இறையன்புவின் அவ்வுலகம் நாவலை முன்வைத்து

பூமியில் மனித இருப்பு, நினைவுகளின் வழியே கட்டமைக்கப்படுகிறது. கடந்த காலம் முடிவற்ற நினைவுகளின்மூலம் மீட்டுருவாக்கப்படும்போது ஒவ்வொருவரின் மனமும் உருவாக்கிடும் மனப்பதிவுகள், அளவற்றவை. தனிமனிதப் பிரக்ஞை இழப்பு ஏற்படும்போது, அனிச்சையாக உடலின் இயக்கம் நடைபெற்றாலும், இருந்தும் இல்லாதநிலை ஏற்படுகிறது. சுய விழிப்புணர்வின் ஆளுகையே மனிதச் செயல்பாடுகளுக்கு ஆதாரம். மனித இயக்கம் என்ற அறிதல், உடலில் உயிர் இருக்கும் வரைதான். மூக்கின் வழியே வெளியேறும் மூச்சு திடீரென நின்றுவிட்டால், உடலில் தன்மை மாறிச் சிதலமடையத் தொடங்குகிறது. அதுவரை ‘தான்’ என்ற முனைப்பினுக்கு ஆதாரமாக விளங்கிய உடலின் இயக்கமற்ற தன்மை காரணமாக, அந்நிகழ்வு சாவு அல்லது இறப்பு எனப்படுகிறது.

iraiyanbu novelதமிழில் செத்தவரைக் காலமானார் என்ற குறிப்பிடும் வழக்கமுள்ளது. அகாலமானார் என்ற சொல், காலத்திற்கும் மனிதனுக்கும் இடையிலான நெருக்கத்தைக் குறிக்கிறது. இயற்கையின் அங்கமான மனிதன் மீண்டும் இயற்கைக்குள் ஐக்கியமாகிறான் என்பதுதான் மரணம் என்று சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டியுள்ளது. மனிதன், காலந்தோறும் பூமியில் நிறுவியவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் மரணம் பற்றிய இலக்கியப் பதிவுகள், சங்ககாலம் முதலாகவே தமிழில் காணப்படுகின்றன. தூங்குவது போலச் சாக்காடு என இறப்பினை முன்வைத்த வள்ளுவர், சக்ரவாளக் கோட்டம் எனத் தனியாகச் சுடுகாட்டை முன்வைத்து மணிமேகலைக் காப்பியத்தில் கதைத்திட்ட சீத்தலைச் சாத்தனார், செத்த பிணத்தைத் தூக்கும் இனிச் சாகும் பிணங்கள் என்ற பட்டினத்தார் எனத் தொடரும் தமிழர் மரபில் இறப்பைப் பற்றிய பேச்சுகள் கணிசமாகப் பதிவாகியுள்ளன.

நவீனப் புனைவிலக்கியத்தைப் பொருத்தவரையில் மரணத்தை முன்வைத்துப் புனையப்பட்டுள்ள சிறுகதைகளுடன் ஒப்பிடும்போது, நாவல்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. எழுபதுகளின் நடுவில் சம்பத் எழுதிய ‘இடைவெளி’ நாவல், மரணத்தைப் பேசுபொருளாகக் கொண்டிருந்தது. அதற்குப் பின்னர் மரணத்தின் பின்புலத்தில் மனிதர்களுக்கும் இறப்பினுக்கும் இடையிலான தொடர்பினைத் தத்துவார்த்த அடிப்படையில் புனைவாகக் கட்டமைத்து வெ. இறையன்பு எழுதியுள்ள ‘சாகாவரம்’, ‘அவ்வுலகம்’ ஆகிய இரு நாவல்களும் கவனத்திற்குரியன. நெடிய மனித வாழ்க்கையின் பகுதியாக அல்லது நிறைவாக மரணத்தின் இடத்தைக் கதையாடலின்மூலம் கண்டறிந்திட முயலும் இறையன்பு உருவாக்கியுள்ள பேச்சுகளும், புனைவுகளும் காத்திரமானவை.

உலகில் இருப்பு நிலையானது என்ற நம்பிக்கையின் அபத்தம் பற்றி அறியாமலே ஒவ்வொருவரும் தனக்குள் உருவாக்கிக்கொள்ளும் ஸ்திரத்தன்மை வலுவாக உள்ளது. எந்தவொரு கணமும் எதிர்கொள்வதற்கான சாத்தியப்பாட்டுடன் மரணத்துடனான கண்ணாமூச்சி தொடர்கிறது. சுருங்கக்கூறின், இருத்தல் என்பதே ‘இடைவெளியில்தான்.  மரணத்தைவிட மரணபயம்தான் பிரச்சினை. எந்நேரத்தில் மரணம் நிகழுமோ, தன்னுடைய மூச்சு நின்றுவிடுமோ என்று பயப்படுகிறவர்கள் எதிர்கொள்கிற துயரம் கொடுமையானது. மரணபயத்தின் காரணமாகத் தற்கொலை செய்து கொள்கிறவர்கள்கூட உண்டு. சமூக வாழ்க்கையின் மீது சலிப்பு, வெறுப்பு, கசப்படைகிற சுயநலவாதிகள், ஏதோ ஒருவழியில் மரணத்தைத் தழுவிட முயலுகின்றனர்.

