வரலாற்றுப் பெருமை கொண்ட சரஸ்வதி மகால் நூலகம் உலகில் பழமை வாய்ந்த நூலகங்களில் முதன்மையான வாட்டிகன் நூலகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்நூலகம் 13, 14ஆம் நூற்றாண்டுகளிலேயே இருந்துள்ளது என்று டாக்டர் பர்னல், வ.வேணுகோபாலன், பி.பி.எஸ்.கிரி போன்ற சரித்திர ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

saraswathi mahal library 600அதாவது, முத்தரையர் காலத்திலேயே காலூன்றிய விசயாலய சோழன் புதல்வன் ஆதித்தசோழன் காலத்தில் நிலைபெற்று, பராந்தக சோழன் காலத்தில் பல கிளைகளோடு நூலகம் வளர்ந்து விளங்கியுள்ளது. இதன்பிறகு தஞ்சையில் ஆட்சி செய்த பிற்காலச் சோழர்களும், நாயக்க மன்னர்களும், மராட்டிய மன்னர்களும் இந்நூலக வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநின்றுள்ளனர்.

சோழர் காலத்தில் தமிழகக் கோயில்களைச் சார்ந்தே சரஸ்வதி பண்டாரங்கள் (நூலகங்கள்) அமைந்திருந்தன. இதன் காரணமாக அக்காலத்தில் நூலகங்கள் சரஸ்வதி பாண்டார் என்று அழைக்கப்பட்டது. இந்நூலகம் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தியது என்றாலும் மிக அதிகமாக விரிவுபடுத்தி சிறப்புறச் செய்த பெருமை தஞ்சை இரண்டாம் சரபோஜி (1798-1832) மன்னரையே சாரும்.

இம்மன்னருக்குப் பின் பட்டம் பெற்ற அவர் மகன் சிவாஜி இறந்ததும் அவருக்கு மகப்பேறு இல்லாத காரணத்தால் அவருடைய மனைவி காமாட்சிபாய் தஞ்சை ஆட்சியை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் வாரிசுக்காகக் காமாட்சி பாய் எடுத்துக் கொண்ட சுவிகார புத்திரனை ஆங்கில அரசு ஏற்றுக் கொள்ளாததால் சரஸ்வதி மஹால் உட்பட அரண்மனை சொத்துக்கள் கி.பி.1861 டிசம்பரில் மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்திற்குட்பட்டன.

பிறகு காமாட்சிபாய் நார்டன் என்னும் வழக்குரைஞர் மூலம் கவர்னர் ஜெனரலுக்கும் பின், பிரிவி கவுன்சிலுக்கும், பாராளுமன்றத்திற்கும் விண்ணப்பம் செய்ததன் விளைவாக அரசு சொத்துக்கள் விக்டோரியா மகாராணியின் ஆணையின் காரணமாகத் திரும்பிக் கிடைக்கப் பெற்றன. கடைசி ராணியின் மறைவிற்குப் பின் அரண்மனைவாசிகளால் சரஸ்வதி மஹால் நூலகம் அரசு தொடர்புடைய ஒரு காப்புக் குழுவிடம் 1918இல் ஒப்படைக்கப்பட்டது. நிர்வாகத்தினை ஏற்றுக் கொண்ட குழு இந்நூலகத்தைப் போற்றி வளர்த்த இரண்டாம் சரபோஜி மன்னரைப் போற்றும் விதமாக இந்நூலகத்திற்குத் தஞ்சை மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம் எனப் பெயரிட்டது. இதை நினைவு கூரும் விதமாக இவ்வாண்டு இந்நூலகம் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது. 1988இல் ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதியோடு கூடியதாக இந்நூலகத்தில் காப்புக்குழு அமைக்கப்பட்டது. இவ்வாறு நிலைய வைப்பு நிதியுடன் தமிழக, இந்திய அரசாலும் அளிக்கப்படும் மானியங்களையும் பயன்படுத்தி சுவடிகளைப் பாதுகாத்தும், அரிய சுவடிகளை நூல்களாகப் பதிப்பித்தும் வெளியிட்டு நூலகம் வளர்ச்சியுறுகிறது. இது ஒரு பொது நூலகம் போல் அல்லாது ஓர் ஆய்வு நூலகமாகவே திகழ்கிறது.

நூலகத்தில் உள்ள நூல்கள் எவ்வளவு?

இந்நூலகத்தில் உள்நாட்டு மொழிகள் மட்டுமின்றி வெளிநாட்டு மொழிகளான ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளில் சுமார் 4500 நூல்களை மன்னர் சரபோஜி சேகரித்து வைத்துள்ளார். பல நூல்களில் இவர் கையப்பங்களுடன், அந்நூல்களில் வாங்கிய குறிப்புகள் உள்ளன. இவரால் படிக்கும்போது சிறப்புச் செய்திகளின் பக்கத்தில் கோடிட்டுக் குறிப்புகளும் எழுதப்பட்டுள்ளன. சரபோஜி காசி யாத்திரை சென்றபோது அங்கிருந்து சமஸ்கிருதச் சுவடிகளைக் கொண்டு வந்துள்ளார்.

