d rajaஅறிஞர் பெருமக்களே! தோழர்களே! அனைவருக்கும் வணக்கம். Marx- Ambedkar a continuing dialogue  என்று ஆங்கிலத்திலும் மார்க்ஸ் அம்பேத்கர் - தொடரும் உரையாடல் என்று தமிழிலும் என இரண்டு பதிப்புகளைக் கொண்டு வந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துக்கு என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன். தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்து, அது சிறப்பாக அமைந்திருக்கிறது என்று எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் ரகு அந்தோணி அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அறிஞர் பெருமக்கள் சிலருடைய உரைகளை நான் கேட்டேன்.

இந்த நூல் வந்ததற்கு ஒரு பின்னணி இருக்கிறது. ஒரு கதை இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மராட்டிய மாநிலத்தில் நாக்பூருக்கு அருகில் கயர்லாஞ்சி என்கிற இடத்தில் தலித் மக்களுக்கு எதிரான ஒரு கொடூரம் நிகழ்ந்தது. இரண்டு தலித் பெண்கள் (தாயும் மகளும்) எப்படி கொடுமைப்படுத்தப்பட்டார்கள், கேவலப்படுத்தப்பட்டார்கள் என்பதை நாடே அறியும். அந்த நேரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் எங்களுடைய கட்சியினுடைய தலைமை இச்சம்பவம் குறித்து ஒரு வெளியீடு கொண்டு வரப்பட வேண்டும், ஒரு சிறு நூல் புக்லெட் வடிவத்தில் வெளிவர வேண்டும்; அதை நீங்கள் தான் எழுத வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். அப்பொழுதுதான் நான் அதை எழுத முடிவு செய்தேன். இது 7 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது.

பல்வேறு விதமான கொந்தளிப்புகள், கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமிருந்தன. அதனைத்தான் முதலில் நான் தொடக்கமாக எடுத்துக் கொண்டேன். அதைச் சொல்லுகின்ற போது கூட, 18 ஆம் மற்றும் 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இந்திய சமூகத்தில் இந்த ஜாதிக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய மாபெரும் புரட்சியாளர்கள் என்று மகாத்மா பூலேவை நான் குறிப்பிட்டிருக்கின்றேன். அதேபோல ஸ்ரீநாராயணகுரு, கேரளாவில் இருந்த தலித் போராளி அய்யன்காளி அவர்களைக் குறிப்பிட்டிருக்கிறேன். நம்முடைய தமிழ்நாட்டில் பண்டிதர் அயோத்திதாஸ் அவர்களையும் பெரியார் ஈ.வெ.ரா அவர்களையும் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்குப் பின்னர் டாக்டர் அம்பேத்கர் இந்தப் போராட்டத்தை எப்படி ஒரு புரட்சிகரமான முறையில் கொண்டு சென்றார் என்பதை நான் குறிப்பிட்டுத் தான் அதைத் தொடங்கியி ருக்கிறேன்.

இரண்டாவது அத்தியாயம் கயர்லாஞ்சியைப் பற்றியது. அந்த நிகழ்வை ஒரு தேசிய அவமானம் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். மூன்றாவது அத்தியாயம் தலித் மக்களுடைய இன்றைய வாழ்நிலையைப் பற்றி எழுதியிருக்கிறேன். ஐந்தாவது அத்தியாயத்தில் அம்பேத்கரின் கருத்துக்கள். ஜாதி, வர்க்கம் குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்கள், பார்வை பற்றியது இந்த அத்தியாயம். அடுத்த அத்தியாயம் அம்பேத்கரும் மார்க்சிசமும். கடைசியாக இதிலிருந்து மேலெழும்பிச் செல்ல என்ன வழி என்பது குறித்தது.