பிறப்பினுக்கு முன்னரும், மரணத்திற்குப் பின்னரும் நிலவும் இடைவெளியை எப்படிப் புரிந்துகொள்வது? இரு வேறு உலகங்கள் என்ற நிலைப்பாட்டில், புவியுலகு என்ற புரிதலுக்கு மாற்றாக அவ்வுலகம் என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்டதா? அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்ற வள்ளுவரின் கூற்று, முக்கியமானது. திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும், பிற்காலத்திய அறநூல்களும் மனிதர்களை நெறிப்படுத்த அவ்வுலகம் என்ற கோட்பாட்டை முன்வைத்துப் பேச்சுகளை உருவாக்கிட முயன்றுள்ளன. அவ்வுலகம் என்ற ஒற்றைச் சொல்லில் பொதிந்திருக்கும் கருத்தியலின் மீதான ஈடுபாட்டின் காரணமாக இறையன்பு, பல்வேறு கதைகளின்மூலம் அவ்வுலகம் நோக்கிப் பயணித்துள்ளார். இவ்வுலக வாழ்க்கையில் வாழ்ந்தபோது, அன்றாடம் எதிர்கொண்ட பிரச்சினைகள், அவ்வுலகம் என்ற புனைவிலும் தொடர்ந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் பின்புலத்தில் இறையன்பு, அவ்வுலகம் கதையாடலை விவரித்துள்ளார். மரணம் நிச்சயம் என்ற நிலையில், இவ்வுலக வாழ்க்கையை எங்ஙனம் வாழ்ந்திடுவது என்ற கேள்விதான் அவ்வுலகம் நாவலின் மையம். த்ரிவிக்ரமன் என்ற கதைமாந்தரை முன்வைத்துக் கதை சொல்லப்பட்டாலும், பல்வேறுபட்ட மனிதர்களின் குண இயல்புகளும், பண்புகளும் நாவலில் பதிவாகியுள்ளன.

இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையின் பேராற்றலுடன் இசைந்து இயங்குதல், எல்லா உயிரினங்களின் மரபணுவிலும் பொதிந்துள்ளது. இந்நிலைக்கு மனிதனும் விதிவிலக்கு அல்ல. இயற்கையின் மீது ஏதோவொரு நிலையில் ஆளுகை செலுத்தும் ஆற்றல்மிக்க மனிதன், தனது அடையாளம் அல்லது இருப்பு குறித்து மிகவும் அக்கறை கொள்கிறான். எந்தவொரு நொடியிலும் தன்மீது மரணத்தின் நிழல் பற்றிப் படர்வதற்கான சாத்தியமுண்டு என்பதை நன்கறிந்தும், காலந்தோறும் மரணத்தை வெல்வது பற்றியும், மரணத்திற்குப் பின்னர் மனிதநிலை குறித்தும் தீவிரமாக யோசித்துக்கொண்டேயிருக்கிறான்.

மரணமற்ற நிலை, இயற்கைக்கு முரணானது என்ற முடிவை ஏற்க மறுத்து, அல்லது மறந்து சக மனிதர்கள்மீது செலுத்துகிற வன்முறை, ரத்தக் கவிச்சியுடன் வரலாற்றின் பக்கங்களில் பதிவாகியுள்ளது. சரி, போகட்டும். மரணத்திற்குப் பின்னர் மனித உயிர் எங்கே போகிறது? இதுவரை பூமியில் இறந்துபோன கோடிக்கணக்கான மனித உயிர்கள் எங்கே உறைந்துள்ளன? ‘ஒருக்கால் விண்ணுலகில்’ என்ற புனைவு, பலருக்கு அமைதியைத் தருகிறது. இறப்பினுக்குப் பின்னர் மனித உயிர்கள் தங்கியிருக்கும் இடம் பற்றி எல்லா மதங்களும் தொடர்ந்து முடிவற்ற புனைவுகளைக் கட்டமைத்துக் கொண்டேயிருக்கின்றன.

