படித்துப் பாருங்களேன்...

Iravatham Mahadevan (2014) Early tamil epigraphy from the earliest times to the sixth century C.E./ Central Institute of Classical Tamil

தமிழ் இலக்கியம் கற்போர், கற்பிப்போர் என்ற எல்லையைக் கடந்து சங்க இலக்கியங்கள் வெகுதிரள் மக்கள் தளத்தை அடைந்த காலம் இருபதாம் நூற்றாண்டாகும்.

இதன் வளர்ச்சி நிலையாக, ‘தமிழ்’ ‘தமிழன்’ என்ற மொழி இன அடையாளங்கள் முன் நிறுத்தப்பட்டன. இதற்கு உறுதுணையாகச் சங்க இலக்கியங்கள் அமைந்தமையால், அவற்றின் காலத்தை மிகவும் தொன்மை யானதாகக் கணிக்கும் போக்கு உருவானது. மற்றொரு பக்கம் மிகவும் பிந்தைய காலமாகக் கணிக்கும் ஆய்வுகளும் உருவாயின.

இவ்வகையில் தமிழ் அறிஞர்கள் இரு அணியினராகப் பிரிந்து நின்றனர். இப்போக்கினுள் நுண் அரசியலும் மறைந்திருந்தது. என்றாலும் இரண்டாயிரம் ஆண்டுகாலத் தொன்மையை, தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் சங்க இலக்கியங்கள் வழங்கின.

இதன் தொடர்வினையாக, தமிழ் இலக்கண இலக்கியங்களின் காலத்தை மிகவும் முந்தைய காலமாகக் காணும் போக்கும் உருவானது. ‘இற்றைக்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர்’ என்ற சொற்றொடர் பரவலான ஒன்றாகியது. இப்போக்கினால் சலிப்புற்ற நிலையில் ‘உலகத்தில் தோன்றிய முதல் குரங்கு தமிழ்க்குரங்கு என்றால்தான் நம்மளவருக்குத் திருப்தி’ என்று புதுமைப்பித்தன் பகடியாகக் குறிப்பிட்டார்.

சேரன் செங்குட்டுவன் கனகவிசயர் தலையில் கல் ஏற்றிய சிலப்பதிகாரச் செய்தி நம்மை இரும்பூது அடையச் செய்யும் ஊக்கியாக மாற்றப்பட்டது. அவன் வழிவந்தோராக நம்மைச் சித்திரித்து மேடைகளில் முழங்கியோர் வளமான வாழ்வைத் தமக்கு அமைத்துக் கொண்டனர்.

தமிழர்களுக்கெனத் தொன்மையான வரலாறும் நாகரிகமும், பண்பாடும் இருந்தபோதிலும் இதைப் பிறர் அறிந்து போற்றும் அறிவியல் அடிப்படையிலான வழி முறைகள் உருவாகவில்லை. இலக்கியங்களின் துணையுடன் மட்டுமே நம் சிறப்பை நிலைநாட்ட முயலும் போக்கே பெருமளவில் நிலவியது.

வரலாற்று வரைவின் முதன்மை ஆதாரங்களில் இடம் பெறும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் பல்லவர் காலத்தில் இருந்தே தொடங்குகிறது என்ற நம்பிக்கை பரவலாக வேரூன்றியிருந்தது. இதைக் களைந்தெறிந்து நம் தொன்மையான வரலாற்று வேர்களை வெளிப்படுத்தும் தொல்லியல் சான்றுகள், தொல்லியல் அறிஞர்களால் வெளிக்கொணரப்பட்டன. அறிவியல் அடிப் படையிலான இச்சான்றுகள் நம் பண்டைய வரலாற்றுப் பெருமைக்கு வலுவூட்டின. அத்துடன் நம் பண்டைய இலக்கியங்கள் குறித்த ஆய்வுக்கும் துணைநின்றன.

அகழ் ஆய்வுகளில் கிடைத்த பொருட்கள் ஒரு புறம் இருக்க தொல்தமிழ் எழுத்துக்களும் ஓவியங்களும் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், பானை ஓடுகள், பாறைகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள், ஓவியங்கள் ஆகியன நம் தொன்மையான நாகரிக வரலாற்றுச் சான்றுகளாய் அணிவகுத்து நிற்கின்றன. இத்தொன்மையான வரிவடிவங்கள் கிறித்துவிற்கு முந்தைய காலத்தவை.