என்னுடைய "Dalit Questions Way Forward " என்னும் நூல் வெளிவந்தவுடன், உங்களுக்கெல்லாம் தெரிந்த தலித் தலைவர், வழக்கறிஞர், அர்ப்பணிப்பு உணர்வோடு மக்களுக்காகப் போராடிய மாபெரும் போராளி, புரட்சியாளர் கோவிந்த் பன்சாரி. சனாதன சக்திகளால் படுகொலை செய்யப்பட்டவர். அவர் இந்த நூலைப் படித்துவிட்டு, “தோழர் ராஜா! இதை ஏன் நீங்கள் விரிவாக்கம் செய்யக்கூடாது. அதை ஒரு நூல் வடிவத்தில், பல்வேறு கோணங்களில் பிரச்சினைகளை விவாதித்து முன்வைத்தால் நன்றாக இருக்கும்” என்று அவர்தான் சொன்னார். அப்போதுதான் இப்படியரு நூலைக் கொண்டு வருவதற்கான எண்ணம் எனக்குள் வந்தது. இந்தப் பணியை நான் மட்டுமே செய்துவிட முடியாது என்பதும் எனக்குப் புரிந்தது. எனக்கிருக்கிற அரசியல் பணிகளுக்கு மத்தியில் இதனைக் குறித்த ஆய்வுகளையெல்லாம் செய்து முடித்து, அதையொரு முழு வடிவத்தில் கொண்டு வருவது சிரமம் என்று எனக்குப் புரிந்தது.

அப்பொழுது உடனடியாக எனக்கு நினைவில் வந்த ஒரு தோழர் டாக்டர் முத்துமோகன். இளம் பருவத்திலிருந்து இயக்க ரீதியாக நாங்கள் ஒன்றுபட்டிருக்கிறோம். பேராசிரியர் வானமாமலை காலத்தில் அவரைச் சுற்றியிருந்த அந்த சிந்தனையாளர் வட்டத்தில் யார் யார் இருந்தார்கள் என்பதிலிருந்து தோழர் முத்துமோகன் அவர்களை எனக்குத் தெரியும். பின்னர் தோழர் முத்துமோகன் அவர்கள் மாஸ்கோவிற்கு உயர் படிப்பிற்காகச் சென்றார். மாஸ்கோவில் அவர் இருந்த காலத்தில் மாஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பலமுறை அவரை நான் சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் எனக்கு சில பரிசுகளையும் கொடுத்திருக்கிறார். அதில் ஒன்று கார்ல் மார்க்ஸ் இடதுகையை தலையில் வைத்துக் கொண்டு, வலது கையால் எழுதிக் கொண்டிருப்பது போன்ற ஒரு சிலை. அதனை வேறு எங்கேயும் பார்க்க முடியாது. அவர் எப்படி பெற்றார் என்று எனக்குத் தெரியாது. அவர் கொடுத்த அந்த சிலையை இன்னும் நான் போற்றி, பாதுகாப்பாக வைத்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல ஒரு செஸ் போர்டைக் கொடுத்தார். அதுவும் என்னிடம் இருக்கிறது.

இதைச் சொல்வதற்குக் காரணம் அந்த அளவிற்கு நாங்கள் நெருக்கமான உறவுகளோடு இருக்கிறோம். இது வெறும் சாதாரண உறவுகள் அல்ல. கருத்துத் தளத்தில் ஒன்றுபட்ட சிந்தனை, ஒத்த கருத்துக்கள், அதேபோல அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஒரேவிதமான அக்கறை, அதற்கான அணுகுமுறை ஆகியவை எங்களிடம் இருந்த காரணத்தினால் அவரிடம் இதைப்பற்றி சொல்லி நான் வேண்டுகோள் வைத்தேன். நாம் இதைச் செய்ய வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதுவொரு முக்கியமான பணியாக இருக்கப்போகிறது. Idelogical political pattern என்று எடுத்துக் கொண்டால் இப்படிப்பட்ட ஒரு பணியை நாம் செய்தாக வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தினேன். அவர் மதுரை பல்கலைக்கழகத்தில் இருந்தார். பின்னர் அமிர்தசரஸ் பல்கலைக்கழகத்துக்குப் போனார். இந்த பணியைப் பற்றி நான் சொல்லுகின்றபொழுது உடனடியாக அதனை ஏற்றுக் கொண்டார். “ஆமாம். நாம் இதனைச் செய்ய வேண்டும். ஒரு நூலாகக் கொண்டு வரவேண்டும்” என்று அவரும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார்.