மரணத்திற்குப் பின்னர் செல்லவிருக்கிற சொர்க்கம் அல்லது நரகம் குறித்த கற்பனைச் சித்திரிப்புடன், உடல்களை வாட்டி, புலன்களை ஒடுக்கி, எப்பொழுதும் குற்ற மனதுடன் வதைக்குள்ளாக்கி, இவ்வுலக வாழ்க்கையின் கொண்டாட்டங்களை மறுக்கிற பணியை மதங்கள், கச்சிதமாக நிறைவேற்றுகின்றன. தொடர்ந்து மரணபீதியில் மனித உயிர்களை ஆழ்த்தி, இறைவன் பற்றிய கருத்தை வலியுறுத்துவதன்மூலம், மத நிறுவனங்கள் சமூக மேலாதிக்கம் பெறுகின்றன. அவ்வளவு எளிதில் மரணத்தை ஏற்றுக்கொள்ள இயலாத மனித மனம் புனைந்த ‘அவ்வுலகு’ என்ற கருத்தியல் சுவாரசியமானது. அவ்வுலகம் என்று ஒரு உலகம் இருக்கிறதா? யோசிக்க வேண்டியுள்ளது. ‘இறுதித் தீர்ப்பு நாளின்போது நீங்கள் செய்த பாவங்களுக்காக பதில் சொல்ல வேண்டியிருக்க வேண்டும்’ என்று அச்சுறுத்துகிற தீர்க்கதரிசிகள், கடவுளை முன்னிறுத்தி, சொர்க்கம், நரகம் என்ற அவ்வுலகைப் புனைந்துள்ளனர்.

இறுதியில் ஒவ்வொருவரும் மரணம் என்ற வாயிலின் வழியாகப் பயணித்துச் செல்லவிருக்கிற அவ்வுலகம் என்ற கருதுகோளின் பின்புலத்தில் இறையன்பு, இவ்வுலக வாழ்க்கை குறித்து ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளார். பொதுவாக மனிதர்கள், தான்தோன்றித்தனமாக எதை வேண்டுமானாலும் செய்து, அகங்காரத்துடனும், வீம்புடனும் தங்களுடைய இருப்பை வெளிப்படுத்துகின்றனர். இத்தகு சூழலில் இவ்வுலகில் வாழ்கிறபோதே சரியான நெறியைத் தேர்ந்தெடுத்து வாழ வேண்டியதன் அவசியத்தையும், மரணத்திற்குப் பின்னர் வருந்துவதால் ஒரு பயனும் இல்லை என்ற கருத்துதான் இறையன்பு கதைத்தலுக்கு ஆதாரமா? பார்க்கலாம்.

சராசரியான மனிதனுக்கு உணவு, உடை, தங்குமிடம் எனத் தேவைகள், ஒப்பீட்டளவில் குறைவு. சமூக வளர்ச்சியில், பொருளாதார ஏற்றத்தாழ்வில், நுகர்பொருள் பண்பாட்டில், எல்லாமே சந்தைக்கானதாக மாற்றப்பட்ட நிலையில், தேவைகள் அளவற்றுப் பெருகுகின்றன. விரக்தி, வறுமை, சலிப்பு, வெறுமை, பதற்றம், நாடோடித்தனம், விட்டேத்தியான நிலை, பகட்டு, மேனாமினுக்கு போன்ற அற்பமானவைகளுக்காக ஒவ்வொருவரும் துயரத்தில் உழல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பூமியில் வாழ நேர்ந்திட்ட பலரின் வாழ்க்கையில் அசலான தேர்வு என்பது இல்லாத சூழலில் எங்ஙனம் குதூகலமடைய முடியும்? எவ்வாறாயினும் நிழல் போலத் தொடரும் மரணம், எல்லோருக்கும் காத்திருக்கிறது. ஆனால் மரணமற்ற வாழ்க்கை வாழ்வதாக நம்புகிறவர்களின் மனநிலை, சவால்களை இடைவிடாமல் உற்பத்தி செய்கிறது.