ஒரு சமுதாயத்தின் வரலாற்றுத் தொடக்ககாலம் என்பது எழுத்து வடிவத்தின் பயன்பாடு அறிமுகமான காலமாகும். அவ்வகையில் தமிழர்களின் வரலாற்றுத் தொடக்க காலம், கிருத்துவிற்கு முந்தைய காலம் என்ற உண்மையை இக்கல்வெட்டுக்கள் வெளிப்படுத்து கின்றன. இக்கல்வெட்டு எழுத்துக்களின் வரிவடிவம் பிராமி எழுத்து வடிவம் எனப்படுகிறது.

பிராமி எழுத்து

பிராமி என்பது இந்தியாவில் வழங்கிவந்த பழைய வரிவடிவத்தைக் குறிக்கும் சொல்லாகும். இவ்வரிவடிவம் குறித்து அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அவை வருமாறு:

(1) பினிசியர்களால் மத்திய கிழக்குப் பகுதியில் இருந்து வந்தது.

(2) சிந்துச் சமவெளி நாகரிகம் நிலை பெற்றிருந்த போது உருவான வரிவடிவத்தில் இருந்து உருவானது.

(3) அசோக மன்னன் காலத்தில் அறிமுகம் ஆன வரிவடிவம் இந்தியா எங்கும் பரவியிருந்த பிராமி வரிவடிவம் தமிழ்நாட்டிலும் அறிமுகமானது என்ற கருத்தின் அடிப்படையில், தமிழ்நாட்டில் காணப்படும் எழுத்து வடிவங்கள் ‘தமிழ்-பிராமி’, ‘தாமிழி’, ‘திராவிடி’ என்று அழைக்கப்பட்டன.

இப்பிராமி வடிவம் தமிழ்நாட்டிற்கு எவ்வாறு அறிமுகம் ஆனது என்பது தொடர்பாகவும் அறிஞர் களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. அவற்றை, இவ்வாறு தொகுத்துரைக்கலாம்.

(1) அசோக மன்னனின் காலத்தில் வழக்கில் இருந்த பிராமி வரிவடிவத்தில் இருந்தே தமிழ் பிராமி வடிவம் உருவானது.

(2) பிராகிருதம் என்ற வடமொழியின் தாக்கம் தமிழ் பிராமியில் உள்ளது.

(3) சமணர்களும் பௌத்தர்களும், தம் சமய நூல்களைப் பிராகிருத மொழியிலேயே எழுதி யுள்ளனர். இவ்விரு சமயங்களும் தமிழகத்தில் பரவியபோது, பிராமி எழுத்து வடிவம் தமிழ்மொழியில் அறிமுகமாகிவிட்டது.

(4) அசோகன் காலத்துப் பிராமி வரிவடிவத்துடன் தமிழ்பிராமி தொடர்பற்றது. இது தனித் துவமான அடையாளத்துடன் உருவானது.

இத்தகைய மாறுபட்ட கருத்துக்கள் நிலவும் அறிவுச் சூழலில்தான் இங்கு அறிமுகம் செய்யும் நூல் வெளிவந்துள்ளது.

நூலாசிரியர்

இந்நூலின் ஆசிரியர் அய்ராவதம் மகாதேவன் 2 அக்டோபர் 1930 இல் பிறந்தவர். 1953 இல் சட்டக் கல்வியில் தேர்ச்சி பெற்றவர். இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தேர்ச்சி பெற்று மத்திய அரசின் வணிகத் தொழில் அமைச்சரவையில் நிதி ஆலோசகராகவும், தமிழ்நாடு அரசின் கைத்தறித் துணிகள் துறையின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

அரசுப் பணியில் இருக்கும் போதே பிராமிக் கல்வெட்டுகள் தொடர்பான ஆய்வில் ஈடுபாடு கொண்டு கட்டுரைகள் எழுதி வந்தார். தம் ஆய்வுப் பணிக்கு அரசுப்பணி தடையாக உள்ளது என்று கருதியதால் 1980இல் தாம் வகித்து வந்த உயர் அரசுப் பதவியை விட்டு விலகினார். அதன் பின்னர், தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் குறித்த ஆய்வே அவரது வாழ்நாள் பணியாயிற்று.

இந்திய ஆய்வாளர்களுக்கான உயரிய விருதுகளான, ‘நேரு ஆய்வு நல்கை’ ‘தேசிய ஆய்வு நல்கை’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகம் டி.லிட் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. 

இங்கு அறிமுகம் செய்யும் இந்நூல் 2003 ஆம் ஆண்டில் அவர் வெளியிட்ட  என்ற நூலின் விரிவாக்கமாக, அதே பெயரில் வெளி வந்துள்ளது.

