farmersஒரு சமூகத்தில் அல்லது நாட்டில் மக்களாட்சி அரசியலின் தரம் என்பது அந்த நாட்டில் நடைபெறும் ஆட்சியின் தரத்தை நிர்ணயிக்கும். அதே போல அந்த நாட்டில் நடைபெறும் ஆட்சியின் தரம்தான், அந்த அரசு செய்யும் மக்கள் சேவைகளின் தரத்தை நிர்ணயிக்கும் என பிலிப் கீபர் என்ற ஆய்வாளர் 2009ஆம் ஆண்டு தன் ஆய்வின் மூலமாக உலகுக்கு ஒரு செய்தியைக் கூறினார்.

மக்களாட்சி, மக்களாட்சி என முழக்கமிடுவதை நிறுத்திவிட்டு, எந்த அளவுக்கு நம் மக்களாட்சி அரசியல் தரமானதாகவும், தகுதியுடையதாகவும் இருக்கின்றது என்பதைக் கவனியுங்கள் தலைவர்களே என்று மக்களாட்சியில் மக்களை வழி நடத்தும் தலைவர்களுக்கு வேண்டுதல் வைத்தார் அந்த ஆராய்ச்சியாளர்.

இந்தக் கருத்தாக்கத்தின் பின்னணியில் இன்று நம் நாட்டில் நடைபெறும் மக்களாட்சியை, ஆளுகையை, நிர்வாகத்தை மற்றும் அரசு செய்யும் மக்கள் சேவையை அலசி ஆராய்ந்து பாருங்கள் நமக்கு ஓர் உண்மை தெரியவரும்.

நாம் அரசால் பெறும் சேவைகள் அனைத்தும் தரமானதாக இருக்கிறதா? நம் பொது நிறுவனங்கள் அதாவது அரசு நிறுவனங்கள் அனைத்தும் தரமான செயல்பாடுகளின் மூலம் தரமான சேவையை மக்களுக்கு அளிக்கிறதா? அந்தச் சேவைகளும் கையூட்டு இல்லாமல் மக்களுக்குச் சென்றடைகிறதா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். நாம் தரமற்ற சேவைகளையும், அந்த சேவைகளுக்கும் கையூட்டுக் கொடுத்துத்தான் பெறவேண்டியுள்ளது என்றால், நாம் குறை சொல்ல வேண்டியது மக்களாட்சி அரசியலைத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

67 ஆண்டுகள் இந்திய அரசியலை, மக்களாட்சியை, ஆளுகையை, நிர்வாகத்தை ஆய்வு செய்த மெய்ரோன் வெய்னர் கூறினார், உங்களுடைய மக்களாட்சியை இன்னும் அரசியல் தளத்தை விட்டு சமூகத்திற்கு எடுத்துச் செல்லமுடியவில்லை அரசியல் கட்சிகளால் என்று கூறினார். இதன் காரணமாகத்தான் சமூக ஜனநாயகம் இந்தியாவிற்குத் தேவை என்ற கூக்குரல் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது.

எங்கள் வாக்குகள் உங்களுக்கு வேண்டும். ஆனால் உங்களுக்குப் பக்கத்தில் சமமாக எங்களை உட்கார வைத்து நடத்த உங்களால் முடியவில்லை என்ற கூக்குரல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதைச் செய்வதற்கான தலைமைத்துவத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு விட்டது என்பதை இந்திய தேர்தலை தொடர்ந்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிடும் ஜாபர்லாட் தன் புத்தகத்தின் மூலம் 2012 ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

இதற்கு முன்பே 2008 ஆம் ஆண்டில் பீட்டர் பர்னல் என்பவர் மக்களாட்சியை வளர்த்தெடுத்தல் என்ற தன் ஆராய்ச்சிக் கட்டுரையில் இந்திய மக்களாட்சி வியாபிப்பதற்கும் அது தன் முழுப் பயனை அனைவருக்கும் தந்துவிடாமல் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சென்று சேர வேண்டிய அரசின் சேவைகள் சென்றுவிடாமல் தடுப்பணை கட்டுவதில் இந்திய சமூக ஆதிக்க சக்திகள் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் மூலம் செயல்பட்டதால் இந்திய மக்களாட்சியால் பயன் அடைய வேண்டிய கீழ் தட்டு மக்கள்பயன் அடைய முடியவில்லை என்பதுடன் அது இன்று பற்றாக்குறை மக்களாட்சியாகவே இருக்கின்றது என்பதை தெரி­வித்து விட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த ஐம்பதாவது ஆண்டைக் கொண்டாடும்போது ரவீந்திரகுமார் இந்திய மக்களாட்சி ஐம்பது ஆண்டு காலத்தில் செயல்பட்டு வந்த முறையை ஆய்வு செய்து ஒரு கருத்தை தன் ஆராய்ச்சி அறிக்கையில் முன் வைத்தார். இந்தியாவில், அரசாங்க அமைப்புக்கள் சந்தித்த பிரச்சினைகள் அளவிட முடியாத அளவுக்கு இருந்தன.

