத்திற்கு முந்திய உலகம் பற்றிய புரிதலுக்கு, இதன் மூலம் முதலாளியம் பற்றிய புரிதல் முழுமை பெறுவதற்கு, ஆகமொத்தம் வரலாறு பற்றிய பொருள் முதல்வாதப் புரிதலை விசாலப்படுத்தும் வகையில் உள்ள மிக முக்கியமான, விரிவான கட்டுத்திட்டமான கோட்பாட்டு நூல். ஆகவேதான், எங்கெல்ஸ் இந் நூலைப் பற்றி மார்க்சின் “மரண சாசனத்தை நிறை வேற்றுகிறேன்” என்று எடுத்த எடுப்பிலேயே கூறினார் எனத் தோன்றுகின்றது.

இந்த நூலின் முக்கியத்துவத்தை, ஏறக்குறைய அரையளவு ஆசிய நாடான, பாதி அளவுக்கு மக்கள் முதலாளியத்திற்கு முந்திய யுகத்தில் வசித்த நாடான  ருஷ்யாவில் புரட்சியை நடத்திய லெனின் அதிக அளவுக்கு வலியுறுத்தினார். மார்க்சியர் எல்லோரும் படிக்க வேண்டும் எனக் கூறினார். ஆனால், “எளிதில் எல்லோருக்கும் விளங்கும்படியாக எழுதப்படாத நூல்” என்றும் எச்சரிக்கை செய்துள்ளார். திரும்பத் திரும்ப ஆழ்ந்து படிப்பதன் மூலமே விளங்கிக் கொள்ள முடிகிற நூல் என்று கூறினார். லெனினைத் தொடர்ந்து சோவியத் மார்க்சியச் சிந்திப்பில் ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்கச் சமூகங்களில் செல்வாக்குப் பெற்றுள்ள இரத்த வழி குல உறவுகள் கொண்ட சமூக அமைப்பைப் பற்றி புரிந்துகொள்வதற்கான முறையியலைக் கொண்டுள்ள நூலாக இந்நூல் முன்னிறுத்தப்பட்டது. உலகத்தின் பல மொழிகளில் சோவியத் வெளியீடுகளைக் கொண்டுவர முனைந்தபோது இந்நூலே முதன்முதலாக வெளியிடப் பட்டிருக்கலாம். தமிழில் முதன்முதலில் சோவியத் ஒன்றியம் இந்நூலையே வெளியிட்டது.

தமிழ்ப் பதிப்புகள்

‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலின் முதல் பதிப்பு வெளிவந்த கொஞ்சக் காலத்திலே இத்தாலி, ருமேனிய, டேனிஷ், பிரெஞ்சு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டன. ஆனால் எங்கெல்ஸ் இறந்து ஏழாண்டுகள் கழித்து, 1902-லே ஆங்கிலத்தில் முதல் மொழியாக்கத்தை, சிகாகோ சார்லஸ் கெர் அன் கம்பெனி வெளியிட்டது. இம்மொழி யாக்கத்தை எர்னெஸ்ட் உட்டர்மனின் செய்துள்ளார். ஆங்கிலத்தின் முதல் அதிகாரப்பூர்வ முதல் பதிப்பை இண்டர்நேஷனல் பதிப்பகத்தின் வழியாக 1933ஆம் ஆண்டே சோவியத் ஒன்றியம் வெளியிட்டது எனக் கருதப்படுகின்றது. இம்மொழியாக்கம் எலிக் வெஸ்ட் செய்தது. இம்மொழியாக்கமே திரும்பத் திரும்ப அச்சிடப்பட்டது. ஆயினும் ஒவ்வொரு பதிப்பிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1978ஆம் ஆண்டு பீக்கிங் அயல்மொழிப் பதிப்பகம் வெளியிட்ட பதிப்பு, ஜெர்மன், பிரெஞ்சுப் பதிப்புகளுடன் ஒப்பிடப்பட்டு கணிசமான திருத்தங்களுடன் வெளிவந்துள்ளது. 

ஜெர்மன் மொழியில் புத்தகம் வெளிவந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியே, சோவியத் ஒன்றியம் தமிழில் புத்தகம் வெளியிடத் தொடங்கிய பின்னரே, அயல் மொழிப் பதிப்பகத்தின் வெளியீடாக 1962ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் பதிப்பு வெளிவந்ததுள்ளது. 1920கள் முதற்கொண்டே தமிழ்நாட்டில் பொதுவுடைமை நூல்கள் அறிமுகமாகத் தொடங்கிவிட்டன. 1936ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு செயல்படத் தொடங்கிவிட்டது. இந்த வரலாற்றைக் கவனத்தில் கொண்டால் கொஞ்சம் காலம் தாழ்ந்துதான் மார்க்சிய மூல இலக்கியங்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின எனத் தெரிகின்றது. அதற்குக் கட்சியும் பொதுவுடைமை இலக்கிய வெளியீடுகளும் காலனிய ஆட்சியில் கண்காணிப்புக்கு உட்பட்டிருந்ததும், அலுவல் பூர்வமற்ற வகையில் தடைசெய்யப்பட்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். 

