‘சாதிக் கொடுமைகளும் அநீதிகளும், சாதிக் கருவமும் மிகுந்திருந்த காலத்தில் அடக்கப்பட்டிருந்த சாதியினர் அவற்றை எதிர்த்துப் பல்வேறு விதங்களில் போராடியுள்ளனர்.  இப்போராட்டங்களில் சாதி உயர்வு தாழ்வுகளை நிலைநாட்டப் பயன்படும் கருத்துக்களையும் தத்துவங்களையும் எதிர்த்துப் பல கருத்துக்களையும் தத்துவங்களையும் உருவாக்கினர்.

‘இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் சாதி சமத்துவத்தை விளக்கும் பல நூல்கள் தோன்றின.  சாதி அமைப்பு முறையில் தாழ்ந்தவர்கள் என்று கருதப்பட்டவர்களைப் பற்றி இவை எழுதப்பட்டன’.  (தமிழ் நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்’ பேராசிரியர்.  நா. வானமாமலை, 1980, மக்கள் வெளியீடு).

மேற்கண்ட பேராசிரியர்.  நா.வா.வின் கூற்றுக்கு உதாரணமாகக் கேரள இலக்கியத்திலிருந்து சில உதாரணங்களை எடுத்துக்காட்ட முடியும்.

கேரளத்தில் ஸ்ரீ நாராயணகுரு, குமரன் ஆசான், கவிஞர் பண்டிட் கருப்பன், சகோதரன் அய்யப்பன், தகழி சிவசங்கரபிள்ளை போன்றவர்களின் கலை- இலக்கியப் படைப்புகளில் மேற்சுட்டிய கருத்துக்கள் அதிகமாகக் காணக்கிடைக்கின்றன.

‘திருவிதாங்கூர் ஸ்டேட் மானுவலில் இந்து சமூக அமைப்புக்கு ஒரு வரையறை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்துச் சமூக அமைப்பு என்பது பிராமண நில உடைமையாளர்களையும், சத்திரிய நிலக்காவலர்களையும், சூத்திர உழைப்பாளிகளையும் கொண்ட ஒரு சமூக அமைப்பு என்று அதில் திரு. நாகம் ஐயா தெளிவாகக் குறிப்பிடுகின்றார்’ (பக்கம் - 36, ‘தெற்கிலிருந்து’ - பொன்னீலன், மக்கள் வெளியீடு, 2001)

பூமியிலுள்ள அனைத்துமே பிராமணருக்குச் சொந்தம் என்ற மனுதர்மக் கோட்பாட்டுக்கு இந்த வரையறை ஒத்ததாக இருக்கிறது (Law of manuel Part - 1, 99, 89, 100, 9R, 91).  ஒரு காலத்தில் இந்தியாவில் எல்லா இடங்களிலுமே இந்த மாதிரி, இந்து சமூக அமைப்பு இருந்ததாகவும், பல்வேறு சூழ்நிலை மாற்றங்களினால் மற்ற இடங்களில் படிப்படியாக இது அழிந்துவிட்டதாகவும், திரு. நாகம் அய்யா கூறிச் செல்கிறார்.

கேரளத்திலுள்ள பண்பாட்டுப் போராளிகளில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர், ஸ்ரீ நாராயண குரு அவர்கள். தென்னை மரமேறிப் பிழைத்துவரும் ஈழவர் குலத்தில் பிறந்தவர், இவர்.  ஒரு குறிப்பிட்டக் காலம் வரையில் கேரளத்தில், ஈழவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே கருதப்பட்டு வந்தனர்.  இம் மக்களின் முக்கியத் தொழில்கள் இறக்குவதும், மதுக்காய்ச்சுவதும் ஆகும். இவர்களில் பெரும் பான்மையினர் ஏழைகளும், கல்வியறிவு அற்றவர் களாகவும் இருந்தார்கள். பல சாதிக் கொடுமை களுக்கும், வரிக் கொடுமைகளுக்கும் ஆளாகிக் கொண்டிருந்ததை எதிர்த்துக்கிளம்பிய பண்பாட்டுப் போராளி ஸ்ரீ நாராயண குரு அவர்கள்.