இந்தியாவை கட்டமைப்பதிலும் மக்களாட்சி அமைப்புக்களை கட்டமைப்பதிலும் செலவிட்ட நேரங்கள்தான் அதிகம். இந்தப் பின்னணியில் பார்த்தால் பொதுத் தேர்தலை நடத்துவதில்தான் இந்தியா அதிக கவனம் செலுத்தியது, ஆகையால் தான் நாம் இன்றுவரை தேர்தல் அரசியல் நடத்துகின்றோம். தேர்தல் அரசியலைத் தாண்டி முன்னேற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்க முடியவில்லை. இதன் காரணமாகத்தான் அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை பயன்களாக மாற்றி, மக்களுக்குக் கொடுத்து மக்களை பயனாளிகளாக்கி தேர்தலுக்கு பயன்படுத்துகின்றன என்று அவர் தன் அறிக்கையில் கூறினார்.

இதனைக் கடந்து உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் மக்களை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டது. அரசாங்கத்தை சந்தையைப் பாதுகாக்க செயல்பட வைத்துவிட்டது. சந்தை மக்களை ஒட்டுமொத்தமாக வெறிபிடித்த நுகர்வோராக மாற்றிவிட்டது. அரசியல் கட்சிகளை சந்தை மெல்ல கார்ப்பரேட்டுகளிடம் நகர்த்திச் சென்று விட்டது.

இதன் விளைவுதான் சந்தையின் மூலம் நாடு பொருளாதார வளர்ச்சி அடைகின்றபோது, அடைந்த பொருளாதார வளர்ச்சி முறையாக பங்கிடப்படாமல், புறந்தள்ளப்பட்ட ஏழைகளின் வாழ்வு சிதிலமடைய ஆரம்பித்தன. இதற்கான காரணங்களை பட்டியல் போட்டால் ஆளுகை சிதிலமடைந்ததுதான் காரணம் என சர்வதேச ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேற்கூறிய கருத்தாக்கங்களை இன்றைய சூழலுக்கு பொருத்திப் பார்க்கையில் நம் கண்முன் வந்து நிற்பவர் மகாத்மா காந்திதான். அவர் தான் 2000 கூட்டங்களில் தான் சந்தித்த சாதாரண மனிதர்களிடம் உரையாடியபோது கூறிய ஒரு வாசகம், சுதந்திரம் என்பது நமது சுயமரியாதை.

எனவே சுதந்திரம் அடைந்தவுடன் இந்த நாட்டில் வாழ்கின்ற மக்களின் சுயமரியாதையை மீட்டெடுக்க வேண்டும். அதுவும் குறிப்பாக 80% மக்கள் வாழும் கிராமங்களை மீட்டெடுத்து அங்கு வாழும் மக்களுக்கு சுயமரியாதையுடன் கூடிய வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதைத்தான் பிரதானப்படுத்தினார். இதே கருத்தை உள்வாங்கியவராக நேரு,

பஞ்சாயத்து அமைப்பு முறையை சுதந்திர இந்தியாவில் 1959ஆம் ஆண்டு ராஜஸ்தான் சந்திரநாகூரில் துவக்கி வைத்து உரையாற்றியபோது விளக்கமாக பதிவு செய்தார்.

இந்திய கிராம மக்களுக்கு மேல் நிலை அரசாங்கங்கள் பயன்களை தருவதில் செயல்படாமல், பஞ்சாயத்துக்களை உருவாக்கி அவைகளை வலுப்படுத்தி, அவைகள் மூலமாக பொதுமக்களிடம் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான சிந்தனைச் சூழலை உருவாக்கி, எல்லா சமூகப் பொருளாதார மேம்பாட்டுச் செயல்பாடுகளிலும் பொதுமக்களை ஈடுபடுத்தி மரியாதையுடைய மேம்பாட்டை கிராம மக்கள் அடைகின்ற சூழலை உருவாக்க வேண்டும் என்ற ஆழமான பார்வையை முன் வைத்தார் பண்டிட் நேரு.

இது அடித்தளத்தில் சமூக பொருளாதாரச் செயல்பாடுகளில் மக்கள் ஈடுபடுவதன் மூலம் பொதுமக்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலை மரியாதையுடன் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டினார்.

