ந.முருகேச பாண்டியன்
பிரிவு: உங்கள் நூலகம் - நவம்பர் 2020

KS subramanianமொழிபெயர்ப்பாளர் கே.எஸ். சுப்பிரமணியன், தனது 83 ஆவது வயதில் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியன்று உடல் நலக்குறைவால் அகாலமான செய்தி அறிந்து மனம், துயரத்தில் ஆழ்ந்தது.

அவருடன்  உரையாடி அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன என்ற நினைவு, எனக்குள் எப்பவும் மனதில் ததும்பிடும். கே.எஸ். அவசரப்பட்டு விட்டார் என்று தோன்றுகிறது.

அவருடைய மொழிபெயர்ப்பு ஆர்வமும், இலக்கியச் செயல்பாடுகளும் இன்னொருவரால் ஈடுசெய்யப்பட முடியுமா? என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.  

திருநெல்வேலியில் பிறந்த கே.எஸ். சுப்பிரமணியம் (1937) சென்னை, இராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் படித்தார். பின்னர் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

அட்டெனியோ டி மணிலா பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும், ஃபிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இந்தியாவில் ஐ.ஆர்.ஏ.எஸ் ஆகவும் ஆசிய வளர்ச்சி வங்கியில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்திய ரயில்வேயில் துணை நிதி ஆலோசகர் மற்றும் தலைமைக் கணக்கு அலுவலர் என்ற முறையில், திட்டக் கணக்கெடுப்பு மற்றும் திட்ட வடிவமைப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கியில் பணிபுரிந்த போது, ஆசியா, தென் பசிபிக் நாடுகளின் நகர்ப்புற வளர்ச்சி, போக்குவரத்துக் கட்டமைப்பு, கல்வி, சுகாதாரத் துறைகளின் நலப்பணி போன்றவற்றின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறார். அதேவேளையில் தமிழிலக்கிய உலகிலும் ஆர்வத்துடன் செயல்பட்டார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர் வெ.இறையன்புவைச் சந்திப்பதற்காக அவருடைய  அலுவலகத்திற்குப் போயிருந்தேன். அப்பொழுது அவர் நம்முடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிடுவதற்காக கே.எஸ். வருகிறார் என்றார்.

ஒரு கணம் யோசித்தபிறகு, ”ஜெயகாந்தனின் நண்பர் தானே? தமிழிலிருந்து  ஆங்கிலத்தில்  நிறைய மொழி பெயர்த்திருக்கிறார் இல்லியா?” என்றேன்.

இறையன்பு ஆம் என்பது போலப் புன்னகைத்தார். இருவரும் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருக்கிற உணவகத்திற்குப் போனோம்.

இறையன்பு, செல்லும் வழியில் கே.எஸ். என  நண்பர்களால் அழைக்கப்படும் கே.சுப்பிரமணியன் எழுத்துப் பணிகள் குறித்து உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.

அவருடைய ஆர்வம் எனக்கும் தொற்றிக்கொண்டது. ஜெயகாந்தன் பற்றி ரீடர் உருவாக்கியிருந்த கே.எஸ். தமிழில் முக்கியமான ஆளுமை. கூடுதலாகத் தமிழிலக்கியப் படைப்புகளை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிற ஆற்றல் காரணமாக அவர் மீது எனக்கு எப்பவும் மரியாதை இருந்தது. அவரை நேரில் சந்தித்து உரையாட ஆர்வம் கொண்டேன்.

நாங்கள் கிரிக்கெட் திடலைப் பார்ப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருந்த கேண்டீனில் போய் அமர்ந்தோம். புல்வெளி படர்ந்திருந்த அந்தச் சூழல் மனதுக்கு இதமாக இருந்தது. 

உணவகத்திற்குள் நுழைந்த கே.எஸ். மலர்ந்த முகத்துடன் முன்பின் அறிமுகம் இல்லாத எனது கரத்தைப் பிடித்துக் குலுக்கினார். ஜில்லென்ற இருந்த அவருடைய கரங்கள் நேசமுடன் இருந்தன. 

அவருடைய தோற்றம் பொலிவானது. கனிந்த  நிலை அவருடைய  உடலிலும் பேச்சிலும் வெளிப்பட்டது. அருமையான உணவு என்றாலும் பேச்சுதான் எங்களுக்கு இடையில் முதன்மையாக இருந்தது.

பேச்சு, பேச்சு. பேச்சு. அவரைச் சந்தித்தது அதுதான் முதல் தடவை என்றாலும் எவ்விதமான மனத்தடையும் இல்லாமல் தோழமையுடன் பேசினார்.

பணிக்காலத்தில் உயர்ந்த பதவியில் இருந்தவர் என்றாலும், எவ்விதமான பந்தாவும் இல்லாமல் எளிமையாகப் பேசிய கே.எஸ். உண்மையில் உயர்ந்த மனிதர்தான்.

இறையன்பு - கே.எஸ். ஆகிய இருவருக்கும் இடையில் நிலவிய நட்பும் பேச்சும் காவியத்தன்மையுடன் இருந்தன. இருவரும் பரிமாறிக்கொண்ட தகவல்களும் தோழமையுடன் விவாதித்த விஷயங்களும் முக்கியமானவை. 