மரணத்தை முன்வைத்து உலகே மாயம் என்ற மரபு வழிப்பட்ட கருத்தியலில் இறையன்புவிற்கு உடன்பாடு இல்லை; மரணத்தை முன்வைத்து மனித இருப்பின் பன்முகத் தன்மைகளை விளக்க முயன்றுள்ளார். எளிய வாழ்க்கையைச் சிக்கலாக்கிடும்வகையில் மனிதர்களின் சுயநலமும், பேராசையும் மேலோங்கியிருக்கிற காலகட்டத்தில், ஏதோவொரு ஆதாயத்துக்காகத் தங்களுடைய ஆன்மாவை இழந்திட்டவர்கள், மீண்டும் திரும்பிப் பார்க்கையில் இழந்தவை குறித்த குற்ற மனம், இடைவிடாமல் துரத்துகிறது. அவ்வுலகம் நாவலின் வழியாக இறையன்பு விவரிக்கிற சம்பவங்கள் ஒருபுறம் நம்பகத்தன்மையுடனும், இன்னொருபுறம் செயற்கையாகவும் விரிந்திருப்பது, வாசிப்பில் ஒன்றவிடாமல் செயகிறது. இவ்வுலகில் எப்படி வேண்டுமானாலும் வாழ்கிறவர்கள், அவ்வுலகில் மீண்டும் ஒரு முறை முன்னர் பழகியவர்களைச் சந்திக்க நேர்ந்தால் என்ன நடக்கும்? எப்படி அந்தச் சூழலைப் புரிந்துகொள்வார்கள்? நாவலின் விவரிப்பில் பொதிந்திருக்கிற நிறைய இடைவெளிகள், வாசிப்பில் புதிய பிரதிகளை உருவாக்குவது, கதையாடலின் தனித்துவம். மரணம் என்ற சொல் உருவாக்கும் பயபீதியைவிட நடப்பு வாழ்க்கையை எத்தகைய நெறிகளுடன் வாழ வேண்டும் என்பதுதான் இறையன்பு, நாவலில் சொல்ல விழைகிற சேதியா?

உலகம் சூன்யம் என்பது உண்மை என்றாலும், நடப்பில் அக்கருத்து வெறுமையாக இருப்பதுடன் சுவாரசியமற்றது. விண்ணுலகில் நிலைத்திருக்கும் அவ்வுலகில், இறுதியில் மனித உயிர்கள் தஞ்சமடையும் என்ற மதரீதியான சிந்தனை, மரணம் குறித்து அஞ்சும் மனித உயிர்களுக்கு ஆறுதலைத் தருகிறது. பூமியில் செய்கிற செயல்களில் பாவ புண்ணியத்திற்கேற்ப அவ்வுலகில் ‘நியாயம் கிடைக்கும் என்ற பயமும் பொதுவாக நிலவுகிறது. தவறு செய்வது மனித இயல்பு; தான் செய்த தவறுக்காக வருந்தும்போது, பாவ விமோசனம் கிடைக்கும் என்பது மதம் அளிக்கும் நம்பிக்கை. எல்லாவற்றுக்கும் பரிகாரம் உண்டு என்ற மனநிலைதான் கடந்த காலம் என்ற துயரத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியாக உள்ளது. மரணமடைந்த பின்னர் மீண்டும் ஒருக்கால் அவ்வுலகில் சந்திக்க நேரும்போது, ஏற்கெனவே பழகிய உறவினர்கள், நண்பர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்ற புனைவை இறையன்பு சுவாரசியமாகப் பதிவாக்கியுள்ளார். இப்படியெல்லாம் நடைபெறுவதற்கான சாத்தியமுண்டு என்ற நாவலின் புனைவுத்தளம், வாசகரைக் கதைக்குள் இழுக்கிறது.

அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற உயர் அலுவலரான த்ரிவிக்ரமன், மனைவியை இழந்தவர்; பிறரிடமிருந்து ஒதுங்கி வாழும் இயல்புடையவர்; புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் மிக்கவர். தனிமையில் வாழும் விக்ரமனுக்குச் சஞ்சீவி என்ற இளைஞர் துணையாக உள்ளார். அவருடன் பணியாற்றிய சுக்ரன் அவ்வப்போது வந்து நலம் விசாரித்துப் போகிறார். தன்னளவில் சுருங்கி, தானுண்டு தனது அலுவலகம் என்று ஒதுங்கி, நேர்மையுடன் வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கிற விக்ரமனின் மறு பக்கம், முரண்பாடானது.       

                நல்ல மனிதராகத் தன்னை நம்புகிற விக்ரமன், கல்லூரியில் பயிலும்போது, அவரை நேசித்த சக மாணவியான சாயாவின் நேசத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவமற்ற நிலையற்று,வறண்டிருக்கிறான். சாயா, படிக்கும்போதே அஜீத் தந்த நெருக்கடியும், குடும்பச் சூழலும் காரணமாகத் திருமணம் செய்துகொள்ள நேரிடுகிறது. கணவனின் வக்கிரமான போக்கினால், அவளுடைய குடும்ப வாழ்க்கை சிதலமடைந்தது. கணவனைப் பிரிந்து வாழ்கிற சாயா அனுப்பிய கடிதம்மூலம் தற்செயலாக ஏற்பட்ட தொடர்பு, விக்ரமனின் மனதில் காதலை உருவாக்குகிறது. வெளிப்படையாகப் பேசிடவோ, குதூகலத்துடன் இருந்திடவோ அறியாத விக்ரமன், எதையும் இயல்பாக அறிந்திடாமல், கெட்டிதட்டிப் போன மனநிலையுடையவன். மீண்டும் சாயாவுடன் தொடர்பு, அவனுடைய மனதில் மெல்லிய அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

