பல்லாயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்களை அழித்தொழிக்க இறுதி முடிவு எடுத்துவிட்ட சிங்கள ராணுவம் - அதை சர்வதேசப் பார்வையிலிருந்து திசை திருப்ப நாடகமாடுகிறது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், முன்னணி தளபதிகள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்றும், போர் முடிந்து விட்டது என்றும் அறிவித்து, சர்வதேச தலையீட்டை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். அதன் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாபா செல்வராசா இதை அறிவித்துள்ளார். ஆனால் பல்வேறு முன்னணி தளபதிகள், வீரமரணத்தை தழுவியிருக்கலாம். இந்தப் போராளிகள் விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிரை இழக்க உறுதி கொண்டு இயக்கத்துக்கு வந்தவர்கள். இதுவரை ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் உயிரைத் தந்து மாவீரர்களாகியுள்ளனர். போராட்டம் உறுதியாகத் தொடருகிறது. இப்போது முதன்மையாகக் கவலைக் கொள்ள வேண்டிய பிரச்சினை, சிங்கள ராணுவத்திடம் சிக்கியுள்ள மக்களின் உயிரைக் காப்பாற்றுவதுதான். 25000 பேர் மருந்தின்றி காயம் பட்டு, மரணத்தை சந்திக்கிறார்கள். 30000 மக்கள் எரித்துக் கொல்லப்படவிருக்கிறார்கள். உலக வரலாற்றில் நிகழ்ந்திடாத இந்தக் கொடுமையை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்தவில்லை.

முன்னணித் தளபதிகள் வீரமரணத்தைத் தழுவியதால் போராட்டம் ஓய்ந்துவிடப் போவதில்லை. எந்த ஒரு விடுதலைப் போராட்டமும் அதற்கான நியாயங்கள் இருக்கும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதுதான் வரலாறு கூறும் உண்மை. ஈழத்தில் நடக்கும் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போர் இதற்காக நிலை குலைந்து விடாமல் உறுதியான ஆதரவினை தொடர்ந்து வழங்குவதே இப்போதுள்ள கடமை. தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன், ஏற்கனவே உளவு நிறுவனங்களால் பலமுறை சாகடிக்கப்பட்டவர் தான்.

1989 ஜூலை 24 ஆம் தேதி பிரபாகரன், மற்றொரு விடுதலைபுலி தளபதி மாத்தையாவால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற வதந்தியை பரப்பினார்கள். ‘இந்து’ நாளேடும் செய்தி வெளியிட்டது. 2005 ஆம் ஆண்டு ஜன. 8 ஆம் தேதி சுனாமி பேரலையில் பிரபாகரன் இழுத்துச் செல்லப் பட்டு, மரணமடைந்துவிட்டதாக இலங்கை அரசு வானொலி அறிவித்தது. ‘இந்து’ நாளேடு செய்தி வெளியிட்டதோடு, தலையங்கமும் தீட்டியது. பிரபாகரனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது என்றே அப்போதும் கூறினார்கள்.

இப்போது மீண்டும் அதே புரளியை பார்ப்பன ஆங்கில ஊடகங்கள் மட்டுமின்றி, இந்திய அரசும் சேர்ந்து பரப்புகிறது. மானங்கெட்ட இந்த கும்பல்கள் மீண்டும் மூக்கறுபட்டுள்ளது. மீண்டும் புலிகள் இயக்கம் உயிர்த்தெழும்; விடுதலைப் போர் மேலும் தீவிரமாகத் தொடங்கும்; இது காலம் உணர்த்தப் போகும் உண்மை!

Pin It