எனவே இரண்டுபேரும் பல சந்திப்புகளை மேற்கொண்டோம். அதிலெல்லாம் இந்த கருத்துக்களை விவாதித்தோம். இந்த நூலில் என்னென்ன நாம் சொல்ல வேண்டும் என்பதை முடிவு செய்தோம். அதற்குத் தலைப்பு வைப்பதைக் கூட நாங்கள் இணைந்து யோசித்துதான் செய்தோம். Marx-Ambed­kar Continuing the Dialogue' ' என்று ஆங்கிலத்தில் அதை வைத்தோம். தமிழில் அது 'தொடரும் உரையாடல்' என்று வந்திருக்கிறது. எனவே இந்த நூல் வெளிவருவதில் தோழர் முத்துமோகன் அவர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. அதில் அவருடைய பங்கு சாதாரணமானது அல்ல. கட்சியில் சீனியர் என்கிற முறையில் இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கிற மார்க்சிய அறிஞர்களில் முக்கியமான ஒருவர் முத்துமோகன் என்று நான் எப்போதும் கருதுகிறேன். உடனே அவர் முன்வந்ததால் நாங்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து இந்த முயற்சியை மேற்கொண்டு, இந்த நூல் வெளிவந்திருக்கிறது.

இந்நூல் வெளிவருவதற்கு முன்னால் தோழர் ஏ.பி.பரதன், கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அவரிடம் இந்த நூலின் நகலை அத்தியாயம், அத்தியாயமாகக் காட்டி, அவரும் அதை உற்றுநோக்கி சில கருத்துக்களைச் சொல்லி, அது முன்னுரையாகவும் இந்த நூலில் இடம்பெற்றிருக்கிறது. இப்படி இந்த நூல் உருவாவதற்கு சில பின்னணி இருந்தது. தேவையும் இருந்தது. இன்றைக்கு மார்க்ஸ், அம்பேத்கர் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதைப் பேரறிஞர்கள் பலரும் இங்கேயும் முன்வைத்தார்கள். மார்க்ஸ் - அம்பேத்கர் என்று வருகின்றபொழுது ஒரு கம்யூனிஸ்ட் என்கிற முறையில் நான் அதை எப்படி அணுகினேன்; தோழர் முத்துமோகன் எப்படி அணுகினார் என்பதை நான் குறிப்பிட வேண்டும்.

மதுரையில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. மார்க்சிய - தலித் சிந்தனையாளர்கள் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கு அது. நான் டெல்லியிலிருந்து அதில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்தேன். விவாதம் நல்ல முறையில் நடைபெற்றது. கடைசியாக நான் பேசினேன். பேசுகிறபொழுது கடைசியாக ஒரு கேள்வியையும் முன்வைத்தேன். இப்போது அம்பேத்கர் உயிரோடு இருந்தால் அவருடைய அணுகுமுறை, அவர் யாரோடு சேருவார் என்று உங்களால் சொல்ல முடியுமா என்று கேட்டேன். இந்துராஷ்டிரா என்ற கொள்கையை அம்பேத்கர் முழுக்க முழுக்க நிராகரித்தவர். “நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று சொன்னது மட்டுமல்ல, அரசியல் சட்டத்தை உருவாக்குகிற பொழுதே, அரசியல் சாசனக் கூட்டத் தொடரிலேயே “இந்து ராஷ்டிரா ஒரு எதார்த்தமாகிவிட்டால் அதைவிட பேரிடர் இந்த நாட்டுக்கு எதுவும் இருக்க முடியாது. அதனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது; இந்தியா எப்போதும் ஒரு மதவாத நாடாக மாறிவிடக் கூடாது. இந்தியா ஒரு குடியரசாக இருக்க வேண்டும்” என்பது தான் டாக்டர் அம்பேத்கர் சொன்னது.