சூழல் காரணமாகச் சாயாவுடனான தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டபோது, விக்ரமனின் மனம், பிரிவு தந்த சோகத்தினால் தத்தளிக்கிறது. பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாகக் கங்காவை வேண்டா வெறுப்பாக மணந்துகொண்ட விக்ரமன், அவளைப் புறக்கணிக்கிறான். மனுஷி என்ற நிலையில் கங்காவின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்திடாமல், தன்னலத்துடன் வாழ்கிற விக்ரமனின் நடத்தை, ஒருவகையில் கொடூரமானது. மனைவியான கங்காவை முழுக்கப் புறக்கணித்தவன், பின்னர் காலப்போக்கில் அவளை ஏற்றுக்கொள்கிறான். மகன் சத்யகாமின் துர்மரணத்திற்குப் பின்னர் அவளை வெறுத்து ஒதுக்கும் விக்ரமனின்  இன்னொரு முகம் வக்கிரமானது. அலுவலக வேலையில் உயர் பதவியில் நேர்மையுடன் பணியாற்றிய விக்ரமன், சக மனிதர்களைவிட்டு ஒதுங்கி இருந்ததுடன், தன்னைப் பற்றிய பெருமிதத்துடன் இருக்கிறார். கங்காவின் மரணத்திற்குப் பின்னர், தற்செயலாக வாசிக்கக் கிடைத்த அவளின் ‘நாட்குறிப்புகள்,’அவரைக் காலமெல்லாம் வதைக்கின்றன. இதுவரை அவர் நம்பியிருந்த ஒழுங்கு, கண்ணியம், நேர்மை போன்றவை சிதிலமடைய, மனக்குமைச்சலுடன் எஞ்சிய வாழ்க்கையை வாழ வேண்டிய நெருக்கடிக்குள்ளாகிறார். அவர் பூமியிலேயே நரகத்தில் வாழ்ந்தார் என்பதுதான் உண்மை.

மரணப் படுக்கையில் இருக்கிற விக்ரமன், ஒருவகையில் மரணத்தை எதிர்நோக்கி, ஒருவகையில் ஆவலுடன் காத்திருந்தார். உறவினர்கள் யாருடனும் எவ்விதமான தொடர்பும் இல்லாமல், தனித்திருந்த விக்ரமன், தனது மரணத்திற்குப் பின்னர் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து, சுக்ரனிடம் விரிவாகப் பேசுகிற மனநிலை, அசாதாரணமானது. உடல்நலக் குறைவின் காரணமாக மரணத்தை எதிர்நோக்கி இருந்த விக்ரமனின் மனம், கடந்தகால நினைவுகளை அசை போடுகிறது. நினைவுகளின் வழியே விரியும் வாழ்க்கைப் பரப்பில் எது சரி? எது தவறு? போன்ற கேள்விகளின் வழியே மனம் குமைகிறது. ஒருநிலையில் மனம், போதம் இழந்தநிலையில், விக்ரமன் அவ்வுலகில் பயணிக்கிறார். அங்கு அவர், எதிர்கொண்ட அனுபவங்கள் விநோதமானவை. அவ்வுலகம் என்ற கற்பனைப் பிராந்தியத்தில் மரணத்திற்குப் பின்னர் விக்ரமன் சென்று உறைகிறபோது, இப்படியெல்லாம் சம்பவங்கள் நடக்கலாம் என்ற புனைவுப் பின்புலத்தில், வாழ்க்கை குறித்த அடிப்படையான கேள்விகள், நாவலில் முன்வைக்கப்பட்டுள்ளன.

மரணப் படுக்கையில் நினைவுகள் கலங்கிடும் சூழலில், மனம் என்னவெல்லாம் கற்பிதங்களை உருவாக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு விக்ரமனின் அவ்வுலகப் பயணம். பூமியில் அவருடைய வாழ்க்கையில் குறுக்கிட்டவர்களை மீண்டும் அவ்வுலகில் சந்திக்கிறார். அப்பொழுது அவருக்குப் பேசுவதற்கு நிரம்ப விஷயங்கள் இருக்கின்றன. ஒரு புள்ளியில் நிலைத்திருக்கும் நினைவுகளின் ஊடாகக் கடந்த காலத்தில் பயணிக்கிற விக்ரமனுக்குத் தன்னையே மறுபரிசீலனைக்குள்ளாக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. இவ்வுலகின் நீட்சியாக அவ்வுலகில் மனிதர்களுடன் உறவை நீட்டிக்க முயலுவது கனவாகக் கலைந்து போகிறது. அவருடைய ஆன்மத்தேடலும், சுய விமர்சனமும் ஓர் எல்லையில் தடைபடுகின்றன. அதுதான் அவ்வுலகின் வரையறை.