இம்மன்னர் அரசாண்ட காலத்தில் எழுதப்பட்ட ஆவணங்களில் தஞ்சாவூரைப் பற்றியும், இங்குள்ள சமூகப்பொருளாதாரச் சூழ்நிலைகளைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ளமுடிகிறது. சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலையிலும் காகிதத்திலும் எழுதப்பட்ட சுவடிகள் சுமார் 47,000 மேல் உள்ளன. அதில் வடமொழிச் சுவடிகள் 39,000, தமிழ்ச் சுவடிகள் 4,200, மராத்தி ஓலைச் சுவடிகள் 3000, தெலுங்குச் சுவடிகள் 800 போன்றவை குறிப்பிடத்தக்கன. பல மொழிகளில் உள்ள இச்சுவடிகளை இடையீடின்றி படியெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, தொகுக்கப்பட்ட சுவடிகளை எளிதாகக் கையாள அனைத்துச் சுவடிகளுக்கும் உரிய அட்டவணை சரபோஜி காலத்தில்தான் முதல் முதலாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஓலைச் சுவடிகளுக்கான அட்டவணை ஓலைச்சுவடியில் தெலுங்கு மற்றும் தமிழ் எழுத்துக்களிலும் காகிதச் சுவடிகளுக்கான அட்டவணை, தேவநாகரி எழுத்துக்களில் காகித நோட்டுப் புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது. இத்துடன் கல்லால் ஆன தேவநாகரி எழுத்துக்களைப் பயன்படுத்தியும், மரத்தாலான படங்களைக் கொண்டும் நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் அச்சான நூல்களில் சில குமார சம்பவ சம்பூ, தர்க்க சங்கிரஹம், முக்தாவளி, அமரகோசம் போன்றவையாகும். இவை இந்நூலகத்தில் காணக்கிடைக்கின்றன.

நூலகச் சுவடிகளில் சித்த மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம், அலோபதி போன்ற மருத்துவ முறைகளைக் கூறும் சுவடிகளும் அடங்கும். இச்சுவடிகளைப் பாதுகாத்து வரும் இந்நூலகம் சரபேந்திர வைத்திய முறைகளையும் மற்றும் பிற இலக்கியச் சுவடிகளையும் 1949ஆம் ஆண்டு முதல் சென்னை அரசின் அங்கீகாரம் பெற்று வெளியிடத் தொடங்கியது. இதற்கென 21 வல்லுநர்களை அரசு நியமித்தது. அன்று முதல் வெளியீட்டுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நூலகம்; நீரிழிவுச் சிகிச்சை, சிரோநீராகச் சிகிச்சை, குன்மரோகச் சிகிச்சை, வாதரோகச் சிகிச்சை, சித்த வைத்திய முறைகள் ஆகியவற்றைச் சரபேந்திர வைத்திய ரத்னாவளி என 30க்கும் மேற்பட்ட மருத்துவ நூல்களை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றது. இவ் வைத்திய நூல்களைப் பாடல்களில் வடித்துத் தந்த பெருமை மன்னர் காலத்து அவைதனில் விளங்கிய கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர், வேலாயுத வாத்தியார், திருவேங்கடம் பிள்ளை, வெங்கடாசலம் பிள்ளை, சுப்பராயக் கவிராயர் முதலான புலவர் பெருமக்களைச் சாரும்.

இந்நூலகம் ஊரின் மையத்தில் தஞ்சை அரண்மனை உள்ளே உள்ள பெரிய கட்டடத்தில் உள்ளது. இதில் சரபோஜி இருபத்திரண்டாயிரத்திற்கும் அதிகமான பல பொருள்களைப் பற்றிய கையெழுத்துப் பிரதிகளைச் சேகரித்து வைத்துள்ளார். இதன் காரணமாக உலகிலேயே கையெழுத்துப் பிரதிகள் அதிகம் உள்ள நூலகங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது. இவற்றில் பெரும்பாலும் சமஸ்கிருத நூல்களே மிகுதி ஆகும். சரபோஜிக்கு முன்னர் இதுபோன்று பெரிய அளவில் நூல்களையும் ஓலைச் சுவடிகளையும் சேகரித்து வைத்தவர் மாமன்னர் அக்பர். இவர் நூலகத்தில் இருபத்தி நான்காயிரம் தொகுப்புகள் இருந்தன. இதைப் போலவே மன்னர் சரபோஜி சேகரித்தவையும் இணையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சரபோஜி நூலகத்தில் உள்ள அரிய நூல்கள்