நூலின் அமைப்பு

இந்நூலில் மொத்தம் தொண்ணூற்றாறு தொல் தமிழ்க் கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன. இக் கல்வெட்டுகளை, தொடக்ககாலத் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள், பிந்தையகாலத் தமிழ்க் கல்வெட்டுகள் என இரண்டாகப் பகுத்துள்ளார். முதல் பிரிவில் 59 கல்வெட்டுகளும், இரண்டாவது பிரிவில் 28 கல்வெட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

மூன்றாவதாக ஒன்பது கல்வெட்டுகளைப் பின் இணைப்பாக இடம்பெறச் செய்துள்ளார். இவை தவிர ‘வட்டெழுத்து’ என்ற எழுத்து வடிவில் பொறிக்கப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து, அவை கூறும் செய்திகளையும் வெளிப்படுத்துகிறார்.

இக்கல்வெட்டுகளின் வரி வடிவம் வண்ணப் புகைப்படங்களாகத் தனித்தனியாக இடம்பெற்றுள்ளன. இவற்றை, நம்காலத் தமிழ் எழுத்துக்களில் எழுதிக் காட்டி, அடிக்குறிப்புகளுடன் விளக்கி உள்ளதுடன், இவற்றின் காலத்தையும் கணித்துள்ளார்.

மேலும், இக்கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள ஊர்களின் பண்டைய பெயர்களையும், தற்போது வழங்கும் பெயர்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.

பிற அறிஞர்கள் இவ் எழுத்துக்களை எவ்வாறு வாசித்துள்ளார்கள் என்பதையும் பதிவு செய்துள்ளார். இதன் வாயிலாக எது சரியான வாசிப்பு என்பதைப் படிப்பவரின் முடிவுக்கு விட்டுள்ளார். இது சிறப்பான ஒன்று. நாராயணராவ் என்பவரின் தவறான வாசிப்பை எள்ளல் தொனியுடன் விமர்சிக்கவும் தயங்கவில்லை (பக்கம் 101).

1924 இல் நிகழ்ந்த மூன்றாவது கீழைத்தேய மாநாட்டில், தமிழ்நாட்டில் காணப்படும் பிராமி எழுத்துக்களைத் ‘தமிழ்-பிராமி’ என்று முதன் முறையாக அடையாளம் காட்டியவர் கே.வி.சுப்பிரமணிய அய்யராவார். இவர் மீது இந்நூலாசிரியர் மிகுந்த மதிப்பு கொண்டுள்ளார். இந்நூலை அவருக்குக் காணிக்கை ஆக்கியுள்ளார். என்றாலும் அவரது ஆய்வில், பிழை களாகத் தாம் கருதுவனவற்றைச் சுட்டிக்காட்டவும் நூலாசிரியர் தயங்கவில்லை.

ஆய்வின் தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் உள்ள மாங்குளம் என்ற சிற்றூரின் மலைக்குகைகளில் தமிழ்-பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ளன என்பதை ராபர்ட் ஸ்வெல் என்ற ஆங்கிலேயர் 1882 ஆம் ஆண்டில் கண்டறிந்தார். தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் குறித்த முதல் கண்டுபிடிப்பாக இது அமைந்தது.

இதன் அடுத்தகட்டமாக தமிழ்-பிராமிக் கல்வெட் டொன்று கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் எடக்கல் பகுதியில் 1894 ஆம் ஆண்டில் கண்டறியப் பட்டு, இந்தியக் கல்வெட்டுத் துறையின் 1896-1897 ஆண்டுக்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.    1995-1996 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் ஆய்வு செய்து மேலும் இரண்டு தமிழ்-பிராமிக் கல்வெட்டுக் களை இந்நூலாசிரியர் கண்டறிந்தார்.

மதுரை மாவட்டத்தின் கீழவளவு கிராமத்தில் உள்ள குகையின் முகட்டில் ஒரு கல்வெட்டு வெங்கோ பராவால் 1903 இல் கண்டறியப்பட்டது.

இவை மூன்றும் தொடக்ககாலக் கண்டுபிடிப்பு களாக அமைய, இதன் அடுத்தகட்டமாக 1906 தொடங்கி 1918 முடிய உள்ள காலத்தில் அழகர்மலை சித்தன்ன வாசல் ஆகிய இடங்களில் கல்வெட்டுக்கள் கண்டறிப்பட்டதைக் குறிப்பிடுகிறார். இதன் பின்னர் 1926-1960, 1961-1980, 1981-2012 என்று பகுத்துக் கொண்டு தமிழ்பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப் பட்டதை விவரிக்கிறார்.

