bookreview7நூல் அறிமுகம்

கல்வி என்பது சுதந்திரத்தையும் மனித உறவுகளுக்கு இடையே நெருக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். ஆனால் இன்றைய நவீன யுகத்திலும் இந்திய சமூகத்திலும் அதன் அர்த்தம் வேறாகி விட்டது.

ஆனால் இன்றைய கல்வி முறையில் வணிகமும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் கல்வியை பிடித்திருக்கும் நோயாகிறது. சாதி இனம் மதம், வசதி உள்ளவர்களுக்கான கல்வி என்பது ஒருபுறம் கைக்கு வந்துவிட்டது. இந்தக் கல்வி தரும் சில இன்னல்கள், மனித உறவுகளைப் பிரிப்பது என்ற வகையில் இந்த நாவலின் மையத்தைக் கூட காணலாம்..ஆனால் இன்றைய மலைவாசி மக்களின் வாழ்வியலை கூர்ந்து கவனிக்கிற நாவலாகத்தான் இது முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது.

கல்வி சார்ந்து முதுகலைப் பட்டம், ஆராய்ச்சி படிப்புகளில் இருக்கும் நீலகிரி மலைப் பிரதேசத்தைச் சார்ந்த ஒரே இனத்தைச் சார்ந்தவர்கள் ஆணும் பெண்ணும் இணைய முடியாமல் அந்த இனங்களின் மத்தியில் உள்ள உட்பிரிவுகள் திருமணத்திற்கு காதலுக்கு தடையாக இருப்பது பற்றி இந்த நாவல் பேசுகிறது. அதேசமயம் நகரம் மற்றும் மலைசார்ந்த பிரதேச மனிதர்களின் வாழ்க்கைநிலை பற்றியப் பெரிய வேறுபாட்டையும் சொல்கிறது.

அவர்களுக்கு ஆடு மாடு தெய்வங்களாக இருக்கிறது. ஆடு மாடு மேய்க்கும் இடம்தான் பால் கூடாரம் எனப்படுவது. ஆடு மாடு மற்றும் பக்கத்தில் உள்ள தாவரங்கள் மரங்கள் பிராணிகள் சார்ந்த இயற்கை உலகமும் அவர்களின் வாழ்வுடன் இருக்கிறது. ஆனால் அந்த இயற்கை பல சமயங்களில் அவர்களுக்கு இடையூறாக இருக்கிறது.

நதி சார்ந்த மகிழ்ச்சி இருந்தாலும் நதி பல உயிர்களை பலி வாங்குகிறது. யானை சார்ந்த பிரச்சினையும் பல சமயங்களில் பலருக்கு எமனாக ஆகிவிடுகிறது. அதேபோல் பாம்புகளின் தொல்லையும் உயிரிழப்பும் ஏற்படுவது பல சம்பவங்களில் தொடர்கின்றன. சிறுமிகள் சிறுவர்கள் காட்டுப் பன்னி மூலம் சிரமப்படுவது கூட சொல்லப்படுகிறதும் யானையை அடக்கி கொண்டு செல்கிற மாவுத்தன் நிறைந்த உலகம் ஆக அந்த ஊர் இருந்தாலும் அவர்கள் பல சமயங்களில் யானைகளின் பிடியில் சிக்க வேண்டியிருக்கிற சம்பவங்கள் இருக்கின்றன. சாவுகளை எதிர்கொள்கிறார்கள். அந்த யானைகள் ரோகன்ஸ், மக்கனா, கும்கி என்று பல வகையாக இருந்தாலும் அந்த வகையான யானைகளின் வாழ்வியல் சார்ந்த பல அனுபவங்களை இதிலுள்ள கதாபாத்திரங்கள் வாழ்வியலாகக் கொண்டிருக்கிறார்கள். இயற்கை அவர்களோடு இணைந்து இருக்கிறது. கும்ப தேவா மற்றும் பொம்மா தேவர்கள் போன்ற சிறு தெய்வங்கள் தங்களை வழிகாட்டுவதாக அந்த மக்கள் நினைக்கிறார்கள். தாங்கள் வாழும் பிரதேசத்தின் தேயிலை பச்சை தங்கமாக அவருக்கும் தெரிகிறது. வழிகாட்டுகிறது.

இந்தச் சூழலில் நகர வாழ்க்கைக்கு சமவெளிப் பிரதேசத்திற்கு வந்து மேல்படிப்பு படித்த விஜயன் மாண்பி ஆகியோரின் காதல் வாழ்வு திருமணத்திற்கு முந்திய வாழ்வும் என்ற வகையில் இந்த நாவல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

விஜயன் தான் விரும்புகிற மாண்பியை வேறு இன உட்பிரிவு இருக்கிற குழப்பங்கள் காரணமாக திருமணம் செய்து கொள்ள முடிவதில்லை. சென்னி என்ற அதிகம் படிக்காத ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறான். அவனின் ஆராய்ச்சி படிப்புகள் சமவெளிப் பிரதேசத்தில் இருக்கிறது. அவ்வப்போது மலைப் பிரதேத்திற்குச் சென்று வருகிறான்.