இப்போது பாஜக, ஆர் எஸ் எஸ் இந்த அளவுக்கு மூர்க்கத்தனமாகச் செயல்படுகிறது ; அம்பேத்கர் அவர்களுக்கு சார்பாக இருப்பார் என்று யாராவது கருதுகிறீர்களா என்று கேட்டேன். உடனே எல்லோரும் இல்லை, இல்லை, அம்பேத்கர் எந்த சூழலிலும் அப்படியரு நிலையை மேற்கொள்ள மாட்டா ர். சனாதன சக்திகளுக்கெதிராக அம்பேத்கர் மிகப்பெரிய அளவில் போராடுவார் என்று சொன்னார்கள். அடுத்து நான் கேட்டது, 'இந்த நியோ லிபரல் கொள்கைகளின் காரணமாக இன்றைக்கு இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் சமத்துவமின்மை, நாடுகளுக்கிடையே ஏற்றத்தாழ்வு அதிகமாகி வருகின்றன. அதைப்போல ஒவ்வொரு நாட்டுக்குள்ளேயும் மக்களுக்கிடையே சமத்துவமின்மை அதிகமாகி வருகின்றன. அதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்திருக்கின்றன. இந்த கட்டத்தில் அம்பேத்கர் என்ன செய்வார். இந்த நவீன பொருளாதார கொள்கைகளை அம்பேத்கர் ஏற்பாரா?' என்று கேட்டேன். சில நொடிகள் அமைதி நிலவியது. அப்போதுதான் அந்த அமைதிக்குள்ளாக நுழைந்து நானே பேசினேன்.

அம்பேத்கர் இப்போது இருப்பாரானால், இந்த நவீன பொருளாதாரக் கொள்கைகளை மிகப்பெரிய அளவில் எதிர்ப்பார். ஏனென்றால் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குகிற பொழுதே இதுகுறித்து பல கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார்.

சிலர் கேட்டார்கள், ஏன் சோசலிசத்தை நீங்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் வைக்கவில்லை என்று. அப்போது தான் அம்பேத்கர் சொன்னார், “directive principles of state policy" என்று நான் எழுதியிருக்கிறேன். அதில் சொல்லப்பட்டிருப்பதெல்லாம் சோசலிசம் என்று குறிப்பிட்டார். அதேபோல பல இடங்களில் அம்பேத்கர் ஸ்டேட் சோசலிசம் என்று பேசியி ருக்கிறார். உற்பத்தி சாதனங்களெல்லாம் மக்களுக்கு உடைமையானதாக இருக்க வேண்டும். மக்களுக்குக் கிடைத்திருக்கிற அரசு ஒரு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும். சோசியலிசம் கட்டப்பட வேண்டும் என்று தான் அம்பேத்கர் பேசியிருக்கிறார். எனவே அம்பேத்கர் இந்த நியோ லிபரல் பாலிசியை ஒருகாலத்திலும் ஏற்க மாட்டார். பின் அம்பேத்கர் எங்கே போவார் என்று நான் திரும்பக் கேட்டேன். எல்லோரும் ஒருவரையருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கும் நானே கூறினேன் “அம்பேத்கர் என்னை நோக்கி வருவார்; நான் அம்பேத்கரை நோக்கிப் போவேன். இருவரும் கட்டித் தழுவுவோம். இருவரும் கரம்கோர்த்து நாங்கள் செயல்படுவோம், நடைபோடுவோம்" என்று நான் பேசினேன்.