அரசாங்கம் தங்களுக்கு சேவை செய்ய கடமைப்பட்டது, அது செய்கின்ற சேவைகள் எனக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள் என்ற மனோபாவத்தில் பொது மக்களின் மனோபாவத்தை உருவாக்குவதன் மூலம் அவர்கள் மரியாதையுடைய வாழ்க்கைச் சூழலை உருவாக்கி வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கான கட்டமைப்புக்களான பஞ்சாயத்து அமைப்பு, கூட்டுறவு அமைப்பு மற்றும் ஆரம்பப் பள்ளிக் கல்வி என்பதை தன்னுடைய பார்வையாக விளக்கினார். இந்த மேம்பாட்டுச் சிந்தனையை முழுவதும் உள்வாங்கிய காங்கிரஸ் முதலமைச்சராக செயல்பட்ட ஒரே முதலமைச்சர் தமிழகத்தை ஆண்ட கர்மவீரர் காமராஜ் மட்டும்தான்.

அவர் போட்ட அடித்தளம்தான் இன்றும் தமிழகம் சமூக மேம்பாட்டிலும், சமூக நீதியிலும், பொருளாதார மேம்பாட்டிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்கின்றது.

இந்த மூன்று அமைப்புகளும் மிகப் பெரிய மக்கள் இயக்கங்களாக மாற வேண்டும், அதற்கு கிராம அளவில் ஆற்றல் படைத்த மனிதர்கள் தயாராக வேண்டும் என்றும் வேண்டினார் நேரு. பஞ்சாயத்துக்கள் பற்றி கூறும்போது, சட்டம் இயற்றுவதைத் தவிர வேறு எந்தப் பணியையும் மக்கள் திறனுக்கு ஏற்றவாறு பணி செய்திட பஞ்சாயத்துக்களை வளர்ச்சி இயந்திரங்களாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று மாநிலங்களைக் கேட்டுக் கொண்டார்.

கிராம புனரமைப்புக்குத் தேவை ஒரு புதிய சிந்தனை மற்றும் கனவு. அந்தக் கனவை காந்தியே கூறி விட்டார். அந்தக் கனவை அடைய நாம் முயல வேண்டும். அதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படக் கூடிய மக்கள் தலைவர்கள் அடித்தளத்தில் உருவாக வேண்டும். அதுதான் நாட்டின் தேவையாக இருக்கிறது என்பதை பதிவு செய்தார். அதேபோல் கூட்டுறவைப் பற்றிக் குறிப்பிடும்போது இது ஒரு கிராமப் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு இயந்திரம்.

எனவே இந்த அமைப்பு என்பது கிராம விவசாயிகள் கையிலும், சிறுதொழில் செய்யும் தொழில் முனைவோர் கையிலும், ஒட்டுமொத்த பயன்பாட்டாளர்கள் கையிலும் இருக்க வேண்டும். இதன் அடிப்படை என்பது மக்கள் கூட்டுறவாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் பள்ளிக்கூடம் என்பது மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நிலைக்கு செயல்படக்கூடியதாக அமைக்கப்படல் வேண்டும்.

பள்ளிக்கூடம் என்பதும் மக்கள் கையில் பஞ்சாயத்துக்கள் மூலமாக இயக்கப்படல் வேண்டும் என்று கோடிட்டுக் காட்டினார். எனவே இந்த மூன்று அமைப்புக்களும் மூன்று மக்கள் இயக்கங்கள். அந்த மூன்று மக்கள் இயக்கங்களும் மக்கள் செயல்பாட்டை முன்னேற்றம் நோக்கிக் கொண்டு செலுத்த வேண்டும் என வேண்டிக் கொண்டார்.

இந்த உரை என்பது ஒரு உன்னத இலக்கியம்போல் விசாலமான பார்வை கொண்டதாக இருந்தது. அவர் ஆற்றிய உரை என்பது இந்தியில் தான். அந்த உரை பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய தரிசனம் மற்றும் கனவு அவருக்கு இருந்துள்ளது என்பதை அந்த உரை கூறுகின்றது.

இந்தப் பார்வையைக் கொண்ட ஜவஹர்லால் நேரு தங்கள் கட்சி ஆளும் மாநில முதல்வர்களை பஞ்சாயத்து அமைப்புக்களை முறைப்படி அமைத்துருவாக்கும் படி வேண்டினார். இவர் கண்ட கனவை நடைமுறைப்படுத்த சமூகத்தில் உள்ள தடைக்கற்களை உடைத்தாலன்றி நடக்கப்போவது இல்லை என்பதை பலர் அதே காலத்தில் சுட்டிக்காட்டி இருந்தனர்.