சரஸ்வதி மகால் நூலகச் சுவடிகள் ஓர் அரிய பொக்கிஷம் என்றால் மிகையில்லை. 1719ஆம் ஆண்டு முதல் எழுதப்பட்ட கம்பராமாயணத்தின் ஏழு காண்டங்கள் அடங்கிய ஓலைச்சுவடியையும், பஞ்சபட்சி சாஸ்திரம் மிகச்சிறிய ஓலைச்சுவடியில் எழுதப்பட்டுள்ளதையும், பர்மிய எழுத்தில் உள்ள சமஸ்கிருதச் சுவடியையும், வங்க எழுத்தில் எழுதப்பட்ட தத்துவ சிந்தாமணி என்ற சமஸ்கிருதச் சுவடியையும், ஏகாம்பர புராணம் என்ற சமஸ்கிருதச் சுவடி ஒரிய எழுத்தில் உள்ளதையும் இங்குக் காணமுடிகிறது.

வண்ண ஓவியங்கள்

பெர்தோஷி எழுதிய பாரசீக இலக்கியம் ஷாஹநாமாவும், முகமதிய கவி அம்பர் ஹ§சேனி ஸ்ரீபகவத் கீதைக்கு எழுதிய மராத்திய விரிவுரையும், கி.பி.1784இல் வெளிவந்த ஆங்கில அறிஞர் சாமுவேல் ஜான்சன் அவர்களுடைய ஆங்கில அகராதியின் ஐந்தாம் பதிப்பும், பிரபோத சந்திரோதயம் நாடக விளக்கமும், ரிக் வேதச் சுவடிகளின் தலைப்புப் பக்கங்களில் தீட்டப்பட்ட திருவிளையாடல் சிவபுராணக் கதைகள் 64 படங்கள் மூலம் விவரிக்கப்பட்டு உள்ளதையும் காண முடிகிறது. இப்படத்தின் நீளம் ஏறத்தாழ 40 அடியாகும். சீன நாட்டின் தண்டனை முறைகள் ஆங்கிலப் படங்களில் விளக்கத்துடனும் கஜினி முகமதுவின் வாழ்க்கைப் படமாகச் சித்தரிக்கப்பட்ட நூலும் இங்கு உள்ளது. இந்நூலகத்தில் உள்ள வண்ண ஓவியங்கள் ஒவ்வொன்றும் காணக் கிடைக்காதவை.

சரபோஜி காலத்தில் இருந்த சிப்பாய்களின் உடைகள் பலவிதமான வண்ணச் சீருடைகளாக உள்ளன. இச்சீருடைகள் பதினேழு வகையான வண்ண ஓவியங்களில் உள்ளன. காசியில் உள்ள 64 குளிக்கும் கட்டடங்களும், கி.பி. 1796ஆம் ஆண்டு இந்தியாவின் வரலாற்றுத் தலங்களும் சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன. சரபோஜி வளர்த்த ராஜாளி பறவை முதல் பலதரப்பட்ட பறவைகள் அரசு ஓவியர்களால் கி.பி.1800இல் வரையப்பட்ட படங்களும், சார்லஸ்-லி-புரூன் என்ற பிரெஞ்சு ஓவியரால் 18ஆம் நூற்றாண்டில் தீட்டப்பட்ட முக ஒற்றுமைப் படங்களும் பலரையும் கவரும் வண்ணம் உள்ளன. ஒட்டகம், சிங்கம், குதிரை, பூனை, குரங்கு, மாடு, கழுகு, நரி, கிளி போன்றவற்றின் முகங்களை வரைந்து அவற்றுக்கு ஏற்ப உள்ள மனித முகங்களை பிரெஞ்சு ஓவியர் மிக அழகாக வரைந்துள்ளார். இங்குள்ள ஓவியத்தில் புனித வேதாகமம், பலவித மீன்கள் மற்றும் தாவரங்களின் படங்களும் உள்ளன.

அசுவ சாஸ்திரம் என்னும் குதிரை வைத்தியம் பற்றிய காகிதச் சுவடிகள், கஜ சாஸ்திரம் என்னும் யானை வைத்தியத்திற்கான காகிதச் சுவடிகள் வண்ணப் படங்களுடன் இங்கு இடம் பெற்றுள்ளன. பல்வேறு யானைகளைப் பற்றிய விளக்கங்களைப் பாலகாப்பிய முனி என்பவர் மராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தந்துள்ளார். இதற்கான விளக்கங்களைத் தமிழில் இந்நூலகம் வெளியிட்டுள்ளது. இதேபோல அசுவ சாஸ்திரம் எனும் நூலில் குதிரைகளின் வண்ண ஓவியத் தொகுப்பு உள்ளது. இந்நூலின் ஆசிரியர் நகுலர். இந்நூலையும் இந்நூலகம் வண்ணப் படங்களுடன் வெளியிட்டுள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த அரிய சுவடிகள் நூலகத்தில் கண் கவர் வண்ணக் கலவை மங்காத ஓவியமாய்த் திகழ்கின்றது.