இக்கல்வெட்டுக்கள் காணப்படும் ஊர்களின் அகரவரிசைப் பட்டியலும், இவை காணப்படும் ஊர்களைக் குறிப்பிடும் வரைபடமும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

வட்டெழுத்து

தமிழ் வட்டெழுத்துக்கள் குறித்த அறிமுகமும் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. ‘வளைந்த கோடு களையே அதிகமாகப் பெற்றிருந்தமையால் ‘வட்டெழுத்து’ என்றழைக்கப்பட்டதாக, கல்வெட்டறிஞர் தி.நா.சுப்பிர மணியன் (2011:74) குறிப்பிடுவார். இவ் எழுத்துமுறை யானது அசோகன் கால எழுத்து முறையுடன் தொடர் புடையதன்று என்றும், சுயேச்சையான முறையில் பெனிசியர்களின்  அராமிக் எழுத்து வடிவில் இருந்து உருப்பெற்றது என்றும் பர்னல் என்பவர் கருதுகிறார்.

பிராமி வரிவடிவில் இருந்து இது தோன்றியது என்பது தி.நா.சுப்பிரமணியனின் கருத்தாகும். கி.பி.அய்ந்து, ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக பூலாங்குறிச்சியில் கிடைத்த வட்டெழுத்துக்களைக் கருதுகின்றனர். தமிழ் நாட்டில் பரவலாக வழக்கில் இருந்த வட்டெழுத்து, பல்லவர்கள் சோழர்கள் ஆட்சியில் தமிழ் எழுத்து முறை அறிமுகமான பின்னர் மறையலாயிற்று.

பிற செய்திகள்

முதற்பகுதியின் இரண்டாவது இயல் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் குறித்த சக ஆய்வாளர்களின் வாசிப்பை ஆராய்கிறது.

2007 தொடங்கி 2010 முடிய ஆசிரியர் மேற் கொண்ட, புகைப்படம் எடுத்தலை மையமாகக் கொண்ட களஆய்வைக் குறித்தும் ஆவணப்படுத்தியமை குறித்தும் அப்போது அவர் பெற்ற அனுபவங்களையும் இவ்வியலில் பதிவு செய்துள்ளார் (பக்கம் 123-136). கள ஆய்வு மேற்கொள்வோருக்கு இது உதவும் தன்மையது. அரிய கல்வெட்டுக்களின் அழிவு குறித்து அவர் குறிப்பிடும் செய்திகள் வரலாற்று ஆர்வலர்களுக்குக் கவலை தருவனவாய் உள்ளன.

மூன்றாவது இயல் இக்கல்வெட்டுக்களின் மொழி குறித்த ஆய்வாக அமைந்துள்ளது. இக்கல்வெட்டுக் களில் காணப்படும் திராவிட மொழிக் கூறுகளையும், ஆரியமொழிக் கூறுகளையும் பிராகிருத மொழி இலக்கணம் பயன்பாட்டையும் அய்யப்பாட்டிற்குரிய வேர்ச்சொற்கள் குறித்தும் இவ்வியல் விளக்கி ஆராய்கிறது.

நான்காவது இயல் இக் கல்வெட்டுக்கள் வாயிலாக அறியவரும், அரசு, சமயம், சமூகம் என்பன குறித்த செய்திகளை ஆராய்கிறது. இதுவரை பார்த்த இயல்களில் இடம்பெற்றுள்ள செய்திகள் ஆழமானவை என்றாலும் பொது வாசகர்களுக்கு அவை எந்த அளவு பயன்படும் என்பது கேள்விக்குரியது.

தொல்லியல், கல்வெட்டியல், மொழிஇயல் ஆகிய அறிவுத்துறைப் பின்புலம் உடை யோரே இச்செய்திகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். இத்தகைய சிறந்த ஆய்வு நூல்களில் இது தவிர்க்க இயலாத ஒன்று. இரண்டாவது பகுதிக்கும் இது பொருந்தும். இவை இந்நூலின் சிறப்புக் கூறுகளாகும்.

நான்காவது இயலில் அரசு, சமயம், சமுதாயம் என்ற மூன்று தலைப்புகளில் இடம்பெற்றுள்ள செய்திகள் பரந்துபட்ட வாசகத் தளத்திற்குச் செல்லும் தன்மையன. தமிழரின் சமுதாய வரலாற்று வரைவுக்கான புதிய தரவுகளை இப்பகுதி கொண்டுள்ளது. நம் நாகரிகம் பண்பாடு என்பனவற்றின் தொன்மைச்சிறப்பை நிலை நாட்டும் சான்றுகளாக இவை அமைகின்றன.