குரு நிரம்பக் கவிதைகள் இயற்றி இருக்கிறார்.  அனைத்தும் வருணாசிரமத்தின் கீழ், சாதிச் சிந்தனைக்குள் சிக்கிக்கிடக்கும் ஒவ்வொரு மனிதனும் பிற மனிதர் களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை மையமாகக் கொண்டே எழுதப்பட்டன.  அதை அடிப்படையாகக் கொண்ட குருவின் சில வாசகர்கள் இப்பூமியில் எக்காலத்தும் நிலைத்து நிற்கக் கூடியவையாக விளங்குகின்றன.

சாதிக் கொடுமை உச்சக்கட்டத்திலிருந்து கொண்டிருந்த வேளையில் குருவின் கீழ்க்கண்ட வாசகங்கள் கேரளத்திலுள்ள மூலை- முடுக்குகளி லெல்லாம் ஓங்கி ஒலித்தன.

(உ.ம்) ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் மனிதனுக்கு’; ‘மதம்’ ஏதாயாலும் மனுசன் நன்னாயால் மதி’ (ஒருவர் எந்தச் சாதியைச் சேர்ந்த வராக இருந்தாலும் சரி, அவர் நல்லவராக நடந்து கொண்டால் போதும்).

காட்டிலும், மேட்டிலும், சேற்றிலும் வேலை செய்யும் தலித் சமூகத்தினரும் (பள்ளர், பறையர், புலையர், சாம்பவர், முக்குவர், ஈழவர்) பூலோகத்தில் தேவர்களைப்போல் உலாவிக் கொண்டிருக்கும் நம்பூதிரி, நாயர் குலத்தவர்களும் ஒரே குலம்தான் என்று, எந்தவொரு மனிதராலும் பேச இயலாதக் காலகட்டம் அது என்பதை நாம் இந்த வேளையில் நினைவில் கொள்ள வேண்டும்.

இதே மாதிரியான ஒரு பண்பாட்டுப் போராளி தான் கவிஞர் பண்டிட் கருப்பன் அவர்களும்.  கொச்சி சமஸ்தானத்தில் தீண்டாமைக் கொடுமை உச்சத்தில் இருந்த வேளையில், தன் கலை- இலக்கிய ஆயுதம் கொண்டு அவற்றுக்கு எதிராக மூர்க்கத் தனமாகப் போராடிய பண்பாட்டுப் போராளி, கவிஞர் பண்டிட் கருப்பன் அவர்கள்.

முக்குவர் குலத்தில் பிறந்து, தனக்கு இருந்த ஓரளவு வசதியைப் பயன்படுத்திக் கல்வி கற்றுக் கொண்டதுடன், தன் கலைத்திறனையும் வளர்த்துக் கொண்டவர், இவர். ராஜவம்சத்தினரின் மொழியான சமஸ்கிருதத்தையும், தாய்மொழியான மலையாளத்தையும், ஆங்கில மொழியையும் கற்றுக்கொண்டவர்.  அக்கால சமூக அவலங்களைக் கிராமியக் கலை- இலக்கிய வடிவங்களின் வழியாக நாகரீக மனிதர் களுக்கும் கிராமத்தான்களுக்கும் எடுத்துக் காட்டியவர், பண்டிட் கருப்பன் அவர்கள்.

உதாரணத்திற்கு இவருடைய ‘ஜாதிக்கும்மி’ கவிதை நூலிலிருந்து சில வரிகளைக் காண்போம்.

‘பசுக்களை அடித்தாலோ

அவைகளின் சொந்தக்காரன்

அதைத் தடுத்திடுவான்!

புலையரை அடித்தாலோ

கேள்வி கேட்பார் எவருமில்லை!

அவன் சாலையில் இறங்கினால்

ஓட ஓடத் துரத்துகிறார்கள்;

பயந்து, பக்கத்திலுள்ள

நீரோடையில் இறங்கினாலோ

அவன் மீது கல்லெறிகிறார்கள்.’

அக்காலத்தில், கொச்சி சமஸ்தானத்தில் தாழ்த்தப் பட்ட மக்கள் சமூகத்தில் அனுபவித்துக் கொண் டிருந்த சாதிக்கொடுமையினை பண்டிட் கருப்பன் நம் கண்முன் வரைந்து காட்டுகிறார்.

அதே நூலில் இன்னொரு காட்சியினையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறார், பண்டிட் கருப்பன்.

அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

‘புலையர் சாதியைச் சேர்ந்த ஒருவரும், ஒரு பிராமணரும் ஓர் ஓடத்தில் ஒன்றாக அமர்ந்து, ஏரியில் பயணம் செய்கிறார்கள்.  ஓடம் அக்கரையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.  திடீரென்று பயங்கரக் காற்றும், மழையும் வரவே, ஓடம் தடுமாறி தண்ணீரில் கவிழ்கிறது.

ஓடத்தில் பயணம் செய்த இருவருக்கும் நீந்தத் தெரியாது. முதலில் பிராமணர் தண்ணீருக்குள் விழுகிறார்.  தான் சாவது உறுதி எனத் தெரிந்த அவர், மூழ்கிக் கொண்டிருக்கும் போது, கை, கால்களைப் போட்டு தண்ணீரைக் கலக்குகிறார். அடியில் படிந் திருந்த சேறு தண்ணீரோடு கலந்து, அசிங்கமாகுகிறது.  மூழ்கிக் கொண்டிருக்கும் ஓடத்தின், ஒரு விளிம்பைப் பிடித்துக் கொண்டிருந்த புலையர், அர்த்தம் புரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.

அப்போது பிராமணர் சொல்கிறார்:

“நீ, சாதியில் தாழ்ந்தவன்.  எனவே நான் குடித்துச் சாகும் நல்ல தண்ணீரை நீ, குடித்துச் சாகவேண்டாம்! நீ, கலங்கிய சேற்று நீரைக் குடித்துச் செத்தால் போதும்” என்று சொல்லியவாறு பிராமணர் தண்ணீரில் மூழ்குகிறார்.  கடைசியில் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து போகிறார்கள்.

இது போக ‘புலையர்’ என்ற தலைப்பிலேயே ஒரு கவிதை இயற்றி இருக்கிறார், பண்டிட் கருப்பன்.  அதில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்படுவதையும், தசையுருக அவர்கள் காட்டிலும் மேட்டிலும் படும் கஷ்டங்களை எடுத்துக் காட்டுகிறார்.

சாதியமைப்பையும், மனுநீதியின் வழிகாட்டுதலில் வருணாசிரம அமைப்பைக் கட்டிக் காக்கும் நிலவுடைமை அமைப்பையும், பண்டிட் கருப்பன் தன் ‘பாலா கலேசம்’ என்ற நாடகத்தின் மூலம் கடுமையாக விமர்சிக்கிறார்.

அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

‘கொச்சி மன்னர் ஆண்டு கொண்டிருக்கும் கொச்சி சமஸ்தானம் கால வளர்ச்சியை ஒட்டி மாற வேண்டும்; வழக்கத்திலிருக்கும் தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க சட்டம் கொண்டுவர வேண்டும்’ என்றெல்லாம் பேசும் இந்த நாடகத்தில் கீழ்க்கண்டவாறு ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, தாழ்த்தப்பட்டக் குலத்தைச் சேர்ந்த புலையர் ஒருவர் ஒரு பிராமணரைத் தொட்டுவிட்டார் என்ற காரணத்திற்காக வேண்டி, அந்த ஊரைச் சேர்ந்த தம்பிரான்களும் பிராமணர்களும் ஒன்று கூடி, அந்தத் தாழ்த்தப்பட்டவரைப் போட்டு நையப் புடைக் கிறார்கள்.  இந்தச் சம்பவம் அந்தப் பிராந்தியத்தில் பெரிய பிரச்சினையாகி, நியாயாதிபன்மார்கள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.

விதி கீழ்க்கண்டவாறு அமைகிறது.

புலையரைப் போட்டு அடித்த பிராமணர்களில் சிலரையும், தம்பிரான்களில் சிலரையும் நாடுகடத்த வேண்டும்; சிலரைத் தூக்கிலேற்ற வேண்டும் என, நியாயாதிபன்மார் தீர்ப்பு அளிக்கிறார்கள்.

இந்த நாடகம் அன்று, ஆதிக்கச் சாதியினரின் கோபத்தைக் கிளறியது.

அவர்கள் சொன்னார்கள்:

மன்னர் ஆண்டு கொண்டிருக்கும் நாட்டில் இம்மாதிரி கொடுமைகள் நடைபெறுவதாக எடுத்துக் காட்டுவதை அனுமதிக்கக்கூடாது! தீண்டாமை என்பது, நம் நாட்டில் ஆண்டாண்டுக் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் ஓர் ஆசாரம் ஆகும்.  இது போக, என்ன குற்றம் செய்தாலும் சரி, பிராமணச் சாதியினருக்குத் தூக்குத்தண்டனை வழங்கக்கூடாது அது, நாடகமாக இருந்தாலும் கூட!