1962ஆம் ஆண்டுக்கு முன்னரே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, தத்துவத்தின் வறுமை, கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞானவாத சோசலிசமும் முதலான சில முக்கியமான மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துகளை ஜனசக்தி பிரசுராலயமும் நியூ செஞ்சுரி புத்தக நிலையமும் வெளியிட்டிருந்தது. அயல்மொழிப் பதிப்பகம் 1962 ஆம் ஆண்டு ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலை வெளியிட்டுள்ளது. இந்த முதல் பதிப்பு சாதாரணக் கட்டு, அட்டைக் கட்டு என்ற இருவகை யிலும் வந்துள்ளது. சாதாரணக் கட்டுப் புத்தகத்தின் முகப்பு ஆர்ட் பேப்பரில் இருவண்ணத்தில் அச்சடிக்கப் பட்டுள்ளது. இதைப் போலவே முதல் பக்கமும் இரு வண்ணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. சுமார் 410 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தின் அட்டைக் கட்டு நூலின் விலை நான்கு ரூபாய்.

அக்காலத்தில் இந்நூலின் அளவுகொண்ட, நியூ செஞ்சுரி நிறுவனம் வெளியிட்ட நூல்களின் விலையும் இந்த அளவுக்குத்தான் இருந்தது.  இதன் மூலம், பிற்காலத்தில் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மலிவு விலைப் பதிப்புகள் போன்று, தொடக்கக் கால அயல்மொழிப் பதிப்பகத்தின் வெளியீடுகளின் இல்லை போலும். முன்னேற்றப் பதிப்பகத்தின் வெளியீடுகளில் உள்ள ‘சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது’ என்ற தொடரும்கூட இந்நூலில் இல்லை. ஒரு வேளை இங்கேயே அச்சிடப் பட்டதோ, என்னவோ தெரியவில்லை.

இலக்கியவாதிகள் கருதுவதைப் போல அமெரிக்க நாட்டின் நிதியுதவி பெற்ற ‘பெர்ல் பப்ளிகேஷன்ஸ்’ ஒரு ரூபாய் வெளியீடுகளுக்குப் போட்டியாகச் சோவியத் வெளியீடுகள் தொடங்கப்படவில்லை எனவும் இந்த விலை அளவு கருதவைக்கின்றது. மாறாக, மூன்றாம் உலக நாட்டு மக்கள் அறிய வேண்டிய மார்க்சிய, ருஷ்ய இலக்கியங்கள் என சோவியத் மார்க்சியர்கள் கருதிய வற்றைக் கொண்டு சேர்க்க விளைந்ததின் வெளிப்பாடே அயல்மொழிப் பதிப்பக வெளியீடுகள் என எண்ணத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, நாட்டுப் புற ஏழை மக்களுக்கு (லெனின்), வரலாற்றில் தனிநபர் பாத்திரம் (பிளக்கெனாவ், தமிழில் ஆர்.கே. கண்ணன்) முதலான தத்துவார்த்த வெளியீடுகளுடன் ருஷ்ய சிறுகதைகள் போன்ற ஒருசில இலக்கிய வெளியீடு களையும் மாஸ்கோ அயல்மொழிப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

அயல்மொழிப் பதிப்பகம் வெளியிட்டுள்ள பிற பெரும்பாலான நூல்களில் மொழிபெயர்ப்பாளர் பெயர் இல்லாதது போன்றே, ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலிலும் இல்லை. மொழி யாக்கம் சரளமாக உள்ளது. ஆங்கில மொழியாக்கத்தில் உள்ள மிகவும் சிக்கலான கூட்டுத் தொடர்கள் இல்லை. எழுவாய், பயனிலை மயக்கங்களும் இல்லை. எண்ணிட்டு, புத்தகத்தின் பின்பகுதியில் கொடுக்கப்படும் விரிவான பதிப்பாளர் குறிப்புகள் இல்லை. Ôபெயர் பட்டியல்’ என்ற பெயர் சுட்டி மட்டுமே உள்ளது. 1960கள் இறுதியில் ‘அயல்மொழிப் பதிப்பகம்’ என்ற பெயர் முடிவுக்கு வந்தது. 1970 முதல் முதலில் ‘புரோகிரஸ் பதிப்பகம்’, பின்னர் ‘முன்னேற்றப் பதிப்பகம்’ எனவும் சோவியத் வெளியீடுகள் வெளிவரத் தொடங்கின. 1962ஆம் ஆண்டின் மறுபதிப்புகளே 1973, 1978 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்தவை. 1978ஆம் ஆண்டு வெளிவந்த பதிப்பின் விலை மூன்று ரூபாய் என ஒரு புத்தகத்தில் முத்திரையிடப்பட்டுள்ளது.

