ரஷ்ய மொழியில் எழுதப்பட்டு பின்னர் உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகி சரித்திரம் படைத்த உடற்கூறு அறிவியல் நூல் தற்போது தமிழில் "உடல் என்னும் எந்திரம்" என்ற தலைப்பில் நியூ செஞ்சுரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அலெக்ஸி டோரோகோவ் எழுதிய இந்நூலை தமிழில் எம்.பாண்டியராஜன் சிறப்புற மொழிபெயர்த்துள்ளார்.

மனித உடலமைப்பு பற்றியும் ஒவ்வொரு உறுப்புகளின் செயல்பாடுகளைப் பற்றியும் சிறார்கள் முதற்கொண்டு அனைத்து தரப்பினரும் இயல்பாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் அமைந்துள்ள இந்நூல் அறிவியல் நூல்களிலேயே மிகுந்த தனித்துவம் கொண்டதாக அமைந்துள்ளது. மனித உடலைப் பற்றிய அறிவியல் தகவல்களாகவும், மேலோட்டமான வெற்றுக் குறிப்புகளாகவும் மட்டும் நில்லாமல் மிகவும் நுட்பமாக ஒவ்வொரு உடலுறுப்புகளும் செயல்படும் மேலதிக விவரங்களையும் விரிவாக இதில் கூறப்பட்டுள்ளது.

இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் தனது குறிப்பில் கூறியுள்ளபடி, உடல் என்னும் எந்திரம் என்னும் இந்த நூல் குழந்தைகளுக்கானதே. ஆனால் பெரியவர்கள் படிக்கக்கூடாதது அல்ல, ஏனெனில் இவற்றில் பல விசயங்கள் பெரியவர்கள் அறியாதனவே.

சின்னக் குழந்தைக்குச் சொல்லித் தருவதைப்போல என்பார்களே, அதற்காகவே அதுபோலவே எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல் என்பது.

இது முழுமுற்றான உண்மை என்பதையே நூலின் ஒவ்வொரு பக்கமும் சான்று பகர்கின்றன. மனித உடலுக்குள் என்ன இருக்கிறது? உடல் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறது?

ஏன் எப்போதும் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டுக்கொண்டிருக்க வேண்டும்? உடலில் ரத்தம் எப்படி எங்கே எதற்காக செல்கிறது? இதயம் நுரையீரல்கள், தசைகள் மற்றும் மூளை எவ்வாறு செயலாற்றுகின்றன? கண்கள் ஏன் சட்டென சுருங்கி மூடிக்கொள்கின்றன? சில நேரங்களில் ஏன் உடல்நலம் குன்றுகிறது?

இதுபோன்ற உடல் செயல்பாடுகள் குறித்த அடிப்படை கேள்விகளுக்கான விடைகளை எளிமையாக எடுத்துரைப்பதோடு உடல் என்பது ஒரு சிக்கலான எந்திரம் என்பதையும் புரிந்துகொள்ளச் செய்கிறது. ஒவ்வொரு உடலுறுப்பின் மீதான கவனத்தையும் உடல் மீதான அக்கறையையும் தூண்டச் செய்யும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.

நுரையீரலைப் பற்றி நூலில் வரும் பகுதியில், காற்றை உள்ளிழுக்கும்போது மார்பு உயருகிறது, உந்து சவ்வு தாழ்கிறது. நுரையீரல்கள் விரிவடைகின்றன. முச்சுச்சிற்றறைகள் முழுவதுமாகப் புதிய காற்றால் நிரம்புகின்றன... என்று நுரையீரல்களின் செயல்பாடுகளை விவரிப்பதோடு நுரையீரலின் அசாத்தியமான செயல்பாடுகளைப் பற்றி, "காற்றுக்குப் பதிலாக அவை தண்ணீரை இறைத்தால் ஒரே இரவில் அரைடன் தண்ணீரை இரண்டு அடுக்கு வீட்டின் உயரத்துக்கு அவற்றால் ஏற்றிவிடமுடியும்: எனக் கூறுவது நமக்கு வியப்பைத் தருவதாக உள்ளது. இதுபோன்ற எண்ணற்ற ஆச்சரியமான சுவாரஸ்யமான தகவல்கள் ஏராளமாக இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

உடலில் தண்டுவடம் எத்தனை முக்கியமான உறுப்பு என்பதை விளக்குமிடத்து, "தண்டுவடத்தில் ஒரு பகுதி காயமுற்றால் அல்லது மோசமாக உணர்வற்றுப் போனால் கால்கள் வேலை செய்வதை நிறுத்திவிடும். வேறொரு பகுதியில் காயம் பட்டால் கைகள் அசைய மறுத்துவிடும். இன்னொரு பகுதியில் அடிபட்டால் மார்பு ஏறி இறங்குவதை நிறுத்திவிடும். இதனால் நுரையீரல்கள் செயல்படாது," எனக் கூறப்பட்டுள்ளது.

காதுகளைப் பற்றிய கட்டுரையில், "உள்ளபடியே ஆறு காதுகள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே வெளியே தெரிகின்றன. மற்ற நான்கும் உள்ளே மறைந்திருக்கின்றன" என்று கூறப்பட்டுள்ளது ஆச்சரியமான தகவலாகவே தெரிகிறது.

இவ்வாறாக முக்கியமான உடலுறுப்புகளைப் பற்றிய நுட்பமான விவரங்களைத் தருவதோடு, அதிகமான கவனம் கொள்ளாத உடலுறுப்புகளான தலைமுடி, நகங்கள், சிரைகள், சுரப்பிகள், மண்டையோடு, உந்து சவ்வு, செல்கள், தமனிகள் என ஒவ்வொன்றின் செயல்பாடுகளையும் அணுஅணுவாக விளக்கியிருப்பதால் இந்நூல் தனித்துவம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்நூலின் இறுதிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நோய்களுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளும், அவற்றைப் பற்றிய வாய்மொழிக் கதைகளும் இணைத்திருப்பது மிகுந்த பொருத்தமாக அமைந்துள்ளது. எளிய முறையிலான சிற்சில மருத்துவக் குறிப்புகளும். மூலிகை மருத்துவம் பற்றிய சில தகவல்களும் சேர்க்கப்பட்டிருப்பது மேலும் சிறப்பாகும். அவசர காலங்களில் எளிய வடிவங்களில் செய்யவேண்டிய சிற்சில முதலுதவிக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது கூடுதலான சிறப்பம்சமாகும்.

உடல் குறித்த அறிவியல் தகவல்களோடு மட்டும் இந்நூல் அமைந்துவிடாமல் உடலைப் பற்றிய அக்கறையான அம்சங்களையும் கொண்டிருப்பதனால் இந்நூலின் தனித்துவ வெளிப்பாட்டை அறியமுடிகிறது. சிறுவர்கள் மட்டுமின்றி அனைவரும் படித்தறிந்து கொள்ள வேண்டிய உடலியல் கையேடாக திகழ்வதோடு மட்டுமின்றி பாதுகாத்து வைக்கவேண்டிய சிறந்த அறிவியல் பெட்டகமாகவும் இந்நூல் விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

உடல் என்னும் எந்திரம்

ஆசிரியர்: அலெக்ஸி டோரோகோவ்

தமிழில்: எம்.பாண்டியராஜன்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,

41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,

அம்பத்தூர், சென்னை - 600 098

விலை: ரூ.140/-