pudhuvai arasu 250புதுவை முரசு இதழ் தொகுப்பு (ஆறு தொகுதிகள்)
தொகுப்பாசிரியர்: வாலாசா வல்லவன் (2009)
தமிழ்க் குடியரசு பதிப்பகம்,
சென்னை.

இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இயக்க வரலாறுகள் குறித்து ஆய்வு செய்யப் பெரிதும் துணை நிற்பன இக்கால கட்டத்தில் வெளியான இயக்க இதழ்களாகும். ஆனால், அனைத்து வாசகர்களின் பார்வைக்கும் இவை கிட்டுவதில்லை. சில குறிப்பிட்ட நூலகங்களில் மட்டுமே இவை கிடைக்கின்றன. ஆய்வாளர்கள் மட்டுமே இவற்றைப் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதே காலத்தில் வெளிவந்த இலக்கிய இதழ்களில் தேர்வு செய்யப்பட்ட பகுதிகள் மட்டுமே நூல் வடிவில் வெளிவந்துள்ளன.

தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும் தமிழக வரலாற்றில் புறக்கணிக்க முடியாத இயக்கங்களாகும். இவ்வியக்கம் நடத்திய இதழ்களும் கூட மேற்கூறிய நிலையிலேயே இருந்து வந்தன. திருவாளர்கள் கி.வீரமணி, கொளத்தூர்மணி, ஆனை முத்து ஆகியோர், பெரியார் நடத்திய குடி அரசு இதழை, கால வரிசையில் தொகுத்து முழுமையாக வெளியிட்ட பின் இக்குறை நீங்கியது.

தமிழகத்துடன் நிர்வாக அடிப்படையில் எவ்விதத் தொடர்பும் இன்றி, பிரெஞ்சு காலனியப் பகுதியாக இருந்த புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் தமிழகத்தின் அண்டை நிலப்பகுதிகளாக மட்டும் இன்றி மொழி-பண்பாடு என்பனவற்றின் அடிப்படையில் நெருக்கமான பிணைப்புக் கொண்டிருந்தன. தமிழகத்தில் வளர்ந்த பொதுவுடைமை இயக்கமும் திராவிட இயக்கமும் இப்பகுதிகளிலும் வேர்பிடித்து வளர்ந்தன.

எனவே, இங்கும் இவ்விரு இயக்கம் சார்ந்த இதழ்கள் தோன்றி வெளிவந்தன. இவற்றுள், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்ப உருவான ஒரு முக்கியமான இதழ் ‘புதுவை முரசு’ ஆகும். இதன் முதல் இதழ் 10-11-1930 இல் வெளிவந்துள்ளது. 1932 மே, இரண்டாம் நாள் இதழ்வரை பதிப்பாசிரியருக்குக் கிடைத்துள்ளது.

இதற்குப் பின்னரும் இதழ் வெளிவந்திருக்கும் என்பது பதிப்பாசிரியரின் கருத்தாகும். தாம் பதிப்பித்த இதழ்களின் எண்ணிக்கை குறித்தும் பதிப்பித்த முறை குறித்தும் 

‘என்னிடம் உள்ள எழுபது இதழ்களில் முதல் இதழில் முதல் ஆறு பக்கம் காணவில்லை. எவ்வளவோ முயன்றும் இதழ்கள் முழுமையாகக் கிடைக்கவில்லை. கடைசி இதழிலும் சந்தா கட்டவும், ஏஜெண்டுகள் தேவை என்ற விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளதால், இதழ் தொடர்ந்து வெளிவந்திருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன்.

இதழ் தொகுப்பு என்ற முறையில் பெட்டிச் செய்திகளைக்கூட நான் விட்டு விடவில்லை. ஏனென்றால் அதிலும் இயக்கச் செய்திகள் ஏராளமாக உள்ளதால், விளம்பரங்கள் தவிர்த்து மற்ற எல்லாச் செய்திகளையும் தொகுத்துள்ளேன்.