1983-1989ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெளிவந்த முன்னேற்றப் பதிப்பகத்தின் மார்க்ஸ்-எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில் 11-வது தொகுதியாக ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்: லூயிஸ் ஹெ. மார்கன் செய்த ஆராய்ச்சியின் ஒளியில்’ 1989-ஆம் ஆண்டு வெளி யானது. இந்தப் பதிப்பு 1962ஆம் ஆண்டு மொழி யாக்கத்தைப் பெரும்பாலும் பின்பற்றியிருந்தாலும், கணம் - குலம் என்ற சொற்களுக்குப் பதிலாக இனக்குழு - குலம் என்பன போன்ற கலைச்சொல் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் தமிழில் நா.வானமாமலை முன்னெடுத்த ஆய்வுகளில் பயன் படுத்தப்பட்ட கலைச்சொற்களுக்கு ஒத்த ஒரு மாற்றமே. முன்பு பொருள் தெளிவுடன் உடைக்கப்பட்ட தொடர்கள், மீண்டும் எழுவாய் மயக்கம் தோன்றும் வகையில் கூட்டுத் தொடர்களாக மாற்றப்பட்டுள்ளன. 1962-ஆம் ஆண்டு மொழியாக்கத்தில் உள்ள ‘பண்பாடு’, மீண்டும் 1989-ஆம் ஆண்டு மொழியாக்கத்தில் ‘கலாசாரம்’ ஆகிவிட்டது. இது எந்தவிதத்தில் முன்னேற்றம் என விளங்கவில்லை. எண்ணிட்டு 41 விளக்கக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. பெயர்க் குறிப்பகராதி, இலக்கிய மற்றும் புராணப் பெயரகராதி கொடுக்கப்பட்டுள்ளன. இவை மிகுந்த பயனுடையன.

தேர்வு நூல் தொகுதி 11-ஐ 1989 ஆம் ஆண்டி லிருந்து 2000 ஆண்டு வரையிலும்கூட நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் விற்பனை செய்தது. இந்த நீண்ட கால இடைவெளியில் விலை 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை இருந்தது. எவ்வளவு படிகள் அச்சடிக்கப்பட்டன எனத் தெரியவில்லை. சோவியத் வீழ்ச்சிக்குப் பின் 1990களில் மார்க்சிய மூல நூல்கள் வாசிப்பில் ஒரு சுணக்கம் இருந்ததை இந்நீண்ட கால விற்பனை காட்டுவதாகக் கருதலாமா?.

தேர்வுநூல் தொகுதி விற்பனையில் இருந்த போதே 1990 ஆண்டும் தனிப்புத்தகமாக ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ நூலை முன்னேற்றப் பதிப்பகம் மார்க்ஸ்-எங்கெல்-லெனின் நூல்கள் வரிசையில் வெளியிட்டுள்ளது. இந்தப் பதிப்பு தேர்வு நூல் தொகுதி 11-இன் மறு அச்சு மட்டுமே ஆகும். நூல் அறிமுகம் ஒன்று ஐந்து பக்க அளவில் சேர்க்கப் பட்டுள்ளது. இந்தப் பதிப்பின் இன்பிரிண்ட் பக்கத்தில் மட்டும்தான் “மொழிபெயர்ப்பாளர்: நா. தர்மராஜன் எம்.ஏ.” எனக் குறிக்கப்பட்டுள்ளது; இதற்கு முன்பு பதிப்பிக்கப்பட்ட ஆண்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன; “காப்புரிமை : தமிழ் மொழிபெயர்ப்பு, முன்னேற்றப் பதிப்பகம் 1973” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

friendrich engelsbook 2 450புத்தகப் புழக்கமும் தமிழ்ச் சிந்திப்பில் செல்வாக்கும்

ஏறக்குறைய இந்த எல்லாப் பதிப்புகளையும் 2003 - 2008ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியுள்ளேன். பல நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்துள்ளேன். பழைய புத்தகக் கடைகளில் 2010 ஆண்டு வரை பல்வகையான சோவியத் வெளியீடுகள் ஒரு சீராகக் கிடைத்துவந்தன. இப்போது கிடைப்பதில்லை. காரணம் மீண்டும் மார்க்சிய நூல்கள் ‘பொன் போல் பாதுகாக்கப்படுகின்றன’ போலும். இந்நூலை மீண்டும் 2008ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டது. 2011-இல் ஒருமுறை மீளச்சு செய்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட இடது சாரிப் பதிப்பகங்கள் வெளியிட்டுள்ளன. இந்நிலை இந்நூலின் வாசகத் தேவையைக் காட்டுகின்றது.

