Sempane Usman 450எந்தச் செயலும் வெற்றியைக் கொண்டுவந்துவிடும் - அந்தச் செயலை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்தால். அந்தச் செயல்முறையைத் தெரிந்து கொள்வதற்கு மிக முக்கியமாகத் தேவைப்படுவது, தாங்கள் செய்யக்கூடிய பணி பற்றிய புரிதலும், பணியினை நிறைவேற்ற ஆற்றலும் திறனும்தான். இந்த இரண்டையும் யார் தொடர்ந்து வளர்த்துக் கொள்கிறார்களோ, அவர்கள் செய்யும் பணிகள் அத்தனையும் நிறைவு பெறும். அதுதான் வெற்றிச் சிந்தனையாளர்கள் கூறும் தாரக மந்திரம். ஆனால் அதற்குத் தேவை முறையான பயிற்சி.

அது நாவிதர் தொழிலாக இருந்தாலும் சரி, ஆசிரியப் பணியாக இருந்தாலும் சரி, ஆண்டவனுக்கு பூஜை செய்வதாக இருந்தாலும் சரி, அத்தனைக்கும் தேவை முறையான பயிற்சி. பயிற்சி இல்லாமல் ஒருவர் செய்யும் எந்த வேலையும் வெற்றியையும், நிறைவையும் கொண்டு வராது. அனைவருக்கும் பயிற்சி வேண்டும் என்று கூறும் நாமும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி தேவை என்று கூறுவது கிடையாது; அவர்களும் எங்கள் பணிகளைச் சிறப்புடன் செய்து முடிக்க எங்களுக்குப் பயிற்சி தேவை என்று கேட்பது கிடையாது.

ஆனால் கோடிக்கணக்கான மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற முடிவுகளை எடுக்கின்ற இடங்களில் அமர்ந்து, தங்களின் பங்களிப்பின் மூலம் முடிவுகளை எடுக்கின்றனர். உண்மையிலேயே நம் சட்டமன்ற உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பங்கு பணி பற்றிய புரிதலுடன் செயல்பட்டு முடிவுகள் அனைத்தும் எடுக்கப்படுகின்றனவா என்ற கேள்விக்கு எவரும் ஆம் என்று கூற இயலாது. அவர்களுக்கு எந்த அளவுக்குப் பயிற்சி தேவையோ அந்த அளவுக்குப் பயிற்சி வழங்கும் அளவுக்குத் தரம் வாய்ந்த பயிற்சி நிறுவனங்கள் இன்றுவரை உருவாக்கப்படவில்லை.

பயிற்சி நிறுவனங்கள் இல்லை என்பதும் தெரியும். இருந்தபோதிலும் அதைப்பற்றிய கவலையும் யாருக்கும் இல்லை என்பதுதான் ஒரு சோக நிகழ்வு. அப்படிப் பயிற்சியற்று நம் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதன் காரணமாகத்தான் நம் மக்கள் பிரதிநிதிகளின் பாராளுமன்ற, சட்டமன்றச் செயல்பாடுகள் மங்கி வருவதாகவும், அதன் அடிப்படையில் பாராளுமன்ற, சட்டமன்ற நாட்கள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் நம் பாராளுமன்ற, சட்டமன்றச் செயல்பாடுகளை ஆய்வு செய்த அயோவா மற்றும் டியூக் பல்கலைக்கழக ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

பல நேரங்களில் சட்டமன்றத்திற்குள்ளும் பாராளுமன்றத்திற்குள்ளும் செய்ய வேண்டிய பணியை வீதியிலும், வீதியில் செய்ய வேண்டிய பணியை சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்குள்ளும் நம் மக்கள் பிரதிநிதிகள் செய்கின்றனர் என்றும் அந்த அறிக்கைகள் கூறியுள்ளன. அத்துடன் பாராளுமன்ற, சட்டமன்றச் செயல்பாடுகளின் திறன் கூட்டப்பட வேண்டும் என்றால் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் பங்கு பணி பற்றிய பார்வை முறையாக உருவாக்கப்படல் வேண்டும். பங்கு பணி பற்றிய புரிதலை அவர்களுக்கு உருவாக்க வேண்டுமென்றால் முறையான தொடர் பயிற்சி அவசியம் என்பதனையும் சுட்டிக் காட்டியுள்ளன - அந்த அறிக்கைகள். 