ஆறு தொகுதிகளாகப் பிரித்து நூலாக்கியுள்ளேன். மொத்தம் 2496 பக்கங்கள் உள்ளன' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பதிப்பாசிரியர்

பதிப்பாசிரியரான வாலாசா வல்லவன் (செ.சேகர்) பெரியாரின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதழின் ஆசிரியர்கள்

இதழ் தொடங்கிய போது தேங்காய்த்திட்டு க.இராமகிருட்டிணன், முதல் ஏழு இதழ்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். இவரை அடுத்து, குத்தூசி குருசாமி 29-12-1930 வரை ஆசிரியராக இருந்துள்ளார். அரசுப்பணிக்கு அவர் சென்றமையால் 11-05-1931 முதல் 18-01-1932 வரை ஆசிரியர் பெயர் இல்லாமல் இதழ் வெளிவந்தது. இடையில் நான்கு இதழ்கள் வெளிவராது போன நிலையில் மீண்டும் 28-12-31 முதல், இதழ் வெளிவந்துள்ளது. பின்னர் பூவாளுர். பொன்னம்பலனார் ஆசிரியராக இருந்துள்ளார்.

இதழில் எழுதியோர்

ஓர் இதழின் சிறப்புக்கு அதில் வெளியாகும் படைப்புகள் முக்கிய காரணமாகும். பொழுது போக்கிற்காக அன்றி ஒரு கருத்தைப் பரப்பும் நோக்கில் ஆதாயம் விரும்பாது நடத்தப்படும் பத்திரிகையில் வெளியாகும் படைப்புகள் வேறுபாடான முறையில் அமைவது அவசியம். இப்படைப்புகளை எழுதத் தகுதியான எழுத்தாளர்கள் தேவை.

புதுவைமுரசு இதழுக்கு எழுத்தாளர்கள் பஞ்சம் இருந்ததாகத் தெரியவில்லை. குத்தூசி குருசாமி மட்டும் இன்றி, அதில் எழுதியோர் குறித்து பதிப்பாசிரியர் தரும் பெயர்ப்பட்டியல் வாயிலாக இதை உணரமுடிகிறது. பதிப்பாசிரியர் தரும் பட்டியல் வருமாறு:

‘பாரதிதாசனும், புதுவை சிவப்பிரகாசமும் பிழைத் திருத்தம் செய்து கொடுத்தும், கட்டுரைகள், கவிதைகளைத் தொடர்ந்து அதில் எழுதிக் கொண்டும் இருந்தனர். ஏராளமான சுயமரியாதை இயக்கத் தோழர்களின் பேச்சுக்களும், கட்டுரை களும் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சாமி சிதம்பரனார், ம.சிங்காரவேலர், மாயவரம் சி.நடராசன், நாகை என்.பி.காளியப்பன், செல்வி நீலாவதி, குஞ்சிதம், பூவாளுர் அ.பொன்னம் பலனார், எஸ்.இராமநாதன், சித்தர்க்காடு இராமையா, சாத்தான்குளம் அ.இராகவன், நாகர்கோவில் பி.சிதம்பரம் பிள்ளை, காரைக்குடி சொ.முருகப்பா, ஊ.பு.அ. சௌந்தரபாண்டியன் மற்றும் பலரின் சொற்பொழிவுகளும் எழுத்துக் களும்; இங்கர்சாலின் கடவுள், மதம் போன்ற தலைப்புகளிலான சொற்பொழிவுகளின் தமிழாக்கமும் வெளியிடப்பட்டுள்ளன.

குருசாமியும், பாரதிதாசனும் போட்டி போட்டுக் கொண்டு சுயமரியாதை உணர்ச்சியைச் சூடேற்றும் வகையில் மிகவும் எழுச்சியான நடையில் எழுதிக் குவித்தனர். பாரதிதாசன் உரைநடையிலும் கவிதையிலும் கடவுளையும், மதங்களையும், கண்மூடிப் பழக்க வழக்கங்களையும் கண்டித்து அதிக அளவில் துடிதுடிப்புடன் எழுதியுள்ளார்’.

இதழின் நோக்கம்

1930 நவம்பர் 10இல் வெளியான ‘புதுவை முரசு’ முதல் இதழில் இவ் இதழின் நோக்கம் சுயமரியாதை உணர்வைப் பரப்புவதுதான் என்பது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இது குறித்து அதன் தலையங்கம்:

‘புதுவை முரசு என்பதற்குப் புதுவையிலுள்ள மக்களில் ஒரு தொகுதியினரின் முழக்கம் என்பது தேர்ந்த பொருள். அம்முழக்கத்தையுடையது புதுவை முரசுப் பத்திரிகை என்க. புதுவையிலுள்ள ஒரு தொகுதியினர் ஆவார் யாவர்? அவர்தாம் சுயமரியாதைக் கொள்கையுடைய கூட்டத்தார் என்று பட்டவர்த்தனமாக அறிக.