இதைக் குறிப்பிடுவதற்குக் காரணம் மார்க்ஸ் - அம்பேத்கர் குறித்த இந்த உரையாடலில் தோழர் முத்துமோகனும் நானும் ஏன் தொடங்கினோம் என்பதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதற்காக நான் சொல்லுகிறேன். இன்றைக்குக்கூட சில முயற்சிகள் நடைபெறுகின்றன. அம்பேத்கரையும் மார்க்ஸையும் ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துவது, ஒருவரை சிறுமைப்படுத்தி இன்னொருவரை உயர்த்துவது என்கிற போக்குகளெல்லாம் இன்றைக்கு இருக்கின்றன. தலித் அரசியலிலேயே பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் தலித் சோசியலிசம் என்று பேசுகிற நிலையும் கருத்துக்களத்தில் வந்திருக்கிறது. 'தலித் சோசலிசம்' (dalit socialism) அப்படியென்றால் 'தலித் கேப்பிட்டலிசம்' (dalit capitalism) என்ற ஒன்று இருக்கிறதா? அதேபோல கம்யூனிஸ்ட்டுகள் பேசுகிற சோசலிசம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்கிற கேள்விகளெல்லாம் வருகின்றன. அந்த இடங்களில் தான் 'asiatic mode of production ' பற்றிய கருத்துக்களையெல்லாம் முன்வைக்கத் தொடங் கினோம். மார்க்சியம் என்பது ஓர் அறிவியல்; மார்க்சியம் ஒரு சித்தாந்தம் என்கிற முறையில் அது உலகம் தழுவிய ஒன்றாக இருக்கிறது. ஆனால் அதனைச் செயல்படுத்துகிற பொழுது, ஒவ்வொரு நாட்டினுடைய சமூக, பொருளாதார நிலைமைகளுக்கு உட்பட்டு அதனைச் செயல்படுத்த வேண்டும். இதைத்தான் லெனினும் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்றைக்கு இந்தியாவில் கம்யூனிசம், அதுபேசும் புரட்சி வெற்றி பெற வேண்டுமானால் இந்திய நாடு யாரையும் காப்பியடிக்க முடியாது. சீனாவிற்கென்று ஒரு பாதை இருக்கிறது. கியூபாவுக்கென்று ஒரு பாதை இருக்கிறது. ஒவ்வொரு நாட்டிற்கும் சோசியலிசம் பற்றிய பார்வை இருக்கிறது; புரட்சிக்கான ஒரு பாதை இருக்கிறது. அந்த பாதை என்பது அந்தந்த நாட்டினுடைய நிலைமைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்போது சீனாவில் “Socialism With Chinese Characteristics " என்று சொல்கிறார்கள். அதேபோல இந்தியாவில் நாம் சோசலிசம் என்று பேசுகிற பொழுது, “Indian Characteristics" என்று நாம் பேச வேண்டும். எனவே இந்தியாவில் இன்றைக்கு சோசியலிசத்தைப் படைக்க வேண்டுமானால் நாம் வர்க்கப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்த வேண்டும். இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியைப் பொருத்தவரை, நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். நான் இப்போது கட்சியினுடைய பொதுச்செயலாளராக இருக்கிறேன்; அதற்கு முன்னர் தேசியச் செயலாளராக இருந்தபோது கூட நான் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறேன். இந்தியப் புரட்சி என்பது எப்படிப்பட்டதாக இருக்கும்? இந்தியாவில் வர்க்கப் போராட்டம் எப்படிப்பட்டதாக இருக்கும்? என்ற கேள்விகளை எழுப்பும்போது நான் சொல்லியிருக்கிறேன். இந்தியாவில் வர்க்கப் போராட்டம் என்பது வெறும் பொருளாதாரச் சுரண்டலுக்கான போராட்டம் மட்டுமல்ல; அது ஜாதியக் கட்டமைப்புக்கு எதிரான, அதனை தகர்த்தெறிவதற்கான போராட்டமாக, டாக்டர் அம்பேத்கர் சொன்னதைப் போல “Annihilation Of Caste" என்பது தான் இந்த வர்க்கப் போராட்டத்தினுடைய ஒரு பகுதியாக இருக்கும்.

அதேபோல, பல அரசியல் அதிகாரத்துக்கு எதிரான போராட்டம். உழைக்கும் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் இவர்களுக்கெல்லாம் அரசியல் அதிகாரம் வேண்டும். இதைத்தான் தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன். எங்கள் கட்சியும் வலியுறுத்தி வருகிறது. இந்த கட்டத்தில்தான் மார்க்ஸ் - அம்பேத்கருக்கு இருக்கிற நெருக்கம் என்பதை நாம் பார்க்க வேண்டும். அம்பேத்கரே சொல்லியிருக்கிறார் “நான் பொருளாதாரப் பேரறிஞர்; நான் மார்க்ஸைப் படித்திருக்கிறேன். ஆழமாகக் கற்றிருக்கிறேன். அதேபோல பௌத்தம் மற்றும் கம்யூனிசம் என்பதை ஆழமாகக் கற்றிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். இதை நாம் ஆழமாகக் கவனிக்க வேண்டும்.