1962ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலான இந் நூலின் புத்தகப் பதிப்புகளை நோக்கினால் பத்தாண்டு களுக்கு ஒருமுறை நான்கு தசாப்பதங்களாகத் தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு வருகின்றது. பல்லாயிரக்கணக்கான படிகள் தொடர்ந்து தமிழ்ச் சமூகத்தில் புழங்கியுள்ளன; வாசிக்கப்பட்டிருக்கின்றன.

இந்நூலின் அறிவு சார்ந்த தாக்கம் என்ன?

க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, நா. வானமாமலை,

ஆ. சிவசுப்பிரமணியன், கா. சுப்பிரமணியன்,

பெ. மாதையன், ர.பூங்குன்றன் ஆகியோரின் பழந்தமிழ்ச் சமூகம் பற்றிய ஆய்வு எழுத்துகளில் எங்கெல்சின் இந்நூல் விரிவாக மேற்கோளாக ஆளப்பட்டிருப் பதையும், ஆக்கப்பூர்வமான வகையில் பயன்கொள்ளப் பட்டிருப்பதையும் காணமுடிகின்றது. “கூட்டமும் திருமணமும்” என்ற நூலில் க. கிருட்டிணசாமி, கொங்கு வேளாளர் மத்தியில் எஞ்சியுள்ள குல / இரத்த வழி உறவுகளின் செல்வாக்கு, அமைவுமுறை பற்றி மேற் கொண்டிருக்கும் ஆய்வைப் போன்று, சமகாலத் தமிழ்ச் சமூகத்தில் சமூகக் குழுமங்கள் மத்தியில் நிலவுகின்ற குல / இரத்த வழி உறவுகள் பற்றிய ஆய்வில் இப்புத்தகம் போதுமான அளவுக்குப் பயன்படுத்தப்படவில்லை. குறிப்பாகச் சோவியத் மார்க்சியர்கள் கருதிய ‘குல உறவுகள் மேலோங்கிய சமூக அமைப்பு’ எனக் கருதிய நமது சாதிய சமூகம் பற்றிய புரிதலுக்கு இந்நூல் பயன் படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது. பயன் படுத்த வேண்டும்.

இறுதியாக, இந்நூலைக் கற்ற எனது அனுபவத்தைச் சொல்லி நிறைவு செய்யலாம் என நினைக்கிறேன். இந்நூலை 2001ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழ்ப் பட்டப்படிப்பு தொடங்கிய காலம் முதல் அறிவேன். அறிமுகப்படுத்தியது ஆசிரியர்கள் அல்லர்; தோழர்களே அறிமுகம் செய்தனர். ஆனால் இந்நூலைப் புரிந்து கொண்டு கற்பதில் பல இடங்களில் தடை ஏற்பட, தோழர்களால் போதுமான அளவுக்கு உதவி செய்ய முடியவில்லை. 2009ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் துணைப் பதிப்பு - ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்த பின்னர், அக்காலத்தில் அந்நிறுவனத்தின் பதிப்பு-ஆசிரியராகப் பணியாற்றிய, முதுபெரும் தோழர் ஆர். பார்த்தசாரதி அவர்கள்தாம் சோவியத் அறிஞர் இ. லி அந்திரேயெவ் எழுதிய “எங்கெல்சின்  ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ எனும் நூல்” (முன்னேற்றப் பதிப்பகம் 1987) என்ற அறிமுகக் கையடக்கப் புத்தகத்தைப் படிக்க வலியுறுத்தினார். அதுவரை காலமும் சோவியத் அறிஞர்கள் எழுதிய இப்படியான அறிமுக நூல்கள் திருத்தல்வாத நூல்கள் என்பதே என் வலுவான கருத்து. ஆனால் சோவியத், மேற்குலக மானிடவியல் அறிஞர்களின் ஆய்வுகள் பின்புலத்தில் வைத்து இ.லி. அந்திரேயெவ் மிகச் சிறப்பாக எங்கெல்ஸ் ஆய்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளார்; புரிந்துகொள்ள வழிகாட்டி யுள்ளார். மேலும் பல ஆங்கிலப் பதிப்புகளையும் ஒப்புநோக்கிப் படிக்கவும் ஆர்.பி.எஸ். வழிகாட்டினர். இவையே ஓரளவுக்கு இந்நூலின் பேசு பொருளைப் புரிந்துகொள்ள உதவின.