சுயமரியாதை என்பதற்குத் “தன்மானம்” என்பது பொருளாதலின் தேச மக்கள் எவரும் தம் மரியாதையைக் காத்திட வேண்டும் என்பதே சுயமரியாதைக் கொள்கையாம்.

சுயமரியாதைக் கொள்கை ஓர் மதமன்று; மக்களின் முன்னேற்றத்துக்குத் தடை செய்வனவற்றை நீக்குவதாலும்; அரண் செய்வனவற்றை ஆக்கு வதாலும், தேசமக்கள்பால் சுயமரியாதைக் கொள்கை உதிக்கும். ஆதலின் சுயமரியாதைக் கொள்கையை தேசத்தில் இயக்குவதோர் இயக்கம் என வேண்டும்.Õ

சுயமரியாதைக் கொள்கையை, பிரெஞ்சிந்திய மக்களிடமும், இந்திய மக்களிடமும் பரப்புவதே இதன் நோக்கமாகும் என்பதையும் இத்தலையங்கத்தில் குறிப் பிட்டுள்ளனர். இதை உறுதி செய்யும் வகையில் ஈரோடு இரண்டாவது சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங் களின்  சாரம் முதல் இதழில் வெளியாகியுள்ளது. தந்தை பெரியாரும் 4-1-1931 குடிஅரசு இதழில்,

புதுவை முரசு என்னும் வாரப்பத்திரிகை ஒன்று புதுவையில் இருந்து சில மாதங்களாக வெளி வருவது யாவருக்கும் தெரிந்ததாகும். அப் பத்திரிகை... சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பவேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே துவக்கப்பட்டதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆறு தொகுதிகளிலும் வெளியாகியுள்ள செய்திகள், கட்டுரைகள் என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் பின்வரும் கருத்துக்களைப் பரப்புவதில் புதுவை முரசு இதழ் ஆர்வம் கொண்டிருந்தமை புலனாகிறது.

1)    தீண்டாமை எதிர்ப்பு

2)    மத எதிர்ப்பு

3)    பெண் விடுதலை

4)    மூட நம்பிக்கை எதிர்ப்பு

5)    சாதி எதிர்ப்பு

6)    காங்கிரஸ் இயக்க எதிர்ப்பு

கட்டுரைகளாக மட்டும் இன்றி கவிதைகள், துணுக்குகள் என்பனவற்றின் வாயிலாகவும் மேற்கூறிய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான விளம்பரங்களும் இடம்பெற்றன.

கவிஞர் பாரதிதாசனின் பங்களிப்பு இதில் குறிப்பிடத் தக்க அளவில் இருந்தது. அவரது கவிதைத் தொகுப்பு களில், பின்னர் இடம்பெற்ற பல கவிதைகள் இதில் வெளியாகியுள்ளன. இதழின் முதல் பக்கத்தில் அவரது ‘தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு’, ‘சஞ்சீவி பர்வதத்தின் சாரல்’ என்று, இரு குறு நூல்களுக்கான விளம்பரம் வெளியாகி வந்தது. இவ் இரு நூல்களையும் புதுவை முரசு இதழே வெளியிட்டுள்ளது. ‘கே.எஸ்’, ‘நாடோடி’, ‘அடுத்த வீட்டுக்காரன்’, ‘சுயமரியாதைக் காரன்’, ‘வழிப்போக்கன்’, ‘கிண்டல்காரன்’, ‘உண்மை உரைப்போன்’ ஆகிய புனைப் பெயர்களில் பாரதிதாசன் இவ் இதழில் எழுதி வந்ததாக கோகுல் காந்திநாத் குறிப்பிடுகிறார்.

இக்கட்டுரையில் ‘தீண்டாமை எதிர்ப்பு’, ‘மத எதிர்ப்பு’ என்பன தொடர்பாக புதுவை முரசு வெளி யிட்ட கருத்துக்கள் மட்டும் அறிமுகம் செய்யப்படு கின்றன.