அம்பேத்கருக்கு ஏன் அந்த வரலாற்றுத் தேவை ஏற்பட்டது, பௌத்தத்தையும் மார்க்ஸையும் இணைத்துப் பார்க்கிற ஒரு பார்வை அம்பேத்கரிடம் ஏன் உருவானது? என்று புரிந்து கொள்ள வேண்டும். இது சாதாரணமானதல்ல; அம்பேத்கர் வேறு யாரையும் கொண்டுவரவில்லை. பௌத்தத்தை விவாதிக்கும்போது கார்ல் மார்க்ஸை தான் அவர் எடுத்துக் கொள்கின்றார். அவர்களுக்கிடையே தான் ஒப்புமையை கொண்டு வருகிறார். அதேபோல மார்க்ஸ் இந்தியாவைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறா ர் . மா ர்க்ஸ் மிகப்பெரிய படிப்பாளி. அறிவாளி. அதேபோல அவருடைய நண்பர் ஃபிரடெரிக் ஏங்கெல்ஸ் ஐரோப்பாவிலி யே தலைசிறந்த படிப்பாளி என்று பெயர் பெற்றவர். இவர்களெல்லாம் நூல்களைத் தேடி ஞானத்தைப் பெற்றவர்கள் மட்டுமல்ல; நடைமுறை இயக்கங்களையும் தேடி, அதை உருவாக்கியவர்கள். அதை நாம் உள்வாங்கிக் கொள்வது அவசியம். அம்பேத்கர் நடத்திய போராட்டங்களை நாம் உற்றுநோக்க வேண்டும்.

கொங்கண் பகுதியில் மக்களுடைய நிலவுரிமைக்காகப் போராடியிருக்கிறார். வர்க்கம், ஜாதி ஆகியன ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போன்றவை. இதனை நாம் எப்படி பார்க்க வேண்டும்? ஒவ்வொரு வர்க்கத்துக்குள் ஜாதி இருக்கிறது. அதேபோல ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் வர்க்க வேறுபாடுகள் வளர்கின்றன. இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயற்கையியல் ரீதியான மாறுதல்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்திய சமூகத்தில் ஜாதி என்பது ஓர் அடிப்படை பிரச்சினை. இதைத்தான் அம்பேத்கர் “Caste is a Monstar; where ever you go it passes your path" அரசியல் சீர்த்திருத்தம், பொருளாதார சீர்த்திருத்தமெல்லாம் ஜாதி இருக்கிறவரை அர்த்தமற்றது என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

எனவே இந்திய சமூகத்தில் ஓர் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வந்து, எல்லோரும் எல்லாமும் பெற்று கவலைகள் இல்லாத, துயரங்கள் இல்லாத ஒரு வாழ்க்கையைப் பெற வேண்டுமானால் இந்திய சமுதாயத்தில் ஓர் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். இது ஜாதியில்லாத ஓர் இந்தியாவாக, சுரண்டல் இல்லாத இந்தியாவாக அதைப் படைப்பதற்காக நாம் முன்னேற வேண்டும். இங்குதான் இன்றைய சூழலில் கம்யூனிஸ்ட்டுகள், அம்பேத்கரிய இயக்கங்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் யார் எப்படி நடந்து கொண்டார்கள் என்று இப்போது ஆய்வு செய்துகொண்டிருக்க முடியாது. இப்போது என்ன செய்ய வேண்டும் என்றுதான் பார்க்க வேண்டும். இதைத்தான் மார்க்சும் குறிப்பிட்டார்.

எல்லா தத்துவ ஞானிகளும் உலகத்தைப் பல்வேறு வழிகளில் வியாக்யானம் செய்திருக்கிறார்கள். ஆனால் நம் முன்னால் இருக்கிற பிரச்சினை, மாற்றம் ஏற்பட வேண்டும்? இதனை மாற்றுவது எப்படி? மாற்றத்திற்கான வழிமுறை என்ன? ஜாதியக் கட்டமைப்பைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், பொருளாதாரச் சுரண்டலுக்கு உள்ளாகிற உழைக்கக்கூடிய மக்கள் ஒதுக்கப்பட்டவர்களாக அரசியல் அதிகாரமற்றவர்களாக இருக்கிற ஒரு சூழலில் நாம் செய்ய வேண்டும். இங்குதான் நாம் மார்க்சிடமும் வழிகாட்டுதலைப் பெறுகிறோம். அம்பேத்கரிடமும் வழிகாட்டுதலைப் பெறுகிறோம். மார்க்ஸ் - அம்பேத்கருக்கிடையே உள்ள இணக்கமான அணுகுமுறையை உள்வாங்கிக் கொள்வது அவசியம்.