பாண்டியர், சேரர், சோழர் மரபில் வந்த மன்னர்கள் குறித்தும், குறுநிலமன்னர் குறித்தும் இவை அறிமுகம் செய்கின்றன. அரசு நிர்வாகம், அரசு அதிகாரிகள், பணி யாளர்கள், வணிகர்கள் குறித்த பதிவுகள் இக் கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன. அமைச்சர்கள், அரண்மனை அதிகாரிகள், வணிகர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ‘பட்டங்கள்’ எவை என்பதையும் அறியமுடிகிறது.

கிராம அவை மட்டுமின்றி, கற்றறிந்தோரைக் கொண்ட ‘கடிகை’ என்ற அமைப்பு இருந்தமை குறித்தும் இவை வெளிப்படுத்துகின்றன.

ஆநிரை கவர்தல்

‘ஆ, கொள் பூசல் எனப்பட்ட கால்நடைகளைக் கவர்வதை மையமாகக் கொண்டெழும் போர்கள் குறித்த பதிவுகளும் உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள புலிமான்கோம்பை’ என்ற இடத்தில் கிடைத் துள்ள கி.மு. முதலாம் நூற்றாண்டுக் கல்வெட்டு, ஒன்று தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் உள்ளது. தீயன் அந்தவன் என்பவன் ‘ஆ’ கவர்தலின் போது குளத்தூரில் இறந்துபட்டதன் நினைவாக நடப்பட்ட கல் ஆகும். இதுவே ஆகொள் பூசலைக் குறிக்கும் பழமையான வீரக்கல்லாகும்.

வட்டெழுத்துக் கல்வெட்டுகளும் ஆகொள் பூசலில் மாண்டோரைக் குறித்துக் குறிப்பிடுகின்றன. படைஎடுத்தல், கொடியவிலங்குகளின் தாக்குதல், கொள்ளையருடன் சண்டை, காமுகரிடம் இருந்து பெண்ணைக் காப்பாற்றுதல், தனிமனிதப்பகை என வேறுவகையான காரணங்களில் இறந்தோரைவிட ஆகொள் பூசலில் இறந்தோரே அதிகம். 317 வீரக்கல் கல்வெட்டுகளில் 242 கல்வெட்டுகள் ஆகொள் பூசலில் இறந்தோரைக் குறிப்பிடுகின்றன என்பது தொல்லியல் ஆய்வாளர் கே.ராஜனின் பதிவாகும்.

இடைக்கற்காலத்தில் எழுத்துப் பயன்பாட்டிற்கு முன் குறுநிலமன்னர்கள் போர் வீரர்கள் ஆகியோருக்காக புதைகுழிப் பகுதிகளில் உயரமான கற்கள் நடப்பட்டன. எழுத்தறிவின் காரணமாக ஏறத்தாழ மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நினைவுக்கற்களில் இறந்தவனின் பெயரும் பீடும் இடம்பெறலாயின.

சமயம்

அசோகரின் பிராமிக்கல்வெட்டுகளை நினைவு படுத்தும் வகையில் தமிழ்பிராமி எழுத்துகள் இருந்ததன் அடிப்படையில், இவை பொறிக்கப்பட்ட குகைகளில் பௌத்த துறவிகள் வாழ்ந்திருக்கலாம் என்ற கருத்து சில ஆய்வாளர்களிடம் உண்டு. வெங்கையா என்பவர் மேற்கு இந்தியாவில் உள்ள புத்த குகைகளுடன் இவற்றை ஒப்பிட்டார்.

இலங்கையில் உள்ள குகைகளுடன் இவற்றை இணைத்து கிருஷ்ண சாஸ்திரி என்பவர் ஆராய்ந்தார். அவரது கருத்துப்படி வரலாற்றுக்கு முந்தியகாலத்தைச் சேர்ந்த பூர்வீகக் குடிகள் தொடக்கத்தில் இக்குகைகளில் வாழ்ந்திருக்க வேண்டும். பின் புத்ததுறவிகளும், இவர் களுக்குப் பிந்தைய காலத்தில் சமணர்களும் இக்குகை களில் வசித்துள்ளார்கள். சமணர்கள் இக்குகைகளில் கற் சிற்பங்களையும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்களையும் உருவாக்கியுள்ளனர்.

இக்குகைகள் காணப்படும் ஊர்களின் பெயர்கள், புத்தரது வாழ்க்கையுடன் தொடர்புடையன என்பது, கே.வி.சுப்பிரமணிய அய்யரின் கருத்தாகும்.