தீண்டாமை எதிர்ப்பு:

புதுவை முரசு வெளியான காலத்தில்தான் இந்திய தேசியக் காங்கிரஸ் இயக்கமானது, தீண்டத்தகாதோர் என்ற பெயரில் ஒதுக்கிவைக்கப்பட்ட மக்கள் மீது தன் பார்வையை செலுத்தத் தொடங்கியது. அரிஜனங்கள் என்ற பெயரை இம் மக்களுக்கு இட்டு இவர்களின் அவலநிலை குறித்தும், அவர்கள் முன்னேற்றம் குறித்தும் பேசத் தொடங்கியது.

புதுவைமுரசும் தீண்டாமை என்ற சமூகக் கொடுமையை வெளிப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. சுயமரியாதை இயக்கம் தலித் மக்களின் பால், சார்பு நிலை எடுக்கவில்லை என்றும், இவ்வியக்கம் பிற்படுத்தப் பட்ட சமூகத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் இயங்கியது என்றும் ஒரு கருத்து இன்று சிலரால் முன்வைக்கப் படுகிறது. இக்கருத்து தவறு என்பதற்கான சான்றுகள் புதுவை முரசில் காணப்படுகின்றன.

தேவகோட்டையிலும் அதன் சுற்றுப்புறக் கிராமங் களிலும் வாழும் ‘நாட்டார்’ சாதியினர் அங்கு வாழும் தீண்டத்தகாதோர் என ஒதுக்கிவைக்கப்பட்ட மக்கள் மீது சில கட்டுப்பாடுகளை விதித்தனர். இச் செயல் இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய ஒன்றானது. ஹட்டன் என்ற ஆங்கிலேயர் ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற நூலிலும், அம்பேத்கர் தமது கட்டுரை ஒன்றிலும் இது குறித்து எழுதியுள்ளனர். புதுவைமுரசு இதழ் ‘சுயராஜ்யம் கேட்க வெட்கமில்லையா?’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது. (5-1-1931)

தலையங்கத்தின் தொடக்கத்தில் நாட்டார்கள் விதித்த எட்டு கட்டுப்பாடுகளை,

1)    ஆதித் திராவிடர்கள் தங்கம் வெள்ளி நகைகள் அணியக் கூடாது.

2)    ஆதித்திராவிட ஆண்கள் முழங்காலுக்குக் கீழும் இடுப்பைச் சுற்றிலும் உடுத்தக் கூடாது.

3)    ஆண்கள் கோட்டு, ஷர்ட்டு, பனியன் எதுவும் அணியக்கூடாது.

4)    ஆதிதிராவிடர் யாரும் தலைமயிரை வெட்டி விட்டுக் கொள்ளக்கூடாது.

5)    மண்பாண்டங்கள் தவிர வேறு எதையும் ஆதித் திராவிடர்கள் தம் வீடுகளில் உபயோகிக்கக் கூடாது.

6)    ஆதித் திராவிடப் பெண்கள் இடுப்பிற்குமேல் இரவிக்கை தாவணி முதலிய உடைகளணிந்து மூடக்கூடாது.

7)    ஆதித் திராவிடப் பெண்கள், பூ, மஞ்சள் அணியக்கூடாது.

8)    ஆண்கள் வெயிலுக்கும், மழைக்கும் குடை பிடிக்கவோ செருப்புப் போட்டுக் கொள்ளவோ கூடாது.

என்று பட்டியலிட்டு விட்டு, தலையங்கத்தின் இறுதிப் பகுதியில்,

'ஆங்கிலேயர்களோ, அவர்களுடைய அரசாங்கத் திற்குக் கீழ்ப்பட்டவர்களோ நமக்குச் செய்வதாகச் சொல்லப்படும் கொடுமைகள் நாட்டார்களின் கொடுமைக்கு உரைபோடக் காணுமா? அன்றியும் மார்பினால் ஊர்ந்தாவது தெருவில் போகலாம் என்று சொன்ன டயர் பொல்லாதவனா? மக்கள் செருப்பு, குடை உபயோகிக்கக் கூடாது என்றும், பெண்கள் அரை நிர்வாண முறையிலிருக்க வேண்டுமென்றும் கட்டாயப்படுத்தும்  நாட்டார்கள் பொல்லாதவர்களா?'