அவ்வுலகில் இருக்கும்போது விக்ரமன், சந்திக்கிற மனிதர்கள் பற்றிய இறையன்புவின் விவரிப்புகள், வெறுமனே கதைகள் மட்டும் அல்ல. அதிகாரம், வீண்புகழ்ச்சி, தற்பெருமை, சுயநலம் போன்றவற்றை முக்கியமாகக் கருதி, சக மனிதர்கள் மீது வன்முறை செலுத்துகிறவர்கள் நிரம்பிய இவ்வுலகம் குறித்த விசாரணையை நாவல், இன்னொரு நிலையில் தொடங்கியுள்ளது. விக்ரமன் எதிர்கொண்ட மனிதர்கள் என்று இறையன்பு விவரித்துள்ள கதையாடல்கள், அழுத்தமானவை.

· விக்ரமுடன் கல்லூரியில் படித்த ஸ்ரீநாத், படிக்கிற காலத்தில் யாருடனும் பழகாமல், ஒதுங்கியிருந்து, சுயநலத்துடன் வாழ்ந்தவன், பெரிய வேலைக்குப் போய், நிறையச் சம்பாதிக்கிறான். அவனுடைய குடும்ப வாழ்க்கை, தோல்வியில் முடிந்தது. கல்லூரியில் படிக்கிறப்ப 108 பரிசுகள் வாங்கினேன் என்று அவ்வுலகிலும் தன்னைப் பற்றியே பீற்றிக் கொள்கிறவன், எப்பொழுதும் தற்பெருமையில் மூழ்கியிருக்கிறான். சுயமோகியான அவன், இவ்வுலகிலும் சொர்க்கத்தில் இல்லை, அவ்வுலகிலும் சொர்க்கத்தில் இல்லாமல் புழுங்கித் தவிக்கிறான் என்பதுதான் யதார்த்தம். சுவாரசியமில்லாத மனிதர்களின் வெற்றி, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை ஒருபோதும் தருவதில்லை என்ற இறையன்புவின் கணிப்பு, ஸ்ரீநாத் கதை மூலம் வெளிப்பட்டுள்ளது.

· ஆன்மீகத்தைப் போதிக்கிற உபதேசியாரின் பேச்சில் பலரும் மயங்கினர். அவரது உபதேச உரை முழுக்கப் போலியானது; வெற்று அலங்காரச் சொற்களால் நிரம்பியுள்ளது அந்த உபதேசியாரை ஞானியாகச் சித்திரித்து வைக்கப்பட்டிருந்த கட்-அவுட்டுகளும், பதாகைகளும் ஆன்மீகத்தின் பெயரில் அவர் நடத்துகிற கொள்ளையையும், திருகுதாளங்களையும் மறைத்திட உதவுகின்றன. சொந்த சாதியினரின் ஆதிக்கத்தில் பிராண்டாக முன்னிறுத்தப்படுகிற கார்ப்பரேட் சாமியாரின் போலி அருளாசி, எங்கும் பரவுகிறது. ஏற்கனவே தனக்குத் திருமணமாகிக் குழந்தை இருப்பதை மறைத்து, துறவியாக வேடமிட்டு, ஆன்மீகத்தின் பேரில் மக்களை ஏமாற்றுகிற கபட வேடதாரி, அவ்வுலகிலும் அற்பத்தனத்துடன் நடக்கிறான். வெற்று அருளுரையினால் என்ன பயன் என்ற கேள்வி தோன்றுகிறது.

· விக்ரமனின் மேலதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர் பதவியின் கித்தாப்பிலேயே இருந்து, தன்னுடைய நாற்காலியைச் சிம்மாசனம் என்று கருதி, பணியாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தார். எப்போதும் மேலதிகாரி என்ற நினைப்புடன், எல்லோரின் மீதும் வெட்டி அதிகாரம் செலுத்திடும் இயல்புடையவர். பிறரைத் துச்சமாகக் கருதி, இம்சித்து வேடிக்கை பார்க்கிற அதிகாரத்தை ருசிக்கிறவர், அவ்வுலகிலும் பொய்மையுடன் கற்பிதங்களுடன் வாழ்கிறார். போலியானவர்கள், அவ்வுலகிலும் தங்களைச் சுற்றி ஒளிவட்டம் இருப்பதாகக் கற்பிதம் செய்துகொள்வது வேடிக்கைதான்.