ஆனால் தமிழ்நாட்டில் கிடைத்துள்ள குகைக் கல்வெட்டுகள் அனைத்தும் படித்தறியப்பட்ட நிலையில், புத்த சமயம் தொடர்பான சான்றுகள் எவையும் அவற்றில் இல்லை. புத்தமதத்துடன் தொடர்பு படுத்தி வாசிக்கப்பட்ட கல்வெட்டுகளின் வாசிப்பானது தவறானது என்பது இப்போது கண்டறிப்பட்டுள்ளது.

சமணபுத்த துறவிகள் மட்டுமின்றி ஆசீவக சமயத் துறவிகளும் இக்குகைகளில் வாழ்ந்துள்ளதாக டி.வி.மகா லிங்கம் கருதுகிறார். ஆனால் குகைகளில் காணப்படும் தமிழ்-பிராமி எழுத்துக் கல்வெட்டுகளின் வாசிப்பில், இக்குகைகளுடன் ஆசீவகர்களைத் தொடர்புபடுத்தும் சான்றுகள் எவையும் இல்லை.

சமணமும் தமிழ்-பிராமியும்

இதுவரை தமிழ்-பிராமிக் கல்வெட்டுகள் காணப்படும் இடங்களில் 33 இடங்கள் சமணம் சார்ந்தவை. படித்தறியப்பட்ட 96 தமிழ் பிராமிக் கல்வெட்டுகளில் 87 கல்வெட்டுகள் சமணம் சார்ந்தவை. சமணம் சார்ந்த கலைச் சொற்கள் சிலவும் இக்கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனாலும் அவனது அரசவையின் உயர் அதிகாரிகளாலும் வணிகக் குழுக்களாலும் சமணம் ஆதரிக்கப்பட்டுள்ளதையும் இக்கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது.

கி.மு இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி முதல் நூற்றாண்டு வரையிலும், கி.பி.இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி நான்காம் நூற்றாண்டு வரையிலும் எனப் பகுத்துக் கொண்டு, இக்காலத்தில் உருவான பிராமிக் கல்வெட்டுகளையும், கி.பி அய்ந்து ஆறாம் நூற்றாண்டுகளில் உருவான வட்டெழுத்துக் கல்வெட்டுகளையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் சமணத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் இருந்ததை அறியமுடியும். சேந்தன் கூற்றன் என்ற களப்பிர மன்னன், சமணம் இந்து என்ற பாகுபாடின்றிச் செயல்பட்டுள்ளான்.

சமூகம் வேளாண்மைக் கருவியான ‘கொழு’ குறித்தும் நெற்பயிர் குறித்தும் இக்கல்வெட்டுகள் பதிவு செய் துள்ளன.

‘நிகமம்’ என்ற பெயரில் வணிகக் கில்டுகள் இருந் துள்ளன. வைரம், ஆயுதங்கள் உற்பத்தி என்பனவற்றை மேற்கொண்டுள்ள ‘நிகமம்’ இருந்துள்ளதைக் கொடு மணல் என்ற ஊரில் கிடைத்த பானையில் பொறிக்கப் பட்ட கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளதை அறிஞர் எ.சுப்பராயலு கண்டறிந்துள்ளார்.

தெற்கு இலங்கையில் திசமகரம்மா என்ற இடத்தில் எழுத்துகள் பொறிக்கப் பட்ட சுடுமண் கலன் கிடைத்துள்ளது. இதன் காலம் கி.மு.இரண்டாம் நூற்றாண்டாகும். தமிழக வணிகக் கில்டு ஒன்றை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது வணிக வில்லைகளை இவ் வணிக கில்டு வெளியிட்டுள்ளது தெரிய வருகிறது.

கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்-பிராமிக் கல்வெட்டுக்கள் அழகர்மலையில் கிடைத்துள்ளன. பல்வேறு பொருட்களை வாணிபம் செய்யும் வணிகர்கள் கற்படுக்கைகளை அமைத்த கொடையாளிகளாக இக்கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘வணிகன்’, ‘வாணிகன்’ என்று இக்கல்வெட்டுகளில் இடம்பெறும் சொற்கள் பழைய தமிழ் இலக்கியங் களிலும், கல்வெட்டுகளிலும் இடம்பெற்றுள்ளன. இவற்றை உருவாக்கிய வணிகர்கள் ‘மதிரை’ என்ற ஊரைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இது மதுரையைக் குறிக்கிறது. புகளுரில் கிடைத்த கல்வெட்டில் சேரர்களின் தலைநகரான கரூரைச் சேர்ந்தவராக ஒரு வணிகர் குறிப்பிடப்பட்டுள்ளார். இவ்வணிகர்கள் புத்த, சமண சமயங்களின் புரவலர்களாய் இருந்துள்ளனர்.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு, மன்னார்கோவில் ஊரில் கிடைத்துள்ளது. இதில் இடம்பெறும் ‘இளங்கோ’ என்ற சொல் தமிழ் வணிகர்களின் சாதிப்பட்டமாக இருக்கலாம் என்பதை பிற்கால இலக்கிய மற்றும் கல்வெட்டு பதிவுகள் உணர்த்துகின்றன. (இளங்கோ அடிகள் யார்? என்ற தமது நூலில் தொ.மு.சி.ரகுநாதன் கூறும் கருத்துக்கு இச்செய்தி வலுவூட்டுவதாய் உள்ளது).