இப்படி, அவரது நாடகத்திற்கு எதிராக பல எதிர்ப்புகள் கிளம்பின.

இவரது ‘ஜாதிக்கும்மி’ கவிதையில் ஸ்ரீ சங்கராச்சாரியாரிடம் காணப்படும் சாதியுணர்வை எடுத்துக்காட்டும் பகுதி ஒன்று கட்டமைக்கப் பட்டிருக்கிறது.

அக்கவிதையின் உள்ளடக்கம் பின்வருமாறு:

ஸ்ரீ சங்கராச்சாரியார் கங்கை நதியில் நீராடி விட்டு, காசிநாதனைக் கும்பிடுவதற்காக வேண்டிச் செல்கிறார்.  செல்லும் வேளையில் அவர் கண்ணெதிரே பறையர் குலத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் ஜோடியாக வருகிறார்கள்.

சங்கரர் கேட்கிறார்: “பிராமணனாகிய நான் வருவது, உங்கள் கண்களுக்குத் தெரியலையா? என் உடம்பைத் தொட்டுவிடாதீர்கள்; விலகிச் செல்லுங்கள்” என.

உடனே, அதைக் கேட்ட ஆண், தன் மனைவி யிடம் அவர் பேசியதன் பொருளை விளக்கிச் சொல்லிவிட்டு, சங்கராச்சாரியாருக்குப் பதில் சொல்கிறார்:

‘சாமீ...

நாமெல்லாம் மாடும், மரமும் இல்லை!

மனிதப் பிறவிகள்...

இந்த மாதிரிக் கண்ணோட்டம் உள்ளவனே

நல்ல சாதிக்காரன்’ என்று.

பின், தன் சாதிப் பெருமையை எடுத்துக் காட்டி சங்கரர் அதைக் கண்டித்துப் பேசுகிறார்.

உடனே தாழ்த்தப்பட்ட மனிதர் கேட்கிறார்:

‘சாமீ...

ரெண்டுபேரும் சமூகத்தில்

சேவை புரிபவர்கள் தானே?

பிறகு ஏன், நீங்கள் மனிதகுலத்தை

இப்படி வேறுபடுத்திப் பேசுகிறீர்கள்?’

இந்த உரையாடல் இவ்வாறு நீண்டுகொண்டே போகிறது.

குமரன் ஆசானின் படைப்புகள் பெரும்பாலும் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்து நெரிந்து கொண் டிருக்கும் தலித் மக்களின் அவலங்களையும், பெண்கள் படும் கஷ்டங்களைப் பற்றியும், அதிகமாகப் பேசுகின்றன.

அவரது, ‘துராவஸ்தை’ப் படைப்பை அன்றையக் காலகட்டத்தின் ஒரு புரட்சிகரமான படைப்பு என்று கூடச் சொல்லலாம்!

நம்பூதிரிக்குலத்தைச் சேர்ந்த இளம் பெண் ணொருத்தி, நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த கலகத்தின் போது பயந்து ஒரு தலித் இளைஞனின் வீட்டில் சென்று அடைக்கலம் புகு கிறாள். அந்த இளைஞனின் குடும்பம், அப்பெண்ணின் குடும்பத்திற்கு அடிமை வேலை செய்யும் குடும்ப மாகும்.  ஆதரவற்ற அவ்விளம்பெண், கடைசியில் அங்கேயே உண்டு, உறங்கி, தங்கியிருந்து, ஏழைத் தாயும் மகனும் மட்டும் உள்ள அந்தக் குடும்பத்தின் அன்புக்குப் பாத்திரமாகி, தன் சாதியுணர்வைத் தூக்கியெறிந்துவிட்டு, அந்தத் தலித் இளைஞனையே தன் வாழ்க்கைத் துணைவனாக ஏற்றுக் கொள்வதாகக் கட்டமைக்கப்பட்டக் குறுங்காவியம், அது.

வழக்கத்திலிருக்கும் வருணாசிரம தர்மம் சிதைக்கப்பட வேண்டும்; சாதியக் கட்டமைப்பு உடைத்து, நொறுக்கப்பட வேண்டும்.