அதுபோலவே தான் உள்ளாட்சி மன்றத் தலைவர்களுக்கும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்திட முறையான பயிற்சி அவசியம் என பல அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன. குறைந்தபட்சம் உள்ளாட்சி மன்றத் தலைவர்களுக்குப் பயிற்சியளிக்க இந்தியா முழுவதும் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே ஊராட்சியில் சிற்றூராட்சித் தலைவராக இருந்தாலும் சரி, ஒன்றியத் தலைவராக இருந்தாலும் சரி, அல்லது மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக இருந்தாலும், தங்கள் பங்குபணிகளைத் தெரிந்து கொண்டு, பயிற்சியின் மூலம் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு செயல்படவில்லை என்று சொன்னால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தலைவராக இருந்து அதிகாரிகளையும் அலுவலர்களையும் வேலை வாங்கி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது. அதற்குப் பதிலாக அதிகாரிகளின் ஆணைப்படி அதிகாரிகளுக்குப் பணிந்து செயல்படக்கூடிய சூழல் வந்துவிடும்.

ஏனென்றால், இன்றைக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அரசாங்கம் முந்தைய உள்ளாட்சிகளைவிட அதிக அதிகாரங்களைக் கொண்ட ஒரு அரசாங்கம். அந்த அரசாங்கத்தை நடத்திட மேம்பட்ட ஆற்றல் என்பது ஒவ்வொரு உள்ளாட்சிப் பிரதிநிதிக்கும் தேவை என்பது எவ்வளவு பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. பொதுவாக, நம் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் மக்களிடமிருந்து எப்படி வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தேர்தலுக்குப் பிறகு மக்கள் பிரதிநிதியாக மக்களுடன் எப்படிப் பணியாற்றி மக்களின் மேம்பாட்டுக்குப் பணியாற்றுவது என்பது தெரியாத காரணத்தால்தான், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் சாதாரண ஏழை குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்து, அனைவரையும் மதிக்கத்தக்க மரியாதையுடைய மானுட வாழ்க்கையை வாழ வைக்க முடியவில்லை. 

இந்தியாவில் அற்புதமான, விரிவான ஒரு அரசியல் சாசனம் இருக்கிறது. மேற்பட்ட ஏழைகளுக்கான பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்குமான சட்டங்கள் ஆயிரத்துக்கும்மேல் இருக்கின்றன. 2000க்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்கள் இருக்கின்றன. மேம்பாட்டை உரிமையாக ஆக்கி பல உரிமைக்கான திட்டங்களை இயற்றி, அவற்றை நடைமுறைப்படுத்த மிக அதிக அளவில் நிதியினை ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது இந்தியா. இந்தியாவைப் பாதுகாப்பதற்கும் முன்னேற்றுவதற்கும் 30 லட்சம் பேர் கொண்ட ராணுவம், 29 லட்சம் பேர் கொண்ட மத்திய அரசு ஊழியர்கள், 72 லட்சம் பேர் கொண்ட மாநில அரசுகளின் ஊழியர்கள், 20 லட்சம் பேர் கொண்ட உள்ளாட்சி ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இருந்தும், இந்தியாவில் வாழும் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க முடியவில்லை, ஆரோக்கியமான வாழ்விடச் சூழலை உருவாக்க முடியவில்லை, அடிப்படை வசதிகளை உருவாக்கித் தர முடியவில்லை, கல்வியைத் தர முடியவில்லை, அவரவர் தகுதிக்கும் திறமைக்கும், தேவைக்கும் ஏற்ப வேலை வாய்ப்பை உருவாக்கித் தர இயலவில்லை. இவற்றுக்கான காரணங்கள் என்ன என்று ஆய்ந்தபோது கண்டுபிடித்ததுதான் “அதிகாரமற்ற குடிமக்களாக பெரும்பான்மைச் சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பது”. எனவே அதிகாரமற்று நுகர்வோராகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும் வாழும் பெரும்பான்மை மக்களை மதிப்புமிக்க, பொறுப்புமிக்க, அதிகாரமுள்ள குடிமக்களாக மாற்றிட கொண்டு வந்ததுதான் இன்றைய உள்ளாட்சி அரசாங்கம். 

இந்தப் புதிய உள்ளாட்சி அரசாங்கம் என்பது 1993ஆம் ஆண்டு அரசியல் சாசனத்துக்குள் பகுதி ஒன்பதாகப் புகுத்தப்பட்டு, மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்த மூன்றாவது அரசாங்கமாக உருவாக்கிவிட்டார்கள். இந்தப் புதிய உள்ளாட்சி அரசாங்கம் என்பது பல புதிய பொறுப்புக்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நம் தலைவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்த அரசாங்கம் செயல்படும்போது மக்கள் பங்கேற்போடு செயல்பட வேண்டும் என்பது அடிப்படைக் கோட்பாடாகும். இந்த உள்ளாட்சி அரசாங்கம் நான்கு முக்கியமான திசைகளில் பயணிக்க வேண்டும். ஒன்று, கிராமங்கள் பொருளாதார மேம்பாடு அடைய செயல்பட வேண்டும். இரண்டு, சமூக நீதி வழங்க முயல வேண்டும்.