· விக்ரமன், தனது அலுவலகத்தில் கீழ்நிலைப் பணியாளரான சேகர், வறுமையில் வாடிய குடும்பப் பின்புலமுடையவன் என்பதை அறிந்து, அவனுக்குப் பணம் அளித்ததுடன், தன்னுடைய அறையில் உடன் தங்கிட அனுமதிக்கிறார். அவர் இல்லாதபோது அவருடைய அறைக்குப் பெண்ணை அழைத்து வந்து உறவுகொள்கிறான், சேகர். ஒட்டுண்ணியாக இருந்த சேகர், வெளியே போனதும் விக்ரமனுக்கு எதிராகப் பொய்யான குற்றங்களைச் சுமத்துவதுடன், தரக்குறைவான வேலைகளிலும் ஈடுபடுகிறான். எப்பொழுதும் துரோக மனநிலையுடன், வஞ்சனையுடன் வாழ்கிற இயல்புடைய சேகரை அவ்வுலகில் சந்திக்காமல், விக்ரமன் ஒதுங்கிப் போனார். அளவுக்கதிகமான சுயநலம் காரணமாக இவ்வுலகில் நன்றியற்று, பிறர்க்கு எப்போதும் தொல்லை தருகிற இயல்புடையவன், அவ்வுலகில் தன்னையே வெறுக்கிறவனாக மாறுவது, விநோதமானது.

· விக்ரமன் தான் முன்னர் விரும்பிய சாயாவை அவ்வுலகில் தற்செயலாகச் சந்தித்தபோது நிகழ்ந்த உரையாடல், நிறைவேறாத விருப்பங்களின் தொகுப்பாகியுள்ளது. என்னதான் சமாதானம் சொன்னாலும், அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யத் தவறியதால், விக்ரமன் அனுபவிக்கிற வதைகள், எந்த உலகிலும் ஒருபோதும் தீராதது என்பதுதான் உலக வாழ்க்கை கற்றுத் தருகிற பாடம்.

· நட்பு வட்டாரத்தில் பெருந்தன்மையுடனும், சமூக விஷயங்களில் அக்கறையுடனும், படிப்பில் கெட்டிக்காரனாகவும் விளங்கிய சுதீரின் நட்பு, விக்ரமனுக்கு முக்கியமானது. கல்லூரிப் பருவத்தில் போராட்டக் குணத்துடன் திகழ்ந்த சுதீர், பணியாற்றிய இடத்தில் நடைபெற்ற அநியாயங்களுக்கு எதிராகப் போராடியதால், இளம் வயதிலே கொல்லப்பட்டு, அவ்வுலகம் வந்துள்ளவனைச் சந்தித்து விக்ரமன் உரையாடுகிறார். அன்றையக் கல்லூரி மாணவர் வாழ்க்கைக்கும், இன்றைய மின்னணு உலகில் சஞ்சரிக்கிற இளைய தலைமுறையினருக்கும் இடையிலான வேறுபாடுகளை முன்வைத்த பேச்சுகள், அவ்வுலகில் காற்றில் மிதக்கின்றன.

· விக்ரமனுடன் படித்த ஜெயராமன் என்ற மாணவன், கல்பனா என்ற மாணவி மீது காதல்வயப்பட்டு, அது நிறைவேறாத காரணத்தினால், தூக்கில் தொங்கி, தற்கொலை செய்துகொண்டான். அவ்வுலகில் விக்ரமன், அவனைச் சந்தித்தபோது, தற்கொலை, காதல், குடும்பம் பற்றிய பேச்சுகள், கண நேரத்தில் எடுத்த முடிவின் வலியைச் சொல்கின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என்ற கேள்வியின் மூலம் இவ்வுலகில் நிகழ்ந்திடும் வதைகளின் மறுபக்கத்தைக் கண்டறியலாம்.

· விக்ரமன், தனது மனைவியான கங்காவை அவ்வுலகில் சந்தித்து, இவ்வுலகில் அவர் நடந்துகொண்ட முறையற்ற செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறார். வாழும் காலத்தில் தன்னுடன் வாழ்கிற பெண்ணைப் புரிந்து கொள்ளாமல், தட்டையாக இருந்து, சித்திரவதை செய்துவிட்டு, அவளுடைய மரணத்திற்குப் பின்னர் வருந்துவதால் என்ன பயன்? காலங்கடந்த பின்னர் எதுவும் செய்ய இயலாது என்பதுதான் உண்மை. “வாழ்வில் இழந்த ஒரு நொடியைக்கூட திரும்பப்பெற முடியாதுன்னு நாம உணராமல்தான் வாழ்க்கையைக் கழிச்சிடறோம்” என்று கங்கா சொல்வது எல்லா உலகிற்கும் பொருந்தும்.