இந்த சூழலில் அவன் மனைவி மீது ஏற்படுகிற ஒருவரை சந்தேகமோ வெறுப்போ அவனை வாழ்க்கையிலிருந்து துரத்துகிறது. விஜயனை காதலிக்கும் மாண்பி குடும்ப ஏற்பாட்டால் மின்சாரத் துறையில் வேலை செய்யும் மாரிச்சாமியை மணந்துகொள்ள இருக்கிறாள். ஆனால் மின் துறைசார்ந்த ஒரு விபத்தில் அவன் மரணம் அடைகிறான்.

 அவள் நிர்க்கதியாகி படிப்பு சார்ந்த விஷயத்தை தொடங்குகிறாள். விஜயனின் சோர்வான சூழலில் மாண்பி அவளின் தோழியுடன் சேர்ந்து விஜயனுக்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சிக்குப் பின்னால் பொம்மி விஜயனின் வாழ்வில் குறுக்கிடுவதில்லை என்ற தீர்மானத்தை நாவலின் இறுதியில் சொல்லுகிறாள்

பல மலைப்பிரதேச சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை இதில் இடம்பெற்றிருக்கிறது கேத்தன் பொம்மியின் மகள் மாண்பி. தேக்கி காளான் என்ற தம்பதிகளும் இருக்கிறார்கள். யானைப்பாகன் மகள் என்றாலும் அவளுக்கு வாழ்க்கைப்படுகிறவன் வேறு ஒருவர் படித்தவராக இருக்க வேண்டும் என்று அவளின் பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.

செண்பகா சிவான் என்ற தம்பதிகளும் வருகிறார்கள். அதில் சிவான் குடிகாரனாக இருக்கிறான். எட்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டவனாக இருக்கிறான். அவன் சூழலும் ஒரு சித்தரைப் போல இந்த நாவலில் வந்து செல்கிறது.

இந்த நாவலில் வருகின்ற தங்களின் தெய்வங்கள் கும்பதேவா, பொம்மதேவர் போன்றவர்களின் வழிபாட்டுமுறைகள், யானைகளை பிடித்தலும் அடக்குவதும் என்ற வகையில் அவர்களின் அனுபவங்கள், யானை குழிகளுக்குள் மனிதர்கள் அகப்பட்டுக்கொண்ட விஷயங்கள், பாம்புப் பிடியில் மனிதர்கள் அவர்கள் கதைகள் - இவையெல்லாம் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கின்றன. வழக்கு மொழியும் தனித்தன்மையுடன் இருக்கிறது

மாயாறு நாவல்-மோயாறு ஒரு இயற்கை தேவதையாக ஆட்டனத்தியின் நாவல் முழுக்க வந்து செல்கிறது. பிஸ்கோத்து செடி என்ற ஒரு செடி பற்றிய பலதரப்பட்ட அனுபவங்களும் அறிமுகங்களும் விசித்திரமாக இருக்கின்றன எருமை - கலப்பின எருமை அதன் பயன்பாடு எல்லோருக்கும் பிடித்திருக்கிறது.

ஆனால் ஆண் பெண் உறவு என்று வருகிறபோது ஒரே இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் வெவ்வேறு வகை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் இந்தக் கலப்பின திருமண உறவு இல்லாமல் போகிற துயரம் இந்த நாவலில் வெளிப்படுகிறது.

மலைப் பிரதேசம் சார்ந்த மனிதர்களின் தொன்மக் கதைகளும் பழக்கவழக்கங்களும் என்று பல பக்கங்கள் விரிகின்றன. காட்டிலாகா அனுபவங்களை தன் துறை சார்ந்த பணியின் மூலம் உள்வாங்கிக் கொண்டவர் ஆட்டனத்தி. அந்த அனுபவங்களை எல்லாம் இந்த நாவலில் கொட்டிப் பதிவு செய்திருக்கிறார்.

பொதுவான மையங்கள், பொதுவான மனிதர்கள் என்று கதைத்துறையில் ஈடுபாடு கொண்டிருந்தவர் சமீப ஆண்டுகளாய் காட்டிலாகா அனுபவங்கள் மற்றும் மலைப் பிரதேச மக்களின் அனுபவங்களைக் கொண்டு தொடர்ந்து கதைகள் எழுதிய போதிலும் அவற்றின் தேர்ந்த சித்திரிப்பில் இந்த நாவல் ஒரு புதிய தளத்தை அடைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

இன்றைக்கும் மலைப்பிரதேசம் மக்களிடம் இருந்து வரும் உடல் சார்ந்த பழக்கங்கள், உணவு சார்ந்த பழக்கங்கள் கலாச்சாரப் பழக்கங்கள் போன்றவையெல்லாம் இந்த நாவலில் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன மலைப்பிரதேச மனிதர்களும் சமவெளி மனிதர்களும் என்று கலவையாக இந்த நாவல் நகர்ந்து இன்றைய சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தை கல்வித் துறை சார்ந்தும் மனித மனங்களின் விசித்திரம் சார்ந்தும் வெளிப்படுத்தியிருக்கிறது.

பால் கூடாரம் - ஆட்டனத்தி

வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை

விலை: ரூ.120/-

- சுப்ரபாரதி மணியன்