டேனியல் வண்ண ஓவியங்கள்

இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களான திருச்சி மலைக்கோட்டை, மதுரை அரண்மனை, டில்லி ஜும்மாமசூதி, தஞ்சாவூர் கோவில் போன்ற இடங்கள், லண்டன் மாநகரின் காட்சிகள், வில்லியம் மற்றும் தாமஸ், டேனியல் சகோதரர்களால் வரையப்பட்ட வரைபடங்களின் அச்சுப்பிரதிகள், பிரேசர் என்னும் ஓவியர் வரைந்த இமயமலைப் பகுதிகளின் படங்களின் பிரதிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சரபோஜி மன்னரின் அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்ட (கல் அச்சு) நூல்கள், மோடி காகிதச் சுவடி, புராண ஓவியங்கள், இசை வரைவு நூல்கள் (Books of Musical Notation) முதலியனவும் மற்றும் 1779இல் வெளியிடப்பட்ட மலபார் அகராதியும், உலக வரைபடத் தொகுப்பும், தஞ்சை மராட்டிய மன்னர்களுடைய பட ஓவியங்களும் நம் கவனத்தை கவரும்படியாக உள்ளன. 18ஆம் நூற்றாண்டில் உருவான யசோதை பாலகிருஷ்ணன், சமர¢த்த ராமதாசர், சரஸ்வதி, ஆதிசங்கரர் ஆகியோரின் படங்களும் தஞ்சை மரபுப் படங்களாக இங்குக் காட்சி அளிக்கின்றன.

கண்நோய் அறுவை ஆவணம்

நூலகத்தை ஒட்டியிருந்த தன்வந்திரி மகாலில் நடைபெற்ற கண்நோய் அறுவை சிகிச்சை பற்றிய ஆவணங்களுடன் அங்கு தயாரிக்கப்பட்ட மருந்துகள் பற்றிய விவரங்களும் உள்ளன. கண்நோய் குறித்த ஆவணத்தில் நோயுற்றவர் கண், வண்ணத்தால் வரையப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இக்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள பொருட்களில் மன்னர் காலத்தில் தயாரிக்கப்பட்ட கனகசுந்தரம், சிந்தாமணி, ரஸபூபதி, பஞ்சாமிர்த பற்பொடி என்னும் நான்கு மாத்திரைகள் அடங்கிய பெட்டியும் ஒன்று. அக்காலத்தில் பல மருந்துகள் தன்வந்திரி மகாலில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படினும் இன்று நமக்குக் கண்கூடாகக் கிடைக்கும் மாத்திரைகள் இவை நான்குமாகும். இம்மாத்திரைகளின் ஒரு புறம் மாத்திரையின் பெயரும் மறுபுறம் மாத்திரை தயார் செய்த சக ஆண்டும் பொறிக்கப்பட்டுள்ளன.

இவற்றினைத் தயார் செய்த ஆங்கில ஆண்டுகள் கி.பி.1808, 1812 என அறியமுடிகிறது. இது போன்ற அரிய மருந்துகளைத் தயார் செய்யப் பயன்படுத்திய மூலிகை வண்ணப் படங்கள், இயல்பான தோற்றத்துடன் வண்ணம் குறையாமல் அவற்றிற்கான விளக்கங்களுடன் உள்ளன. இவற்றுடன் மன்னரின் மேற்பார்வையில் எழுதப்பட்ட ஓவியங்களையும், சுவடிகளில் எழுதி வைக்கப்பட்ட வைத்தியக் குறிப்புகளையும், நூலகத்தில் இன்றும் காணமுடிகிறது. மருத்துவச் சுவடிகள் மட்டுமின்றி 500க்கும் மேற்பட்ட வைத்திய நூல்களையும் மிகுந்த பொருட் செலவு செய்து சரபோஜி மன்னர் திரட்டி வைத்துள்ளார். இந்நூல்கள் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் லண்டன், எடின்பரோ, நியூயார்க் முதலிய இடங்களில் அச்சானவை. இவற்றைத் தவிர பிரதாப்சிங், இரண்டாம் சரபோஜி ஆகியோருடைய செப்புப் பட்டயங்களும் இங்குக் காட்சியில் உள்ளன.

நூலகப் பதிப்புகள்

இந்நூலகம் அரிய சுவடிகளை இதுவரையில் 585 நூற்களாகப் பதிப்பித்துள்ளது. இந்நூற்களில் பெரும்பான்மையானவை தற்பொழுது நூலக வாயிலில் விற்பனைக்கு உள்ளன.