அழகர்மலை, புகளுர் என்ற இரு ஊர்களிலும் கிடைத்துள்ள கல்வெட்டுகள், துணி, உப்பு, எண்ணெய் கொழு, பானிதம் (வெல்லம் அல்லது கருப்புக்கட்டிப்பாகு) பொன் என்பன வாணிபப் பொருட்களாக இருந்ததை உணர்த்துகின்றன.

வியன்னா அருங்காட்சியகத்தில் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட ஒப்பந்தம் ஒன்றுள்ளது. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் முசிறியைச் சேர்ந்த வணிகனுக்கும் அலெக்சாண்டிரியாவில் உள்ள வணிகனுக்கும் இடையில் இவ் ஒப்பந்தம் எழுதப்பட்டுள்ளது. தமிழர்களின் கடல் வாணிபம் குறித்த ஆவணச் சான்றாக இது அமைந்துள்ளது.

உப்பு வணிகர், தச்சர், மாவுத்தர், பொற்கொல்லர் ஆகிய தொழிற்பெயர்கள் இக்கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன.

கணப்பெயர்களும் உறவுப்பெயர்களும்

இளையர், இள, குறவன், தீயன், நாகன், பரதன், பின்னன், மலைவண்ணக்கன், வேள் என்பன கணப் பெயர்களாக இடம்பெற்றுள்ளன.

தந்தை, ‘தாயாறு’ (தாய்) மகன் மகள், குறுமகள், பின்னன் (தம்பி) சாலகன் (மனைவியின் சகோதரி கணவன்) என்பன உறவுச் சொற்களாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி அந்தை, அப்பா, அய்யன், அன்னை, தாதை, எளமகன் என்பன மரியாதைக்குரிய பெயர்களாய் இடம்பெற்றுள்ளன.

பெயருக்குமுன், ‘நெடுஞ்செழியன், பெருங்கூறன், கோவின்மகன் என அடைமொழி இடும் வழக்கம் இருந் துள்ளதையும் இக்கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.

சமயம் சார்ந்த பெயர்கள் குறைந்த அளவிலேயே உள்ளன.

இடப்பெயர்கள்

நாடுகள், நகரங்கள், துறை முகங்கள் குறித்த கல்வெட்டுச் சான்றுகளையும், அகழ் ஆய்வுச் சான்று களையும் அறிந்து கொள்ளும் வகையிலான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

மன்னார்கோவிலில் காணப்படும் கி.பி.இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டில் ‘குணாவின் இளங்கோ’ என்ற தொடர் இடம்பெற்றுள்ளது. சிலப்பதிகாரக் காவியத்தின் பதிகத்தில் இடம்பெறும் குணவாயில் என்பதும் குணா என்பதும் ஒன்றுதான் என்பது ஆசிரியரின் கருத்தாகும்.

இங்கு எழுப்பப்பட்ட சமணப் பள்ளி குறித்த செய்திகள், வார நாட்பெயர்களின் புழக்கம், பிராமிக் கல்வெட்டுகள் இவற்றின் துணையுடன் சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி அல்லது ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதி (கி.பி.450-550) ஆக இருக்கலாம் என்ற முடிவுக்கு ஆசிரியர் வருகிறார்.

இக்கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ள தாவரப் பெயர்கள், விலங்குப் பெயர்கள், நுண்கலைகள் என்பன  குறித்த செய்திகளையும் வெளிப்படுத்தி உள்ளார். வாய் மொழியில் இருந்து எழுத்து வடிவுக்கு தமிழ்மொழி மாறியமை குறித்தும், வெகுமக்கள்திரள் எழுத்தறிவில் இருந்து மேட்டிமையோரின் எழுத்தறிவுக்கு மாறியமை குறித்தும் ஆசிரியர் கூறும் கருத்துக்கள் குறிப்பிடத் தக்கனவாய் உள்ளன.