மாநிலத்துக்கு மாநிலம் பல புரட்சியாளர்கள் இருந்திருக்கிறார்கள். நம்முடைய தமிழ்நாட்டில் பெரியார் இருந்தார். அதேபோல பண்டிதர் அயோத்திதாஸ். அதேபோல சிங்காரவேலு செட்டியார். இவர்களிடமிருந்து உத்வேகத்தையும் ஒளியையும் பெறாமல் தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியாது. கேரளாவில் அய்யன்காளி. அவர் கோவில்களைத் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துப் போராடவில்லை. பள்ளிக்கூடத்தின் கதவுகள் திறக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு கல்விஉரிமை கோரி போராட்டம் நடத்தினார். இன்றைக்கு கேரளா இந்தியாவிலேயே எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலமாகக் கருதப்படுகிறதென்றால், அய்யன்காளியை குறிப்பிடாமல் அந்த பெருமையைப் பேசிவிட முடியாது. அதேபோல மராட்டிய மாநிலத்தில் பூலேவை சொல்கிறோம். சாவித்ரி பூலே பெண்கல்வியைக் குறித்து அந்த காலத்திலேயே பேசியவர். நமது இந்தியாவின் வரலாறு இப்படி தனித்துவங்கள் கொண்டதாக இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இன்றைய காலகட்ட பிரச்சினைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட தேசிய ஜனநாயகப் புரட்சி என்று பேசியது. அதேபோல மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மக்கள் ஜனநாயகப் புரட்சி என்றும் மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சி புதிய ஜனநாயகப் புரட்சி என்று பேசுகிறது. ஆனால் எங்கே அந்த புரட்சி? அதனைக் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? கம்யூனிஸ்டுகளுக்கு இடையே ஒற்றுமை, கம்யூனிஸ்ட்டுகளுக்கும் அம்பேத்கரிய சிந்தனை மற்றும் செயல்பாட்டாளர்களுக்கும் இடையேயான ஒற்றுமை ஆகியவற்றைக் காலத்தின் தேவையாக நாம் பார்க்க வேண்டும். அப்படித்தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி பார்க்கிறது. நான் பார்க்கிறேன்.

அம்பேத்கரை துச்சமாகப் பார்ப்பது போன்ற சில போக்குகள் இருக்கின்றன. சிலருடைய கவனங்களை ஈர்ப்பதற்காகவே அம்பேத்கரை சிறுமைப்படுத்துகிற, கொச்சைப்படுத்துகிற செயல்களில் எல்லாம் ஈடுபடுகிறார்கள் . இது வன்மையான கண்டனத்துக்குரியது. மார்க்ஸ் என்கிறபொழுது, கம்யூனிஸ்ட் விரோதிகள் மார்க்ஸ் அயல்நாட்டுக்காரர், மார்க்சியம் அயல்நாட்டைச் சேர்ந்தது என்று பேசலாம். ஆனால் மார்க்ஸ் நம்முடைய மண்ணைச் சரியாகப் புரிந்து கொண்டவராக, நமக்குக் கிடைத்திருக்கிறார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். மார்க்சியம் அந்நியமான ஒரு கொள்கை அல்ல; அது நம்முடைய நாட்டுக்குத் தேவையான கொள்கைகளில் ஒன்று. அப்படித்தான் அதைப் பார்க்க வேண்டும்.

தோழர்களே! பேரறிஞர்களே! உங்களுடைய மதிப்புரையை நான் கேட்டேன். நிறைய ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் வைத்திருக்கிறீர்கள். வரக்கூடிய காலத்தில் எங்களுடைய இந்த தத்துவார்த்தப் பணி மேலும் தொடர்கிற பொழுது, என்ன செய்யலாம் என்பதை நானும் தோழர் முத்துமோகன் அவர்களும் கட்டாயம் எங்களுடைய கவனத்தைச் செலுத்துவோம். கருத்துத்தளத்தில் நாம் நடத்த வேண்டிய போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இந்த நிகழ்வை சிறப்புற ஏற்பாடு செய்த அம்பேத்கர் படிப்பு வட்டத்துக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!

(அம்பேத்கர் படிப்பு வட்டம் ஏற்பாடு செய்திருந்த "மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல்" (என்சிபிஎச்) எனும் நூலுக்கான விமர்சன அரங்க நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் து.ராஜா அவர்கள் ஆற்றிய உரை.)