‘சமூகத்தில் எல்லா மனிதர்களும் சரி-நிகர் சமானமானவர்களே!’ என்ற புரட்சிகரமான கருத்தை தன் இலக்கியப் படைப்புகளுக்குள் ஏற்றிவைத்துப் பாடியவர், மகாகவி குமரன் ஆசான்.

இவருடைய ‘சண்டாளப்பிட்சுகி’ என்ற குறுங் காவியத்தில், கௌதமபுத்தரின் சீடரான ஆனந்த பிட்சு, ஒரு நாள் நடுமதிய வேளையில் தாகத்தால் நாக்கு வரண்டு நடந்துவரும் போது ஊருக்கு வெளியே கிணற்றிலிருந்து தாழ்த்தப்பட்டப் பெண்ணான (சண்டாளர்குலத்தைச் சேர்ந்த ஊர்த்தலைவரின் மகள், அவள்) மாதங்கி தண்ணீர் எடுத்துக் கொண்டிருப் பதைக் கண்டு, அருகில் போய் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிறார்.

“அம்மா, தாகமா இருக்கிறது; குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் தா” என.

சந்நியாசியை ஏற இறங்கப் பார்த்த அப்பெண், “ஐயா, நானொரு சண்டாளர் குலத்துப் பெண்.  நீங்களோ, ஆரியப்புத்திரர்.  ஆரியப்புத்திரராகிய நீங்கள், என் கையிலிருந்து  தண்ணீர் வாங்கிக் குடிப்பது தர்ம மாகுமா அவ்வாறு நான் தருவதுதான் நியாயமாகுமா? என்று கேட்கிறாள்.

“சாதி எதுவென்று கேட்கவில்லை சகோதரி! நான் கேட்பது தண்ணீர்.  நாக்கு வரளுது...  பயப்பட வேண்டாம்; தண்ணீர் தா” என்று, அந்தப் பிட்சு தண்ணீர் குடிப்பதற்காக வேண்டி தன் இரு கை களையும் கூட்டிப்பிடித்து, அப்பெண்ணின் முன்னால் குனிந்து நிற்கிறார்.

செய்வதறியாமல் திகைத்து நின்ற அப்பெண், கடைசியில் பிட்சுவுக்குத் தண்ணீர் கொடுக்கவே, அதைக் குடித்துமுடித்து ஏப்பம் விட்டபடி அந்தச் சந்நியாசி தான் தங்கி இருக்கும் புத்தமடத்தை நோக்கி விரைந்து சென்று விடுகிறார்.

ஆரியப்புத்திரரான அந்தச் சந்நியாசியின் புதிய செய்கையைக் கண்டு வியந்து போன மாதங்கி, அவரது சுவடுகளைப் பின் தொடர்ந்து புத்த மடத்திற்குச் சென்று, புத்தமதத்தை ஏற்றுக் கொண்டு புத்த சந்நியாசினி (சண்டாளப் பிட்சுகி) ஆகி விடுகிறாள்.

இந்த விஷயம், அரண்மனையில், பிராமணர் களுக்கு இடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்து கிறது, மன்னர் காரணம் கேட்பதற்காக வேண்டி புத்தமடத்தின் தலைமை சந்நியாசியிடம் வருகிறார்.

“ஒரு தாழ்த்தப்பட்டக் குலத்துப் பெண்ணை நீங்கள் எப்படி சந்நியாசினியாக ஏற்றுக் கொள்ளலாம்?” - இதுதான் மன்னரின் கேள்வி.

அங்கே விவாதம் காரசாரமாக நடைபெறுகிறது.

கடைசியில் தலைவரான புத்த சந்நியாசி கீழ்க் கண்ட சில கேள்விகளை மன்னரிடமும் கூடி நின்ற பிராமணர்களிடமும் கேட்கிறார் அதாவது,

“பிராமணர்கள் பிறந்து வந்தது போன்ற அதே மாதிரிப் பெண்ணுறுப்புக்குள்ளிருந்து பிறந்து வந்த வர்கள் தானே, இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களும்?” என்று.

இதைக் கேட்டதும் மன்னரும், பிராமணர்களும் வாயடைத்துப் போகிறார்கள்.

இதுதான் ‘சண்டாளப்பிட்சுகி’ என்ற குறுங் காவியத்தின் சாரம்.

ஆக, அன்று கேரளத்தில், ஆதிக்கம் பண்ணிக் கொண்டிருந்த சனாதன தர்மத்திற்கு எதிரான கலகக்குரலை குமரன் ஆசானின் சண்டாளப்பிட்சுகி - யினுள் கேட்கமுடிகிறது.

சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெற வேண்டிய உரிமைகளைப் பெறாமல் சமத்துவம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற நோக்கில் சமூகப் போராட்டங்களில் இறங்கியவர் - சகோதரன் அய்யப்பன் தாழ்த்தப்பட்ட மக்களை ஓரணியில் திரட்டி, சாதிபாகுபாடின்றி பிற சாதி மக்களோடு ஒரே பந்தியில் சமமாக உட்கார வைத்து சமபந்தி போஜனம் நடத்தியவர் சகோதரன் அய்யப்பன், அவர்கள்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏராள மான பாடல்களையும் அவர், இயற்றியுள்ளார்.  அது மட்டுமல்ல; இந்து மதத்தின் ஆசார - அனுஷ்டானங் களை சகோதரன் அய்யப்பன் கலை - இலக்கிய ரீதியாகவும், நடைமுறை வாழ்க்கையிலும் மிகக் கடுமையாக விமர்சித்தவர்.

“பிராமண மதம் கெட்ட மதம்,

சேவை புரிபவர்களை அது மிதிக்கும் மதம்,

நமக்கு இடையே வெறுப்பைத் தூண்டும் மதம்;

நாம் நலமாக வாழ

அதை உதறித் தள்ள வேண்டும்”

- இது, சகோதரன் அய்யப்பன் எழுதிய ஓணம் பாட்டில், சில வரிகள்.

“காலம் மாறிப்போச்சு

எல்லாரும் சரிசமம்

என்ற புதுவழக்கம்

பரவத் தொடங்கியாச்சு

எல்லாரும் ஓர்குலம் - என்ற புதுக்கருத்து

பழைமைகளை அடித்து நொறுக்கிவிட்டு

கால மாறுதலுக்கேற்ப - இப்பூவுலகில்

நம்மை வழி நடத்திச் செல்லும்”

- இது, அவருடைய ‘ராஜ நிவேதனம்’ என்ற கவிதையிலுள்ள வரிகளாகும்.

மலையாள இலக்கிய ஜாம்பவனான தகழி, ‘தோட்டியினுடைய மகன்’ என்ற தன்னுடைய நாவல் மூலம், மலையாளக் கலை - இலக்கிய உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர்.

இந்த நாவல் கேரள மாநிலத்தில் ஆலப் புழையிலுள்ள சந்தனக் காவு வார்டை மையமாகக் கொண்டு சுழல்கிறது.  வீடுகளிலும், ஹோட்டல் களிலும் உள்ள மிக அருவருக்கத் தக்க கழிவுகளை அப்புறப்படுத்தும் அருந்ததி வகுப்பைச் சார்ந்த இசக்கிமுத்து, அவர் மகன் சுடலை முத்து, இசக்கி முத்துவின் பேரன் மோகனன் ஆகியவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இன்றைய சாதிக்கட்டமைப்பை தகழி, இந்நாவல் மூலம் கடுமையாக விமர்சிக்கிறார்.  ‘இதுநாள் வரையில் படைக்கப்பட்ட கலை இலக்கியங்களில் வேலை செய்பவர்களாகவும், அடிமைகளாகவும், அசுத்த மானவர்களாகவும், கீழானவர்களாகவும், வந்து போய்க் கொண்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்களை, தம் தோட்டியின் மகன் நாவலின் மூலம் மையத்துக்குக் கொண்டு வந்த பெருமை தகழியையே சேரும்.

ஆக, நம் நாட்டுக் கலை - இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் மலையாள மொழியில் தோன்றியது போல் (சாதிக்கட்டமைப்பைப் பாதுகாத்து வரும் வருணாசிரம தருமத்தை விமர்சித்து,) தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சார்பான படைப்புகள் பிற மொழிகளில் இந்த அளவுக்குத் தோன்றியிருக்கிறதா, என்பது சந்தேகம்தான்!

துணைநின்ற நூல்கள்:

  1. குமரன் ஆசானின் கவிதைகள்
  2. ‘ஜாதிக்கும்மி’ - பண்டிட் கருப்பன்
  3. ‘சகோதரன் அய்யப்பன்’ - பேரா. எம்.கே. சானு
  4. ‘தோட்டியுடெ மகன்’ - தகழி.