சமண சமயம் தொடர்பான கலைச் சொற்கள் இக்கல்வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளன. இவை தொடர்பாக ஆசிரியர் தரும் குறிப்புகள் நுட்பமான செய்திகளை உள்ளடக்கியுள்ளன. சான்றாக, பள்ளி என்ற சொல் குறித்து ஆசிரியர் தரும் விளக்கத்தைக் குறிப்பிடலாம்.

பிராமிக் கல்வெட்டுகளில் அதிக அளவில் இடம்பெறும் சொல் ‘பள்ளி. உறங்கும் இடம் என்பதே இச்சொல்லின் பொருள் ஆகும். சமணமுனிவர்கள் உறங்க, கற்படுக்கைகளை குகைகளில் அமைத்துள்ளனர். இப்படுக்கைகளில் தலையணை போன்று கல்லில் அமைக்கப்படும் பகுதி ‘அதிட்டானம்’ எனப்பட்டது.

இக்கற்படுகைகள் அமைக்கப்பட்ட குகைகளில் கல்வி கற்பிக்கப்பட்டதால், கல்விகற்கும் இடம் என்ற பொருளையும் ‘பள்ளி’ என்ற சொல் தரலாயிற்று. வேத மறுப்புச் சமயங்களான ஆஜீவகம், புத்தம், சமணம் ஆகியவற்றின் வழிபாட்டுத் தலத்தைக் குறிக்கும் சொல்லாக இலக்கியங்களிலும், பிற்காலக் கல்வெட்டுக் களிலும் இச்சொல் வழங்கலாயிற்று.

தற்காலத் தமிழ் மொழியில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலத்தைக் குறிக்கும் சொல்லாகவும் ‘பள்ளி’ என்ற சொல் பயன் படுத்தப்படுகிறது (கேரளத்தில் கிருத்தவ தேவாலயங் களையும் பள்ளி என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் உள்ளது).

இதுபோன்று பல நுட்பமான வரலாற்றுச் செய்திகள் முதற்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இரண்டாவது பகுதி

நூலின் இரண்டாவது பகுதி இக்கல்வெட்டுக்களின் மொழி குறித்த ஆய்வாக அமைந்துள்ளது. இதனால் பொதுவாசகர்களின் வாசிப்பு எல்லைக்குள் அடங்காது. தொல்எழுத்துக்கலை (palaeography), எழுத்துக் கூட்டு முறை (orthography), ஒலியனியல் (phonology), உரு பொலியனியல் (morphonemics), உருபனியல் (morphology), தொடரியல் (syntax) என்ற தலைப்புகளில் அவர் வெளிப் படுத்தும் செய்திகள், தொல்லியலாளர்களுக்கு மட்டு மின்றி தமிழ் இலக்கணவியலாளர்களுக்கும் மொழி யியலாளர்களுக்கும் உதவும் தன்மையன.

பின் இணைப்பாக அமைந்துள்ள மூன்றாவது பகுதி, இக்கல்வெட்டுகளின் புகைப்படங்களைக் கொண்டு உள்ளது. தற்காலத் தமிழ் எழுத்துவடிவில் அவற்றை எழுதியுள்ளதுடன், அவை காணப்படும் இடம் அவற்றின் காலம் என்பனவற்றுடன் சிறு குறிப்பு களையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.

நூலின் சிறப்பு

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை உணர்ச்சி வயப்படாது, அறிவியல் அணுகுமுறையில் வெளிப் படுத்தும் இந்நூல் தமிழ்மொழிக்கும், வரலாற்றுக்கும் அருங்கொடையாக அமைந்துள்ளது. ஆய்வாளர்கள் எ.சுப்பராயலு, கே.ராஜன் ஆகியோர் ஆசிரியரது கருத்துகளுடன் மாறுபடும் இடங்களும் உண்டு.

அறிவுத் தேட்டத்தில் இம்மாறுபாடுகள் எழுவது தவிர்க்க இயலாதுதானே! தம் வாழ்நாள் பணியாக இதை மேற்கொண்ட நூலாசிரியருக்கும் இந்நூலைச் செம் மையாக வெளியிட்டுள்ள செம்மொழித் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கும் தமிழ் அறிவுலகம் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

துணைநின்ற நூல்கள்

சிற்றம்பலம்.சி.க.(1991) பண்டைய தமிழகம்

சுப்பிரமணியன்.தி.நா(2011) பண்டைத் தமிழர் எழுத்துக்கள்

Rajan.K. (2015) Early Writing System, A journey from  Graffiti to Brahmi