என்று வினவுகிறது. காரைக்குடி பகுதியில் உள்ள, மாத்தூர், இலுப்பக்குடி ஊர்களிலும், தேவகோட்டைப் பகுதியில் உள்ள கல்லிவயலிலும் வாழும் தீண்டாமைக்கு ஆட்பட்டிருந்த மக்கள் வாழும் பகுதிக்கு 6-3-31 இரவில் தீயிட்டதையும் அம்மக்களைக் கொடூரமாகத் தாக்கி யதையும் பள்ள சுப்பன் என்ற இளைஞரும் மற்றொரு இளைஞரும் கொலை செய்யப்பட்டதையும் குறித்த செய்திக் கட்டுரை 30-3-1931 இதழில் வெளியாகி உள்ளது.

22-12-1930, 29-12-1930 நாளிட்ட இரு இதழ் களிலும் ‘ஆதித் திராவிடப் பிள்ளைகள் படும் பாடு’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரை, Ôதொட்டில் பருவம் தொடங்கி சிறார்ப்பருவம் வரை ஆதித்திராவிடப் பிள்ளைகள் எத்தகைய அவல வாழ்க்கையை எதிர் கொள்ள நேரிடுகிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது. ஆனால் கட்டுரையின் இறுதியில் ‘தங்கள் சொந்தப் பிள்ளைபோல் இந்த எளிய ஆதித்திராவிடப் பிள்ளைகள் மீது குற்றமிருக்கில் கொடூரமாய்த் தண்டிக் காமல் அன்பு பாராட்டி வருவார்களாக’ என்று முடித்திருப்பது வேடிக்கையாய் உள்ளது.

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதியை, புதுவை முரசு ஆதரித்துள்ளது.

மத எதிர்ப்பு

சைவம், வைணவப் புராணங்கள், கோவில் அர்ச்சகர்கள் தொடர்பான விமர்சனம் பரவலாக இடம் பெற்றுள்ளது. இத்துடன் இல்லாமல் இஸ்லாம் கிறித்தவம் தொடர்பான விமர்சனங்களும் இடம் பெற்றுள்ளன.

பெண் குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் நோக்கில், பெண்களின் திருமணவயதை உயர்த்திய சாரதா சட்டத்தை இஸ்லாமியர்களுக்கும் நடைமுறைப் படுத்தவேண்டும் என்ற இஸ்லாமியப் பெண்களின் வேண்டுகோள் ‘முஸ்லீம் வைதிகர்களுக்கு சரியான சவுக்கடி முஸ்லீம் பெண்களின் ஆத்திரம்’ என்ற தலைப்பில் 9-2-1931 இதழில் வெளியாகியுள்ளது.

கிறித்தவம் குறித்த கடுமையான விமர்சனங்கள், பரவலாக இடம்பெற்றுள்ளன. இவற்றுள் பெரும் பாலானவை, கத்தோலிக்க கிறித்தவத்தில் நிலவும் தீண்டாமை, குருக்கள் துறவியரின் பாலியல் தவறுகள், சடங்குகளின் பெயரால் நிகழ்த்தப்படும் பொருளாதாரச் சுரண்டல் என்பனவற்றை மையமாகக் கொண்டுள்ளன. புதுச்சேரியின் காலனியவாதிகளான பிரெஞ்சுக்காரர்கள் கத்தோலிக்கர்கள் என்பதால் இங்கு கத்தோலிக்கத்தின் பரவல் அதிகம். எனவே கத்தோலிக்கம் மீதான விமர்சனம் மேற்கொள்வது இயல்பான ஒன்றாக அமைந்துவிட்டது.

‘இங்கிலாந்து சர்ச்’, ‘சண்டே டைம்ஸ்’ என்ற இரு ஆங்கில ஏடுகளில் வெளிவந்த செய்திகளை அடிப் படையாகக் கொண்டு 19-01-1931 இதழில் ‘கிறிஸ்து மதத்தின் நிலைமை’ என்ற கட்டுரை வெளியானது. அதில், நன்கொடையிலும் திருமுழுக்குப் பெறுவோர் மதக் குருக்கள் எண்ணிக்கையிலும் பின்னடைவை இங்கிலாந்து கிறித்தவத் திருச்சபை எதிர்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதுச்சேரி கத்தோலிக்கத் திருச்சபையின் இதழான ‘சர்வவியாபி’ இதை மறுத்து கடிதம் ஒன்றை 11-2-31 இல் வெளியிட்டது.  இம்மறுப்பிற்கு ‘சர்வ வியாபிக்குப் பதில்' என்ற தலைப்பில் புதுவை முரசு 23-03-1931 இதழில் தலையங்கம் வெளியிட்டது.