மூன்று, மக்களாட்சியை உள்ளாட்சிச் செயல்பாடுகள் மூலம் விரிவடையச் செய்ய வேண்டும். நான்கு, எல்லாச் செயல்பாடுகளும் மக்கள் பங்கேற்போடு திட்டமிட்டு நடைபெற வேண்டும். இந்தச் செயல்பாடுகள் அத்தனையும் மத்திய, மாநில அரசுகளால் இன்றுவரை செயல்பட்டு வெற்றிபெற இயலாதவை. எனவே அதிக கனமிக்க பொறுப்புக்கள் உள்ளாட்சிகளின் தோள்மீது இந்த அரசியல்சாசன திருத்தச் சட்டங்கள் மூலம் சுமத்தப்பட்டுள்ளன. இந்தக் கனமான பணிகளை நிறைவேற்ற தேவையான புரிதலையும், திறனையும் வளர்த்துக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே, தங்கள் பணிகளில் வெற்றி பெறமுடியும். இதற்கும் மேலாக ஒரு பணி இருக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் மூலம் வரும் நிதியினைக் கண்டுபிடித்து கொண்டு வருவது என்பது ஒரு சிக்கலான பணி. அதைக் கண்டுபிடித்து விட்டால் உள்ளாட்சிக்கு நிதிப் பற்றாக்குறையே இருக்காது. இந்தப் புதிய உள்ளாட்சி அரசாங்கத்தை உருவாக்கி கால் நூற்றாண்டு கடந்த பின்பும் பஞ்சாயத்து அரசாங்கம் தெருக்களைச் சுத்தம் செய்யவும், குடிநீர் தந்திடவும், தெருவிளக்கு பராமரிக்க மட்டும் வந்ததுபோல் நினைத்து செயல்பட வைக்கப்பட்டுள்ளதுதான் வேதனையான ஒரு சம்பவம். இந்த உள்ளாட்சி அமைப்புக்கள் ஆட்சி செய்வதற்கும், மக்களோடு இணைந்து திட்டமிட்டு முன்னேற்றம் கொண்டு வருவதற்கும் ஆளுகை செய்வதற்கு வந்தது என்ற புரிதல் இல்லாது செயல்படுவதும் ஒரு சோக வரலாறே.

இந்தப் புதிய உள்ளாட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தவர்கள், உள்ளாட்சியை நிர்வாகம் செய்வதுடன், மாநில அரசின் 37 துறைகளுடன் இணைந்து பணியாற்றி, அந்த அரசுத் துறைகளால் நிறைவேற்றப்படும் பணிகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இதைவிட தலையாய பணியான சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் வேலையினை கடப்பாடுடன் இந்த உள்ளாட்சி அமைப்புக்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் செய்தாக வேண்டும். அதற்கு முதலில் மக்கள் பிரதிநிதிகள் ஜனநாயக நெறியில் செயல்பட பழகிக் கொள்ள வேண்டும். இன்றைக்கு நம் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் அவரவர் பதவியில் ஒரு குட்டி மன்னராட்சியை நடத்த விரும்புகின்றனரேயன்றி ஒரு குட்டிக் குடியரசை நடத்த விரும்பவும் இல்லை, தெரியவும் இல்லை.

நம் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் மேல் ஆதிக்கம் செலுத்தாமல், மக்களை மதிக்கக்கூடியவராக, மக்களுக்குக் கட்டுப்பட்டவராக, மக்களுக்குக் கடமைப்பட்டவராக, கடப்பாடு உள்ளவராக தங்கள் சிந்தனையையும், நடத்தையையும் மாற்றி தன்னை இழந்து ஆத்ம சக்தியின் அடிநாதமாக உருவெடுத்துச் செயல்பட அனைவரும் முயலவேண்டும். இதுதான் இன்றைய மக்கள் பிரதிநிதிகளிடம் நாம் எதிர்பார்ப்பது.

தொல்குடித் தழும்புகள்
செம்பேன் உஸ்மான்
தமிழில் - லிங்கராஜா வெங்கடேஷ்
விலை. ரூ.180 கலப்பை பதிப்பகம்
போ: 94448 38389