பிரபுத்துவ மனோபாவம், நிலச்சுவான்தாரர்கள் மற்றும் சாதியப் பிரிவுகள் அனைத்தும் அடித்தளத்தில் உருவான மக்கள் அமைப்புக்களை அதிகாரப்படுத்துவதற்கு தடைக்கற்களாக இருந்துள்ளன.

ஆனால் மக்களாட்சியில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு மக்களுக்கு மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வசதிகளையும் பயன்களையும் பல்வேறு வழிகளில் அரசாங்கம் நம் தமிழகம் போன்ற மாநிலங்களில் எடுத்துச் சென்றுள்ளன என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆனால் அவைகளும் முழுமையாக கடைநிலை மக்களை அடையவில்லை. அதற்கும் வழித்தடங்கள் அத்தனையிலும் முட்டுக் கட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அதேபோல் அவைகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதிலும் ஊழல் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பயன்களைத்தான் மீண்டும் மீண்டும் ஆண்ட கட்சிகள் சாதனைகளாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வாக்குகளைப் பெற்றன. ஏழைகள் பயன்பெறும் வகையில் திட்டங்களை உருவாக்கிச் செயல்பட்ட கட்சிகள் எவ்வளவு ஊழல் மலிந்த கட்சிகளாக இருந்தபோதும், மக்கள் அவர்களை நிராகரிக்கவில்லை.

ஆனால் இந்த பயன்களை பயனாளிகள் பெறும்போது, அவர்கள் அரசை எஜமானனாகவும், தங்களை எஜமானர் தரும் இலவசங்களை அனுபவிக்கும் பயனாளியாகவும் கருதி அரசாங்கம் தங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்கிறது என்ற பார்வை இல்லாமல் சுயமரியாதை இழந்தவர்களாக வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இந்தச் சூழலை மாற்றத்தான் மக்களை அதிகாரப்படுத்த இந்த புதிய பஞ்சாயத்து அரசாங்கத்தை உருவாக்கினார்கள்.

மக்களுக்கே அதிகாரம் என்ற முழக்கத்துடன் வந்த இந்த பஞ்சாயத்து அரசாங்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களும் நலிந்த பிரிவினரும் பிடித்துக்கொள்ளும் வாய்ப்புக்களை மிக அதிகமாக உருவாக்கினர். ஆனால் இன்றுவரை அந்தப் பிரிவினர் இந்த வாய்ப்புக்களை பிடிக்க முடியாமல் அடித்தளத்தில் முட்டுக்கட்டைகள் தொடர்வதை இன்றும் நம்மால் காணமுடிகின்றது.

இதற்குக் காரணம் நம் அரசியல் பாராளுமன்றம் நோக்கியதாகவும் சட்டமன்றம் நோக்கியதாகவும் இருக்கின்றதேயன்றி உள்ளாட்சி நோக்கியதாக செலுத்தப்படவில்லை. அங்கு அரசியலுக்கு ஒரு பெரும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் கட்சிகளே கருதவில்லை என்பதுதான் இன்று நாம் பார்க்கும் எதார்த்த நிலை.

எனவே இந்தச் சூழல் மாற ஒரு புதுயுக அரசியல் தேவைப்படுகிறது. அதை நோக்கி நம் அரசியல் கட்சிகள் பார்வையைத் திருப்ப வேண்டும். இந்த அரசியலுக்கு ஒரு மக்கள் தயாரிப்பு தேவைப்படுகிறது.

இந்த மக்கள் தயாரிப்பு என்பது அரசியல் சாசன சட்டம் தந்த உரிமைகளையும், அதனைத் தொடர்ந்து முன்னேற்றத்திற்காக கொடுக்கப்பட்ட பல்வேறு உரிமைகளையும், ஏழைகளையும், புறந்தள்ளப்பட்டவர்களையும் பாதுகாக்க போடப்பட்ட சட்டங்கள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் ஆயுதங்களாக மாற்றி கையிலெடுத்து உரிமைகள் பெறுவதற்கான ஒரு மீள்பார்வையை உருவாக்க ஒரு புது விவாதம் இன்று தேவைப்படுகிறது.

பயன்கள் வாங்கி மக்கள் முன்னேறுவார்கள் என்ற நிலை மாறி உரிமைகள் பெற்று மரியாதையுடைய வாழ்க்கை வாழ மக்களைத் தயார் செய்ய வேண்டும். அதற்கான அரசியலைக் கட்டமைக்க வேண்டும். அந்தப் பணி­யினைத்தான் பஞ்சாயத்துக்கள் மூலம் முன்னெடுக்க வேண்டும். அந்த விவாதம்தான் இன்று பொது வெளியில் நமக்குத் தேவை.

- க. பழனித்துரை