‘ரோமன் காத்லிக்’ மதமானது ‘இந்து’ மதத்தைவிட மிகவும் மோசமானது என்றும், அதற்குப் பணச் செருக்கைத் தவிர வேறு எதும் செல்வாக்கோ  யோக்கியதையோ கிடையாததால் அம்மதம் பகுத்தறிவு உலகத்தின் ஜோதியில் சீக்கிரம் தானாகவே எரிந்து விடுமென்றும் நினைத்து இதுகாறும் அதற்கு மறுப்பு எழுதாமலிருந்தோம். ஆயினும், புதுவையிலும், இன்னும் மலையாளம் முதலிய இடங்களிலுமுள்ள “ரோமன் காத்லிக்” மதத்தை ஏற்கனவே தழுவியிருந்த சுயமரியாதை அன்பர்கள் பலர் அம் மறுப்பின் ஆதாரமற்ற தன்மையைப் பொது ஜனங்களுக்கு விளக்க வேண்டியது அவசியம் என்று விரும்புகிற படியாலும், நாமும் கிறிஸ்துவ மதத்தின் தன்மையை நமது மக்களுக்கு விளக்குவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று கருதுகிறபடியாலும் “சர்வ வியாபிக்குப் பதில்” என்று தலைப்பிட்டு இதை எழுதத் துணிந்தோம்.

என்று முடிவுற்றது. இதன் தொடர்ச்சி 30-3-1931 இதழில் வெளியானது. அதில் கல்வி, மகத்துவம் என்பனவற்றை தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கத்தோலிக்கம் வழங்குவதை ஒப்புக்கொண்டும், அதை மதத்தின் அடிப்படையில் இன்றி மனிதன் என்னும் முறையில் செய்தால் ஏற்றுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக,

இதைவிட்டு, பெயரளவில் மாத்திரம் 'காலேஜ்' கட்டினதையும் “ஆஸ்பத்திரி” கட்டினதையும் பறையடித்துக் கொண்டும், பெயரளவில் மாத்திரம் “புனித மார்க்க”மென்று சொல்லிக் கொண்டு, பாமர மக்களிடத்தில் பணத்தாசையைக் காட்டி ஏமாற்றிச் சேர்த்துக் கொள்வதும், பிறகு பார்ப்பானுக்கு “மேரீஸ் தோப்பும்”, பறையனுக்குத் தனி “சர்ச்சு”ம் கட்டிக் கொடுப்பதும், அந்தோணி பிள்ளை, ஆரோக்கியசாமி முதலியார், அற்புத சாமி உடையார், தெய்வசிகாமணி நாடார் என்று பாழும் “இந்து” மதத்திலிருந்த வால்களை விடாமல் ‘கிறிஸ்துவ’ப் பெயர்களோடு சேர்த்துத் தொங்கவிட்டுக் கொண்டு, தெருத் தெருவாய் அலைவதும் பாவ மன்னிப்பின் பேரால் ஏழை களிடம் அகப்பட்டவரையில் சுரண்டுவதும் - இன்னும் இம்மாதிரியான ஆபாசங்களும் அட்டூழியங்களும் “கிறிஸ்து” மதத்தின் பேராலும் நடைபெற்றுக் கொண்டு வருவதால்தான், “சர்வவியாபி”க்குப் பதில் எழுத வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படுகிறது.

தலையங்கத்தின் இறுதிப்பகுதியில் பின்வரும் வினாக்கள் இடம்பெற்றிருந்தன.