பூமியில் ஒவ்வொருவரும் செய்கிற செயல்களின் நல்லதும் கெட்டதும் குறித்த விசாரணையை, ஒவ்வொருவரும் தன்னுடைய மனஅளவில் இவ்வுலகில் தொடங்கலாம் என்று நாவல் மூலம் இறையன்பு சொல்ல முயன்றுள்ளார். நடப்பு வாழ்க்கையில் அவரவர் விருப்பு வெறுப்பு அடிப்படையில் சக உயிர்கள் மீது செலுத்தும் அன்பு, வன்முறை அளவற்றுப் பெருகுகின்றன. மனசாட்சி குறித்து அக்கறையற்று, ‘குற்றமனம்’ பற்றி அறியாமல், இடைவிடாமல் வன்முறை நிகழ்த்துகிறவன்கூட, ஒருநிலையில் தளர்ச்சியடைகின்றான். பிணி, மூப்பு குறித்துப் பொருட்படுத்தாதவன்கூட சாக்காடு வரும்வேளையில் பயத்துடன் மண்டியிடுகிறான். மரணபயத்தை வெளிப்படும் விழிகள், எப்பொழுதும் துயரத்தில் சலனமற்று உறைந்துள்ளன. தான் வாழும் காலத்தில், பிறரைக் கொடுமைப்படுத்தி வாழ்கிறவன் இறுதிக்காலத்தில் - மரணப் படுக்கை - எதிர்கொள்ள நேரிடுகிற கேள்விகள், அவ்வுலகிலும் அவனை நோக்கிக் கேட்கப்படலாம்

இறையன்புவிற்கு மரணம் பற்றிய துல்லியமான புரிதல்கள் உள்ளன. புத்தரின் ‘சூன்யம்’ பற்றிய புரிதலுடன் மரணத்தை முன்வைத்து இறையன்பு எழுதியுள்ள அவ்வுலகம் நாவல், மரணம் பற்றிய மறுபேச்சுக்களை உருவாக்குகிறது. ‘பிறப்பு’ களைக் கொண்டாடும் மனித மனம், ‘இறப்பு’ பற்றி எண்ணிப் பார்க்கவே பீதியடைகிறது. எல்லாம் சரியாக இருப்பதாக மனித மனம் நம்புகிற வேளையில், திடீரென எதிர்கொள்ள நேரிடும் மரண அவஸ்தை, மனதை நொறுக்குகிறது. மரணபயம் தொற்றிக்கொள்ளும்போது, வெறுமையும், துயரமும் ஆளை உலுக்குகின்றன. மரணம் என்பது மனித வாழ்க்கையின் ஒரு கட்டம் என்ற புரிதலை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை இறையன்பு நாவல்களின் வழியே உருவாக்கிட முயன்றுள்ளார். இதுவரை பேசாப்பொருளாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த மரணத்தை முன்வைத்துப் புனைவைக் கட்டமைத்துள்ள இறையன்புவின் நோக்கம் நேர்மறையானது. அன்றாட வாழ்க்கையில் மரணத்தின் குரலைக் கேட்க முடிந்தவர்கள் பாக்கியவான்கள். ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்ற திருவள்ளுவரின் வாக்கினுக்குப் பின்னர் பொதிந்துள்ள கதையாடலை உற்றுக் கேட்க, பார்க்க வேண்டிய நேரமிது.

உலகம் என்பது பண்டைத் தமிழர்களைப் பொருத்தவரையில், பல்வேறு உலகங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் அவரவர் உருவாக்கிய உலகில் பாதுகாப்பாக வாழ்வதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். பூமிப் பந்தில் மகத்தான மனித வாழ்க்கையைப் புரிந்திடாமல், அற்பக் காரணங்களுக்காகச் சக மனிதர்கள் மீது வெறுப்பையும், கசப்பையும் உமிழ்ந்து, தங்களையே சீரழித்துக் கொள்கிற மனிதர்கள், ஒருவகையில் தங்களையே ஏமாற்றிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் ஒரு நாள், கடந்த காலத்தில் செய்த செயல்களைக் குறித்து நினைக்கையில், மனதில் தோன்றும் எண்ணங்கள், அவ்வுலகம் குறித்த பேச்சுகளின் தொடக்கம். பூமியிலே ‘அவ்வுலகம்’ இருக்கிறது என்பது நாவல் தருகிற முக்கியமான சேதி. பூமியில் மனித இருப்பு, மரணம், மரணபயம் குறித்து கருத்தியல்ரீதியாக எழுதப்பட்டுள்ள இறையன்புவின் அவ்வுலகம் நாவல், வாசிப்பின் வழியாக ஒவ்வொருவருக்குள்ளும் இடைவிடாத கேள்விகளை எழுப்புகிறது; நுட்பமாகச் செயலாற்றுகிறது; முடிவற்ற விவாதங்களுக்கு இட்டுச் செல்கிறது. சம கால வாழ்க்கையில் மரணத்தை எப்படி நேர்மறையாக அணுக வேண்டும் என்ற புரிதலை வாசிப்பில் ஏற்படுத்துவதுகூட அவ்வுலகம் நாவல் எழுதப்பட்டதன் நோக்கம் என்று சொல்ல முடியும்.