sugadhev book 450வாசகனைத் திணறச் செய்யும் கவிதைத் தொகுப்புகளுக்கு மத்தியில் அவ்வப்போது எளிய நடைக் கவிதைகளால் வாசகனை குதூகலப்படுத்தும் சில கவிதைத் தொகுப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வகையில் இதழாளர் சுகதேவ் அவர்களின் ‘ஒவ்வொரு கணமும்' கவிதைத் தொகுப்பைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.

யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் மிக எளிமையான வரிகள். விசாலமான சமூகப் பார்வை. ஆழ்ந்த மனிதநேயம். வாழ்வைப் பற்றிய முழுமையான புரிதல். தத்துவக் குழப்பமில்லாத சிந்தனை என கவிதைத் தொகுப்பெங்கும் எளிமையும் ஞானமும் கைகூடிய அரிய வகை எழுத்து என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நாளிதழ்களில் பணியாற்றியதோடு மிகச்சிறந்த கட்டுரைகள் எழுது பவராக அடையாளம் பெற்றிருக்கும் நூலாசிரியரின் முதல் கவிதைத் தொகுப்பு இது. தொழில்முறைப் பத்திரிகையாளராக நாளிதழில் பணி செய்யத் தொடங்கிய காலத்திலிருந்து கவிதை எழுதுவதி லிருந்து விலகி கட்டுரையாளனாக பரிணமித்ததைப் பற்றியும் கவிதைகள் சார்ந்த ஆர்வத்தின் அடிப் படையில் இத்தொகுப்பு சாத்தியப்பட்டதாகவும் முன்னுரையில் தெரிவித்துள்ளார்.

இத்தொகுப்புக் கவிதைகளில் பெரும்பாலான வற்றில் பாசாங்கற்ற இயல்பான மொழி வாய்த்திருக் கின்றன. கவிதைக்கான பாடுபொருள்கள் பெரும் பாலும் சமகாலத்தவையாக அமைந்துள்ளதால் எளிதில் வாசகனிடம் ஈர்ப்பைப் பெற்றுவிடுகின்றன. இக்கவிதைகளுக்கும் வாசகனுக்குமான இவ்வுறவு தொகுப்பு நெடுகிலும் தொடர்கிறது.

இன்றைய கார்ப்பரேட்மய வாழ்வின் சூழலை இக்கவிதை அருமையாக சித்திரிக்கிறது.

எல்லாவற்றையும்

கலைத்துப் போடுகிறார்கள்

மாற்றி மாற்றி அடுக்குகிறார்கள்

கதவுகளைப் பூட்டிவிட்டு

கண்காணிப்பு கேமிராக்களை

பொருத்திக்கொள்கிறார்கள்

வாசலில் கோலமில்லை

வீட்டுக்குள்ளே அலங்காரம் நடக்கிறது

யோகா வகுப்பிலிருந்து  திரும்பியவுடன்

பக்கெட் சிக்கன் டெலிவரியாகிறது

தினைப் பாயசமும்

பீட்ஸாவும் அருகருகே கிடைக்கிறது

இரண்டுக்கும் கூட்டம்

நிறுத்த இடமில்லை

ஒவ்வொரு வீட்டிலும்

இரண்டு கார்கள்

இரண்டு கைபேசிகள் இருந்தும்

பவர்பேங்க் தேவைப்படுகிறது

சொந்த ஊர் சென்று நாளாகிறது

ஆலப்புழை படகு வீட்டுக்கு

முன்பதிவு செய்கிறார்கள்

ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள்

பொருள் வாங்க வீட்டில் யாருமில்லை

தாகத்துடன் ந்த்திருக்கிறார்கள்

குடிநீர் கேன் வரவில்லை

சர்க்கரை குறைவாக காபி கேட்டால்

குப்பியுடன் சர்க்கரையை நீட்டுகிறார்கள்

புத்தகக் கண்காட்சியில்

அலைமோதுகிறது கூட்டம்

படிப்பதற்கு நேரமில்லை

தீவிர சிகிச்சைக்கு படுக்கையில்லை

உயிரைப் பிடித்துக் கொண்டு

காத்திருக்கிறார்கள் நோயாளிகள்

எல்லாவற்றையும்

கலைத்துப் போடுகிறார்கள்

மாற்றி மாற்றி அடுக்குகிறார்கள்

அச்சு அசலாக இன்றைய இந்திய மன நிலையையும் வாழ்வின் இருப்பையும் புறச் சூழலையும் ஆழ்ந்த புரிதலுடன் விவரிக்கும் இக்கவிதை வாசகனோடு நேரடியாக பேசுவதுபோல் அமைந் துள்ளது. பொருள்சார் வாழ்வின் அபத்தத்தை அப்பட்டமாக விவரிக்கின்றன இக்கவிதை வரிகள். வாழ்வை எங்கோ தொலைத்துவிட்டு தேவைக்கும் மேலாக வாங்கி வைத்திருக்கிற பொருட்களில் வாழ்க் கையைத் தேடி நிற்கும் இயலாமையை நய்யாண்டி செய்கிறது இக்கவிதை. மனிதர்களை மறந்துவிட்டு சாதனங்களை நம்பி வாழும் அவலட்சணத்தையும் கோடிட்டுக் காட்டுகிறது இக்கவிதை.

இதைப்போலவே மற்றொரு கவிதையில்,

துக்கவீட்டில்

காலாட்டிக்கொண்டே

கடலை கொறிக்கிறார்கள்

இறுதி ஊர்வலத்தில்

தொலைக்காட்சி தோற்றத்துக்கு

புன்னகையுடன் கை அசைக்கிறார்கள்

சாலைவிபத்தில்

உயிரிழந்த சடலத்துடன்

செல்ஃபி எடுக்கிறார்கள்

கோவில் பிரசாதம் பெற

வரிசை மீறுகிறார்கள்

என்ற வரிகள் நமது கலாச்சார விழுமியங்களும் பண்பாட்டு எச்சங்களும் மதிப்பு பெறாது போகும் இன்றைய அவலத்தைச் சுட்டுகின்றன.

கைபேசிகளின்

அழைப்புக்கும் நிராகரிப்புக்கும்

இடையில்

வாழ்க்கையைத் தேடுகிறார்கள்

மனிதர்கள்

என்ற வரிகள் இன்றைய யதார்த்த நிலையை வெகு இயல்பாக எடுத்துரைக்கின்றன.

அதிகாரத்திற்கு எதிராகவும் பண்பாட்டு வீழ்ச்சி களுக்கு எதிராகவும் நியாய தருமங்களுக்கு உட்பட்ட இயல்பான இயற்கையான வாழ்நிலைக்கு ஆதரவுக் குரல் எழுப்புவதாகவும் அமையப் பெற்றுள்ள இத்தொகுப்புக் கவிதைகள் வாசகனுக்கு அணுக்கமாகவும் அரவணைப்பனவாகவும் அமைந்துள்ளன.

ஆகமொத்தம் சமகால வாழ்நிலையை அதன் இயல்போடும் தன்னிலையோடும் எளிமையோடும் சாதாரண வாசகனும் வாசித்துப் புரிந்துகொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு அனைவரும் வாசிக்கவேண்டிய ஒன்றாகும். எல்லா வகையிலும் மனநிறைவைத் தருவதாக அமைந் துள்ளது இக்கவிதைத் தொகுப்பு.

ஒவ்வொரு கணமும்

சுகதேவ்

வெளியீடு: நோஷன் பிரஸ்

சேத்துப்பட்டு, சென்னை - 31

ரூ 170/-