எல்லா மதங்களும் மனிதர்களால் ஏற்படுத்தப் பட்டனவா? கடவுள்களால் என்றால் ஒரு மதத்திற்கு ஒரு மதம் கீரியும் பாம்புமாக இருப் பதற்குக் காரணம் என்ன? கிறிஸ்து மதம் ஏற்படு வதற்கு முன்பு இருந்த மனிதர்களெல்லாம் “பாவ மன்னிப்பு”ப் பெறாததால் என்னவானார்கள்? இப்போது பிற மதங்களில் இருப்பவர்களின் கதியென்ன? கிறிஸ்து மதக் கடவுள், இந்து மதக் கடவுள், இஸ்லாம் மதக் கடவுள் ஆகிய பல கடவுள்கள் உண்டா? இல்லையானால் எந்த மதத்திலிருந்தால்தான் உங்களுக்கென்ன? ‘கடவுளே’ புறக்கணிக்கப்பட்ட புத்தமதத்தைச் சேர்ந்தவர்களின் கதியென்ன? அவர்களெல்லாம் ‘நரக’த்திற்குப் போகிறவர்களா?

இத்தலையங்கத்தை எதிர்த்து, பதினெட்டு கத்தோலிக்கக் குருக்கள் பிரெஞ்சு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆளுக்கு ரூபாய் 100 நட்டஈடு கேட்டிருந்தனர். இது குறித்து ‘கிண்டற்காரன்’ என்ற பெயரில் பாரதிதாசன் எழுதிய பின்வரும் ;துணுக்கு'27-4-1931 இதழில் வெளியானது.

ஏழை: ஐயா! என்ன? நீர் கடவுள் பேரால் எல்லா விஷயங்களையும் நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு உமது இஷ்டத்துக்குக் கோர்ட்டில் வழக்குப் போடுகிறீரே?

ஆஸ்திகர்: கடவுள்பேர் மக்களை ஏமாற்ற; வழக்குப் போடுவது அந்த ஏமாற்றுக்களைக் காப்பாற்ற.

புதுவை முரசு இதழின் நிர்வாகியான ம.நோயல், பதினெட்டு குருக்களுக்கும் தலைக்குப் பத்து ரூபாய் தர வேண்டுமென்றும், அரசுக்கு 500 பிராங் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பாகியது. ஒரு மாதம் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இனி இத்தகைய குற்றத்தை அவர் மேற்கொள்ளாதவரை அதை அனு பவிக்க வேண்டியதில்லை என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

இத்தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி உயர்நீதிமன்றத்தில் நோயல் மேல் முறையீடு செய்தார். அதில் 500 பிராங் அபராதம் 250 பிராங் ஆகக் குறைக்கப்பட்டது. இதை அடுத்து பாரிசில் உள்ள நீதிமன்றத்தில் நோயல் மேல் முறையீடு செய்தார். இம்மனுவின் மீதான தீர்ப்பு வெளி வரும் முன்னர் புதுவை முரசு நின்றுபோய்விட்டது. மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதாக சர்வ வியாபி எழுதியுள்ளது. மேல்முறையீட்டில் நோயல் வெற்றி பெற்றதாக, புதுச்சேரி வரலாறு எழுதியுள்ள ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.

தொகுப்பின் பயன்பாடு

புதுச்சேரியில் இருந்து வெளிவந்த போதிலும் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் செயல்பட்டமை குறித்த செய்திகளையும் புதுவை முரசு வெளியிட்டு வந்துள்ளமையால் இவ் இயக்கம் குறித்த ஆய்வுக்கு இத்தொகுப்பு மிகவும் பயன்படும். சுயமரியாதை இயக்கத்தின் செயல்பாடு, சுயமரியாதை இயக்கம் சார்ந்தோர் எதிர் கொண்ட இன்னல்கள், இவ் இயக்கம் மீதான சில சாதியினரின் அணுகுமுறை, மதவாதிகளின் செயல்பாடு, தேசிய இயக்கம் குறித்த விமர்சனங்கள்  என்பனவற்றை அறிய இத்தொகுப்பு மிகவும் உதவும்.

ஓர் அரிய வரலாற்றாவணத்தைத் தொகுத்து வெளியிட்ட தோழர் வாலாசா வல்லவனின் பணி பாராட்டுக்குரியது. பதிப்பு முறையிலும், நூலின் வடிவமைப்பிலும் சற்று முயற்சி எடுத்திருந்தால் இத்தொகுப்பு மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.

துணை நின்ற நூல்கள்:

Ramasamy.A (1987) History Of Pondicherry

கோகுல் காந்திநாத் (2001) கருப்பு மலர்களின் நெருப்புப் பயணம்.