கே.எஸ். சங்க காலம் தொடங்கி, சமகாலப் பெண் கவிஞர்கள் வரை தேர்ந்தெடுத்து, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள கவிதைகள் தொகுப்பு நூல் (தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடு) நிச்சயம் உலக அரங்கில் தமிழ்க் கவிதைகள் பற்றிய புரிதலை உருவாக்கும் என்று அவரிடம் சொன்னேன். 

சங்க இலக்கியம் ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும், 41 பெண் கவிஞர்கள் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்னர் தமிழில் கவிதைகள் எழுதியிருப்பது போல எந்தவொரு செம்மொழியிலும் இல்லை.

எனவே  சங்கப் பெண் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலகமெங்கும் அறிந்திட முயலுமாறு அவரிடம் வேண்டினேன்.

அவர் உற்சாகத்துடன் தலையை அசைத்தார். அதன் விளைவு ஏழெட்டு மாதங்களில் என்சிபிஎச் வெளியீடாக 2017 ஆம் ஆண்டில் Tamil Sangam Women Poets என்ற நூல் வெளியானது.

மேலைநாடுகளில் வெளியான படைப்புகள் எல்லாம் உன்னதமானவை என்று கருதி, தமிழ்ச் சமூகத்திற்குத் தேவையற்றவற்றை மொழிபெயர்த்து வெளியிடும் இன்றையச் சூழல் பின்காலனிய அரசியலுடன் தொடர்புடையது. 

இரண்டாயிரமாண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியப் படைப்புகள் வெளியாகும் தமிழிலக்கியப் படைப்புகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் குறைவாக உள்ளது.

செம்மொழித் தமிழ் என்ற அடையாளம் உலகமெங்கும் பரவிட தமிழில் இருந்து படைப்புகள் பிறமொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட வேண்டும். 

இத்தகைய உயர்ந்த மொழிபெயர்ப்புப் பணியைத்தான் கே.எஸ். தன்னுடைய வாழ்நாளின் இறுதிவரையிலும் தீவிரமாகச் செய்தார். அவருடைய மொழிபெயர்ப்புப் பணிகள் ஒப்பீடு அற்றவை.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எங்கும் மரண பயமும், பீதியும் நிலவிய காலகட்டத்தில் வெளியான கவிதைகளைத் தேடித் தொகுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 2020, ஆகஸ்ட்  மாதம் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்  மூலம் வெளியிட்டுள்ள  Lockdown Lyrics நூல், கே.எஸ். முயற்சி, அசாதாரணமானது என்பதற்கு எடுத்துக்காட்டு.

ஜெயகாந்தனின் பாரிஸிக்குப் போ, ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், சுந்தர காண்டம், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட  பல படைப்புகளை  ஆங்கிலத்தில் கே.எஸ். மொழிபெயர்த்துள்ளார். 

கலைஞரின் குறளோவியம், உ.வே. சாமிநாத ஐயரின் என் சரித்திரம், லா.ச.ரா.வின் அபிதா என அவருடைய மொழிபெயர்ப்புகள் நீளும். பாரதியார், சிற்பி, புவியரசு, தமிழன்பன், உமா மஹேஸ்வரி போன்ற கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

Continum: A harvest of modern Tamil Poetry (2019) என்ற நூலில் நூற்றுக்கும் கூடுதலான தமிழ்க் கவிஞர்களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பாளரின் பணி பெரிதாகப் போற்றப்படாத சூழலில் தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தின் மூலம் உலக அளவில் கொண்டு சென்ற கே.எஸ். காலத்தின் குரலாகச் செயலாற்றியுள்ளார்.

பாரதியாரின் படைப்புகளில் ஈடுபாடுகொண்ட கே.எஸ். திறனாய்வு நோக்கில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். ’சிந்தனை ஒன்றுடையாள்’ என்று கே.எஸ். 510 பக்க அளவில் தொகுத்துள்ள நூல்,  தமிழ் - சமஸ்கிருத மொழிப் படைப்புகளை ஒப்பீட்டு நிலையில்  பதிவாக்கியுள்ளது.

பள்ளிப் பருவத்தில் கே.எஸ். கற்ற சமஸ்கிருத மொழியும் இலக்கியமும் நூலாக்கத்தில் வெளிப்பட்டுள்ளன. ஒப்பீட்டு நிலையில் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையில் காலங்காலமாக நிகழ்ந்துள்ள இலக்கியத் தாக்கத்தினைக் கண்டறிந்திட  கே.எஸ். முயன்றுள்ளார்.

இது கே.எஸ்.ஸின் இன்னொரு முகம். பன்முக ஆளுமையாக விளங்கிய கே.எஸ். என்று அழைக்கப்படுகிற கே.சுப்பிரமணியன் என்ற பெயர், அவருடைய சாதனைகளுக்காகத் தமிழிலக்கிய மொழிபெயர்ப்பு உலகில் என்றும் நிலைத்திருக்கும்.

- ந.முருகேசபாண்டியன்